நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 17
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 16. தொடர்ச்சி)
4. பாரி மகளிர்
இவன், பறம்பு என்னும் பெயரையுடைய வளமலைக்கண் வலியுடையதோர் பேரரண் அமைத்து அதனைத் தன் அரசிருக்கையாக்கி அதன்பாற் சிறக்க வீற்றிருந்தோன். இவனது மலையரண் பெரிய அழகும் அரியகாவலும் உடையது (நற்றிணை-235) எனவும், பகைவர் முற்றியகாலத்தும், வறங்கூர்ந்த காலத்தும் தன்னகத்து வாழ்வார் இனிதுண்டு செருக்குதற்கு உரிய மூங்கினெல்லும், தன் பால் மிக்கது (புறநானூறு -119) எனவும், என்றும் வற்றாததும், பேரினிமை பயப்பதுமாகிய குளிர்ந்த நீரையுடைய பைஞ்சுனையொன்று தன்கணுடையது (அகநானூறு -78, குறுந்தொகை-196) எனவும் சான்றோர் கூறுவர்.
இப்பறம்பு, பாண்டி நாட்டது என்பது ‘வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே‘ என்னும் பாண்டிமண்டல சதகத்தாற் (46) புலப்படுவது. இப்பாரி, ‘உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்’ (அகநானூறு -78) என நல்லிசைப் புலவர்களால் மேம்படுத்தேத்தப்பட்ட கபிலரென்னும் புலவர்தலைவர்க்கு உயிர்த்தோழனானவன் (புறநானூறு-201). ‘புலங்கத் தரக விரவலர் செலினே, வரைபுரை களிற்றொடு நன்கலனீயு, முரைசால் வண்புகழ்ப் பாரி’ (அகம்-303) என ஒளவையார் பாடுதலால் இவன் அவராலும் பேரன்புபாராட்டப் பட்டவனென்பது புலனாம்.
இவன் நிழலில்லாத நீண்டவழியிற் றனிமரம்போல நின்று, தன்னை யடைந்த அறிஞர், மடவர், வலியர், மெலியர் யாவர்க்கும் இன்னருள் சுரந்து மூவேந்தரினு மிகுத்து நன்கு வழங்கிய வள்ளியோன். இவனது பெருங்கொடைக்குக் கபிலர், மாரியினையே பல்லிடத்தும் உவமை கூறுவர். ‘மாரி வண்பாரி (பதிற்றுப்பத்து-71) ‘பாரி யொருவனு மல்லன், மாரியுமுண்டீண் டுலகுபுரப் பதுவே’ (புறநானூறு -117) என வருவனவற்றாலுணர்க. இவன் ஒருநாள் பொற்றேரூர்ந்து ஒரு காட்டிற் செல்லும்போது முல்லைக் கொடியொன்று படர்தற்குக் கொம்பரின்றி வெற்றிடையிலெழுந்து காற்றால் தளர்ந்து நடுங்குவது கண்டு, அவ் வோரறிவுயிர்மாட்டும் உண்டாகிய பேரருளால் அஃது இனிதுபடருமாறு தனது பொற்றேரை அதன் பக்கத்திட்டுத் தன்னிணையடி சிவப்ப நடந்துபோயின னென்ப. இவ்வரியபெரிய வள்ளன்மையே,
‘பூத்த லையறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினுங்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி‘ (புறநானூறு -210)
‘ஊருட னிரவலர்க் கருளித் தேருடன்
முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப்
படுமணி யானைப் பறம்பிற் கோமா
னெடுமாப் பாரி‘ (புறநானூறு -211)
‘சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
. . . . . . பறம்பிற் கோமான் பாரி‘ (சிறுபாணாற்றுப்படை)
‘முல்லைக்குத் தேரும் . . . . . .
தொல்லை யிரவாம லீந்த விறைவர்‘
(வெண்பாமாலை, பாடாண்-6)
‘உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
செழுஞ்செந் நெல்லின் விளைகதிர் கொண்டு
நெடுந்தா ளாம்பன் மலரொடு கூட்டி
யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா
தாளிடூஉக் கடந்து வாளம ருழக்கி
யேந்துகோட் டியானை வேந்த ரோட்டிய
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி
தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேங்கமழ் புதுமலர் நாறுமிவ ணுதலே.’
எனவரும் அகப்பாட்டாலும் (78) ‘இதனுட் கபிலன்சூழ என்றது, அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப்பட்டிருந்து உணவில்லாமைக் கிளிகளை வளர்த்துக் கதிர்கொண்டு வரவிட்ட கதை’ எனவரும் அதன் உனுரையானும் அறியப்படுவது. இதுவே,
‘உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பி
னிரைபறைக் குரீஇயினங் காலைப் போகி
முடங்குபுறச் செந்நெற் றரீஇய ரோராங்
கிரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப்
படர்கொண் மாலைப் படர்தந் தாங்கு.’ (அகநானூறு -303)
என்பதனால் ஒளவையாரானும் எடுத்துக்கூறப்பட்டதாகும். பின் கபிலர் பறம்புமுற்றிய மூவேந்தரையும் நோக்கி, ‘நீவிர் முத்திறத்தீரும் ஒருங்குகூடித் தானை, யானை, குதிரை முதலிய படைகொண்டு எத்தனையோகாலம் முற்றிப் பொருதீராயினும், இப் பாரியுடைய பறம்பு கொள்ளுதலரிது; இவனது முந்நூறூரையும் இவன்பாற் பாடிப்பெற்ற பரிசிலர் போல நீவிரும் பாடினராய்வரின் கொள்ளுதலெளிது’ என்று இவனது புலவர்க்கருமையும், இரவலர்க்கெளிமையுமாகிய பெருநிலையைத் தம் மினியபாடலா னறிவிக்க (புறநானூறு, 110), அதனால் மூவேந்தரும் இவனை எதிர்த்துவெல்லுதல் அரிதென்பதோர்ந்து இவனோடு பொருதற்கஞ்சி ஓடினரென்ப. மேல், ‘ஏந்துகோட்டியானை வேந்தரோட்டிய, கடும்புரிப் புரவிக் கைவண் பாரி’ என்பதனால், இவன் அம் மூவேந்தரையும் வென்றோட்டியமை நன்குபுலப்படும். இதன்பின் மூவேந்தரும் ஒருங்குகூடி வேறோர் சூழ்ச்சிசெய்து பாரியை வஞ்சித்துக் கொன்றனர். இதனை-112 ஆம் புறப்பாட்டு ரையில், ‘ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும் வஞ்சித்துக் கொன்றமையின்’ எனவருதலா னறிக.
‘பாரியும் பரிசில ரிரப்பின்
வாரே னென்னா னவர்வரை யன்னே.’ (புறநானூறு 108)
எனக் கபிலர் இப் பாரியினியல்பு கூறுதலான், இவ்வேந்தர் மூவரும் அவனியல்புக்குத்தகப் பரிசிலர்வேடம் பூண்டோ, பிறரைப்பரிசிலராகவிடுத்தோ, இவனை இரந்து தம்மகப்படுத்திக் கொன்றனராவர். இக்கருத்து,
‘புரிசைப் புறத்தினிற் [*] சேரனுஞ் சோழனும் போர்புரிய விரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி யீங்கிவனைப் பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே.’
என்னும் பாண்டிமண்டல சதகச்செய்யுளினும் (64) பயில்வது காண்க.
குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.‘ (புறநானூறு, 112)
(தொடரும்)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
இரா.இராகவையங்கார்
No comments:
Post a Comment