Showing posts with label சி.சேதுராமன். Show all posts
Showing posts with label சி.சேதுராமன். Show all posts

Wednesday, July 27, 2016

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 2 / 4 – சி.சேதுராமன்




 தலைப்பு-தமிழுக்கு ஒளிதந்த தமிழொளி-சேதுராமன் :thalaippu_thamizhukkuoli_thamizholi_sethuraman

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி  2 / 4

  1945-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தமது கவிதைகள் அனைத்தையும் திரட்டி இரண்டு தொகுதிகளாகத் தமிழ்ஒளி உருவாக்கினார். பாரதிதாசன் நண்பராக விளங்கிய திருவாரூர் டி.எம்.இராமன் என்பார், அத்தொகுதிகளை நூலாக வெளியிடுவதாகக் கூறி கவிஞரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தக் கவிதைத் தொகுதிகள் இரண்டும் தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டார். இது குறித்து மேலும் தகவல் அறிய முயன்ற போது “இருபது வயது இளைஞன் பேரால் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளி வருவதா? ” என்ற அவரின் எண்ணம் தெரிய வந்தது. புலமைக் காழ்ப்பு பொறி பறந்ததைப் புரிந்து கொண்டார் தமிழ் ஒளி. வலிமைப் படைத்தவர்களை எதிர்க்க வாய்ப்பில்லாமல் சென்னைக்குப் பயணமானார்.
  புதுவைக் குயில்தோப்பில் கருக்கொண்டு எழுதிய கவிதைகள் பலவற்றைப் பெரியாரின் ‘குடியரசு’, அண்ணாவின் ‘திராவிட நாடு’ ஆகிய இதழ்களில் தமிழ்ஒளி பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவுடைமை இயக்கத்தில் சேர்தல்
  மாணவப் பருவத்திலேயே பெரியாரின் தன்மதிப்பு(சுய மரியாதை)க் கருத்துகளில் பெரிதும் ஈர்க்கப்பட்ட தமிழ்ஒளி 1945-ஆம் ஆண்டில் பெரியாரின் தன்மதிப்பு இயக்கத்தில் ‘தீவிரக்கருஞ்சட்டை வீரராக’ இணைந்து செயல்பட்டார். 1947-ஆம் ஆண்டில் விடுதலை நாளைத் துக்க நாளாகக் கொண்டாடுமாறு பெரியார் கூறியதை ஏற்க முடியாத நிலையில் தி.க.கொள்கையில் வெறுப்புற்று தோழர் ப. சீவானந்தம் அவர்களைச் சந்தித்துப் “பொதுவுடைமைக் கட்சியில்” தமிழ்ஒளி உறுப்பினராகச் சேர்ந்தார்.
  அந்தச் சமயத்தில்தான் பதினேழு வயது இளைஞரான எழுத்தாளர் செயகாந்தன் தமிழ்ஒளியைச் சந்தித்தார். இச்சந்திப்பே ஓர் அரிய சிறுகதை எழுத்தாளரைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்தது எனலாம். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ‘செயகாந்தன் காலம்’, ‘செயகாந்தன் பாணி’ என்றெல்லாம் போற்றுமளவிற்குச் சிறுகதைகளைத் தமக்கே உரிய எதார்த்தமான பாணியில் எழுதி, புகழின் உச்சியில் நின்றவர் செயகாந்தன். இப்படிப்பட்ட உன்னதமான படைப்பாளி தமிழ்ஒளியின் இலக்கியப் பாசறையிலிருந்து உருவானவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
  தமிழ்ஒளியால் தாம் வார்த்தெடுக்கப்பட்ட விதத்தை, “நான் தமிழ் இலக்கியப் பாடம் யாரிடமாவது முறையாக நெடுநாட்கள் பயின்றிருப்பேன் என்றால், அது தமிழ்ஒளி அவர்களிடம்தான். படிக்கிற விசயத்தில் எனது சனாதனத்தை மிகவும் கடுமையாக விமரிசனம் செய்வதோடு அன்றி, எத்தனையோ விசயங்களில் எனது கண்களைத் திறந்தவர் அவர்; பாரதியின் படைப்புகளையே தாண்டிவரக்கூடாது என்றிருந்த என்னை புதுமைப்பித்தன்வரை இழுத்து வந்தவர் தமிழ் ஒளிதான்” எனச் செயகாந்தன் குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும்.
  தமிழ் ஒளி, தன்மதிப்பு இயக்கத்தில் இருந்தபோது எழுதியதைவிட, பொதுவுடைமைக்கு வந்தபிறகுதான் பொதுவுடைமைக் கொள்கைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். புதுவையிலிருந்து சென்னைக்கு வரும் போதெல்லாம் சென்னையின் பல்வேறு இடங்களில் கால்நடையாகவே சுற்றிவந்தார். குறிப்பாகச் சென்னை-வால் டாக்சு சாலையில் இருந்த பட்டறைகளை ஒட்டினாற்போன்று வசித்து வந்த கூலித் தொழிலாளிகளின் வாழ்வு அடிக்கடி இவரது கண்களில் பட்டது. வெய்யிலுக்கும்-மழைக்கும் பாதுகாப்பு இல்லாத அந்தக் குடிசைகளில், வாழ்வுக்கும் பாதுகாப்பு இன்றி வாழும் ஏழை மக்களின் அவலம் தோய்ந்த வாழ்க்கைநிலை கவிஞரின் நெஞ்சை வருத்தியது.
  அதனால் தான் சென்னைக்கு வரும் போதெல்லாம் உழைக்கும் மக்களின் வாழிடங்களையே இவரது கால்கள் சுற்றிச்சுற்றி வந்தன. வருக்க எழுச்சியைத் தோற்றுவிக்கவும், களப்பணிகளில் ஈடுபடவும் சென்னையே சிறந்த இடம் எனக் கருதியதால்தான் 1945-ஆம் ஆண்டு முதல் சென்னையிலேயே அவர் நிலையாகத் தங்கிவிட்டார்.
  ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘கவிஞனின் காதல்’ என்னும் மூன்று காவியங்களும் இவர் சென்னையில் நிலையாகத் தங்கிய காலத்தில் எழுதப்பட்டது எனலாம். தமிழ்ஒளி எழுதிய இந்த மூன்று நூல்களும் 1947-ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் வெளியாகித் தமிழ் ஒளியின் ‘இலக்கியப் போக்கை’ இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தின.
  சென்னைக்கு வந்த தமிழ்ஒளி தாம் இறப்பதற்குச் சில நாள் முன்பு வரை தமது பெற்றோர்களைப் பார்ப்பதற்காகவோ, வேறு ஏதேனும் நிகழ்வுகளுக்காகவோ புதுவைக்கு செல்லவே இல்லை. அவருக்குக் குடும்பம் என்ற ஒன்றும் இல்லை; உறவினர்களையும் நாடவில்லை.
  கவிஞருக்குத் திருமணம் செய்து வைக்க(1948இல்) அவரது பெற்றோர்கள் விரும்பியபோதும் அவர் அதை மறுத்துவிட்டார். தமது எண்ணங்களைப் புரிந்து நடக்கக்கூடிய ஒரு பெண்ணைத் தமது பெற்றோரால் தேர்ந்தெடுக்க முடியாது என்று கருதியதால் திருமணத்தை மறுத்தார்.
  சென்னையில் தனிமனிதனாக வாழ்ந்த தமிழ்ஒளி அதே சமயத்தில் தனக்கென்று ஒரு நண்பர்கள் வட்டத்தையும் அமைத்துக்கொண்டு செயல்பட்டார். அந்த வட்டத்தில், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், தொழிற்சங்கத் தோழர்கள்… எனப் பலரும் இருந்தனர். தற்போது வள்ளலார்நகர் என்று அழைக்கப்படும் தங்கச்சாலையிலும், திருவொற்றியூரிலும் பொதுவுடைமைக்கட்சித் தோழர்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததால், அங்கெல்லாம் தமிழ்ஒளி தங்கினார். ஆனால், அவர் ஓரிடத்திலேயும் நிலைத்திருந்ததில்லை. அதேபோன்று பத்திரிகைகளுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருந்தபோதிலும் எந்த ஒரு பத்திரிகையிலும் அவர் மாத ஊதியத்திற்காகப் பணியாற்றியதில்லை.
  • முனைவர் சி.சேதுராமன்,
  • இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
  • மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
மின்வரி: Malar.sethu@gmail.com

Thursday, July 21, 2016

தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 – சி.சேதுராமன்





தலைப்பு-தமிழுக்கு ஒளிதந்த தமிழொளி-சேதுராமன் :thalaippu_thamizhukkuoli_thamizholi_sethuraman

தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4


  பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப் பதித்த கவிஞர்தான் தமிழொளி. பாரதியையும், பாரதிதாசனையும் பலரும் பின்பற்றி அவர்களது சுவடுகளில் கால்பதித்து நடந்தாலும் அவர்களின் வழிநின்று பொதுவுடைமைக்குக் குரல் கொடுத்து இறுதிவரை பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் தமிழொளி.
  தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியை அடுத்த ‘ஆடூரில்’ சின்னையா – செங்கேணி அம்மாள் இவர்களின் தலைமகனாக 1924-ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் 21-ஆம் நாள் கவிஞர் தமிழொளி’ பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் விசயரங்கம் என்பதாகும். அவரை வீட்டில் அன்பாகப் ‘பட்டுராசு’ என்று அழைத்தனர். ஆனால் அவர் தனக்குப் பெற்றோர் இட்ட பெயரை விடுத்து பாரதிதாசனின் கவிதை ஒன்றிலிருந்தே எடுத்த ‘தமிழ் ஒளி’ என்ற பெயரைத் தனக்குப் புனைபெயராகச் சூட்டிக் கொண்டார். இதுவே இறுதி வரை நிலைத்து நின்றது எனலாம்.
  பாவேந்தர் பாரதிதாசன் பணியாற்றிய புதுவை முத்தியாலு பேட்டையில் உள்ள கல்வே கல்லூரியில் கவிஞர் தமிழ்ஒளி தமது தொடக்கக் காலக் கல்வியைத் தொடங்கினார். தமிழ்ஒளி பாரதிதாசனைத் தனது வகுப்பு ஆசிரியராக மட்டுமின்றி வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசிரியராகவும் கொண்டார். அக்கல்லூரியில் தமிழ்ஒளி புகுமுக வகுப்பு படித்துத் தேறினார்.
  போராட்ட வீரர்களின் புகலிடமாகவும்-புரட்சிச் சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் விளங்கிய புதுவை மண்தான் தமிழ் ஒளிக்குப் புதிய கனவுகளும், கருத்துகளும் உருவாவதற்குக் களமாக-உரமாக அமைந்தது. ஒரு தன்மதிப்பு(சுயமரியாதை)த் தோழர் மரணம் அடைந்தபோது கவிஞர் எழுதிய இரங்கற் பாடல் அனைவரது பாராட்டையும் பெற்றது. அந்தப் பாடல் இளமைக்காலந்தொட்டே தமிழ்ஒளிக்கு சமூக அக்கறையும் உண்டு என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்த்து.
  தமிழ்ஒளி பள்ளிச்சிறுவனாக இருந்த காலத்தில் புதுவையில் இருந்த பிரஞ்சு ஆளுநர் ‘போன் வேன்'(Bon van) என்பவன் மக்களிடம் கொடூரமாக நடந்துகொண்டான். விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் புதுவை அரசியலில் தீவிரமாக இருந்த தோழர் வி.சுப்பையாவை ஆளுநர் போன்வேன் புதுவையை விட்டு வெளியேற்றி நாடு கடத்தினார்.
  ஆளுநரின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அவனுடைய குடும்பத்தாரும் ஆணவத்துடன் நடந்து கொண்டனர். போன்வேனின் மகளும் ஆணவத்துடன் அனைவரிடமும் நடந்து கொண்டாள்.
  இதனைக் கண்ட இளைஞர்கள் இதனை எவ்வாறேனும் அடக்க வேண்டும் என்று எண்ணினர். ஒருநாள், புதுவை மணக்குள விநாயகர் கோயில் அருகே தமிழ்ஒளி செல்லும்போது போன்வேன் மகளின் அதிகாரம் நிறைந்த ஆணவத்தைக் கண்டு, சினமுற்று அவளைப்பற்றி “துண்டறிக்கை” எழுதிப் புதுவை நகர் முழுதும் வழங்கிவிட்டார். இதனைக் கண்டு கோபமுற்ற ஆளுநர் போன்வேன் தமிழ்ஒளியைச் சிறையில் அடைத்தான். இரண்டு வாரங்கள் சிறைவாசத்தைத் துய்த்த கவிஞர் மாணவராக இருந்ததால் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
  பாண்டிச்சேரியில் தமிழ்ஒளியால் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அவரைப் பாரதிதாசன் பெருமுயற்சிசெய்து தஞ்சை மாவட்டம் கரந்தைத் தமிழ்க் கல்லூரிக்குப் பயில அனுப்பினார். தமிழ்ழொளி கரந்தையில் படித்துக் கொண்டிருந்த போதுதான் “சிற்பியின் கனவு” என்னும் நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் சக்தி நாடக சபாவினரால் அரங்கேற்றப்பட்டது. பின்னாளில் இது ‘வணங்காமுடி’ என்னும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. ஆனால் திரையில் மூலக்கதை: தமிழ்ஒளி என்று குறிப்பிடப்படாமலேயே அவரது பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  கரந்தையில் கவிஞர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழுக்கு முதலிடம் இருந்ததைவிட, சாதிக்கே முதலிடம் இருந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தமிழ் ஒளிக்கு இந்நிலை பெரும்பாதிப்பை ஏற்படுத்தியதால் அவரால் கரந்தையில் தொடர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, தமிழொளி மீண்டும் புதுவைக்குத் திரும்பினார். தமிழ் ஒளிக்குப் புதுவையில் பாரதிதாசனின் இல்லமே புகலிடம் அளித்தது. பாரதிதாசனின் இல்லத்தில் கவிஞர் தங்கியிருந்தபோது, பாரதிதாசனின் மகன் கோபதி, தமிழ் ஒளிக்கு உற்ற தோழனாக இருந்தார்.
  1944-ஆம் ஆண்டில் கோபதி ‘முரசு’ என்னும் பெயரில் கையெழுத்துப்படி ஒன்றை நடத்தி வந்தார். அந்தக் காலத்தில் தமிழில் கைப்படி நடத்தக்கூடாது என்று புதுவை அரசு சட்டம் போட்டிருந்தது. அதனால் கோபதி பாரதிதாசனின் முன்னிலையிலேயே கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு ஆறு மாதம் நடந்தபோதிலும், அடுத்த இதழைக் கொண்டு வருவதற்காக கோபதி தமது பெயரை, ‘மன்னர் மன்னன்’ என்று மாற்றிக்கொண்டு முரசு இதழை வெளியிட்டார். அந்தச் சமயத்தில் தமிழ்ஒளி முரசு இதழுக்கு வலக்கரமாக இருந்து செயல்பட்டார்.
  தமிழொளி பாவேந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலத்தில் பாரதிக்கு ‘குயில்பாட்டு’ கருக்கொண்ட இடமாகிய புதுவைக் குயில்தோப்பிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அங்கே நிலவிய நிழலின் குளுமையும், குயில்களின் இன்னோசையும் கவிஞரது இதயத்தை ஈர்த்தன. அதனால் கவிஞர் தமிழொளி பற்பல கவிதைகளை எழுதினார். தமிழ் ஒளி தமது இருபது வயது வரை புதுவையில் வாழ்ந்தார். குறிப்பாகப் பாரதிதாசன் இல்லத்தில் இருந்தார் என்பது நோக்கத்தக்கது. அப்போது கவிஞர் தமது படைப்புகளை ஆசான் பார்வையில் வைத்து பாராட்டுப் பெற்றார்.
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
மின்வரி: Malar.sethu@gmail.com