சங்கக்காலச் சான்றோர்கள் – 13
2. ஒளவையார் (தொடர்ச்சி)
ஒளவையாரின் எண்ணம் நிறைவேறிவிட்டது. அதிகனது அஞ்சா மழவர் படை, ஆர்த்தெழுந்து காரியின் கடியரண்களையும் கடும்படையையும் கலக்கழியச் செய்தது. அரிமா அன்ன அதிகன் தலைமையில் வரிப் புலிகளெனப் பாய்ந்த மழவர் சேனைக்கு ஆற்றாது மான் கூட்டமாயின மலையமான் படைகள். அதிகமான் வீர முரசு கொட்டி, வாகை சூடி, வெற்றிக்கொடியை விண்ணுயரப் பிடித்தான்; அதனோடும் அமைந்தானில்லை அவன்; மலையமான் காரியின் கோவலூருக்குள் நுழைந்து அந்நகரையும் பாழாக்கினான். பொலிவு மிக்க அவ்வள்ளியோன், தலைநகரைப் பொலிவிழந்ததாக்கினான். இவ்வாறு அவன் மூவேந்தருக்கும் மொய்ம்பாய் நின்ற கோவலூரானை வென்ற திறம் புலவர் பாடுதற்கும் அரியதாய் விளங்கியது. முன்னர் ஒரு முறை மூண்டெழுந்த போரில் அதிகமான் அவன் முன்னோர் போல இரும்பனம் புடையலும், ஈகைவான் கழலும், பூவார் காவும், புனிற்றுப்புலால் நெடுவேலும், எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயமும் வழுவின்றிப் பெற்றிருந்தும், அமையாது செருவேட்டு, இமிழ் குரல் முரசார்த்து வந்த எழுவரோடும் முரணி, அவரை முறியடித்து வெற்றி கொண்ட பெருந்திறலும், அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் அழகுறப் பாடுவதற்கு அரிதாகவே விளங்கியது. அதிகமான் அன்று எழுவரை வென்று பெற்ற வெற்றியினைப் போலவே படை வலி சான்ற கோவலூரை எறிந்த அவன் அரிய திறத்தை நா வன்மை மிக்க பரணரே பாடியுள்ளார். ஆதலின்,
‘செருவேட்(டு)
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்(று) அமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்(கு) அரியை, இன்றும்
பரணன் பாடினன் மன்கொல் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி யேந்திய தோளே.’ (புறம், 99)
என இவ்வாறு கோவலூர் எறிந்தானை ஒளவையார் போற்றினார்.
இங்ஙனம் தன் வாழ்வில் இரு பெரு வெற்றிகளைப் பெற்றுப் புகழொடு விளங்கிய அதியர் கோமானது அரசியல் வானில் மீண்டும் போர் மேகங்கள் சூழலாயின. ஆனால், ஒளவையாரின் அருந்திறத்தால், அப்போர் மேகங்களின் நெருப்பு மழையினின்றும் தமிழகம் தப்பியது. அதிகமான் நாளில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டைச் சோழர் மரபினனாகிய தொண்டைமான் ஆண்டு வந்தான். கொடை வளமும் படை நலமும் மிக்கவனாய் விளங்கிய தொண்டைமானுக்கும் அதிகமானுக்குமிடையே பூசல் ஏற்பட்டது. அஞ்சியின் மீது படையெடுக்கத் தொண்டைமான் ஆவன புரிந்தான். ஒற்றர் வாயிலாகத் தொண்டைமான் செயல்களை அறிந்த அதிகமானும் மழவர் படையைச் சேரத் திரட்டிப் போர் முரசு கொட்டத் துடித்தான். ஆனால், போரின் கொடுமையையும் அதனால் தமிழகம் காலப்போக்கில் ஒற்றுமை சிதைந்து காணக் கூடிய ஒருபெருங்கேட்டையும் நண்குணர்ந்த ஒளவையார், எவ்வாற்றானும் அப் போன்ரத் தடுத்து நிறுத்தத் துணிந்தார். ‘அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை ஆகிய இன்றியமையா மூன்றிலும் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உயர்ந்திருந்த ஒளவையார், தாமே தொண்டைமானிடம் தூது செல்லவும் உறுதி கொண்டார். ஒளவையாரின் திருவுள்ளம் அறிந்த அதிகமானும் தன் அமர் வேட்கும் நெஞ்சை முயன்று அடக்கிக்கொண்டு அவர் கருத்துக்கு இசைந்தான். தொண்டை நாடு சென்றார் ஒளவையார். அருந்தமிழ்ப் புலவரை ஆர்வத்துடன் வரவேற்று அன் பொழுகப் போற்றினான் தொண்டையர் கோன். ஒளவையாரும் அவன் மனம் கொளும் வகையில் தம் உள்ளத்திருக்கும் கருத்துக்களை எடுத்துரைத்து, இன்பத் தமிழகத்தில் அமைதி எனும் அருள் ஆறு வற்றாது பாய்ந்து வளங்கொழிக்குமாறு செய்யத் தக்க தருணத்தை எதிர் நோக்கியிருந்தார். தொண்டையர் கோனும் தன் படைக்கலப் பெருமையையெல்லாம் ஒளவையாருக்குக் காட்டி அதிகனை அஞ்சச் செய்யக் கருதி ஒரு நாள் அவரைத் தன் படைக்கல இல்லத்திற்கு அழைத்துச் சென்று பளபளவென மின்னும் போர்க்கருவிகளின் பரப்பையெல்லாம் காட்டினான். கண்ணெதிரே மின்னும் படைக்கலங்களைக் கண்ட ஒளவையாரின் சிந்தனை விண்ணில் கருத்துக்கள் மின்னின. அவர் அறியாமை இருளில் ஆழ்ந்திருக்கும் தொண்டைமானுக்கு அவன் மனம் நோவா வண்ணம் அதிகனைப் பற்றிய உண்மைகளைக் கூறி அறிவொளி காட்ட விழைந்தார். “காஞ்சிக் காவல, காவல் மிக்க இக்கோயிலின் கண் உள்ள உன் படைகள் யாவும் அழகுற மயிற்பீலி அணியப்பெற்று, மாலையும் சூட்டப் பெற்றுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றன; திரண்ட வலிய காம்பும் அழகாகச் செய்யப்பட்டு, நெய் பூசப்பெற்று, ஒளியுடன் திகழ்கின்றன. ஆனால், எங்கள் அதியனின் படைக்கருவிகளோ, பகைவர்களைக் குத்திக் குத்தி, கங்கும் நுனியும் முறிந்து, பழுது பார்க்கும்பொருட்டு எந்நாளும் கொல்லன் உலைக்களத்திலேயே குவிந்து கிடக்கின்றன,” என்னும் கருத்தமைந்த பின் வரும் பாடலைக் கூறினார்:
‘இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில் மாதோ; என்றும்
உண்டாயின் பதங்கொடுத்(து)
இல்லாயின் உடனுண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.’ (புறம். 95)
ஒளவையாரின் நுண்ணிய கருத்துக்கள் அடங்கிய அரிய மொழிகளைக் கேட்ட தொண்டைமான் துணுக்குற்றான்; ‘நும் அகன்றலை நாட்டில் அமர் அஞ்சா வீரரும் உளரோ?’ என வினவினான். தொண்டைமானுக்கு மேலும் அறிவுரை பகர்ந்து அவனைத் தெருட்டக் கருதிய ஒளவையாரும்,
‘.. விறலி!
பொருநரும் உளரோதும் அகன்தலை நாட்டு?’என
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரு முளரே; அதாஅன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
‘அதுபோர்’ என்னும் என்னையும் உளனே!’ (புறம், 89)
என்ற அருந்தமிழ்ப் பாடலைக் கூறி, அது வாயிலாக அதிகமான் நாட்டில் அடிக்கும் கோலுக்கும் அஞ்சாது எதிர்த்துப் பாயும் பாம்பின் இயல்பு படைத்த வலி மிக்க இளையவீரர் எண்ணற்றோர் உள்ளமையையும், அவ்வீரர் படைத்தலைவனாய் விளங்கும் தம் தலைவன் மன்றின்கண் தூங்கும் முழவினிடத்துக் காற்றெறிந்த ஓசையைக் கேட்பின், ‘ஆ! அது போர்ப்பறையின் முழக்கம்!’ என மகிழும் மனம் படைத்தவனாய் விளங்குவதையும் எடுத்துரைத்து, அவன் இதயத்தில் குடிகொண்டிருந்த இகலும் இறுமாப்பும் கரைந்து ஒழியச் செய்தார். இவ்வாறு ஒளவைப் பிராட்டியாரின் அரும்பெருந்தொண்டால், மூள இருந்த பெரும்போர் ஒன்றினின்றும் ஆயிரம் ஆயிரம் ஆருயிர்கள் உய்ந்தன.
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கியே தொண்டையர் கோனுக்கு அறிவு புகட்ட வேண்டும்,’ என்று எண்ணி யிருந்த அதியமான், வாளேந்தி உயிர்களை வதைக் காமலே, சொல்லேந்தி அமைதி நிறுவிய அருந்தமிழ்ப் பெருமாட்டியாரின் ஆற்றலைக் கண்டு வியந்து போற்றித் தலை வணங்கினான்; தன்பால் அப்பெருமாட்டியார் கொண்டிருக்கும் பேரன்பினையும், தன்னிலும் பெரிதாகிய தமிழகத்தின்பால் அவர் கொண்டிருக்கும் பெருங் கருணையையும் எண்ணி எண்ணி மனம் உருகினான்; ‘இத்தகைய உத்தமச் சான்றோர்க்கு நாம் எந்நன்றி செய்ய வல்லேம்! பொன்னும், துகிலும், முத்தும், மணியும் இவர் மேதைக்கும் கருணை நெஞ்சிற்கும் இணையாமோ?’ எனக் கருதினான்; ‘போர், போர்’ என உழலும் தன் போன்ற புவியாள் மன்னர் வாழ்வதினும், ‘அமைதி, அமைதி’ எனவே அல்லும் பகலும் வாழும் கவியாள் சான்றோர் வாழ்வதே சாலச் சிறப்புடைத்து எனக் கருதினான். அந்நிலையில் அவன் மனத் திரையில் அரியதொரு நினைவு மின்னல் மின்னியது. ‘ஆ உய்ந்தேன்!” என மகிழ்ச்சியால் துள்ளிய அம்மாவள்ளியோன், குதிரை ஏறித் தன் நாட்டின்கண் உள்ள அருமலை ஒன்றின் உச்சியை நோக்கி அம்பு போலப் பாய்ந்து சென்றான். அங்கு விடரகம் ஒன்றில் கவர்தற்கு அரியதாய்-பல்லாண்டுகட்கு ஒரு முறையே கனிவதாய்-உண்டாரை நீடுழி வாழச் செய்யும் வல்லமை படைத்ததாய் விளங்கிய அமிழ்தினுமினிய நெல்லிக் கனியைக் கண்டான்; அரும்பாடு பட்டு அதனைப் பறித்தான்; பழத்தின் பண்பையும் பயனையும் தன்னுள் மறைத்து, மலையினின்றும் அருவி போல இழிந்தோடி வந்தான். வந்தவன், ஒளவையாரைக் கண்டு, அன்பு கெழுமிய ஆர்வமொழி பல புகன்று, அளவளாவி இருந்தான்; பின்னர்க் கனியை அவர் கையில் கொடுத்து,
‘உண்ணுக தாயீர்!’ என்று உளமுருகி வேண்டினான்.
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள்
No comments:
Post a Comment