Thursday, February 18, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: ம. இராமச்சந்திரன்



அகரமுதல117, தை 10, 2047 / சனவரி 24, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: ம. இராமச்சந்திரன்

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu17

  மாணவர் ஆற்றுப்படை, புதுக்கோட்டையில் வாழும் வள்ளல் பு.அ. சுப்பிரமணியனார் மீது பாடப்பெற்ற கவிதையாகும். பு.அ. சுப்பிரமணியனார் மணிவிழா மலரில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது.29 இக்கவிதை எழுதப்பெற்ற காலம் சனவரித் திங்கள் 1959. நூற்றுத்தொண்ணூறு அடிகளை உடைய அகவல் கவிதை இது. ஆசிரியப்பா இனத்தில் நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்து. ஈற்றியலடி நாற்சீர் பெற்றும், ஈற்றடியின் இறுதிச்சீர் ஏகார ஓசையுடனும் முடிந்துள்ளது. ஆற்றொழுக்குப் போல சீரான நடையைக் கொண்டு விளங்குகிறது இம்மாணவர் ஆற்றுப்படை.
  மாணவர் ஆற்றுப்படை என்னும் இந்நூல் சங்ககாலச் செய்யுள் நடையைப் பெற்று விளங்கினாலும் புதிய பொருளுடன் (கருத்துடன்) பாடப் பெற்றுள்ளது எனலாம். இந்நூலர் தோன்றிய காலத்தே இதனை அடியொற்றி வேறு சில ஆற்றுப்படை நூல்களும் தோன்றியுள்ளதாக மது.ச. விமலானந்தம் கூறுகிறார்.
  ஆசானாற்றுப்படையை கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளை அவர்களும், தேனாற்றுப்படையை முனைவர் அ. சிதம்பரநாதனார் அவர்களும், காதலி யாற்றுப்படையை முனைவர் கணபதிபிள்ளை அவர்களும் சொற்பொழிவாற்றுப் படையைப் பால்வண்ண முதலியார் அவர்களும் பாடியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.30
மாணவர் ஆற்றுப்படையில் பொருள் நலம்
  பொருட் செல்வமின்றி கல்விச் செல்வம் பெறாது வாடும் சிறுவர் கூட்டம் இவ்வுலகில் மிகுதி. ஒருவர், தம் கல்விப் பசி தீர்ப்பார் இவ்வுலகில் யாரே உளர் என்று அலமந்து வாடி வருகிறார். ஒட்டிய வயிறும் குழிவிழுந்த கண்ணும் தளர்ந்த நடையுமாய் வருகிறார். இதனை,
‘           இளமையும் ஆர்வமும் ஏங்கிய உள்ளமும்
            தளர்ந்த நடையும் தனக்கே உரித்தாய்
            வேனிலில் அசைந்திடும் வெறும்கொம் போபோல்
            வந்திடும் சிறுவர்’ 31
என்று அவர்தம் வறுமையைக் கவிஞர் உருவகித்துக் கூறுகிறார். வாடிய உள்ளத்துடன் வரும் மாணவரை ஒருவர், ‘உன் துன்பம் யாது’ என வினவுகிறார். மாணவ இளைஞனும், ‘என் குறைதனைச் சொல்லக் கேண்மின்! ஐய! யான் பள்ளி இறுதிப் படிப்பினை முடித்துள்ளேன். முதல் வகுப்பில் தேர்வு பெற்றுள்ளேன். அதுவன்றி பள்ளியிலேயே முதன் மாணாக்கனாகவும் விளங்கியுள்ளேன். ஆயினும் என்ன செய்ய இயலும்? தந்தையை இழந்தவன் நான். உதவும் உற்றார் ஒருவரும் எனக்கு இல்லை. தரணியில் உயர் கல்வி கற்பதற்கு வழியில்லை. செல்வரிடம் சென்று கேட்டால் சினந்து துரத்துகிறார். பிறர்க்கென வாழ்வதாய் மேடையில் பேசிடும் மனிதர் தன்மை வேண்டின் மதிப்பதும் செய்திலர். கையை விரித்து மெய்ந் நடுக்குற்று வாய்கூசாமல் இல்லை என்பதோடு இழிப்புரை கூறி அனுப்புவர்.
இதனை ஆசிரியர்,
         ‘ மேடையில் அழகாய் விரிவுரை ஆற்றிடும்
            மாந்தரை வேண்டின் மதிப்பதும் செய்திலர்
            பிறர்க்கென வாழ்வதாய்ப் பேசிடும் அவர்கள்
            கையை விரித்து மெய்ந்நடுக் குற்று
            இல்லை என்றே ஏசிக் கடிந்தனர்’ 32
பிச்சை எடுக்க எவரிடமேனும் சென்றாலும் நகைப்பும், எள்ளலும், இரக்கவுரையும் செய்தனரே அன்றி ஒருவரும் பொருள் வழங்க முன்வரவில்லை.
  அரசினர் உதவித் தொகை பெற நான் தகுதியுடையவனாயினும் ஒரு கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்து சில திங்கள் கழிந்த பின்னரே அவ்வுதவித் தொகை எனக்குக் கிடைக்கும். இந்நிலையில் காசும் அற்ற நான் என்ன செய்ய முடியும்? எங்குப் பார்த்தாலும் சாதியும் மதமும் வளர்ப்பதற்கென்றே தோன்றிய கல்லூரிகள். பொருள் வசதி படைத்தவர் மட்டுமே சேரத் தகுந்த கல்லூரிகள், கற்கும் திறனும் ஆர்வமும் இருந்தும் கல்லூரிகளில் எனக்கு இடமில்லை. என் துன்பம் களைபவரை இவ்வுலகில் எங்கும் நான் காணவில்லை’ என்று மாணவன் கூறுகிறான்.
  உடனே பெரியவர் இளைஞனை நோக்கி, “அயர்ச்சி அடையாதே. உன் வாட்டம் போக்கும் வழிகள் சொல்வேன். தமிழ்நாட்டில் உள்ள செல்வர்களின் இயல்பினை யான் அறிவேன். நல்லறங்கள் பல செய்ய மாட்டார்கள். சான்றோரை அவர்தம் நிலையறிந்து போற்றமாட்டார்கள். தமிழ்மொழியைக் கற்க மாட்டார்கள். அறியாமை இருளை அகற்றும் கல்விக்கூடம் அமைக்க விழையார். தமிழ்ப்பணி புரிய விழையார். நாடு நலம் பெற உழைக்க எண்ணார். நல்லன செய்ய நினையார்.”33
  “மன்பதையில் அழியும் பொருள் செல்வத்தை ஆக்குவராரேயன்றி அழியாப் புகழை அடைய விரும்பார். பிறரால் சொல்லப்படும் புகழ்ச் சொல்லுக்கும் புலவரால் பாடப்படும் சிறப்பிற்கும் உரியவராய் இல்லாமல் மறைஇலை போல் மாய்ந்து விடுவார் பலர். அறுவகைச் சுவையுடைய உணவுப் பொருள்களை அளவில்லாமல் உண்டு. அது காரணமாகத்தான் உடலில் நோயைக் தோற்றுவிப்பர். உண்ணவும் உறங்கவும் உரைக்கவும் அன்றி வேறொன்றும் செய்யார். மருந்து என்று புலம்புவது எழுந்து செல்வதும் உட்காருவதும் அன்றி வேறொன்றும் அறியார். தம்முடைய வருவாய் அனைத்தையும் மருந்துக்கே செலவு செய்வார். தமக்கும் மற்றவர்க்கும் எவ்விதப் பயனுமில்லாமல் தம் வாழ்நாளை வீணாகக் கழிப்பார். அறிவுக்குப் பொருந்தாத பண்டிகைகள் பல கொண்டாடுவர். கண்மூடித்தனமாக சடங்குகள் பல செய்வர். திருமணம் என்றால் செலவிடும் தொகைக்கோ அளவில்லை. ஊரில் நடைபெற்ற திருமணங்களல் சிறந்தது உம் வீட்டுத் திருமணம் என்று பிறர் பாராட்டும் பொருட்டுக் கடனை வாங்கிக்களிப்பர். தம் மக்களை சான்றோர் பாராட்டும் அவையில் முந்தியிருக்கச் செய்தார். பல்வகை அணிகலன் பகட்டாய் அணிவர். நிலத்திற்குப் பாரமாய்க் காட்சியளிப்பார்.”
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், சுப்பிரமணியனார் மணிமலர், வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1959, பக். 130-132.
  2. மது.ச. விமலானந்தம், தமிழ்ப்பொழில், தொகுதி. 34,35, கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடு, கரந்தை, செப்டம்பர் 1959. பக்.160.
  3. சி. இலக்குவனார், மாணவர் ஆற்றுப் படை,அ-ள் 1-4
  1. சி. இலக்குவனார், மாணவர் ஆற்றுப் படை,அ-ள் 14-18
  1. சி. இலக்குவனார், மாணவர் ஆற்றுப் படை,அ-ள் 35-39
(தொடரும்)
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18)

Friday, February 12, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: ம. இராமச்சந்திரன்

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: ம. இராமச்சந்திரன்

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

16

மாணவர் ஆற்றுப்படையும் மற்றைய ஆற்றுப்படைகளும்
  பத்துப்பட்டுள் கூறப்பெற்ற ஆற்றுப்படை நூல்கள் ஐந்தனுள் திருமுருகாற்றுப்படை மட்டும் சிறிது வேறுபட்ட தன்மையுடையது எனலாம். இறையருள் பெற்ற புலவன் ஒருவன், இறையருள் பெறச் செல்லும் புலவன் ஒருவனுக்கு, இறைவன் உறையும் இடங்கள், இறைவனைக் காணச் செல்லும் வழிகள், அடியவனை நோக்கி இறைவனே நாடிவந்து, காட்சி தந்து இன்பம் நல்கி இன்னருள் வழங்குகின்ற செய்திகளைக் கூறும் ஒப்பற்ற நூலாகும். மாணவர் ஆற்றுப்படையோ, வறுமை காரணமாக இளமையிற் கல்விச் செல்வம் பெற வசதி இல்லாது வருந்தும் இளைஞர் ஒருவனுக்கு, அவன் கல்விச் செல்வம் பெறுவதற்கு உரிய இடம்(ஊர்), கல்வித் தொண்டு புரியும் தலைவனின் (இயல்பு)பண்பு, தலைவனை அடையும் வழிமுறைகள், அத்தலைவனை அடைவார் பெரும் சிறப்பு முதலியவற்றைக் கூறும் அருமையான கவிதை நூலாகும்.
மாணவர் ஆற்றுப்படை தோன்றிய சூழல்
  பள்ளி இறுதி வகுப்பு முடித்துவிட்டு மேற்கொண்டு படிப்பதற்கு வசதி இல்லாமல் வருந்தித் துன்புற்றார் இந்நூலாசிரியர் இலக்குவனார். காரணம் அவர் ஏழு வயதுச் சிறுவனாக இருந்தபோதே தன் ஆருயிர்த் தந்தையை இழந்து விட்டார். அதனால் இளமை காலத்திலேயே வறுமை அவரை ஆட்கொண்டு விட்டது. முன்னோர் (மூதாதையர்) விட்டுச் சென்ற நிலமெல்லாம் குடும்பச் செலவால் ஏற்பட்ட கடன்களுக்கே சரியாய்ப் போயிற்று. உணவுக்கு வழியறியாது திண்டாடும் ஒருவர் எங்ஙனம் கல்விச் செல்வத்தைப் பெற இயலும். ‘தந்தையோடு கல்வி போம்’ என்னும் பழமொழி இவர் வாழ்க்கையில் உண்மையாயிற்று. உற்றாரையும் உறவினரையும் செல்வர் பலரை நாடியும் உதவி கிட்டவில்லை.
  ‘காலையில் கல்விக் கூடம் செல்லும் நான், ஒன்றுமே உண்ணாமல் நீராகாரம் (சோற்றிலிருந்து வடிக்கப்பட்ட நீர்) மட்டும் உண்டு சென்றுள்ளேன். பிறகு நண்பகல் வந்து தான் உண்பேன்’25 என்கிறார்.
  இக்காலத்தில் பள்ளிக்கூடங்களில் செயல்படுத்துப்படும் சத்துணவுத் திட்டம் போல ஆசிரியரின் இளமைக்காலத்தில் இருந்திருந்தால் வறுமையில் வாட்டம் அடைந்திருக்க மாட்டார். ‘கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்ற ஒளவையார் மொழி முற்றிலும் உண்மையே. தலைவியைப் பிரிந்து தலைவன் செல்லும் பாலை நிலைத்தின் கொடுமையைக் கூற வந்த சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, ‘வறியவ னிளமைபோல் வாடிய சினையவாய்’26 என்று சினையின் வாட்டத்திற்கு இளமைக் காலத்தில் ஒருவன் அடைகின்ற வறுமைநிலையை ஒப்பிட்டுக் கூறியத எண்ணத்தக்கது.
  ஒருவர் எச்செல்வத்தையும் இழக்கலாம். ஆனால் கல்விச் செல்வத்தை மட்டும் இழக்கக்கூடாது என்பது இலக்குவனார் கருத்தாம்.
         ‘ கற்கை நன்றே கற்கை நன்றே
            பிச்சை புகினும் கற்கை நன்றே
என்று ஒளவையாரின் முதுமொழி பொன்னே போல போற்றத்தக்க சிறப்புடையதாகும்.
  கல்விச் செல்வம் பிற எல்லாச் செல்வங்களினும் மேம்பட்டது. கல்விச் செல்வம் அழியாத சிறப்புடையது. இதனைத் திருவள்ளுவர்.
         ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
            மாடல்ல மற்றை யவை’27
என்று கூறுகிறார்.
          ‘ வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
            கீழ்ப்பா லொருவன் கற்பின்
            மேற்பா லொருவனு மவன்கட் படுமே’ 28
என்று பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் கல்விச் செல்வத்தின் மேன்மை குறித்துப் பாடுவதை அறிந்து கொள்ளலாம்.
  வறுமை காரணமாக கல்விச் செல்வத்தைப் பெறாது வாழ்நாளை வீணாளாகக் கழிப்பார் பலர். அத்தகைய ஒருநிலை இனிமேலும் தமிhக இளைஞர்கட்கு ஏற்படக்கூடாது. தமிழகத்தில் செல்வ வளம் படைத்த வணிகர்கள், கல்வித் தொண்டை கவுளுக்குச் செய்யும் தொண்டாகக் கருத வேண்டும். ஏழை மாணவர்கள் செல்வர் (வள்ளல்) வாழும் இடம் அறிந்து சென்று கல்விப் பேறு பெறுதல் வேண்டும. தான் உற்ற துயர்போல மற்றவர்களும் துயர் அடையக் கூடாது என்று எண்ணியே இம்மாணவர் ஆற்றுப்படையைப் படைத்தளித்தார் என்று கூறலாம்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், இளமைப் பருவம் குறள் நெறி வெளியீடு, மதுரை 1971, ப-23.
  2. பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை, பாலைக்கலி செய்யுள் எண்-10, அ-1.
  3. திருவள்ளுவர், திருக்குறள் ‘கல்வி’ எண்-400.
  4. பாண்டியன் ஆரியப் படைகடந்து நெடுஞ்செழியன், புறநானூறு, உ.வே.சா. பதிப்பு, சென்னை 1950, செய்யுள் எண்-183, அ-ள் 8-10.
(தொடரும்)
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17)




Wednesday, February 10, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: ம. இராமச்சந்திரன்


இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: தொடர்ச்சி)
தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

மாணவர் ஆற்றுப்படை
  மாணவர் ஆற்றுப்படை என்னும் இக்கவியைப் பாடியவர் காலஞ் சென்ற பேராசிரியர் இலக்குவனார் ஆவர். செந்தமிழ்ப் பற்றும் நுண்மாண் நுழைபுலமும் நிரம்பப் பெற்றவர். தம் வாழ்க்கையைப் பெரிதெனக் கருதாதவர். தமிழ் மொழியின் வளர்ச்சியே தம்முடைய வாழ்வெனக் கருதி வாழ்ந்தவர். இடுக்கண் பல உற்ற போதும் எவர்க்கும் அஞ்சாது ஏறுபோல் வாழ்ந்து காட்டியவர். வறுமையிலும் வாய்மைநெறி போற்றிய செம்மல் அவர். பெரியார் ஈ.வே. ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கையைப் பெரிதெனப் போற்றியவர். எழுத்திலும் பேச்சிலும் மறுமலர்ச்சி ஏற்படுத்திய அண்ணாதுரை அவர்களின் அன்பையும் நட்பையும் பெற்றவர். இத்தகு சிறப்பினைப் பெற்ற இலக்குவனார்.
பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ    
எத்துணையும் பொருட்கிசையு மிலக்கணமில்கற்பனையே.21



என்ற கருத்துக் கிணங்க பத்துப்பாட்டு எட்டுத் தொகை முதலான சங்க இலக்கியத்தில் மிகுந்த பயிற்சியும் பற்றும் உடையவராய்த் திகழ்ந்தார்.
  பத்துப்பாட்டுள் இடம் பெற்றுள்ள ஆற்றுப்படைச் செய்யுட்களைப் போலத் தாமும் பாட வேண்டும் என்று எண்ணிய எண்ணத்தின் விளைவே மாணவர் ஆற்றுப்படையின் தோற்றத்திற்கு காரணம் ஆகும்.
ஆற்றுப்படையின் இலக்கணம்
  பண்டை நாளில் தனிப்பாடல்கள் மிகுதியாகப் பாடப் பெற்றன. பின்னர் கதைத் தொடர்ச்சி உடைய நீண்ட கவிதைகள் தோன்றின. தனிப் பாடல்களின் தொகுப்பு ‘எட்டுத் தொகை’ என்னும் பெயர் கொண்டு அமைந்தன. நீண்ட அடிகளையுடைய பா டல்கள் ‘பத்துப்பாட்டு’ என்னும் பெயரில் தொகுக்கப் பெற்று தொகைப் பாடல்களாக விளங்கின.
  பத்துப்பாட்டுள் இடம் பெற்றுள்ள செய்யுட்களுள் ஐந்து, ஆற்றுப்படை என்னும் நூல்வகையைச் சேர்ந்தவை யாகும். அவை திருமுருகாற்றுப்பாடை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை என்னும் நூல்களாம்.
         “முருகு பொருணாறு பாணிரண்டு முல்லை
            பெருகு வளமதுரைக் காஞ்சி மருவிணிய
            கோலநெரு நல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
            பாலை கடாஅத் தொடும் பத்து” 22
ஆற்றுப்படை என்பது அரசனையோ, குறுநில மன்னனையோ, வள்ளலையோ பாடிப் பரிசில் பெற்று வந்த ஒருவன், பரிசில் பெறுவதற்காக ஏங்கி நிற்கும் ஒருவனுக்குத் தான் சென்று வந்த வழியையும் பெற்ற பரிசிலையும், அதனை வழங்கியவனின் சிறப்பையும் புகழையும் எடுத்துக்கூறி வழிச் செலுத்துதல் என்பது பொருள் ஆகும்.
ஆறு + படை = ஆற்றுப்படை
ஆறு – வழி; படை – படுத்துதல், செலுத்துதல்
ஆற்றுப்படுத்தல் – வழியிற் செலுத்துதல்
இதனை,
‘           சேணோங்கிய வரையதரிற்
            பாணனை ஆற்றுப்படுத்தன்று’ 23
என்று புறப்பொருள் வெண்பாமாலையிலும்
‘           கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
            ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
            பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
            சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்’ 24
என்று தொல்காப்பியப் புறத்திணையியலிலும் முறையே ஐயனாரிதனாரும் தொல்காப்பியரும் கூறுகிறார்கள்.
குறிப்புகள்:
  1. பெ. சுந்தரம்பிள்ளை, மனோன்மனீயம், பாயிரம், தாழிசை-10
  2. சி. பாலசுப்பிரமணியன், தமிழ் இலக்கிய வரலாறு, பாரி நிலையம், ஒன்பதாம் பதிப்பு, சென்னை, 1970, ப-55.
  1. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பா மாலை, கழக வெளியீடு மூன்றாம் பதிப்பு, திருநெல்வேலி, 1964, பக். 221-222.
  1. தொல்காப்பியர், தொல்காப்பியம், புறத்திணையியல்-34.
(தொடரும்)
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16)