Saturday, August 07, 2021

ஒளவையார்:4 : ந. சஞ்சீவி

 

அகரமுதல




(ஒளவையார்:3 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 13

2. ஒளவையார் (தொடர்ச்சி)

ஒளவையாரின் எண்ணம் நிறைவேறிவிட்டது. அதிகனது அஞ்சா மழவர் படை, ஆர்த்தெழுந்து காரியின் கடியரண்களையும் கடும்படையையும் கலக்கழியச் செய்தது. அரிமா அன்ன அதிகன் தலைமையில் வரிப் புலிகளெனப் பாய்ந்த மழவர் சேனைக்கு ஆற்றாது மான் கூட்டமாயின மலையமான் படைகள். அதிகமான் வீர முரசு கொட்டி, வாகை சூடி, வெற்றிக்கொடியை விண்ணுயரப் பிடித்தான்; அதனோடும் அமைந்தானில்லை அவன்; மலையமான் காரியின் கோவலூருக்குள் நுழைந்து அந்நகரையும் பாழாக்கினான். பொலிவு மிக்க அவ்வள்ளியோன், தலைநகரைப் பொலிவிழந்ததாக்கினான். இவ்வாறு அவன் மூவேந்தருக்கும் மொய்ம்பாய் நின்ற கோவலூரானை வென்ற திறம் புலவர் பாடுதற்கும் அரியதாய் விளங்கியது. முன்னர் ஒரு முறை மூண்டெழுந்த போரில் அதிகமான் அவன் முன்னோர் போல இரும்பனம் புடையலும், ஈகைவான் கழலும், பூவார் காவும், புனிற்றுப்புலால் நெடுவேலும், எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயமும் வழுவின்றிப் பெற்றிருந்தும், அமையாது செருவேட்டு, இமிழ் குரல் முரசார்த்து வந்த எழுவரோடும் முரணி, அவரை முறியடித்து வெற்றி கொண்ட பெருந்திறலும், அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் அழகுறப் பாடுவதற்கு அரிதாகவே விளங்கியது. அதிகமான் அன்று எழுவரை வென்று பெற்ற வெற்றியினைப் போலவே படை வலி சான்ற கோவலூரை எறிந்த அவன் அரிய திறத்தை நா வன்மை மிக்க பரணரே பாடியுள்ளார். ஆதலின்,

‘செருவேட்(டு)
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்(று) அமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்(கு) அரியை, இன்றும்
பரணன் பாடினன் மன்கொல் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி யேந்திய தோளே.’         (புறம், 99)

என இவ்வாறு கோவலூர் எறிந்தானை ஒளவையார் போற்றினார்.


இங்ஙனம் தன் வாழ்வில் இரு பெரு வெற்றிகளைப் பெற்றுப் புகழொடு விளங்கிய அதியர் கோமானது அரசியல் வானில் மீண்டும் போர் மேகங்கள் சூழலாயின. ஆனால், ஒளவையாரின் அருந்திறத்தால், அப்போர் மேகங்களின் நெருப்பு மழையினின்றும் தமிழகம் தப்பியது. அதிகமான் நாளில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டைச் சோழர் மரபினனாகிய தொண்டைமான் ஆண்டு வந்தான். கொடை வளமும் படை நலமும் மிக்கவனாய் விளங்கிய தொண்டைமானுக்கும் அதிகமானுக்குமிடையே பூசல் ஏற்பட்டது. அஞ்சியின் மீது படையெடுக்கத் தொண்டைமான் ஆவன புரிந்தான். ஒற்றர் வாயிலாகத் தொண்டைமான் செயல்களை அறிந்த அதிகமானும் மழவர் படையைச் சேரத் திரட்டிப் போர் முரசு கொட்டத் துடித்தான். ஆனால், போரின் கொடுமையையும் அதனால் தமிழகம் காலப்போக்கில் ஒற்றுமை சிதைந்து காணக் கூடிய ஒருபெருங்கேட்டையும் நண்குணர்ந்த ஒளவையார், எவ்வாற்றானும் அப் போன்ரத் தடுத்து நிறுத்தத் துணிந்தார். ‘அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை ஆகிய இன்றியமையா மூன்றிலும் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உயர்ந்திருந்த ஒளவையார், தாமே தொண்டைமானிடம் தூது செல்லவும் உறுதி கொண்டார். ஒளவையாரின் திருவுள்ளம் அறிந்த அதிகமானும் தன் அமர் வேட்கும் நெஞ்சை முயன்று அடக்கிக்கொண்டு அவர் கருத்துக்கு இசைந்தான். தொண்டை நாடு சென்றார் ஒளவையார். அருந்தமிழ்ப் புலவரை ஆர்வத்துடன் வரவேற்று அன் பொழுகப் போற்றினான் தொண்டையர் கோன். ஒளவையாரும் அவன் மனம் கொளும் வகையில் தம் உள்ளத்திருக்கும் கருத்துக்களை எடுத்துரைத்து, இன்பத் தமிழகத்தில் அமைதி எனும் அருள் ஆறு வற்றாது பாய்ந்து வளங்கொழிக்குமாறு செய்யத் தக்க தருணத்தை எதிர் நோக்கியிருந்தார். தொண்டையர் கோனும் தன் படைக்கலப் பெருமையையெல்லாம் ஒளவையாருக்குக் காட்டி அதிகனை அஞ்சச் செய்யக் கருதி ஒரு நாள் அவரைத் தன் படைக்கல இல்லத்திற்கு அழைத்துச் சென்று பளபளவென மின்னும் போர்க்கருவிகளின் பரப்பையெல்லாம் காட்டினான். கண்ணெதிரே மின்னும் படைக்கலங்களைக் கண்ட ஒளவையாரின் சிந்தனை விண்ணில் கருத்துக்கள் மின்னின. அவர் அறியாமை இருளில் ஆழ்ந்திருக்கும் தொண்டைமானுக்கு அவன் மனம் நோவா வண்ணம் அதிகனைப் பற்றிய உண்மைகளைக் கூறி அறிவொளி காட்ட விழைந்தார். “காஞ்சிக் காவல, காவல் மிக்க இக்கோயிலின் கண் உள்ள உன் படைகள் யாவும் அழகுற மயிற்பீலி அணியப்பெற்று, மாலையும் சூட்டப் பெற்றுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றன; திரண்ட வலிய காம்பும் அழகாகச் செய்யப்பட்டு, நெய் பூசப்பெற்று, ஒளியுடன் திகழ்கின்றன. ஆனால், எங்கள் அதியனின் படைக்கருவிகளோ, பகைவர்களைக் குத்திக் குத்தி, கங்கும் நுனியும் முறிந்து, பழுது பார்க்கும்பொருட்டு எந்நாளும் கொல்லன் உலைக்களத்திலேயே குவிந்து கிடக்கின்றன,” என்னும் கருத்தமைந்த பின் வரும் பாடலைக் கூறினார்:

‘இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில் மாதோ; என்றும்
உண்டாயின் பதங்கொடுத்(து)
இல்லாயின் உடனுண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.’         (புறம். 95)

ஒளவையாரின் நுண்ணிய கருத்துக்கள் அடங்கிய அரிய மொழிகளைக் கேட்ட தொண்டைமான் துணுக்குற்றான்; ‘நும் அகன்றலை நாட்டில் அமர் அஞ்சா வீரரும் உளரோ?’ என வினவினான். தொண்டைமானுக்கு மேலும் அறிவுரை பகர்ந்து அவனைத் தெருட்டக் கருதிய ஒளவையாரும்,

‘.. விறலி!
பொருநரும் உளரோதும் அகன்தலை நாட்டு?’என
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரு முளரே; அதாஅன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
‘அதுபோர்’ என்னும் என்னையும் உளனே!’         (புறம், 89)

என்ற அருந்தமிழ்ப் பாடலைக் கூறி, அது வாயிலாக அதிகமான் நாட்டில் அடிக்கும் கோலுக்கும் அஞ்சாது எதிர்த்துப் பாயும் பாம்பின் இயல்பு படைத்த வலி மிக்க இளையவீரர் எண்ணற்றோர் உள்ளமையையும், அவ்வீரர் படைத்தலைவனாய் விளங்கும் தம் தலைவன் மன்றின்கண் தூங்கும் முழவினிடத்துக் காற்றெறிந்த ஓசையைக் கேட்பின், ‘ஆ! அது போர்ப்பறையின் முழக்கம்!’ என மகிழும் மனம் படைத்தவனாய் விளங்குவதையும் எடுத்துரைத்து, அவன் இதயத்தில் குடிகொண்டிருந்த இகலும் இறுமாப்பும் கரைந்து ஒழியச் செய்தார். இவ்வாறு ஒளவைப் பிராட்டியாரின் அரும்பெருந்தொண்டால், மூள இருந்த பெரும்போர் ஒன்றினின்றும் ஆயிரம் ஆயிரம் ஆருயிர்கள் உய்ந்தன.

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கியே தொண்டையர் கோனுக்கு அறிவு புகட்ட வேண்டும்,’ என்று எண்ணி யிருந்த அதியமான், வாளேந்தி உயிர்களை வதைக் காமலே, சொல்லேந்தி அமைதி நிறுவிய அருந்தமிழ்ப் பெருமாட்டியாரின் ஆற்றலைக் கண்டு வியந்து போற்றித் தலை வணங்கினான்; தன்பால் அப்பெருமாட்டியார் கொண்டிருக்கும் பேரன்பினையும், தன்னிலும் பெரிதாகிய தமிழகத்தின்பால் அவர் கொண்டிருக்கும் பெருங் கருணையையும் எண்ணி எண்ணி மனம் உருகினான்; ‘இத்தகைய உத்தமச் சான்றோர்க்கு நாம் எந்நன்றி செய்ய வல்லேம்! பொன்னும், துகிலும், முத்தும், மணியும் இவர் மேதைக்கும் கருணை நெஞ்சிற்கும் இணையாமோ?’ எனக் கருதினான்; ‘போர், போர்’ என உழலும் தன் போன்ற புவியாள் மன்னர் வாழ்வதினும், ‘அமைதி, அமைதி’ எனவே அல்லும் பகலும் வாழும் கவியாள் சான்றோர் வாழ்வதே சாலச் சிறப்புடைத்து எனக் கருதினான். அந்நிலையில் அவன் மனத் திரையில் அரியதொரு நினைவு மின்னல் மின்னியது. ‘ஆ உய்ந்தேன்!” என மகிழ்ச்சியால் துள்ளிய அம்மாவள்ளியோன், குதிரை ஏறித் தன் நாட்டின்கண் உள்ள அருமலை ஒன்றின் உச்சியை நோக்கி அம்பு போலப் பாய்ந்து சென்றான். அங்கு விடரகம் ஒன்றில் கவர்தற்கு அரியதாய்-பல்லாண்டுகட்கு ஒரு முறையே கனிவதாய்-உண்டாரை நீடுழி வாழச் செய்யும் வல்லமை படைத்ததாய் விளங்கிய அமிழ்தினுமினிய நெல்லிக் கனியைக் கண்டான்; அரும்பாடு பட்டு அதனைப் பறித்தான்; பழத்தின் பண்பையும் பயனையும் தன்னுள் மறைத்து, மலையினின்றும் அருவி போல இழிந்தோடி வந்தான். வந்தவன், ஒளவையாரைக் கண்டு, அன்பு கெழுமிய ஆர்வமொழி பல புகன்று, அளவளாவி இருந்தான்; பின்னர்க் கனியை அவர் கையில் கொடுத்து,
‘உண்ணுக தாயீர்!’ என்று உளமுருகி வேண்டினான்.

(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள்

Thursday, August 05, 2021

ஔவையார் 4 – இரா.இராகவையங்கார்

 அகரமுதல




(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 12. தொடர்ச்சி)
3. ஔவையார் (தொடர்ச்சி)

 

இக்கதை,

‘எரி னியற்றுங் களைக்கோலை யீந்தன்ன மிட்டுநல்ல
பாரி பறித்தென்னும் பாடல்கொண் டோன்பண்பு சேர்பழைய
னூரி லிருப்பவ னௌவைதன் பாடற் குவந்தபிரான்
மாரி யெனத்தரு கைக்காரி யுந்தொண்டை மண்டலமே.’

என்னும் தொண்டை மண்டல சதகச் செய்யுளானும் அறியப்படும். பின் அக்காரிக்கு ஆடு வாங்கிக்கொடுக்கவேண்டி வாதவன் வத்தவன் யாதவன் என்னும் மூவரிடத்துப்போய்க் கேட்க அவர்கள் கொடாமையாற் சேரநாட்டுச் சென்று வஞ்சிநகர்புக்கு ஆண்டுள்ள சேரன்பால்,

வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோ னாளையென்றான்
யாதவர்கோன் யாதொன்று மில்லையென்றா–னாதலால்
வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோ னாளையினும்
யாதவர்கோ னில்லை யினிது. (தமிழ்நாவலர் சரிதை)

என்னும் பாடலைப் பாடித் தம்செய்தி கூற, அச்சேரன் மகிழ்ந்து, பொன்னாடு கொடுக்கப்பெற்று, அப்போது,

சிரப்பார் மணிமுடிச் சேரமான் றன்னைச்
சுரப்பாடு கேட்கவே பொன்னாடொன் றீந்தா
னிரப்பவ ரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவர் தங்கொடையின் சீர். (தமிழ்நாவலர் சரிதை)

என்னும் பாடலைப்பாடிக் காரிபொருட்டெய்திய பொன்னாட்டை அவன்பாற் சேரவிடுத்து, அச்சேரனா லினிது ஓம்பப்பட்டுச் சிலகாலம் அவன்பாற் றங்கினர். இவர், சேரன் மாளிகையில் இனிதுண்டு வாழ்ந்திருந்தனர் என்பது, இவர் அவனைப் பிரிந்தபோது கூறிய,

சிறுக்கீரை வெவ்வடகுஞ் சேதாவி னெய்யு
மறுப்படாத் தண்டயிரு மாந்தி–வெறுத்தேனை
வஞ்சிக்குங் கொற்கைக்கு மன்னவனேற் பித்தானே
கஞ்சிக்கும் புற்கைக்குங் கை. (தமிழ்நாவலர் சரிதை)

என்னும் பாடலானறியப்படுவது. பின்பு இவர் சேரனுடைய வஞ்சியினின்று நாஞ்சின் மலைச்சென்று ஆண்டிருந்த வள்ளுவன் என்பானை அரிசி கேட்க, அவன் இவர்க்கு யானை கொடுத்தானாக, அப்போது அவனது கொடைமடத்தை வியந்து, ‘தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன்’ (140) என்னும் புறப்பாட்டைப் பாடி, ஏழிற்குன்றம் போய் ஆண்டுள்ள அரசன் ஒருவனைப்பாட, அவன் இவரது அருமையும் பெருமையும் அறியாமையால், அவனை,

இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவை
குருடேயு மன்றுநின் குற்ற–மருடீர்ந்த
பாட்டு முரையும் பயிலா தனவிரண்
டோட்டைச் செவியு [*] முள.
      [* முளை எனவும் பாடம்.]

என்னும் பாடலால் முனிந்து பழித்துரைத்தனர். ‘இஃது எழிற்கோவை ஔவை முனிந்து பாடியது’ எனப் பேராசிரியரும் (தொல். செய் 125) ‘இஃது எழிற்கோவை ஔவையார் பாடியது’ என நச்சினார்க்கினியரும், ‘எழிற்கோவைப்பாடிய அங்கதம்’ எனத் தமிழ்நாவலர் சரிதையுடையாரும் கூறினார். எழில் என்பது ஒருமலை; நன்னன் என்னுங் குறுநில மன்னனுடையது. நன்னனுடைய மலையரணாகிய பாழி யென்பதும் இதனோர் பகுதியதாகும். இதனை ‘நன்ன, னேழி னெடுவரைப் பாழிச் சிலம்பின்’ (அகம். 152) ‘நன்ன னன்னாட் டேழிற் குன்றத்துக் கவா அன்’ (அகம் 349) என வருவனவற்றானுணர்க.

இந் நன்னன்மரபிற் றோன்றிய இளவிச்சிக்கோ என்பானொருவன் இளங்கண்டீரக்கோ என்பவனோ டொருங்கிருந்தவழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் இளங்கண்டீரக்கோவைப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லாராக, அப்போது அவ்விளவிச்சிக்கோ, புலவரை நோக்கி, ‘நீர் என்னை என்செய்யப் புல்லீராயினீர்?’ என்று வினாவ, அதற்கவர், ‘அவன் மரபிற் பெண்டிரும் பாடுவார்க்குப் பிடிகளைப் பரிசிலாகக்கொடுக்கும் வண்புகழுடையனாதலின் அவனைப் புல்லினேன். நுமருளொருவன் பாடுவார்க்கடைத்த கதவு காரணமாக நும்முடைய மலையை எம்மனோர் பாடுதலொழிந்தனராதலால் யான் நின்னைப் புல்லேனாயினேன்’ எனவுரைத்தார் என்பது 151 – ஆம் புறப்பாட்டான் அறியப்பெறுதலால், அப் பாடுவார்க்குக் கதவடைத்தவன் நன்னனுக்கும் பெருந்தலைச்சாத்தனாராற் புல்லப்பெறாத இளவிச்சிக்கோவுக்கும் இடையிற்றோன்றியோ னொருவனெனத் தேறலாகும். இவ்வௌவையாரால் முனிந்து பாடப்பட்டவன் அக்கதவடைத்தவனாவன். பெருந்தலைச்சாத்தனார் வள்ளல்கள் எழுவரும் மாய்ந்தபின் னிருந்த புலவர் என்பது அவர் குமணனைப் பாடியுள்ளவைபற்றி அறியலாகும். இவ்வாறு எழிற்கோவை முனிந்து பாடி வழிச்செல்வார், ஓரூரில் ஒருநாட் பசியினாலே ஒருவன்மனையிற் போக, அவன், ‘சோறில்லை, போ’ என்று சொன்னபோது அவன்மனைவி முகமன் கூறி அன்னமிட்டாள். அப்போது,

‘அற்ற தலையி னருகிற் றலையதனைப்
பற்றித் திருகிப் பறியேனோ–வற்றன்
மரமனையா னுக்கிம் மனையாளை யீந்த
பிரமனையான் காணப் பெறின்.’ (தமிழ்நாவலர் சரிதை.)

என்னும் பாடலைப் பாடிப் பின்னுஞ் செல்வார், ஓரூரி லொரு குறவன் பலாமரத்தைப் பகைவர் வெட்டிப்போகிட, அவன் வருந்துவதற் கிரங்கி, அப்பலா வளரும்படி,

‘கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா
வோரிலையாய்க் கொம்பா யுயர்மரமாய்ச்–சீரிய
வண்டுபோற் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப்
பண்டுபோ னிற்கப் பணி.’ (தமிழ்நாவலர் சரிதை.)

எனத் தெய்வத்தை வேண்டிப் பாடி வளர்ப்பிக்க, அதற்குக் குறப்பிள்ளைகள் மகிழ்ந்து நாழித்தினை கொடுக்க அதனை அன்பாலேற்றுச் சோணாட்டு உறையூர் புகுந்து சோழன்பாற் சென்று பாட, அவன் இவர்க்குப் பரிசில் பலவளித்து வரிசைபலசெய்ய, அதற்குவந்து,

‘கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறச்சிறார்
[*] மூழக் குழக்குத் தினைதந்தார்–சோழாகே
ளுப்புக்கும் பாடிப் புளிக்கு மொருகவிதை
யொப்பித்து நிற்கு முளம்.’ (தமிழ்நாவலர் சரிதை.)
      [* மூன்றுழக்கு என்பதன் விகாரம். உழக்கு காற்படி நாழி – ஒருபடி.]

என ஒரு செய்யுளுரைத்து, தினைத்துணை நன்றியையும் பனைத்துணையாகக் கருதுகின்ற தம்மியல்பினை யவனுக்கறிவுறுத்தி அவன்பாற்றங்கினர். ஒருநாள் இவர் சோழன்பா லொன்று பாடும்போது, அவன் ஒரு துகிலைப் பார்த்துப் பராக்காக இருப்ப அப்போது இவர்,

நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினு நூற்சீலை
நாற்றிங்க டன்னிற் கிழிந்துபோம்–மாற்றலரைப்
பொன்றப் புறங்கண்ட போர்வே லகளங்கா
என்றுங் கிழியாதென் பாட்டு. (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைப்பாடினர். அக்காலத்துச்சோழன், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்பவன். அவன் இராசசூயம் வேட்டபோதும் ஆங்கிருந்து அவ்வேள்வியின்பொருட்டு ஆண்டெய்திய சேரன் மாவெண்கோவையும் பாண்டியன் உக்கிரப்பெருவழுதியையும் அச்சோழனையும் ஒருங்கு வாழ்த்திப் பாடினர் (புறம் 367). இவர் அச் சோணாட்டில் வெண்ணி, அம்பர், குடந்தை முதலிய பலவூர்கட்குஞ் சென்றுவா ரென்பது இவர் பாடல்களா னறியப்படுவது. இவர் ‘கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த’ (நற்றிணை 360) எனவும், ‘நல்லம்பர் நல்லகுடி யுடைத்து’ (திருமுருகாற்றுப்படை யுரைமேற்கோள்) எனவும் பாடுதலான் அறிந்து கொள்க. இவர் திருக்குடந்தையிற் சென்று, அங்கு ஒருவன் உலோபியும் ஒருவன் விதரணியுமாக இருந்தாரைக் கண்டு,

‘திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கு
மருத்தன் றிருக்குடந்தை வாழை–குருத்து
மிலையுமிலை பூவுமிலை காயுமிலை யென்று
முலகில் வருவிருந்தோ டுண்டு.’ (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைப் பாடினரென்பவாகலான், இவர் திருக்குடந்தைக்குச் சென்றமை யுணரப்படும். திவாகரம் விலங்கின் பெயர்த்தொகுதி யிறுதிக்கட்டுரையில், ‘ஔவை பாடிய வம்பர் கிழவோன்’ என வருதலானும், இவரே அம்பரைச் சிறப்பித்துக் கூறுதலானும் அக்காலத்து அம்பர்நகரத்திருந்த அம்பர்கிழான் அருவந்தை என்பானையும் பாடி, அவனாலும் போற்றப்பட்டனராவர். பின் சோணாடுவிட்டுப் பாண்டியனாடு செல்வாராய் அக்காலத்துச் சித்தன்வாழ்வு எனவும் பெயர் சிறந்த திருவாவினன்குடிப் போந்து சின்னாட்டங்கி, அப்பாற் பாண்டியர் பதிக்கட்புக்கு, ஆண்டு அரசு புரிந்த உக்கிரப் பெருவழுதியையும் அவனா லினிதோம்பப்பட்ட பழுதில் கேள்வி முழுதுணர் பேரவை நல்லிசைப்புலவர் பல்லோரையும் கண்டு மகிழ்ந்து,

‘நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்து–நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
னாட்டுடைத்து நல்ல தமிழ்.’ (திருமுருகாற்றுப்படையுரை)

என்னும் பாடலைப் பாடினர்.

(தொடரும்)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
 இரா.இராகவையங்கார்

Tuesday, August 03, 2021

ஒளவையார்:3 : ந. சஞ்சீவி

 அகரமுதல




(ஒளவையார்: 2: ந. சஞ்சீவி தொடர்ச்சி)

 

சங்கக்காலச் சான்றோர்கள் – 12

2. ஒளவையார் (தொடர்ச்சி)


வள்ளன்மையில் தலை சிறந்து விளங்கிய அதியமான் வீரத்திலும் நிகரற்ற பெருவிறல் வேந்தனாகக் காட்சியளித்தான். ஒரு நாளில் எட்டுத் தேரை இயற்றும் கைவல் தச்சன் ஒருவன் ஒரு திங்கள் முழுதும் அரும்பாடு பட்டுத் தேர்க்கால் ஒன்றை மட்டும் செய்வானாயின், அத்தேர்க் கால் எத்துணை வலிவுடையதாகும்? அத்துணை உடல் வலி பெற்ற வல்லாண்மைக் குரிசிலாய் விளங்கினான் அதிகமான். அவன் படை வலி கண்டு அஞ்சாத திக்கில்லை; தன்மை தெரியாது,
‘இளையன் இவன், என இகழ்ந்த மாற்றாரையெல்லாம் ‘இருங்களிறு அட்டு வீழ்க் கும் ஈர்ப்புடைக்கராம்’ போலக் கொன்று வீழ்க்கும் கடுந்திறல் படைத்து விளங்கினான். அத்தகை நெடுவேலோன் நாட்டில் எறிகோலுக்கு அஞ்சாது சீறிப்பாயும் அரவினை ஒத்த மள்ளர் கூட்டம்-மழவர் கூட்டம்-மண்டிக் கிடந்தது. அவன் கனன்றெழுந்தால், மாற்றார் மதில்கள் நொறுங்கும்; ஒன்னார் படையெல்லாம் ஓடிச் சிதறும். கேளாருக்குக் காலனை ஒத்த அதிகன் கோபங் கொள்ளின், அவன் குருதிக் கொதிப்பேறிய கண் தன் அருமைக் குழந்தையைக் காணினும் குளிராது. அத்தகு ‘போரடு திரு’வினாய் விளங்கினான் அதிகமான். அதிகமான் தகடூரை ஆட்சி புரிந்து வந்த அந்நாளில் மலையமான் திருமுடிக்காரி என்பான் கோவலூரை ஆட்சி புரிந்து வந்தான். இம்மலையமான் திருமுடிக்காரியும் மாற்றார் அஞ்சும் போர் வலி மிக்கவனாய் விளங்கியதோடன்றி,

‘வாலுளைப் புரவியொடு வையக மருள
ஈர நன்மொழி இரவலர்க்(கு) ஈந்த
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கழல்தொடித் தடக்கைக் காரி’
(சிறுபாணாற்றுப்படை : அடி, 92-95)

எனக் காசினி போற்றக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாய்த் திகழ்ந்தான். ஈரத்தாலும், வீரத்தாலும் இணையற்று விளங்கிய அவனது படையாற்றலின் பெருமையுணர்ந்து முடியுடை வேந்தரும் தம் பகைவரை வெல்ல அவன் அரும்பெறல் துணையையே ஆர்வத்துடன் எதிர் நோக்கி நின்றனர். இத்தகு வலி மிக்க மன்னன் திருமுடிக்காரிக்கும், பல்வேல் தானை அதிகனுக்கும் இடையே மலையமான் கொண்ட படை வலிச் செருக்காலோ-அதிகமானது செருவேட்ட நெஞ்சத்தாலோ-யாது காரணம் பற்றியோ எழுந்த கடும்பூசல் முற்றி, நாளடைவில் கொடும்போராய் மூண்டது.

இந்நிலையைக் கண்டார் தமிழ்ச் சான்றோராகிய ஒளவையார்; இதயம் புண்ணாணார். “அந்தோ! தமிழகமே! யாது குறை செய்தனையோ நீ? உன் புகழ்க் கோயிலினையும் கோட்டையையும் பொசுக்கும் தீயாக அன்றோ இப் போர்த்தீ உள்ளது? அயலவரால் அழிக்க நினைக்கவும் ஒண்ணா உன் அரணம் உன்னவரா லேயே அழிந்து விடுமோ! போரின் பெயரால் எண்ணற்ற தமிழ் வீரரின் தலை தமிழகத்தில் தமிழர்களாலேயே உருளுவதோ! கொடுமை! பெருங்கொடுமை! அறத்தை நம்பாது அம்பையே நம்பும் சிறுமையினை என்னென்று உரைப்பேன்!” என இவ்வாறு பலவும் எண்ணி அவரது தாய்மையுள்ளம் ஆருயிர்கள் மேல் வைத்த கருணையாலும் அருமைத் தமிழகத்தின் மேல் வைத்த பற்றாலும் துடித்திருக்க வேண்டும். அந்நிலையில் போர்க்களம் புகுந்து அறிவுரை கூறி அமைதி கூட்ட அவர் விரைந்தார்; அதிகனை எதிர்த்துநின்ற மன்னனை நோக்கிப் பின் வருமாறு கூறினார்:

“அதிகமான் போரைச் செய்தற்கு உறை கழித்த வாள்கள் பகைவர் அரணை அழித்தலால், அவர் தசையின் கண்ணே உறக் குளித்துக் கதுவாய் போய் வடி விழந்தன. அவன் வேல்கள் குறும்பர் அரண்களை வென்று அவர் நாட்டை அழித்தலால், சுரை பொருந்திய கரிய காம்புடனே ஆணி கலங்கி நிலையழிந்தன. அவன் களிறுகள், கணைய மரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொருது அப்பகைவரது களிறுடை அரணழித்தலால், மருப்பின் கிம்புரிகள் கழலப்பெற்றன. அவன் குதிரைகள் பகை நாட்டு வீரர் பொலந்தார் மார்பம் உருவழிய மிதித்து ஓடலால், குருதிக்கறை படிந்த குளம்புடையவாயின. அவனும், மண்ணுலகையே தன்னுள் அடக்கும் கடலனைய படையையும், அம்புகள் துளைத்த பரிசையையும் உடையவன். அத்தகையவனால் வெகுளப்பட்டார் பிழைத்தல் ஆகுமோ! இகல் வேந்தரே, உங்கள் அகல் நாடு உங்கட்கே வேண்டுமாயின், அதிகனுக்குத் திறை தந்து உய்யுங்கள். இல்லையேல், அவன் ஆறாச் சினம் மாறாது. இவ்வாறு யான் சொல்லவும் தெளியீராயின், நீங்கள் உங்கள் குறுந்தொடி மகளிர் தோளைப் பிரிதல் வியப்பன்று!”

இவ்வாறு வெல்போர் அதிகனது வீரத் திறன்களையெல்லாம் எடுத்துரைத்து, “பகை மன்னரே, எம் ஒளிறிலங்கு நெடுவேல் தலைவனை நேரில் கண்டிலீர் நீர்; கண்டால், மனமொடிந்து போவீர். ஆகலின், அவனைக் காணா நிலையில் கரவா நாவினராய்க் கண்டதும் கூறிச் சோகாக்கும் நிலையடையாதீர்!” என எச்சரித்தார்.

‘யாவின் ஆயினும், கூழை தார்கொண்(டு)
யாம்பொருதும்,’ என்றல் ஒம்புமின்; ஓங்குதிறல்
ஒளிறிலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோள் என்னையைக் காணா வூங்கே.’         (புறம், 88)

ஆன்ற புலமை நல்லிசைச் சான்றோரின் பொன் மொழிகளெல்லாம் பயனற்றுப் போயின. போர் புரியவே விரும்பினான் மலையமான். அதிகமானோ, அது கண்டு அஞ்சிப் பின் வாங்குபவன்! தமிழ்க்குடி வீரம் அவனுக்கு மட்டும் விதி விலக்கோ? ஆயினும், அவன் ஒளவையாரின் அருள் மொழிகட்கு அடங்கிப் பொறுத்திருந்தான்; ஒளவையாரின் சொல்லையும் மதியானாயினன் மலையமான் என்பதை அறிந்ததும், ஆற்றொணாக் கோபத்துடன் காற்றோடு கலந்த கடுந்தீப்போலப் போர்க்களத்தில் பாய்ந்தான். கரியொடு கரியும், பரியொடு பரியும், தேரொடு தேரும் மோதின. கணக்கற்ற வீரர்களின் தலைகள் உருண்டன. குருதி வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. போரின் முடிவு யாதாமோ எனக் கற்றோரும் மற்றோரும் கலங்கி நின்றனர். ஆருயிர்க்கு இரங்கும் ஒளவையாரின் தமிழ் நெஞ்சம் பாகாய் உருகியது.

அதிகமான் நெஞ்சில் எழுநாவிட்டு எரியும் செந்தழ லன்ன சிற்றத் தீயினைக் கண்ட ஒளவையார், “அந்தோ! போர் முனையில் பகைவர் மாறுபாடு ஒழியப் பொருதலால் தேய்ந்து குறைந்த கோடுகளையுடைய நின் யானைக் கூட்டம் போகக் காணில், பகைவர் தம் மதில் வாயில் உள்ள பழைய கதவங்களையும், கணைய மரங்களையும் மாற்றிப் புதியன இடுவர்; மாற்றார் சேனை வீரர் பிணம் சிதறியழியப் போர்க் களத்தை உழக்கிச் செல்லுதலால் குருதிக்கறை படிந்த நின் குதிரைக் கூட்டம் போகக்கண்டால், நின் பகைவர் காட்டு வாயில்களையும் வேலமுள்ளால் அடைத்துக் காப்பர் : பகைவர் மார்பைத் தைத்து ஊடுருவிப்போன உறையின்கண் செறித்தலில்லாத நின் வேலைக் கண்ட பகைவர், தம் கிடுகைக் காப்புடனே கைநீட்டுச் செறிப்பர்; வாள் வாய்க்கத் தைத்த வடுப்படிந்த நின் மைந்துடை வீரரைக் கண்டால், குருதி படிந்த அம்பைத் தூணியுள் அடக்குவர். ஆனால், நீயோ, காவலாக வெண்சிறு கடுகைப் புகைக்கவும் மனம் தரியாது, மாற்றாரின் உயிரைக் கொடுபோகும் கூற்றம் ஒப்பாய். ஆகலின், அதிகமானே, நெற்கதிர் சுழலும் கழனியொடு பெரும்புனல் வளமிக்க நின் பகைவரின் அகல் நாடு இரங்கிக் கெட்டு ஒழிவதோ!” என எண்ணி மனம் உருகினார்.

(தொடரும்)

முனைவர் ந. சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்



Sunday, August 01, 2021

ஔவையார் 3 – இரா.இராகவையங்கார்

 அகரமுதல




(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 11. தொடர்ச்சி)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 12

3. ஔவையார் (தொடர்ச்சி)



ஒரு காலத்தவரும் ஒரு தன்மையரும் ஆதல்பற்றி இவரது ஓருடற்பிறப்பு ஒருவழியான் வலிபெறுவதாகும். இப்பிறப்பையும் அதிகமான்பாலே பெரிதுமுறலாகும். அதுவும் அவன் பரிசில் நீட்டித்தபோது ஔவையார் அவனைச் சினந்து, அதிகமான், ‘தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல்’ என்றது ஔவையார்க்கும் அவ்வதிகற்கும் உளதாகிய இவ்வுறவினையே குறிப்பாற் றெரித்துக் கூறப்பட்டதெனக் கொள்ளுதற்கும் இயைதலின் நீங்கும் என்க. இவ்வாறு கொள்ளுதலே பண்டுதொட்டு வழங்கும் உலகவழக்கிற்கும் செய்யுள்வழக்கிற்கும் இயைபுடைத்தாகும்.

ஔவையார் பெண்ணையாற்றங் கரையிலுள்ள புல்வேளூர் என்னுமிடத்துப் பூதனென்னுங் கொடையாளி யொருவனாற் பெரிதுஞ் சிறப்பித்துப் போற்றப்பட்டு வெயிலால் வறந்த அவன் வயலுக்குக் கிணற்றுநீர் தானே ஏறிப்பாயக் கட்டளையிட்டு, ஆண்டுச் சிலகாலந் தங்கிப் பின்னர்த் தகடூர் புகுந்து, ஆண்டிருந்த அதிகமானெடுமானஞ்சியைப் பாடி, அவன் பரிசினீட்டித்தானாக, அப்போது அவன் வாயில்காப்போனிடத்தில் அவனை முனிந்து கூறி, அக்காலத்திருந்த அறிவும் புகழுமுடைய வேறு சிலர்பாற் பரிசில் பெறும்பொருட்டுச் செல்லுதற் கொருப்பட்டார். இதனை அதிகமான் தெரிந்து, இவர்க்கு வேண்டுவனவெல்லாம் விரைந்தளித்து, நெடுங்காலம் உயிர்வாழ்தற்குக் காரணமாகத் தான் அரிதின் முயன்றுபெற்ற அமிழ்தத்தன்மையுடைய நெல்லிப்பழம் ஒன்றையும் இவர்க்குதவ, இவர் அதனைப் பெற்று, அவன், தன்னினும் தம்மை மீப்பட மதித்தமைக்கு உவந்து, அவன்பால் அன்பும் அருமையு மிகுத்து அவனையே புகழ்ந்து பாடி, அவனுக்கு உயிர்த்துணைவராய்ச் சிறந்தனர்.

[*] அக்காலத்துக் கச்சியை யாண்ட தொண்டைமானுழை அவ்வதிகன் இவரைத் தூதுவிட, இவர் அவன் பொருட்டுத் தூதுஞ் சென்றனர்; இதனிடையிற் பாரியிடஞ் சென்று அவனானும் அன்பு பாராட்டப் பெற்றனராவர். அதிகமான் கோவலூர்மேற் படையெடுத்துச்சென்று அவனை யெறிந்த காலத்தும், அவனுடனிருந்து அவ்வென்றியைப் புகழ்ந்து பாடினர். அவ்வதிகமான் கோவலூரை யெறிந்து மீண்டு தனதூர் புகுந்து, தனக்குத் தவமகன் பிறந்தானைக் கண்டபோதும், இவர் ஆண்டிருந்து அவனைப் பாடினர் (புறம் 110). அவன் தகடூர் பொருது வீழ்ந்தபோது ஆற்றாத்துயராற் பெரிதுமிரங்கிப் புலம்பினர் (புறம் 235). இவ்வாறு அவன் சாந்துணையும் அவன் செய்நன்றிபாராட்டி அவற்கின்னுயிர்த்துணைவராய்ச் சிறந்து, பின்பு அவ்வதிகமான் தவமகனாகிய பொகுட்டெழினிபாலும்

++++
[*] இவர்க்கும் அதிகற்குமுள்ள பெருநட்புரிமைபற்றி ‘தெவ்வடு வைவே லெழினி, யௌவை’ என்றார் திவாகரநூலாரும் (பழைய ஏடு). எழினி, அதிகற் கொருபெயர். (புறம். 158)
+++

அந்நட்புரிமையே பூண்டு அவனையும் புகழ்ந்துபாடி, அவனாலுஞ் சிறப்புப் பலபெற்று விளங்கினர். இவர் அதிகமான்பால் நெல்லிப்பழம் பெறுதற்கு முன்பே புல்வேளூர்ப் பூதனாற் சிறப்பித்தோம்பப் பட்டனரென்பதும் அவன் வயற்குக் கிணற்றுநீர் ஏறிப்பாயக் கட்டளையிட்டனரென்பதும்,

‘பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையு
மாங்குவரு பாற்பெண்ணை யாற்றினையு–மீங்கு
மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றை நாவை
யறுப்பித்தா யாமலகந் தந்து.’

‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரவென் றேபுளித்த மோரும்–பரிவுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்புரிந் திட்டசோ
றெல்லா வுலகும் பெறும்.’

என்னுந் தமிழ்நாவலர்சரிதைப் பாடல்களானும்,

‘சொல்லாரு மௌவை பரிவாய்த் தனக்கிட்ட சோறுலக
மெல்லாம் பெறுமென்று பாட்டோ தப் பெற்றவ னின்னருளாற்
கல்லாரற் சுற்றிக் கிணறேறிப் பாயுங் கழனிபெற்றான்
வல்லாளன் பூத மகிபால னுந்தொண்டை மண்டலமே.’

என்னுந் தொண்டைமண்டல சதகச் செய்யுளானும் தெரிவன. அதிகமானைப்பற்றி இவர் பாடிய ‘வாயிலோயே வாயிலோயே’ என்னும் புறப்பாட்டால் (206), இவர் அவன் பரிசி னீட்டித்தமைபொறாது, ‘நெடுமானஞ்சி தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல், அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென, வறுந்தலை யுலகமு மன்றே யதனாற், காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை . . . . .. எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ என்று சினந்து கூறி, வேற்றிடங்கட்குச் செல்ல ஒருப்பட்டனர் என்பது அறியப்படுவது.

பின்பு அதிகன் இவர்க்குப் பரிசில் நல்கி வரிசை செய்ய உவந்து, அவன் பரிசினீட்டித்தானென நினைந்து, அவனை வெறுத்துச் செல்லற்கு ஒருப்பட்ட தம் நெஞ்சினைக் கழறி, அதிகமான் பரிசில் பெறுங்காலம் நீட்டிப்பினும் நீட்டியாதொழியினும் அப்பரிசில் தப்பாது என்று கூறி, அவனையும் வாழ்த்தினர் என்பது 101 – ஆம் புறப்பாட்டான் விளங்குகின்றது. இவர்பால் இவன் என்றைக்கும் ஒருபடியான பேரன்பே பூண்டிருந்தனனென்பது, ‘ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம், பலநாள் பயின்று பலருடன் செல்லினுந், தலைநாட் போன்ற விருப்பினன்’ (புறம். 131) என இவன் அவனைக் கூறியதனானே அறியலாகும்.

அமுதத் தன்மை பொருந்திய நெல்லிப்பழம் ஒன்றை அதிகமான் ஔவையார்க் களித்தனனென்பது, ‘சிறி யிலை நெல்லித் தீங்கனி குறியா, தாத னின்னகத் தடக்கிச், சாத னீங்க வெமக்கீத் தனையே (புறம் 91), ‘வன்கூற்றை நாவை யறுப்பித்தா யாமலகந் தந்து‘ என இவர் பாடியவாற்றானும், ‘கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி, யமிழ்துவிளை தீங்கனி யௌவைக் கீந்த . . .அதிகனும்’ எனச் சிறுபாணாற்றுப்படையில் நத்தத்தனார் கூறியதனாலும் அறியப்படுவது. பரிமேலழகரும் இதனையே சுட்டி, ‘ஔவையுண்ட நெல்லிக் கனிபோல்வது‘ (திருக்குறள் 100) என்றார்.

அதியமான்பொருட்டுத் தொண்டைமானுழைத் தூதுசென்றபோது அத்தொண்டைமான் தன்போர்வலியின் பெருமையுணருமாறு தன் படைக்கலக்கொட்டிலைக் காட்ட, இவர் அவற்றைப் பார்த்து, ‘இப்படைக்கருவிகளெல்லாம் போரிற் பயன்படாமையாற் பீலியணிந்து மாலைசூட்டிக் காம்பு திருத்தி நெய்யணிந்து காவலையுடைய அரண்மனைக்கண் வீணே தங்குவன; எம்முடைய அதிகன்வேல் பகைவரைக் குத்துதலான் நுனிமுரிந்து கொல்லன் பணிக்களரியிற் சிறிய கொட்டிலிடத்து உற்றன’ என்று அத்தொண்டைமான் வீரத்தை யிகழ்ந்து, தமது அதிகன் போர்வீரத்தையே மேம்படுத்து உரைத்தார்.

இத்தூது சென்றமையானும் இவ்வமையத்து எடுத்து மொழிந்த வீரவார்த்தையானும் இவரது ஆண்மையும் அறிவும் செய்ந்நன்றி மறவாமையும் நன்றறியத்தக்கன. மேற்குறித்த ‘மடவர லுண்கண்’ என்னும் பாட்டும் அத்தொண்டையர் வேந்தன், ‘நும் நாட்டிற் போர்புரிவாரும் உளரோ?’ என இவ்வௌவையாரை வினாவியபோது, அவனுக்கு விடையாக உரைத்ததாகும். இவர் அதிகனையே தம்மரசனாகக்கொண்டு ‘என்னை’ எனக் கூறுதலுங்காண்க (புறம் 96). அதிகமான் கோவலூரெறிந்ததனை இவர் பாடினரென்பது, ‘இன்றும், பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ, முரண்மிகு கோவலூர் நூறிநின், னரணடு திகிரி யேந்தியதோளே.’ (புறம் 99) என்பதனாலறிக. இவ்வடிகளானும் அதிகன் பரணர் ஔவையார் இவர்கள் ஒருகாலத்தவராதல் புலனாகும். அகநானூற்றில், ‘நெடுநெறிக் குதிரைக் கூர்வே லஞ்சி, கடுமுனை யலைத்த கொடுவிலாடவ, ராகொள் பூசலிற் பாடுசிறந் தெறியும் பெருந்துடி‘ (372) என்பதனானும், ‘வாய்மொழி, நல்லிசை தரூஉம் இரவலர்க்குள்ளிய, நசைபிழைப் பறியாக் கழறொடி யதியன்’ (162) என்பதனானும் அதிகமான் வீரமுங் கொடையும்பற்றிப் பரணராற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளான் என்பதும் அறிக. இவ் வௌவையார் அதிகனைப் பாடிய பாடல்கள் பெரும்பாலும் அவனுடைய வீரமும் தியாகமும் பற்றியே வருவன. அவன் இரவலர்க்கெளியனாய்ப் புலவர்க்கரியனாய் நின்ற நிலைமை இவராற் பெரிதும் பாராட்டப்படுவது. இதனை,

‘ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலி
னீர்த்துறை படியும் பெருங்களிறு போல
வினியை பெரும வெமக்கே மற்றதன்
றுன்னருங் கடாஅம் போல
வின்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே.’

எனவரும் இனிய பாடலா னறிக. இவர் அதிகமான் இறந்ததன் மேலும் அவன் மகன் பொகுட்டெழினிபாற் சில காலந் தங்கிப் பின்னர்த் தமிழ்மூவேந்தர்பாற் செல்லற்கெழுந்து, பழையனூர் புகுந்து, ஆண்டுள்ள காரி என்பவனால் உபகாரம்பெற்று, அவன் தம்பால் வைத்த அன்பின் மிகுதியாற் பிரிதற்கியலாது, அவன் வேண்டியன சில செய்தொழுகிச் சிலபோது கழித்தனர். இவனது பேரன்புடைமையே இவராற் ‘காரியன் றீந்த களைக்கோலும்‘ என்பதனாற் புகழ்ந்து பாராட்டப்பட்டது. களைக்கோலென்பது களையெடுக்குங் கோல் என்று கொண்டு இவர் அவன் வேண்ட அவனுடைய கொல்லைக்குக் களையெடுத்தனர் எனவுங் கூறுப.

(தொடரும்)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
 இரா.இராகவையங்கார்