Wednesday, May 18, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24: ம. இராமச்சந்திரன்




தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

24


இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24

தமிழகக் குடியரசு
  அமெரிக்க நாட்டின் ஆட்சித் தலைவராக விளங்கும் குடியரசுத் தலைவர் நம் அண்ணாவைக் காண வரவில்லை. அவர்தம் அன்புச் செயல்களில் கலந்து கொள்ளவில்லை. காரணம் தமிழகம் தனிக்குடியரசாய் விளங்கி தனது அறிவு நிரம்பிய தலைவரை அனுப்பி வைக்கவில்லையே. அந்நாள் விரைவில் தேடிவருமாக என்கிறார் கவிஞர்.
சப்பானியச் செலவு
  உழைப்பால் உயர்ந்த நாடு சப்பான், ஓங்கிய பெருமை உடைய நாடு சப்பான். அண்ணா அவர்களை அன்புடன் அழைத்திட சப்பான் நாடு சென்றார். சப்பான் நாட்டு மக்கள் உழவுத்துறையிலும், தொழிற்துறையிலும் சிறந்து விளங்கியமை கண்டார். தம் தாய் மொழிப் பற்றிலும் அறிவியல் கண்டு பிடிப்புகளிலும் இடைவிடா முயற்சியிலும் மேலோங்கி நிற்கும் சிறப்பைக் கண்டார். அவற்றை எல்லாம் தன்னுடைய சிந்தையில் இருத்தினார். இனிய தமிழ் நாட்டை எல்லாத் துறையிலும் முன்னேற்றம் அடையச் செய்ய உயர்ந்த திட்டங்களை உளத்தில் கொண்டார். தாம் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பினைப் பெற்றார். நாட்டுக்கு நலம் பயக்கும் வழிபல அறிந்தார். தாயைச் சேரும் தலைமகன் போல தமிழ்த்திரு நாட்டை அடைந்தார் அண்ணா. சந்திரணைக் கண்ட கடலைப் போல அண்ணாவைக் கண்ட மக்ள் ஒருங்கு கூடி ஆரவாரித்தனர். பொறாமைக்குணம் கொண்ட தீய நெஞ்சினர் உள்ளம் புழுங்கினர்.
‘           தாயைக் கூடும் தலைமகன் போல்
            . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
            பொறாமைத் தீயினர் புழுங்கினர் அகத்தே’ 58
அண்ணா வாழ்க
  மக்களுக்குச் செய்யும்  தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு எனக் கருதினர் அண்ணா. மக்கள் நலத்தைத் தம் மதியில் சேர்த்தார். மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்தார். பெருமையல்லாத செயல்களை நீக்கினார். எப்பொழுதும் இனியவராய் விளங்கினார். ஏழைகளின் தோழராய் விளங்கினார். ஆட்சி என்னும் சக்கரத்தை அழகுற நடத்திச் சென்றார். “உலக மக்கள் புகழுமாறு உயர்நிலை உடைய சிறப்புக்கள் அனைத்தையும் பெற்ற விளங்குவாராக! அறுபதாம் ஆண்டை அடையும் அண்ணா இளைஞர்க்கு இளைஞராக என்றும் வாழ்வாராக! மகளிர் தலைவி என்று மதிக்கப்பெறும் வாழ்க்கைத் துணைவியாம் இராணி அம்மையாரின் இனிய பாதுகாப்புடன் நிலைத்து வாழ்வாராக! நீண்ட பெரிய தமிழ்ப்பகையை வென்று வாழ்வாராக!” இதனை,
‘           அறுபதாம் ஆண்டை அடையும் அண்ணா
            இளைஞர்க்கு இளைஞராய் என்றும் வாழ்க!
            வாழ்க்கைத் துணைவியாம் மகளிர் தலைவியாம்
            இராணி அம்மையார் இனிய புரப்புடன்
            நின்று வாழ்க! நீள் தமிழ்ப் பகையை
            வென்று வாழ்கவே! வெல்க தமிழ்.’ 59
என்று வாய்மணக்க நெஞ்சம் இனிக்க வாழ்த்துகிறார் கவிஞர்.
எனினும் அண்ணா ஒருசில திங்களில் மறைந்தார். தமிழ்த்
தாய் தன் தலைமகனை இழந்தாள். தமிழுக்குத் தொண்டு செய்வார் நூறு ஆண்டு வாழ்வதில்லை போலும்!
‘           செந்தமிழுக்குப் பணிபுரிந்தோர் எவரேனும் செல்நூ றும்
            வாழ்த்த துண்டோ” 60
என்று கவிஞர் அவர்கள் வேறொரு கவிதையில் குறிப்பிடுகிறார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 166-169.
  2. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 175-180.
  3. சி. இலக்குவனார், துன்பமாலை, பாடல் எண்-4.

ம. இராமச்சந்திரன்

Sunday, May 08, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23: ம. இராமச்சந்திரன்






தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

23

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23


அண்ணாவின் சிறப்பு
  அறிவுடைய ஒருவரை அயல்நாட்டவரும் மதித்துப் போற்றுவர் என் பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாகும். கற்போர்க்குச் சென்ற இடமொல்லாம் சிறப்பு என்னும் முதுமொழி உண்மையான்றோ? ஞாயிற்றின் ஒளியை மறைப்பவர் இஞ்ஞாலத்தில் எவரும் உண்டோ? இலர் என்று கூறலாம்.
‘           அறிவுடை ஒருவரை அயலரும் போற்றுவர்
            ஞாயிறு தன்னை நற்குடை மறைக்குமோ’ 58
ஐந்து நாட்கள் அன்புமிக்க தோழராய் விளங்கினார் அண்ணா. திமோத்தி துவைத்துக் கல்லூரியும் பெரும் பேறு பெற்றதாய் மிகவும் மகிழ்ச்சி கொண்டது. மாணவர் கூட்டமும் மற்றும் உள்ள அறிஞர் குழுவினரும் பேராசிரியர் பெருமக்களும் அவர்தம் பெண்டிரும் அண்ணா அவர்கட்கு விருந்திணை அளித்து விருந்து பெற்றனர். வினாக்களுக்கு விடையளிக்கும் அண்ணாவின் திறன் அறிந்து மகிழ்ந்தனர்.
கருத்து விளக்கம்
  அண்ணா அவர்கள், ‘இந்தியக் துணைக் கண்டம் அமைதியை விரும்புகிறது. அதறகெனத் தக்க உழைப்பை நல்கி வருகிறது’ என்னும் நற்கருத்தை வெளியிட்டார். ‘ஆங்கில மொழி ஒன்றே மக்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாகும். அறிவையும் இனிதே நல்குவது. இந்திமொழி இவ்விரு பயன்களையும் செய்யாது’ என்னும் கருத்தையும் எடுத்துக் கூறினார்.
  காங்கிரசுக் கட்சியே இந்தியா முழுவதும் இயங்கும் கட்சியாகும். காங்கிரசு அன்றி பிறிதொரு கட்சி தோன்றி வளர்தல் மிக அரிதே. பல்வேறு கருத்துகளைக் (கொள்கைகளை) கொண்ட அரசியல் கட்சிகள் அடிப்படைத் திட்டம் ஒன்றின்கீழ் இணைந்தால்  தேர்தல் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். காங்கிரசுக் கட்சியை எளிதில் வெல்லாம் என்னும் இனிய நற்கருத்தை வெளியிட்டார். மாநிலக் கட்சிகள் மைய அரசின் ஆட்சியை மாற்றும் திறமுடையனவல்ல. மாநிலத்தில் இருக்கும் கட்சிகள் தமக்கென்று வைத்திருக்கும் கருத்துகளை விட்டுவிடாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்குத் தேவையான சில இன்றியமையாப் பணிகளை முன்னிறுத்தி ஒன்று சேர வேண்டும். தம் கட்சிக் கொள்கைகளைத் துறந்து விடுவது என்பது இயலாதது. எனினும் பொதுவான சில அடிப்படைக் கொள்கைகளை நிறைவேற்ற மாநிலக்கட்சிகள் ஒன்று சேர்ந்து காங்கிரசை எதிர்க்கலாம் என்றும் சொன்னார்.
நேருவுக்குப்பின்
  இந்தியத் துணைக்கண்டத்தில் தலைமையச்சர் நேருவுக்குப் பின் மிகப்பெரிய தலைவராக விளங்கியவர் அண்ணா ஒருவரே. தலைமைப் பொறுப்பும் ஆட்சிச் சிறப்பும் பெற்று விளங்கினார். தமிழகம் புகழ் பெற்று விளங்கிடச் செய்த பெருமகன் என்று நகர முழக்கம் புகழ்ந்து பேசியது.
தமிழகச் சிறப்பு
   தமிழ்த் திருநாடு எல்லா வகையிலும் ஏற்றம் பெற விரும்பினார் அண்ணா. உழவுத்துறையிலும், உணவுத்துறையிலும் தமிழகம் சிறப்படைய வேண்டும் என விரும்பினார். எனவே அமெரிக்காவில் அறிய வேண்டியவற்றை அறிந்து வந்தார். அமெரிக்க மக்களின் அன்பில் தோய்ந்தார். அம்மக்களைத் தம் அறிவால் மூழ்கும்படி செய்தார் . தமிழகத்திலிருந்து தாம் கொண்டு சென்ற வேலைப்பாடு மிகுந்த பொருட்களாலும், திருக்குறள், சிலப்பதிகாரம், இலக்குவனார் எழுதிய தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்பு முதலிய நூல்களாலும், தம்முடைய சொல்வன்மையாலும் செயல் முறையாலும் தமிழகச் சிறப்பை அமெரிக்கர்  அறியும்படி செய்தார்.
இக்கருத்தை,
‘           உழவுத் துறையிலும் உணவுத் துறையிலும்
            அறிவன அறிந்து அங்குள மக்களின்
            அன்பில் ஆழ்ந்தும் அறிவால் ஆழ்த்தியும்
            தமிழகச் சிறப்பைத் தாம் கொண்டு சென்ற
            பொருளால் நூல்களால் புகல்திரைச் சுருளால்
            உரையால் செயலால் உணர்த்தி மீண்டார்’57
என்ற அடிகளில் புலப்படுத்தியுள்ளார் கவிஞர்.

குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியில் வாழ்த்து அ-ள் 116-117.
  2. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 146-151

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
ம. இராமச்சந்திரன்

Friday, April 29, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22: ம. இராமச்சந்திரன்




தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

22

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22: ம. இராமச்சந்திரன்

அமெரிக்காவின் அழைப்பு
  இன்றைய உலகில் எங்கு நோக்கினும் போட்டியும் பூசலுமே நிலவுகின்றன. இவை நாட்டைத் துன்புறுத்தும் கேடான செய்திகளாம். அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சித் திறத்தால் நம்முடைய இனிய தமிழ்நாட்டில் அமைதியும் ஒழுங்கும் குடிகொண்டு விளங்குகின்றது. இந்நிலவுலகத்தின் இதனை அறிந்த மக்கள் ஒவ்வொருவரும் தம்முடைய நாட்டில் தலைவர் அண்ணா அவர்கள் காட்சி தர வேண்டும். களிப்பினை நல்க வேண்டும் என்றே விரும்பினர். அனைவரும் அழைக்க எண்ணுகையில் எதிலும் முன்றிற்கும் செல்வச் சிறப்புடைய அமெரிக்கா இதிலும் முந்திக்கொண்டது. சீர்மிகுந்த பெருமை கொண்டதால் அண்ணாவை அழைத்துப் பெருமையும் பெற்றுக் கொண்டது.
அண்ணாவின் இசைவு
   உலகில் புகழ் படைத்த பல்கலைக்கழகங்களில் ஒன்று ஏல் பல்கலைக்கழகம். உலகத்தில் புகழ்ப்படைத்த அரசியல் தலைவர்களை அழைத்துச் சிறப்புச் செய்வது அப்பல்கலைக்கழத்தின் தலையாய நோக்கங்களுள் ஒன்றாகும். அரசியல் நெறியில் உயர் இடம் பெற்று விளங்கிய அண்ணா அவர்களை ஏல்பல்கலைக்கழகம் விருப்புடன் அழைத்தது. அழைப்பை அன்புடன் ஏற்று அமெரிக்கா சென்றார் அண்ணா.
தமிழ் உரு
  தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்று வந்தவர் ஆயிரக்கணக்கில்  உள்ளனர். எனினும் தமிழ் உள்ளங்கொண்டு சென்று தமிழ்ப் புகழ் பரப்பி வந்தவர் எத்தனை பேர் உள்ளனர்?  விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே இருப்பர்.
  புகழ் பெற்று விளங்கும் அண்ணாவை அறிந்தோர், தமிழ் மொழியின் சிறப்பையும் அறிந்திட வேண்டும் என்னும் விருப்பம் கொள்வர். எனவே தளராத புகழுடைய தொல்காப்பியத்தையும், உலகமக்கள் அனைவர்க்கும் பொதுமறை எனப் போற்றத்தகும் சிறப்புடைய திருக்குறள் நூலையும், படிப்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் நீண்ட பெரிய புகழுடைய சிலப்பதிகாரம் என்னும் நூலையும் அண்ணா அவர்கள் தம்முடன் கொண்டு சென்றார். தமிழ்த்தாயே உருவெடுத்துச் செல்வது போலவும் செந்தமிழ் நாட்டினர் பண்பெல்லாம் திரண்டு பருவுடல் கொண்டு செல்வது போலவும் அண்ணா அவர்கள் சென்றார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழ் அன்பர்கள் மீனம்பாக்கம் விண்வழித்துறையில் ஒருங்கு திரண்டு மகிழ்ச்சி பொங்க வாழ்த்துப் பல கூறி வணங்கிக் கைகூப்பி வழியனுப்பி வைத்தனர்.
  அண்ணா அவர்களுக்கு இனிய துணையாகத் தமிழக அரசின் செயலாளர் சொக்கலிங்கனாரும் உடன் சென்றார். புன்னகை தவழும் பொலிவு பெற்ற முகமும், அன்பும் ஆற்றலும் உடையவர். அடக்கமும் பண்பும் வாய்க்கப் பெற்று தமக்குரிய அணிகலனாய்த் தோற்றங் கொண்டவர் சொக்கலிங்கம்.  அண்ணா அவர்களின் மதிவழிச் செயல்படும் தனிச் செயலாளராக, தழுவும் நிழலாக உடன் சென்றார். ஏப்பிரல் திங்களில் உலகப் பயணம் மேற்கொண்டு தமிழ் நிலத்தைவிட்டுப் பிரிந்து சென்றார் அண்ணா. பரிதியைப் பிரியும் தாமரை மலர்போல வாடிய முகத்துடன் விடை கொடுத்தார் தமிழ் மக்கள். எனினும் உள்ளத்தில் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை,
ஞாயிறு பிரியும் நல்மரை மலரென
வாடிய முகத்துடன் மகிழ்ந்தே நின்றோம் 54
எனக் கூறுகிறார் பேரா.சி.இலக்குவனார்.
  சென்னையில் ஆளுநராக விளங்கியவர் ‘ஏல்’ என்னும் பெயர் பெற்ற துரைமகனார். அவர் வழங்கிய கொடையால் வளர்ந்து உருவானது. ‘ஏல்’ பல்கலைக்கழகம். ஏல் பல்கலைக்கழகத்தில் ‘எண்டர்சப்பு’ என்பவர் ஓர் அறக்கட்டளை அமைத்துள்ளர். அவ்வறக்கட்டமையின் மூலம் உலகிலுள்ள சிறந்த அரசியயல் அறிஞரை ஆண்டுதோறும் அழைத்துச் சிறப்பிப்பது வழக்கம். அதன்படி 1968 ஆம் ஆண்டு, நம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா அவர்களை விருந்தினராக அழைத்துச் சிறப்பித்தது. ஏல் பல்கலைக்கழகம் சென்ற அண்ணா அவர்ள் அங்குப் பயிலும் மாணவர்குழுவுடன் மகிழ்ந்து குலாவினார்கள். மாணவர்கள் கேட்ட வினாக்களுக்குத் தக்க விடையளித்தார்கள். தாம் கொண்டு சென்ற திருக்குறள் நூலிலிருந்து சில குறட்பாக்களை எடுத்துச் சொல்லி விளக்கம் தந்தார்கள். சில நாட்கள் அங்கு தோழமையுடன் உண்டும் உறைந்தும் மகிழ்ந்தார்கள். இவ்வாறான தூய நல்ல திட்டத்தில் அமெரிக்காவின் அரசியல் அறிஞர்களே பங்கு பெற்றனர். அமெரிக்கர் அல்லாத அரசியல் தலைவர் வரிசையில் முதன்முதலா கப் பங்கு கொண்டு சிறப்புப் பெற்றவர் அண்ணா அவர்களே ஆவர். இதனை,
‘           உயர்பே ரறிஞரை உவந்த அழைத்து
            . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
            அமெரிக்க ரல்லா அரசியல் தலைவர்
            இதுவரை எவரும் எய்தினர் அல்லர்’ 55
என்னும் அடிகளில் விளக்கியுள்ளார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 103-104.
  2. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 109-114.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
ம. இராமச்சந்திரன்