Showing posts with label உ.வே.சா. Show all posts
Showing posts with label உ.வே.சா. Show all posts

Sunday, April 06, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 125 : அத்தியாயம்-85 : கோபால ராவின் கருணை



(உ.வே.சா.வின் என் சரித்திரம்  124 : எனக்கு உண்டான ஊக்கம்-தொடர்ச்சி)

திங்கட்கிழமை பாடம் சொன்னேன். செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாவது மணி எப். ஏ. இரண்டாவது வகுப்பில் நாலடியார் பாடம் நடத்தத் தொடங்கினேன். அப்போது கல்லூரியைப் பார்க்க வந்த ஓர் உத்தியோகத்தருக்கு அங்கங்கே உள்ள வகுப்புகளைக் காட்டிக் கொண்டு வந்த கோபாலராவு நான் இருந்த அறைக்குள் அவருடன் வந்தார். அவர்களைக் கண்டவுடன் எழுந்த என்னைக் கோபாலராவு கையமர்த்தி விட்டு இரண்டு நாற்காலிகளைக் கொணர்ந்து போடச் செய்து ஒன்றில் அவரை இருக்கச் சொல்லி மற்றொன்றில் தாம் அமர்ந்தார். அதைப் பார்த்தபோது அவர் நெடு நேரம் அவ்வகுப்பில் இருந்து பாடத்தைக் கவனிக்கக் கூடுமென்று தோற்றியது.

நான் பாடம் சொல்லத் தொடங்கினேன். கோபாலராவும் அவர் நண்பரும் கவனித்து வந்தனர்.நான் அப்போது பாடம் சொல்லத் தொடங்கிய பாடல் மிகவும் இரசமானது. “நமக்குச் சக்தி இருக்கும் பொழுதே தருமத்தைப் பண்ண வேண்டும். பிறகு செய்யலாமென்று நினைத்தால் அதற்குக் காலம் வராமலே போய்விடும்” என்ற கருத்தையுடையது அது. அதன் உட்பொருளை விளக்குவதற்காக ஒரு கதையைச் சொன்னேன்.

நான் சொன்ன கதை

“ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நன்றாகச் சம்பாதித்தான். தனக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொண்டான். தருமசிந்தனை மாத்திரம் அவனுக்கு உண்டாகவில்லை. அவனுக்கு வயசு முதிர்ந்து வந்தது. அவனுடைய குமாரர்களெல்லாம் தலையெடுத்தார்கள். ஏதாவது கிடைத்த பொருளைப் பத்திரமாகச் சேமித்து வைக்க அந்தக் காலத்தில் தக்க வழி இல்லை. அதனால் அவன் தனக்குக் கிடைத்ததை ஒரு துணியில் முடிந்து எங்கேயாவது புதைத்து வைப்பான். சில காலத்துக்குப் பிறகு அந்தக் கிழவனுக்கு நோயுண்டாகி மரணாவத்தை ஏற்பட்டது. அப்பொழுது அவனால் பேச முடியவில்லை. அருகில் அவனுடைய பிள்ளைகளும் உறவினர்களும் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் அவனுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணத்தினால், “என்ன வேண்டும்? என்ன வேண்டும்?” என்று கேட்கலாயினர்.

“கிழவன் யமனுடன் போராடிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் அவனுடைய நண்பனொருவன், கிழவன் பணத்தைத் தருமத்தில் செலவிடாமலிருந்ததைக் கண்டித்துத் தருமம் செய்ய வேண்டுமென்று இடித்துரைத்து வந்தான். அவன் வார்த்தைகளால் கிழவனுக்குத் தருமம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது, தான் எங்கேயோ சுவரில் ஓரிடத்தில் புதைத்து வைத்திருந்த சிறு பொன் முடிப்பின் ஞாபகம் அவனுக்கு வந்தது. அதை எடுத்துத் தக்கபடி தருமம் செய்ய வேண்டுமென்ற கருத்திருந்தும், அப்படிச் செய்யும் நிலையில் அவன் அப்போது இல்லை. தனது எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் அவன் வாய் அடைத்து விட்டது.

அந்தச் சமயத்தில் வேறு என்ன செய்ய முடியும்? எப்படியாவது தன் கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு அதிகரித்து வந்தது. மிகவும் கடினப்பட்டு ‘இவ்வளவு பெரிய பொன் முடிச்சு’ என்பதைத் தெரிவிப்பதற்காக தன் கையினால் சுவரைக் குறிப்பிட்டு சாடை காட்டினான். ஆனாலும் பக்கத்தில் இருந்தவர்களுக்கு அவன் கருத்து விளங்கவே இல்லை. ‘ஐயோ! எதையோ கேட்கிறாரே! இந்தச் சமயத்தில் இன்னது கேட்கிறாரென்று தெரிந்துகொள்ள முடியவில்லையே!’ என்று சிலர் இரங்கி அழுதனர். அப்போது அவனுடைய குமாரன் ஒருவன், ‘தெரிந்து விட்டது; இவருக்குப் புளிப்பு விளாங்காயின்மேல் மிக்க பிரியம் உண்டு; அதைக் கேட்கிறார். ஐயோ, இப்போது அது கிடைக்கும் காலமல்லவே. ஆனாலும் பார்க்கிறேன்” என்று வேகமாக ஓடினான். அவன் போய் வருவதற்குள் கிழவன் உயிர் போய்விட்டது.

“பிள்ளை, ‘ஐயோ; அவருக்குப் பிரியமான விளாங்காய் வேண்டுமென்று சாடையாகச் சொன்னாரே நான் தெரிந்து கொண்டும் அதைக் கொண்டு வந்து கொடுக்கும் பாக்கியம் இல்லாத பாவியானேனே!’ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதான்.“அந்தக் கிழவன் நினைத்ததற்கும் அவன் பிள்ளை செய்ததற்கும் சம்பந்தமே இல்லை. அவன் பொன்னைக் குறிக்கப்போய் அது புளி விளாங்காயாய் முடிந்தது.”

ராயர் சிரிப்பு

இந்தக் கதையை வேடிக்கையாக விரித்துச் சொல்லி நிறுத்தினவுடன் கோபாலராவு பக்கென்று வாய்விட்டுச் சிரித்து விட்டார். அவ்வளவு வெளிப்படையாக அவர் சிரித்ததை யாரும் கண்டதில்லை. நான் சொன்ன கதையின் சுவைதான் அவரைச் சிரிக்க வைத்ததென்று அறிந்து நிறைவடைந்தேன்.

மேலே பாடம் சொல்லத் தொடங்கினேன். “இப்படிக் கடைசிக் காலத்தில் தருமம் செய்ய எண்ணியவர்கள் எண்ணம் அப்பொழுதுகூட நிறைவேறுவதில்லை. ஆகையால் நாம் போகும் மார்க்கத்திற்குப் பயன்படும் தருமத்தை முன்பே செய்ய வேண்டும். பெரிய பிரயாணம் செய்யப் போகிறவன் சோற்று மூட்டை கொண்டு போவதுபோல இந்தத் தரும மூட்டையை நாம் மறுமைக்குச் சேகரிக்க வேண்டும். இதைத்தான் இந்தச் செய்யுள் சொல்லுகிறது” என்று சொல்லி மீண்டும் அப்பாட்டைச் சொன்னேன்:-

சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் – இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.

[சிறு காலை – இளம் பருவத்திலே. செல்வுழி – செல்லுமிடமாகிய மறு பிறப்பிற்குரிய. வல்சி – ஆகாரம். இறுகிறுக – இறுக இறுக. தோட் கோப்பு – தோளில் மாட்டிக் கொள்ளப்படும் உணவு மூட்டை. பின் அறிவாம் – பிறகு பார்த்துக் கொள்வோம்.]

அந்தப் பாட்டுக்கு விரிவாகப் பொருள் சொல்லி முடிந்தவுடன் மேலுள்ள பாடலைச் சொல்லத் தொடங்கினேன். அந்த வகுப்பில் மூன்றாவது மணிக்குரிய பாடம் சொல்லும் ஆசிரியர் அன்று வரவில்லை. அதனால் அந்த மணியிலும் தொடர்ந்து நானே தமிழ்ப் பாடம் சொல்லத் தொடங்கினேன்.இரண்டு மணியிலும் கோபால ராவும் அவர் நண்பரும் அவ்வகுப்பில் இருந்து கேட்டனர்.

மணி முடிந்தது. அவர்கள் எழுந்தனர். கோபால ராவு என்னை ஒரு முறை பார்த்துப் புன் முறுவல் பூத்தார். அவர் பார்வையில் கருணை ததும்பியது; முறுவலில் உவகை வெளிப்பட்டது. நான் விடைபெற்றுக் கொண்டு இடைவேளை உணவு கொள்ளப் புறப்பட்டேன்.

செட்டியாரின் ஆவல்

அன்றுமாலை வழக்கம்போல் தியாகராசசெட்டியாரிடம் போய்க் கோபால ராவு என் வகுப்புக்கு வந்ததையும் அங்கே நிகழ்ந்தவற்றையும் எடுத்துச் சொன்னேன்.செட்டியார், “அவருக்கு என்ன அபிப்பிராயம் உண்டாயிற்று என்று தெரியுமா? மேலதிகாரிகளுக்கு உங்களைப்பற்றி எழுத வேண்டுமே; என்ன எழுதப் போகிறாரோ!” என்று கேட்டார்.

“நான் எப்படி அறிவேன்?” என்று கூறினேன். செட்டியாருக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. என்னைப் பற்றிக் கோபால ராவு மேலதிகாரிகளுக்கு எழுதி நியமன உத்தரவு பெற வேண்டும் என்ற கவலையால் இராயரவர்களுடைய மனத்தில் ஏற்பட்ட அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளுதற்கு மிக்க ஆவலுடையவராக இருந்தார். எல்லாம் நல்லதாகவே இருக்குமென்று எதிர்பார்த்த எனக்கு அவருடைய ஆவல் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

மறுநாள் கல்லூரி திறந்தவுடன் செட்டியார் அங்கே சென்று எழுத்தரைப் பார்த்து, “சாமிநாதையரைப் பற்றி இராயரவர்களுக்கு என்ன அபிப்பிராயம்?” என்று கேட்டார்.

நல்ல செய்தி

அவர் நல்ல செய்தியைச் சொன்னார். “இராயரவர்கள் இவரைப் பற்றி இயக்குநருக்கு நன்றாக எழுதியிருக்கிறார்கள். இதோ அஞ்சல் அனுப்பப் போகிறேன்” என்று எழுத்தர் சொன்னதைக் கேட்ட பிறகுதான் தியாகராச செட்டியாருக்கு நல்லுணர்வு வந்தது. அவர் எழுத்தரை அதோடு விடவில்லை. என்ன எழுதினாரோ வென்று தூண்டித் தூண்டி விசாரித்தார். நான் மடத்திலிருந்து கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றவனென்பதையும், அங்கே பலருக்குப் பாடம் சொல்லிப் பழக்கமானவனென்பதையும் எழுதிவிட்டு. “நானே இரண்டு முறை அவர் பாடம் சொன்ன வகுப்புக்குப் போய்க் கவனித்தேன். அவர் கற்பிக்கும் முறை மிகவும் நிறைவாக இருக்கிறது, ஆகையால் இது வரையில் தியாகராச செட்டியாருக்குக் கொடுத்த ஐம்பது உரூபாயையே அவருக்கும் கொடுத்து இரண்டு வருடத்துக்கு சப்ரோட்டமாக நியமிக்கலாம்” என்றும் குறித்திருந்ததாக எழுத்தர் சொன்னார்.

இவ்வளவையும் கேட்டுக்கொண்டு வந்த செட்டியார் என்னிடம் “கவலை நீங்கியது. கடவுள் கிருபையால் நான் செய்த முயற்சி பலித்தது. இனி உங்கள் பாடு, உங்கள் மாணாக்கர்கள் பாடு” என்று சந்தோசத்தோடு சொன்னார்.

“எல்லாம் உங்களுடைய பேரன்பினால் உண்டானவை” என்று என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொண்டேன்.இந்த முக்கியமான நிகழ்ச்சிக்குப் பிறகு கோபாலராவு என்பால் மிக்க கருணை காட்டலானார். என்னைக் காணும் போதெல்லாம், ஒழுங்காகப் பாடம் நடந்து வருகிறதா? யாராவது தவறு செய்தால் உடனே சொல்லுங்கள். உங்களுக்கு ஏதாவது ஆகவேண்டுமானாலும் கூச்சமில்லாமல் தெரிவிக்கலாம்”என்று அன்பொழுகக் கூறுவார். தம்முடைய பாதுகாப்பின் கீழ் வந்த என்னை அங்கீகரித்துக் கொண்டதற்கு அறிகுறியாக இருந்தன அந்த வார்த்தைகள்.

அந்த வாரம் சனிக்கிழமை காலையில் தியாகராச செட்டியாரையும் அழைத்துக் கொண்டு திருவாவடுதுறை சென்று அங்கே இரண்டு நாள் சந்தோசமாக இருந்து விட்டு வந்தேன். வரும்போது சுப்பிரமணிய தேசிகர், “செட்டியாருக்குக் கொடுத்த ஐம்பது உரூபாய் கொடுத்தால் அங்கே இரும்; இல்லாவிட்டால் வேலையை விட்டு விட்டு இங்கே வந்து விடலாம்” என்று சொல்லி அனுப்பினார்.

கோபால ராவு அறிவித்தது

திங்கட்கிழமையன்று காலையில் பன்னிரண்டு மணிக்கு மேல் பி. ஏ. இரண்டாவது வகுப்புக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு மணியான பிறகும் சிறிது நேரம் சொன்னேன். அப்போது திடீரென்று பிள்ளைகளெல்லாம் எழுந்து நின்றார்கள். நான் காரணம் அறியாமல், “ஏன் நிற்கிறீர்கள்?” என்று கேட்கவே அவர்கள், “இராயரவர்கள் வந்து தாழ்வாரத்தில் உங்களை நோக்கிக்கொண்டு நிற்கிறார்கள்” என்றார்கள். நான் உடனே அவர்பாற் சென்றேன். அவர், “உங்களை இரண்டு வருடத்துக்குச் செட்டியாரவர்களுக்குக் கொடுத்த ஐம்பது உரூபாயையே சம்பளமாகக் கொடுத்து சப்ரோட்டமாக நியமித்திருப்பதாக இயக்குநர் துரையவர்கள் உத்தரவு அனுப்பியிருக்கிறார்கள்” என்றார். நான் என் சந்தோசத்தை முகக் குறிப்பால் தெரிவித்தேன்.

இந்தச் செய்தி தெரிந்த ஆசிரியர்களெல்லாம் மகிழ்ச்சியடைந்தனர். தியாகராச செட்டியாரோ கரைகடந்த ஆனந்தத்தில் மூழ்கினார். என் மனநிலையைச் சொல்லுவதற்கு வார்த்தை ஏது?

முதற் சம்பளம்

அந்த வாரம் நான் இந்தச் சந்தோசத்துடனும் கையிற் பெற்ற அரைமாதச் சம்பளத்துடனும் திருவாவடுதுறை சென்றேன். “நீங்கள் வாங்கும் முதற் சம்பளத்தை உங்கள் தாய் தகப்பனாரிடம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று செட்டியார் சொல்லியிருந்தார். அப்படியே அந்த இருபத்தைந்து உரூபாயை முதலில் என்தாயார் கையிற் கொடுத்தேன். அவர் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். வேறு யாரேனும் இலட்ச உரூபாய் கொடுத்திருந்தாலும் அவருக்கு அவ்வளவு சந்தோசம் உண்டாகியிராது. பிறகு என் தந்தையாரிடமும் சுப்பிரமணிய தேசிகரிடமும் கொடுத்து வாங்கிக் கொண்டேன். “பரம சாம்பவருடைய பிள்ளையாகிய உமக்கு இன்னும் அதிகச் சம்பளமும் உயர்ந்த பதவியும் கிடைக்க வேண்டும்” என்று தேசிகர் வாழ்த்தினார்.

அதுவரையில் கும்பகோணத்தில் நான் சிரீ சாது சேசையரவர்கள் வீட்டிலேயே இருந்து போசனம் செய்து வந்தேன். அந்த வாரம் என் தாய் தந்தையரை அழைத்துக் கொண்டு கும்பகோணம் சென்றேன். அங்கே சில மாத காலத்துக்குப் பக்தபுரியக்கிரகாரத்தில் ஒரு சிறிய வீடுபேசிக்கொண்டு அதில் குடியிருந்தோம்

பரீட்சையும் விடுமுறையும்

மார்ச்சு மாத இறுதியில் கல்லூரி நடைபெற்றது. அக் காலத்தில் சருவகலாசாலைப் பரீட்சை திசம்பர் மாதத்தில்தான் நடைபெற்று வந்தது.

மார்ச்சு மாதப் பரீட்சைக்குத் தியாகராச செட்டியாருடைய உதவியால் வினாப்பத்திரம் சித்தம் செய்தேன். பரீட்சை முடிந்தபிறகு அவர் முன்னிலையில் விடைக் கடிதங்களைத் திருத்தி ‘மதிப்பெண்’களை வரிசைப்படுத்தி எழுதி முதல்வரிடம் சேர்ப்பித்தேன்.

கோடை விடுமுறை தொடங்கியது. அந்தச் சம்பளத்தையும் பெற்றுத் தாய் தந்தையரை அழைத்துக்கொண்டு திருவாவடுதுறைக்குச் சென்றேன். அக்காலத்தில் திருவாவடுதுறையில் எனக்குச் சீமந்தம் நடைபெற்றது. அதற்கு என் சம்பளப் பணம் உதவியது. சுப்பிரமணிய தேசிகர் செய்த உதவிகளுக்கும் கணக்கில்லை.

(தொடரும்)

Sunday, January 19, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 118: அத்தியாயம் 80. புதிய வாழ்வு

 

உ.வே.சா.வின் என் சரித்திரம் 118: அத்தியாயம் 80. புதிய வாழ்வு



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 117: அத்தியாயம் 79. பாடும் பணி-தொடர்ச்சி)

1880-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் 12  வியாழக்கிழமை பொழுது விடிந்தது. அன்று காலையில் நான் வழக்கம் போலவே உற்சாகத்தோடு இருந்தேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பு என்னை நல்ல நிலைமையில் வைத்து வளர்த்து வரும் என்ற எண்ணம் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் இருந்தது. என் வாழ்வில் ஒரு விதமான அமைதி ஏற்பட்டு விட்டதாகவே நான் கருதினேன். பிள்ளையவர்களுடைய பதவியை வகிக்கும் தகுதி என்னிடம் இராவிட்டாலும் அவரது மாணாக்க பரம்பரையை விருத்தி செய்யும் தொண்டே எனது வாழ்க்கைப் பணியாக இருக்குமென்று எதிர் பார்த்தேன்.ஆனால் கடவுளுடைய எண்ணம் வேறு விதமாக இருந்தது. மடத்தின் தொடர்பு ஒன்றோடு நில்லாமல் என் ஆசிரியத் தொழிலும், ஆராய்ச்சியும், தமிழ்த் தொண்டும் மேன்மேலும் விரிவடைய வேண்டிய நல்லூழ் எனக்கு இருந்தது போலும். அது தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியாரைக் குருவாரமாகிய அன்று பிற்பகல் திருவாவடுதுறையிற் கொணர்ந்து சேர்த்தது. என் புதிய வாழ்வு தொடங்கிற்று.

செட்டியார் வரவு

தியாகராச செட்டியார் மடத்துக்கு வந்தபோது சின்னச் பண்டார rந்நிதியாகிய சிரீ நமசிவாய தேசிகர் பகற் போசனம் செய்து விட்டுச் சிரமபரிகாரம் செய்திருந்தார். அப்போது இரண்டு மணி இருக்கும். தேசிகர் விரும்பியபடி அச்சமயம் சில மாணாக்கர்களுக்கு நான் காஞ்சிப்புராணம் பாடஞ்சொல்லி வந்தேன். நேரே நாங்கள் இருந்த இடத்திற்குச் செட்டியார் வந்தார். தம் வரவை அறிந்துவந்த நமசிவாய தேசிகரை வணங்கிவிட்டு அவர் உட்கார்ந்து பேசினார். ஒரு மணி நேரம் வரையில் பேசி இருந்து விட்டு, “மகா சந்நிதானத்தைத் தரிசிக்கலாமென்று வந்தேன். உத்தரவு கொடுக்க வேண்டும்” என்று சொல்லிப் புறப்பட்டார். அவர் சொல்லியபடி நானும் உடன் சென்றேன்.

சிரீ சுப்பிரமணிய தேசிகரிடம் நாங்கள் போன சமயம் அவர் ஒருவருக்குக் கம்ப ஐயங்களை நீக்கிக் கொண்டிருந்தார். செட்டியாரும் நானும் அதைக் கவனித்தோம். சந்தேகம் கேட்டவர் தம் வேலையை முடித்துக் கொண்டு போன பிறகு செட்டியாரும் சுப்பிரமணிய தேசிகரும் கம்ப ராமாயணத்தின் சிறப்பைப்பற்றிச் சம்பாசித்தார்கள்.

செட்டியாரின் விண்ணப்பம்

இப்படி ஒரு மணி நேரம் சம்பாசணையான பிறகு செட்டியார், “ஒரு விண்ணப்பம்” என்றார்.

சுப்பிரமணிய தேசிகர் : என்ன! சொல்லலாமே.

செட்டியார்: சாமிநாதையருக்கு என் வேலையைச் செய்விக்க எண்ணியிருக்கிறேன். கிருபை செய்து சந்நிதானம் அதற்கு உத்தரவளிக்க வேண்டும்.

தேசிகர் : அதற்கென்ன? பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் வேலையை விடும்போது யோசித்துக் கொள்ளலாமே.

செட்டியார் : வேலையிலிருந்து நான் விலகிக் கொண்டேன். மருத்துவருடைய சான்றிதழும் கொடுத்தாயிற்று. இப்போது என் வேலையில் ஒருவரும் இல்லை. எதிர்பாராத இந்தச் செய்தியைக் கேட்டுத் தேசிகர் திகைத்தார். நானும் பிரமித்தேன்.

தேசிகர் : இந்த விசயத்தை நீங்கள் முன்பு தெரிவிக்கவில்லையே. நீங்கள் இன்னும் சில வருசங்கள் வேலை பார்க்கக் கூடுமென்றல்லவோ எண்ணியிருந்தோம்?

செட்டியார் : வேலையிலிருந்து விலகிக்கொள்வதாக நான் ஒரு வாரத்துக்கு முன்பே எழுதிக் கொடுத்து விட்டேன். சாமிநாதையரை என் தானத்தில் நியமிக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறேன். இவரை அனுப்பி வேலை பார்க்கும்படி உத்தரவு கொடுக்க வேண்டும்.

தேசிகர் இரண்டு நிமிடம் யோசித்தார். பிறகு, “இவர் இவ்விடம் இருப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது. ஆதலால் இப்போது இவரை அனுப்ப முடியாது” என்றார்.

செட்டியார் மிக்க வருத்தத்தோடு, “சந்நிதானத்தில் அப்படி உத்தரவாகக் கூடாது. கல்லூரி முதல்வர் கோபாலராவ் அவர்களிடம் நான் வாக்குக் கொடுத்து விட்டேன். வேறு சிலர் இந்த வேலைக்கு மிகவும் முயன்று வருகிறார்கள். இவருக்கே செய்விக்க வேண்டுமென்று சொல்லி ராயரவர்களுடைய வாக்குறுதியையும் பெற்று வந்திருக்கிறேன். இவரிடம் சந்நிதானத்துக்குள்ள பேரன்பை அறிந்து இது நல்ல வேலை என்ற ஞாபகத்தால் இந்த முயற்சியைச் செய்யலானேன். இதனால் எல்லோருக்கும் நன்மையும் புகழும் உண்டாகும்” என்றார். தேசிகர் இணங்கவில்லை. செட்டியார் மீட்டும் சில காரணங்களை எடுத்துச் சொல்லி என்னை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இரவு மணி ஏழுக்கு மேலாகிவிட்டதால் தேசிகர், “இருக்கட்டும்; அனுட்டானத்தை முடித்துக் கொண்டு நமசிவாய மூர்த்தியின் தீபாராதனைத் தரிசனத்துக்கு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அனுட்டானம் செய்யப் போனார்.

செட்டியார் கலக்கம்

செட்டியாரும் நானும் எழுந்து புறத்தே வந்தோம் வழியில் எதிர்ப்பட்ட குமாரசாமித் தம்பிரானைக் கண்டு செட்டியார் தாம் வந்த காரியத்தைத் தெரிவித்தார். அவர், “நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விசயம் மடத்துக்கு மிக்க உதவியாக இருக்கும் இவர்களைப் பிரிவதற்குச் சந்நிதானம் சம்மதிக்குமா? எனக்கும் உசிதமாகத் தோற்றவில்லை; மற்றவர்களும் அப்படியே கருதுவார்கள்” என்றார். “இந்தச் சங்கடத்துக்கு நான் என்ன செய்வேன்!” என்று முணு முணுத்துக் கொண்டே செட்டியார் அவரை விட்டு நடந்தார். பிறகு என்னைப் பார்த்து, “இவர்கள் வார்த்தைகளையெல்லாம் கவனிக்க வேண்டா. பேசாமல் ‘போகிறேன்’ என்று சொல்லி விட்டு என்னுடன் வந்துவிடுங்கள். இந்த மடத்தில் ஆயுள் முழுவதும் உழைத்தாலும் உங்களுக்கு இந்த நிலையிலிருந்து சிறிதும் உயர்வு ஏற்படாது. இங்கே ஒரு வருடத்திற் கிடைக்கும் ஐம்பது உரூபாயை அங்கே மாதந்தோறும் பெறலாமே? பொழுது விடிந்தது முதல் இராத்திரி பத்து மணி வரையில் இங்கே கத்திப் பாடம் சொல்ல வேண்டும். பிற வேலைகளையும் கவனிக்க வேண்டும். அங்கே தினந்தோறும் 4 மணி நேரத்துக்குமேல் வேலை இராது. வாரந்தோறும் இரண்டு நாள் விடுமுறை உண்டு” என்றார். அவர் பின்னும் பலவாறு இரண்டு இடங்களுக்குமுள்ள வித்தியாசத்தை எடுத்துச் சொன்னார். அவ்வளவையும் நான் காதில் வாங்கிக்கொள்ளாமல், “கும்பகோணத்தில் உள்ள சௌகரியங்களைப் பற்றித் தாங்கள் சொன்னதை நான் கவனித்தேன். இதைக் காட்டிலும் மேலான இடமொன்று இருப்பதாக இதுவரையில் எனக்குத் தோற்றவில்லை. ஒரு விதத்திலும் இங்கே குறைவில்லை. சம்பளம் சொற்பமென்று சொல்லக்கூடாது. எங்களுக்கு ஒருவிதத்திலும் கவலையில்லாமல் சந்நிதானம் பார்த்துக்கொள்ளுகிறது” என்று பதில் சொன்னேன். திருவாவடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளதென்பதைச் செட்டியார் நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை.

எனது நிலை

என் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. கல்லூரி உத்தியோகம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. ஆனால் திருவாவடுதுறை மடத்தில் உள்ளோரது அன்பு என்உயிரோடு இணைந்து நின்றது. சுப்பிரமணிய தேசிகர் என்னை அனுப்ப இணங்கவில்லை யென்பதை அறிந்த போது என்பால் அவர் வைத்துள்ள அன்பை ஒருவாறு எண்ணிப் பார்த்தேன். “ ஒரு மனிதனுக்குப் பணந்தானா பெரிது? மடத்துக்கு இல்லாத பெருமை கல்லூரிக்கு வரப்போகிறதா? இதன் கௌரவ மென்ன? பெருமை என்ன? இதன் சம்பந்தம் ஏற்படுவது சுலபமான காரியமா?” என்றெல்லாம் நான் விரிவாக எண்ணினேன். இடையிடையே தியாகராச செட்டியார் சொன்ன ஆசை வார்த்தைகள் என்னை மயக்கின. செட்டியார் சொன்னவற்றையெல்லாம் விடாமல் கேட்டுக் கொண்டிருந்த நான் ஒருவிதமான முடிவுக்கு வந்து, “சந்நிதானம் உத்தரவு கொடுத்தால்தான் நான் வருவேன். இல்லாவிட்டால் வரமாட்டேன்” என்று முடிவாக அவரிடம் சொல்லி விட்டேன்.

“நான் சொல்வதன் நியாயம் உங்களுக்கு இப்போது தெரியாது. பிறகு தெரியவரும். சந்நிதானத்தின் திருவுள்ளத்தை மறுபடியும் கரைக்கப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர் தாம் தங்கியிருந்த சதகைக்குச் சென்றார்.

ஒன்றும் தெளிவுபடாத எண்ணங்களுடன் நான் வீடு சேர்ந்தேன். என் தாய் தந்தையரிடம் விசயத்தை வெளியிட்டேன். தந்தையார், “இங்கே எவ்வளவு சௌகரியங்கள் இருக்கின்றன! சனங்கள் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள்! இப்படிப்பட்ட இடம் வேறு எங்கேயிருக்கும்?” என்றார். தாயாருக்கும் திருவாவடுதுறையை விடுவதற்கு மனமில்லை.

காலை நிகழ்ச்சிகள்

மறு நாள் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்தேன். மனம் சஞ்சலத்தோடே இருந்தது. செட்டியார் என்னை அழைத்துக்கொண்டு சுப்பிரமணிய தேசிகரிடம் சென்றார். போகும்போது அவர் என்னிடம், “நீங்கள் சும்மா இருங்கள். உங்கள் அபிப்பிராயமாக ஒன்றும் சொல்ல வேண்டா. சந்நிதானத்தின் சம்மதத்தை நான் எப்படியாவது பெற்று விடுகிறேன்” என்று சொன்னார். தேசிகரைத் தரிசித்து வந்தனம் செய்து செட்டியார் அருகில் உட்கார்ந்தார். நானும் அமர்ந்தேன். செட்டியார் என்னைப் பற்றிய பேச்சை எடுப்பாரென்று எதிர் பார்த்தேன். அவர் வேறு விசயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். “பிள்ளையவர்கள் திருச்சிராப்பள்ளியில் இருந்த போது தியாகராச லீலையை இயற்றினார்கள். அது பூர்த்தியாகவில்லை. அவர்கள் அதை இயற்றி வருகையில் நான்தான் ஏட்டில் எழுதினேன். அப்பிரதி இங்கே இருக்கிறது. நூலின் மேற்பகுதியை நான் பாடிப் பூர்த்தி செய்து விடலாமென்று எண்ணுகிறேன். அந்தப் பிரதியை எடுத்துக் கொடுக்கும்படி உத்தரவாக வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார். தேசிகர் பிரதியை எடுத்து வரும்படி என்னை அனுப்பினார். நான் சென்று புத்தகசாலையில் கால் மணி நேரம் தேடி அந்த ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தேன். நான் புத்தக சாலைக்குச் சென்றிருந்தபோது தேசிகரும் செட்டியாரும் என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்களென்று தெரிய வந்தது. தேசிகரிடமிருந்து செட்டியார் தியாகராச லீலை ஏட்டுப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்; பிறகு, “நான் வந்த காரியத்தை அனுகூலமாக முடித்துச் சந்தோசப் படுத்தி அனுப்ப வேண்டும்” என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

தேசிகர்:- இவர் இப்போது இங்கே இருக்க வேண்டியது அவசியம். பிறகு சந்தர்ப்பம் கிடைத்தாற் பார்த்துக் கொள்ளலாம்.

தியாக:- பிறகு சந்தர்ப்பம் கிடைப்பது அருமை. அந்கத் தானம் மிகவும் உயர்ந்தது. சம்பளம் குறைவாக இருந்தாலும் அதனால் ஏற்படும் கௌரவம் அதிகம். அங்கே படிக்கும் பிள்ளைகளெல்லாம் பிற்காலத்திலே சிறந்த உத்தியோகத்தர்களாக வருவார்கள். இந்த மடத்தின் சம்பந்த முடையவர் அங்கே இருக்கிறாரென்பது இவ்விடத்திற்கே ஒரு கௌரவம் அல்லவா? இது வரையில் நான் மடத்துப் பிரசுதாவத்தை அடிக்கடி செய்து வந்தேன். எனக்குப் பிறகு தெரியாத வேறு யாராவது வந்தால் மடத்தின் சம்பந்தம் விட்டுப் போய் விடும். இவர் இருந்தால் அது விடாமல் இருக்கும். அதனால் பலவிதமான அனுகூலமுண்டென்பது சந்நிதானத்துக்கே தெரிந்தது தானே? இவ்விடத்துச் சம்பந்தமுள்ளவராகவும் ஐயா அவர்களிடம் படித்தவராகவும் இருக்கவேண்டுமென்பது தான் என் கருத்து. இவர் அங்கே வந்து விட்டாலும் வாரந்தோறும் இங்கே வரலாம். விடுமுறைக் காலங்களில் இங்கே வந்து தங்கியிருக்கலாம். நான் இவ்வளவு விசயங்களையும் ஆலோசித்தே இந்த விண்ணப்பத்தைச் செய்து கொண்டேன். நான் கேட்கும் இந்த வரத்தைத் தந்தருள வேண்டும். இவ்வாறு சொல்லிச் செட்டியார் எழுந்து கைகூப்பி வந்தனம் செய்தார். அவர் படிப்படியாக விசயங்களை எடுத்துச் சொல்லும் போது தேசிகர் மிகவும் கவனமாக அவற்றைக் கேட்டு வந்தார். செட்டியார் சொன்ன வார்த்தைகளோடு அவரது முகபாவங்களும் அஞ்சலியும் சேர்ந்து அவருக்கு அவ்விசயத்தில் எவ்வளவு ஆவல் உண்டென்பதைப் புலப்படுத்தின. என்னுடைய நிலையும் மடத்தினுடைய புகழும் இந்தக் காரியத்தால் அபிவிருத்தியாகுமென்பதைத் தேசிகர் உணர்ந்து கொண்டதாகவே தோற்றியது. அவர் மனம் இளகியது. சிறிது மௌனமாகவே இருந்தார். “சரி; என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

தெய்வ சங்கற்பம்

அந்தக் கேள்வியிலே அனுகூலமான தொனி இருப்பதைச் செட்டியார் தெரிந்து கொண்டார். உடனே “இவருக்கு வேலை செய்விக்க வேண்டுமென்று கோபால ராவ் அவர்களுக்கு ஒரு கடிதமும், அவருக்கு ஒரு யோக்கியதா பத்திரமும் சந்நிதானத்தின் திருக்கரத்தால் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். தேசிகர் ராயசக்காரராகிய பொன்னுசாமிசெட்டியாரை வருவித்து இரண்டையும் சொல்லி எழுதுவித்தார். யோக்கியதா பத்திரம் வருமாறு.

இந்தப் பத்திரிகையிலெழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் ஆறு வருடகாலம் இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி நம்மிடத்திலும் நான்கு வருடகாலமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். இலக்கண இலக்கியங்களைத் தெளிவாய்ப் போதிக்கிற விசயத்தில் சமர்த்தர். நல்ல நடையுள்ளவர்.

பிரமாதி வருசம் கும்பரவி சுப்ரமணிய

 திருவாவடுதுறை பண்டாரச் சன்னதி. யாதீனம்

இரண்டையும் எழுதுவித்த பிறகு கோபாலராவுக்குரிய கடிதத்தில் கையெழுத்திட்டு யோக்கியதா பத்திரிகையில் கையெழுத்துப் போடும் சமயத்தில் சபாபதி பூசையின் மணி கண கணவென்று அடித்தது. அப்பொழுது செட்டியார், ‘இவருக்கு வேலையாகிவிட்டது” என்று சந்தோசத்துடன் எழுந்து கை கொட்டிக் கூத்தாடினார். என்னை அனுப்பும் விசயத்தில் மன அமைதி பெறாமல் இருந்த தேசிகருக்கும் பூரண சம்மதம் உண்டாகிவிட்டது. “நாம் இவரை அனுப்புவதற்குச் சம்மதம் இல்லாம லிருந்தாலும், தெய்வம் கட்டளையிடுகிறது. தெய்வ சங்கற்பத்தைத் தடுக்க இயலுமா? சரி, நல்ல வேளை பார்த்து இவரை அனுப்புகிறோம். கவலைப்பட வேண்டா” என்று அவர் சொன்னார். செட்டியார் மிக்க குதூகலத்தை அடைந்தார்.

(தொடரும்)

Tuesday, November 29, 2011


தமிழ்த்தாத்தா பேராசான் உ.வே.சா 

 அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/11/2011


புண்ணியத் தமிழாசுரர் தன்னிகரற்ற தமிழ்த்தாத்தா பேராசான் உ.வே.சா (1855-1906).

தமிழ் மக்களுக்குப் பெருமிதமும், தமிழ் மொழிக்குப் பெரும் புகழும் ஈட்டித் தந்த இப்பெருமான், ஏட்டுச் சுவடிகளில் இருந்த ஈடிணையற்ற தமிழ்ச் செல்வங்களைப் பீடுறப் பதிப்பித்தருளிய பெரும் பணி என்றென்றும் நினைக்கத்தக்கது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0