மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் “வாயுள நாவுள’’

தண்டலம் முதலியாரிடம் ‘கற்றுக் கொள்வன வாயுள நாவுள’’
விளக்கம்
 தண்டலம் முதலியார் என்றது தண்டலம் பாலசுந்தரம் முதலியாரை ஆம். அடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி ஏற்றுத் தம் குடும்பத்தாருடன், சென்னையிற் குடியேறினார். அடிகளார்க்குச் சென்னை வாழ்க்கை. இனிது இயங்கியதற்குப் பேருதவி புரிந்தவர் இம்முதலியாரேயாவர். இவர் அரசாங்க மொழி பெயர்ப்பாளராய்ப் பணிபுரிந்தவர். சிறந்த குடியில் தோன்றியவர். புலமையறிந்து போற்றும் புலமையர். அடிகளைத் தன் மகனெனக் கொண்டு அவரையும் அவர் குடும்பத்தையும் தம்மில்லத்தே வைத்துச் சில காலம் பாதுகாத்தவர் ‘கண்ணை இமை காப்பதுபோல அடிகள் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.அடிகள் தம் குடும்ப நகைகளை முதலியாரிடம் அடைக்கலமாக வைத்திருந்தார். முதலியாரின் குடும்பத்தாரும் அவரைப் போலவே அடிகள் குடும்பத்தாருக்குப் பேரன்புடன் உதவிகள் செய்த வண்ணமாயிருந்தனர். அடிகள் தம் நாட்குறிப்புகளில் முதலியார்தம் அன்பு, வன்மை, உதவி முதலியவற்றை அவ்வப்போது குறித்துள்ளனர். இம்முதலியாரின் பேரர்தாம், சென்னை மாநகராட்சித் தலைவராய் விளங்கிப் புகழுடன் திகழும் த.(டி.)செங்கல்வராயன் ஆவர்
  அப்பர் தேவாரப் பாட்டொன்றின் முதலடி என்பதற்குப் பஞ்சாட்சரத்தை வாயினாலும், நாவினாலும் கூறுகின்றோர் என்றேன். முதலியாரின் வினா ”‘வாயுள’ என்றாற்போதுமே! ‘நாவுள’ என்று கூற வேண்டியதேன்” என்பதாம்.
மறை. திருநாவுக்கரசு