Showing posts with label பகுத்தறிவு. Show all posts
Showing posts with label பகுத்தறிவு. Show all posts

Wednesday, November 04, 2015

சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார்

சிவகங்கை இராமச்சந்திரனார்:sivagangai_ramachanthiranar

தொலைநோக்கு ஆன்றோர் இராமச்சந்திரனார்

  ஒவ்வொருவரும் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் பெருமையாக இணைத்துக் கொள்ளும் அவலமான வழக்கம் இந்தியாவில் உள்ளது. இத்தகைய போக்கு தமிழ்நாட்டை விடப் பிற மாநிலங்களில் பெரும்பான்மை இருப்பதையும் நாம் காணலாம். சான்றாக இராய், இராவ், எக்டே, ஐயர், கோசு, கௌடா, கௌர், சட்டர்சி, சர்மா, சிங், சோனி, சௌத்திரி, திரிவேதி, தேசாய், நம்பியார், நாயர், நாயுடு, பட், பட்டேல், மிசுரா, முகர்சி, மேனன், வர்மா, என ஆயிரக்கணக்கிலான சாதி ஒட்டுகளைக் கூறலாம். பிற மாநிலங்களின் தலைவர்கள் சாதிப் பெயர்களாலேயே அழைக்கப்படும் நிலையும் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் (ஈ.வெ.இராமசாமி) நாயக்கர் என்றழைக்கப்பட்ட பெரியார் ஈ.வெ.இரா. ஆனார்; (காமராசு) நாடார் என அழைக்கப்பட்டவர் காமராசர் ஆனார். பொதுவாக இன்றைய தலைவர்கள் சாதிப்பெயர்களுடன் அழைக்கப்படுவதில்லை. பொது மக்களிலும் பெரும்பான்மையர் சாதிப் பெயர்களுடன் குறிக்கப்படுவதில்லை. சாதி வழக்கமும் சாதிச் சண்டைகளும் சில இடங்களில் சாதிக் கொடுமைகளும் இருப்பினும் பொதுவாக வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிடும் பழக்கம் குறைவு.
  தமிழ்நாட்டில் மட்டும் இந்த மாற்றம் ஏற்படக் காரணம் என்ன? நீதிக்கட்சியின் தொண்டும் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மேற்கொண்ட பரப்புரைப் பணிகளுமே இந்த நிலை மாற்றத்திற்குக்காரணம். நீதிக்கட்சியும் திராவிட இயக்கங்களும் மேற்கொண்ட அமைதிப்புரட்சியைப் பலர் உணரவில்லை.
  இத்தகைய அரும்பணிக்கு முன்னோடியாக வித்திட்ட ஆன்றோர் யார்? அவர்தாம் பகுத்தறிவுச் சுடர், தன்மதிப்பு இயக்கத் தலைவர், சிவகங்கைச் செம்மல் இராமச்சந்திரனார்.
  அனைவருக்கும் கட்டணமில்லாக் கல்வி! மாணவர்க்கு உணவு வழங்கும் திட்டம்! முதலான அவர் கொணர்ந்த தீர்மானங்கள் பல இன்றைக்குப் பகுதி அளவில் அரசுப்பள்ளிகளில் இலவசக்கல்வி, சத்துணவுத் திட்டம், என வெவ்வேறு பெயர்களில் செயலாக்கம் பெற்றுள்ளன. ஆனால், தொலைநோக்கில் இவற்றை அறிமுகப்படுத்திய ஆன்றோரை மறந்துவிட்டோம்.
  “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவர் வழியில் வாழ்ந்த அவர், சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே என்ற அவலத்தைப் போக்க எடுத்த புரட்சிச் செயலே சாதி வால் இல்லாத் தமிழ்ப் பெயர்களைப் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
செங்கற்பட்டில் தமிழ்மாகாணத் தன்மதி்ப்பு மாநாடு 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 18, 19 ஆகிய இரு நாட்களும் நடைபெற்றது. இம்மாநாட்டில் வரலாற்றுச்சிறப்பு மிக்க இரு தீர்மானங்களைக் கொணர்ந்தார். அவைதாம் தமிழ் நாட்டில் பெரும்புரட்சியை ஏற்படுத்தின.
  திராவிட இயக்கங்கள் உருமாறி ஆட்சிச் சுவையில் மூழ்கியதால் இதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதனை ஒரு கட்சி அல்லது இயக்கத்திற்குரிய கொள்கையாகப் பாராமல், “சாதி இரண்டொழிய வேறில்லை” என்னும் தமிழ்நெறி பிறந்த மண்ணில் சாதிக் கொடுமைகளும் சாதிப்பிளவுகளும் அடியோடு அகல வேண்டும் என்னும் உறுதிப்பாட்டை அனைவரும் எடுகக்க வேண்டும். இது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின்பணி. தமிழ்நாட்டில் வாழும் அனைவரின் பணி.
  சிவகங்கைச் செம்மல் பெருநெருப்பாய்ப் பரவும் சிறு பொறியை விதைத்ததைப் பார்ப்போம்!
  மாநாடுகளிலும் சிறப்புக் கூட்டங்களிலும் இராமச்சந்திரனார் கொண்டு வந்த தீர்மானங்களும் தீர்மான முன்மொழிவு வழிமொழிவுச் சொற்பொழிவுகளும் ஆற்றிய தலைமை உரைகளும் சிந்தனையை வெளிப்படுத்திய சிறப்பு உரைகளும் என்றென்றும் போற்றப்படவேண்டியவையே. இருப்பினும் இந்தியா முழுவதும் வழிகாட்டியாகக் கொள்ளக்கூடிய இரண்டு தீர்மானங்களை இப்போது பார்க்கலாம்.
சாதி வாலை வெட்டி எறியச் செய்த அத்தீர்மானங்கள் வருமாறு:
1. மக்கள் தங்கள் பெயர்களுடன் சாதி அல்லது வகுப்பைக் காட்டும் பட்டங்களை இன்று முதல் வி்ட்டுவிடவேண்டும் என இம்மாநாட்டின் மூலம் தமிழக மக்களைத் தீர்மான வடிவில் கேட்டுக் கொள்கிறேன்.
2. மக்கள் சாதி அல்லது சமயப் பிளவுகளைக் காட்டக் கூடிய குறிகளை எதிலும் எங்கும் அணிந்து கொள்ளக் கூடாது என்பது எனது இரண்டாவது தீர்மான வடிவாகும்.
 சாதிப்பட்டங்களைத் தூக்கி எறிய வேண்டிய தீர்மானங்கள் குறித்து அன்றைக்கே அவர் பேசிய பேச்சு இன்றைக்கும் நமக்கு வழிகாட்டியாகும். அவ்வுரையின் பகுதி வருமாறு:
  “இத்தீர்மானங்களால் நாளையே நமக்கு நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை ஆயினும், நம் மனங்களில் ஒற்றுமை ஏற்படுத்த இது அவசியம். நம்மில் இத்தீர்மானம் சிலருக்குப் பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தலாம். யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. கோபமும் தேவை இல்லை. சுயமரியாதையைக் காட்ட வந்த நாமே நீண்ட காலமாக இந்தத் தவறுகளைச் செய்திருக்கக்கூடாது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.
  நமக்குப் பின்னால் நாடார், சேர்வை, பிள்ளை எனும் வால் பட்டங்கள் நம்மைப் பிரித்து வைத்துள்ளன. இவற்றை நாம் மறந்து விட்டால் நம்மில் வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை அல்லவா? மக்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். எதிர்காலப் பகுத்தறிவுச் சமூகம் நம்மை இதற்காக நிச்சயம் வாழ்த்திப் புகழும்.
  நாம் அனைவரும் பகுத்தறிவுவாதிகள். முதலில் நாம் ஒன்றாவோம். சாதி பேதங்களைக் களைந்து உலகக் குடிமக்கள் ஆவோம். பின்னர் இந்துக்களும் கிறித்துவர்களும் முகம்மதியர்களும் என்றே வித்தியாசப்பட்டு நிற்பர். இனிவரும் நாளில் உலகத்து மனிதர்கள் எனும் ஓர் அமைப்பிற்குள் அவர்களையும் கொண்டுவந்து சேர்க்கும் உரிமை நமக்கு வந்துவிடும்.
  மாநாட்டுத தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்களை ஒன்று கேட்டுக் கொள்வேன். இது முதல் இருந்த சேர்வை என்ற பட்டத்தை நான் தூக்கி எறிகிறேன். இனி நான் இராமச்சந்திரன் மட்டும்தான். என்னை யாரும் சேர்வை என்று அழைக்க அனுமதிக்க மாட்டேன். சௌந்திர பாண்டியன் அவர்களும் இனித் தனது பட்டமான நாடார் என்பதைத் தூக்கி எறிய வேண்டுகிறேன். மற்றவர்கள் அவரை நாடார் என இனி அழைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர் கடமை. இது நாம் நம் எதிர்காலத்திற்குச் செய்யும் சேவை. சுயமரியாதைக்குத் தருகின்ற மரியாதையாகும்.”
  அன்றைக்கு இராமச்சந்திரனார் விதைத்த சிறு விதை இன்று பெரு ஆலமரமாய் தழைத்தோங்கி நிற்கிறது. எதிர்கால நோக்குடனும் சமநிலை மன்பதையை உருவாக்கும் இலக்குடனும் அவர் கொண்டு வந்த சாதிப்பட்ட ஒழிப்புத் தீர்மானங்களே இன்றைக்குத் தமிழ்நாட்டில் செயல்பாட்டாய் மலர்ந்துள்ளது.
  ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்காகத் தம் உழைப்பையும் செல்வத்தையும் நல்கிய இராமச்சந்திரப் பெருமகனார், சாதிப்பற்றில் ஊறியிருந்த மக்களின் நிலையை உணர்ந்தும் அதே நேரம் முயன்றால் முடியாதது இல்லை என்ற நம்பிக்கையிலும்தான் நாளையே நமக்கு நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை எனப் பேசி உள்ளார். அவர் எண்ணியவாறு ஒரே இரவில் என்றில்லாமல் படிப்படியாக இன்றைக்கு அக்கனவு பெருமளவு நனவாகி உள்ளது. தமிழ்நாட்டில் சாதிப்பட்டங்களும் சாதி, சமயக் குறியீடுகளும் பெருமளவு குறைந்துள்ளன. ஆனால், இந்தியா முழுமையும் மக்கள் தத்தம் சாதி வாலை அறுத்தெறியும் – சாதி, சமயக் குறியீடுகளைத் துடைத்தெறியும் – நாளை விரைவில் கொணர நாம் பாடுபடவேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகி, நம் சம உடைமை அரசில் சாதிவாலுடன் உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதும் அரசின் பதவிகளை வகிப்பதும் அரசமைப்பிற்கு எதிரானது எனக் கூறி தடை பெற வேண்டும். பிற மாநில அரசுகளையும் மத்திய அரசையும் இந்தியா முழுமையும் உள்ள தலைவர்களையும் அமைப்பினரையும் பொதுமக்களையும் அணுகி, மனமாற்றம் செய்து, ஒன்றே குலம் என்னும் நிலையை விரைவில் அடைய வேண்டும். இராமச்சந்திரனார் கண்ட கனவின்படி உலக மனிதர்கள் இயக்கம் என்னும் சாதி, சமய, நிற, பிற வேறுபாடற்ற உலகம் அமைய வேண்டும்.
  தமிழ்நாட்டில் கலை உலகைச்சார்ந்த இறக்குமதியாளர்கள் சாதி வாலுடன் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். சில தலைவர்கள் சாதி வாலுடனே இயங்குவதைப் பெருமையாக எண்ணுகிறார்கள். சாதி வாலுடன் உழலுபவர்களைத் தூக்கி எறியும் மனப்பான்மையை நாம் பெறவேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தமிழ் நெறிப்படி உலகம் ஒன்றே என்னும் நிலையை நாம் அடையப் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் பாரெங்கும் நிகழும் படுகொலைகளை நிறுத்த இயலும். அனைவரும் இணை என்னும் நிலையை அடைய முடியும். எல்லார்க்கும் எல்லாம் என்னும் உயர்வை எட்ட முடியும்.
  புரட்டாசி 02, தி.பி. 1915 / 1884 ஆம்ஆண்டு செப்தம்பர் பதினாறாம் நாள் தோன்றி மாசி 15, தி.பி. 1964 / 1933ஆம்ஆண்டு பிப்பிரவரி 26 ஆம் நாள் மறைந்த இராமச்சந்திரப் பெருமகனார் வாழ்ந்த காலம் குறைவுதான். ஆனால், பகுத்தறிவுப் பாதையிலும் தன்மதிப்பு உணர்விலும் ஒவ்வொருவர் செயல்களிலும் அவர் வாழ்ந்து கொண்டுள்ளார். அவரது புவி வாழ்வு குறைவாக இருந்தாலும் புகழ் வாழ்வு என்றென்றும் தொடரும். அவரது புகழ்வாழ்வில் நம்மையும் இணைத்துக் கொள்ள சாதி என்ற சொல்லை அறியாத உலகை நாம் ஆக்குவோம்!

இராமச்சந்திரனார் புகழ்பாடி
மக்கள் யாவரும் இணையே என்னும் நிலையை எய்துவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்


Sunday, September 06, 2015

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்

 pakuththarivukavignar_ilakkuvanar_thalaippu
      பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க பாடல் படைப்பு அவரின் துரத்தப்பட்டேன் என்னும்உள்ளக் குமுறலாகும். நம் நாடு சிறந்த மக்களாட்சி நாடாக விவரிக்கப்பட்டு வந்தாலும் உள்ளபடியே பல உரிமைகள் ஏட்டளவோடு நின்று நடைமுறையில் மறுக்கப்படுவனவாகவே உள்ளன. இதற்கொரு சான்றே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், தம் கல்லூரிப் பணியைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், சாதிக் கண்ணோட்டத்தால் வேலைவாய்ப்பை இழந்தது ஆகும். விருதுநகர்ச் செந்திற்குமார இந்து நாடார் கல்லூரியில் பேராசிரியர் அவர்கள், தமிழ்த்துறைத் தலைவராகவும் துணை முதல்வராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறிவியல் அறிஞர் கோ.து.(நாயுடு) அவர்கள். நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக அனுப்பப்படுவது நாட்டு வளத்திற்கு ஏற்றதென எண்ணி அவருக்குச் சார்பாகப் பரப்புரை மேற்கொண்டார். அவரை எதிர்த்த கருமவீரர் காமராசர் தமிழ் நாட்டை ஆளுவது நமக்கு நல்லதெனக் கூறி அவரை எதிர்த்து வேறு எதுவும் கூறினாரல்லர். இறுதியில் தேர்தலில் கருமவீரரே வெற்றி பெற்றாலும், நாடார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு நாடாரை எதிர்த்தே பேசுவதா எனச் சாதிக் கண்ணோட்டத்துடன் கூறிப் பேராசிரியரைப் பணிநீக்கம் செய்தனர். ஆனால், கருமவீரரை எதிர்த்துப் பரப்புரை மேற்கொண்ட கல்லூரிச் செயலரை – அவர் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் – ஒன்றும் செய்யவில்லை. கல்லூரி தோற்றுவிக்கப்படும் பொழுது அதன் வளர்ச்சிக்குத் தேவை என அழைக்கப்பட்ட தமிழறிஞரை அவரது பணியால் சிறப்பு பெற்ற கல்லூரி நிருவாகம் சாதிக்கட்டால் நீதிக் கண்களை மறைத்துக் கொண்டு இவ்வநீதியை இழைத்தது. கல்லூரி மாணாக்கர்கள் மட்டுமின்றி ஊர் மக்கள் அனைவருமே திரண்டு எதிர்த்த போதும் சாதிச் செருக்கால் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.எத்தகு இன்னல் நேரினும் தமிழ்ப் பணியாற்றுவதற்கு அஞ்சமாட்டேன்என்னும் உறுதிப்பாடு கொண்ட பேராசிரியர் அவர்கள், மன்பதைச் சூழலை நொந்த உள்ளத்துடன் விளக்குவதுதான் துரத்தப்பட்டேன்என்னும் கவிதைப் படைப்பு. மரபுவழிச் செய்யுளாயினும் புதுக்கவிதை மரபையும் இதில் காண இயலும்.

      ‘‘சாதிகள் ஒழியச் சமரிடும் நாளில்
      சாதிகள் பேரால் வாதிட வந்தனர்
எனத் துரத்தப்பட்டேன்பாநூலில் கவலைப்பட்டு,

      ‘‘உரிமை என்பதும் ஓர் குலம் என்பதும்
      வெற்றுரை என்பதை விளக்கி விட்டனர்
      சாதிகள் வேண்டா என்றே சாற்றி
      சாதிகள் நலனே தன்நலன் ஆகக்
      கடமைகள் ஆற்றும் கயமை ஈங்கு
      என்று நீங்குமோ இருநிலம் உய்யவே”
எனக் கவலைப்படும் செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்,
      ‘‘சாதிப் பற்றே தழைத்துப் படரும்
      மக்களைப் பிரித்து வன்முறை செழிக்க
      அறநெறி கோடி அல்லது புரியும்
      சாதிமுறைகள் சாகும் நாள் என்றோ
எனக் ‘‘கருஞ்சட்டை என்பர்என்னும் கவிதையிலும், இக்கவலையைப் புலப்படுத்தியுள்ளார். திராவிட ஆட்சிகள் தொடர்ந்தாலும் போலித் திராவிடமும் புகுந்தமையால், பேராசிரியர் ஏக்கம் இன்றும் தீரவில்லை. இதற்குத் தீர்வு,
‘‘நல்லறம் கொன்று நாட்டைக் கெடுத்து
அல்லது புரிந்துஅடிமையாகித்
தம்மினம்மறந்து தாழ்வுற்றழிவரா?
அன்றே! அவருரை கேண்மின்!”

எனப் பெரியார் வழிநிற்பதுதான் என்று அன்றே அவர் கூறியதை இன்றாவது நாம் பின்பற்றினால் நாளைய உலகாவது நன்கு விடியும்.

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan+11




Sunday, August 30, 2015

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

   pakuththarivukavignar_ilakkuvanar_thalaippu
  சங்கப்புலவர்கள் மரபில் அகவற்பாக்கள் பலவற்றை எழுதியுள்ள பேராசிரியர்  இலக்குவனார் அவர்கள், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பாவகைகளிலும் பாக்கள் யாத்துச் செந்தமிழ்வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பை அளித்துள்ளார். விருத்தம், கண்ணி, கீர்த்தனை வடிவங்களில் இசைப்பாடல்களையும் எழுதித் தமிழிசை இயக்கத்திற்கு எழுச்சியும் ஏற்படுத்தியுள்ளார். தமிழர் தலைவர்கள் பற்றியும், தமிழறிஞர்கள் பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளதுடன், வாழ்த்துப் பாடல்கள், இரங்கற்பாக்கள், பொங்கல் வாழ்த்துக் கவிதைகள், திருமணநாள் வாழ்த்துகள், படையல் கவிதைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் கவிதைப் படைப்புகளைப் பிரிக்க இயலும். தமிழினத் தந்தை பெரியார் ஈ.வெ.இரா., தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், வள்ளல் அழகப்பனார், மனிதருள் மாணிக்கம் நேரு, பேரறிஞர் அண்ணா, கருமவீரர் காமராசர், நாவலர் இரா.நெடுஞ்செழியன், பொன்மனச் செம்மல் ம.கோ.இராமச்சந்திரன், அறிவியல் அறிஞர் கோ.து.நாயுடு, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், கல்வி வள்ளல் கருமுத்து தியாகராசர், இந்தியை எதிர்த்துத் தீக்குளித்த செந்தமிழ் மறவன் சின்னச்சாமி, முத்தமிழறிஞர் கலைஞர் என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஒருசாலை மாணாக்கர் கிருட்டிணமூர்த்தி போன்ற நண்பர்களுக்கும் பிற தமிழன்பர்களுக்கும் பாடிய திருமண வாழ்த்து, பணித் தோழர் அ.கி.பரந்தாமனார் முதலிய தமிழறிஞர்களுக்குப் படைத்தளித்த பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து என இப்பட்டியல் மேலும் நீளும்.

      பாடல்கள் பிறந்த சூழல் எதுவாயினும், அனைத்தும் உயிரோட்டம் உள்ளவையாகவும் உயர்ந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவும் உணர்ச்சி மிக்கவையாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டவையாகவும் அமைந்தமையையும் தமிழ்க் கவிதை வரலாற்றில் பேராசிரியர் இலக்குவனாருக்குச் சிறப்பான ஓர் இடம் உண்டுஎன்பதையும் ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். பேராசிரியர் பின்பற்றிய கவிதை மரபும் கையாண்ட உவமை அணிகளும் உருவகச் சிறப்புகளும் எளிய நடையும் புதிய சொல்லாக்கங்களும் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றின் தாக்கங்களும் மரபு வழியிலான புதுக்கவிதைத் தோற்றத்திற்கு வழிகாட்டிய சூழலும் அறிஞர்களால் சிறப்பிக்கப் பெற்று, செம்மொழித்தமிழுக்கான பங்களிப்பில் அவரது முதன்மைச் சிறப்பை உணர்த்துகின்றன.
     
  பேராசிரியர் அவர்களின் கவிதைப் பணிகளைக் குறித்துப் பேராசிரியர் முனைவர் ம. இராமச்சந்திரன் என்பார், “இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வுஎன்னும் தலைப்பில் ஆய்வேட்டை அளித்து ஆய்வியல் நிறைஞர்; பட்டம் பெற்றுள்ளார். இவ்வாய்வேட்டில் இவை குறித்து அவர் விரிவாக விளக்கியுள்ளார்.

    “எழுத்து என்பது இலக்குவனாரைப் பொருத்துக் கவிதையாகும். எந்த ஒரு செய்தியையும் கேள்விப்பட்ட மாத்திரத்தில் அகவல் நடையில் எழுதிவிடுவார்என்கிறார் அவரது மாணாக்கரான கவியரசு நா.காமராசன். இலக்குவனார் உரைநடைகூடச் செய்யுள் நடைபோலத் திட்ப நுட்பம் செறிந்து விளங்குகிறது. ஓசை நயம் பொருந்திப் படிப்போர்க்குக் கழிபேருவகை ஊட்டும் தன்மை உடையதாய் விளங்குகிறது. . . . . . .அகவல் ஓசை பொருந்தி அமைந்துள்ளது. செய்யுள் நூல் போல ச் செவிக்கு இன்பம் பயக்கின்றது.…” என்கிறார் ஆய்வாளர் முனைவர் ம. இராமச்சந்திரன். இவ்வாறு பேராசிரியரின் உரைநடையே செய்யுள் இன்பம் போல் சிறந்துள்ளது எனில் அவரின் பாடல்கள் சிறப்பு பெற்றுள்ளமையில் வியப்பு எதுவும் இல்லை எனலாம்.

      செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் சிறந்த கவித் திறனையும் தமிழ்ப் புலமையையும் தமிழ்ப் பற்றையும் சான்றாண்மையையும் தமிழுக்காக வாழும் தகைiமையையும் வறியவர்க்கு உதவும் வள்ளல் தன்மையையும் அறவுணர்வையும் பகுத்தறிவு நோக்கத்தையும் தீமைகளை எதிர்க்கும் துணிவையும் உண்மையைக் காப்பதற்கான போராட்ட உணர்வையும் குறள் நெறி வாழ்வையும் அவரது கவிதைகள் பற்றிய ஆய்வின் மூலம் பேராசிரியர் ம.இராமச்சந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar thiruvalluvan01