Saturday, January 13, 2018

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36

 படக்கலை இதர கலைகளை எல்லாம் பாழாக்கி வருவதைக் கண்டு கவிஞர் வேதனையோடும் உளக்கொதிப்போடும் பாடல்கள் பாடியிருக்கிறார். பிழைப்புக்காக அங்கு நல்லவர்களும் கெட்டுப் போவதை எண்ணி மனம் வருந்துகிறார். கலையை வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் வயிற்றைத்தான் வளர்க்கின்றார் என்பதைச் சுட்டுகிறார்.

 தமிழரின் பெருமைகளை எண்ணி மகிழும் பெருங்கவிக்கோ இன்றையத் தமிழரின் இழிதன்மைகளை எடுத்துக்கூறப் பின் வாங்குவதில்லை. யார் என்று கேட்டு, இந்தத் தமிழன்தான், தமிழன்தான், தமிழன்தான் என்று அழுத்தமாகச் சொல்கிறார். அமிழ்தினில் நஞ்சைக் கலப்பது போல, அன்று முதல் இன்று வரை நடப்பதனாலே தமிழனுக்குத்  தமிழனே பகைவன்  என்கிறார் அவர்.  அவனது குணக்கேடுகள் பற்றியும் கூறுகிறார்.

நன்றியைக் கொள்வதிவன் அன்றாட மாச்சு
நம்பின பேருக்குத் துரோகம் செய்வதே மூச்சு
பன்றிகள் போலலைத்து பணம்பற்றியே பேச்சு

படித்தவன் கூட ஐயோ! பண்பினை விடலாச்சு!
காட்டிக் கொடுப்பதிவன் கைவந்த கலை . என்பான்
கண்மூடித் திற்க்குமுன்னே காதகக் கொலை செய்வான்!
ஊட்டி வளர்த்த தமிழ் உயர்வுக்கு உலை வைப்பான்!
உண்மையைத் துணிந்துசெய உளமஞ்சிச் சிலையாவான்.

பெருங்கவிக்கோவின் புதிய பார்வைக்கும், புதிய சிந்தனைக்கும் சான்றாகக் ‘கோவிந்தன் கொடுங்கோலன்’ ‘கடவுள் எனக்குக் கடன்காரன்’ என்று அவர் பாடியுள்ள பாடல்களைக் குறிப்பிட வேண்டும்.
கோவிந்தா கோவிந்தா என்றொருவன் குரல் எழுப்பி, கொடும் வெயிலில் சாலையிலே உருளுகின்றான் வயிற்றுக் காய்!
கோவிந்தா கோவிந்தா என்றே மற்றொருவனும் தான்
கோபுரம்போல் மாளிகையில் பணச் செருக்கில் புரள்கின்றான்
கும்பிட்ட இருவருக்கும் கொடுத்ததிலே வஞ்சமென்றால்
கும்பிட்ட ஒருவன் நீ கொடுங்கோலன், அன்றோ? சொல்!

என்றும் திருப்பதி ஏழுமலையானைக் கேட்கிறார் கவிஞர்.
வம்புக்குச் சொல்லவில்லை வடவேங்கடத்தானே!
 வந்து குவிகின்ற பொருள் உனக்கு ஏன்?
வறியார்க்கே தந்துவிடு!
என்றும் கூறுகிறார்.

கடவுள் எனக்குக் கடன்காரன் எனக் கூறும் கவிஞர் ஏன் அவ்விதம் கூறுகிறார்?
”கடவுளே, நீ எனக்குக் கடன்காரன், அருள் கதவை அடைத்த கொடுங்கோலன்!”
என்று கடவுளிடமே அவர் கூறுகிறார்.
எனக்குத் தானாடா நீ கடன்காரன்? இங் இருப் போர்க்கெல்லாம்தான் கடன்காரன் என்றும் சொல் கிறார். அது எப்படி?
உனக்கும் உதவினேன் உண்டியல் பெயரால்
உதவிக்கு உதவி உதவாச் செயலால்
நீ எனக்குக் கடன்காரன்
என்கிறார்.
பிறந்தது முதலாய் இறந்தநாள் வரைக்கும், பெரும் பெரும் அனுபவம்பெற்றுவிட்டேன்; வரம் அருள்வாய் என வணங்கி விட்டேன். வந்ததும் பறித்தாய் நொந்து கெட்டேன் என்று பாடுகிறார் கவிஞர்.
உலகைப் படைத்தவன் நீயே என்றால்
உயிர்களுக் கெல்லாம் கடன்காரன் நீ!
என்றும் கடவுளுக்கு நினைவுபடுத்துகிறார்.
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 2



தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 2

இனிக் கும்பகோணக் கலாசாலையில் தமிழ்ப் புலமை நடாத்திவரும் மகா வித்துவான் பிரம்மசிரீ  உ.வே. சுவாமிநாத(ஐய)ரவர்கள் தாம் பதிப்பித்த சிலப்பதிகாரத்தினும்  மணிமேகலையிலும் தமிழ் நூல்கள் பலவற்றைப் பற்றிய குறிப்புக்களெழுதி யிருக்கின்றனர். இன்னும் புறநானூற்றிலும் நல்லிசைப் புலவர் பலருடைய சரித்திரக் குறிப்புக்களும் அப்புலவர்களை யாதரித்தாரைப்பற்றிய குறிப்புகளும் வரையப்பட்டுள. இவையனைத்தையும் ஒருங்கு தொகுத்து இன்னுந் தாம் அருமையாகக் கண்டு குறித்துவைத்துள விசயங் களையுங் கூட்டித் தனி நூலாக வெளிப்படுத்தப் போகின்றனரெனக் கேள்வி யுற்றுக் கழிபேருவகை பூக்கின்றாம். இம்முயற்சி கைகூடுமாறு நம் ஐயரவர் கட்கு இறைவன் திருவருள் புரிவாராக.

இடையிற் பாறைக்கிணறு வெட்டப்புகுந்து முகவையம்பதி முதலிய விடங்களிற் பெரும்புகழ் படைத்தவரும், திருவாமத்தூரிலிருந்து காலங் கழித்தவருமாகிய திருப்புகழ்ச் சுவாமிகள்’ என்ற முருகதாச சாமியார்இயற்றிய *‘புலவர் புராணம்’ என்றதோர் நூல் வெளிப்போந்துளது. இந் நூல் முழுதுஞ் செய்யுளானியன்றுளது. சாமானியமாகப் புலவர் வீடுகளிற் கதையாகச் சொல்லிக்கொள்ளும் விசயங்களெல்லாம் ஒருவாறு தொகுத்து இந்நூலின்கட் கூறப்பட்டுள. காலவரையறை, நூலாராய்ச்சி முதலியன இந் நூலின்கட் கண்டிலேம். இதனேயொரு காப்பியமாகக் கருதி ஆராய்தல் ஈண்டு. எடுத்த விசயமன்று. தமிழ்ப் புலவர் சரிதமாகுமட்டில் இஃது ஓராற்றாற் பயன்படுவதாகும்.

இதுகாறும் தமிழ்ப் புலவர் சரித விசயமாக வெளிப்பட்ட நூல்களைப் பற்றி யுரைத்தாம். இனிச்சிற்சில நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் அவ்வந்நூலின் பதிப்புரைக்கண் நூலாசிரியர் வரலாறுகளும் தாங்கள் ஆராய்ச்சி செய்தமட்டிற் கூறியிருக்கின்றனர். சிலர் இக்காலத்தில் வெளிப்படும் தமிழ்ப் பத்திரிகைகளில் விசயங்களாகத் தமிழ்ப் புலவர் சிலரைப்பற்றி யெழுதியிருக்கின்றனர். இதற்கிடையிற் சில்லாண்டுகட்கு முன்னர் அட்டா வதானி – வீராசாமி(செட்டியார்) என்பார் ‘வினோத ரச மஞ்சரி‘ என்பதோர் நூலியற்றி யிருக்கின்றனர். அஃது அதன் பெயர்ப் பொருளின்படி விநோ தார்த்தமாக எழுதப்பட்டதோர் கதைத் தொகுதியெனக் கொள்ளற்பாலதே யன்றித் தமிழ்ப் புலவர்களைப் பற்றியதோர் மெய்ச் சரிதமாகக் கொள்ளப்படுவ தன்று. எனவே குறைபாடுகளனைத்தும் நீங்கி, யாவரும் ஏற்று மேற்கொள்ளத் தக்கதாய், தமிழ்ப் புலவராவானைவரையும்பற்றி ஒருங்கே கூறுவதாய் அன்னாரியற்றிய நூல்களின் ஆராய்ச்சிகளுமுடையதாய்க் காலவரையறையும் தெளிவு பெற நியாயவாயிலாற் காட்டுவதாய் ஒரு தமிழ் நூல் இதுகாறும் இவளிப்பட்டிலது. அத்தகையதொன்று என்று வெளிப்படுமோ? அறியோம்.  இக்க விசயத்தைத் குறித்து நம்முடைய மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கத்தின் அதிகாரிகள் நன்கு கவனித்து நடப்பாராக.
 வி.கோ. சூ.
(*அது கணம் பொருக்திய திவான் பகதூர் வ.கிருட்டிணமாசாரியாவர்களாற் பதிப்பிக்கப்படுகின்றது. முதற் பாகம் வெளியாயிற்று. பன்னிரண்டு பாகங்களும் விரைவில் வெளிவரும் என்று நம்புகின்றோம். இதன் முதற் பாகத்திற் சில பகுதிகள் சமது சருவ கலாசாலையின் பிரதம கலா பரீட்சைக்கும், கலா வித்தியார்த்திபட்ட பரீட்சைக்கும், கலாவித்தியார்திபட்ட பரீட்சைக்கும், பாடமாக எற்படுத்தப்பட்டுள. (இப் பொழுது இந் நூல் முழுதும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது.)
(தொடரும்)
பரிதிமாற்கலைஞர் 
–தமிழ்ப்புலவர் சரிதம்

Wednesday, January 10, 2018

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2

திருவள்ளுவர்  2.

தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால். அவர் தமக்கு வள்ளுவர் நீண்டகாலத்துக்கு முற்பட்டவராகவும். அவரறநூலின் இறவாச்சிறப்பு அங்கீகரிக்கப்படுதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதனடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப்பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கவும் வேண்டும். இது சம்பந்தமாய்த் திருக்குறளடிகளைச் சிந்திக்கச் செய்யும் சில சங்கச் செய்யுட்டொடர்களை ஈண்டுக் குறிப்போம் :-
  1. இடுக்கண்கால் கொன்றிட விழு மடுத்தூன்றும்
நல்லா ளிலாத குடி. (1030)
தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்
தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொல்
நீங்கல்மட வார்கட னென்றெழுந்து போந்தான்.
(சிந்தா – காந்தருவ-6)

2.வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள். (1105)
வேட்டார்க்கு வேட்டனவே போன்றினி வேய்மென்றோட்
பூட்டார் சிலை நுதலாட் புல்லா தொழியேனே.
(சிந்தா-குண-192)
3. கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில். (1137)
எண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே.
(சிந்தா – குண – 148)
4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். (894)
யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். (895)
வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழிலதாகும்.
(சிந்தா – குண – 239)
5. ஆக்கங் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார். (463)
வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தால்
ஊணிகந் தூட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத்
தேணிகந் திலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார்
சேணிகந் துய்யப் போநின் செறிதொடி யொழிய வென்றார்.
(சிந்தா – காந்தரு – 278)
6. இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல். (905)
இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற்
புல்லாளனாக.
(சிந்தா – மண்மகளிலம்பகம், செய் – 217)
7. உலகந் தழீஇய தொட்ப மலர்தலும்
கூம்பலு மில்ல தறிவு. (425)
கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதா நட்பாட்சி-தோட்ட
கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரு நட்பாரு மில்.
(நாலடி – நட்பாராய்தல் – 5)
8. ஒருநா ளெழுநாள்போற் செல்லும் சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. (1269)
பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னாம்
உள்ள முடைந்துக்கக் கால். (1270)
ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னெஞ்சு. (1284)
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
புலப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற்
கலப்பேன் என்னுமிக் கையறு நெஞ்சே.
ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற்
கூடுவேன் என்னுமிக் கொள்கையி னெஞ்சே.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
துனிப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணில்
தனித்தே தாழும் இத்தனி நெஞ்சே.
எனவாங்கு
பிறைபுரை யேர்நுதால் தாமெண்ணி யவையெல்லாம்
துறைபோத லொல்லுமோ தூவாகா தாங்கே
அறைபோகு நெஞ்சுடை யார்க்கு.
(கலி – 67)
9. துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து. (1218)
ஒ ஒ கடலே,
தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமையெடுத்துப்
பற்றுவென் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென்
நெஞ்சத்துள் ளோடி யொளித்தாங்கே துஞ்சாநோய்
செய்யு மறனி லவன்.
(கலி-144)
10. காமமும் நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பி னகத்து. (1163)
11. காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி. (1131)
நலிதருங் காமமுங் கெளவையு மென்றிவ்
வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை
நலியும் விழுமம் இரண்டு.
(கலி-142)
காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம
மெழினுத வீத்தவிம் மா.
(கலி-139)
12. அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை. (315)
சான்றவர் வாழியோ சான்றவிர் என்னும்
பிறர்நோயும் தந்நோய்போற் போற்றி அறனறிதல்
சான்றவர்க் கெல்லாம் கடனா லிவ்விருந்த
சான்றீர் உமக்கொன் றறிவுறுப்பென்.
(கலி-139)
13. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில். (549)
குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை
விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே.
(கலி – 130)
(தொடரும்)
நாவலர் சோமசுந்தர பாரதியார்