Saturday, August 13, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37: ம. இராமச்சந்திரன்




(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37

  மேலும் தமிழக மக்கள் எழுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றார்களே! புதிய சிந்தனை பெற்று வாழ்வது எங்ஙனம்? என இன்றைய குடியரசு நாடு பெற்றிருக்கும் அவலத்தை கண்டித்தும் நையாண்டி செய்தும் கூறுகிறார் கவிஞர்.
‘கட்டையை நிறுத்தினும் கழுதையைக் காட்டினும்
 அதற்கே வாக்கை அளித்தல் வேண்டும்
 என்றே கூறி நன்றுதம் கட்சிப்
 பேரெண் பெற்றிடப் பெரிதும் முயன்றனர்’
 (துரத்தப்பட்டேன்: அ-ள் 42-45)
தொண்டுள்ளம் கொண்டவருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற நிலை மாறி தம் சாதியைச் சார்ந்த ஒருவருக்கே வாக்களிக்க முந்துகின்றனர். தொழில் காரணமாகப் பெயர் பெற்ற மக்கள், சாதியினால் பெயர் கொண்டு வேறுபடுகின்றனர்.
‘வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை
 அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை
 …………………………………..
 …………………………………..
 தேவர் வாக்கு வேறெவர்க்கு மில்லை
 முதலியார் வாக்கு முதலியார் தமக்கே’
(துரத்தப்பட்டேன்: அ-ள் 34-39)
இங்கு சாதிகள் பேரால் போரிடுகிறார்கள் என்று கவிஞர் வசைபாடுகிறார்.
தமிழ் மக்கள் தமிழ்மொழியைக் கல்லாது ஆங்கில மோகம் கொண்டு அலைவதை நையாண்டி செய்து பாடியுள்ளார் கவிஞர். இக்கவிதை இரண்டு கண்ணிகளை உடையது.
 ‘ஆங்கிலம் ஒன்றையே கற்றார்-அதற்கே
 ஆக்கையும் ஆவியும் ஈந்தார்
 தாங்களும் வேற்றவர் ஆனார் – தமிழின்
 தொடர்பற்றுப் போனார்’ 113
ஆங்கில மொழி கற்கும் தமிழர்கள் தம்மையும் உயிரையும் விட்டு விடுகின்றனர். வேற்று இனத்தவரைப் போல மாறிவிடுகின்றனர். தமிழ் பேசுவதற்கே நாணமுறுகின்றனர். தமிழ்மொழியைக் கொத்திக் குதறிப் பேசுகின்றனர். எனவே அவர்கள் தமிழ் மொழியின் தொடர்பு முழுவதும் நீங்கப் பெற்றவர் என்று சாடுகிறார் கவிஞர்.
‘யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல்’ என்ற கவிதை 1962 ஆம்  ஆண்டு இயற்றப்பட்டது. ‘பழந்தமிழ்’ என்ற மொழி ஆராய்ச்சி நூலில் இன்றைய தமிழ் மக்களின் இழிநிலையை விளக்குமுகத்தான் இக்கவிதையைப் பாடியுள்ளார். இக்கவிதையை இருபது அடிகளையுடைய நிலைமண்டி ஆசிரியப்பா. புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய பாடலை மாற்றிப் பாடியுள்ளார். இதனைப் பகடியம் (Prody) என்று ஆங்கிலத்தில் கூறுவர்.
  ஆண்டு பல ஆகாமல் நரை அடைந்த காரணம் என்ன என்று என்னைக் கேட்பீர்களாயின் அதற்கு விடை சொல்கின்றேன். கேளுங்கள்.
  நாட்டை ஆட்சி செய்த நம் இனமக்கள் இன்று அடிமைகளாய் இருக்கின்றனர். இதுநாள் வரை நாம் போற்றிய பண்பு இன்று போலியாகி விட்டது. தமிழர், தமிழ் மொழியை மறந்தனர். பிற மொழிப் பற்றில் வல்லவராக இருக்கின்றனர். தமிழ்நாட்டின் தெருப்பெயர் தமிழில் இல்லை. நம்முடைய ஊரும் பெயரும் ஆங்கில மொழியில் வழங்குகின்றன. இதனைக் கவிஞர் எள்ளி நகையாடுகிறார் .
‘ஆண்டநம் மக்கள் அடிமை களாயினர்
 பூண்டநம் பண்பு போலியதாகின்று
 ………………………………….
 ………………………………….
 ………………………………….
 ஊரும் பேரும் உயர்மொழி வழக்கம்
 அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்’ 114
  தமிழ் மொழியைக் கற்றோர் உயர்பதவி அடைய வாய்ப்பு இல்லையாதலால் தமிழைப் பயில தமிழரே வருவதில்லை. ‘தாய்மொழி ஆட்சி மொழி’ என்பதெல்லாம் பெறும் சொல்லளவில் மட்டும் இருக்கின்றது. தமிழ் மீது பற்றிலாமல் பிறமொழி மீது நாட்டங் கொள்வோரா ஆட்சியில் உள்ளனர். உயர்கல்வியைத் தமிழ்வழிப் பற்றுவதற்குத் தடையாய் இருப்பவர் தமிழரே. தமிழ்மொழியைப் போற்றுவோர் ஆங்கில மொழிக்கு அளிக்கும் தொகையில் பாதியைக் கூட தமிழுக்கு அளிப்பதில்லை. இன்றைய நாளில் தீயவை பெருகுகின்றன. நல்லவை மறைகின்றன. மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி என்பதும் இல்லாமல் போய்விட்டது. எனவே, இளம் வயதிலேயே எமக்கு நரைமுடி தோன்றிவிட்டது’ என்று கவிஞர் தமிழ் மீதுள்ள காதலில் தம் ஆற்றாமையைப் புலப்படுத்துவதோடு தமிழ்ப்பற்றில்லாமல் திரியும் தமிழ் மக்களின் மடமையைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் தமிழ் மொழி வளர்ச்சியில் கருத்துச் செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறார்.
 ‘உயர்கல் விக்குறு ஊடக மொழியாய்த்
 தமிழ் மொழி அமையத் தடுப்பவர் தமிழரே
 ஆங்கில மொழிக்கே அளிப்பதில் பாதியும்
 தமிழ்மொழிக் களித்திலர் தமிழைப் போற்றுவோர்;
 அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்
 மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே’ 115
இன்தமிழ் காமின்” என்னும் கவிதை பதினெட்டு அடிகளையுடையது. இதில் `செல்வம் படைத்த செல்வர் சிலர் தமிழ்மொழியைப் போற்றாது இருக்கிறார்கள். பொருளையும் பொன்னையும் மட்டுமே சேர்க்கின்றனர். புகழ் வாய்ந்த செயல்களைச் செய்யாது வாணாளை வீணாகக் கழிக்கின்றனர். எமன் வந்து பற்றுங் காலத்து நடுங்கிச் சாகப் போகிறார்கள். தமிழ் நம்மொழி; தமிழ் இனிமையுடையது என்று மகிழ்ச்சி அடையாத செல்வர் உயிருடையவராயினும் நடைப்பிணமாகவே கருதப்படுவார்’ என்று வன்மையாகக் கண்டிக்கிறார்.
‘பொன்னும் பொருளும் புவியும் புகழும்
 பன்னுறு செல்வம் அனைத்தும் பாரில்
 பெற்றுள தமிழர் சற்றும் தமிழினை
 எண்ணிப் போற்றா திருப்பரேல் எல்லாம்
 …………………………………………
 …………………………………………
 …………………………………………
 உள்ளம் மகிழார் உயிருடைய ரேனும்
 நடைப்பிண மாக நாளைக் கழிப்பரே’116
செல்வர்களே தமிழ்ப்புகழ் பரப்புங்கள். அப்பொழுது தான் நாட்டுமக்கள் உங்களை வணங்கி மதிப்பார்கள்.
  பிறரைக் கெடுக்கும் கீழ்த்தரமான செல்களை நீக்கிவிடுங்கள். வானளாவியப் பெருகிய செல்வமும் பதவியும் நிலையாதது என்பதை உணருங்கள். பிறர்க்கும் அஞ்சி வாழும் அவலத்தைப் போக்குங்கள். தம்மிடம் உள்ள செல்வம் அனைத்தும் கொடுத்து தமிழ் மொழியைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறுகிறார் கவிஞர்.
  செல்வம் அழியக்கூடியது. மனிதர் இறக்கக் கூடியவர் அழியாது நிலைத்திருப்பது தமிழ் மொழியே. எனவே மாள இருக்கும் செல்வர்களே! அழியும் செல்வத்தைச் சேர்க்காதீர்கள்! எமன் வருமுன் நிலைத்த புகழ் கொடுக்கும் தாய்மொழியைக் காப்பாற்ற முந்துங்கள் என்று செல்வர் இழிநிலையை, மடமையைச் சுட்டிக் காட்டுகிறார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், பழந்தமிழ் நான்காம் பதிப்பு, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1962, ப-12, கண்ணி 1-2.
  2. சி. இலக்குவனார், பழந்தமிழ் ப-180, அ-ள் 15-20.
  3. சி. இலக்குவனார், பழந்தமிழ் ப-180, அ-ள் 15-20.
  4. சி. இலக்குவனாh, ‘இன்றமிழ் காமின்’ ‘குறள் நெறி’ மலர்-2, இதழ்-15, ஆக°ட் 1965, அ-ள் 1-9.
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiranதலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Sunday, August 07, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36: ம. இராமச்சந்திரன்





தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36

அங்கதம்
  தொல்காப்பியர் காலத்திலேயே அங்கதச் செய்யுள் பாடப்பட்டுள்ளன என்பதை அவர் எழுதிய நூற்பாவினால் அறியலாம். செம்பொருள், அங்கதம் என இருவகையாகக் கொள்வர் தொல்காப்பியர்.105 தொல்காப்பியத்தில் சொல்லப்படும் அங்கத வகை வளர்ச்சி பெறவில்லை என்றே தோன்றுகிறது. எனினும் சில தனிப்பாடல்களிலும் காவியங்களில் மட்டுமே ஆங்காங்கே அங்கதக் கூறுகள் இடம் பெற்றுள்ளன. அங்கத வடிவில் அமைந்த திறனாய்வாளர் கூறும் அங்கத இலக்கணங்கள் பொருந்தி நகையும் வினையமும் (irony) இகழ்ச்சிக் குறிப்பும் கொண்டு எழுந்த நூல்கள் மிக அரியனவே.
 கொடுமையையும் மடமையையும் கண்ணோட்டமின்றிச் சாடும் கவிதையே அங்கதமாகும்106 என்று அறிஞர் சான்சன் என்பார் குறிப்பிடுவர்.
 ‘செம்பொருள் அங்கதம் வசையெனப் பெயர் பெறும்’107
என்பர் இளம்பூரணர். இளம்பூரணர் உரையையும் சான்சன் கூற்றையும் ஒப்புநோக்கில் ஓர் ஒற்றுமை புலனாகும். செம்பொருள் அல்லாத ஒரு வகை பழிகரப்பு அங்கதம் எனப்படும்.108தான் மொழியும் மொழியை மறைத்துச் சொன்னால் அது பழிகரப்பு அங்கதம் எனப்பெயர் பெறும்109என்று கூறுவர் இளம்பூரணர்.
 சமுதாயத்தில் நிலவும் கொடுமைகளைக் கண்டு உள்ளங்கொதித்துக் கண்டிக்கும் வகையில்  இலக்குவனார் அங்கதக் கவிதைகள் இயற்றியுள்ளார். உள்ளங்கொதித்துச் சமுதாயக் கொடுமைகளையும் குற்றங்களையும் கண்டிக்கும் வகையில் அமைந்த அங்கதத்தை எழுதியவர் ‘சுவனல்’ என்று ஆய்வாளர் கூறுவர்.110
இலக்குவனார் பாடிய கவிதைகளில் நான்கு கவிதைகளில் அங்கதக் கூறுகள் உள்ளன.
  ‘கருஞ்சட்டை என்பர் கதர்ச்சட்டை என்பர்’ என்ற கவிதையும், ‘ஆங்கிலம் ஒன்றையே கற்றார்’ என்ற கவிதையும், ‘யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல்’ என்ற கவிதையும், ‘இன்தமிழ் காமின்’ என்ற கவிதையும் என நான்கு கவிதைகள்  அங்கதச் செய்யுளாகத் திகழ்கின்றன.
‘கருஞ்சட்டை என்பர்’111
என்ற கவிதை ‘கரும வீரர் காமராசர்’ என்ற வரலாற்று நூலுள் இடம் பெற்றுள்ளது. இக்கவிதை 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டதாகும். இது ஒன்பது அடிகளால் ஆன நிலைமண்டில ஆசிரியப்பாவாகும்.
  இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டு மக்கள் உள்ளங்களில் சாதிப்பற்று மிகுந்து வருகிறது. தன்மதிப்பு இயக்கம் தமிழ்நாட்டில் சாதிகளை ஒழிப்பதில் முன்னின்று தொண்டாற்றியது. அதனால் சாதிப்பற்று குறைந்து விட்டது போல் தோற்றமளித்தது. ஆனால் உண்மையில் இப்பொழுது சாமி வெறி மேலும் வளர்ந்து வருகிறது. எனவே நாட்டை ஆளும் அரசே சாதிக் கொடுமையை ஒழிக்க வேண்டும். சாதி சமயஞ்சாராத அரசு (Secular State) என நம்முடைய அரசை நாம் அறிவித்து கொண்டாலும் நடைமுறையில் சாதிகள் அடிப்படையில்தான் நடைபெற்று வருகிறது. எத்துறை நோக்கினும் சாதித்தன்மை வல்லாட்சி புரிவதைக் காணலாம். சாதிவேறுபாடு காட்டக்கூடாத சமயத்துறையில் கூட சாதித்தன்மையே மிகுந்து காணப்படுகிறது. சாதிகளை ஒழிக்கத் தோன்றிய அரசியல் கட்சிகள் கூட தேர்தலின் போது சாதி வாக்குகளை எண்ணிப் பார்த்தே ஆட்களை(உறுப்பினர்களை) நிறுத்துகின்றனர். இப்படிப்பட்ட சமூகக் கொடுமையைக் கண்டிக்கும் வகையில் எள்ளல் முறையில் கவிஞர் பாடியுள்ளார்.
 ‘கருஞ்சட்டை என்பர்; கதர்ச்சட்டை என்பர்
  செஞ்சட்டை என்பர்; செந்நெறி என்பர்
 ……………………………………..
 ……………………………………..
 ……………………………………..
 சாதிப்பற்றே தழைத்துப் படரும்
 மக்களைப் பிரித்து வன்முறை செழிக்க
 அறநெறி கோடி அல்லது புரியும்
 சாதி முறைகள் சாகும் நாள் என்றோ’112
குறிப்புகள்:
  1. தொல்காப்பியர், தொல். பொருள். செய். நூற்பா120-122.
  1. Pricenton, Encylopedia of Poetry and Poetics, Princeton University press, 1972, p-738.
  2. இளம்பூரணர், தொல்காப்பியம். பொருளதிகாரம். செய்யுளியல் உரை. நூற்பா:121.
  3. தொல்காப்பியர், தொல்காப்பியம். பொருளதிகாரம். செய்யுளியல். நூற்பா:122.
  4. இளம்பூரணர், தொல்காப்பியம், பொருள் செய். உரை. நூற்பா. 122
  5. சு. பாலச்சந்திரன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ‘அங்கதம்’ ப-219, வள்ளல் 18-21.
  6. சி. இலக்குவனார், கரும வீரர் காமராசர் ‘கருஞ்சட்டை என்பர்’ நாஞ்சில் புத்தக மனை, நாகர்கோயில் 1956,ப. 74.
  1. சி. இலக்குவனார், கரும வீரர் காமராசர், ‘கருஞ்சட்டை என்பர்’ ப-74, அ-ள் 1-9.

Friday, August 05, 2016

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 3/4 – சி.சேதுராமன்




தலைப்பு-தமிழுக்கு ஒளிதந்த தமிழொளி-சேதுராமன் :thalaippu_thamizhukkuoli_thamizholi_sethuraman

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 3/4

எழுத்துப் பணி
  தமிழ்ஒளி எப்போதும் எவருக்கும் கட்டுப்பட்டு எழுதியதில்லை. அவருக்கு எப்போது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது எழுதினார். மற்ற நேரங்களில் நிகழ்வுகளை மனத்தில் அசைபோட்டுக் கொண்டிருந்தார். எழுத்துத் துறையில் அவர் எவருக்கும் கட்டுப்பட்டு வாழவில்லை என்பதை,
“நான் எந்த நேரத்தில் எதை எழுதுவேன் என்பது எனக்கே தெரியாது. ஏனெனில் எதையும் நான் திட்டமிட்டுச் செய்வதில்லை… அவ்வாறு செய்வது ஒரு கலைஞனின் பணியுமன்று. அஃது எந்திரத்தின் போக்கு. நான் எந்த நேரத்தில் எதைப் படிக்கிறானோ, எதைப் பார்க்கிறேனோ அதுவே என்னுள் கிளர்ந்தெழுந்து கவிதை, கதை, கட்டுரை என்று பரிணமிக்கின்றன. அதனால்தான் இந்த நேரத்தில் இதை எழுது என்று எவர் பணித்தாலும் எனக்கு எரிச்சலாக இருக்கிறது; அப்படி எழுதுவது இலக்கியமாக இருக்காது என்றும் தோன்றுகிறது”
என்ற கவிஞரின் கூற்றுத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது. இது “கவிஞர்கள் விடுதலைப் பறவைகள்” என்ற எமர்சன் கருத்தை அடியொற்றியதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இணை ஆசிரியர் பணி
  1948-ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக்கட்சி தடை செய்யப்பட்டது. “சனசக்தி” பத்திரிகை அலுவலகமும் மூடி முத்திரையிடப்பட்டது. கட்சித் தலைவர்கள் ‘தலைமறைவு வாழ்க்கை’ நடத்தினர். அந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் ‘முன்னணி’ என்னும் இதழ்தான் தலைமறைவாளர்களுக்குத் தொடர்பு சாதனமாக விளங்கியது. இவ்விதழைக் ‘கவிஞர் குயிலன்’ தொடங்கினார். அவருடன் இணை ஆசிரியராகப் பொறுப்பேற்று கவிஞர் தமிழ்ஒளி கடுமையாக உழைத்தார்.
 தமிழ்ஒளி வாரந்தோறும் கவிதை, கதை, ஓரங்க நாடகம், திறனாய்வு. என்று பலவாறு எழுதி, வாசகர்களை எழுச்சிபெறச் செய்தார். அந்த நாட்களில் பொதுவுடைமைக் கருத்துகளை மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் வாயிலாக மட்டுமே மக்கள் அறிந்து வந்தனர். ஆனால் தமிழ்ஒளி அந்த நிலையை மாற்றியமைத்தார். தமது படைப்பிலக்கியத்தின் மூலம் பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பினார்.
‘முன்னணி’ பத்திரிக்கையில் தமிழ்ஒளியின் பணி குறித்து,
“அந்நாளில் தலைமறைவாய் இருந்த என் போன்றோர்க்குக் கிடைக்கப்பெற்ற பத்திரிகைகளில் முன்னணிதான் முதலிடம் பெற்றது. இந்தப் பத்திரிகையில் கவிஞர் தமிழ்ஒளி எழுதிய கவிதைகள் மகா சக்தி வாய்ந்தவை; மறக்க முடியாதவை. அந்த அளவிற்குப் பாரதி போன்று உலகு தழுவிய பார்வையும்-உரத்த சிந்தனையும் உடையவை தமிழ்ஒளியின் கவிதைகள்” என்று விடுதலைப் போராட்ட வீரர் திரு.சு.மு.கண்ணன் கூறியுள்ளது தமிழ்ஒளியின் ஒப்பற்ற உழைப்பினை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. ‘முன்னணி’ பத்திரிகையில் மட்டுமன்றி எழுத்தாளர் ‘விந்தன்’ நடத்திய ‘மனிதன்’ பத்திரிகையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
பத்திரிக்கை தொடங்குதல்
  தாமே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்த வேண்டும் என்ற எண்ணம் கவிஞருக்கு உதயமானது. அதனால் அவர், ‘சனயுகம்’ என்னும் பத்திரிகையை 1950-ஆம் ஆண்டில் தொடங்கினார். இவ்விதழின் இரு வெளியீடுகளை மட்டுமே தமிழ்ஒளியால் வெளியிட முடிந்தது. இரு இதழ்களை வெளிகொணர்வதற்குள் அவரிடமிருந்த பணம் கரைந்து போனது. ‘சனயுகம்’ பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற வெறி தமிழ்ஒளிக்குள் ஏற்பட்டது. எனவே அவர் தமது ஊருக்குச் சென்று பெற்றோரின் உதவியை நாடினார். அவர்கள் உதவ மறுத்ததால் குடும்பச் சொத்தாக இருந்த தென்னந்தோப்பை விற்க முயன்றார். அதிலும் அவரது முயற்சி பலிக்கவில்லை. அதனால் மனம் உடைந்த அவர் பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்னை திரும்பினார்.
அன்று சென்னைக்கு வந்த தமிழ்ஒளி அதன் பின்னர் 1962-ஆம் ஆண்டு வரை பன்னிரெண்டு ஆண்டு காலம், தமது பெற்றோர்களை மறந்து, “போகும் வழி நீளமென்று புத்தி உணர்ந்தாலும் போகும்வழி எனது போக்குக்கு இயைந்த வழி” என்று அவர் போக்கில் போய்க்கொண்டிருந்தார்.
1951-ஆம் ஆண்டில் ‘விசயன்’ என்னும் புனைபெயரில் தமிழ்ஒளி, “மாமாவின் சாகசம்” என்ற சிறுபுதினத்தை எழுதினார். இதனைச் சக்தி வை.கோவிந்தன் வெளியிட்டார். தமிழ் ஒளியின் இந்த புதினம் அன்றைய மலிவுவிலைப் பதிப்பாக வெளிவந்து விற்பனையில் பெரிய சாதனையைப் படைத்தது எனலாம்.
பொதுவுடைமை இயக்கப் பாவலர்
  சோவியத்து நாட்டில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டின் தாக்கத்தால் தமிழகத்திலும், ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ முதலிய அமைப்புகள் உருவாயின. இச்சங்கத்தின் செயலாளர்களில் ஒருவராகத் தமிழ்ஒளி செயல்பட்டுள்ளார். இந்த ஈடுபாட்டின் காரணமாகத், தேசியக்கவி பாரதியைப் போல, மக்கள் கவியாகிய, தமிழ்ஒளியும் 1952-ஆம் ஆண்டில் ‘மே  நாளை’க்  ,
“கோழிக்கு முன்னெழுந்து
கொத்தடிமைப் போலுழைத்துக்
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!”
“மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி
விண்ணில் மழையிறக்கி
மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி
வாழ்க்கைப் பயிரிட்டு
வாழ்ந்த தொழிலாளிகையில்
விலங்கிட்டுக் காலமெலாம்
கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க
பொங்கிவந்த மே தினமே!”
என்று முதன்முதலில் வரவேற்றுக் குரல் கொடுத்தார்.
முனைவர் சி.சேதுராமன்,
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
மின்வரி: Malar.sethu@gmail.com

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum