Showing posts with label பாரி மகளிர். Show all posts
Showing posts with label பாரி மகளிர். Show all posts

Saturday, August 28, 2021

பாரி மகளிர் 2 – இரா.இராகவையங்கார்

 அகரமுதல




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 18

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 17. தொடர்ச்சி)

4. பாரி மகளிர் (தொடர்ச்சி)

இதன்மேற் கபிலர், அவ்வூரை விடுத்து இளவிச்சிக்கோ என்பானிடஞ் சென்று இம்மகளிரது உயர்குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து, இவர்களை மணஞ்செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட, அவன் உடம்படாமையால் இருங்கோவேள் என்பானுழைச் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட, அவனும் அங்ஙனமே உடம்படானாய் மறுக்க, இதற்காக அவனை முனிந்துபாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ்செய்துகொள்ள இயையாமையாற் கபிலர் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலர்பாற் படுத்து, பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர்.

இதற்கிடையிற் கபிலர் செல்வக்கடுங்கோவாழியாதன் என்னும் சேரமான்பாற்சென்று அவனைப் பத்துப் பாடல்களாற் புகழ்ந்துபாடி, நூறாயிரங்காணமும் அவன் மலையேறிக் கண்டு கொடுத்த நாடும் அவன்பாற் பெற்றனர் எனத் தெரிவது. இதுவே பதிற்றுப்பத்தினுள் ஏழாம் பத்தாவது. இவர், பாரி இறந்தபின்னேதான் அவனது நற்குணநற்செயல்கள் செல்வக்கடுங்கோவாழியாத னிடமும் இருப்பனவாகக் கேட்டு, அவனைக் காணச் சென்றனராவர். இதனை,*

பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை தூக்கு நாடுகெழு பெருவிற
லோவத் தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன்
பொன்னி னன்ன பூவிற் பசியிலைப்
புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோப்
புலர்ந்த சாந்திற் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாரிவண் பாரி
முழவுமண் புலரா விரவல ரினைய
வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென
விரக்கு வாரே னெஞ்சிக் கூறே
னீத்த திரங்கா னீத்தொறு மகிழா
னமரா வள்ளிய னென்ன நுவலுநின்
னல்லிசை தரவந் திசினே

என்னும் பதிற்றுப்பத்தாலும் (8-ம் பத்து, 1), ‘படர்ந்தோன் என்பது, முற்று. அளிக்கென என்பது, நீ யெம்மை அளிப்பாயாக எனச்சொல்லி என்றவாறு. இரக்கு என்பது தன்வினை. எஞ்சிக்கூறேனென்பது உண்மையினெல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன் என்றவாறு. யான், பாரி சேட்புலம் படர்ந்தான்: நீ எம்மையளிக்க எனச்சொல்லி இரக்கவென்று வந்து சில புகழ்ந்து சொல்கின்றேனு மல்லேன்; அஃதன்றி யான் உண்மையொழியப் புகழ்ந்து சொல்கின்றேனுமல்லேன்; ஈத்ததிரங்காமை முதலாகிய பாரிநற்குணங்களை நின்பாலுளவாக உலகஞ்சொல்லும் நின்புகழ் நின்பாலேதர வந்தேன்’ என்னும் அதனுரையானும் உணர்ந்துகொள்க. சேரன்பால் இவர் சென்ற காலத்தும் இப் பாரிமகளிரும் உடனிருந்தனர் போலும். இம்மகளிர் வரலாற்றினைப் புறநானூறொன்றே துணையாகக்கொண்டு ஆராயின், அதன்கண்,

(1) அற்றைத் திங்கள். . . . . . . . . .மிலமே (புறநானூறு – 112)

இது பாரிமகளிர் பாடியது.

(2) சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.’ (புறநானூறு – 113)

இஃது அவன்(பாரி)மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுத்த கபிலர் பாடியது.

(3) ஈண்டுநின். . . . . . . . . .நெடியோன் குன்றே (புறநானூறு – 114)

அவன் மகளிரைக் கொண்டுபோங் கபிலர் பறம்பு நோக்கிநின்று சொல்லியது.

(4) இவரே. . . . . . . . . .பாரிமகளிர்
யானேபரிசிலன் மன்னு மந்தணன்
நீயேவரிசையில் வணங்கும் வாண்மேம் படுந
னினக்கியான் கொடுப்பக் கொண்மதி (புறநானூறு – 200)

இது பாரிமகளிரை விச்சிக்கோனுழைக் கொண்டுசென்ற கபிலர் பாடியது.

(5) இவர். . . . . . . . . .பாரிமகளிர் யானே
தந்தை தோழ னிவரென் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே (புறநானூறு – 201)

இது பாரிமகளிரை இருங்கோவேளுழைக் கொண்டுசென்ற
கபிலர் பாடியது.

(6) எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்றிவர்
கைவண் பாரி மகளி ரென்றவென்
றேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும (புறநானூறு – 202)

இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது.

(7) கலையுணக். . . . . . . . . .பாலே.‘ (புறநானூறு – 239)

வேள்பாரி துஞ்சியவழி மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது என வருவனவற்றாற் பாரிமகளிர் ஒருசிலரென்பதும், அவர் பாடவல்லவரென்பதும், அப் பாரி இறந்தபின் அவனது தோழராகிய கபிலரென்னும் புலவரந்தணரால் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் அரசரிடம் தம்மை மணஞ்செய்து கொள்ளும்படி வேண்டப்பட்டனரென்பதும், அவ்வரசர் அதற்குடம்படாமையாற் கபிலராற் பார்ப்பார்ப் படுக்கப்பட்டனரென்பதும், இவரைப் பார்பார்ப் படுத்தபின் கபிலர் பாரிபிரிவாற்றாது வடக்கிருந்தனரென்பதும் அறியப்படும்.
இனித் தமிழ்நாவலர் சரிதையினையும் துணைக்கொண்டு நோக்கின்,

சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவ
லூரளவுந் தான்வருக வுட்காதே — பாரிமக
ளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான்
சங்கியா தேவருக தான்.’

என்பன முதலாக மேல் ஔவையார் வரலாற்றுள் எடுத்துக் காட்டிய பாடல்களானும், பிறவற்றானும் அப் பாரிமகளிர் அங்கவை சங்கவை என்பாரிருவரென்பதும், அவர் திருக்கோவலூரில் இருந்தனரென்பதும், அவ்வூரில் தெய்விகனென்னும் அரசனுக்கு மூவேந்தர்நடுவில் ஒளவையாருடைய நன்முயற்சியாற் சிறக்க மணஞ்செய்து கொடுக்கப்பட்டன ரென்பதும், பிறவும் புலனாகும். இத்தமிழ்நாவலர் சரிதைப் பாட்டுள், ‘பாரிமகள், அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான்’ என்பது, முன், அரசர் சிலர் இம்மகளிரைக் கொள்ள மனமியையாமை குறிப்பதாம். இதன் விரிவெல்லாம் ஒளஔவையார் வரலாற்றுட் காண்க.

இங்ஙனமன்றி, ‘பார்ப்பார்ப்படுத்தல்’ என்பது, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டமையேயாம்: என்னை? ‘குறுந்தொடி மகளிர், நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே’ (புறநானூறு, 113) என மேல் வந்தது, பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுத்த கபிலர் பாடிய தாதலான்’ எனின்;– கூறுவேன். கபிலர் பறம்பினை விடுத்தபோதே இம்மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கருதினாராயின், இளவிச்சிக்கோ, இருங்கோவே ளென்பாரிடம் இவரை மணஞ்செய்துகொள்ள வேண்டார். இவ்வரசர்பாற் சென்று வேண்ட அவருடம்படாத பின்னேதான் கபிலர்க்குப் பாரி மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கு மெண்ணம் உண்டாயிருத்தலாகும். அதன்பின்னரே பார்ப்பார்ப்படுத்தன ராவர்.

இம் முடிவுநிகழ்ச்சியை உட்கொண்டு, பிற்காலத்துச் செய்யுட்டொகை செய்தார், பறம்புவிடுத்தது முதலும் பார்ப்பார்ப்படுத்தது
இறுதியுமாக இவர்கள் செய்தி நிகழ்தலின் இடையினிகழ்ந்தன வெல்லாங் கூறாமல் இறுதியிற் ‘பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான்’ என்பதே குறித்துக்கொண்டார். ‘நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே’ எனப் பாட்டுட் கூறப்பட்டிருத்தலால் இம்மகளிர் மணத்தற்குத்
தக்க ஒருகுலக்கணவரைத் தேடுதலே பறம்புவிடுக்கும்போது கபிலர்க்குள தாகிய எண்ணமென்பது நன்கு புலனாம். நாறிருங்கூந்தற் கணவர் பார்ப்பாரே என முதற்கட் கருதினாரெனின் பார்ப்பார்ப் படுத்தற்குமுன் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் வேளிரிடஞ் சென்று வேண்டல் பொருந்தாதாகும். இம்மகளிர் வேளிர்குலக்கொடிகளாதலால் அக்குலத்து நல்லாண்மக்களையே தேடிச்சென்றன ரென்பது தெள்ளிது. ஆதலால், ‘நாறிருங் கூந்தற். . . . . .கிழவரைப் படர்ந்தே’ என்பதற்குக் கீழ்க்குறிப்பே துணையாகக்கொண்டு, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டன ரென்றல் இயையாமை காண்க.

இனிப் பார்ப்பார்ப் படுத்தனெ ரென்பதுதானே, பார்ப்பார்க்கு மணஞ் செய்யப்பட்டன ரென்ப துணர்த்து மெனின் ;- அது ‘பாரிமக ளங்கவையக் கொள்ள வரசன் மனமியைந்தான்’ என்னும் ஒளவையார் பாட்டோடு மாறுகொள்ளும். இவற்றாற் ‘கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர்’ என்பது, அவர் அம்மகளிரை அரசரொருவரும் மணஞ்செய்து கொள்ளாமையால் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாப்பில் வைத்தமையே குறிக்கும். அன்றியும், பார்ப்பார்க்கும் வேளிர்க்கும் மணநிகழ்ச்சி கூறுதலும் இயையாதாம். கபிலர், மகளிரை அரசர்க்கு மணஞ்செய்யலாகாமற் பார்ப்பாரது பாதுகாப்பில் வைத்து வடக்கிருக்க, ஔவையார் அதுதெரிந்து தெய்விகன் என்னும் அரசனை, இம்மகளிரை மணஞ்செய்து கொள்ளும்படி உடம்படுவித்து அவர் மணத்தைச் சிறப்ப வியற்றினர் என்பதே இயைபுடைத்தாவது காண்க.

இம்மகளிர், புலவர் பேரணியாங் கபிலரந்தணர்பாற் பயின்றமைக் கேற்ற நல்லிசைப் புலமையே யன்றி, வரையா வள்ளியோ னாகிய பாரிமகளிர் என்றற்கேற்ற வள்ளற்றன்மையு முடையராயின ரென்பது,

மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு — நீருலையுட்
பொன்றந்து கொண்டு * புகாவாக நல்கினா
ளொன்றுறா முன்றிலோ வில்.

[* புகா என்பது உணவு. ‘புகாக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகா விருந்தின் பகுதிக் கண்ணும்’ என்னுந் தொல்காப்பியத்து (களவியல், 16), நச்சினார்க்கினியர், ‘புகாக்காலை’ என்பதற்கு ‘உண்டிக்காலத்து’ எனக் கூறியவற்றா னுணர்க. ‘புகாவலை விலங்காய்’ என வளையாபதியினும் (புறத்திரட்டு, *] [* புலான்மறுத்தல், 7) வருதல் காண்க. இது நிலா நிலவு என வருதல் போலப் ‘புகவு’ எனவும் வரும். ‘அகநாட் டண்ணல் புகவே’ என்பது புறநானூறு(249). *]

என்னும் பழமொழிச் செய்யுளானும் (171), ‘மாரி யென்பதொன் றின்றி உலகம் வற்றியிருந்த காலத்தும் பாரிமடமகளிர் இரந்து வந்தானொரு பாண்மகற்குச் சோறுபெறாமையால் உலையுட் பொன்னைப் பெய்துகொண்டு திறந்து சோறாகவே நல்கினாளாதலால், ஒரு துன்பமுறாத மனையில்லை என்றவாறு. அல்லதூஉம், சோறும் அரிதாகிய காலத்துப் பொன்னே சோறாக உதவினாளாதலாற் சென்றிரந்தால் ஒரு பயன்படாத மனையில்லை என்றவாறு’ என்னும் அதனுரையானும் அறியப்படும்.

முன்னரே ஒளவையாரது வரலாற்றுள் இம்மகளிரது திருமணச்சிறப்பு முதலியன கூறப்பட்டனவாதலான், ஈண்டு வேறெடுத்தோதினேனில்லை. அதனால் ஒளவையாரென்னும் அறிவுடையாட்டி இம்மகளிர்பால் வைத்த பேரன்பு நன்குணரப்படும்.

இத்துணையுங் கூறியவாற்றால், புவிநிறை பெரும்புகழ்க் கபில ரௌவை அன்பு பாராட்டு மின்புடைப் பாரியி னருமை மகளிர் பெருமையுங் கல்வியும் ஒருவா றுணர்க.

(தொடரும்)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

 இரா.இராகவையங்கார்

Monday, August 23, 2021

பாரி மகளிர் 1 – இரா.இராகவையங்கார்

 அகரமுதல


நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 17

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 16. தொடர்ச்சி)

4. பாரி மகளிர்


பாரி என்பான், தமிழ்நாட்டுப் பண்டைக்காலத்தே பெரும் புகழ் பெற்று விளங்கிய வள்ளல்கள் எழுவருள் தலைமை வாய்ந்தவன். வேள் என்னும் பட்டம் பெற்ற உழுவித்துண்போர் வகையினன்; கொடையிற் சிறந்த எவ்வி என்பவனது தொல்குடியிற் பிறந்தோன்; செல்வமிக்க முந்நூறு ஊர்களையுடைய பறம்புநாட்டுக்குத் தலைவன்; இவனது பறம்புநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும். ‘பாரி, பறநாட்டுப் பெண்டி ரடி’ எனவும், ‘பறநாட்டுப் பெருங்கொற்றனார்’ எனவும் வழங்குவது காண்க.

இவன், பறம்பு என்னும் பெயரையுடைய வளமலைக்கண் வலியுடையதோர் பேரரண் அமைத்து அதனைத் தன் அரசிருக்கையாக்கி அதன்பாற் சிறக்க வீற்றிருந்தோன். இவனது மலையரண் பெரிய அழகும் அரியகாவலும் உடையது (நற்றிணை-235) எனவும், பகைவர் முற்றியகாலத்தும், வறங்கூர்ந்த காலத்தும் தன்னகத்து வாழ்வார் இனிதுண்டு செருக்குதற்கு உரிய மூங்கினெல்லும், தன் பால் மிக்கது (புறநானூறு -119) எனவும், என்றும் வற்றாததும், பேரினிமை பயப்பதுமாகிய குளிர்ந்த நீரையுடைய பைஞ்சுனையொன்று தன்கணுடையது (அகநானூறு -78, குறுந்தொகை-196) எனவும் சான்றோர் கூறுவர்.

இப்பறம்பு, பாண்டி நாட்டது என்பது ‘வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே‘ என்னும் பாண்டிமண்டல சதகத்தாற் (46) புலப்படுவது. இப்பாரி, ‘உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்’ (அகநானூறு -78) என நல்லிசைப் புலவர்களால் மேம்படுத்தேத்தப்பட்ட கபிலரென்னும் புலவர்தலைவர்க்கு உயிர்த்தோழனானவன் (புறநானூறு-201). ‘புலங்கத் தரக விரவலர் செலினே, வரைபுரை களிற்றொடு நன்கலனீயு, முரைசால் வண்புகழ்ப் பாரி’ (அகம்-303) என ஒளவையார் பாடுதலால் இவன் அவராலும் பேரன்புபாராட்டப் பட்டவனென்பது புலனாம்.

இவன் நிழலில்லாத நீண்டவழியிற் றனிமரம்போல நின்று, தன்னை யடைந்த அறிஞர், மடவர், வலியர், மெலியர் யாவர்க்கும் இன்னருள் சுரந்து மூவேந்தரினு மிகுத்து நன்கு வழங்கிய வள்ளியோன். இவனது பெருங்கொடைக்குக் கபிலர், மாரியினையே பல்லிடத்தும் உவமை கூறுவர். ‘மாரி வண்பாரி (பதிற்றுப்பத்து-71) ‘பாரி யொருவனு மல்லன், மாரியுமுண்டீண் டுலகுபுரப் பதுவே’ (புறநானூறு -117) என வருவனவற்றாலுணர்க. இவன் ஒருநாள் பொற்றேரூர்ந்து ஒரு காட்டிற் செல்லும்போது முல்லைக் கொடியொன்று படர்தற்குக் கொம்பரின்றி வெற்றிடையிலெழுந்து காற்றால் தளர்ந்து நடுங்குவது கண்டு, அவ் வோரறிவுயிர்மாட்டும் உண்டாகிய பேரருளால் அஃது இனிதுபடருமாறு தனது பொற்றேரை அதன் பக்கத்திட்டுத் தன்னிணையடி சிவப்ப நடந்துபோயின னென்ப. இவ்வரியபெரிய வள்ளன்மையே,

பூத்த லையறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினுங்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறநானூறு -210)

ஊருட னிரவலர்க் கருளித் தேருடன்
முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப்
படுமணி யானைப் பறம்பிற் கோமா
னெடுமாப் பாரி‘ (புறநானூறு -211)

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
. . . . . . 
பறம்பிற் கோமான் பாரி‘ (சிறுபாணாற்றுப்படை)

முல்லைக்குத் தேரும் . . . . . .
தொல்லை யிரவாம லீந்த விறைவர்
      (
வெண்பாமாலைபாடாண்-6)

என்பனவற்றாற் பாராட்டப்படுவது. தன் அரசிருக்கையாகிய பறம்புமலையொழியத் தன்னாட்டு முந்நூறூர்களையும் இரவலர்க்கே அளித்தனன் என்று கபிலர் கூறுவர். ‘முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு, முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர்’ (புறநானூறு -110) என்பதனாலுணர்க.

இவனது வரையாவண்மை, ‘கொடுக்கிலா தானைப் பாரி யேயென்று கூறினுங்கொடுப் பாரிலை’ (தேவாரம்) என்பதனாற் சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாராலும் எடுத்தாளப்பட்ட தென்பதொன்றானே இவனது வள்ளற்றலைமை தெள்ளிதி னுணரப்படும். இங்ஙனம் மாரிபோன்ற வரையாவீகையால், இவன் யாரினுஞ் சிறக்க விளைத்த பெரும்புகழ்க்கு அழுக்காறு கொண்டு, தமிழ் மூவேந்தரும் ஒருங்குகூடிப் படையெடுத்துப் போய் இவனது பறம்பாகிய மலையரணை நெடுங்காலம் முற்ற, அதனால் அவ்வரண் அடைமதிற்பட்டதாகப், பாரிக்கு உயிர்த்துணைவராய் அக்காலத்தும் அங்கிருந்த கபிலரென்னும் புலவர்பெருமான் கிளிகளை வளர்த்து விடுத்து, அரணுக்கு அப்புறத்து விளை நிலங்களிலுள்ள நெற்கதிர்களை நாளுங்கொணரச் செய்து ஆண்டுள்ள குடிபடைகளை அருத்திப் போராற்றளராவண்ணம் புரிந்து பாதுகாத்துவந்தனர். இவ்வரிய கதை,

உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
செழுஞ்செந் நெல்லின் விளைகதிர் கொண்டு
நெடுந்தா ளாம்பன் மலரொடு கூட்டி
யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா

தாளிடூஉக் கடந்து வாளம ருழக்கி
யேந்துகோட் டியானை வேந்த ரோட்டிய
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி
தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேங்கமழ் புதுமலர் நாறுமிவ ணுதலே.’

எனவரும் அகப்பாட்டாலும் (78) ‘இதனுட் கபிலன்சூழ என்றது, அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப்பட்டிருந்து உணவில்லாமைக் கிளிகளை வளர்த்துக் கதிர்கொண்டு வரவிட்ட கதை’ எனவரும் அதன் உனுரையானும் அறியப்படுவது. இதுவே,

உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பி
னிரைபறைக் குரீஇயினங் காலைப் போகி
முடங்குபுறச் செந்நெற் றரீஇய ரோராங்
கிரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப்
படர்கொண் மாலைப் படர்தந் தாங்கு.’ (அகநானூறு -303)

என்பதனால் ஒளவையாரானும் எடுத்துக்கூறப்பட்டதாகும். பின் கபிலர் பறம்புமுற்றிய மூவேந்தரையும் நோக்கி, ‘நீவிர் முத்திறத்தீரும் ஒருங்குகூடித் தானை, யானை, குதிரை முதலிய படைகொண்டு எத்தனையோகாலம் முற்றிப் பொருதீராயினும், இப் பாரியுடைய பறம்பு கொள்ளுதலரிது; இவனது முந்நூறூரையும் இவன்பாற் பாடிப்பெற்ற பரிசிலர் போல நீவிரும் பாடினராய்வரின் கொள்ளுதலெளிது’ என்று இவனது புலவர்க்கருமையும், இரவலர்க்கெளிமையுமாகிய பெருநிலையைத் தம் மினியபாடலா னறிவிக்க (புறநானூறு, 110), அதனால் மூவேந்தரும் இவனை எதிர்த்துவெல்லுதல் அரிதென்பதோர்ந்து இவனோடு பொருதற்கஞ்சி ஓடினரென்ப. மேல், ‘ஏந்துகோட்டியானை வேந்தரோட்டிய, கடும்புரிப் புரவிக் கைவண் பாரி’ என்பதனால், இவன் அம் மூவேந்தரையும் வென்றோட்டியமை நன்குபுலப்படும். இதன்பின் மூவேந்தரும் ஒருங்குகூடி வேறோர் சூழ்ச்சிசெய்து பாரியை வஞ்சித்துக் கொன்றனர். இதனை-112 ஆம் புறப்பாட்டு ரையில், ‘ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும் வஞ்சித்துக் கொன்றமையின்’ எனவருதலா னறிக.

பாரியும் பரிசில ரிரப்பின்
வாரே னென்னா னவர்வரை யன்னே.’ (புறநானூறு 108)

எனக் கபிலர் இப் பாரியினியல்பு கூறுதலான், இவ்வேந்தர் மூவரும் அவனியல்புக்குத்தகப் பரிசிலர்வேடம் பூண்டோ, பிறரைப்பரிசிலராகவிடுத்தோ, இவனை இரந்து தம்மகப்படுத்திக் கொன்றனராவர். இக்கருத்து,

புரிசைப் புறத்தினிற் [*] சேரனுஞ் சோழனும் போர்புரிய விரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி யீங்கிவனைப் பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே.’

என்னும் பாண்டிமண்டல சதகச்செய்யுளினும் (64) பயில்வது காண்க.

[* இந்நூலுடையார் பாண்டிமண்டலச் சிறப்பேகூறுதலான் பாண்டியனும் அப்போரில் இரிந்தோடினனெனக் கூற வுடம்பட்டாரில்லைப்போலும். *]

இவ்வாறு புரவலர்க்கின்னானாய் இரவலர்க்கினியனாய்
விளங்கிய நல்லிசைவள்ளலான மாரியனைய பாரியின் அருமைப்புதல்வியர்தாம், யான் ஈண்டெடுத்தோதப்புக்க நல்லிசைப்புலமை மெல்லியன்மகளிர். இம்மகளிர் வரலாறு பெரும்பாலும் ஒளவையார் வரலாற்றுட் கூறப்பட்டதாகும். ஆங்குக் கூறியன தொகுத்தும், கூறாதன விரித்தும் ஈண்டு உணர்த்துகின்றேன்.

மேலுரைத்தவாறு பாரி யிறந்த பின்னர், அவனது இன்னுயிர்த் தோழராகிய கபிலர், பாரியை நீத்துத் தமித்து உயிர் வாழ்வதற்கு மனமிலராயினும். அவனுடைய அறிவுடை மகளிரைக்காத்தற்கு வேறொருவரும் இலராதல்பற்றி உயிர்கொடுநின்று, அம்மகளிர்க்குத் தக்க அறிவும் பெருமையுமுடைய கணவரைத் தேட நினைந்து, அவர்களுடன், அவர் கட்குந் தமக்கும் பேரன்பு மிக்க பறம்பினை விடமுடியாமே விடுத்து, அப் பாரியை நினையுந்தோறும் பறம்பினைத் திரும்பிநோக்குந்தோறும் உள்ளம் நெக்குநெக்கு உருகிக் கண்ணீர் வாரநின்று, ஆற்றொணாத்துயராற் பொங்கியெழுந்த அன்புடைப்பாடல்களாற் பாரியினையும் பறம்பினையும் புகழ்ந்துகொண்டே சென்று ஓரூரிற்றங்கினர். அங்கு அன்றிரவு நிலாத்தோன்றியபோது அவருடனிருந்த பாரியின் அருமைமகளிர், தாம் அதற்கு முந்திய நிலாக்காலத்துத் தமது அரசுநிலையிட்ட திருவுடைநகர்க்கண்ணே இனிது மகிழ்ந்து விளையாடியதும், அடுத்த இந்நிலாக்காலத்துத் தாம் தந்தையிழந்து தண் பறம்பிழந்து தமியராய்த் துச்சிலொதுங்கித் துயர்கூரநின்றதும் தம்முள்ளத்தே தோன்ற, அப்போது,

அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவி
னெந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளா
ரிற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெங்

குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.‘ (புறநானூறு, 112)

என்னும் பாடலைப் பாடினர் இப்பாட்டால், இச்செய்யுள் செய்தற்கு ஒருமாதத்துக்குமுன், பாரி தன் அரசிருக்கையாகிய பறம்பின்கண் தம்மகளிர் முதலியோருடன் இருந்து வாழ்ந்திருந்தனனென்பது புலப்படுவது. இப்பாடல், சங்கத்தாராற் றொகுக்கப்பட்ட புறநானூற்றி லொன்றாகக் காணப்பட்டவாற்றால், இம்மகளிர் நல்லிசைப் புலவராதல் உணரப்படும். பாரிமகளிர் இருவர் என்பது மேலே தேறப்படுமாதலின், *ஈண்டும் ‘பாரிமகளிர் பாடியது’ எனப் பொதுப்படக் கூறப்பட்டமைபற்றி அவ்விருவருமே செந்தமிழ்ப் புலமையிற் சிறந்தாரவரென்பதுந் தெளியலாகும். புலவரிருவர் சேர்ந்து ஒருபாடல் பாடுவது முன்வழக்கே. இம்மகளிரது இன்றமிழ்ப்புலமை, தம் தரும்பெறற் றந்தையாகிய வள்ளற்பாரிக்கு ஆருயிர்த்தோழராகிய கபிலரென்னும் புலவர் தலைவர்பாற் பெற்றதாகும்.

(தொடரும்)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

 இரா.இராகவையங்கார்