Showing posts with label மயிலாடன். Show all posts
Showing posts with label மயிலாடன். Show all posts

Friday, September 07, 2018

இலக்குவனார் – மயிலாடன்

அகரமுதல

ஒற்றைப்பத்தி

இலக்குவனார்  


தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் உரை ஆரவாரமாக இருக்காது – ஆற்றொழுக்காக – அமைதி யாக – அதேநேரத்தில் ஆழமாக இருக்கும். அதில் தமிழ் மானமும், இனமானமும் போட்டிப் போட்டுக்கொண்டு துள்ளும்.
இரண்டாண்டு, மூன்றாண்டுக்குமேல் ஒரே இடத்தில் அவர் பணியாற்றியது கிடையாது – அதற்குக் காரணம் அவரது மொழி, இன, திராவிட இயக்கக் கொள்கைச் சித்தாந்தமும், அவற்றின் வெளிப்பாடுமே!
மரம் சும்மா இருந்தாலும், காற்று அதைச் சும்மா இருக்க விடாது அல்லவா! அதேபோல, நாட்டு நடப்புகளும், போக்குகளும் அந்தத் தமிழ் மறவரின் உணர்வைச் சீண்டி சவால் விட்டுக்கொண்டே இருக்கும்.
தான் உண்டு, தன்  குடும்பம் உண்டு என்ற சிறைச் சாலைக்குள் வாழ்வதில் இன்பம் காணும் ஒரு சமூகத்தில், தன் குடும்பம்பற்றி எண்ணாது சதா நாட்டு நலனைப்பற்றியே எண்ணிய எழுஞாயிறு அவர். சொல்லியபடியே சாதி மறுப்புத் திருமணமும் செய்து கொண்டவர்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றிய போது, ‘தமிழ்க்காப்புக் கழகம்’ ஒன்றைத் தொடங்கினார். (6.8.1962). ஒரு பொங்கல் பொழுதில் (15.1.1964) குறள்நெறி’ இதழையும் தொடங்கினார். வள்ளுவர்நெறியில் வாழ்க’ என்பதுதுன் அதன் குறிக் கோள்.
‘தமிழ்க் காப்புக் கழகத்தின்’’ கேடயமாக அது விளங்கியது. தமிழ்க் காப்புக் கழகத்தின் தலைவராக இலக்குவனாரும், பொதுச்செயலாளராக இளங்குமரனாரும் பொறுப்பேற்றுப் பணியாற்றினர்.
1965 இந்தி எதிர்ப்பின்போது கைதுசெய்யப்பட்டார் (முதலமைச்சர் பக்தவச்சலம்). இலக்குவனார் மீது குற்றச்சாட்டு என்ன தெரியுமா?
‘அமைச்சர்களைக் கொல்லுவதற்கு முயற்சி’ என்பது உள்ளிட்ட பதினான்கு குற்றங்கள் ஆகும்.
வழக்கின்போது வழக்குரைஞர் வைத்த குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்கது. “இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர். உள்ளம் கவர்ந்தவர். இதழ் நடத்துபவர். அவர் வெளியே இருந்தால், அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு இராது” என்றார் அரசு தரப்பு வழக்குரைஞர் என்றால், இலக்குவனார் வன் முறையாளர் அல்லர் என்றாலும், அவரைப்பற்றிக் கூறிய குற்றச்சாட்டில், இலக்குவனாரின் வீரமும், விவேகமும், கொள்கைப் பாங்கும், வளமும் எத்த கையது என்பதை அறிந்து கொள்ள உதவும் அல்லவா!
அவரின் இயற்பெயர் இலட்சுமணன் எனும் வட மொழிப் பெயர். அவரின் ஆசிரியரான சாமி சிதம்பரனார் அதனை இலக்குவன்என்று மாற்றியமைத்தார். இலக்குவனாரின் இல்லப் பெயர் ‘கருமுத்தகம்’ என்பதாகும். அவரின் நினைவு நாள் இந்நாள் (3.9.2018).
வாழ்க இலக்குவனார்!
– மயிலாடன்
விடுதலை 03.09.2018

Sunday, September 04, 2016

இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் – மயிலாடன்





தலைப்பு-இலக்குவனாரின் குருதியோட்டம், மயிலாடன் ; thalaippu-ilakkuvanarinkuruthioattam_mayilaadan

இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம்

  தந்தை பெரியார் மறைவிற்கு 21 நாள்களுக்கு முன்பாகவே கண் மூடினார் நமது பேராசிரியர் சி.இலக்குவனார் (மறைவு 3.9.1973) அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம்.
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர் களுக்குத் துணையாக இருந்து, தந்தை பெரியார் சுற்றுப் பயணம் முழுவதும் அவருடன் அகலாது தொடர்ந்து பயணித்து, தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு முன்னதாகப் பேராசிரியர் இலக்குவனாரின் உரை அமைந்துவிடும்.
இது எத்தகைய பெரும் பேறு அந்தப் பெருமகனாருக்கு. தமிழ்ப் புலமை, ஆங்கிலப் புலமை என்பது அவர்தம் இரு விழிகளாகும்.
ஆங்கிலத்தில்  அவர் மொழி பெயர்த்த தொல்காப்பியத்தைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார். ‘(இ)யேல்’ பல்கலைக் கழகத்திலும் அளித்தார்.
இனமானமும், மொழிமானமும் இவரின் குருதியோட்டம். 1965 இந்திஎதிர்ப்பின்போது,இவரை வெளியில் விட்டால்  அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு இராது என்று அரசுவழக்குரைஞர் வாதாடும் அளவுக்குப் பெருமைக்குரிய பெரியாரின் சீடர் – ஆம், அந்தத் தமிழ்ப் பேராசான் சிறைச் சாலையையும் முத்தமிட்டவர்தான்.
  வறுமை நோய் பீடித்துத் தின்ன அந்த நிலையிலும், கல்வி வெறியெடுத்து அவர் எந்த நிலையில் பயின்றார். அவர் தங்கிப் படித்த அந்த விடுதி (மன்னர் சரபோசியின் அருட்கொடையால் உருவாக்கப்பட்ட உரத்தநாடு சத்திரம்தான் அது)யின் நிலை என்ன? இதோ அவரே சொல்லுகிறார்:
‘‘விடுதியின் உணவு மூன்று வகையாக ஆயத்தம்செய்து வழங்கப்பட்டது. பிராமணர்களில் ஐயருக்கு ஓரிடம். ஐயங்காருக்கு ஓரிடம்; பிராமணன் அல்லாத மாணவர்களுக்குப் பிறிதோர் இடம். ஐயங்கார் மாணவர் உண்ணுவதை ஐயர் மாணவர் பார்த்துவிட்டால், பின்னர் சாப்பிட மாட்டார்; எழுந்து போய்விடுவார். ஐயர் மாணவர் உண்ணுவதைப் பிராமணர் அல்லாத மாணவர் பார்த்துவிட்டால், ஐயர் மாணவர் உண்ணாமல் எழுந்து போய்விடுவார். பிராமணர் அல்லாத மாணவர்களில் முதலியார், சைவ வேளாள மாணவர்கள் ஏனைய பிராமணர் அல்லாத மாணவர்களில் இருந்து பிரிந்து தனியறையில் உண்டு வந்தனர். அவர்கள் உண்பதையும் பிராமணர்கள் ஏனைய சாதி மாணவர்கள் கண்டுவிடக் கூடாது. 

  அவ்வறைக்கு வெளியே பெரிய கூடத்தில் மற்ற மாணவர்கள் உண்ணவேண்டும். அவர் களிலும் சைவரை, அரைச் சைவராகக் கருதி அவர்களுக்கு முதலில் வைத்து உணவு வழங் கப்படும். அவர்களுக்குஉணவு வழங்கிவிட்டுத்தான் மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டும். இவ்வரிசையில் ஆதிதிராவிட மாணவர்கள் கடைசியில் உட்கார்ந்திருப்பர். சாதிக் கொடுமை இவ்வாறு தனிச் செங்கோல் செலுத்தியது.’’ (இலக்குவனாரின் ‘என் வாழ்க்கைப் போர்’ நூலிலிருந்து).

இலக்குவனாரை அறிவது போல, அக்காலச் சூழலையும் அறிய முடிகிறது.
இலக்குவனார் மறைந்தாலும், அவர்களின் மக்கள் அதே நெறியில், உறுதியில் ஒளிவீசுவது இலக்குவனார் மறையவில்லை என்பதற்கு உத்தரவாதமே!
மயிலாடன்
முத்திரை-விடுதலை : logo_viduthalai_muthirai

Tuesday, September 03, 2013

இலக்குவனார் - மயிலாடன்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1973 செப்டம்பர் 3 - தமிழர்கள் நினைவு கூர வேண்டிய முக்கிய நாள். நமது பேராசிரியர் சி. இலக்குவனார் அன்றுதான் மறைந்தார்.
தந்தை பெரியாரின் சீடர்; திராவிட இயக்கத் தீரர் - மூடநம்பிக்கையின் வைரி. தமிழுலகிற்கு தலை சிறந்த நூல்களைத் தந்த பெருமகன். தொல் காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெரும் புலவர். இலக்குவனார் மொழி பெயர்த்த அந்த நூலைத் தான் முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகம் சென்ற போதும் தன்னோடு எடுத்துச் சென்று தமிழன் பெருமையை, தமிழன் சீர்த்தியை அமெ ரிக்கப் பெருமகன்களுக்கு வழங்கியதன் மூலம் அறியச் செய்தார்.
எழிலரசி, தமிழிசைப் பாடல்கள், மாணவர் ஆற்றுப் படை, துரத்தப்பட்டேன், அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து எனும் செய்யுள் நூல்கள், எல்லோரும் இந் நாட்டு மன்னர் (இரு தொகு திகள்) அமைச்சர் யார்? வள்ளுவர் வகுத்த அரசியல் தொல்காப்பிய ஆராய்ச்சி, தமிழ் கற்பிக்கும் முறை ஆகிய ஆய்வு நூல்கள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்) கரும வீரர் காமராசர், என் வாழ்க்கைப் போர் ஆகிய வரலாற்று நூல் களையும் வழங்கிய எழுத்து வள்ளல் இலக்குவனார்.
சங்க இலக்கியம், (கிழமை இதழ்) இலக்கியம் (திங்கள் இருமுறை இதழ்) திராவிடக் கூட்டரசு (திங்கள் இருமுறை) குறள் நெறி (திங்கள் இரு முறை), குறள் நெறி (நாளிதழ்) ஆகிய தமிழ் இதழ்களையும், ஆங்கில இதழ்கள் னுசயஎனையை குநனநசயவடி (திங்கள் இருமுறை) முரசயட சூநச (திங்கள் இரு முறை) ஆகிய இதழ்களையும் நடத்திய எழுச்சித் தமிழர் அவர்.
அவர்தம் சிறப்புக் கருதி அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அடைமொழிகள் தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல் காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படை தளபதி, செந் தமிழ்ப் படையின் மானச் செம்மல் என்ற பெருமைமிகு மணிமகுடங்களுக்குச் சொந் தக்காரர்.
அவருடைய தமிழ் -தமிழர் உணர்வால் ஓரிடத்தில் நிரந்தரமாகப் பணியாற்ற முடியாமல் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டவர் - ஆனா லும் உள்ளம் தளராத உருக்கு நெஞ்சுக்குச் சொந் தக்காரர்.
1965 இந்தி எதிர்ப்பின் போது சிறைப் பிடிக்கப்பட் டார். அவர் பற்றி நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் என்ன சொன்னார் தெரி யுமா?
இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர். உள்ளம் கவர்ந் தவர், இதழ் நடத்துபவர். அவர் வெளியே இருந்தால் அரசுக்கும், அமைச்சர்களுக் கும் பாதுகாப்பு இராது என்று சொல்லப்பட்டது - இலக்குவனாரின் உணர்வுக் கான வெள்ளிக் கீற்றே!
இலக்குவனார் வழியில் பேராசிரியர் மறைமலை உள் ளிட்ட அவரின் செல்வங்கள் தமிழ்த் தொண்டு சிறப்பாக ஆற்றி வருவது பாராட்டிற் குரியது!
- மயிலாடன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திராவிட இயக்க அறிஞரைத் திராவிட இயக்க இதழ் மறவாமல் நினைவுகூர்வது மகிழ்ச்சிக்குரியது. விடுதலைக்கும் மயிலாடனுக்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/