(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 46/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

47/69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

மகாகவி காளிதாசன் படைப்புகள் குறித்துப் பதினாறாம் கட்டுரை கூறுகிறது. காளிதாசனின் ஏழுபடைப்புகள்பற்றிக் குறிப்பிட்டு அவற்றில் இடம் பெறும் காட்சிகள், உரையாடல்கள் முதலியவற்றைப் பேரா.ப.ம.நா. விளக்குகிறார். இவற்றின் சிறப்புகளைப் பாராட்டத் தயங்கவில்லை. காளிதாசனின் கவிதைநடைபோன்று உரைநடையும் சிறப்பானது. அதே நேரம், சங்க இலக்கிய உவமைகள், அணிநலன்கள் முதலிவற்றின் தாக்கத்தை அவரது படைப்புகளில் மிகுதியாகப் பார்க்கலாம். இருப்பினும் சமற்கிருத நூல்களி்ல் காணப்பெறும் இழிகாமச் சிலேடைகள் காளிதாசன் படைப்புகளிலும் உள்ளன. அணிகளைப்பற்றிய புரிதல் காளிதாசனுக்குச் சங்க இலக்கியங்களிலிருந்து கிடைத்தது என்பதையும் மேலைச் சமற்கிருத அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சான்றோர் கவிதையும் காளிதாசனும் என ஒப்பீட்டுக் கட்டுரையைப் பதினேழாவதாக அளிக்கிறார்.

இங்கே சான்றோர் எனக் குறிப்பது சங்கச்சான்றோரையே. சங்கத்தமிழுக்கே உரிய இறைச்சி, உள்ளுறை போன்றவற்றிலிருந்தே அவற்றிற்குப் பத்து நூற்றாண்டுகளுக்குப் பின் பேசப்பெற்ற தொனிக்கோட்பாடு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் சியார்சு ஆர்த்து; காளிதாசனின் படைப்புகளில் சங்கச் சான்றோர்களின் செல்வாக்கு தெளிவாகத் தென்படுகின்றதென்றும் அவர் தக்க சான்றுகளுடன் அறிவித்தார்; வட இலக்கியங்களில் காணப்பெறும் ” கவி சமயங்கள் “சங்க இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டவை என்பதற்கு ஏராளமான சான்றுகளை அறிஞர் சீக்ககுஃபிரீட்டு இலியன்ஆர்த்து தந்துள்ளார்; உருசிய அறிஞர் துபையான்கி, காளிதாசனுக்கு ஒரு நூற்றாண்டு காலம் முந்திய பாசனின் சமற்கிருத நாடகங்களிலும் சங்க இலக்கியத் தாக்கம் இருக்கிறதென்று தெரிவிக்கின்றனர். சமற்கிருத நூலான பாகவதத்தில் நமது முல்லைத்திணைப் பாடல்களின் அழுத்தமான தடம் பதிந்துள்ளது  என்றும் மேலை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்; பேரா.கே.கிருட்டிணமூர்த்தி தம் காளிதாசன் என்னும் ஆங்கில நூலில், மேலையோர் கூறுவதுபோன்று சங்க இலக்கியத் தாக்கம் காளிதாசனின் படைப்புகளில் உள்ளது; சங்க இலக்கிய மரபிற்கு அவன் கடன்பட்டிருக்கிறான் என்பது பெருமைக்குரியது என்கிறார்.

திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, பொருநராற்றுப்படை முதலியவற்றில் இடம் பெற்ற சங்கப்பாடல்களை எடுத்துக்கூறி அவற்றின் கருத்துகள், உவமைகள், உத்திகள் முதலானவை காளிதாசனின் பாடல்களில் உள்ளமையை விளக்கியுள்ளார்.

“சங்க இலக்கியங்களின் அருமையை உணர்ந்து அவற்றை உரிய முறையில் பயன்படுத்திக் கொண்ட காளிதாசன் அவனுடைய படைப்புகளைத் தமிழ்ச் சான்றோர் கவிதைகளின் அப்பட்டமான நகல்களாகத் தரவில்லை. தனது தனி முத்திரையைப் பதித்தே அவற்றை வழங்கினான். பெருங் கவிஞனாதலால் இதனைச் செய்வதில் அவன் அரிய வெற்றி பெற்றான். பின்னால் பிற இந்தியமொழிகளில் எழுதிய கவிஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகவும் எடுத்துக்காட்டாகவும் தன் பெயரை நிலைநாட்டினான்” எனப்  பேரா.ப.ம.நா. அவன் சிறப்புகளைக் கூறுகிறார். இதன் மூலம் நிறை குறைகளை நடுநிலையுடன் கூறும் ஆராய்வாளராக அவர் திகழ்கிறார்.

காளிதாசனின் பாடல்களில் சிலம்பின் ஒலி கேட்பதைப் பதினெட்டாம் கட்டுரை விளக்குகிறது.

காளிதாசன் சில உத்திகளுக்கும் உவமைகளுக்கும் சங்கக்கவிஞர்களுக்குக் கடன்பட்டதாக மேலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அவன் சங்கப்பாடல்களை ஆழ்ந்து பயின்று துய்த்து, அவற்றிலிருந்து இலக்கிய வகைகளையும் உருவாக்கியுள்ளான்; அத்துடன், சிலப்பதிகாரச் செல்வாக்கையும் அவன் பாடல்களில் பார்க்கலாம் என்கிறார் பேரா.ப.ம.நா.

சிலப்பதிகாரத்திலிருந்து (இ)ருதுசம்ஃகாரம் என்னும் ஆறுபருவ வருணனையைப்பற்றிய சிற்றிலக்கிய வகையையும் அகப்புறத்தூதுப்பாடல்களால் கவரப்பட்டு மேகதூதம் எனும் முதல் தூது இலக்கியத்தையும் சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் உள்ள விறலி, பாடினி, சூரர மகளிர் ஆகியோர்பற்றிய அடிமுதல் முடிவரையிலான வருணனையின் தாக்கத்தால் பார்வதியின் ‘நக சிகாந்த’ வருணனையையும் திருமுருகாற்றுப்படையும் பரிபாடல்களும் அளித்த உந்துதலால் முருகன் பெருமை பேசும் குமாரசம்பவம் எனும் முதல் இந்தியக் காப்பியத்தையும் காளிதாசன் தந்துள்ளான்.எனப் பேரா.ப.ம.நா. சமற்கிருத இலக்கியங்களுக்கு மூலமாகத் தமிழ் இலக்கியங்கள் உள்ள சிறப்பை எடுத்துரைக்கிறார்.

அஃறிணைப் பொருள்களும்,”சொல்லுந போலவும் கேட்குந போலவும்” படைக்கப்படலாம் என்கிறார் தொல்காப்பியர். சங்கச்சான்றோரும் இளங்கோ அடிகளும் இதனைப் பின்பற்றுகின்றனர். இவர்களே காளிதாசனின் தூது காவியத்திற்கு முன்னோடிகள் என்பது தெளிவு.

பேராசிரியர் கே.கிருட்டிணமூர்த்தி, பேராசிரியர் சியார்சு ஆர்த்து ஆகியோர் குறிப்பிடும் காளிதாசன் படைப்புகளில் காணப்பெறும் தமிழ்ச் செல்வாக்கை விவரிப்பதுடன் தாமும் அத்தகைய இடங்களை விவரிக்கிறார்.

சான்றுக்கு ஒன்று :

சிலப்பதிகாரத்தில்

மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்

கருங்கயல் கண்விழித் தொல்கி நடந்தாய் வாழி காவேரி (25)

என்கிறார் இளங்கோ அடிகள்.

காளிதாசன், மேகதூதத்தில்(30)

நிருவிந்தியா என்னும் ஆறு பூக்களால் ஆகிய ஆடையை இடையில் அணிந்து நீர்க்குமிழிகளாகிய உந்திச்சுழி தோன்ற, நீர்ப்பறவைகள் தன் அலைகளோடு விளையாட வளைந்து வளைந்து தடுமாறி நடந்து செல்லும் என்கிறார்.

இதுபோன்று பல்வேறு பாடல் வரிகள், தொடர் அமைப்புகள், சிறுபொழுது பெரும்பொழுது வரிசைகள் எனப் பல சான்றுகளை அளித்துக் காளிதாசனின் சிலம்புக்காதலைத் தெரிவிக்கிறார்.

சாகுந்தலத்தில் சங்க இலக்கியச் செல்வாக்கு குறித்துப் பத்தொன்பதாவது கட்டுரை கூறுகிறது.

காளிதாசனின் பிற இலக்கியப்படைப்புகள் போலவே அபிநவசாகுந்தலமும் சங்க இலக்கியச் செல்வாக்கால் பொலிவு பெற்றது. துசுயந்தனும் சாகுந்தலையும் காதல் வயப்பட்டு உடலுறவு கொள்ளுதல் காந்தருவ விவாகம் அல்ல என மறுக்கிறார்.சமற்கிருத நூலார் கூறும் காந்தருவ மணமும் தமிழின் களவு மணமும் வெவ்வேறு என்பதைப் பலவாறாக விளக்குகிறார்.காமசூத்திரம் விளக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விவாக வகைகள் யாவுமே களவுமணத்தோடு எவ்வகை ஒப்புமையும் அற்றவை. இவற்றுக்கும் குறிஞ்சிப்பாட்டின் களவு மணத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் தெளிவாக்குகிறார்.

சகுந்தலை மன்னனுக்கு எழுதும் மடல் சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதும் மடலை ஒத்துள்ளது. துசுயந்தனின் கூற்றாக வரும் காளிதாசன் பாடல் மக்கட்பேறுபற்றிய சமற்கிருத நூல் மரபிற்கு மாறானது; தமிழ் மரபைப்பின்பற்றியது.

நூலில் ஆங்காங்கே சமற்கிருத நூல்மரபை மீறியுள்ள காளிதாசன் அங்கெல்லாம் தமிழ் மரபைப் பின்பற்றியுள்ளான்.தமிழ் மரபைச் சங்க இலக்கிய மரபிலிருந்தே எடுத்துள்ளதால் நூ்ல் முழுவதும் சங்க இலக்கியச் செல்வாக்கைக் காண முடிகிறது.

களவு மணமும் கந்தருவ மணமும் குறித்தது இருபதாம் கட்டுரை.

கபிலரின் குறிஞ்சிப்பாட்டிற்கு நச்சினார் தரும் குறிப்பு, “ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது” என்பதாகும்.அறிஞர்கள் தமிழ் அறிவித்தல் என்பதற்கு அகப்பொருள் இலக்கணம், களவொழுக்கம்பற்றி அறிவித்தல் என்று பொருளுரைப்பர்.களவுமணம் வடவரின் மற்றைய ஏழு மணங்களிலிருந்து மட்டுமல்லாமல் கந்தருவமணத்திலிருந்தும்  வேறுபட்டது என்பதைக் கபிலருடைய குறிஞ்சிப்பாட்டு தெளிவாக்குகிறது. மணம்செய்தலிலும் வருணாசிரம தருமத்தை மனுநூல் வலியுறுத்தும். வருண அடிப்படையிலானதிருமணம் குறித்து மனுநூல் கூறுகிது. அறவுணர்வு சற்றுமில்லாத பண்பாடற்ற பகுத்தறிவுக்கொவ்வாத மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலான விதிகளையெல்லாம் மனுநூல் அடுக்கிக் கொண்டே போகிறது.

தமிழர் களவு மணத்திற்கு அளித்திருந்த உயர்வின் சிறப்பு கருதி கந்தருவ மணத்தைக் களவு மணத்தை ஒத்தது என்று சமற்கிருத நூலார் கூறத் தொடங்கினர்.

வடவரின் எட்டுத்திருமண முறைகளில் கந்தருவ மணம் நீங்கலான பிறவற்றில் பெண்ணின் விருப்பத்திற்கு இடமில்லை.  பெண்விரும் பி ஆடவரை மணக்கும் சுயம்வரமுறைபற்றி, பத்துமபுராணம் போன்ற சமற்கிருதப் புராணங்களும் இரகுவம்சம்போன்ற சமற்கிருதக் காப்பியங்களும் கூறுகின்றன. ஆனால், மனுநூல் முதலான  சமற்கிருத சுமிருதிகளோ காமசூத்திரமோ குறிப்பிடவில்லை. உயர்ந்த மணமுறை என்று சுட்டப்படும் பிரமத்திற்கு ஆணின்அகவை 48 என்றும் பெண்ணின் அகவை பன்னிரண்டிற்கு உட்பட்டதாகவும் பெண் பூப்பு அடையாதவளாகவும் இருக்கவேண்டுமென்னும் விதிகள் பண்பற்றவை, கொடியவை. களவுமணம்பற்றிப்பேசும் குறிஞ்சிப்பாட்டு விளக்கும் குறிப்புகள் மறையோர் காட்டும் மன்றல் எட்டனுள் எதிலும் இல்லை.

இவ்வாறு பேரா.ப.ம.நா., களவு மணத்தின் சிறப்பையும் கந்தருவமணத்தின் குறைபாடுகளையும் ஒப்பிட்டு இக்கட்டுரையில் விளக்குகிறார்.மேலும், தமிழ் இலக்கிய மரபு பொதுவாக இயற்கைக்கும் குறிப்பாகப் பூக்களுக்கும் அளித்துள்ள மிகப்பெரிய இடம் குறித்தும் விளக்குகிறார்.சமற்கிருத நூல்களில் இடம் பெற்றுள்ள பூக்களின் பட்டியல்களையும் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் கூறும் 99 மலர்களின் பட்டியலையும் ஒப்பிட்டுத் தமிழ் இலக்கியச் சிறப்பைத் தெளிவாக்குகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 48/69)