Friday, May 21, 2021

இராமானுசர் தமிழ்ஆழ்வார் பாடல்களையே பயன்படுத்தி உள்ளார்! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 52 / 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

53 / 69

 

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

 

இராமானுசரும் தமிழும் குறித்துப் பதின்மூன்றாவது கட்டுரையில் கூறுகிறார். ஆறு உட்பிரிவுகளை உடையது இக்கட்டுரை.

இராமானுசர் சமற்கிருத மொழியில் எழுதிய ஒன்பது நூல்கள் குறித்த விளக்கத்தை முதலில் தந்துள்ளார். அவர் தமிழில் ஏதும் எழுதவில்லையாயினும் அவர் கையாண்ட சமற்கிருத மொழியில் தமிழின் தாக்கம் உள்ளது; அவருடைய கோட்பாட்டின் உருவாக்கத்தில் ஆழ்வார் பாடல்களின் பங்களிப்பு உள்ளது; அவற்றுள் சங்க இலக்கியச் செல்வாக்கு உள்ளது; அவருக்குப் பின் வந்த வைணவ ஆச்சாரியார்கள் தமிழுக்குக் கடன் பட்டுள்ளனர்;  இவற்றை விளக்கித் தமிழும் சமற்கிருதமும் அறிந்த அறிஞர்கள் பல கட்டுரைகளை அளித்துள்ளனர் என்கிறார்.

சங்கரர், சாயணர், இராமானுசர் முதலிய தென்னிந்திய அறிஞர்கள் கையாளும் சமற்கிருதம் வடஇந்திய சமற்கிருத அறிஞர்களின் சமற்கிருத நடையிலிருந்து மாறுபட்டது. இதற்குக் காரணம் தமிழின் தாக்கமே என ஏ.சி.பருனல்(A.C.Burnell) தம் ஐந்திறக் கருத்தாளரின் இலக்கணவாதிகள்(The Aindra School of Sanskrit Grammarians,1875) என்னும் சிறு ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளதை மேற்கோளாக அளித்துள்ளார்.

நீண்ட தொடர்களில் ‘என்று’ என்னும் சொல்லைப் பயன்படுத்தித் தமிழில் எழுதுவதுபோல் ‘இதி’என்னும் சொல்லைப் பயன்படுத்தி மிக நீண்ட முற்றுத் தொடர்களை இச்சமய ஆச்சாரியார்கள் எழுதியுள்ளனர். இது வடமொழி மரபிலிருந்து மாறுபட்டது. இராமானுசரின் வசிட்டாத்துவைதக் கோட்பாட்டை உருவாக்க அவர் ஆழ்வார் பாடல்களுக்குக்கடன்பட்டிருக்கிறார் என எஃப்.டபுள்யூ.எல்லீசர்(F.W.Ellis) தமது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளதை விளக்கச்சான்றுகளுடன் அளிக்கிறார். இராமானுசர் தம் கீதாபாசியத்தில் கண்ணனின் பண்புகளைக்குறிக்கப் பயன்படுத்தும் அடைமொழிகள் கீதையில் இல்லாதவை. பரிபாடல், புறநானூறு முதலிய சங்க இலக்கியச் செல்வாக்கால் குறிக்கப்பெற்றவை.

இராமானுசர் இறைவனுக்குச் செய்யும் பணிகளைத் தொகுத்துச்சொல்வதற்குத் திருநாவுக்கரசர், ஆண்டாள் ஆகியோர் பாடல்களே மூலங்களாகும். இவ்வாறு தக்க சான்றுப்பாடல்களுடன் பேரா.ப.ம.நா. சுவைபட விளக்குகிறார். திருவரங்கத்தமுதனால் தமது இராமானுச நூற்றந்தாதியில் இராமானுசர் முத்தமிழிலும் ஈடுபாடுடையவர் எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

வெங்கடாச்சாரி எழுதிய ‘தமிழ்-புலப்பாட்டின் ஊர்தி’(Tamil as a Vehicle of Revelation) என்னும் ஆங்கிலக் கட்டுரை வைணவக் கோட்பாட்டின் வளர்ச்சியிலும் பரப்புதலிலும் ஆழ்வார்களின் பாடல்கள் செய்த பங்களிப்பைத் தொட்டுக் காட்டுகிறது.

நாதமுனியின் பேரனாகிய யமுனா அவரது தோத்திர இரத்தினாவில் வியாசரோடும் பரசுராமரோடும் இணைந்து நம்மாழ்வாரின் பெருமையைப் பேசுகிறார். இராமானுசர் தமிழில் எழுதவில்லையாயினும் தமது சொற்பொழிவுகளில் பெரிதும் தமிழைப் பயன்படுத்தியிருந்தார் என வெங்கடாச்சாரி கூறுகிறார்.

பெரியவாச்சான் (பிள்ளை)சமற்கிருதத்தினும் உயர்ந்த இடத்தில் தமிழை வைத்தார். திருமங்கையாழ்வாரின் பாடல் ஒன்றில்(திருமொழி 7.8.7) ‘செந்தமிழ்’ எனக் குறிக்கப்பெறுகிறது.அதற்குப் பெரியவாச்சான் (பிள்ளை), ” செந்தமிழ் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் அஃது எப்பொருளையும் ஐயத்திற்கு இடமற்ற சொற்களால் விளக்குவதாகும்.”எனப் புலப்படுத்துகிறார்.. பெரிய திருமொழியிலே வரும் இன்னொரு பாடல்,” செந்தமிழ் பாடுவார் வணங்கும் தேவர்” என இறைவனைக் குறிக்கிறது. இதற்கு”முதல் மூன்று ஆழ்வார்களைப்போன்றோரின் தூய, கலப்பில்லாத தமிழில் வணங்கப் பெறும் கடவுள்” என்று பொருள்படுமென்றும்  ” அக்கடவுளின் இறைமைத் தன்மை தூய தமிழில் இத்தகைய பெருமைக்குரிய ஆழ்வார்களால் பாடப்படுவதால் மேலும் உயர்கிறதென்றும்” பெரியவாச்சான் (பிள்ளை) விதந்து பேசியுள்ளார். திருமங்கையாழ்வார் இயற்றிய திருநெடுந்தாண்டகத்தில், “செந்நிறத் தமிழோசை வடசொல்லாகி” என்னும் பாடலடி வருகிறது. இதற்குச் சிலர் தமிழ் வடமொழியில் இருந்து வந்தது என்றும் அதனை முதலில் சொல்லியிருக்கக்கூடா தென்றும் தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.பெரியவாச்சான்(பிள்ளை) அதற்கு, அவர்களின் கூற்று அறிவற்றதென்றும் தமிழ் வடமொழியைச்சார்ந்திராது தனித்து இயங்க வல்ல மொழி என்றும் அதன் சொற்கள் பொருளைத் தெளிவாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் குறிக்கவல்லவை என்றும் விளக்கவுரை எழுதியுள்ளார்.

தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் சமற்கிருதத்திற்கு ஆதரவாகவும் தமிழுக்கு எதிராகவும் இடைக்காலத்திலேயே பேசி வந்துள்ளனர். 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியவாச்சான்(பிள்ளை) தமிழின் தொன்மைக்கு ஆதரவாக இருந்ததுபோல் 12 ஆம் நூற்றாண்டில் பிறந்த நஞ்சீயாரும் தமிழ்ப்பகைவருக்கு எதிராக இருந்ததைப்பேரா.ப.ம.நா. விளக்கியுள்ளார்.

“தமிழ் தூய்மையற்ற மொழி; கீழ்த்தட்டு மக்களும் தமிழில் எழுதப் பெறும் சமய இலக்கியங்களைப் படிப்பதால் அவற்றின் புனிதத் தன்மை கெடும்; தமிழ் வட்டார மொழி என்பதால் சமற்கிருதம் மூலம் இந்தியா முழுவதும் புரிந்துகொள்ளப்பட முடியாதது” என்பன போன்று பலவாறாகத் தமிழ்ப்பகைவர்கள் கூறிவந்தனர். அவர்களுக்கு நஞ்சீயார் கடுமையாக மறுப்படி கொடுத்துள்ளார்.

“தமிழ் விலக்கப்படவேண்டிய தூய்மையற்ற மொழியென்பது முட்டாள்தனமான முடிவாகும்.”

கீழ்த்தட்டு மக்கள் படிப்பதால் சமயநூல்கள் புனிதத்தன்மை இழப்பதில்லை. அதற்கு மாறாக உலக நன்மைக்கு இத்தகைய சமயப்பரப்புரையே நன்மை செய்யும்.

இந்தியாவின் பிற பகுதிகள் யாவற்றிலும் உள்ள உண்மையான அறிஞர்கள் யாவரும் தமிழ் அறிந்தவர்கள். தமிழறியாத சில அறிஞர்களும் அதனைப் புரிந்து கொள்ளும் பேறு தமக்குக் கிடைக்கவில்லை யென்று வருந்துகிறார்கள்.

பெளத்தர் சமணர் போன்ற  வைதிகர் அல்லாதாரும் தங்களது சமயப்பரப்புரைக்காகத் தமிழைப் பயன்படுத்திக்கொள்வது தமிழின் பெருஞ்சிறப்பை உணர்த்தும்.

பின் நூற்றாண்டுகளில் வந்த வைணவ ஆச்சாரியார்களும் தமிழ் மொழியின் சிறப்பை வற்புறுத்தி வந்தனர் என விளக்கியுள்ளார்.

தொண்டரடிப் பொடியாழ்வார் தமது திருமாலையி்ல்

“குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி

வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி”

இறைவன் வீற்றிருப்பதாக  ஒரு பாடலில் குறிப்பிடுவார்.

திருவரங்கப் பெருமான் பின்புறத்தை வடதிசைக்குக் காட்டியிருப்பதன் காரணம் என்ன?

வடக்கிலுள்ள மக்கள் தமிழ் அறியாதவர்களாக இருப்பதால் பின்புறம் காட்டி நிற்பதாகப்பெரியவாச்சான்(பிள்ளை) கூறுகிறார். அஃதாவது தமிழ் அறியாதவர்கள்மீது தம் அருட்பார்வை படுவதற்கு இறைவனுக்கு விருப்பம் இல்லை என்கிறார்.தமிழை அறியாதவர்களை விரும்பாத இறைவனுக்குத்தான் தமிழல்லாத பிற மொழியில் பூசை நடத்துகின்றனர் இன்றைய மக்கள். அப்படியானால் அவர்களுக்கு எங்ஙனம் திருவருள் கிட்டும்?

வேதாந்த தேசிகர் தமது திராவிட உபநிடத தாத்துபரியஇரத்தினாவளியில் தமிழின் பெருமையை நிலைநாட்டியுள்ளார். இரத்தினாவளியைச்சமற்கிருதத்தில் எழுதிய காரணம் திருவாய்மொழியை மூலத்தில் படித்துத் துய்க்க இயலாத தமிழறியாதவர்கள் அறிய வேண்டும் என்பதற்காககத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தி இலக்கியம் தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும்பரவியது என்பதைப் பாகவத புராணத்தில் 48ஆம் பாடலில் குறித்துள்ளதை எடுத்துரைக்கிறார்.

நம்மாழ்வார் இனிய தமிழ்ப்பாடல்களைப் பெற்றுக் கொண்டான் என,

“என்னைத்தன்னாக்கி என்னால் தன்னை

இன்தமிழ் பாடிய ஈசனை”

முதலான பாடல்கள் மூலம் நிறுவுகிறார்.

நம்மாழ்வார் இறைவனையே தமிழாகக் காண்கிறார் எனத் தெளிவுபடக்கூறுவதை ஏ.கே.இராமானுசன் வரிகளில் விளக்குகிறார்.

நம்மாழ்வார் சங்க அகப்பாடல்உத்திகளைக் கையாண்டே திருவாய்மொழியில் மூன்றிலொரு பாடல்களைத் தந்துள்ளதாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார். இராமானுசரைக் கூற வந்தவர் அவருக்கு முன்பும் அவர் காலத்திலும் இருந்தவர்களின் தமிழ்உயர்வுக்கருத்துகளையும் நமக்கு அளித்துள்ளார்.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்,தமது ஆச்சாரிய இருதயத்தில், திருவாய்மொழியின் உதவி கொண்டு இராமானுசர் பிரம்ம சூத்திரங்களை விளக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். இராமானுசர் தமிழ்மேல் வைத்திருந்த பற்றை டி.சி.ஏ.இராமானுசம், தம்முடைய ‘பாடல்களின் வழிச் செல்லுதல்’ (Saying it through verses) என்னும் ஆங்கிலக்கட்டுரையில் சான்றுகளே்ாடு விளக்குவதையும் எடுத்துரைக்கிறார். ஆழ்வார்களின் பாடல்கள் இராமானுசரின் உள்ளத்தில் உறைந்து அதனால் தம் உரைகளில் அவற்றின் கருத்துகளை எதிரொலித்துள்ளார் எனப் பல பாடல்கள் மூலம் இக்கட்டுரையில் விளக்குகிறார்.

இவ்வாறு எழுத்தில் தம்  கோட்பாடுகளை விளக்க சமற்கிருதத்தைக் கையாண்ட இராமானுசர், தம் கருத்துகளிலும் பேச்சிலும் அன்றாட வாழ்விலும் தமிழ் ஆழ்வார் பாடல்களையே பயன்படுத்தி உள்ளார் என மெய்ப்பித்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 54/69 )

 

 



Thursday, May 20, 2021

சங்கரரின் சமற்கிருதப் படைப்புகளிலும் தமிழ்ப்பாடல்களின் செல்வாக்கு உள்ளது – ப. மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

51 / 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

 52 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

  பத்தாவது கட்டுரை பஞ்சதந்திரம் குறித்துக் கூறுகிறது.

பஞ்சதந்திரம்  கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்; இது ஐந்து பகுதிகளைக் கொண்டது; 72 கதைகளில் 17 மட்டுமே மனிதப் பாத்திரங்களைக் கொண்டவை. பிறவற்றில் பறவைகளும் விலங்குகளும் பூச்சிகளும் பாத்திரங்களாகின்றன. எனினும் அவை மனிதர்களைப்போலவே நடந்து கொள்கின்றன. இது சமற்கிருதத்தில் எழுதப்பெற்ற முதல் நூலன்று. கிரேக்க மொழியிலுள்ள ஈசாப்பு கதைகளைத் தழுவியது

இவ்வாறு அறிமுக உரை தரும் பேரா.ப.ம.நா., இந்த மாதிரியான பொருளடக்கமும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட பஞ்ச தந்திரம் போன்றவற்றையெல்லாம் ஒரு மொழியின் செவ்வியல் இலக்கியங்கள் என்று கருதல் இயலாது என்கிறார்.

பதினொன்றாவது கட்டுரை கதாசரித்து சாகரம்

காசுமீரக் கவிஞர் சோமதேவரால் 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற கதை ஆறுகளின் கடல் என்னும் பொருள் கொண்ட ‘கதா-சரித-சாகரம்’. 22000 சொற்பூக்களை(சுலோகங்களை) உடையது. புத்த சமய சாதகக் கதைகளை மூலமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டதாக இந்நூலிலேயே குறிப்பு உள்ளது. குணாத்தியா எழுதிய பிருகத்து கதாவே இதன் மூலம் எனச் சோமதேவரே குறிக்கிறார்.சோமேந்திர வியாச தாசர் பிருகத்து கதாவைத் தழுவிய பிருகத்து கதா மஞ்சரி என்னும் நூலை கதா சரித சாகரதம் வரும் முன்னரே எழுதியிருந்தார். எனினும் இவற்றிற்கெல்லாம் மூலம் சமற்கிருத நூலல்ல. பிராகிருதக் கிளைமொழியிலிருந்து சமற்கிருதத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதே இஃது என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மேற்குறித்த நூலைப்பற்றி இத்தகவல்களை மட்டுமே பேரா.ப.ம.நா.தெரிவிக்கிறார்.

ஆதிசங்கரரும் பத்தி இலக்கியங்களும் குறித்துப் பன்னிரண்டாவது கட்டுரை விளக்குகிறது.  

வடபுலத்து இலக்கணக்காரர்கள் அவர்களுடைய மொழியை ஆராயும் முன்னரே தமிழர்கள் பிற மொழிச்சார்பில்லாத எழுத்துமுறையைக் கொண்டிருந்தார்கள் என்று பருனெல் கூறி நிறுவவும் செய்துள்ளார்.எனவே, சங்கரர் காலத்திற்கு முன்னரே தமிழ் நல்ல வளர்ச்சி பெற்றதாயும் பேரிலக்கியங்களையும் கொண்டதாகவும் இருந்தது; சமற்கிருத நூலுக்கும் தமிழ் நூல் ஒன்றுக்கும் ஒற்றுமை காணும்போதெல்லாம் அகச்சான்றுகள் கொண்டு சமற்கிருத நூலே தமிழ் நூலிலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும் என்று முடிவு கட்டுவதில் தவறில்லை என்கிறார் பேரா.ப.ம.நா.

சங்கரர் தமது அத்துவைதத் தத்துவத்தைக் கண்டறிய சமயக்குரவர்களின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டார் என அறிஞர் எல்லீசு சான்றுகளுடன் கூறுகிறார்

சங்கரரின் அத்துவைதத் தத்துவங்களின் மூலங்கள் தமிழ் நாட்டுப்புறப்பாடல்களில் காணக்கிடக்கின்றன என்றுசார்லசு கோவர் (Charles Gover) கூறுகிறார். “அத்துவைததத் தத்துவத்தின் அடிக்கருத்துகள், திராவிடத் தொல்குடியினருக்கு(ப் பழந்தமிழருக்கு) உரியவை என்பது எல்லாப் பழைய திராவிட இலக்கியங்களின் தன்மையும் அவ்வாறிருப்பதால் உறுதி செய்யப்பெறுகிறது. இத் தொகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் யாவும் தூய திராவிடத் தன்மையே கொண்டவை அல்லாமல் வேறு தன்மை கொண்டவை என்று ஒருக்காலும் கருத முடியாது. இப்பாடல்கள் எல்லாம் பிராமணச் சார்பற்றவை; பிராமணச் செல்வாக்கிற்கு எதிரானவை.”  என்கிறார்.சங்கரர் காலத்திற்கு முன்னும் பின்னும் எழுதப்பெற்ற தமிழ்ப்பாடல்கள் அத்துவைதத் தத்துவமானது நீண்ட தமிழ் மரபுடையதென்பதையும் சங்கரர் அம்மரபிற்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறார் என்பதையும் கோவர் ஐயத்திற்கிடமின்றி நிறுவியுள்ளார். 

ஆதிசங்கரர் எழுதியதாகக் கருதப்பெறும் செளந்தரிய இலகரியிலும் பழந்தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கைக் காண இயலும்.

இவ்வாறு சங்கச் சான்றோர் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், பத்தி இலக்கியப்பாடல்கள் ஆகியவற்றின் அழுத்தமான செல்வாக்கு சங்கரரின் சமற்கிருதப் படைப்புகளிலும் விளக்கவுரைகளிலும் உள்ளது என்பதைப் பேரா.ப.ம.நா. நமக்கு விரிவாகச் சான்றுகளுடன் விளக்குகிறார்.

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 53/69 )



Wednesday, May 19, 2021

அகில இந்திய அறிவுமரபிற்குத் தமிழின் பங்களிப்பு பேரளவினது! – ப. மருதநாயகம்

 

அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 50 / 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

51 / 69

 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

ஏழாவதாக வடமொழிக் கவிதையியல் நூல்கள் குறித்த கட்டுரை அமைந்துள்ளது.

“சமற்கிருதத்தில் கவிதை, நாடகம்பற்றிய கோட்பாடுகளை ஆராயும் பல நூல்கள் காணப்படுகின்றன.இவற்றுள் பல தமிழை முதலாகக் கொண்ட பிற இந்திய மொழிகளில் காலந்தோறும் எழுதப்பெற்ற நூல்களின் தழுவல்களாகவும் மொழி பெயர்ப்புகளாகவும் சுருக்கங்களாகவும் விரிவாக்கங்களாகவும் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை ” என்கிறார் பேரா.ப.ம.நா. பாணினியின் அட்டாத்தியாயி, பரத முனிவரின் நாட்டிய சாத்திரம், பாமகர், ஆளந்தவர்த்தனர், அபிநவகுத்தர், வாமனர், குந்தகர்போன்றவர்கள் எழுதிய நூல்கள்யாவுமே தொல்காப்பியத்திற்குக் காலத்தால் பிற்பட்டவை என அறிஞர் ஆய்ந்து தெரிவித்துள்ளனர்.

இவற்றுள் பாணிணியின் இலக்கண நூலிலும் நாட்டிய சாத்திரத்திலும் கவிதையியல்பற்றி ஒன்றும் இல்லை. சமற்கிருத நூலார் கூறும் கவிதையியல் குறைகளையும் தமிழின் தழுவல்களையும் அடுத்து எடுத்துரைக்கிறார். கிரேக்க உரோமானியக்கவிதையியல் நூல்கள் பற்றி எலுடர் ஆல்சன்(Elder Olson) கூறும் கருத்துகள் சமற்கிருதக் கவிதையியல் நூல்களுக்கும் பொருந்தும் என்கிறார். அவையாவும் கவிஞர்களின் தகுதிகள், கவிதையின் பயன், கவிதையின் ஏதேனும் ஒரு கூறுபற்றிப் பேசுகின்றனவே தவிர, ஏற்கெனவே சமற்கிருதத்தில் எழுதப்பெற்ற கவிதைகளை யெல்லாம் ஆராய்ந்து தன்னுணர்ச்சிப்பாக்களைத் தெளிவாக வரையறுக்கவில்லை என்கிறார். சமற்கிருதக் கவிதையியல்பற்றி(History of Classical Sanskrit Literature என்னும் நூலில்) அதனாசிரியர் பட்டாச்சார்சி என்னும்  வங்கப்பெண்மணியும் அவ்வாறுதான் எழுதியுள்ளார் எனக் குறித்துள்ளார். சமற்கிருதத்தில் முதலில் எழுதப்பெற்ற நாடகங்கள் கிரேக்க இன்பியல் நாடகங்களின் தாக்கத்திற்கு உட்பட்டவை என்பது அன்னார் தெரிவிக்கும் ஆய்வு முடிவு.

நார்த்துராப்பு ஃபிரை(Northrop Frye) என்னும் கனடாக் கல்வியாளர் தமது திறனாய்வின் பகுப்பாய்வு(Anatomy of Criticism) என்னும் நூலில் எல்லா மொழி இலக்கியங்களையும் எல்லா வகை இலக்கியங்களையும் உள்ளடக்கக்கூடிய ஒரு கவிதை இயலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவர் முயற்சி பெரும் பாராட்டிற்குரியதாயினும் தொல்காப்பியரின் வரையறையிலும் பாகுபாட்டிலும் உள்ள நிறைவையும் தெளிவையும் அவரது இலக்கியவியலில் காணமுடியாது என்கிறார் பேரா.ப.ம.நா.

சமற்கிருதக் கவிதையியல் நூல்களுக்கு இற்றைக்கு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு  முன் தரப்பட்ட விளம்பரம் அளவிடற்கரியது. ஆனால், தொனி, வக்குரோத்தி போன்ற கோட்பாடுகளெல்லாம் தொல்காப்பியர் கூறும் இறைச்சி, உள்ளுறை போன்ற கோட்பாடுகளுக்குப் பெரிதும் கடன்பட்டவை யென்றும் தமிழ்க்கவிதையியலுக்குச் சமற்கிருதக் கவிதையியல் குறைந்தது பத்து நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டதென்றும் சியார்சு ஆர்த்து தமது ஆய்வுமுடிவுகளை வெளியிட்டார். இதன் பின்னர் அத்தவறான பரப்புரை எடுபடாமல் போயிற்று.தொல்காப்பிய-சங்கக் கவிதையியல்பற்றி ஏ.கே.இராமானுசன்  எழுதிய கட்டுரைகள் சமற்கிருதக் கவிதையியலின் பொய்ப்பெருமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

பதஞ்சலியின் (இ)யோக சூத்திரம் குறித்து விளக்குவது எட்டாம் கட்டுரை.

தமிழ்இலக்கியங்களின் காலத்தையும் சிறப்புகளையும் பின்னுக்குத் தள்ளும் ஆரியத்தைப் பல இடங்களிலும் சுட்டிக்காட்டுவதுபோல் இதிலும் பேரா.ப.ம.நா. பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:

திருக்குறளின் கருத்துகளும் உவமைகளும் உருவகங்களும் மனுநூலிற்கும் கெளடலீயரின் அருத்தசாத்திரத்திற்கும் வாத்தியாயனரின் காமசூத்திரத்திற்கும் சுக்கிரநீதிக்கும் சென்றதைப்போலவே பதஞ்சலியின் இயோகசூத்திரத்திற்கும் சென்றிருப்பதைக் காணலாம். எல்லா வடநூல்களும் எல்லாப் பழந்தமிழ் நூல்களுக்கும் முந்தியவை என்ற தவறான எண்ணம் தக்க ஆதாரங்கள் இல்லாமல் வலியுறுத்தப்பட்டபோது ஒற்றுமைகள் கண்டபோதெல்லாம் வடநூல்களிலிருந்தே தமிழ்நூல்கள் அவற்றை யெல்லாம் பெற்றுள்ளன வென்பதைத் தமிழறிஞர்களும் தாழ்வுமனப்பான்மை காரணமாகவும் பட்டம் பதவிகள் மேலிருந்த ஆசை காரணமாகவும் ஏற்றுக் கொண்டனர்.

வையாபுரி(ப் பிள்ளை) இத்தகைய முடிவுகளுக்குத் தம்மாலான பங்களிப்பைச் செய்தார். பண்டிதமணி, தெ.பொ.மீ. போன்றவர்கள்  தமிழும் வடமொழியும் அறிந்தவர்களாயிருந்தும் பல ஒப்புமைகளைத் தாமே கண்டறிந்த வழியும் அவை தமிழ் இலக்கியங்களிலிருந்தே வடநூல்களுக்குச் சென்றிருக்க வேண்டும் என்று சொல்லாமல், அகில இந்திய அறிவு மரபிலிருந்து தமிழ், வடமொழிப்புலவர்கள் இவற்றைப் பெற்றிருக்க வேண்டுமென்று கூறினர். அருத்தசாத்திரத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்த பண்டிதமணி திருக்குறளிலும் வடநூலிலும் காணப்படும் ஒற்றுமைகள் பலவற்றைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் திருக்குறளைக் காலத்தில் பிந்தையதாகக் கூறிய அக்காலச் சிலரின் கருத்துகளால் திருக்குறள்தான் மூலநூல் என்று சொல்லத் தயங்கியுள்ளார்.

‘நூல்களிலெல்லாம் சிறந்த நூலாகிய திருக்குறள்’(Thirukkural as the Book of Books) என்னும் ஆங்கிலக் கட்டுரையில், விபுலானந்த அடிகள் திருக்குறளுக்கும் (இ)சூத்திரத்திற்கும் உள்ள ஒப்புமைகளைக் கூறுகிறார். ஏறத்தாழ 40அதிகாரங்களில் உள்ள குறள் கருத்துகள் (இ)யோகசூத்திரத்தில் உள்ளதை விளக்குகிறார். இருப்பினும் அப்போது தவறான காலக்கணிப்பு திணிக்கப்பட்டதனால், திருக்குறள்தான் மூலம் என்று சொல்லத் தயங்கியுள்ளார்.

பதஞ்சலி முனிவரின் நூலில் கையாளப்படும் அறுபத்தைந்திற்கு மேற்பட்ட திருக்குறள் பாக்களை நமக்கு எடுத்துக் கூறுகிறார். ஆதலின் திருக்குறளின் தாக்கம் அவரது நூலில் மிகுதியாக உள்ளதை மேனாட்டாய்வாளர்கள் ஏற்றுள்ளனர். எனவே, அகில இந்திய அறிவு மரபிற்குத் தமிழின் பங்களிப்பு எவ்வளவு பேரளவினது என்பதை இதன் மூலம் பேரா.ப.ம.நா. உணர்த்துகிறார்.

பாடதாடிதகாவும் பாணா நாடகங்களும் ஒன்பதாம் கட்டுரையில் விளக்கப்படுகின்றன.

பாடதாடிதகா என்பது பாணா என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் ஆசிரியர் சியாமிலகா கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மன்னன் கந்த குபுதனின் காலத்தில் வாழ்ந்தவர். நான்கு புகழ்பெற்ற பாணாக்களில் பாடதாடிதகா மிகவும் நீண்டது. பாணாவை இயற்றிய ஆசிரியரே விடனாக மேடையில் நடிப்பது வழக்கம். இவ்வாறு பாணா வகையையும் பாடதாடிதகாவையும் நமக்கு அறிமுகம் செய்தபின் பாடதாடிதகாவின் கதைச்சுருக்கத்தை அளிக்கிறார். மேலும் பின் வரும் கருத்துகளையும் நமக்குத் தெரிவிக்கிறார்.

தமிழில் உள்ள ஆற்றுப்படை, பரணி, கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கியச்சுவையுடன் பாணா என்னும் சமற்கிருதச் சிற்றிலக்கிய வகையை ஒப்பிட அது தகுதியற்றது; அருவருப்பூட்டும் இழிகாமக் குப்பைகள் என வடநூலாரே பாணா வகைகளைக் கூறுகின்றனர். 

வாரருசி என்பவரால் கி.பி.முதலாம் நூற்றாண்டில் எழுதப்பெற்றதாகக் கூறப்படும் உபயாபிசாரிகா என்னும் பாணா வகை நாடகம்பற்றியும் அதன் கதைச்சுருக்துடன் தெரிவிக்கிறார். எல்லாப் பாணா வகையும் தரக்குறைவானவையாகத்தான் உள்ளன. தரமற்றபடைப்புகளை எல்லாம் எங்ஙனம் செவ்வியல் இலக்கியம் எனச் சொல்ல இயலும்? 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 52/69 )



Tuesday, May 18, 2021

வருண வரையறையை வலியுறுத்தும் சுக்கிரநீதியும் பகவத்துகீதையும் எங்ஙனம் செவ்விலக்கியம் ஆகும்?

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 49 / 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

50 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

சுக்கிரநீதி குறித்து ஐந்தாம் கட்டுரை ஆய்வு மேற்கொள்கிறது.

சுக்கிரநீதி ஒரு தொகுப்பு நூல். மேலும் இதில் பலரால் பல காலங்களில் பல பொருள்கள்பற்றி எழுதியவை சேர்க்கப்பட்டுள்ளன. பல பொருள்கள் மீண்டும் மீண்டும் பேசப்பெறுதலும் முரண்பட்ட கருத்துகள் வெவ்வேறு அத்தியாயங்களில் இடம் பெறுதலும் பாடுபொருள்கள் ஒழுங்காக அமையாமையும் சுக்கிரநீதி இடைச்செருகல்கள் மிகக் கொண்ட தொகை நூல் என்பதை நிலைநாட்டும் என்கிறார் பேரா.ப.ம.நா.

சுக்கிரநீதி எடுத்தாளும் திருக்குறள் பலவற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறார். இவ்வாறு திருக்குறளின் உயரிய கருத்துகள் ஆங்காங்கே பொதிந்து கிடந்தாலும் சுக்கிரநீதி வருணவேறுபாட்டை வலியுறுத்துவதாலும் பெண்ணிழிவு பேசுவதாலும் வேறு பல பாடுபொருள்களில் தமிழ்மறைக்கு எதிராக மாறுபட்டு விளங்குவதாலும் நல்லறநூல் ஆகாது என்பதையும் விளக்குகிறார்.

கா.சுப்பிரமணிய(பிள்ளை) தம் ஆராய்ச்சி மதிப்புரையில், சுக்கிரநீதி  திருக்குறளுக்குப் பல நூற்றாண்டுகள் பின்னது என்பதை நிறுவியது இதில் கூறப்பட்டுள்ளது. கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது சுக்கிரநீதி என்றும் அறிஞர்கள் கருத்தறிவித்துள்ளனர்.

மனுநீதி, சுக்கிர நீதி, கெளடலீயம் ஆகிய மூன்று சமற்கிருத நூல்களுள் அறவிலக்கியம் என்ற முறையில் சுக்கிர நீதி உயர்ந்தது என்று சமற்கிருத அறிஞர்கள் கருதுவர். அதுவே, திருக்குறளுக்கு மிகையாகக் கடன்பட்டிருப்பது உண்மை. ஏனைய இரண்டும் வருணப் பாகுபாட்டைப் போற்றும் அளவிற்குச் சுக்கிரநீதி போற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் இம்மூன்றும் திருக்குறளைப்போல் மனித வாழ்க்கையைக் கால, இட, நிற, இன, மொழி வேறுபாடின்றி நோக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதோடு மிகக் குறுகிய மனப்பான்மை கொண்டாரால் தொகுக்கப்பட்டவை யென்பதும் நம்மவர் அறியற்பாலது.

பகவத்துகீதைபற்றிக் கூறுவது ஆறாவது கட்டுரை.

சமற்கிருத நூலார் பகவத்து கீதை தொன்மையான நூல் என்று கதைகள் பல கட்டி உலவ விட்டாலும் கி.பி.ஏழாம் நூற்றாண்டிற்கு முன் இது தோன்றியிருக்க வழியில்லை என ஆய்வறிஞர்கள் தெளிவுபடுத்துகின்றனர். கீதையில் கூறியது கூறல், முன்னுக்குப் பின் முரண்படக் கூறல், கூறத் தேவையற்றதை மீண்டும் மீண்டும் கூறல், பொருளைத் தெளிவாக்காது சொற்களை அடுக்குதல் போன்ற குறைகளெல்லாம் தவிர்க்கப்படாதது வருந்தற்குரியதாகும். உலக மாந்தரின் உய்வுக்கு எந்நாளும் பொருந்தக்கூடிய வழி கூற வேண்டிய கீதை சில குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட குழுக்களின் பழக்க வழக்கங்களை ஏற்றிப் பேசுவதும் மக்களுக்குள் வேறுபாடுகளைக் கற்பித்துச் சிலரைப் போற்றுவதும் கீதையை உலகப் பொதுமறையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்குக் காரணங்களாகும்.. . . நால்வருணம்பற்றியும் அவற்றுள் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தியும் மக்களுள் ஒரு பகுதியினரைச் சூத்திரர் என்று இழிவுபடுத்தியும் பெண்ணினத்தை முற்றும் குறையுடையதாக மதிப்பிட்டும் பேசும் பகுதிகளெல்லாம் இறைவனின் கூற்றென்று சொல்லப்படும் நூலில் இடம் பெற்றிருக்கக் கூடாது என்கிறார் பேரா.ப.ம.நா. அவ்வாறு இடம் பெற்ற நூலெப்படி இறைவனால் சொல்லப்பட்டிருக்கும் என்றும் இந்நூலை எப்படிப் பொதுநூலாகக் கருத முடியும் என்றும் நமக்கு நல்லெண்ணத்தை விதைக்கின்றார் அவர்.

நால்வருணங்களுள் பிராமணரைத் தவிர ஏனையோரைக் கீழானவராக இறைவன் கருதுவதாகத் தெரிவிக்கும் பாடல்களும் கீதையில் உண்டுஎல்லாப் பெண்களையும் கீழ் வருணத்தார் எனவும் கீழானவர்களாகவும் இழிவாகக் கூறியுள்ள நூல் எங்ஙனம் சிறப்பாக இருக்க முடியும்?

பகவத்து கீதையின் ஆணைகள் ஒரு சார்புடையவை என்பது வெளிப்படை. எல்லா உயிர்களும் ஒத்த உயர்வுடையவை என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டு மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு பகுதிகளாகப் பிரித்து அவரவர்க்குரிய தொழில்களை முறையின்றி விதி்த்துப் பெண்ணினம் முழுவதையும் தரக்குறைவாகத் தாழ்த்தி வைக்கும் குமுகாய அமைப்பு எந்த விதத்திலும் எவ்வகையிலும் எக்காலத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. அதனை அறமென்று சொல்வதைச் சான்றோர் ஏற்க மாட்டார். அத்தகைய அமைப்புடைய குமுகாயத்தைக் கண்டு நல்லறிவு உடையார் அறச்சினம் கொள்வர் என்பது திண்ணம்.பகவத்துகீதை பேசும் தருமம் மனித ஒருமைப்பாட்டு உணர்வுக்கு முற்றிலும் மாறானது. வள்ளுவர் சுட்டும் அறவாழ்விற்குப் பொருந்தாது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் எல்லாரையும் சமமாக மதிக்கும் அறத்திற்கு எதிரான ஒருதலைச்சார்புடைய கீதை எங்ஙனம் செவ்வியல் நூலாகும்?

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 51/69 )

 



Monday, May 17, 2021

வருண நீதி கூறும் அருத்தசாத்திரம் என்னும் கெளடலீயம் எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகும்?

அகரமுதல

      18 May 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 48 / 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

49 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

மூன்றாவது கட்டுரை அருத்தசாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா? எனக் கேட்கிறது.

‘அருத்த சாத்திரம்’ மெளரியர் காலத்து ஆவணமா?(Is the Arthasastra a Mauryan Document?) எனும் கட்டுரையில் மார்க்கு மக்கிளீசு(Mark Mcclish) எனும் மேலைஅறிஞர் அருத்தசாத்திரத்தின் காலம்பற்றியும் அதனைத் தொகுத்தவர்கள்பற்றியும் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் நாமறிய வேண்டியவை. அது மெளரியர் காலத்தில் எழுதப்பெற்ற நூலன்று என்றும் அதனை எழுதியவர் சாணக்கியன் என்ற பெயரில் சந்திரகுபுத மெளரியன் எனும் மன்னனுக்கு அமைச்சராக இருந்தவர் என்று கருதப்படுபவர் அல்லர் என்றும் அது சந்திரகுபுத மெளரியனுக்குப் பல நூற்றாண்டுகள் பின்னால் அறிஞர்கள் சிலரால் தொகுக்கப்பட்ட நூலென்றும் அவர் சான்றுகளோடு தெளிவுபடுத்தியுள்ளார்.

இவ்வாறு இக்கட்டுரையத் தொடங்கி வைக்கிறார் பேரா.ப.ம.நா.

அவர்தரும் மக்கிளீசின் மேற்கோள்களில் ஒன்று வருமாறு:

மெளரியப் பேரரசு தோன்றிய காலத்திலேயே சாணக்கியன் என்னும் பிராமணனால் அருத்தசாத்திரம் எழுதப்பெற்றது என்ற கதைக்கு கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன் எவ்விதமான ஆவணச்சான்றும் இல்லை. நான்காம் நூற்றாண்டிற்குப் பின் வந்த புராணங்கள், ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய பஞ்சதந்திரத்தின் அறிமுகவுரை(கதா முகம்), ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்திராராட்சசம், ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நீதிசாரம்போன்ற நூல்களிலேயே ‘சாணக்கிய சந்திரகுபுத கதை சொல்லப்படுகின்றது.(ப.282). சாணக்கியனை அளவுகடந்து புகழ்ந்து பேசும் கற்பனைச் செய்தி மகாவமிசமண இலக்கியங்களான பரிசிட்டபருவன், ஏமச்சந்திரனின் திரிசட்டிசலாக புருச சரிதம், காசுமீரி சமற்கிருதக் கதை இலக்கியமான கதாசரிதாகரம், பிருகதகதா மஞ்சரி, பிசாகதத்தரின் பத்துனாராட்சம் போன்ற நூல்களிலேயே இடம் பெறுகிறது.இவற்றுள் எதிலும் அருத்த சாத்திரம் சாணக்கியனால் எழுதப்பெற்றது என்ற குறிப்பு இல்லை(பக்.283).

மனுநூல் அருத்தசாத்திரத்திற்குப் பின் தோன்றியது என அதற்குரிய சான்றுகளையும் தந்துள்ளார்.

சாணக்கியா, கெளடில்யா என்ற இரு பெயர்களும் கோத்திரப்பெயர்கள்; எனவே ஒருவரையே குறிக்காது எனப் பரோ கூறியுள்ளதையும் நினைவூட்டுகிறார். அருத்தசாத்திரத்தின் பிரகரணத் தொகுப்பு அத்தியாயத் தொகுப்பிற்கு முந்தியது என்றும் இத்தொகுப்பிற்கும் மெளரியர் காலக் குமுகாயப்பண்பாட்டிற்கும் சாணக்கியர் என்பாருக்கும் எவ்வகைத் தொடர்புமில்லை என்பதும் மேலை அறிஞரின் கூற்று.

முந்தைய கட்டுரை அருத்தசாத்திரம் எனப்படும் கெளடலீயத்தின் காலம் குறித்தது. இக்கட்டுரையோ கெளடலீயம் நூலைப்பற்றியது.

கெளடலீயத்தில் திருக்குறள் கருத்துகள் சில இருப்பதால் அதற்குத் திருவள்ளுவர் கடன்பட்டுள்ளார் எனத் தவறாகச் சிலர் பரப்புரை மேற்கொள்கின்றனர். கெளடலீயடம் கி.பி.நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுவதால், திருக்குறளின் தாக்கத்திற்குக் கெளடலீயடம் உட்பட்டிருக்க வேண்டும் எனத் தெளியலாம்.

முன்னை ஆசிரியர்களால் எத்துணைப் பொருள் நூல்கள் கூறப்பட்டனவோ அவற்றைப் பெரும்பாலும் திரட்டி இப்பொருள்நூல் செய்யப்படுகின்றது என அருத்தசாத்திரம் எனப்படும் கெளடில்ய முதல் அத்தியாயம் கூறுகிறது.  எனவே, இஃது ஒரு தொகுப்பு நூல் என்பதில் ஐயமில்லை.

விண்டருனிட்சன், யாலி, கீத்து போன்ற மேலைக் கல்வியாளர்கள் சந்திரகுப்தனது காலத்தில் சாணக்கியர் என்ற பொருள் நூலாசிரியர் ஒருவரும் இருந்ததில்லை யென்பதற்குச் சான்றுகள் பல தருவர். கெளடலீயம் எனும் பொருள் நூல் கி.பி.மூன்றாம் நூற்றாண்டினதான யாக்கிஞய வல்கிய சுமிருதியைப் பெரிதும் தழுவியிருத்தலின் அதற்குப் பின்பு தோன்றியதே என்பார் யாலி. கையாளும் நடையிலும் வாக்கிய அமைப்பிலும் இது பழமையான சமற்கிருத நூலன்று என்பது கீத்தின் கருத்து.எனவே, அருத்த சாத்திரம் திருக்குறளுக்கு இரண்டு மூன்று நான்கு நூற்றாண்டுகளேனும் பிற்பட்ட தென்றறியலாம் எனப் பேரா.ப.ம.நா.விளக்குகிறார்.

மனு முதலான வடநூலார் பலர் உழவுத் தொழிலை இழிதொழில் என்றும் பிராமணரால் செய்யத்தக்க தென்றும் கூறியிருக்கக் கெளடலீயம் உழவுக்குச் சிறப்பிடம் அளிக்கும். இது குறளின் தாக்கத்தால் விளைந்ததாகும். பண்டிதமணி, “இந்நூலில் கூறிய முறைவைப்புத் தமிழ்நூலார் கொள்கையைத் தழுவியிருத்தலான் கெளடலீயர் தமிழர் பழக்க வழக்கங்களுள் சிறந்தனவற்றைத் தம் பொருள் நூலுக்கு உரியவாகக் கொள்ளும் கொள்கையுடையர் என்பது போதரும்” என்கிறார்.

அருத்தசாத்திரம் எடுத்தாண்டுள்ள திருக்குறள் கருத்துகள் பலவற்றை எடுத்து விளக்குகிறார். அவற்றில் ஓரிரண்டைப் பார்ப்போம்.

அறம், பொருள், இன்பம், உயிரச்சம் ஆகிய நான்கினாலும் ஆராயப்பட்ட தூயவர்களை அவரவர் தூய்மைக்கேற்ப அன்னார் தகுதிக்குரிய செயல்களில் நியமனம் செய்தல் வேண்டும் என்று பண்டை ஆசிரியர்கள்  வரைமுறைப் படுத்தினார். அருத்தசாத்திரம் முதல் அதிகரணத்தின் பத்தாம் அத்தியாயத்தில் இஃது இடம் பெறுகிறது. இக்கருத்து

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறம் தெரிந்து தேறப்படும்.  (திருக்குறள் 501)

என்னும் குறளின் கருத்தாகும்.

இருக்கு வேதத்திற்கு ஆய்வுரை எழுதியவரும் வேத விற்பன்னருமான சுந்தர ராசு என்பவர், வடநூல்கள் பண்டை ஆச்சாரியார்கள் என்று சுட்டுவது தமிழ் அறிஞர்களையே என்று குறிப்பிடுவார்.  எனவே இந்த இடத்தில் கெளடலீயர் குறி்ப்பது திருவள்ளுவரையே என எண்ணுதல் தவறாகாது.

திருக்குறள் மன்னன் செய்ய வேண்டிய செயலாகக்

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும் (திருக்குறள் 525)

கெளடலீயம் இதைப் பின்வருமாறு அப்படியே எதிரொலிக்கிறது.

மகிழ்ச்சியுடையாரை மிகுதியாகப் போற்றுதல் வேண்டும். மகிழ்ச்சியில்லாரை மகிழ்விக்கும் பொருட்டுப் பொருட்கொடையாலும் இன்சொற்களாலும் சிறப்பிக்க வேண்டும்(பக்.76).

திருக்குறள் கருத்துகளை மட்டுமல்லாமல் கெளடலீயம், உவமைகளையும் எடுத்தாள்வதையும் விளக்கியுள்ளார்.

திருக்குறள் கருத்துகளின் செல்வாக்கு கெளடலீயத்தில் இருந்தாலும் தமிழ் நெறிக்கு மாறான சமற்கிருத நூல் கருத்துகளையும் அந்நூல் கூறுகிறது.

தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொல்லுதலும் பொருள் சேர்த்தலும்கூட அவன் செய்யத்தக்கவை. வரையறையற்ற வஞ்சகச் செயல்களை மன்னன் செய்யலாமென்றும் மக்களை எவ்வாறு வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்றும் கெளடலீயம் கருதும்.

அதுகூறும் நீதியும் மனுநூல் கூறுவதுபோல் வருண வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட அநீதியேயாகும். பொருட்பாகுபாடானாலும் பரிசானாலும் தண்டனையானாலும் ஒருவன் பிறந்த வருணத்தைக் கொண்டே முடிவு செய்யப்படும்.

இவ்வாறு பல கருத்துகள் குறள்நெறிக்கு மாறானவை யாகும். திருக்குறள் வற்புறுத்தும் நீதிக்கும் கெளடலீயம் கூறும் நீதிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது என்னும் உண்மையை விளக்குகிறார். கெளடலீயம் மூட நம்பிக்கைகளைப் பரப்ப முயல்வதோடு அதன் ஆசிரியரே பல மூடநம்பிக்கைகள் கொ்ண்டிருந்தார் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன.

இவ்வாறு மூட நம்பிக்கைகளைப் பரப்பும்,பெண்ணை வைத்தும் தெய்வநம்பிக்கையை வைத்தும் பிறரை ஏமாற்றிப் பிழைக்க வழி கூறும், வருண அடிப்படையில் நீதி கூறும் அருத்தசாத்திரம் என்னும் கெளடலீயத்தை எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகக் கூற இயலும்?

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 50/69  )