Sunday, April 06, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 125 : அத்தியாயம்-85 : கோபால ராவின் கருணை



(உ.வே.சா.வின் என் சரித்திரம்  124 : எனக்கு உண்டான ஊக்கம்-தொடர்ச்சி)

திங்கட்கிழமை பாடம் சொன்னேன். செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாவது மணி எப். ஏ. இரண்டாவது வகுப்பில் நாலடியார் பாடம் நடத்தத் தொடங்கினேன். அப்போது கல்லூரியைப் பார்க்க வந்த ஓர் உத்தியோகத்தருக்கு அங்கங்கே உள்ள வகுப்புகளைக் காட்டிக் கொண்டு வந்த கோபாலராவு நான் இருந்த அறைக்குள் அவருடன் வந்தார். அவர்களைக் கண்டவுடன் எழுந்த என்னைக் கோபாலராவு கையமர்த்தி விட்டு இரண்டு நாற்காலிகளைக் கொணர்ந்து போடச் செய்து ஒன்றில் அவரை இருக்கச் சொல்லி மற்றொன்றில் தாம் அமர்ந்தார். அதைப் பார்த்தபோது அவர் நெடு நேரம் அவ்வகுப்பில் இருந்து பாடத்தைக் கவனிக்கக் கூடுமென்று தோற்றியது.

நான் பாடம் சொல்லத் தொடங்கினேன். கோபாலராவும் அவர் நண்பரும் கவனித்து வந்தனர்.நான் அப்போது பாடம் சொல்லத் தொடங்கிய பாடல் மிகவும் இரசமானது. “நமக்குச் சக்தி இருக்கும் பொழுதே தருமத்தைப் பண்ண வேண்டும். பிறகு செய்யலாமென்று நினைத்தால் அதற்குக் காலம் வராமலே போய்விடும்” என்ற கருத்தையுடையது அது. அதன் உட்பொருளை விளக்குவதற்காக ஒரு கதையைச் சொன்னேன்.

நான் சொன்ன கதை

“ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நன்றாகச் சம்பாதித்தான். தனக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொண்டான். தருமசிந்தனை மாத்திரம் அவனுக்கு உண்டாகவில்லை. அவனுக்கு வயசு முதிர்ந்து வந்தது. அவனுடைய குமாரர்களெல்லாம் தலையெடுத்தார்கள். ஏதாவது கிடைத்த பொருளைப் பத்திரமாகச் சேமித்து வைக்க அந்தக் காலத்தில் தக்க வழி இல்லை. அதனால் அவன் தனக்குக் கிடைத்ததை ஒரு துணியில் முடிந்து எங்கேயாவது புதைத்து வைப்பான். சில காலத்துக்குப் பிறகு அந்தக் கிழவனுக்கு நோயுண்டாகி மரணாவத்தை ஏற்பட்டது. அப்பொழுது அவனால் பேச முடியவில்லை. அருகில் அவனுடைய பிள்ளைகளும் உறவினர்களும் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் அவனுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணத்தினால், “என்ன வேண்டும்? என்ன வேண்டும்?” என்று கேட்கலாயினர்.

“கிழவன் யமனுடன் போராடிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் அவனுடைய நண்பனொருவன், கிழவன் பணத்தைத் தருமத்தில் செலவிடாமலிருந்ததைக் கண்டித்துத் தருமம் செய்ய வேண்டுமென்று இடித்துரைத்து வந்தான். அவன் வார்த்தைகளால் கிழவனுக்குத் தருமம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது, தான் எங்கேயோ சுவரில் ஓரிடத்தில் புதைத்து வைத்திருந்த சிறு பொன் முடிப்பின் ஞாபகம் அவனுக்கு வந்தது. அதை எடுத்துத் தக்கபடி தருமம் செய்ய வேண்டுமென்ற கருத்திருந்தும், அப்படிச் செய்யும் நிலையில் அவன் அப்போது இல்லை. தனது எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் அவன் வாய் அடைத்து விட்டது.

அந்தச் சமயத்தில் வேறு என்ன செய்ய முடியும்? எப்படியாவது தன் கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு அதிகரித்து வந்தது. மிகவும் கடினப்பட்டு ‘இவ்வளவு பெரிய பொன் முடிச்சு’ என்பதைத் தெரிவிப்பதற்காக தன் கையினால் சுவரைக் குறிப்பிட்டு சாடை காட்டினான். ஆனாலும் பக்கத்தில் இருந்தவர்களுக்கு அவன் கருத்து விளங்கவே இல்லை. ‘ஐயோ! எதையோ கேட்கிறாரே! இந்தச் சமயத்தில் இன்னது கேட்கிறாரென்று தெரிந்துகொள்ள முடியவில்லையே!’ என்று சிலர் இரங்கி அழுதனர். அப்போது அவனுடைய குமாரன் ஒருவன், ‘தெரிந்து விட்டது; இவருக்குப் புளிப்பு விளாங்காயின்மேல் மிக்க பிரியம் உண்டு; அதைக் கேட்கிறார். ஐயோ, இப்போது அது கிடைக்கும் காலமல்லவே. ஆனாலும் பார்க்கிறேன்” என்று வேகமாக ஓடினான். அவன் போய் வருவதற்குள் கிழவன் உயிர் போய்விட்டது.

“பிள்ளை, ‘ஐயோ; அவருக்குப் பிரியமான விளாங்காய் வேண்டுமென்று சாடையாகச் சொன்னாரே நான் தெரிந்து கொண்டும் அதைக் கொண்டு வந்து கொடுக்கும் பாக்கியம் இல்லாத பாவியானேனே!’ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதான்.“அந்தக் கிழவன் நினைத்ததற்கும் அவன் பிள்ளை செய்ததற்கும் சம்பந்தமே இல்லை. அவன் பொன்னைக் குறிக்கப்போய் அது புளி விளாங்காயாய் முடிந்தது.”

ராயர் சிரிப்பு

இந்தக் கதையை வேடிக்கையாக விரித்துச் சொல்லி நிறுத்தினவுடன் கோபாலராவு பக்கென்று வாய்விட்டுச் சிரித்து விட்டார். அவ்வளவு வெளிப்படையாக அவர் சிரித்ததை யாரும் கண்டதில்லை. நான் சொன்ன கதையின் சுவைதான் அவரைச் சிரிக்க வைத்ததென்று அறிந்து நிறைவடைந்தேன்.

மேலே பாடம் சொல்லத் தொடங்கினேன். “இப்படிக் கடைசிக் காலத்தில் தருமம் செய்ய எண்ணியவர்கள் எண்ணம் அப்பொழுதுகூட நிறைவேறுவதில்லை. ஆகையால் நாம் போகும் மார்க்கத்திற்குப் பயன்படும் தருமத்தை முன்பே செய்ய வேண்டும். பெரிய பிரயாணம் செய்யப் போகிறவன் சோற்று மூட்டை கொண்டு போவதுபோல இந்தத் தரும மூட்டையை நாம் மறுமைக்குச் சேகரிக்க வேண்டும். இதைத்தான் இந்தச் செய்யுள் சொல்லுகிறது” என்று சொல்லி மீண்டும் அப்பாட்டைச் சொன்னேன்:-

சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் – இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.

[சிறு காலை – இளம் பருவத்திலே. செல்வுழி – செல்லுமிடமாகிய மறு பிறப்பிற்குரிய. வல்சி – ஆகாரம். இறுகிறுக – இறுக இறுக. தோட் கோப்பு – தோளில் மாட்டிக் கொள்ளப்படும் உணவு மூட்டை. பின் அறிவாம் – பிறகு பார்த்துக் கொள்வோம்.]

அந்தப் பாட்டுக்கு விரிவாகப் பொருள் சொல்லி முடிந்தவுடன் மேலுள்ள பாடலைச் சொல்லத் தொடங்கினேன். அந்த வகுப்பில் மூன்றாவது மணிக்குரிய பாடம் சொல்லும் ஆசிரியர் அன்று வரவில்லை. அதனால் அந்த மணியிலும் தொடர்ந்து நானே தமிழ்ப் பாடம் சொல்லத் தொடங்கினேன்.இரண்டு மணியிலும் கோபால ராவும் அவர் நண்பரும் அவ்வகுப்பில் இருந்து கேட்டனர்.

மணி முடிந்தது. அவர்கள் எழுந்தனர். கோபால ராவு என்னை ஒரு முறை பார்த்துப் புன் முறுவல் பூத்தார். அவர் பார்வையில் கருணை ததும்பியது; முறுவலில் உவகை வெளிப்பட்டது. நான் விடைபெற்றுக் கொண்டு இடைவேளை உணவு கொள்ளப் புறப்பட்டேன்.

செட்டியாரின் ஆவல்

அன்றுமாலை வழக்கம்போல் தியாகராசசெட்டியாரிடம் போய்க் கோபால ராவு என் வகுப்புக்கு வந்ததையும் அங்கே நிகழ்ந்தவற்றையும் எடுத்துச் சொன்னேன்.செட்டியார், “அவருக்கு என்ன அபிப்பிராயம் உண்டாயிற்று என்று தெரியுமா? மேலதிகாரிகளுக்கு உங்களைப்பற்றி எழுத வேண்டுமே; என்ன எழுதப் போகிறாரோ!” என்று கேட்டார்.

“நான் எப்படி அறிவேன்?” என்று கூறினேன். செட்டியாருக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. என்னைப் பற்றிக் கோபால ராவு மேலதிகாரிகளுக்கு எழுதி நியமன உத்தரவு பெற வேண்டும் என்ற கவலையால் இராயரவர்களுடைய மனத்தில் ஏற்பட்ட அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளுதற்கு மிக்க ஆவலுடையவராக இருந்தார். எல்லாம் நல்லதாகவே இருக்குமென்று எதிர்பார்த்த எனக்கு அவருடைய ஆவல் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

மறுநாள் கல்லூரி திறந்தவுடன் செட்டியார் அங்கே சென்று எழுத்தரைப் பார்த்து, “சாமிநாதையரைப் பற்றி இராயரவர்களுக்கு என்ன அபிப்பிராயம்?” என்று கேட்டார்.

நல்ல செய்தி

அவர் நல்ல செய்தியைச் சொன்னார். “இராயரவர்கள் இவரைப் பற்றி இயக்குநருக்கு நன்றாக எழுதியிருக்கிறார்கள். இதோ அஞ்சல் அனுப்பப் போகிறேன்” என்று எழுத்தர் சொன்னதைக் கேட்ட பிறகுதான் தியாகராச செட்டியாருக்கு நல்லுணர்வு வந்தது. அவர் எழுத்தரை அதோடு விடவில்லை. என்ன எழுதினாரோ வென்று தூண்டித் தூண்டி விசாரித்தார். நான் மடத்திலிருந்து கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றவனென்பதையும், அங்கே பலருக்குப் பாடம் சொல்லிப் பழக்கமானவனென்பதையும் எழுதிவிட்டு. “நானே இரண்டு முறை அவர் பாடம் சொன்ன வகுப்புக்குப் போய்க் கவனித்தேன். அவர் கற்பிக்கும் முறை மிகவும் நிறைவாக இருக்கிறது, ஆகையால் இது வரையில் தியாகராச செட்டியாருக்குக் கொடுத்த ஐம்பது உரூபாயையே அவருக்கும் கொடுத்து இரண்டு வருடத்துக்கு சப்ரோட்டமாக நியமிக்கலாம்” என்றும் குறித்திருந்ததாக எழுத்தர் சொன்னார்.

இவ்வளவையும் கேட்டுக்கொண்டு வந்த செட்டியார் என்னிடம் “கவலை நீங்கியது. கடவுள் கிருபையால் நான் செய்த முயற்சி பலித்தது. இனி உங்கள் பாடு, உங்கள் மாணாக்கர்கள் பாடு” என்று சந்தோசத்தோடு சொன்னார்.

“எல்லாம் உங்களுடைய பேரன்பினால் உண்டானவை” என்று என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொண்டேன்.இந்த முக்கியமான நிகழ்ச்சிக்குப் பிறகு கோபாலராவு என்பால் மிக்க கருணை காட்டலானார். என்னைக் காணும் போதெல்லாம், ஒழுங்காகப் பாடம் நடந்து வருகிறதா? யாராவது தவறு செய்தால் உடனே சொல்லுங்கள். உங்களுக்கு ஏதாவது ஆகவேண்டுமானாலும் கூச்சமில்லாமல் தெரிவிக்கலாம்”என்று அன்பொழுகக் கூறுவார். தம்முடைய பாதுகாப்பின் கீழ் வந்த என்னை அங்கீகரித்துக் கொண்டதற்கு அறிகுறியாக இருந்தன அந்த வார்த்தைகள்.

அந்த வாரம் சனிக்கிழமை காலையில் தியாகராச செட்டியாரையும் அழைத்துக் கொண்டு திருவாவடுதுறை சென்று அங்கே இரண்டு நாள் சந்தோசமாக இருந்து விட்டு வந்தேன். வரும்போது சுப்பிரமணிய தேசிகர், “செட்டியாருக்குக் கொடுத்த ஐம்பது உரூபாய் கொடுத்தால் அங்கே இரும்; இல்லாவிட்டால் வேலையை விட்டு விட்டு இங்கே வந்து விடலாம்” என்று சொல்லி அனுப்பினார்.

கோபால ராவு அறிவித்தது

திங்கட்கிழமையன்று காலையில் பன்னிரண்டு மணிக்கு மேல் பி. ஏ. இரண்டாவது வகுப்புக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு மணியான பிறகும் சிறிது நேரம் சொன்னேன். அப்போது திடீரென்று பிள்ளைகளெல்லாம் எழுந்து நின்றார்கள். நான் காரணம் அறியாமல், “ஏன் நிற்கிறீர்கள்?” என்று கேட்கவே அவர்கள், “இராயரவர்கள் வந்து தாழ்வாரத்தில் உங்களை நோக்கிக்கொண்டு நிற்கிறார்கள்” என்றார்கள். நான் உடனே அவர்பாற் சென்றேன். அவர், “உங்களை இரண்டு வருடத்துக்குச் செட்டியாரவர்களுக்குக் கொடுத்த ஐம்பது உரூபாயையே சம்பளமாகக் கொடுத்து சப்ரோட்டமாக நியமித்திருப்பதாக இயக்குநர் துரையவர்கள் உத்தரவு அனுப்பியிருக்கிறார்கள்” என்றார். நான் என் சந்தோசத்தை முகக் குறிப்பால் தெரிவித்தேன்.

இந்தச் செய்தி தெரிந்த ஆசிரியர்களெல்லாம் மகிழ்ச்சியடைந்தனர். தியாகராச செட்டியாரோ கரைகடந்த ஆனந்தத்தில் மூழ்கினார். என் மனநிலையைச் சொல்லுவதற்கு வார்த்தை ஏது?

முதற் சம்பளம்

அந்த வாரம் நான் இந்தச் சந்தோசத்துடனும் கையிற் பெற்ற அரைமாதச் சம்பளத்துடனும் திருவாவடுதுறை சென்றேன். “நீங்கள் வாங்கும் முதற் சம்பளத்தை உங்கள் தாய் தகப்பனாரிடம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று செட்டியார் சொல்லியிருந்தார். அப்படியே அந்த இருபத்தைந்து உரூபாயை முதலில் என்தாயார் கையிற் கொடுத்தேன். அவர் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். வேறு யாரேனும் இலட்ச உரூபாய் கொடுத்திருந்தாலும் அவருக்கு அவ்வளவு சந்தோசம் உண்டாகியிராது. பிறகு என் தந்தையாரிடமும் சுப்பிரமணிய தேசிகரிடமும் கொடுத்து வாங்கிக் கொண்டேன். “பரம சாம்பவருடைய பிள்ளையாகிய உமக்கு இன்னும் அதிகச் சம்பளமும் உயர்ந்த பதவியும் கிடைக்க வேண்டும்” என்று தேசிகர் வாழ்த்தினார்.

அதுவரையில் கும்பகோணத்தில் நான் சிரீ சாது சேசையரவர்கள் வீட்டிலேயே இருந்து போசனம் செய்து வந்தேன். அந்த வாரம் என் தாய் தந்தையரை அழைத்துக் கொண்டு கும்பகோணம் சென்றேன். அங்கே சில மாத காலத்துக்குப் பக்தபுரியக்கிரகாரத்தில் ஒரு சிறிய வீடுபேசிக்கொண்டு அதில் குடியிருந்தோம்

பரீட்சையும் விடுமுறையும்

மார்ச்சு மாத இறுதியில் கல்லூரி நடைபெற்றது. அக் காலத்தில் சருவகலாசாலைப் பரீட்சை திசம்பர் மாதத்தில்தான் நடைபெற்று வந்தது.

மார்ச்சு மாதப் பரீட்சைக்குத் தியாகராச செட்டியாருடைய உதவியால் வினாப்பத்திரம் சித்தம் செய்தேன். பரீட்சை முடிந்தபிறகு அவர் முன்னிலையில் விடைக் கடிதங்களைத் திருத்தி ‘மதிப்பெண்’களை வரிசைப்படுத்தி எழுதி முதல்வரிடம் சேர்ப்பித்தேன்.

கோடை விடுமுறை தொடங்கியது. அந்தச் சம்பளத்தையும் பெற்றுத் தாய் தந்தையரை அழைத்துக்கொண்டு திருவாவடுதுறைக்குச் சென்றேன். அக்காலத்தில் திருவாவடுதுறையில் எனக்குச் சீமந்தம் நடைபெற்றது. அதற்கு என் சம்பளப் பணம் உதவியது. சுப்பிரமணிய தேசிகர் செய்த உதவிகளுக்கும் கணக்கில்லை.

(தொடரும்)

Sunday, March 30, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 124 : எனக்கு உண்டான ஊக்கம்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம்  123 : இரண்டாவது பாடம்-தொடர்ச்சி)

      இரண்டாம் நாள் (17-2-1880) நான் வழக்கப்படி கல்லூரிக்குச் சென்று பாடங்களை நடத்தினேன். தியாகராச செட்டியார் அன்று மூன்று மணிக்கு மேல் வந்து நான் பாடம் சொல்லுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு மேல், சீநிவாசையர் செட்டியாரிடம் வந்து, “இன்று நான்கு மணிக்கு மேல் தமிழ்ப் பாடம் எந்த வகுப்பிற்கு என்று இராயர் கேட்டார். அந்த வகுப்பிற்கு அவர் ஒரு வேளை வரலாம். சாக்கிரதையாகப் பாடம் சொல்லச் சொல்லுங்கள்” என்று கூறிச் சென்றார். வகுப்பு விட்டவுடன் செட்டியார் என்னிடம் இதைச் சென்னதன்றி “இராயரைக் கண்டு பயந்து ஏதாவது உளறி விடாமல் சாக்கிரதையாகச் சொல்லுங்கள். நாங்களெல்லாம் திருப்தி அடைவது முக்கியமன்று. அவருடைய திருப்திதான் முக்கியம். அவருக்கு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்தார்.

கோபாலராவு வரவு

பி. ஏ. இரண்டாவது வகுப்புக்குள் நான் சென்றேன். செட்டியாரும் உடன் வந்தார். அங்கே நன்னூல் பாடம் நடத்தத் தொடங்கினேன்.

பெயரியலில், “ஒன்றே யிருதிணைத் தன்பாலேற்கும்” என்னும் சூத்திரத்தைச் சொல்லி வந்தேன். அப்பொழுது ஒரு சேவகன் நாற்காலி ஒன்றை எடுத்து வந்து என் பக்கத்தில் போட்டான். அடுத்த நிமிடம் கோபாலராவு வந்தார். உடனே எழுந்து அஞ்சலி செய்தேன். “நீங்கள் சும்மா இருந்து பாடத்தை நடத்துங்கள்” என்று சொல்லி விட்டு அவர் அந்த நாற்காலியில் அமர்ந்தார்.

நான் சூத்திரத்திற்கு உரையும் உதாரணங்களும் சொல்லி விட்டுக் கேள்விகள் கேட்டேன். இராயர் ஒரு மாணாக்கரிடமிருந்து ஒரு நன்னூல் புத்தகத்தை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு கவனித்து வந்தார்.

அவர் அங்கே இருந்ததில் எனக்குச் சிறிதும் அதைரியம் ஏற்படவில்லை. ஊக்கத்துடனே சொல்லி வந்தேன். அவர் நன்னூலை நன்றாகக் கற்றவரென்பதைத் தியாகராச செட்டியார் என்னிடம் முன்பே சொல்லியிருந்தார்.அதனால் எனக்குப் பின்னும் தைரியமே பிறந்தது. நன்னூலை இளமைதொடங்கியே நான் படித்துப் பல வகையாக ஆராய்ந்து சிந்தித்து ஒழுங்கு படுத்தி ஞாபகத்தில் வைத்திருந்ததால் அதனைப் பாடம் சொல்லுவது எனக்கு மிகவும் சாதாரணமாக இருந்தது. நான் முன்னும் பின்னுமுள்ள செய்திகளோடு இயைத்து விடயங்களை விளக்கினேன். நூல் முற்றும் படித்த இராயர் அவற்றிலிருந்து என் பயிற்சியை உணர்ந்து திருப்தியடையக் கூடும் என்ற நம்பிக்கையோடு நான் பாடம் சொன்னேன்.

மற்றச் சமயங்களில் இடையே ஏதாவது சொல்லியும் கேள்வி கேட்டும் வந்த செட்டியார் அப்பொழுது ஒன்றும் பேசாமல் எல்லாவற்றையும் கவனித்து வந்தார். இராயர் முகத்தில் ஏற்படும் விருப்பு வெறுப்புக் குறிப்புக்களினால் அவரது அபிப்பிராயத்தை அறிய முயன்றார். ஆனால், கோபாலராவு முகத்தில் புதிய குறிப்பு ஒன்றையும் அவர் காணவில்லை. எப்பொழுதும் உள்ளது போன்ற மலர்ச்சி இருந்தது. தம்முடைய விருப்பு வெறுப்புக்களை அவ்வப்போது வெளிப்படுத்தும் இயல்புடையர் அல்லர் அவர். கம்பீரமான தன்மையினர். அவருடைய அபிப்பிராயத்தை எளிதில் யாவரும் அறிந்து கொள்ள முடியாது. செட்டியார் ஒரு குறிப்பும் அறியாத வராகிச் சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தார்.

செட்டியாரின் ஆவல்

மணி ஐந்து அடித்தது. கோபாலராவு, தம் கையில் உள்ள புத்தகத்தை உரிய மாணாக்கரிடம் கொடுத்து விட்டு எழுந்தார். நானும் செட்டியாரும் எழுந்து நின்றோம். கோபாலராவு உள்ளத்தில் எவ்வகையான கருத்து உண்டாயிற்றென்பதை அறிய எனக்கும் ஆவல் அதிகமாகவே இருந்தது. அதை எவ்வாறு தெரிந்துகொள்வது?

அவ் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கிருட்டிணையரென்னும் மாணாக்கர் அப்போது திடீரென்று எழுந்து இராயரை நோக்கி, “ஒரு விஞ்ஞாபனம்; மாணாக்கர்களாகிய நாங்களெல்லாரும் ‘செட்டியாரவர்கள் வேலையை விட்டு விலகிக் கொள்கிறார்களே; இனி என்ன செய்வோம்?’ என்ற கவலையில் நேற்று வரையில் மூழ்கியிருந்தோம். இப்போது அந்தக் கவலை நீங்கி விட்டது. செட்டியாரவர்கள் தாம் இருந்த தானத்துக்குத் தக்கவர்களையே அழைத்து வந்து அளித்து எங்கள் பயத்தைப் போக்கி விட்டார்கள்” என்று சொன்னார்.

அவர் அவ்வளவு தைரியமாகப் பேசியது குறித்து வியந்து அவரைப் பார்த்தேன். செட்டியார் கண்களும் அன்புடன் அவரை நோக்கின. இராயரோ அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்முறுவல் செய்து புறப்பட்டார். நாங்களும் புறப்பட்டோம்.

இராயவர்களுக்கு நான் பாடம் சொன்ன விடயத்தில் என்ன அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கலாமென்ற கேள்வியைக் கல்லூரி ஆசிரியர்கள் எல்லாரிடமும் செட்டியார் கேட்டார்.

“நல்ல அபிப்பிராயமாகத்தான் இருக்க வேண்டும்” என்று சிலர் சொன்னார். இராயரோடு நெருங்கிப் பழகும் சேசையர் முதலியோர் “பிள்ளைகளுக்கு விளங்கும்படி சொல்கிறார் என்பதே அவர் அபிப்பிராயம் என்று தெரிகிறது” என்றார்கள். செட்டியார் என்னைப் பார்த்து, “இராயர் இப்படியே அடிக்கடி வந்து கவனிக்கக்கூடும். எப்பொழுது வந்து கவனித்தாலும் அதை என்னிடம் சொல்ல வேண்டும் என்றார்.

மடத்து நிகழ்ச்சிகள்

அந்த வாரம் முழுவதும் உற்சாகத்தோடு என் கடமையைச் செய்து வந்தேன். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் செட்டியார் வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி வருவேன். அன்றன்று நடந்தவற்றை அவரிடம் தெரிவிப்பேன்.

திருவாவடுதுறையிலிருந்து ஒவ்வொரு நாளும் யாரேனும் வந்து என்னைக் கண்டு நிகழ்ந்தவற்றைத் தெரிந்து கொண்டு செல்வார். அங்கே மடத்தில் என்னிடத்தில் படித்தவராகிய தெய்வசிகாமணி ஐயரென்பவர் சில நாட்கள் வந்து செய்திகள் தெரிந்து சென்றார். அவர் மூலமாகச் சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பற்றி அங்கே வருபவர்களிடம் சந்தோசத்தோடு பேசி வருவதாக அறிந்தேன்.

கும்பகோணத்திலிருந்து யார் போனாலும் தேசிகர் என்னைப்பற்றி விசாரிப்பார். கல்லூரியில் படித்து வந்த பிள்ளைகளின் தந்தையாரோ உறவினர்களோ மடத்துக்குப் போவார்கள். அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்லூரியில் படிப்பதாகவும் என்னைப் பற்றித் திருப்தியாகச் சொல்லுவதாகவும் தெரிவிப்பார்கள். கேட்ட தேசிகர் மகிழ்ச்சியடைவார். தமிழில் அன்பும், என்பால் அபிமானமும் உள்ள பலர் கல்லூரியில் பாடம் நடக்கும்போது புறத்தே நின்று நான் பாடம் சொல்லுவதைக் கேட்டிருந்து நான் வெளியே வந்தவுடன் தங்கள் திருப்தியைத் தெரிவிப்பார்கள். இவ்வளவும் சேர்ந்து, ‘நாம் ஒரு புதிய வேலையை மேற்கொண்டிருக்கிறோமே; எப்படி நிர்வகிக்கப் போகிறோம்!’ என்ற கவலை எனக்கு இம்மியளவும் இல்லாதபடி செய்து விட்டன.

திருவாவடுதுறை மடத்தில் நான் சந்தோசமாகப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அங்கே நான் அடைந்த இன்பம் ஒரு வகை, கும்பகோணம் கல்லூரியில் நான் அடைந்த இன்பம் வேறு வகை. இரண்டிடங்களிலும் கட்டுப்பாட்டுக்கடங்கி நடக்கும் நிலை இருப்பினும், மடத்தில் பல விடயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தமையால், சம்பிரதாயம், மடத்து நிர்வாகம் முதலியவற்றினிடையே தமிழ்க் கல்வியின் தொடர்பு மாத்திரம் உடையவனாக நான் இருந்தேன். சுப்பிரமணிய தேசிகரும் பல துறைகளில் தம் கவனத்தைச் செலுத்த வேண்டியவராக இருந்தார். கல்லூரியிலோ கல்வியையன்றி வேறு விடயங்களுக்கு இடமில்லை. எவ்வளவு பெரியவிடயமாக இருந்தாலும் கல்விக்கு இடையூறு என்பதை அங்கே காண முடியாது. ஆகவே மடத்தில் மற்றக்காரியங்களில் ஈடுபட்டவர்களோடு கல்வி ஒன்றையே எண்ணி வாழ்ந்த எனக்கு எல்லாம் கல்வி மயமாக உள்ள கல்லூரியில் வரையறையான காலம், வரையறையான வேலை, வரையறையான பாடம் இவற்றின் துணையுடன் பாடம் சொல்வது விளையாட்டாகவே இருந்தது.விளையாட்டில் அதிக இன்பம் உண்டாவது இயல்புதானே?

திருவாவடுதுறைக்குச் சென்றது

இந்த இன்ப வாழ்வைப்பற்றி என் தாய் தந்தையருக்கும் சுப்பிரமணிய தேசிகருக்கும் சொல்ல வேண்டுமென்று நான் துடித்துக் கொண்டிருந்தேன். அந்த வாரம் வெள்ளிக்கிழமை கல்லூரி விட்டவுடனே போயிருப்பேன். அந்த வேளையில் புகை வண்டியில்லை. அதனால் மறுநாள் சனிக்கிழமை பகல் வண்டியில் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்து நேரே வீட்டிற்குச் சென்றேன். என்னுடைய வரவை எல்லாரும் எதிர்பார்த்திருந்தார்கள். வீட்டு வாசலில் என் தாயார் ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் நீரை வைத்துக்கொண்டு காத்திருந்தார். என்னைக் கண்டவுடன் ஆரத்தி சுற்றி, “உள்ளே வா, அப்பா” என்று அன்புடன் அழைத்தார்.

என் தாய் தந்தையார் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டனர். நான் பதில் சொன்னவாறே குளிலையும் உணவையும் முடித்துக் கொண்டேன். வேலையைப்பற்றி அவர்களுக்கு ஒருவாறு சொல்லிவிட்டு மடத்திற்கு விரைந்து சென்றேன். அப்பொழுது மிகுந்த முகமலர்ச்சியோடு சில அன்பர்களுடன் ஒடுக்கத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருந்தார். நான் போய்க் கண்டேன். இருவருக்கும் உண்டான ஆனந்தம் இப்படியென்று எடுத்துச் சொல்வது அரிது.

தேசிகரது திருப்தி

“உம்மைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படியும் நீர் ஒரு தடையுமின்றி வேலையைப் பெற்றுக்கொள்வீரென்றும், உபாத்தியாயர்களும் பிள்ளைகளும் நீர் பாடம் சொல்வதில் சந்தோசப்படுவார்களென்றும் நாம் எதிர்பார்த்ததுண்டு. அந்தப் படியே செயமடைந்து நல்ல பெயர் வாங்கி வந்ததைப்பற்றி மிக்க சந்தோசம்” என்று அவர் சொல்லிய வார்த்தைகள் என் காதில் அமுதம்போல் விழுந்தன. ஒரு வார காலமாக அவரது இன்மொழிகளைக் கேளாமல் பசித்திருந்த என் செவிகள் திருப்தி யடைந்தன.அந்த வார்த்தைகளினூடே ததும்பிய அன்பை மாந்தி நிறைந்த உள்ளத்தோடு இருந்த எனக்கு உடனே விடை சொல்ல இயலவில்லை. சில நிமிடங்கள் கழித்து, “எல்லாம் ஸந்நிதானத்தின் பேரன்பே” என்று சொல்லிவிட்டு நான் இயற்றி வைத்திருந்த பின்வரும் செய்யுளைச் சொன்னேன்:-

அற்றார்க்குத் தாயனைய துறைசையிற்சுப் பிரமணிய

அமலன் றன்பால்

கற்றார்க்குக் குறையுளதோ மற்றவன்றன் திருமுகத்தைக்

கண்ணிற் காணப்

பெற்றார்க்குத் துயருளதோ வுரைப்பமிக வினிக்குமவன்

பெயரை வாயால்

சொற்றார்க்குத் துயருளதோ யிரும்புவியி னாவலர்காள்

சொல்லுவீரே”

[சொற்றார்க்கு-சொல்லுபவர்களுக்கு.]

இச்செய்யுள் என் உள்ள மகிழ்ச்சியிலிருந்து எழுந்ததென்பதைத் தேசிகர் உணர்ந்து கொண்டார். பிறகு ஒவ்வொரு விடயமாக விசாரித்து வந்தார். நான் சொல்லச் சொல்ல அவர் புதுமைகளைக் கேட்பவர்போல மகிழ்ச்சியடைந்தார்.

அன்பர்களது வியப்பு

சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அங்கே தங்கித் தேசிகருடைய சல்லாபத்தில் ஒன்றியிருந்தேன். சின்னப் பண்டார சந்நிதியாகிய நமசிவாய தேசிகரிடமும் விடயங்களைத் தெரிவித்தேன். மடத்தில் உள்ள அன்பர்கள் யாவரும் என்னைச் சுற்றிச் சூழ்ந்து ஆவலுடன் கல்லூரி விடயங்களை விசாரித்தார்கள். காலேஜின் பெருமையையும், புறத் தோற்றத்தையும் அறிந்த அவர்கள் கோபாலராவின் பெருந்தன்மை, ஆசிரியர்களின் தகுதி, மாணாக்கர்களின் இயல்பு, வகுப்புகளின் ஒழுங்கு, அங்குள்ள சௌகரியமான ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏதோ ஒரு புதிய தேசத்துக்குப் போய் வந்தவனிடம் புதுமைகளைத் தெரிந்து கொள்ளுவதில் சனங்கள் எவ்வளவு வேகமாக இருப்பார்களோ அப்படியே இருந்தார்கள் அவர்கள். இரண்டு தினங்கள் போனதே தெரியவில்லை. திங்கட்கிழமை விடிந்தவுடன் முதல் வண்டியில் ஏறிக் கும்பகோணம் போய்ச் சேர்ந்தேன்.

(தொடரும்)

Sunday, March 09, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 123 : இரண்டாவது பாடம்

 

உ.வே.சா.வின் என் சரித்திரம்  123 : 

இரண்டாவது பாடம்



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 122: கல்லூரி நுழைவு – தொடர்ச்சி)

அடுத்த மணியில் பி. ஏ. முதல் வகுப்புக்குப் பாடம் சொல்லப் போனேன். செட்டியாரும் வேறு சில ஆசிரியர்களும் உடன் வந்தார்கள். சேசையர் விருப்பத்தின்படி சமற்கிருதப் பண்டிதராகிய பெருகவாழ்ந்தான் இரங்காசாரியரும் வந்தார். அங்கே இராமாயணத்தில் அகலிகைப் படலம் பாடம் சொல்லத் தொடங்கினேன். முதற் பாட்டைச் சகானா இராகத்தில் படித்துவிட்டுப் பொருள் சொல்லலானேன்.

நான் பாடம் சொல்லும் போதெல்லாம் பிள்ளைகள் என்னையே பார்த்துக் கவனித்து வந்தார்கள். செட்டியாரோ அவர்களில் ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்து வந்தார். எல்லோருடைய முகத்திலும் திருப்தியின் அடையாளம் இருந்ததை அவர் உணர்ந்து தாமும் திருப்தியுற்றார். இவ்வாறு இருந்த சமயத்தில் நான் சொன்ன ஒரு விசயத்தை இரங்காசாரியார் எழுந்து ஆட்சேபித்தார். நான் சமாதானம் சொல்லத் தொடங்குகையில் செட்டியார் எழுந்து மிக விரைந்து அவரிடம் சென்று அஞ்சலி செய்து, “சுவாமிகள் இந்த சமயம் ஒன்றும் திருவாய் மலர்ந்தருளக் கூடாது. இவர் பிள்ளைகளுக்குப் பொருள் விளங்கச் சொல்லுகிறாரா என்பதை மட்டும் கவனித்தாற் போதும். ஆட்சேபம் பண்ணக்கூடிய சமயம் அல்ல இது.இவரோ சிறு பிள்ளை. நீங்களோ பிராயம் முதிர்ந்தவர்கள். சமற்கிருதப் பாரங்கதர். ஏதேனும் தவறிவிட்டால் என்னுடைய விருப்பம் பூர்த்தியாகாது. சமித்தருளவேண்டும்” என்று சொல்லி மீண்டும் தம் இடத்தில் போய் அமர்ந்தார். மற்ற இடங்களில் செட்டியார் தைரியமாகப் பேசிப் பிறரை அடக்குவதைக் கண்டிருந்த நான் அப்போது கல்லூரியிலும் அப்படிச் செய்வதில்அவர் பின் வாங்கார் என்பதை உணர்ந்தேன்.

மேலே பாடம் நடந்தது. “வைகுந்தத்திற்குச் சென்ற வித்தியாதரப் பெண்மணி ஒருத்தி திருமகளைத் தோத்திரம் செய்து பாட அத்தேவி மகிழ்ந்து ஒரு மாலையைக் கொடுக்க அதனை வாங்கி அந்தப் பெண்மணி தன் யாழிற்குச் சூட்டினாள்” என்ற செய்தி அகலிகைப் படலத்தில் வருகிறது. “அன்ன மாலையை யாழிடைப் பிணித்து” என்று ஒரு பாடல் தொடங்குகிறது. அதற்கு நான் பொருள் சொல்லும்போது இடையே செட்டியார், “இந்தக் காலத்துப் பிள்ளைகளானால் பக்கத்திலுள்ள தங்கள் நாயின் கழுத்தில் அதை மாட்டுவார்கள்” என்றார். யாவரும் கொல்லென்று சிரித்தனர்.

பிற்பகல் நிகழ்ச்சிகள்

அந்த மணி முடிந்தது. இடை நேரத்திலே ஆகாரம் செய்து விட்டு வந்தேன். பிற்பகலில், எப். ஏ. முதல் வகுப்புக்குச் சென்றோம். அங்கே 80 பிள்ளைகளுக்கு மேல் இருந்தார்கள். நன்னூல் எழுத்தியல் ஆரம்பமாயிற்று. முதல் சூத்திரத்தை நான் சொல்லிவிட்டு, “மேலே சில சூத்திரங்களை நீங்களே சொல்லி அந்த முறையை எனக்குக் கற்பிக்க வேண்டும்” என்று செட்டியாரை வேண்டிக் கொண்டேன். அவர் அப்படியே சொல்லிக் கேள்விகளும் கேட்டார். எனக்குப் பல விசயங்கள் அப்போது தெரிந்தன. பிறகு, பி..ஏ. இரண்டாவது வகுப்புக்குச் சென்றோம். அந்த வகுப்பில் இருந்தவர்கள் செட்டியாரிடம் மூன்று வருசங்கள் பாடம் கேட்டவர்கள். அந்த வருசம் பரீட்சைக்குப் போக வேண்டியவர்கள். புதுக்கோட்டையில் முதல்வராக இருந்த எசு.இராதா கிருட்டிணையர். கோயம்புத்தூரில் சிறந்த வழக்குரைஞராக விளங்கிய பால கிருட்டிணையர், திருநெல்வேலி இந்து கல்லூரியில் ஆசிரியராக இருந்த சீதாராமையர் முதலிய பன்னிரண்டு பேர்கள் அவ்வகுப்பில் இருந்தார்கள்.

      கம்ப இராமாயணத்தில் நாட்டுப் படலம் பாடமாக இருந்தது. “வாங்கரும்

பாத நான்கும் வகுத்தவான் மீகியென்பான்” என்ற பாடலைச் சொல்லிப்

பொருள் கூறிவிட்டு இலக்கணக் கேள்விகள் கேட்கலானேன்.

      ஒரு மாணாக்கரை, “வாங்கரும் பாதமென்பதிலுள்ள அரும்பாதம் என்பது என்ன சந்தி?” என்று கேட்டேன். அவர், “பெயரெச்சம்” என்றார். பண்புத் தொகையாகிய அதைப் பெயரெச்சமென்று பிழையாகச் சொல்லவே, அங்கிருந்த செட்டியார் உடனே தலையில் அடித்துக்கொண்டு, “என்ன சொல்லிக் கொடுத்தாலும் சில பேருக்கு வருகிறதில்லை. மூன்று வருசம் என்னிடம் பாடம் கேட்டவன் இப்படிச்சொன்னால் எனக்கல்லவா அவமானம்?” என்று அந்த மாணாக்கரை நோக்கிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து,“தள்ளாத வயசில் நான் எவ்வளவு சொல்ல வேண்டுமோ அவ்வளவு சொல்லாமல் இருந்திருப்பேன். அதனால் தான் வேலையை விட்டு நீங்குகிறேன். நீங்கள் நன்றாகச் சொல்லிக் கொடுங்கள்” என்றார்.

      மேலே நான் பாடம் சொன்னேன். மணி அடித்தது. உடனே நாங்கள் கல்லூரியை விட்டுப் புறப்பட்டோம்.

      முதல் நாளாகிய அன்றே எனக்கு, ‘நம் வேலையை நன்றாகச் செய்யலாம்’ என்ற தைரியம் பிறந்தது. பிள்ளைகளுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கும், எல்லாருக்கும் மேலாகத் தியாகராச செட்டியாருக்கும் நான் அந்தப் பதவிக்கு ஏற்றவனென்ற திருப்தி உண்டாயிற்று.

(தொடரும்)

Saturday, February 15, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 122: கல்லூரி நுழைவு

 

உ.வே.சா.வின் என் சரித்திரம் 122: 

கல்லூரி நுழைவு



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 121: நான் சொன்ன பாடல்-தொடர்ச்சி)

பிறகு திங்கட்கிழமை நல்ல வேளையில் கல்லூரிக்குப் போக வேண்டுமென்று எண்ணி சோதிடரைக் கண்டு பார்த்த போது 12 மணிக்குமேல் நல்லவேளை யென்று தெரிந்தது. “நாளைக்குப் பதினொன்றரை மணிக்கு சித்தமாக இருந்தால் நான் கல்லூரிக்குப் போய்ச் சொல்லியனுப்புகிறேன். அப்போது வரலாம்” என்று செட்டியார் சொல்லி எனக்கு விடை கொடுத்தனுப்பினார். அன்று மாலையில் முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வந்தேன்.

சொல்லும் முறை சரியானபடி இருந்தால் அவர்களுடைய அன்பைப் பெறலாம். பாடங்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டும், அடிக்கடி நடந்த பாடங்களில் கேள்வி கேட்க வேண்டும்; மற்ற ஆசிரியர்களிடமும் சாக்கிரதையாகப் பழகவேண்டும்” என்று அவர் பின்னும் பல போதனைகளை எனக்குச் செய்தார்.

திங்கட்கிழமை பகற்போசனம் செய்து விட்டுச் சேசையர் வீட்டில் காத்திருந்தேன். பதினொன்றரை மணிக்குச் செட்டியார் உத்தரவுப்படி கல்லூரியிலிருந்து இரண்டு மாணாக்கர்கள் என்னை அழைக்க வந்தார்கள். நான் சுப்பிரமணிய தேசிகர் அளித்த உடைகளில் சட்டையை அணிந்து அதன் மேல் துப்பட்டாவைப் போர்த்துத் தலையில் சால்வையைக் கட்டிக் கொண்டு சென்றேன். அந்தக் கோலத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்கே சிரிப்பு வருகிறது.

கல்லூரியின் தாழ்வாரத்தில் மேலைக் கோடியிலுள்ள ஒரு தூணருகில் தியாகராச செட்டியாரும், ஆர். வி. சீரீநிவாசையரும் என்னை எதிர்பார்த்து நின்று வரவேற்று அழைத்துச் சென்றார்கள். நல்ல வேளையென்று குறிப்பிட்டிருந்த காலம் தமிழ்ப்பாடம் இல்லாதவேளை. அவ்விருவரும் நுழைகலை(எப். ஏ.) இரண்டாம் வகுப்புக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கே பாடம் நடத்திய அனுமந்தராவிடம் முன்பே, “இவர் நல்ல வேளையில் பாடம் சொல்ல வேண்டியிருப்பதால் உங்கள் மணியை இவருக்குக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்ததனால் நாங்கள் வகுப்புக்குள் புகுந்தவுடன் ஹனுமந்தராவு தம் ஆசனத்தை விட்டு எழுந்து எங்களை வரவேற்றார்.

“இப்படி உட்காருங்கள்” என்று மேடையின் மீதிருந்த நாற்காலியை எனக்குச் சுட்டிக்காட்டினார் அனுமந்தராவு. எனக்கு அவ்வளவு பேர்களுக்கு முன்னால் அங்கே இருப்பதற்குத் துணிவுஉண்டாகவில்லை. என் கருத்தை அறிந்த செட்டியார், “இது திருவாவடுதுறை மடமன்று; இந்த இடத்தில் உட்கார வேண்டியது உங்கள் கடமை” என்று சொல்லவே நான் போய் நாற்காலியில் அமர்ந்தேன். எதிரே இருந்த பலகையில் அனுமந்தராவு, சீநிவாசையர், தியாகராச செட்டியாரென்பவர்களும் ஓய்வுள்ள வேறு சில ஆசிரியர்களும் இருந்தனர். அந்த வகுப்பில் எழுபது பிள்ளைகளுக்கு மேல் இருந்தனர். முன் வரிசையில் அரசு உதவிததொகை பெற்ற இருபது பிள்ளைகள் உட்கார்ந்திருந்தனர். வகுப்பிலிருந்த பிள்ளைகளிற் பலர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் முதிர்ந்தவர்களாகத் தோற்றினர்.

விநாயகக் கடவுளையும் வேறு தெய்வங்களையும் மனத்தில் தியானித்துக் கொண்டு பாடம் சொல்லத் தொடங்கினேன். நாலடியாரில், “இரவச்சம்” என்னும் அதிகாரத்தை முதலிலிருந்து சொன்னேன். மடத்தில் பாடம் சொன்ன பழக்கத்தால் எனக்கு அங்கே சொல்வதில் அச்சமோ சோர்வோ உண்டாகவில்லை. முதற் செய்யுளை சங்கராபரண ராகத்தில் நிறுத்திப் படித்தேன். பள்ளிகூடப் பிள்ளைகளை ஓரளவு சங்கீதத்தால் வசப்படுத்தலாமென்பதை அனுபவத்தால் தெரிந்து கொண்டேன். நான் பாடம் சொல்லத் தொடங்கிய செய்யுள் வருமாறு:

நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்

தம்மாலாம் ஆக்கம் இலரென்று-தம்மை

மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும்

தெருண்ட அறிவி னவர்.”

[இதன் பொருள்: ‘இந்த ஏழைகள் நம்மாலே முன்னுக்கு வருபவர்கள்: இவரால் தமக்கோ, நமக்கோ உண்டாகும் லாபம் ஒன்றுமில்லை’ என்று தம் செல்வத்தைப் பெரிதாக எண்ணி மயங்கிய மனத்தையுடையவர்களைப் பின் தொடர்ந்து தெளிந்த அறிவுடையவர்கள் செல்வார்களோ? [நல்கூர்ந்தார்-வறியவர். ஆக்கம்-விருத்தி. மருண்ட- மயங்கிய, செல்பவோ-செல்வார்களோ? தெருண்ட-தெளிந்த.]பொருள் சொல்லும் போது, உலகத்திலே பணக்காரர்கள் இறுமாப்பினால் ஏழைகளை அவமதிப்பதையும் ஓர் உதவி செய்துவிட்டால் அதைத் தாங்களே பெரிதாகச் சொல்லி அவ்வுதவி பெற்றவர்களை இழிவாகப் பேசி, ‘இந்த உதவியை இவரிடம் பெறும்படி நம்மைத் தெய்வம் ஏன் வைத்தது!’ என்று அவ்வேழைகள் தம்மைத் தாமே நொந்து கொள்ளும்படி செய்வது முதலியவற்றையும் எடுத்துரைத்தேன். ஒரு பாடலைப் பாடம் சொல்லும்போது, வார்த்தைக்கு வார்த்தை அருத்தம் மாத்திரம் சொல்லி நிறுத்தினால் கேட்பவர்களுடைய மனம் அதில் பொருந்தாது. அதனால், உபமானங்களையும், உலக அனுபவச் செய்திகளையும் எடுத்துச் சொல்லி மாணாக்கர்களுடைய மனத்தைப் பாட்டின் பொருளுக்கு இழுத்தேன்.

ஐந்து பாடல்கள் அந்த மணியில் முடிந்தன. இடையே, யாசகம் செய்வதனால் உண்டாகும் இழிவைப் பற்றி நான் மேற்கோள்கள் சொன்னபோது செட்டியார் குசேலோபாக்கியானத்திலிருந்து, “பல்லெலாந் தெரியக் காட்டி” என்னும் செய்யுளை எடுத்துச் சொல்லி அவ்விசயத்தைப் பின்னும் விளக்கினார்.


(தொடரும்)