நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 19

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 18. தொடர்ச்சி)

5. பூதப்பாண்டியன் தேவியார்



இருவேறு நல்வினைகளின் பயன்களா யுள்ள அரிய கல்வியும் பெரிய செல்வமும் ஒருங்கெய்தி, அங்ஙனம் எய்தியமைக்கேற்ற பேரறிவும் பெருங்கொடையும் உடையராய், இவ்வுலகில் என்றைக்கும் நீங்காத நல்லிசையினை நிறுத்தின முடியுடைத் தமிழரசர் மூவருள்ளும், பாண்டியரே, கல்விபற்றி மற்றை யிருவரினும் சிறப்பித்துப் போற்றப்படுவோராவர். இவரே செந்தமிழ்நாடாளும் உரிமை யுடையர். இவரே முக்காலும் செந்தமிழ்ச் சங்கம் சிறப்புற இரீஇயினோர். இவரே கவியரங்கேறினோர். இவரே அரும்பெறற் புலவர்க்குப் பெரும்பொற்கிழி யளித்தோர்.

இவரது அவைக்களமே தொல்காப்பியம், திருவள்ளுவர் முதலிய பெருநூல்கள் அரங்கேறப் பெற்றது. இவர் நாடுதான் நல்ல தமிழுடையது. இவர் பதிதான் தமிழ் நிலைபெற்ற தெனப்படுவது. இவர்பதியைக் கூறுமிடமெல்லாம் கல்விபற்றியே சிறப்பித் துரைப்பர். இவர் ‘பதிகளில் வாழ்வார்தாம் வாழ்வார்’ எனப்படுவா ரென்ப. பல சொல்லி யென்? மூவேந்தருள்ளும் பாண்டியர்தாம் தமிழுடையார் என்று சிறப்பிக்கப்படுவாரென்ப. இவற்றையெல்லாம்,

வில்லுடையான் வானவன் வீயாத் தமிழுடையான்
பல்வேற் கடற்றானைப் பாண்டியன் – சொல்லிகவா
வில்லுடையான் பாலை யிளஞ்சாத்தன் வேட்டனே
நெல்லுடையான் நீர்நாடர் கோ.’ (யாப்பலங்கலவிருத்தி மேற்கோள்)

நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்து – நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
னாட்டுடைத்து நல்ல தமிழ்.’
      (ஒளவையார்)

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும்
      (சிறுபாணாற்றுப்படை)

உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் றுறை
      (திருச்சிற்றம்பலக்கோவை)

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையுஞ் சீரூர் பூவி
னிதழகத் தனைய தெருவ மிதழகத்
தரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில்;
தாதி னனையர் தண்டமிழ்க் குடிக
டாதுண்பறவை யனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோ னாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப
வேம வின்றுயி லெழுத லல்லதை
வாழிய *வஞ்சியுங் #கோழியும் போலக்
கோழியி னெழாதெம் பேரூர் துயிலே.’
      (பரிபாடலுறுப்பு)
[* வஞ்சி – கருவூர்; சேரர் தலைநகர்.
# கோழி – உறையூர்; சோழர் தலைநகர்.#]

ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்குஞ்
சேய்மாடக் கூடலுஞ் செவ்வேள் பரங்குன்றும்
வாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார்
போவாரார் புத்தே ளுலகு.’
      (பரிபாடலுறுப்பு)

உலக மொருநிறையாத் தானோர் நிறையாப்
புலவர் புலக்கோலாற் றூக்க — வுலகனைத்துந்
தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவ
னான்மாடக் கூட னகர்.’
      (பரிபாடலுறுப்பு)

என இவ்வாறு பாண்டியரையும், அவரது நாடுநகர்களையுஞ் சிறப்பித்துவரும் அரிய பழைய பாடல்களானும் பிறவற்றானு முணர்க. இன்னுந் தொகைநூல்களுட் கோக்கப்பட்டுள்ள இப்பாண்டியர் பாடல் சிலவற்றான் இவ்வேந்தரது நல்லிசைப் புலமை மேம்பாடு உய்த்தறியத்தக்கது.

முடத்திருமாறன்

நற்றிணை-105,228

மாறன் வழுதி

 ,, 97

பெருவழுதி

 ,, 55

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி

புறநானூறு – 182

குறுவழுதி

அகநானூறு – 150

அண்டர்முன் குறுவழுதி

குறுந்தொகை – 345, அகநானூறு-227

பாண்டியன் ஆரியப்படை தந்த நெடுஞ்செழியன்

புறநானூறு – 183.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

புறநானூறு – 82.

பாண்டியன் அறிவுடைநம்பி 

குறுந்தொகை – 230, நற்றிணை – 13,
அகநானூறு – 28, புறநானூறு – 188

ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன்

அகநானூறு – 25, புறநானூறு – 71.

பாண்டியன் பன்னாடுதந்தான்

குறுந்தொகை – 270

பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி

அகநானூறு – 26, நற்றிணை – 98.

என்னும் இப்பாண்டியர், நல்லிசைப்புலமைச் செல்வராய் விளங்கினோ ரென்பது தெற்றெனத் தெரிவது. இவருள், முடத்திருமாறன் கடைச்சங்கம் நிலைபெறுவித்தோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் பாடியருளிய மதுரைக்காஞ்சி கொண்டோன்: பாண்டியன் பன்னாடு தந்தான் நற்றிணை தொகுப்பித்துதவினோன்: பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதி அகநானூறு தொகுப்பித்துதவினோன் எனவும் அறிந்து கொள்க.

இத்தகைக் கல்விச்சிறப்புடைச் செல்வப் பாண்டியருள் ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் என்னும் அரசர்பெருந்தகைக்கு ஆருயிர்த்துணைவியராய்ச் சிறந்தார்தாம் யாம் ஈண்டெடுத்தோதப் புக்க நல்லிசைப் புலமை மெல்லியற் றேவியார் என அறிக. இத்தேவியாரது இன்னுயிர்க் கொழுநனாகிய பூதப்பாண்டியன், புலவனும் வீரனுமாய்ச் சிறந்து விளங்கினோன். அகநானூற்றினும் புறநானூற்றினுங் காணப்படும் அவனது பாடல்களானும், ‘ஒல்லையூர்தந்த’ என்னும் அடைச்சிறப்பானும் அவனது புலமையும் வீரமும் உணரத்தக்கன. புறத்திற் காணப்பட்ட

மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்
தடங்காத் தானை வேந்த ருடங்கியைந்
தென்னொடு பொருது மென்ப வவரை
யாரம ரலறத் தாக்கித் தேரோ
டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக
வறநிலை திரியா வன்பி னவையத்துத்
திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து
மெலிகோல் செய்தே னாகுக மலிபுகழ்
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனு மன்னெயி லாந்தையு முரைசா
லந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்
வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறருங்
கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த
வின்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ

மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த
தென்புலங் காவலி னொரீஇப்பிறர்
வன்புலங் காவன் மாறியான் பிறக்கே.’

என்னும் பாட்டு, இவர் காதலனது வீரம் பற்றிய வஞ்சின வார்த்தையாகலுங் காண்க. இப்பாட்டால் இவர் கொழுநன் பெரிய போர்வீரன் என்பதும், தனக்கொத்த கல்வியறிவு வாய்ந்த தேவியாராகிய இவரைச் சிறிதும் பிரிதாலாற்றாப் பேரன்புடையா னென்பதும், அறநிலை திரியா முறையுடைச் செங்கோலன் என்பதும், வையையால் வளமிக்க மையல் என்னும் ஊரிலிருந்த மாவன் என்பானையும், எயில் என்னும் ஊரிலிருந்த ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் என்பாரையும் தன் கண்போல் நண்பினராகக் கொண்டவன் என்பதும், பிறநாட்டரசுரிமையினும் பாண்டிநாடாள் அரசுரிமையையே வேலாக மதித்திருந்தன னென்பதும், பிறவும் அறியலாகும்.

இத்தகை அறிவுடை வீரனான முடியுடை வேந்தனை ‘அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த போம ருண்க ணிவளினும் பிரிக’ என்று சொல்வித்தது, இப்பெருங்கோப்பெண்டினது [1] அறிவுருவொடு கூடிய அருந்திறற் கற்பே யென்பதுந் தெள்ளிது. நல்லிசைப் புலமையினும் தன்னோடொத்த இம்மெல்லியற்றேவியாரைத் தனது உயிர்க்காதலியாகப் பெற்ற பாண்டியன்றான் இவரைப் பிரித லாற்றுவனோ: ஒருசிறிதும் ஆற்றான்! ஈண்டு இத்தேவியார் தம்மோடொத்த நல்லிசைப்புலமைச் செல்வப்பாண்டியன்பால் வைத்த அன்பின் பெருக்கை இனைத்தென்றுணர்த்தலாவதோ! அன்று.

[1: பெருங் கோப்பெண்டு என்பது, முடியுடையரசர் பெருந்தேவியார்க்கொரு பெயர். (சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப் பெண்டு துஞ்சியகாலைச் சொல்லிய பாட்டு, புறநானூறு-245) என வருதலான்அறிக.]

(தொடரும்)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

 இரா.இராகவையங்கார்