Showing posts with label புலமை மெல்லியலார்கள். Show all posts
Showing posts with label புலமை மெல்லியலார்கள். Show all posts

Sunday, September 05, 2021

பூதப்பாண்டியன் தேவியார் 2 – இரா.இராகவையங்கார்

 அகரமுதல




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 20

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 19. தொடர்ச்சி)


5. பூதப்பாண்டியன் தேவியார் (தொடர்ச்சி)



மேல், இப்பெருந்தேவியார் நிகழ்த்தும் அரும்பெருஞ்செயலானும், அவ்வமையம் ஆண்டு உடனிருந்த மதுரைப் பேராலவாயார் என்னும் புலவர், இவரது அன்புடைமையை வியந்து, ‘சிறுநனி தமிய ளாயினு, மின்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே’ எனப்பாடியதனாலும் அதனை ஒருவாறுணர்க. குறைவற்ற செல்வமும் நிறைவுற்ற கல்வியுமுடைய இருபெருமக்கள் காதலுனுங் காதலியுமாக அன்புபட்டியைந்த இவ் வரியபெரிய இல்வாழ்க்கை யாண்டுங்காண்டற் கரிய தொன்றே. இதற்கு மிகவும் பிற்காலத்தே இப்பாண்டியர் குடிக்கண்ணேதான் வரதுங்க பாண்டியனும் அவனுடைய பெருந்தேவியுங் கல்வியறிவுடையராய்ச் சிறந்தனரெனத் தெரிவது. வரதுங்க பாண்டியன் பிரமோத்தரகாண்டம் தமிழாற் பாடினான். தமிழ்நாவலர் சரிதைக்கண் ‘பணியாரக் குடத்துள் மதுரைக்குப் பாண்டியன்தேவி விடுத்த கவி’ என்னுந் தலைப்பின் கீழ்,

என்னையிவ்வா றவர்மறந்தும் யானவரை
      மிகநினைந்திங் கிருந்து வாட
முன்னைவினைப் பயன்றானோ வப்பிறப்பிற்
      செய்ததவ முடிந்த வாறோ
கண்ணன்மத னபிராமன் வரதுங்க
      ராமனியற் காசி நாட்டி
லன்னவயற் குருகினங்கா ளினியெவ்வா
      றுயிர்தரித்திங் காற்று மாறே

செப்பாரு முகிழ்முலையா ரெல்லாருங்
      கணவருடன் சேர்ந்து வாழ
வெப்பாரு மில்லாவென் கணவனுடன்
      யான்கூடி யுறவா டாமல்
வெப்பாலு மிகுகாமத் துயராலு
      நாடோறு மெலிந்து வாடி
யிப்பாடு படவென்றோ விறைவனென்
      றலையேட்டி லெழுதி னானே

எண்டிசா முகத்துந் திங்க
      ளிளநிலா வெள்ளங் காயக்
கொண்டமால் பெருகுந் தோறுங்
      கொழுங்கணீர் முலையிற் சோரப்
பண்டுநா மறியாக் காமத்
      துயரினாற் படுவ தெல்லாம்
வண்டுகா ளுரையீ ருங்கள்
      வரதுங்க ராம னுக்கே.’

என வரும் பாடல்களான் அவ் வரதுங்க பாண்டியன் தேவியின் புலமை அறியத்தகும். இப்புலமை பூதப்பாண்டியன் தேவியாரின் நல்லிசைப் புலமைக்கு ஒப்பாவதில்லையாயினும் இவ்வகைக் கல்விச்சிறப்புப் பாண்டியர்குடிக்கண்ணேதா னுள்ளது என்பதுமட்டில் நன்கு விளங்கும். இத்தகையாளரே ஒத்த கிழவனும் கிழத்தியு மாவர். உருவமுதலியவற்றான் எத்தனையும் ஒத்து அறிவான் வேற்றுமைப்படின் அக்காதலனும் காதலியும் ஒருகாலும் தம்முள் ஒத்தாராகார். ‘உறுப்பொத்தன் மக்களொப் பன்றால்’ என்ற ஆன்றோர் திருவாக்கினையும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. இங்ஙனம் பெரிதும் அருமையாய்க் காண்டற்குரிய இவ்வறிவொப்பின்கட் பெருமகிழ் கூர்ந்து பூதப்பாண்டியனும் அவனுக்குச் சிறந்த பெருந்தேவியாரும் இனிது வாழ்கின்ற நாளில், இவ்வகை அறிவுடைச் சேர்க்கைக்கண் அழுக்காறு கொண்ட அறிவில் கொடுங்கூற்றம் பூதப்பாண்டியன் இன்னுயிரைக் கவர்ந்தது. அந்நிலையில் அறிவுடைப் பெருந்தேவியாரின் துன்பவெள்ளம் கரையடங்குவதோ! இவரது கேண்மை பேதையார் கேண்மை யில்லையே; அறிவு வீற்றிருந்த செறிவுடை நெஞ்சின ரிருவர் ஓருயிராகக் கலந்ததன்றோ.

மக்க ளிழந்த இடும்பையினும் மனையா ளிழந்த இடும்பையினும்மிக்க இடும்பை ஓவாத விதவை இடும்பை[*]

என்பரே! தந்தை தாய் முதலாயினோரை இழந்தார்க்குத் துயராற்றுதற்கு அம்முறைசொல்லிப் பிறரைக் காட்டுவதுண்டு; கணவனையிழந்தார்க்கு அங்ஙனஞ் சொல்லிக்காட்டுதலுமாகாதே; இவையெல்லாம் நன்குணர்ந்த இவரது கற்றறி நெஞ்சம் என்பாடுபடும்! அதனை எம்மா லெளிதி லறிந்துரைக்கத் தக்கதன்று. பெருந்தேவி இவ்வாறு துயருழவாநிற்கையில் அரசனுக்கு உரிமைச்சுற்றத்தினர்

[* – இச்செய்யுள், ஒட்டக்கூத்தர் பாடியதென்று சொல்லப்படும் இராமாயணம் உத்தரகாண்டத்து, திக்குவிசயபடலத்திலுள்ள 138- ஆவது கவியாகும். இப்பாடல் முழுதையும் அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரப்பதிகத்தின் 42- ஆவது அடிவிசேடவுரையில் மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.]

பிறர் பூதப்பாண்டியனது திருவும் வீரமும் பொலிகின்ற திருமேனியை அவனது பெருமைக்குத் தக்க பெருஞ்சிறப்புடன் இடுகாட்டுய்த்து ஈமத்தேற்றித் தீக்கொளுவுவாராயினர். உயிர்க்காதலனது திருமேனியையுங் காணப்பெறாத இந்நிலையிற் பெருந்தேவியாரது துயரம் கடலாய்ப் பொங்கித் தலைக்கொண்டது. அப்போது தேவியார் ஆற்றொணாதவராய்ப் ‘பசைந்தாரைத் தீர்தலிற் றீப்புகுத னன்று ‘ என்ற சான்றோர் திருவாக்கின்படி தமதாருயிர்க் காதலனுடன் அவ்வீமத்தீயிற் பாய்ந்துமாய்தலே தம்மாற் செய்யத்தகுவதென்று தேர்ந்து அவ்வாறு செய்ய ஒருப்பட்டனர். அவ்வமையம் ஆண்டுக்குழீஇ யிருந்த மதுரைப் பேராலவாயார் முதலிய புலவர் சான்றோர்கள் தம்மோ டொத்த அறிவுடையரசியையும் இழக்கலாகுமோ என்று தேவியாரைத் தீப்புகாமல் விரைந்து தடுப்பாராயினர். அதுகண்டு பெருந்தேவியார் ஈமத்தீப்புறத்து நின்றுகொண்டு அச் சான்றோரை நோக்கி,

பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
யணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியு
முயவற் பெண்டிரே மல்லே மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீம
நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
வள்ளித ழவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே.’

என்னும் பாடலைக் கூறித் தீயிற்பாய்ந்து மாய்ந்தனர். தம் ஆருயிர்க் கொழுநனை நீங்கிய இவ் வுலகவாழ்க்கையே இப் பெருந்தேவியார்க்குச் சுடுதீ யாயிற்று; அக் கணவனுட னிறத் தற்குக் காரணமான சுடுதீயோ அரும்பற மலர்ந்த தாமரைக் குளிர்நீர்ப்பொய்கை யாயிற்று. இங்ஙனம் இயற்கையையும் மாற்றுகின்ற அன்பென்பதொன்றின்றன்மை அமரரும் அறிந்ததன்று. இப்பாட்டால் இவரைச் சான்றோர்பலர் தீப்பாயாமல் விலக்கினாரென்பதும், அங்ஙனம் விலக்கினாரை யெல்லாம் பொல்லாச்சூழ்ச்சியர் என்று முனிந்தனர் என்பதும், கைம்மைநோன்பினை வெறுத்தன ரென்பதும், கணவனுடன் மாய்தலை மகிழ்ந்தன ரென்பதும் பிறவும் நன்குணர்ந்துகொள்க.

இப்பாட்டொன்றே இம் மெல்லியலாரது நல்லிசைப்புலமையினைச் செவ்விதி னறிவுறுத்தும். இச்செய்தி நிகழ்வுழி யுடனிருந்த மதுரைப்பேராலவாயர் இத்தேவியாரது அரும்பெருஞ் செயற்கு வியந்து, ‘மடங்கலிற் சினைஇ’ என்னும் புறப்பாட்டைப் பாடினர். அதனானும் இவரது பேரன்பும் அருஞ்செயலும் அறிந்துகொள்க.

இனி, அகநானூற்றில் பூதப்பாண்டியன் பாடிய ‘நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும்புனல்‘ என்னும் பாட்டினுள்,

பொருநர்செல்சமங் கடந்த வில்கெழு தடக்கைப்
பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன்
இன்னிசை யியத்திற் கறங்குங்
கன்மிசை யருவிய காடிறந் தோரே

என்பதனால், பொதியின்மலைக்க ணிருந்த திதியன் என்னுங் குறுநிலமன்னன் கூறப்பட்டுள்ளான். நெடுஞ்செழியனாற் றலையாலங்கானத்துச் செருவெல்லப்பட்ட எழுவருள் திதியனும் ஒருவன் என்பது, ‘பகுவாய் வராஅல்’ என்னும் அகப்பாட்டானும் மதுரைக்காஞ்சியுரையானும் அறியப்படுதலால், பூதப்பாண்டியன், நெடுஞ்செழியனுக்குப் பிற்பட்ட காலத்தவ னாவன் என அறிக.

திருவனந்தபுரத்தைச் சார்ந்த மேலைப்பிடாகையில் தோவாழைக்கு மேற்காக ஐந்துநாழிகை வழித்தூரத்துள்ள தரிசனன்கோப்பு எனப்பெயரிய சிற்றூரில் ‘பூதப்பாண்டியன்’ {Swell’s Antiquities Vol, I. page 258.} கோவில் என்னும் பெயரில் ஓர் கோயி லுள்ளது என்பது இங்கு அறியப்படுவது.

இத்துணையுங் கூறியவாற்றான் இமிழ்கடல் வரைப்பிற்றமிழுடையாரெனும், பாண்டியர் குடிக்குக் காண்டகு திலதமாய்க், கற்பினுக் கணியாய்ப் பொற்பினுக் கிடனாய், நல்லிசைப் புலமைச் செல்வமகளா யீண்டிய பூதப் பாண்டியன்றேவியாரின் வரலாறு ஒருவாறுணர்க.

(தொடரும்)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

 இரா.இராகவையங்கார்

Wednesday, September 01, 2021

பூதப்பாண்டியன் தேவியார் -இரா.இராகவையங்கார்

 அகரமுதல




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 19

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 18. தொடர்ச்சி)

5. பூதப்பாண்டியன் தேவியார்



இருவேறு நல்வினைகளின் பயன்களா யுள்ள அரிய கல்வியும் பெரிய செல்வமும் ஒருங்கெய்தி, அங்ஙனம் எய்தியமைக்கேற்ற பேரறிவும் பெருங்கொடையும் உடையராய், இவ்வுலகில் என்றைக்கும் நீங்காத நல்லிசையினை நிறுத்தின முடியுடைத் தமிழரசர் மூவருள்ளும், பாண்டியரே, கல்விபற்றி மற்றை யிருவரினும் சிறப்பித்துப் போற்றப்படுவோராவர். இவரே செந்தமிழ்நாடாளும் உரிமை யுடையர். இவரே முக்காலும் செந்தமிழ்ச் சங்கம் சிறப்புற இரீஇயினோர். இவரே கவியரங்கேறினோர். இவரே அரும்பெறற் புலவர்க்குப் பெரும்பொற்கிழி யளித்தோர்.

இவரது அவைக்களமே தொல்காப்பியம், திருவள்ளுவர் முதலிய பெருநூல்கள் அரங்கேறப் பெற்றது. இவர் நாடுதான் நல்ல தமிழுடையது. இவர் பதிதான் தமிழ் நிலைபெற்ற தெனப்படுவது. இவர்பதியைக் கூறுமிடமெல்லாம் கல்விபற்றியே சிறப்பித் துரைப்பர். இவர் ‘பதிகளில் வாழ்வார்தாம் வாழ்வார்’ எனப்படுவா ரென்ப. பல சொல்லி யென்? மூவேந்தருள்ளும் பாண்டியர்தாம் தமிழுடையார் என்று சிறப்பிக்கப்படுவாரென்ப. இவற்றையெல்லாம்,

வில்லுடையான் வானவன் வீயாத் தமிழுடையான்
பல்வேற் கடற்றானைப் பாண்டியன் – சொல்லிகவா
வில்லுடையான் பாலை யிளஞ்சாத்தன் வேட்டனே
நெல்லுடையான் நீர்நாடர் கோ.’ (யாப்பலங்கலவிருத்தி மேற்கோள்)

நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்து – நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
னாட்டுடைத்து நல்ல தமிழ்.’
      (ஒளவையார்)

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும்
      (சிறுபாணாற்றுப்படை)

உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் றுறை
      (திருச்சிற்றம்பலக்கோவை)

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையுஞ் சீரூர் பூவி
னிதழகத் தனைய தெருவ மிதழகத்
தரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில்;
தாதி னனையர் தண்டமிழ்க் குடிக
டாதுண்பறவை யனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோ னாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப
வேம வின்றுயி லெழுத லல்லதை
வாழிய *வஞ்சியுங் #கோழியும் போலக்
கோழியி னெழாதெம் பேரூர் துயிலே.’
      (பரிபாடலுறுப்பு)
[* வஞ்சி – கருவூர்; சேரர் தலைநகர்.
# கோழி – உறையூர்; சோழர் தலைநகர்.#]

ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்குஞ்
சேய்மாடக் கூடலுஞ் செவ்வேள் பரங்குன்றும்
வாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார்
போவாரார் புத்தே ளுலகு.’
      (பரிபாடலுறுப்பு)

உலக மொருநிறையாத் தானோர் நிறையாப்
புலவர் புலக்கோலாற் றூக்க — வுலகனைத்துந்
தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவ
னான்மாடக் கூட னகர்.’
      (பரிபாடலுறுப்பு)

என இவ்வாறு பாண்டியரையும், அவரது நாடுநகர்களையுஞ் சிறப்பித்துவரும் அரிய பழைய பாடல்களானும் பிறவற்றானு முணர்க. இன்னுந் தொகைநூல்களுட் கோக்கப்பட்டுள்ள இப்பாண்டியர் பாடல் சிலவற்றான் இவ்வேந்தரது நல்லிசைப் புலமை மேம்பாடு உய்த்தறியத்தக்கது.

முடத்திருமாறன்

நற்றிணை-105,228

மாறன் வழுதி

 ,, 97

பெருவழுதி

 ,, 55

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி

புறநானூறு – 182

குறுவழுதி

அகநானூறு – 150

அண்டர்முன் குறுவழுதி

குறுந்தொகை – 345, அகநானூறு-227

பாண்டியன் ஆரியப்படை தந்த நெடுஞ்செழியன்

புறநானூறு – 183.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

புறநானூறு – 82.

பாண்டியன் அறிவுடைநம்பி 

குறுந்தொகை – 230, நற்றிணை – 13,
அகநானூறு – 28, புறநானூறு – 188

ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன்

அகநானூறு – 25, புறநானூறு – 71.

பாண்டியன் பன்னாடுதந்தான்

குறுந்தொகை – 270

பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி

அகநானூறு – 26, நற்றிணை – 98.

என்னும் இப்பாண்டியர், நல்லிசைப்புலமைச் செல்வராய் விளங்கினோ ரென்பது தெற்றெனத் தெரிவது. இவருள், முடத்திருமாறன் கடைச்சங்கம் நிலைபெறுவித்தோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் பாடியருளிய மதுரைக்காஞ்சி கொண்டோன்: பாண்டியன் பன்னாடு தந்தான் நற்றிணை தொகுப்பித்துதவினோன்: பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதி அகநானூறு தொகுப்பித்துதவினோன் எனவும் அறிந்து கொள்க.

இத்தகைக் கல்விச்சிறப்புடைச் செல்வப் பாண்டியருள் ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் என்னும் அரசர்பெருந்தகைக்கு ஆருயிர்த்துணைவியராய்ச் சிறந்தார்தாம் யாம் ஈண்டெடுத்தோதப் புக்க நல்லிசைப் புலமை மெல்லியற் றேவியார் என அறிக. இத்தேவியாரது இன்னுயிர்க் கொழுநனாகிய பூதப்பாண்டியன், புலவனும் வீரனுமாய்ச் சிறந்து விளங்கினோன். அகநானூற்றினும் புறநானூற்றினுங் காணப்படும் அவனது பாடல்களானும், ‘ஒல்லையூர்தந்த’ என்னும் அடைச்சிறப்பானும் அவனது புலமையும் வீரமும் உணரத்தக்கன. புறத்திற் காணப்பட்ட

மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்
தடங்காத் தானை வேந்த ருடங்கியைந்
தென்னொடு பொருது மென்ப வவரை
யாரம ரலறத் தாக்கித் தேரோ
டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக
வறநிலை திரியா வன்பி னவையத்துத்
திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து
மெலிகோல் செய்தே னாகுக மலிபுகழ்
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனு மன்னெயி லாந்தையு முரைசா
லந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்
வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறருங்
கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த
வின்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ

மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த
தென்புலங் காவலி னொரீஇப்பிறர்
வன்புலங் காவன் மாறியான் பிறக்கே.’

என்னும் பாட்டு, இவர் காதலனது வீரம் பற்றிய வஞ்சின வார்த்தையாகலுங் காண்க. இப்பாட்டால் இவர் கொழுநன் பெரிய போர்வீரன் என்பதும், தனக்கொத்த கல்வியறிவு வாய்ந்த தேவியாராகிய இவரைச் சிறிதும் பிரிதாலாற்றாப் பேரன்புடையா னென்பதும், அறநிலை திரியா முறையுடைச் செங்கோலன் என்பதும், வையையால் வளமிக்க மையல் என்னும் ஊரிலிருந்த மாவன் என்பானையும், எயில் என்னும் ஊரிலிருந்த ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் என்பாரையும் தன் கண்போல் நண்பினராகக் கொண்டவன் என்பதும், பிறநாட்டரசுரிமையினும் பாண்டிநாடாள் அரசுரிமையையே வேலாக மதித்திருந்தன னென்பதும், பிறவும் அறியலாகும்.

இத்தகை அறிவுடை வீரனான முடியுடை வேந்தனை ‘அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த போம ருண்க ணிவளினும் பிரிக’ என்று சொல்வித்தது, இப்பெருங்கோப்பெண்டினது [1] அறிவுருவொடு கூடிய அருந்திறற் கற்பே யென்பதுந் தெள்ளிது. நல்லிசைப் புலமையினும் தன்னோடொத்த இம்மெல்லியற்றேவியாரைத் தனது உயிர்க்காதலியாகப் பெற்ற பாண்டியன்றான் இவரைப் பிரித லாற்றுவனோ: ஒருசிறிதும் ஆற்றான்! ஈண்டு இத்தேவியார் தம்மோடொத்த நல்லிசைப்புலமைச் செல்வப்பாண்டியன்பால் வைத்த அன்பின் பெருக்கை இனைத்தென்றுணர்த்தலாவதோ! அன்று.

[1: பெருங் கோப்பெண்டு என்பது, முடியுடையரசர் பெருந்தேவியார்க்கொரு பெயர். (சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப் பெண்டு துஞ்சியகாலைச் சொல்லிய பாட்டு, புறநானூறு-245) என வருதலான்அறிக.]

(தொடரும்)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

 இரா.இராகவையங்கார்