Sunday, May 16, 2021

மனுநீதி எக்காலத்துக்கும் எவ்விடத்திற்கும் எம்மனிதர்க்கும் பொருந்தாது

 அகரமுதல


 (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 47/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

48 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

 மூன்றாவது பகுதி மனு முதல் சகந்நாத பண்டிதர் வரை என்பதாகும்.

இப்பகுதியில் 18 கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

முதல் கட்டுரை மனுநூல்.

 பிராமணர்களின் பெருமையைக் கூறும் மனுசுமிருதி, மானவ தரும சாத்திரம் என்றும் அழைக்கப்பெறுகிறது. தொடக்கத்தில் மனுநூல் குறித்து, இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிகாகோ பல்கலைக்கழத்துப் பேராசிரியை வெண்டி தானிகர்(Wendy Doniger) கூறியுள்ளவற்றைப் பேரா.ப.ம.நா. எடுத்துரைக்கிறார்.

மனுநூல் பலரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; வருணாசிரம தருமத்தைக் காப்பதே அதன் தலையாய நோக்கு; அதில் மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதி மகாபாரதத்தில் அப்படியே இரு்க்கிறது; அவற்றுள் எது மூலம், பின்னால் எழுதப்பெற்றது எது என்று கண்டுபிடிக்க இயலவில்லை; அது பிராமணரால் எழுதப்பட்டது; பிராமணருக்காக, பிராமணரின் நலன் கருதி எழுதப்பட்டது; அன்னார் தங்களைப் பண்டைய இந்தியாவின் மூளைகளாகவும் வாக்குகளாகவும் கருதி, அதனை உறுதிசெய்து கொள்ளப் பயன்படுத்திக் கொண்ட நூல்; பல அடிப்படைக் கொள்கைகள்பற்றி அதில் முரண்பட்ட கருத்துகள் சொல்லப்பட்டிருக்கின்றன; மனுநீதியின் பகுதிகள் வெவ்வேறு காலங்களில் பல நூற்றாண்டுகளாகச் சேர்க்கப்பட்டதனால் இது நிகழ்ந்தது; சட்டங்களைப்பற்றிய பகுதிகள் இறுதியாகச் சேர்க்கப்பட்டவை; அதுகூறும் சட்டங்கள் என்றும் நடைமுறைக்கேற்றவையாக இருந்திருக்க முடியாது;

மனுநூல் கூறும் நீதி எக்காலத்துக்கும் எவ்விடத்திற்கும் எம்மனிதர்க்கும் பொருந்தாது என ஏ.கே.இராமனுசன் கூறுவதையும் குறிப்பிடுகிறார்.

மக்களின் ஒரு பாதியான பெண்ணினத்திடம் மனுவிற்கு எள்ளளவும் அன்போ, நம்பிக்கையோ, மரியாதையோ கிடையாது எனக் கூறி அதற்கான பல சான்றுகளையும் பேரா.ப.ம.நா.அளிக்கிறார். ஆண் அழகனாயினும் அருவருப்பான தோற்றத்தானாயினும் பரவாயில்லையென்று அவனோடு உடலுறவு கொண்டு மகிழ்வர் என்றும் பெண்கள் யாவரும் சலனபுத்தி கொண்டவர்களாகவும் இயற்கையிலேயே அன்பற்றவர்களாகவும் இருப்பதால் பரத்தையர்போல் ஆண்களைத் துரத்திச் சென்று தங்கள் கணவர்களுக்கு வஞ்சனை செய்வர் என்றும் மனுநூல் கூறுகிறது.

எந்தவொரு நீதியானாலும் குற்றத்திற்குத் தண்டனையானாலும் உரிமையானாலும் கடமையானாலும் நன்மை தீமையானாலும் நான்கு வருணங்களின் அடிப்படையிலேயே மனு வேறுபடுத்திப் பேசும். அரசனைவிடவும் பிராமணன் உயர்ந்தவன்; மரியாதைக்குரியவன் என்பது மீண்டும் மீண்டும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிராமணர்கள் ஊன் உணவு கொள்ளலாமென்று பலவிடங்களிலும் கொள்ளக்கூடாதென்று ஓரிரண்டு இடங்களிலும் சொல்லப்படுவதால் பின்னைய பகுதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்கள் என்று அறிஞர்கள் கருதுவார்கள்.

பெண்களைப்பற்றிப் பல இடங்களில் இழிவாகப்பேசும் மனுநீதி இரண்டொரு இடங்களில் அவர்களே குடும்பத்திற்கு அணிகலன் என்று உயர்வாகக் கூறுதலும் கொல்லாமையையும் ஊன் உண்ணாமையையும் ஆங்காங்கே சிறப்பித்தலும்  திசைதிருப்பிவிடப் பின்னால் வந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவு ஆகும்.

பெண்களைப் புகழ்ந்துபேசுவதுபோல் ஆங்காங்கே மனுவில் காணப்பட்டாலும் பெண்களுக்குக் கல்வி யுரிமை யில்லை; சொத்துரிமை யில்லை; எவ்வளவு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டாலும் சோர்வில்லாமல் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும்; என்பனபோல் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலேயே உள்ளன

திருக்குறளின் சிறப்பையும் மனுவின் கீழ்மையையும் ஒப்பிட்டும் கூறுகிறார். திருவள்ளுவர் உழவைப்போற்றுகிறார்; மனுநூல் உழவை இழிதொழிலாகக் கூறுகிறது; வேள்வி செய்வோன் பல மனைவியரோடு சேர்ந்து செய்யவேண்டும் என்பது மனு; மனைவியை வாழ்க்கைத் துணை என்று சொல்வதுடன் ஆடவர் கற்பையும் வலியுறுத்துவது குறள்;மனிதவினத்தில் பாதியான பெண்ணோடு இணைந்து மக்களைப் பெற்று வாழும் இல்லறச் சிறப்பைப் போற்றும் திருக்குறள்போன்ற அறநூலையோ சமயநூலையோ சமற்கிருதத்தில் காண இயலவில்லை என்றும் பேரா.ப.ம.நா. கூறுகிறார்.

மனித நேயத்திற்கும் அறத்திற்கும் எதிரான மனுநீதியை எங்ஙனம் செவ்வியல் நூலாகக் கூற இயலும்?

இரண்டாவது கட்டுரை ‘காமசூத்திரம்’ பற்றியது..

படைப்புக் கடவுள் தன் உயிரினங்களை உமிழ்ந்தவுடன் நூறாயிரம் அதிகாரங்களில் காமசூத்திரம் நூலைச் சொன்னார் எனத் தோற்றம் குறித்தும் நூலளவு குறித்தும் பொய்யுரை கூறிக் காமசூத்திரம் தொடங்குகிறது.

மேலைக்கல்வியாளர்களில் பலர் கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று கூறுவர். அஃது இந்தியாவின் தென்பகுதி, கிழக்குப் பகுதி மக்களைப்பற்றி இழிவாகப் பேசுவதால் வடமேற்குப் பகுதியைச் சேர்ந்தவரால் ஆக்கப்பட்டிருக்கலாம்.பதின்மூன்றாம் நூற்றாண்டில் இதற்கு உரை எழுதிய யசோதரர் இன்றைய பீகார் மாநிலத்திலிருந்த பாடலி புரத்தில் தோன்றியிருக்க் கூடுமென்று எண்ணுவர்.

பிறருடைய மனைவியரை ஏமாற்றிக் கெடுக்கும் வழிகளை வாத்துயாணர் இந்நூலில் விரிவாகக் கூறுகிறார். பிறன்மனை விழையாமையை வலியுறுத்துவது தமிழறம்.

தோனிகர் காமசூத்திரம் குறித்துக் கூறுவனவற்றை மேற்கோள்களாக ஆங்காங்கே இக்கட்டுரையில் பேரா.ப.ம.நா.அளித்துள்ளார். கணவனில்லாத போது மனைவியின் நடத்தை, பிறருடைய மனைவியரை அணுகுதல்,  காமநோக்குடன் பெண்களை அணுகுதல் முதலான ஒழுக்கக்கேடான முறைகளுக்கு இந்நூல் வழிகாட்டுகிறது என்பதை அம்மேற்கோள்கள் உணர்த்துகின்றன. பெண்களை அறவுணர்வு அற்றவர்கள் என்றும் மணமான பெண்கள் ஆடவர்களால் எளிதில் கைப்பற்றக்கூடியவர்கள் என்றும் அந்தப்புரத்தில் வாழும் அரசனின் மனைவியர் எவ்வாறெல்லாம் கள்ளக்காதலர்களோடு இன்பம் துய்ப்பர் என்றும் காமசூத்திரம் கூறும் பகுதிகள்குறித்து் தோனிகர் கூறுகிறார்.

பிறர் மனைவியரோடு உறவுகொள்வது வடநூல் மரபு எனக் காமசூத்திரத்திற்கு உரை எழுதிய தேவதத்த சாத்திரி தெளிவுபடுத்துகிறார்.  வேதங்கள் கூறும் நிலையாக இதைக் கூறுகிறார்.

இருக்குவேதத்தில் உள்ள யமன்-யமி உரையாடல் இதற்குச் சான்றாகும். “உன்னைநாடி வரும் எப்பெண்ணையும் விரட்டி விடாதே” என்கிறது சந்தோக்கிய உபநிடதம். இதற்கு விளக்கம் அளிக்கும் சங்கரர், “ஒருவனுடைய படுக்கைக்கு வரும் காமவிழைவு கொண்ட பெண்ணைத் துரத்தக் கூடாது” என்று சொல்வார். அதே பகுதிக்கு உரை வரையும் இராமானுசர், “புணர்ச்சியை விரும்பி இன்னொருவனுடைய மனைவி வருவாளானால் அவளோடு இணைந்து இன்பம் அளிப்பது சிவ வழிபாட்டின் ஒரு கூறாகும். இத்தகைய பிறன்மனை உறவு தருமத்தால் தடை செய்யப்படவில்லை” என்றுரைப்பார்.  இவையல்லாமல் அகலிகை-இந்திரன், குந்தி-கதிரவன் ஆகியோர்பற்றிய புராணக் கதைகளும் துசுயந்தன்-சகுந்தலை, மாலதி-மாதவன் ஆகியோர்பற்றிய கதைகளும் உலகத் தோற்றத்திலிருந்து இத்தகைய புணர்ச்சிகளின் மரபு இடையறாது இருந்திருக்கிறது என்பதற்குச் சான்றுகளாகும்(தோனிகர் 179).

பிற ஆடவனிடமோ பிறன் மனைவியிடமோ இணைவதால் விளையும் களிப்பை விதந்துபேசும் சமற்கிருத மொழிப்பாடல்கள் மிகுதியாக உள்ளன. வித்தியா, பாவசுதேவிபோன்ற பெண் கவிஞர்கள் முறையற்ற உடலுறவால் பெறும் களிப்பைக் குறிக்கோள் இன்பமாகப் பெருமைப்படுத்திப் பேசினார்கள். இவ்வாறு சமற்கிருத நூலார் பாலுறவுக் கேடுகளையே பேரின்பமாகக் கூறுகின்றனர் எனச் சான்றுகளை அடுக்கித் தருகிறார். பிறன்மனைவிழையாதலைப் பேராண்மையாக உயர்த்திப் பேசும் திருக்குறளுக்கும் காமசூத்திரம் போன்ற சமற்கிருதக் காமநூல் மரபிற்கும்  உள்ள மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாட்டைப் பாடுபொருள்கொண்டே நிறுவ முடியும்.

வள்ளுவரின் காமத்துப்பால் காலத்தால் முற்பட்டது என்பதை அறியாது, அதில் காமசூத்திரத்தின் தாக்கத்தைக் கண்டவர்கள் அவையிரண்டுக்குமுள்ள வேறுபாடுகளைப் பகுத்துணர்ந்து அறிய இயலாதார்.காமசூத்திரம் ஆண் பெண் உடலுறவைப் படம் பிடித்துக்காட்டுவது; காமத்துப்பால் ஆண்-பெண் உள்ள உறவுகளை நுட்பமாகக் காட்டுவது.காமசூத்திரம் எல்லை மீறிய காம உணர்வு கொண்டோர் உடல் தினவைத் தீர்த்துக் கொள்ள வழி சொல்வது; காமத்துப்பால் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அவா, ஏக்கம், ஏமாற்றம், களிப்பு ஆகியவைபற்றிப் பேசுவது. ஒன்று உடலுறவுபற்றிய அரைகுறை அறிவியல் விளக்கம்; இன்னொன்று உளவியல் ஆய்வு. முன்னது வெறும் பட்டியல்; பின்னது இலக்கியம்; முன்னது உடல் வெறியைத் தூண்டும் நீலப்படம்(Blue film); பின்னது முருகியல் இன்பம் தரும் காவியம். முன்னதற்குக் காமம் ஒரு விலங்குணர்வு; பின்னதற்குக் காமம் மலரினும் மெல்லிய இறையின்பம்.  இவ்வாறு அழகான, சரியான ஒப்புமையைப் பேரா.ப.ம.நா. கூறுகிறார்.

ஆகப் பாலுறவுகேட்டினை ஒழுக்கமாகக் கூறும் காமசூத்திரம் தமிழ் அறநூல்களுக்கு அருகில் வைக்கும் தகுதி உடையதன்று.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 49/69 )



Saturday, May 15, 2021

காளிதாசன் படைப்புகள் தமிழிலக்கியம் தழுவியனவே!- ப. மருதநாயகம்

 அகரமுதல


 (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 46/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

47/69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

மகாகவி காளிதாசன் படைப்புகள் குறித்துப் பதினாறாம் கட்டுரை கூறுகிறது. காளிதாசனின் ஏழுபடைப்புகள்பற்றிக் குறிப்பிட்டு அவற்றில் இடம் பெறும் காட்சிகள், உரையாடல்கள் முதலியவற்றைப் பேரா.ப.ம.நா. விளக்குகிறார். இவற்றின் சிறப்புகளைப் பாராட்டத் தயங்கவில்லை. காளிதாசனின் கவிதைநடைபோன்று உரைநடையும் சிறப்பானது. அதே நேரம், சங்க இலக்கிய உவமைகள், அணிநலன்கள் முதலிவற்றின் தாக்கத்தை அவரது படைப்புகளில் மிகுதியாகப் பார்க்கலாம். இருப்பினும் சமற்கிருத நூல்களி்ல் காணப்பெறும் இழிகாமச் சிலேடைகள் காளிதாசன் படைப்புகளிலும் உள்ளன. அணிகளைப்பற்றிய புரிதல் காளிதாசனுக்குச் சங்க இலக்கியங்களிலிருந்து கிடைத்தது என்பதையும் மேலைச் சமற்கிருத அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சான்றோர் கவிதையும் காளிதாசனும் என ஒப்பீட்டுக் கட்டுரையைப் பதினேழாவதாக அளிக்கிறார்.

இங்கே சான்றோர் எனக் குறிப்பது சங்கச்சான்றோரையே. சங்கத்தமிழுக்கே உரிய இறைச்சி, உள்ளுறை போன்றவற்றிலிருந்தே அவற்றிற்குப் பத்து நூற்றாண்டுகளுக்குப் பின் பேசப்பெற்ற தொனிக்கோட்பாடு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் சியார்சு ஆர்த்து; காளிதாசனின் படைப்புகளில் சங்கச் சான்றோர்களின் செல்வாக்கு தெளிவாகத் தென்படுகின்றதென்றும் அவர் தக்க சான்றுகளுடன் அறிவித்தார்; வட இலக்கியங்களில் காணப்பெறும் ” கவி சமயங்கள் “சங்க இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டவை என்பதற்கு ஏராளமான சான்றுகளை அறிஞர் சீக்ககுஃபிரீட்டு இலியன்ஆர்த்து தந்துள்ளார்; உருசிய அறிஞர் துபையான்கி, காளிதாசனுக்கு ஒரு நூற்றாண்டு காலம் முந்திய பாசனின் சமற்கிருத நாடகங்களிலும் சங்க இலக்கியத் தாக்கம் இருக்கிறதென்று தெரிவிக்கின்றனர். சமற்கிருத நூலான பாகவதத்தில் நமது முல்லைத்திணைப் பாடல்களின் அழுத்தமான தடம் பதிந்துள்ளது  என்றும் மேலை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்; பேரா.கே.கிருட்டிணமூர்த்தி தம் காளிதாசன் என்னும் ஆங்கில நூலில், மேலையோர் கூறுவதுபோன்று சங்க இலக்கியத் தாக்கம் காளிதாசனின் படைப்புகளில் உள்ளது; சங்க இலக்கிய மரபிற்கு அவன் கடன்பட்டிருக்கிறான் என்பது பெருமைக்குரியது என்கிறார்.

திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, பொருநராற்றுப்படை முதலியவற்றில் இடம் பெற்ற சங்கப்பாடல்களை எடுத்துக்கூறி அவற்றின் கருத்துகள், உவமைகள், உத்திகள் முதலானவை காளிதாசனின் பாடல்களில் உள்ளமையை விளக்கியுள்ளார்.

“சங்க இலக்கியங்களின் அருமையை உணர்ந்து அவற்றை உரிய முறையில் பயன்படுத்திக் கொண்ட காளிதாசன் அவனுடைய படைப்புகளைத் தமிழ்ச் சான்றோர் கவிதைகளின் அப்பட்டமான நகல்களாகத் தரவில்லை. தனது தனி முத்திரையைப் பதித்தே அவற்றை வழங்கினான். பெருங் கவிஞனாதலால் இதனைச் செய்வதில் அவன் அரிய வெற்றி பெற்றான். பின்னால் பிற இந்தியமொழிகளில் எழுதிய கவிஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகவும் எடுத்துக்காட்டாகவும் தன் பெயரை நிலைநாட்டினான்” எனப்  பேரா.ப.ம.நா. அவன் சிறப்புகளைக் கூறுகிறார். இதன் மூலம் நிறை குறைகளை நடுநிலையுடன் கூறும் ஆராய்வாளராக அவர் திகழ்கிறார்.

காளிதாசனின் பாடல்களில் சிலம்பின் ஒலி கேட்பதைப் பதினெட்டாம் கட்டுரை விளக்குகிறது.

காளிதாசன் சில உத்திகளுக்கும் உவமைகளுக்கும் சங்கக்கவிஞர்களுக்குக் கடன்பட்டதாக மேலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அவன் சங்கப்பாடல்களை ஆழ்ந்து பயின்று துய்த்து, அவற்றிலிருந்து இலக்கிய வகைகளையும் உருவாக்கியுள்ளான்; அத்துடன், சிலப்பதிகாரச் செல்வாக்கையும் அவன் பாடல்களில் பார்க்கலாம் என்கிறார் பேரா.ப.ம.நா.

சிலப்பதிகாரத்திலிருந்து (இ)ருதுசம்ஃகாரம் என்னும் ஆறுபருவ வருணனையைப்பற்றிய சிற்றிலக்கிய வகையையும் அகப்புறத்தூதுப்பாடல்களால் கவரப்பட்டு மேகதூதம் எனும் முதல் தூது இலக்கியத்தையும் சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் உள்ள விறலி, பாடினி, சூரர மகளிர் ஆகியோர்பற்றிய அடிமுதல் முடிவரையிலான வருணனையின் தாக்கத்தால் பார்வதியின் ‘நக சிகாந்த’ வருணனையையும் திருமுருகாற்றுப்படையும் பரிபாடல்களும் அளித்த உந்துதலால் முருகன் பெருமை பேசும் குமாரசம்பவம் எனும் முதல் இந்தியக் காப்பியத்தையும் காளிதாசன் தந்துள்ளான்.எனப் பேரா.ப.ம.நா. சமற்கிருத இலக்கியங்களுக்கு மூலமாகத் தமிழ் இலக்கியங்கள் உள்ள சிறப்பை எடுத்துரைக்கிறார்.

அஃறிணைப் பொருள்களும்,”சொல்லுந போலவும் கேட்குந போலவும்” படைக்கப்படலாம் என்கிறார் தொல்காப்பியர். சங்கச்சான்றோரும் இளங்கோ அடிகளும் இதனைப் பின்பற்றுகின்றனர். இவர்களே காளிதாசனின் தூது காவியத்திற்கு முன்னோடிகள் என்பது தெளிவு.

பேராசிரியர் கே.கிருட்டிணமூர்த்தி, பேராசிரியர் சியார்சு ஆர்த்து ஆகியோர் குறிப்பிடும் காளிதாசன் படைப்புகளில் காணப்பெறும் தமிழ்ச் செல்வாக்கை விவரிப்பதுடன் தாமும் அத்தகைய இடங்களை விவரிக்கிறார்.

சான்றுக்கு ஒன்று :

சிலப்பதிகாரத்தில்

மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்

கருங்கயல் கண்விழித் தொல்கி நடந்தாய் வாழி காவேரி (25)

என்கிறார் இளங்கோ அடிகள்.

காளிதாசன், மேகதூதத்தில்(30)

நிருவிந்தியா என்னும் ஆறு பூக்களால் ஆகிய ஆடையை இடையில் அணிந்து நீர்க்குமிழிகளாகிய உந்திச்சுழி தோன்ற, நீர்ப்பறவைகள் தன் அலைகளோடு விளையாட வளைந்து வளைந்து தடுமாறி நடந்து செல்லும் என்கிறார்.

இதுபோன்று பல்வேறு பாடல் வரிகள், தொடர் அமைப்புகள், சிறுபொழுது பெரும்பொழுது வரிசைகள் எனப் பல சான்றுகளை அளித்துக் காளிதாசனின் சிலம்புக்காதலைத் தெரிவிக்கிறார்.

சாகுந்தலத்தில் சங்க இலக்கியச் செல்வாக்கு குறித்துப் பத்தொன்பதாவது கட்டுரை கூறுகிறது.

காளிதாசனின் பிற இலக்கியப்படைப்புகள் போலவே அபிநவசாகுந்தலமும் சங்க இலக்கியச் செல்வாக்கால் பொலிவு பெற்றது. துசுயந்தனும் சாகுந்தலையும் காதல் வயப்பட்டு உடலுறவு கொள்ளுதல் காந்தருவ விவாகம் அல்ல என மறுக்கிறார்.சமற்கிருத நூலார் கூறும் காந்தருவ மணமும் தமிழின் களவு மணமும் வெவ்வேறு என்பதைப் பலவாறாக விளக்குகிறார்.காமசூத்திரம் விளக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விவாக வகைகள் யாவுமே களவுமணத்தோடு எவ்வகை ஒப்புமையும் அற்றவை. இவற்றுக்கும் குறிஞ்சிப்பாட்டின் களவு மணத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் தெளிவாக்குகிறார்.

சகுந்தலை மன்னனுக்கு எழுதும் மடல் சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதும் மடலை ஒத்துள்ளது. துசுயந்தனின் கூற்றாக வரும் காளிதாசன் பாடல் மக்கட்பேறுபற்றிய சமற்கிருத நூல் மரபிற்கு மாறானது; தமிழ் மரபைப்பின்பற்றியது.

நூலில் ஆங்காங்கே சமற்கிருத நூல்மரபை மீறியுள்ள காளிதாசன் அங்கெல்லாம் தமிழ் மரபைப் பின்பற்றியுள்ளான்.தமிழ் மரபைச் சங்க இலக்கிய மரபிலிருந்தே எடுத்துள்ளதால் நூ்ல் முழுவதும் சங்க இலக்கியச் செல்வாக்கைக் காண முடிகிறது.

களவு மணமும் கந்தருவ மணமும் குறித்தது இருபதாம் கட்டுரை.

கபிலரின் குறிஞ்சிப்பாட்டிற்கு நச்சினார் தரும் குறிப்பு, “ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது” என்பதாகும்.அறிஞர்கள் தமிழ் அறிவித்தல் என்பதற்கு அகப்பொருள் இலக்கணம், களவொழுக்கம்பற்றி அறிவித்தல் என்று பொருளுரைப்பர்.களவுமணம் வடவரின் மற்றைய ஏழு மணங்களிலிருந்து மட்டுமல்லாமல் கந்தருவமணத்திலிருந்தும்  வேறுபட்டது என்பதைக் கபிலருடைய குறிஞ்சிப்பாட்டு தெளிவாக்குகிறது. மணம்செய்தலிலும் வருணாசிரம தருமத்தை மனுநூல் வலியுறுத்தும். வருண அடிப்படையிலானதிருமணம் குறித்து மனுநூல் கூறுகிது. அறவுணர்வு சற்றுமில்லாத பண்பாடற்ற பகுத்தறிவுக்கொவ்வாத மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலான விதிகளையெல்லாம் மனுநூல் அடுக்கிக் கொண்டே போகிறது.

தமிழர் களவு மணத்திற்கு அளித்திருந்த உயர்வின் சிறப்பு கருதி கந்தருவ மணத்தைக் களவு மணத்தை ஒத்தது என்று சமற்கிருத நூலார் கூறத் தொடங்கினர்.

வடவரின் எட்டுத்திருமண முறைகளில் கந்தருவ மணம் நீங்கலான பிறவற்றில் பெண்ணின் விருப்பத்திற்கு இடமில்லை.  பெண்விரும் பி ஆடவரை மணக்கும் சுயம்வரமுறைபற்றி, பத்துமபுராணம் போன்ற சமற்கிருதப் புராணங்களும் இரகுவம்சம்போன்ற சமற்கிருதக் காப்பியங்களும் கூறுகின்றன. ஆனால், மனுநூல் முதலான  சமற்கிருத சுமிருதிகளோ காமசூத்திரமோ குறிப்பிடவில்லை. உயர்ந்த மணமுறை என்று சுட்டப்படும் பிரமத்திற்கு ஆணின்அகவை 48 என்றும் பெண்ணின் அகவை பன்னிரண்டிற்கு உட்பட்டதாகவும் பெண் பூப்பு அடையாதவளாகவும் இருக்கவேண்டுமென்னும் விதிகள் பண்பற்றவை, கொடியவை. களவுமணம்பற்றிப்பேசும் குறிஞ்சிப்பாட்டு விளக்கும் குறிப்புகள் மறையோர் காட்டும் மன்றல் எட்டனுள் எதிலும் இல்லை.

இவ்வாறு பேரா.ப.ம.நா., களவு மணத்தின் சிறப்பையும் கந்தருவமணத்தின் குறைபாடுகளையும் ஒப்பிட்டு இக்கட்டுரையில் விளக்குகிறார்.மேலும், தமிழ் இலக்கிய மரபு பொதுவாக இயற்கைக்கும் குறிப்பாகப் பூக்களுக்கும் அளித்துள்ள மிகப்பெரிய இடம் குறித்தும் விளக்குகிறார்.சமற்கிருத நூல்களில் இடம் பெற்றுள்ள பூக்களின் பட்டியல்களையும் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் கூறும் 99 மலர்களின் பட்டியலையும் ஒப்பிட்டுத் தமிழ் இலக்கியச் சிறப்பைத் தெளிவாக்குகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 48/69)



Friday, May 14, 2021

சமற்கிருதக் குப்பை நூல்கள் எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகும்?

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 45/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

46/69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

 வடமொழி நாடகங்களும் காப்பியங்களும் குறித்து பன்னிரண்டாம் கட்டுரை விளக்குகிறது.

அலெக்குசாண்டர் வருகைக்குப்பின் ஆட்சிசெய்த கிரேக்கத் தளபதிகள் தங்களுடன் நாடகக்குழுக்களை அழைத்து வந்திருந்தனர். அவர்கள் மூலம்தான் சமற்கிருதப்படைப்பாளிகள் நாடகம்பற்றி அறியலாயினர். புதிய கிரேக்க இன்பியல் நாடகக் கூறுகளே சமற்கிருத நாடகங்களுக்கு அடிப்படையாக அமைந்தன.

நாடகமே சமற்கிருதத்தில் தோன்றிய முதல் செவ்வியல் இலக்கிய வகையாகும்; அதன் பிறகே கவிதை பிறந்தது; மேகதூதத்திற்கு மூலம் சங்க இலக்கியத் தூதுப்பாடல்களே; (இ)ருதுசம்ஃகாரத்திற்குச் சிலப்பதிகார ஆறு பருவ வருணனையே மூலமாகும், கீத கோவிந்தம் கவித்துவம் அற்றதெனச் சமற்கிருத இலக்கிய வரலாறு கூறுகிறது; பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தோன்றிய இலக்கியங்கள் படிப்போரை வியப்பில் ஆழ்த்தும் தவறான கவிதை உத்திகைள ஏராளமாகக் கையாள்வன; முருகியல் இன்பம் தரவில்லை;பாரவிக்கும் பாணருக்கும் பின்வந்தவர்கள் யாவரும் மூன்றாந்தர நான்காந்தரக்  கவிஞர்களாகக் கருதத்தக்கவர்களே இவ்வாறு பல சமற்கிருத அறிஞர்களின் ஆய்வு முடிவுகளையும் இக்கட்டுரையில் தெரிவிக்கிறார்.

சமற்கிருதத்தில் பல்வேறு கவிதையியல் கோட்பாடுகள் இருக்கின்றன என ஆர்ப்பரிக்கும் சமற்கிருத ஆர்வலர்கள் தொல்காப்பியரின் செய்யுளியலைப்போல் ஒரு முழுக் கவிதையைத் தெளிவாக வரையறை செய்யும் அணுகுமுறை சமற்கிருத மொழியில் இல்லை என்று புரிந்து கொள்ளுதல் நல்லது. சமற்கிருத நூலார் கற்பித்த கோட்பாடுகள் நன்மையைவிடத் தீமையையே மிகுதியாகச் செய்தன என்பதும் சமற்கிருத இலக்கிய வரலாற்றறிஞர்கள் கண்டுரைக்கும் உண்மையாகும் என்று பேரா.ப.ம.நா. ஆராய்ச்சி முடிவாக இதில் தெரிவிக்கிறார்.

சமற்கிருதக் கவிஞர்கள் கையாண்ட கலைநலம் அற்ற கூறுகளும் உத்திகளும் அவர்களுடைய இலக்கியங்களைப் பாழ்படுத்தின. காளிதாசனின் இரகுவம்சமும் இதற்கு விதிவிலக்கல்ல.  இராவணவதம் படைத்த பட்டி(Bhatti), கவிதைகள் படைத்த பாரவி(Bharavi), சுபந்து(Subandhu), மாகா(Magha), சிரீஅருசா(Sriharsa) ஆகியோர், தரமான இலக்கியங்கள் படைப்பதில் தோல்வி அடைந்தனர். இவ்வாறு பெரும்பாலான மக்கள் வாழ்வோடு தொடர்பற்றுப்போய்,மனித வாழ்க்கையின் அரிய பகுதிகளைப் புறக்கணித்துக் குப்பை இலக்கியங்களை அளவின்றிக் குவித்தனர்.

சமற்கிருதக் குப்பை நூல்களை எவ்வாறு செவ்வியல் இலக்கியங்களாகக் கூற முடியும்?

 பதின்மூன்றாவது கட்டுரை வடமொழி நாடகங்கள்: விபுலானந்தர் விளக்கம் என்பதாகும்.

தசரூபகம் என்னும் சமற்கிருத நூல், பத்துவகை நாடகங்கள்பற்றித் தரும் விளக்கங்களை விபுலானந்தர் ஒரு கட்டுரையில் எடுத்துரைக்கிறார். முஞ்சராசனது அரசவை வித்துவானாகிய தனஞ்சயன் என்னும் சமற்கிருதப்புலவரால் இயற்றப்பட்டது தசரூபகம்.

சமற்கிருத நாடகங்களில் எல்லாப் பாத்திரங்களும் சமற்கிருதத்தில் பேசுதற்குத் தகுதியுடையன அல்ல என்று சமற்கிருத நூலார் கருதினர். கலைமகள் தமிழை நாவில் நடமாடச்செய்வதாகக் கம்பர், ஒட்டக்கூத்தர் முதலான புலவர்கள் சிறப்பிடம் தருகின்றனர்.  ஆனால், சமற்கிருத நாடகங்களில் கலைமகள் தன் கணவனான பிரம்மனிடமும் சமற்கிருதம் தெரியாததால் பிராகிருத மொழியில்தான் பேசுவாளாம். ஆகக் கல்விக்கடவுளுக்கே சமற்கிருதம் தெரியவில்லை என்றால் அது மக்கள் மொழியாக விளங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். சமற்கிருத நாடகங்களில் பரத்தையருக்கே முதலிடம் என்பதை விபுலானந்தர் விளக்கியுள்ளார்.

ஒழுக்கத்தை வலியுறுத்தாத நூல்கள் எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகும்?

சூத்திரகரின் மூன்று நாடகங்களில் ஒன்று பத்தும பிராபகர்த்தகா(Padmaprabhartaka). குமுகாயத்தில் பல நிலைகளில்  உள்ளவர்கள் பரத்தையரோடு தொடர்பு கொண்டிருப்பதை  இழிகாம(ஆபாச) உரையாடல்களில் சொல்லும் நாடகம் இது. இதனால் இதனைத் தரம் வாய்ந்த இலக்கிய வரிசையில் வைக்க முடியாது என்கிறார். இரண்டாம் நாடகம் ‘வீணா வாசவதத்தா’(Veena vasavadatta). நாடகத்தின் கதையை விளக்கும் அவர், இத்தகைய புனைவியல் கதைகளை நாடகங்களில் தரும் யாரும் திருத்தக்கத் தேவரின் சிந்தாமணியை ஒத்த படைப்பைத் தரவில்லை. பெருங்கதையை நெருங்கும் தரமும் அவற்றில் இல்லை என்கிறார்.

மூன்றாவது ‘மிருச்சகடிகம்’(Mrccakatika) என்னும் நாடகம். நாடகத்தில் கூறப்படும் குமுகாய, அரசியல் சிக்கல்கள் முழுக்க முழுக்க மக்களின் முயற்சிகளால் தீர்க்கப்படுகின்றன; அவரவர் நல்ல அல்லது தீய செயல்களுக்கு அவரவர்களே பொறுப்பாக்கப் படுகின்றனர்; மனித முயற்சிகளே வெற்றிக்குக் காரணங்கள் எனப்படுகின்றன; கதை நிகழ்ந்த காலத்து மண்ணின் மணம் வீசுகிறது; இவ்வாறு இந்நாடகத்தின் சிறப்புக்கூறுகளைச் சிறப்பாக விளக்குகிறார். இருப்பினும் சூத்திரகரின் மிருச்சகடிகம், இலக்கியத் தரத்தில்  சிலப்பதிகாரத்தை நெருங்கமுடியாது என்பதை அதைப் படிப்பவர் உணரலாம்.

நிறைவான தரமான நாடகங்களாக இல்லாத பொழுது இவை எங்ஙனம் செவ்வியல் இலக்கியங்களாகும்?

பாசனின் நாடகங்களும் பழந்தமிழ்ப் பனுவல்களும் குறித்துப் பதினைந்தாம் கட்டுரை விளக்குகிறது.

பாசகவி என்னும் சமற்கிருத அறிஞரின் நாடகங்கள் பதின்மூன்று. சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் ஈடுபாடு கொண்டமையால் அவற்றின் தாக்கம் இவரது நூல்களில் உள்ளன. தமிழ்க்கடவுளான முருகனைப்போற்றி வாழ்த்தும் பாடல்களும் முருகனைப்பற்றிய செய்திகளும் இவரது படைப்புகளில் காணப்படுகின்றன. தமிழ்க்களவு மணத்தில் வரும் அறத்தொடு நிற்றலை இவரது படைப்புகளில் காணலாம்.

“அவளுடைய கண்கள் எனக்கு உயிர்நீக்கும் நோயைத் தந்தன. (அவள் சந்திப்பு குறித்து) நீங்கள் கூறும் இச்செய்தி, அந்நோய் நீக்கும் மருந்தாக அமைகிறது” எனத் தலைவன் கூறுவதாக (பக்.74) நாடகத்தில் இடம்பெறும் நிகழ்வு உள்ளது.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கு ஒன்றுஅந்நோய் மருந்து(திருக்குறள் 1091)

என்று திருவள்ளுவர் தெரிவிப்பதன் மொழிபெயர்ப்பே இது.

இதுபோல் திருக்குறள் 55, 56, 375, 377, 380, 388, 422, 567, 578, 581, 599, 619, 620, 1329, குறுந்தொகை 142, புறநானூறு 6, 13, 17, 24, 27,35, 42, 47, 75, 89, 93, 118, 138, 185, 202, 279, 315, 341, 359, 369,  மலைபடுகடாம் அடி 364, முதலான சங்கப்பாடல்களையும் அவற்றின் தழுவலாக அல்லது எடுத்தாண்டு எழுதப்பட்ட பாசனின் வரிகளையும் ஒப்பிட்டுத் தமிழ்ப்பனுவ்களின் தாக்கம் பாசனின் நாடகங்களில் இருப்பதை நயம்பட விளக்கியுள்ளார் பேரா.ப.ம.நா. மேனாட்டுக் கல்வியாளர்களில் சிலரும் பாசனின் நாடகங்களில் சங்க இலக்கியச் செல்வாக்கு உள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர். இது மகிழ்ச்சியான நல்ல செய்திதான். ஆனால், தமிழ் உட்பகைவர்கள், சமற்கிருதத்தி லிருந்துதான் தமிழ்ப்படைப்புகள் உருவானதுபோல் பிதற்றுகின்றனரே!

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 47/69 )



Thursday, May 13, 2021

சமற்கிருதப் பேராசிரியரின் மதிப்பீட்டில் சமற்கிருதம் செம்மொழியல்ல!

 அகரமுதல

     14 May 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 44/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

45/69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

வடமொழி இலக்கியம்: ஒரு வடமொழிப்பேராசிரியரின் மதிப்பீடு என்பது பத்தாவது கட்டுரையாகும்.

தார்வார் பல்கலைக்கழகத்தில் சமற்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர் கே.கிருட்டிணமூர்த்தி. தொனி, வக்கிரோத்தி, இரசம் போன்ற கோட்பாடுகள்பற்றிய சமற்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; காளிதாசன் படைப்புகள்பற்றி ஆங்கிலத்தில் நூல் எழுதியவர்; சமற்கிருத இலக்கியம்(Sanskrit Literature) என்னும் கட்டுரை எழுதியவர். சமற்கிருதம் பற்றிய அவரின் ஆய்வுரைகளையே இக்கட்டுரையில் நமக்குப் பேரா.ப.ம.நா.தருகிறார். அவை வருமாறு:

வேதமொழிக்கும் பாணிணி வகுத்துள்ள சமற்கிருத மொழிக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. வேத மொழியானது அவெசுத்தன்(Avestan) மொழிக்கு மிக நெருக்கமானது.

இருக்கு வேதம் முழுமையும் பேராசை கொண்ட புரோகிதர்களின் தந்திரவேலை. அதில் உள்ள சில அழகிய வரிகள், அப்புரோகிதர்கள் மது, மாதர்பால் கொண்டிருந்த இச்சையையும் சூதாட்ட ஈடுபாட்டையும் காட்டுபவை.

யசுர்வேதமும் சாம வேதமும் இலக்கியத்தரம் உடையவை அல்ல.

அதர்வேதத்தை வேதமாகக் கொள்ள முதலில் எதிர்ப்பு இருந்தது.

வேள்விச்சடங்குகள்பற்றிய பிராமணங்கள் என்னும் நூல்கள் மிகுதியாக உள்ளன. அவை இலக்கியம் என்ற முறையில் சுவையற்றவை; சமய நூல்கள் என்ற முறையில் பொருளற்றவை; சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கைகள் கொண்டவை.

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வெவ்வேறு காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்கள் உள்ளன.

மகாபாரதத்தின் இலக்கியச் சிறப்புகள் மிகக் குறைவானவை.

மாககவியின் ‘சிசுபாலவதம்’, பட்டியின் ‘இராவணவதம்’, இரக்குனாகரின் ‘அரவிசயம்’, சிரீஅருசனி்ன் ‘மைசதிய சரிதம்’ ஆகிய நூல்களில் எவ்விதமான புதுமையோ சிறப்போ ஏதுமில்லை. இது, காளிதாசனுக்குப் பின் எழுதப்பெற்ற நூற்றுக்கணக்கான நூல்களுக்கும் பொருந்தும். அவையெல்லாம் அடிமைத்தனமான தழுவல்களே! அவற்றுள் கையாளப் பெற்றுள்ள மொழி செயற்கையானது; கற்பனை உயர்வுநவிற்சியானது; காட்சியுருக்கள் எளிதில் புரியாதவை; கல்வியாளர்களுக்கு அதிர்ச்சி யூட்டும் நோக்குடன் எழுதப்பெற்றவை.

சமற்கிருத நாடகங்களில் உயர்நிலையில் உள்ள பெண்கள் உட்பட எல்லாப் பெண்களும் கீழ்நிலையில் உள்ள எல்லாப் பாத்திரங்களும் பலவகையான பிராகிருதக் கிளைமொழிகளிலேயே பேசுகின்றன; தலைமைப் பாத்திரம் மட்டுமே சமற்கிருதத்தில் பேசும் உரிமை பெற்றுள்ளது.

சமற்கிருத நூல்கள் பல இழிகாமம்(ஆபாசம்) நிறைந்தவை. அம்மொழியில் மிகச் சிறந்த  காவியம் என்று சொல்லத்தக்கது ஏதும் இல்லை என்பது வருதத்திற்குரியது.

பத்திப்பாடல்கள் எல்லாம் கவிதைத்தரம் உடையவை அல்ல.

வடநூலார் போற்றும் சமுதாயம் என்னும் தலைப்பில் 11 ஆவது கட்டுரை அமைந்துள்ளது.

பிராமணர்களை மட்டும் உயர்த்திப் பிற குலத்தினரையும் எக்குலமாயினும் பெண்களை இழிவாகக்கூறி இழிவாக நடத்த அறிவுறுத்துவனவே சமற்கிருத நூல்கள் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறார். பெண்களைப் புகழ்ந்துபேசுவதுபோல் ஆங்காங்கே மனுவில் காணப்பட்டாலும் பெண்களுக்குக் கல்வி யுரிமை யில்லை; சொத்துரிமை யில்லை; எவ்வளவு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டாலும் சோர்வில்லாமல் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும்; என்பனபோல் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலேயே உள்ளன. கலப்புமணத்தைக் கண்டிக்கும் கீதை பெண்களே இக்கொடிய பாவத்திற்குக் காரணம் என்று சொல்லி அவர்களைக் குற்றவாளியாக்குகிறது.

பிராமணர்கள் எல்லா உரிமைகளும் பெற்றுத் தலைமை நிலை அளிக்கப்பட்டிருந்தனர். எக்குற்றம் செய்தாலு்ம் பிராமணனுக்குக் கொலைத்தண்டனை கிடையாது. அரசன் தனது செல்வம் முழுவதையும் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். வில்லை மட்டும் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும். சமற்கிருத நூலார் போற்றியது மூடநம்பிக்கைகள் மலிந்த கீழான மன்பதையையே! சமற்கிருத நூல்களில் காதல் எனச் சொல்லப்படுவன எல்லாம் கீழான காமமே. பரத்தமைத் தொழிலே எங்கும் பரவியிருந்தது. கி.மு. மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளிலேயே சமற்கிருத இலக்கியங்களில் பரத்தையருக்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டது.

“வடஇந்திய மன்பதையிலும் வடமொழி இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தோர் பழந்தமிழ் மன்பதையிலும் சங்க இலக்கியங்களிலும்  தமிழ்ப் பெண்கள்நிலை எவ்வளவு உயர்ந்து காணப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்”  என்கிறார் பேரா.ப.ம.நா.

இலக்கியம் படைத்தோர் இத்தகைய சூழலில் தரக்குறைவான படைப்புகளைத் தயக்கமின்றித் தந்தனர். மன்பதைக் கேடுகளைச் சாடி அவற்றைத் திருத்த அவர்கள் முயலவில்லை.

 உண்மையான கவிதை எதுவென்று புரிந்து கொள்ளாலேயே ஏதோ எழுதிக் குவித்தனர்.

இவற்றை யெல்லாம் தொகுத்துத் தரும் பேரா.ப.ம.நா., “உண்மைநிலை இவ்வாறிருக்க வடநூலார் தங்களுடைய மொழியிலேயே அளவிலும் தரத்திலும் மேம்பட்ட இலக்கியங்கள் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வது குறையவில்லை” என்கிறார். மன்பதைக்குக் கேட்டை விளைவிக்கும் சமற்கிருத நூல்கள் எங்ஙனம் செவ்வியல் இலக்கியங்களாகும்?

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 46/69)