18 May 2021 No Comment
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 48 / 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
49 / 69
வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)
மூன்றாவது கட்டுரை அருத்தசாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா? எனக் கேட்கிறது.
‘அருத்த சாத்திரம்’ மெளரியர் காலத்து ஆவணமா?(Is the Arthasastra a Mauryan Document?) எனும் கட்டுரையில் மார்க்கு மக்கிளீசு(Mark Mcclish) எனும் மேலைஅறிஞர் அருத்தசாத்திரத்தின் காலம்பற்றியும் அதனைத் தொகுத்தவர்கள்பற்றியும் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் நாமறிய வேண்டியவை. அது மெளரியர் காலத்தில் எழுதப்பெற்ற நூலன்று என்றும் அதனை எழுதியவர் சாணக்கியன் என்ற பெயரில் சந்திரகுபுத மெளரியன் எனும் மன்னனுக்கு அமைச்சராக இருந்தவர் என்று கருதப்படுபவர் அல்லர் என்றும் அது சந்திரகுபுத மெளரியனுக்குப் பல நூற்றாண்டுகள் பின்னால் அறிஞர்கள் சிலரால் தொகுக்கப்பட்ட நூலென்றும் அவர் சான்றுகளோடு தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறு இக்கட்டுரையத் தொடங்கி வைக்கிறார் பேரா.ப.ம.நா.
அவர்தரும் மக்கிளீசின் மேற்கோள்களில் ஒன்று வருமாறு:
மெளரியப் பேரரசு தோன்றிய காலத்திலேயே சாணக்கியன் என்னும் பிராமணனால் அருத்தசாத்திரம் எழுதப்பெற்றது என்ற கதைக்கு கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன் எவ்விதமான ஆவணச்சான்றும் இல்லை. நான்காம் நூற்றாண்டிற்குப் பின் வந்த புராணங்கள், ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய பஞ்சதந்திரத்தின் அறிமுகவுரை(கதா முகம்), ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்திராராட்சசம், ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நீதிசாரம்போன்ற நூல்களிலேயே ‘சாணக்கிய சந்திரகுபுத கதை சொல்லப்படுகின்றது.(ப.282). சாணக்கியனை அளவுகடந்து புகழ்ந்து பேசும் கற்பனைச் செய்தி மகாவமிசமண இலக்கியங்களான பரிசிட்டபருவன், ஏமச்சந்திரனின் திரிசட்டிசலாக புருச சரிதம், காசுமீரி சமற்கிருதக் கதை இலக்கியமான கதாசரிதாகரம், பிருகதகதா மஞ்சரி, பிசாகதத்தரின் பத்துனாராட்சம் போன்ற நூல்களிலேயே இடம் பெறுகிறது.இவற்றுள் எதிலும் அருத்த சாத்திரம் சாணக்கியனால் எழுதப்பெற்றது என்ற குறிப்பு இல்லை(பக்.283).
மனுநூல் அருத்தசாத்திரத்திற்குப் பின் தோன்றியது என அதற்குரிய சான்றுகளையும் தந்துள்ளார்.
சாணக்கியா, கெளடில்யா என்ற இரு பெயர்களும் கோத்திரப்பெயர்கள்; எனவே ஒருவரையே குறிக்காது எனப் பரோ கூறியுள்ளதையும் நினைவூட்டுகிறார். அருத்தசாத்திரத்தின் பிரகரணத் தொகுப்பு அத்தியாயத் தொகுப்பிற்கு முந்தியது என்றும் இத்தொகுப்பிற்கும் மெளரியர் காலக் குமுகாயப்பண்பாட்டிற்கும் சாணக்கியர் என்பாருக்கும் எவ்வகைத் தொடர்புமில்லை என்பதும் மேலை அறிஞரின் கூற்று.
முந்தைய கட்டுரை அருத்தசாத்திரம் எனப்படும் கெளடலீயத்தின் காலம் குறித்தது. இக்கட்டுரையோ கெளடலீயம் நூலைப்பற்றியது.
கெளடலீயத்தில் திருக்குறள் கருத்துகள் சில இருப்பதால் அதற்குத் திருவள்ளுவர் கடன்பட்டுள்ளார் எனத் தவறாகச் சிலர் பரப்புரை மேற்கொள்கின்றனர். கெளடலீயடம் கி.பி.நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுவதால், திருக்குறளின் தாக்கத்திற்குக் கெளடலீயடம் உட்பட்டிருக்க வேண்டும் எனத் தெளியலாம்.
முன்னை ஆசிரியர்களால் எத்துணைப் பொருள் நூல்கள் கூறப்பட்டனவோ அவற்றைப் பெரும்பாலும் திரட்டி இப்பொருள்நூல் செய்யப்படுகின்றது என அருத்தசாத்திரம் எனப்படும் கெளடில்ய முதல் அத்தியாயம் கூறுகிறது. எனவே, இஃது ஒரு தொகுப்பு நூல் என்பதில் ஐயமில்லை.
விண்டருனிட்சன், யாலி, கீத்து போன்ற மேலைக் கல்வியாளர்கள் சந்திரகுப்தனது காலத்தில் சாணக்கியர் என்ற பொருள் நூலாசிரியர் ஒருவரும் இருந்ததில்லை யென்பதற்குச் சான்றுகள் பல தருவர். கெளடலீயம் எனும் பொருள் நூல் கி.பி.மூன்றாம் நூற்றாண்டினதான யாக்கிஞய வல்கிய சுமிருதியைப் பெரிதும் தழுவியிருத்தலின் அதற்குப் பின்பு தோன்றியதே என்பார் யாலி. கையாளும் நடையிலும் வாக்கிய அமைப்பிலும் இது பழமையான சமற்கிருத நூலன்று என்பது கீத்தின் கருத்து.எனவே, அருத்த சாத்திரம் திருக்குறளுக்கு இரண்டு மூன்று நான்கு நூற்றாண்டுகளேனும் பிற்பட்ட தென்றறியலாம் எனப் பேரா.ப.ம.நா.விளக்குகிறார்.
மனு முதலான வடநூலார் பலர் உழவுத் தொழிலை இழிதொழில் என்றும் பிராமணரால் செய்யத்தக்க தென்றும் கூறியிருக்கக் கெளடலீயம் உழவுக்குச் சிறப்பிடம் அளிக்கும். இது குறளின் தாக்கத்தால் விளைந்ததாகும். பண்டிதமணி, “இந்நூலில் கூறிய முறைவைப்புத் தமிழ்நூலார் கொள்கையைத் தழுவியிருத்தலான் கெளடலீயர் தமிழர் பழக்க வழக்கங்களுள் சிறந்தனவற்றைத் தம் பொருள் நூலுக்கு உரியவாகக் கொள்ளும் கொள்கையுடையர் என்பது போதரும்” என்கிறார்.
அருத்தசாத்திரம் எடுத்தாண்டுள்ள திருக்குறள் கருத்துகள் பலவற்றை எடுத்து விளக்குகிறார். அவற்றில் ஓரிரண்டைப் பார்ப்போம்.
அறம், பொருள், இன்பம், உயிரச்சம் ஆகிய நான்கினாலும் ஆராயப்பட்ட தூயவர்களை அவரவர் தூய்மைக்கேற்ப அன்னார் தகுதிக்குரிய செயல்களில் நியமனம் செய்தல் வேண்டும் என்று பண்டை ஆசிரியர்கள் வரைமுறைப் படுத்தினார். அருத்தசாத்திரம் முதல் அதிகரணத்தின் பத்தாம் அத்தியாயத்தில் இஃது இடம் பெறுகிறது. இக்கருத்து
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும். (திருக்குறள் 501)
என்னும் குறளின் கருத்தாகும்.
இருக்கு வேதத்திற்கு ஆய்வுரை எழுதியவரும் வேத விற்பன்னருமான சுந்தர ராசு என்பவர், வடநூல்கள் பண்டை ஆச்சாரியார்கள் என்று சுட்டுவது தமிழ் அறிஞர்களையே என்று குறிப்பிடுவார். எனவே இந்த இடத்தில் கெளடலீயர் குறி்ப்பது திருவள்ளுவரையே என எண்ணுதல் தவறாகாது.
திருக்குறள் மன்னன் செய்ய வேண்டிய செயலாகக்
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும் (திருக்குறள் 525)
கெளடலீயம் இதைப் பின்வருமாறு அப்படியே எதிரொலிக்கிறது.
மகிழ்ச்சியுடையாரை மிகுதியாகப் போற்றுதல் வேண்டும். மகிழ்ச்சியில்லாரை மகிழ்விக்கும் பொருட்டுப் பொருட்கொடையாலும் இன்சொற்களாலும் சிறப்பிக்க வேண்டும்(பக்.76).
திருக்குறள் கருத்துகளை மட்டுமல்லாமல் கெளடலீயம், உவமைகளையும் எடுத்தாள்வதையும் விளக்கியுள்ளார்.
திருக்குறள் கருத்துகளின் செல்வாக்கு கெளடலீயத்தில் இருந்தாலும் தமிழ் நெறிக்கு மாறான சமற்கிருத நூல் கருத்துகளையும் அந்நூல் கூறுகிறது.
தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொல்லுதலும் பொருள் சேர்த்தலும்கூட அவன் செய்யத்தக்கவை. வரையறையற்ற வஞ்சகச் செயல்களை மன்னன் செய்யலாமென்றும் மக்களை எவ்வாறு வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்றும் கெளடலீயம் கருதும்.
அதுகூறும் நீதியும் மனுநூல் கூறுவதுபோல் வருண வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட அநீதியேயாகும். பொருட்பாகுபாடானாலும் பரிசானாலும் தண்டனையானாலும் ஒருவன் பிறந்த வருணத்தைக் கொண்டே முடிவு செய்யப்படும்.
இவ்வாறு பல கருத்துகள் குறள்நெறிக்கு மாறானவை யாகும். திருக்குறள் வற்புறுத்தும் நீதிக்கும் கெளடலீயம் கூறும் நீதிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது என்னும் உண்மையை விளக்குகிறார். கெளடலீயம் மூட நம்பிக்கைகளைப் பரப்ப முயல்வதோடு அதன் ஆசிரியரே பல மூடநம்பிக்கைகள் கொ்ண்டிருந்தார் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன.
இவ்வாறு மூட நம்பிக்கைகளைப் பரப்பும்,பெண்ணை வைத்தும் தெய்வநம்பிக்கையை வைத்தும் பிறரை ஏமாற்றிப் பிழைக்க வழி கூறும், வருண அடிப்படையில் நீதி கூறும் அருத்தசாத்திரம் என்னும் கெளடலீயத்தை எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகக் கூற இயலும்?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 50/69 )
No comments:
Post a Comment