Showing posts with label குழந்தை இலக்கியம். Show all posts
Showing posts with label குழந்தை இலக்கியம். Show all posts

Sunday, October 23, 2022

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 – சி.பா.

 அகரமுதல



(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5  தொடர்ச்சி)


4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5

கால நதியின் கதியதினில்
கடவுள் ஆணை காண்பீரேல்
ஞால மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!

என்றும் தெய்வ நம்பிக்கையை, கடவுள் ஆணையை வற்புறுத்துகின்றார்.

‘தைப்பொங்கல்’ என்ற கவிதையில், பொங்கல் பொங்கி முடிந்த பிறகு கடவுளுக்கு, முதலிலும் காகத்துக்கு அடுத்தும், பின்னர் உடன் இருந்தோர்க்கும் வழங்கி ஒக்க உண்டு மகிழும் பாங்கினையும் எடுத்து மொழிகின்றார்.

கவிமணி காட்டும் உவமை நலமும் நகைச்சுவைத் திறனும்

கவிமணி கையாளும் உவமைகள் எளியன; இனியன. ‘பூமகளின் புன்னகைடோல் பூத்திடுவோம்’ என்றும், ‘கம்பன் பாமணக்கும் தமிழினைப்போல் பரிமளிப்போம்’ என்றும் பாடும் பாடல்களில் உவமையின் எளிமையைக் காணலாம்.

‘தீபாவளிப் பண்டிகை’ என்ற பாட்டில்,

இட்டிலி வீரர்தென் னிந்தியராம்என்பது
இன்று காம் காட்டி விடுவோம்அடா!
சட்டினி நண்பன் துணை யிருக்கஅதில்
சந்தேகம் உண்டோநீ சொல்வாய்அடா!

என்ற பாடலில், நகைச்சுவை கொப்பளித்து வருவதனைக் காணலாம்.

உழைப்பும் உடல் நலமும்


உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்பர் பெரியர். கவிமணியும், ‘ஆக்கம் வேண்டுமெனில், ன்மை அடைய வேண்டுமெனில், ஊக்கம் வேண்டுமப்பா, ஓயாது உழைக்க வேண்டுமப்பா எள்று கூறுகிறார்.

கூழைக் குடித்தாலும் குளித்தபிறகு குடிக்க வேண்டு மென்றும், ஏழையே ஆனாலும் இரவில் நன்றாய் உறங்க வேண்டுமென்றும் அறிவுறுத்துகின்றார். நூறு ஆண்டுகள் வாழ்வதன் இரகசியத்தைப் பின் வருமாறு கூறுகின்றார்:

தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஒட்டி விடும், அப்பா!
நூறு வயதும் தரும், அப்பா!

அடுத்து,

காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!

என்று கூறுகிறார். இங்குக் கவிமணியின் சொல்லு முறை (the technique of expression) நயம்பட அமைந்துள்ளது.

கவிமணி உணர்த்தும் தேசியம்

பாரதியாரின் கவிதை வெறியையோ தேசிய ஆவேசத்தையோ கவிமணியிடம் காண்பதற்கு இல்லை. எனினும், கவிமணியின் கவிதைத் திறன் போல் தேசிய உணர்ச்சியும் நம் பாராட்டுக்கு உரியதே.

கைத்திறன் பாட்டிலே ‘நாடிய சீர் நாடடைய’ என்று தொடங்கும் பாடலை அனுபவித்த குமரன் வாசகர்களில் சிலர், தேசிக விநாயகம் பிள்ளையைத் தேசிய விநாயகம் பிள்ளை என்றும் வாய் குளிரக் குறிப்பிடலாயினர்.

பாரதியையும் கவிமணியையும் ஒப்பு நோக்கிய இராசாசி பின்வருமாறு கூறியுள்ளார். ‘பாரதி காட்டுப் புளியமரம் போன்றவர்; காடு முரடு, உயிர் இருக்கும்; புளிப்பு உரம் இருக்கும். கவிமணியின் கவிதையில் நகாசு வேலை மிகுந்திருக்கும். பிறகு அன்பு மிளிரும். அத்தகைய கவி தேசிக விநாயகம் பிள்ளை;”[11] இஃது ஓரளவு உண்மைதான்.

மேற்காட்டிய பகுதிகள் கவிமணியின் தேசியப் பற்றை உணர்த்தும். ‘தாயிற் சிறந்ததப்பா பிறந்த தாய் நாடு’ என்று தாய்நாட்டுப் பற்றை ஊட்டி, “பேணி நம் சந்தத் தமிழ் வளர்ப்போம், தாய் நாட்டுக்கே உழைப்போம்” என்று. தமிழ்ப் பற்றையும் நாட்டுப் பற்றையும் விளக்கி, ‘காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய்வோம்’ என்று சொல்லி, பாரில் உயர்ந்த இமயமலையையும், அதன் சிகரத்தில் பறக்கும் தேசக் கொடியையும் காட்டி,

மானம் உருவாக வந்தகொடி – இதை
மாசுறச் செய்வது பாவம், பாவம்!
ஊனில் உயிருள்ள கால மெல்லாம்-மிக
ஊக்கமாய் கின்று.நாம் காத்திடுவோம்

என்று நாட்டுப் பற்றுணர்வோடு நவில்கின்றார். ‘உத்தமனாம் அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய் நெஞ்சே தினம்’ என்று காந்தியடிகளைப் போற்றுகின்றார். இறுதியில், உலகமெல்லாம் ஒரு குடும்ப மாக வாழ வேண்டும் என்பதனை,

உலக மக்களெலாம்அன்போடு
ஒரு தாய் மக்களைப் போல்
கலகமின்றி வாழும்காலம்
காண வேண்டுமப்பா!

என்ற பாடலில் கவிமணி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். கவிமணியின் கதர்ப்பற்றும் காந்தியப்பற்றும் நாடு அறிந்தவை.

முடிவுரை

கவிமணி குழந்தைகளின் மனத்தை நன்கு அறிந்தவர்,குழந்தைகளின் பேச்சில் மகிழ்பவர், அவர்களோடு உரையாட விரும்புவர்.

“அவர்(கவிமணி) குழந்தைகளின் மனத்தை நன்கு அறிந்தவர்; குழந்தைகளோடு இனிமையாகப் பேசுவதில் ஆசை உடையவர்; குழந்தைகளுடைய பேச்சையும் அவற்றின் இடையிடயே தோன்றும் பளிச்சென்று தோன்றும் உவமைகளையும் எண்ணி மகிழ்பவர்.”[12] இவ்வாறு திரு.பெ.நாஅப்புசாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

கவிமணி’ என்னும் பட்டம் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க அன்பர்களால் சென்னை பச்சையப்பன் கல்லுரியில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களால் 1940 ஆம் ஆண்டு திசம்பர் 24 ஆம் நாள் தரப்பட்டது. கவிமணி என்ற தம் பெயருக்கு ஏற்ப நல்ல கவித்துவத்தோடு மணியான கவிதைகளைத் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்காக வழங்கிய பெருமை தேசிக விநாயகம் பிள்ளையைச் சாரும். பாரதியார் முப்பெரும் பாடல்வழி எப்போதும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுவது போல, கவிமணி அவர்களும் தாம் இயற்றிய குழந்தைப் பாடல்களால் தமிழ்கூறு நல்லுலகத்தால் என்றென்றும் நினைவுகூரப் பெறுவர் என்பது உறுதி.

குறிப்புகள்:

[11]. பி. சிரீ. நானறிந்த தமிழ் மணிகள், ப. 52.
[12] . சுடர்: கவிமணி மலர். 1965, தில்லித் தமிழ்ச் சங்கம்-ப.49

(தொடரும்)

சான்றோர் தமிழ்

முனைவர் சி. பாலசுப்பிரமணியன்

Sunday, October 16, 2022

குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 – சி.பா

 அகரமுதல

.





(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5  தொடர்ச்சி)

குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5

அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா!-அயல்
ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!
இம்பருலகின் இயல்பிதம்மா!-மதிக்கு
இன்னார் இனியாரும் உண்டோ அம்மா?

மாற்றம் உலகின் இயற்கையெனஇங்கு
மாந்தரும் கண்டு தெளிந்திடவோ,
போற்றும் இறைவன் இம் மாமதியம்விண்ணில்
பூத்து கிலவ விதித்தனனே!

என்ற பாடல்களில் சிறந்த கருத்தும்,

கூனக் கிழவி நிலவினிலேராட்டில்
கொட்டை நூற்கும்பணி செய்வதை இம்
மாநிலம் கண்டு மகிழ்ந்திடவேகாந்தி
மாமதி யோங்கி வளருதம்மா!

என்ற பாடலில் காந்தியமும் அமைந்து துலங்குவதைக் காணலாம்.

காட்சி இன்பம்

ஒர் ஏழைப்பெண் தன் தாயிடம் கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்கிறாள். அதற்கு அந்த ஏழைத் தாய், “மகளே! நேரத்தை அறிவதற்கு இயற்கையிலேயே பல வழிகள் இருக்க நமக்குக் கடிகாரமும் வேறுவேண்டுமா?” என விடையிறுக்கிறாள். சேவற் கோழியும் காகமும், செங்கதிரும் செந்தாமரையும், தன் நிழலும் நேரத்தைச் சரியாக உணர்த்துமே என்று அந்தத் தாய் இயற்கையின் இனிய பெற்றியை எடுத்து இயம்புகின்றாள்.

சுற்றுப் பொருளெல்லாம் உற்றுநோக்கிஅவை
சுட்டும் மணிநேரம் கண்டறிவாய்!
பெற்ற முத்தேஇந்த உண்மை அறிவோருக்குப்
பின்னும் கடிகாரம் வேண்டுமோடி?

என்று இறுதியாகக் கூறி, மனித வாழ்விற்கு இயற்கை பின்னணியாகப் பொலிவதனை எடுத்து மொழிகின்றார்.

அடுத்து, அவருடைய ‘சைக்கிள்’ பாட்டு குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான பாட்டு.

தங்கையே பார்! தங்கையே! பார்
சைக்கிள் வண்டி இதுவே பார்!

என்று தொடங்கி,

ஒன்றன் பின் ஒன்றாக
உருளும்பை தாக்களைப் பார்!
அக்காளும் தங்கையும் போல்
அவைபோகும் அழகைப் பார்!

என்று குழந்தைகளுக்குப் பாட்டிலேயே ஒற்றுமை உணர்ச்சியினை ஊட்டுகின்றார்.

கதைப்பாட்டில் கருத்து

‘ஊகம் உள்ள காகம்’ ‘நெற்பானையும் எலியும்’ ‘அப்பம் திருடின எலி’ முதலிய கதைப் பாடல்கள் குழந்தைகளுக்குக் கதையின் வாயிலாக அரிய கருத்துகளை உணர்த்தி நிற்கின்றன. தண்ணிர்த் தாகத்தால்,அலைந்து திரிந்த காக்கை மண்ணாற் செய்த ஒரு சாடியின்:அடியில் சிறிது தண்ணிரைக் கண்டு, அந்தச் சாடியினுள் சிறு சிறு கற்களைப் பொறுக்கி வந்து இட்டு, தண்ணிர் மேலே வர, நீரைக் குடித்துத் தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டது என்று கதை சொல்லி, கதையின் இறுதியில்,

ஊக்க முடையவர்க்குத்துன்பம்
உலகில் இல்லைஅம்மா!
ஆக்கம் பெருகும்அம்மா!-இதை நீ
அறிய வேண்டும்அம்மா!

என்று கூறி, ‘ஊக்கம் உண்மை வாழ்வுக்கு ஆக்கம்’ என்பதனை உணர்த்தியுள்ளார்.

‘நெற்பானையும் எலியும்’ என்ற கதைப் பாட்டில் ஓசை நயத்தோடு மலைவீழ் அருவி போன்று சொற்கள் குதித்து வருவதையும் காணலாம்.

பாட்டியின் வீட்டுப் பழம்பானை-அங்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும்-அதன்
உள்ளே புகுந்துநெல் தின்றதடா!

பாட்டி வீட்டில் ஒரு பழைய பானையில் நெல் இருந்தது. பானையின் ஒருபுறம் ஒட்டை, அந்த ஒட்டையின் வழியே உள்ளே சென்ற சுண்டெலி ஒன்று நெல் தின்றது. அளவுக்கு மீறித் தின்றதால் வயிறு புடைத்தது. எனவே உள்ளே சென்ற எலி ஒட்டை வழியே வெளியே திரும்பி வர முடியாமற் போயிற்று. மறுநாள் பாட்டி பானையின் மூடியைத் திறந்தாள். எலி வெளியே வந்தது. ஆனால் பாவம், அந்த வேளை பார்த்துப் பூனை ஒன்று அங்கே வந்து விட்டது. பூனை எலியைத் தின்று விட்டது. இந்தக் கதையைக் கூறி, இறுதியில்,

கள்ள வழியினிற் செல்பவரைஎமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ள படியே நடப்பவர்க்குத்தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!

என்று கள்ள வழியில் சென்றால் காலன் விடமாட்டான்; கள்ள வழியில் சென்றால் பூனைக்கு இரையான சுண்டெலியின் கதியே நம் கதியும் என்று குழந்தைகள் கூறிக் கொள்ளும். இவ்வாறு கதையும் கருத்தும் இணைந்துள்ள இத்தகைய கதைப் பாடல்கள் குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் துணை நின்று, பண்பு நிலைக்குப் படிப் படியாகக் கொண்டு செல்லும்.

அப்பம் திருடின எலி, திருட்டில் பெற்ற அப்பத்தைத் தான் மட்டுமே தின்று இறப்பது உறுதியாயிற்று என்று கூறி, அளவு கடந்தால் ஆரமுதும் நஞ்சு என்ற கருத்தையும், கிட்டிய பொருளை எட்டிய மட்டும் எல்லார்க்கும் கொடுத்து உண்ணவேண்டும் என்ற கருத்தினையும் கவிமணி புலப் படுத்தியுள்ளார்.

‘ஒளவையும் இடைச்சிறுவனும்’ என்ற பாடல், ஆழக் கற்றாலும் அடக்கம் மிகத்தேவை என்பதனையும் ‘புத்தரும் ஏழைச் சிறுவனும்’ என்ற பாடல் பிறருக்கு நன்மை செய்பவர் மேற்குவத்தார் என்றும், தீமை செய்பவர் தீண்ட ஒண்ணாதார் என்றும் குறிப்பிடுகின்றன.

பெரியோரைப் போற்றுதல்

குழந்தைகளுக்குப் பெரியோர்பால் பேரன்பும் மதிப்பும் பெருக வேண்டும் என்பதனைச் சில பாடங்களில் கவிமணி வற்புறுத்துகின்றார். ஒளவைக் கிழவியின் அருமையினை,

கூழுக் காகக் கவிபாடும்
கூனக் கிழவி அவளுரையை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
மறவோம் மறவோம் மறவோமே!

என்றும், திருவள்ளுவரை,

சாதி ஒன்றேயாம்தமிழர்
சமயம் ஒன்றேயாம்
நீதி ஒன்றேயாம்என்று
நிலைநிறுத்தி நின்றோன்

என்றும், கம்பனை,

ஆரியம் நன்குணர்ந்தோன்தமிழின்
ஆழம் அளந்துகண்டோன்;
மாரி மழைபோலக்கவியின்
மழைபொழிந் திடுவோன்

என்றும், அமரகவி பாரதியினை,

ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்
அமரகவி யென்றெவரும் புகழ்ப் பெற்றோன்

என்றும் பாடியுள்ளார்.

வாழ்க்கை நீதிகள்

வளரும் இளம்செடிக்கு உரம் ஊட்டிக் களை களைந்து நீர்பாய்ச்சி காவல் செய்தால் கதிரவன் ஒளியின் துணையுடன் அப் பயிர் நன்கு செழித்து வளரும். இம்முறையில் இளம் நெஞ்சில் உயரிய கருத்துகளை எளிய சொற்களால் புகுத்தி, அரிய வாழ்க்கைத் தத்துவங்கள் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கைத் தத்துவங்கள் என்ற தலைப்பமைந்த கவிதையில், ‘நாமே நமக்குத் துணையானால், நாடும் பொருளும் நற்புகழும், தாமே நம்மைத்தேடிவரும்’ என்றும் ‘நெஞ்சிற் கருணையும் நேயமும் விஞ்சும் பொறுமையும் கொண்டவர்க்கு வெல்லும் படைகள் வேறு வேண்டா’என்றும், உள்ளம் பொருந்தி ஊக்கம் பெருக உழைத்தால் தடைகள் பொடியாகிப் பள்ளம் உயர்மேடாகும் என்றும் கூறி, இறுதியில்,

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சிபாலசுப்பிரமணியன்