Showing posts with label சி.பா.. Show all posts
Showing posts with label சி.பா.. Show all posts

Sunday, January 08, 2023

தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 1/3 முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 அகரமுதல




(இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 6/6 தொடர்ச்சி)

7. தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல்

வாழ்வும் பயனும்

இன்றைய சமுதாயம் எண்ணற்ற தலைமுறையினரின் உழைப்பில் மலர்ந்ததாகும். காலந்தோறும் வளர்ச்சியை உருவாக்க முன்னோடிகளாகச் சிலர் தோன்றுகின்றனர். வருங்காலச் சமுதாயத்தினர் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கும், எளிமைப்படுத்திக் கொள்வதற்கும், கருத்து வடிவத்திலும், செயல் வடிவத்திலும் அத்தகையோர் தொண்டாற்றி வருகின்றனர். தன்னலம் கருதாத தொண்டையே தங்கள் வாழ்க்கையின் பயன் என்று கருதுகின்றனர். ‘சமுதாயப் பணியே வாழ்வின் குறிக்கோள்’ எனக் கருதிப் பணியாற்றுவோர் மிகச் சிலர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் இலக்கியத்தையும், அரசியலையும், சமயத்தையும், பொருளாதாரத்தையும் நாட்டுணர்வுடன் இணைத்து இழைத்துப் பார்த்த வித்தகர் திரு. வி. க மொழிக் கண்ணோட்டத்திலிருந்து உரைக்கும் போது ஒரு திருப்பு மையத்தையும், அரசியல் பார்வையிலிருந்து அணுகும்போது சமய உணர்வுடன் கலந்த விடுதலை எழுச்சியையும், பொருளாதாரக் கோணத்திலிருந்து குறிப்பிடும்போது முதலாளித்துவ எதிர்ப்புப் போக்கையும் கொண்ட எளிமை, மறுமலர்ச்சி, காந்திய தெறி ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்தவர் எனலாம்.

பிறப்பும் கல்வியும்

திருவாரூரில் விருத்தாசல முதலியாருக்கும், சின்னம்மாளுக்கும் செங்கற்பட்டு துள்ளல் எனும் கிராமத்தில் 26.8-1883 இல் பிறந்த கலியாணசுந்தரனார் சென்னை, இராயப்பேட்டை ‘ஆரியன் பிரைமரி பாடசாலை’யிலும், வெசுலி கலாசாலை உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். யாழ்ப்பாணம் நா. கதிரைவேல் பிள்ளையிடம் தமிழ்ச் சுவையறிந்த இவர், மயிலை தணிகாசல முதலியாரிடம் சித்தாந்தம் பயின்றார். பின் மறை மலையடிகளிடம் இலக்கியத் தேர்ச்சி பெற்றார்.


சமயப் பணியும் ஆசிரியப் பண்பும்

சைவ நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த திரு.வி.க. இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சனசபையிலும். திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டத்திலும் சொல்லாலே உழவாரப் பணிபுரிந்த நாவுக்கரசராய்த் திகழ்ந்தார். பென்சர் கம்பெனியில் பணியாற்றியிருந்த காலத்தில், சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாகச் செயலாற்றியிருந்த இவர் ‘திலகர்’ சிறைப்பட்ட செய்தியறிந்து பணியை விடுத்தார். நாட்டுணர்வில் நாட்டம் கொண்டு விடுதலை இயக்கத்தில் ஈடுபட விழைந்தார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் ஆதிதிராவிடர் பள்ளியில் ஆசிரியராகப் பணி ஏற்றார். தொடர்ந்து வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர் பொறுப்பினைச் சிறப்பித்தார். இக்காலக் கட்டத்தில் சைவ சித்தாந்த மகா சமாசத்திலே இலக்கியவாணர்களும் பாமர மக்களும் போற்றும் வண்ணம் செஞ்சொல் நடையில் சொற் பொழிவுகள் நிகழ்த்தி மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றார்.


இல்லறமும் எழுத்துலகமும்


1912ஆம் ஆண்டு ‘கமலாம்பிகை’ என்ற அம்மையாரை மணந்து, ஆறாண்டு கால இல்லறவாழ்வை மட்டும் பெற்று. மனைவியையும், ஈன்ற ஆண்மகவு ஒன்றையும் பெண்மகவு ஒன்றையும் இழந்தார். பின் திரு.வி.க. துறவி நிலை அடைந்தார். ஆனால் சமுதாயத் தொண்டினை உயிர் மூச்சாகக் கொண்டார். 1917ஆம் ஆண்டு ‘தேசபக்தன்’ என்ற நாளிதழினைத் தொடங்கி, நாட்டுப் பற்றினைத் தமிழ் மக்கள் நெஞ்சிலே கொழுந்திடச் செய்தார், தொழிற் சங்கம் முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து தொழிலாளர் தம் வாழ்வில் விடிவை உருவாக்க, ‘வாடியா’ என்பவரின் துணையுடன் 27-4-1918 அன்று ஆசியாவிலே முதன் முதலாகத் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தினார். பின், நாளிதழ் ஆசிரியராகவும், தொழிலாளரின் ஆதரவு பெற்ற தலைவராகவும், சிந்தனையைக் கிளறும் எழுச்சியுரைப் பேச்சாளராகவும் திகழ்ந்து இவருடைய பணி காங்கிரசு இயக்கத்தில் பொலிவுற்றது. பேச்சிலும், எழுத்திலும் பெருமிதம் காட்டி. எண்ணற்றோரைத் தேசீய நீரோட்டத்தில் கலக்கச் செய்தார். மொழி வேறு, இலக்கியம் வேறு. சமயம் வேறு, அரசியல் வேறு என்ற நிலையை மாற்றி, அனைத்தையும் ஒரே பார்வையில் கொண்டுவந்து ஆற்றிய பணி அவர்தம் தனித்தன்மையைக் காட்டி நிற்பதாகும். பக்கிங்காமில் தொழிலாளர் போராட்டத்தில் பங்கேற்று, தொழிலாளர்களின் வேதனைக்கு விடிவு கண்டார். தொழிலாளர் தலைவரானார்.


வாழ்வும் தொண்டும்


அவருடைய வாழ்வும் தொண்டும் ஒரு துறையினைச் சார்ந்ததாக இல்லை. பல்வேறு துறைகளில் தனிப்புகழ் பெற்று விளங்கிய தமிழ் முனிவர் அவர். ஆம். “அவர் தொடாத துறை ஒன்றுமில்லை: தொட்ட துறைகளை அழகு படுத்தாமல் விட்டதில்லை” எனப் பாராட்டப் பெறும் அளவிற்கு அவர் அரசியல், சமயம், இலக்கியம், பொருளாதாரம், மகளிர் முன்னேற்றம், தொழிலாளர் நலம், இளைஞர் திறம், சீர்திருத்தம், நாட்டுயர்வு முதலான கோணங்களில் ஆரவாரமின்றி அமைதியாகத் தொண்டாற்றினார். மொழிப் பற்றும், சமயப் பற்றும், நாட்டுப் பற்றும் நிறைந்த அவர் நாடு விடுதலை பெற, மொழி நலம் சிறக்க, சமயப்பற்று மிளிரத் தகைசால் தொண்டாற்றினார். அவர்தம் தனித் தொண்டால் மகளிர் முன்னேற்றமடைந்தனர். இளைஞர் ஏற்றம் பெற்றனர்.


பேச்சும் எழுத்தும்


சிலருக்குப் பேச்சு கடல் மடைதிறந்தாற்போல் வரும். எழுத்து என்றால் ஒரு வரியும் ஓடாது. சிலர் எழுதி எழுதி நூல்களைக் குவிப்பார்கள். ஆனால் மேடையேறிச் சில மணித் துளிகளேனும் பேசுவதென்றால் மெய்ந்நடுக்கம் ஏற்பட்டு நாத்தழுதழுத்துச் சொற்களே வாயினின்றும் வெளிவராமல் நின்று விடுவார்கள். சிலருக்குப் பேச்சு வரும்; எழுத்து வரும்; ஆனால் பேசிய வண்ணம் எழுதியவாறு சொல்லும் எழுத்தும் செயலும் ஒத்த வாழ்க்கை-உள்ளும் புறமும் ஒன்றான வாழ்க்கையைக் காணல் அரிது. நாவும் நடப்பும் ஒன்றாக்கிச் செயல்வழிச் சான்றோராய்த் திகழ்ந்தவர் திரு.வி.க. ஆவார்.

திரு.வி.க, அவர்கள் நெஞ்சம் தேசியத்தில் ஊறித் திளைத்தது. அவர் காந்தியடிசுளின் கோட்பாட்டிலே கொண்டிருந்த ஆழமனஈடுபாடே. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ எனும் நூலாக விரிந்தது. பெண்களின் வாழ்வு துலக்கம் பெற்றுத் துரண்டா விளக்காய்ச் சுடர்விட வேண்டுமென்ற எழுச்சியே ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை’ எனும் நூலாக மலர்ந்தது. இன்றைய இளைஞர்கள் வீறு கொண்டோராய் மட்டுமின்றி, விடுதலைப் பணிபுரியும் வித்ததராய் விளங்க வேண்டும் என்ற கருத்தே ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’ எனும் நூலாகக் கனிந்தது. இலக்கியத்தை ஆய்ந்து காணும் நோக்கிற்கும், இசைவான எழில் நடைக்கும் காட்டாக நிற்பது அவர்தம் ‘நாயன்மார் வரலாறு’ ஆகும். பெரிய புராணத்துக்கும். காரைக்கால் அம்மையார் திருமுறைக்கும் எழுதிய குறிப்புரைகள் அவர்தம் சமய அணுகு முறையைப் புலப்படுத்த வல்லனவாகும், ‘தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு’ என்னும் நூல் மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்றில் மிதந்த காலத்தின் எதிரொலி யாகும். திரு.வி.க.வின் எழுத்துப் படைப்புகளிலும். சொற் படைப்புகளிலும் ‘முருகன் அல்லது அழகு’. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’, ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை’, ‘பரம்பொருள் அல்லது வாழ்க்கைவழி’, ‘உள்ளொளி’ என்பவை இந்த நூற்றாண்டின் நூல்களில் சிறப்பிடம் பெற்றவை என்கிறார் முனைவர் மு.வ.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Sunday, November 20, 2022

அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4

 அகரமுதல




(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 3/4 – சி.பா. தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4 – சி.பா.

சொற்பொழிவாளர் மு. இராகவையங்கார்

எழுத்தாளராக இருந்த மு. இராகவையங்கார் அவர்கள் சொற்பொழிவாளராகவும் துலங்கியிருக்கின்றார்.

1929ஆம் ஆண்டு பதிப்பு வேந்தர் அறிஞர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இலக்கியம், சாசனம் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார், இப்பொழிவே பின்னர் ‘சாசனத் தமிழ்க் கவி சரிதம்’ என்ற நூலாகத் தோற்றம் பெற்றது.

1966-இல் காரைக்குடி கம்பன் விழாவில் தலைமை வகித்து, தலைமை உரை ஆற்றினார், 1959ஆம் ஆண்டில் பல்கலைச் செல்வர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் அழைப்பின் காரணமாகத் ‘தெய்வப் புலமை’ என்னும் பொருள் பற்றிச் சென்னை மாநிலக் கல்லூரியில் ஓர் உரை நிகழ்த்தினார்.

திருவிதாங்கூர் பல்கலைக் கழக ஆராய்ச்சித்துறைப் பேராசிரியராக இருந்தபோது சர்.சி.வி. இராமன் அவர்கள் தலைமையில் ‘காந்தளூர்ச்சாலை’ என்னும் பொருளில் முதல் நாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் பல சரித்திர ஆய்வாளர்களின் முரண்பட்ட கருத்துகளை எடுத்துக் காட்டித் தம் கருத்துகளைச் சான்றுகளுடன் நிறுவினார். தொடர்ந்து நிகழ்ந்த பொழிவுகளை அற்றை நாள் கல்வித் துறை வல்லுநரான கோபால மேனன் அவர்கள் தலைமையில் நிகழ்த்தினார். இச்சொற்பொழிவே பின்னாளில் soap , ‘Some Aspects of Kerala and Tamil Literature” என்ற பெயரில் இரண்டு பகுதிகளாக நூல் வடிவம் பெற்றது.


கவிஞர் மு. இராகவையங்கார்

இவர் கவிபாடும் ஆற்றல் மிக்கவராகவும் திகழ்ந் துள்ளார். இளமை முதல் முதுமை வரை இவர் பாடிய கவிதைகள் பலவும் செந்தமிழில் வெளியாகி உள்ளன.


பொதுச் செய்திகள்

இவர் தாமே பல நூல்கள் இயற்றித் தமிழ்த் தொண்டாற்றியதுடன் நில்லாமல், பல தமிழ் நூல்கள் வெளிவருவதற்கும் காரணமாக அமைந்தார். இதில் குறிப்பிடத்தக்கவை எசு. வையாபுரிபிள்ளை அவர்களின் பணவிடு தூதும், வி. இரா. இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய மூன்றாம் குலோத்துங்க சோழனும் ஆகும். இராமச்சந்திர தீட்சிதரின் சிலப்பதிகார ஆங்கில மொழி பெயர்ப்பு முழுமையும் மு. இராகவையங்கார் அவர்களின் துணை கொண்டே உருவம் பெற்றது.

மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றிக் கூறும்போது எசு. வையாபுரிப் பிள்ளை அவர்கள்,

“பெரும்பாலும் ஆசிரியரது கருத்துகள் கொள்ளத் தக்கனவாகவே உள்ளன”

என்கிறார். (தமிழ்ச் சுடர் மணிகள்; ‘மு. இராகவையங்கார்.’ ப. 397). இவர் தம் நடையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘தெளிந்த நடை’ என்பர்

“பாண்டித்திய படாடோபமென்பது இவர்கள் நடையில் சிறிதும் இல்லை. இவர்கள் உரை நடையிலேயே ஓர் அபூர்வமான கனிவும் இனிமையும் வெளிப்படுகின்றன.”
(எசு. வையாபுரிப் பிள்ளை: தமிழ்ச்சுடர் மணிகள் : ப. 397,)

பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் நடையில் மட்டும் எளிமை உடையவர் அல்லர். வாழ்க்கையிலும் எளிமையைக் கடைப் பிடித்தவர். தம்முடன் பணியாற்றுப வர்களுடன் இனிமையாகப் பழகும் ஆற்றலும் மிக்கவர், இதனை அவருடன் பணியாற்றிய ஆர். வீரபத்திரன் அவர்கள் கூற்றால் தெளியலாம்.

‘சேரவேந்தர் செய்யுட் கோவை’யில் முதற்பகுதி அச்சாகி முடிந்த தறுவாயில் அந்நூல்பற்றிப் பேராசிரியரிடம் நான் கூறியிருந்த செய்தி ஒன்று நினைவிருக்கிறது. நூலில் ஆங்கில முன்னுரை, தமிழ் முன்னுரை, சேர வேந்தர் சரித்திரச் சுருக்கம் முதலிய பல செய்திகள் இடம் பெற்றிருக்க, வேறோர் முக்கியச் செய்தி காணப் பெறாதிருப்பது ஒரு குறையாக எனக்குத் தோன்றியது. திருவிதாங்கூர் மன்னர் பெருமானாரால் நிறுவப்பட்ட பல்கலைக் கழகத்தில், வள்ளல் அழகப்ப செட்டியார் அளித்த நன்கொடையால் உருவான தமிழ் ஆராய்ச்சித் துறையிலிருந்து முதன் முதலாக வெளிவரும் சேர வேந்தர்களைப் பற்றிய நூலில், அக்குலத்தில் தோன்றி அப்பொழுது மாமன்னராகத் திகழ்கிற சித்திரைத் திருநாளைப் பற்றியும், அழகப்ப வள்ளலைப் பற்றியும் வாழ்த்துரைகள் தக்க இடத்தில் அமைய வேண்டியதன் இன்றியமையாமையைப் பேராசிரியர்க்குப் பணிவோடு எடுத்துக் கூறினேன். அதைக் கேட்ட பேராசிரியர் ‘நீங்கள் கருதியது தக்கதே; மறந்திருந்த எனக்கு அதனை நினைப்பூட்டியது நன்று’ என அன்புரை கூறிப் பின்னர் மன்னர்க்கு ஒன்றும் வள்ளற்கு ஒன்றுமாக இரண்டு பாக்களை வாழ்த்தாகப் பாடி நூலில் இணைத்துக் கொண்டார்கள்.”

இப்பகுதி மு. இரகவையங்கார் அவர்கள் தம்மைவிட வயதில் சிறியவர்களாயினும் அவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கனவாக இருந்தால் அவற்றை ஒதுக்கிவிடாமல் மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் உயர் பண்பாளர் என்பதை உணர்த்தி நிற்கின்றன.

முகவுரை

இவ்வாறாக ஆராய்ச்சியாளராகவும், பதிப்பாசிரியராகவும், இதழா சிரியராகவும், உரையாசிரியராகவும், சொற் பொழிவாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்து மு. இராகவையங்கார் அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு அளவிடற் கரியது. அவர் சென்ற நெறி தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய நெறியாகும்!


(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Sunday, October 30, 2022

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் ¼ – சி.பா

 அகரமுதல





(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 1/4


பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அருந்தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர் சிலருள் குறிப்பிடத் தக்கவர் மு. இராகவை யங்கார் அவர்கள். தமிழ் மொழிப் புலமையும் வடமொழிப் புலமையும், ஆங்கில அறிவும். மிக்கவர். சேதுபதிகளின் ஆதரவாலும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தொடர்பாலும், தம் விடா முயற்சியாலும் இவர் கற்றுத் துறைபோய தமிழ்த் துறைகள் பல. இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர். இத்தகு சீர்மையாளர் தம் வாழ்க்கை வரலாற்றையும், தமிழ்த் தாய்க்கு அவர் ஆற்றிய தொண்டுகளையும் குறித்து இவண் காண்போம்.


வாழ்க்கை வரலாறு


பிறப்பும் வளர்ப்பும்


1878ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் சமத்தான வித்துவானாக விளங்கிய சதாவ தானம் முத்துசுவாமி ஐயங்கார் அவர்களுக்கு ஒரு மகனாகப் பிறந்தவர். வைணவ குலத்தைச் சார்ந்தவர். இளவயதிலேயே முத்துசுவாமி ஐயங்கார் இறந்து விட்டதால், அவர்தம் மாணவர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் இவரை வளர்த்து வந்தார்.


தொழில்

மு. இராகவையங்கார் அவர்கள் தம் பதினெட்டாம் அகவையிலேயே தம் வளர்ப்புத் தந்தை பாண்டித்துரைத் தேவர் அவர்களின் அவைக்களப் புலவர் ஆனார். 1901ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் தமிழாசிரியப் பணி புரிந்தார். 1904ஆம் ஆண்டில், பாண்டித்துரைத் தேவர் அவர்களால் 1901ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரி, பாண்டியன் புத்தகசாலை இரண்டையும் உடன் அமைத்துத் தொடங்கப் பெற்ற செந்தமிழ் என்ற இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து எட்டாண்டுகள் செந்தமிழ் இதழ் ஆசிரியராகப் பணி புரிந்தார். இக்காலத்தே இவர் தமிழ் ஆராய்ச்சி உலகிற்கு அளித்த கொடை அளவிடற்கரியது. 1913 முதல் 1939 வரை ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் ஒருவராக, தலைமைத் தமிழ்ப் பண்டிதராக அமைந்து, தமிழ்ப் பேரகராதி ஒன்று உருப் பெறுவதற்குக் காரணமாகத் திகழ்ந்தார். இதன் காரண மாக அரசாங்கத்தார். இவருக்கு ‘இராவ் சாகிப்’ என்னும் விருதினை வழங்கிப் பெருமைப்படுத்தினர். 1944ஆம் ஆண்டு இலயோலாக் கல்லூரியில் பி.ஓ.எல். வகுப்புகள் தொடங்கப் பெற்றபோது, இக்கல்லூரியில் பேராசிரியர் பொறுப்பு ஏற்றார். 1945ஆம் ஆண்டில் திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தில் அழகப்ப வள்ளல் அவர்கள் நன்கொடையால் தோற்றம் பெற்ற தமிழ் ஆராய்ச்சித் துறையின் பேராசிரியர் பதவியை முதன் முதலில் அணி செய்த பெருமை இவரையே சாரும். திருவனந்தபுரத்தில் கோட்டைக்குள் பத்பநாப சுவாமி கோவிலின் அருகில் உள்ள ஒரு வீட்டில் தம் மனையாளுடன் தங்கி இருந்தார். இறை வழிபாட்டில் ஈடுபாடுடைய இவர் திருவிதாங்கூர் மன்னரின் அன்பைப் பெற்றவர். திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது இவருக்கு உதவியாளராக இருந்தவர் திரு. கிருட்டிண ஐயங்கார் அவர்கள் ஆவர். 1951ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராக இருந்து அக்காப்பியத்திற்கு உரை விளக்கமும், பாடபேத ஆராய்ச்சியும் எழுதித் தமிழ்த் தொண்டாற்றினார். பதினெட்டு அகவையில் தமிழ்த் தொண்டாற்றத் தொடங்கிய . இவர் தம் வாழ்நாள் முழுமையும் தமிழுக்காக உழைத்துத் தமிழுக்காக வாழ்ந்து தம் எண்பத்திரண்டாம் அகவையில் இறைவனடி சேர்ந்தார்.

தமிழ்த் தொண்டு

மு. இராகவையங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நோக்கும்போது, அவர் வாழ்நாள் முழுமையும் தமிழ்த்தாயை அணி செய்வதிலேயே கழிந்தமை வெள்ளிடை மலையாகிறது. ஏறத்தாழ அறுபத்து நான்கு ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ப் பெரியார் மு. இராகவையங்கார் அவர்களின் அருஞ்செயல்களை இனிக் காண்போம்.


ஆராய்ச்சி வேந்தர் மு. இராகவையங்கார்

மு. இராகவையங்கார் அவர்களை ஆராய்ச்சி உலக முன்னோடி என்று அறிஞர்கள் ஏத்துவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இவருடைய கைவண்ணத்தால் உருப் பெற்றன. அவற்றுள் பதினான்கு நூல்கள் ஆராய்ச்சி நூல்கள். இவற்றுள் கால/வரலாற்று ஆராய்ச்சி பற்றியன சில; இலக்கிய ஆராய்ச்சி தொடர்பானவை பல; இலக்கண ஆராய்ச்சி பற்றியன சில.


கால வரலாற்று ஆராய்ச்சி பற்றியன

மு. இராகவையங்கார் அவர்களின் முயற்சியில் வெளி வந்த முதல் நான்கு நூல்களுமே கால / வரலாற்று ஆராய்ச்சிகளாகவே மலர்ந்துள்ளன. அவை 1. வேளிர் வரலாறு, 2. சேரன் செங்குட்டுவன், 3. ஆழ்வார்கள் காலநிலை, 4. சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்பன.

மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி நூல் நிரலில் முதல் இடம் பெறுவது ‘வேளிர் வரலாறு’ என்பது. இந்நூல் 1905ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய உரையின் வடிவம் இந்நூல். இந்நூல் ‘செந்தமிழ்’ இதழிலும் வெளி வந்துள்ளது, வேளிர் என்ற சொல் வேளாளர் என்ற தனிப்பட்ட ஓர் இனத்தவரைக் குறிக்கிறது என்று சுட்டி, அவ் வினத்தவரின் வரலாறாக நச்சினார்க்கினியர் கூறிய செய்திகளைப் பிற இலக்கிய சாசனச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தி, இவ்வினத்தவர் தமிழகத்தில் குடியேறிய காலம் கி. பி. பத்தாம் நூற்றாண்டு என்று வரையறை செய்கின்றது.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Sunday, October 23, 2022

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 – சி.பா.

 அகரமுதல



(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5  தொடர்ச்சி)


4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5

கால நதியின் கதியதினில்
கடவுள் ஆணை காண்பீரேல்
ஞால மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!

என்றும் தெய்வ நம்பிக்கையை, கடவுள் ஆணையை வற்புறுத்துகின்றார்.

‘தைப்பொங்கல்’ என்ற கவிதையில், பொங்கல் பொங்கி முடிந்த பிறகு கடவுளுக்கு, முதலிலும் காகத்துக்கு அடுத்தும், பின்னர் உடன் இருந்தோர்க்கும் வழங்கி ஒக்க உண்டு மகிழும் பாங்கினையும் எடுத்து மொழிகின்றார்.

கவிமணி காட்டும் உவமை நலமும் நகைச்சுவைத் திறனும்

கவிமணி கையாளும் உவமைகள் எளியன; இனியன. ‘பூமகளின் புன்னகைடோல் பூத்திடுவோம்’ என்றும், ‘கம்பன் பாமணக்கும் தமிழினைப்போல் பரிமளிப்போம்’ என்றும் பாடும் பாடல்களில் உவமையின் எளிமையைக் காணலாம்.

‘தீபாவளிப் பண்டிகை’ என்ற பாட்டில்,

இட்டிலி வீரர்தென் னிந்தியராம்–என்பது
இன்று காம் காட்டி விடுவோம், அடா!
சட்டினி நண்பன் துணை யிருக்க–அதில்
சந்தேகம் உண்டோ? நீ சொல்வாய், அடா!

என்ற பாடலில், நகைச்சுவை கொப்பளித்து வருவதனைக் காணலாம்.

உழைப்பும் உடல் நலமும்


‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்பர் பெரியர். கவிமணியும், ‘ஆக்கம் வேண்டுமெனில், நன்மை அடைய வேண்டுமெனில், ஊக்கம் வேண்டுமப்பா, ஓயாது உழைக்க வேண்டுமப்பா எள்று கூறுகிறார்.

கூழைக் குடித்தாலும் குளித்தபிறகு குடிக்க வேண்டு மென்றும், ஏழையே ஆனாலும் இரவில் நன்றாய் உறங்க வேண்டுமென்றும் அறிவுறுத்துகின்றார். நூறு ஆண்டுகள் வாழ்வதன் இரகசியத்தைப் பின் வருமாறு கூறுகின்றார்:

தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஒட்டி விடும், அப்பா!
நூறு வயதும் தரும், அப்பா!

அடுத்து,

காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!

என்று கூறுகிறார். இங்குக் கவிமணியின் சொல்லு முறை (the technique of expression) நயம்பட அமைந்துள்ளது.

கவிமணி உணர்த்தும் தேசியம்

பாரதியாரின் கவிதை வெறியையோ தேசிய ஆவேசத்தையோ கவிமணியிடம் காண்பதற்கு இல்லை. எனினும், கவிமணியின் கவிதைத் திறன் போல் தேசிய உணர்ச்சியும் நம் பாராட்டுக்கு உரியதே.

கைத்திறன் பாட்டிலே ‘நாடிய சீர் நாடடைய’ என்று தொடங்கும் பாடலை அனுபவித்த குமரன் வாசகர்களில் சிலர், தேசிக விநாயகம் பிள்ளையைத் தேசிய விநாயகம் பிள்ளை என்றும் வாய் குளிரக் குறிப்பிடலாயினர்.

பாரதியையும் கவிமணியையும் ஒப்பு நோக்கிய இராசாசி பின்வருமாறு கூறியுள்ளார். ‘பாரதி காட்டுப் புளியமரம் போன்றவர்; காடு முரடு, உயிர் இருக்கும்; புளிப்பு உரம் இருக்கும். கவிமணியின் கவிதையில் நகாசு வேலை மிகுந்திருக்கும். பிறகு அன்பு மிளிரும். அத்தகைய கவி தேசிக விநாயகம் பிள்ளை;”[11] இஃது ஓரளவு உண்மைதான்.

மேற்காட்டிய பகுதிகள் கவிமணியின் தேசியப் பற்றை உணர்த்தும். ‘தாயிற் சிறந்ததப்பா பிறந்த தாய் நாடு’ என்று தாய்நாட்டுப் பற்றை ஊட்டி, “பேணி நம் சந்தத் தமிழ் வளர்ப்போம், தாய் நாட்டுக்கே உழைப்போம்” என்று. தமிழ்ப் பற்றையும் நாட்டுப் பற்றையும் விளக்கி, ‘காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய்வோம்’ என்று சொல்லி, பாரில் உயர்ந்த இமயமலையையும், அதன் சிகரத்தில் பறக்கும் தேசக் கொடியையும் காட்டி,

மானம் உருவாக வந்தகொடி – இதை
மாசுறச் செய்வது பாவம், பாவம்!
ஊனில் உயிருள்ள கால மெல்லாம்-மிக
ஊக்கமாய் கின்று.நாம் காத்திடுவோம்

என்று நாட்டுப் பற்றுணர்வோடு நவில்கின்றார். ‘உத்தமனாம் அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய் நெஞ்சே தினம்’ என்று காந்தியடிகளைப் போற்றுகின்றார். இறுதியில், உலகமெல்லாம் ஒரு குடும்ப மாக வாழ வேண்டும் என்பதனை,

உலக மக்களெலாம்–அன்போடு
ஒரு தாய் மக்களைப் போல்
கலகமின்றி வாழும்–காலம்
காண வேண்டுமப்பா!

என்ற பாடலில் கவிமணி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். கவிமணியின் கதர்ப்பற்றும் காந்தியப்பற்றும் நாடு அறிந்தவை.

முடிவுரை

கவிமணி குழந்தைகளின் மனத்தை நன்கு அறிந்தவர்,குழந்தைகளின் பேச்சில் மகிழ்பவர், அவர்களோடு உரையாட விரும்புவர்.

“அவர்(கவிமணி) குழந்தைகளின் மனத்தை நன்கு அறிந்தவர்; குழந்தைகளோடு இனிமையாகப் பேசுவதில் ஆசை உடையவர்; குழந்தைகளுடைய பேச்சையும் அவற்றின் இடையிடயே தோன்றும் பளிச்சென்று தோன்றும் உவமைகளையும் எண்ணி மகிழ்பவர்.”[12] இவ்வாறு திரு.பெ.நா. அப்புசாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

‘கவிமணி’ என்னும் பட்டம் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க அன்பர்களால் சென்னை பச்சையப்பன் கல்லுரியில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களால் 1940 ஆம் ஆண்டு திசம்பர் 24 ஆம் நாள் தரப்பட்டது. கவிமணி என்ற தம் பெயருக்கு ஏற்ப நல்ல கவித்துவத்தோடு மணியான கவிதைகளைத் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்காக வழங்கிய பெருமை தேசிக விநாயகம் பிள்ளையைச் சாரும். பாரதியார் முப்பெரும் பாடல்வழி எப்போதும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுவது போல, கவிமணி அவர்களும் தாம் இயற்றிய குழந்தைப் பாடல்களால் தமிழ்கூறு நல்லுலகத்தால் என்றென்றும் நினைவுகூரப் பெறுவர் என்பது உறுதி.

குறிப்புகள்:

[11]. பி. சிரீ. நானறிந்த தமிழ் மணிகள், ப. 52.
[12] . சுடர்: கவிமணி மலர். 1965, தில்லித் தமிழ்ச் சங்கம்-ப.49

(தொடரும்)

சான்றோர் தமிழ்

முனைவர் சி. பாலசுப்பிரமணியன்