மறைமலையடிகள் 3/5
குறித்த நாளில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக் கால் மண்டபத்தில் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழா தொடங்குகின்ற நேரம். எல்லோரும் வந்துவிட்டார்கள். 9.15 ஆகியும் தலைவர் வரவில்லை. கூட்டத்தில் ஒரு பெரிய சலசலப்பு. எல்லோர் கையிலும் துண்டு அறிக்கைகள். அதில் ‘மறைமலையடிகள் ஒரு சைவரா?’ என்ற தலைப்பில் சில கேள்விகள் அச்சிடப் பெற்றிருந்தன. இது வந்திருந்தோர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தையும், தலைவர் உள்ளத்தில் ஒரு வருத்தத்தையும் உண்டாக்கிவிட்டது. தலைவர் வராமைக்குக் காரணம் அது தான் என அறிந்தேன். துண்டு அறிக்கையை வழங்கியவர் உறையூர் புலவர் பெரியசாமி(ப்பிள்ளை) எனத் தெரிய வந்தது. அவருக்கு உறந்தைப் பெருந்தேவனார் என்ற பெயரும் உண்டு. சைவ மடங்கள் பலவற்றில் அவருக்குச் செல்வாக்குண்டு. உடனே தலைவரிடஞ் சென்று கூட்டத்திற்கு வந்து தலைமை வகித்து விழாவை நடத்திக் கொடுக்க வேண்டுமென்று அழைத்தேன். அவர் உறந்தைப் பெருந் தேவனாரை உங்களுக்குத் தெரியுமா? அவர் இங்கு வந்து துண்டறிக்கையை வெளியிட்டுக் குழப்பத்தை விளைவிக். கிறாரே? இது நல்லதா?’ எனக் கேட்டார். கூட்டத்தில் எதுவும் நடவாது. நீங்கள் தாராளமாக வந்து பேசலாமென வாக்குறுதி அளித்தேன். அடிகளாரும் வநதார்கள். கூட்டம் தொடங்குமுன், ‘இந்த அறிக்கை என்னுடைய அனுமதியின்றி இங்கு வழங்கப் பெற்றிருக்கிறது. இதை வழங்கியவர் யாராயிருந்தாலும் மண்டபத்தை விட்டு வெளியேறி விட வேண்டும்’ எனக் கடுமையான கட்டளையிட்டேன். அவரும் தன் தவற்றை உணர்ந்து அமைதியாக இருந்துவிட்டார். இரண்டு நாட்களும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நான் சைவ சித்தாந்த சபையில் துணையமைச்சராய் இருக்குங் காலத்தில் சமயக் கூட்டம் நடத்தினால், என்னையும் தலைவரையும் தவிர ஏழெட்டுப்பேர் வந்திருப்பார்கள். நாட்டாரய்யா தலைமை வகிக்கும் கடட்டங்களில் இருபது பேருக்குள் வருவார்கள்; சுண்டல் கடலை வழங்கும் கூட்டமாய் இருந்தால்தான் முப்பது, முப்பத்தைந்து பேர் வருவார்கள். அப்படியிருக்க மறைமலையடிகள் தலைமை வகித்த இந்த ஆண்டு விழாவிற்கு நானூறுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடிகளார் தம் இனிய குரலில் தூய தமிழில் நிகழ்த்திய அந்தத் தலைமைச் சொற்பொழிவு அனைவர் உள்ளத்தையும் மகிழ்வித்தது. இத்தகைய சொற்பொழிவை எவரும் நிகழ்த்த முடியாது என்று அங்கு கூடியிருந்த சைவப்பற்றும் தமிழ்ப்பற்றும் கொண்ட நல்லறிஞர்கள் பலர் சொல்லியது என் காதில் விழுந்தது. மகிழ்ந்தேன்.
அடிகளார் தம் முடிவுரையில் ” ‘நான் சைவ சமயியா?’ என்று சைவ சமயிகளே ஐயப்படுவது என் மனத்தைப் புண்படுத்துகிறது. பார்வதி குளிக்கச் செல்லும் பொழுது தன் அழுக்கைத் திரட்டி ஒரு பிள்ளையாரைப் பிடித்து வைத்து, யாரையும் உள்ளேவிட வேண்டாமென்று குளிக்கச் சென்றார். பரமசிவம் வந்தார். அவரை உள்ளே போகவேண்டாமென்று பிள்ளையார் தடுத்தார். அவர் மீறி அவர் தலையைக் கொய்துவிட்டு உள்ளே சென்றார். பார்வதி தேவி ‘நான் குளிக்கும் செய்தியைப் பிள்ளையார் சொல்லவில்லையா?’ என்று பரமசிவத்திடம் கேட்டார். பரமசிவம் நடந்ததைச் சொல்லி ‘நம்முடைய பிள்ளையா அது?’ என்று கேட்டார். பார்வதி கலங்கி அழுதார். பரமசிவம் வெளியே சென்று ஒர் இறந்துகிடந்த யானையின் தலையைக் கொண்டு வந்து பிள்ளையார் உடம்போடு இணைத்து உயிர்ப்பித்தார்’ என்று பிள்ளையார் பிறந்த வரலாறு சிவபுராணத்தில் ஒரு வகையாகவும், கந்தபுராணத்தில் ஒரு வகையாகவும், விநாயகர் புராணத்தில் ஒரு வகையாகவும் கூறப்பெற்றிருக்கிறது. இதுபற்றி நான் ஆராயத் தொடங்கினேன். பார்வதி அழுக்கைத் திரட்டிப் பிள்ளையார் பிடித்துவைத்த கதையை என்னால் நம்ப முடியவில்லை. ‘பார்வதியின் உடம்பில் அழுக்கு இருக்குமா? இருந்தாலும் ஒரு பிள்ளையார் பிடிக்கும்.அளவுக்கு இருக்குமா? இதைச் சிந்திக்க வேண்டாமா? இதை நம்பித்தான் ஆக வேண்டுமா? நம்பினால்தான் சைவனா?’ என வினாக்களை அடுக்கிக் கொண்டே வந்து, ‘என் தாய் அழுக்கற்றவள். என் தாய் அழுக்கற்றவள்’ ’’ என இருமுறை கூறினார். அப்பொழுதுதான் எனக்குத் துண்டறிக்கையில் வந்த கேள்விக்குப் பொருள் விளங்கிற்று. இதிலிருந்து அடிகளார் சைவ சமயத்திலும் ஒரு சீர்திருத்தக் கொள்கை உடையவர் என்பதையும். தன் உள்ளத்திற் பட்டதை ஒளிக்காது கூறுகிறவர் என்பதை யும் நன்கறியலாம்.
(தொடரும்)
கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்
No comments:
Post a Comment