செந்தமிழர் போற்றும் செம்மொழி க.இராமசாமி!

  18ஆம் நூற்றாண்டில் ‘பொன்பரப்பியனான வனகோபரன்’என்னும் சோழர்கள் பரம்பரையிலிருந்து வந்து ஆட்சி செய்து வந்த சிற்றரசன் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட ஊரே ‘பொன்பரப்பி’. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொன்பரப்பி ஊர் தமிழர் உரிமை வரலாற்றில் இடம்பெற்றுள்ளதுபோல் செம்மொழி வினைவலர் இராமசாமி பிறந்தமையால் செம்மொழிச் செயலாக்க வரலாற்றிலும் இடம் பெற்றுவிட்டது. ‘செம்மொழியார்’, ‘செம்மொழிச்  செம்மல், எனச் செந்தமிழரால் போற்றப்படும் அறிஞர் செம்மொழி இராமசாமி பொன்பரப்பியில் ஆவணி 26, தி.பி.1980/10.09.1949 அன்று பிறந்தார்.
படிப்பும் கல்விப் பணியும் ஆய்வுப்பணியும்
   தான்பிறந்த ஊரான பொன்பரப்பியிலேயே 11 ஆம் வகுப்பு வரை படித்தவர், இவ்வகுப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று அனைவராலும் பாராட்டப்பெற்றார்.
  பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து தஞ்சாவூர்  மன்னர்    சரபோசி    அரசினர்    கலைக்    கல்லூரியில்,  புகுமுக   வகுப்பினையும்  இளம்   அறிவியல்   (வேதியியல்) பட்டப்  படிப்பினையும்  முடித்தார். கல்லூரிக்  காலத்தில்  காந்தியப்   பற்றாளராகத் திகழ்ந்தார்.  காந்திய நெறியில் எளிமையாக வாழ்ந்து அனைவருடனும் பழகிய இவரின் பாங்கு கல்லூரியில் இவருக்கென ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது.  கல்லூரியிலும் தமிழில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேறினார்.
  இவரது பணி, அரியலூர்  மாவட்டம் அழகாபுரம்  அரசு  உயர்நிலைப்  பள்ளியில்  அன்னிலை(தற்காலிக) அறிவியல்  ஆசிரியராகத் தொடங்கியது. இளமைத் துடிப்பு, எளிமை வாழ்வு, உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு, மாணவர்களின் ஈர்ப்பு முதலியவற்றால் அனைவரும் போற்றச் செயல்பட்டுத் தொடக்கப் பணியிலேயே நல்லாசிரியராகப் பெயர் பெற்றார்.
  முதுகலைப்படிப்பை 1970இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல்துறையில் பெற்றார். அறிவியல் மாணவர் படிப்பிற்கு இவரது தமிழறிவு துணை புரிந்தது. ஆம், அறிவியல் பட்டப்படிப்பில் தமிழில் பெற்ற உயர் மதிப்பெண்ணால் இவருக்குப் பல்கலைக்கழக நல்கை(ஆணை)யம் வழங்கும் திங்கள் மாணவ உதவித்தொகை((UGC Studentship) கிடைத்தது. இதனால் இடர்ப்பாடின்றி முதுகலைப்பட்டத்தை முடித்து முதல் வகுப்பில் தேறினார். முதுகலையில் வங்காள மொழியைப் படித்துத் தன் மொழி ஒப்பியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.
  முனைவர்  பட்ட  ஆய்விற்குச்  சேர முயன்றவர் அதற்கிடையில்  காலத்தை வீணாக்க விரும்பவில்லை. காந்தி அமைதி நிலையத்தில் தங்கி முதுகலைப்பட்ட வகுப்பிற்குச் சென்று வந்திருந்தார். அங்கேயே ஆங்கில இலக்கணப் பயிற்சிவகுப்பைத் தொடங்கினார். மாணவர்கள் மட்டுமல்லாமல்,  ஆசிரியர்கள், அலுவலர்கள் எனப் பலத் தர்பபினரும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற்று இவர் முயற்சிக்குச் சிறப்பான பெயரைப் பெற்றுத் தந்தனர். முனைவர்  ஆய்வு வகுப்பில் சேர்ந்த பின்னரும் தொடர்ந்து 1972 முதல் 1975 வரை இவர் நடத்திய  ஆங்கில இலக்கண வகுப்புப் பயிற்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து சிறந்துள்ளனர்.
 இக்காலக்கட்டத்தில் ‘அருள் தனிப்பயிற்சி மையம்’ என்னும் கல்வி அமைப்பைச் சிதம்பரம், புவனகிரி, செயங்கொண்டம் ஆகிய நகரங்களில் உருவாக்கினார். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தந்தார். இப்பயிற்சி மையங்கள் மூலம் 11ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தித் தேர்வு பெறச்செய்து கல்விப்பணியில் முத்திரை பதித்தார். எனினும் முனைவர் ஆய்வில் கூடுதல் கருத்து செலுத்த  வேண்டியமையால் இப்பணியைத் தொடர இயலவில்லை.
அண்ணாமலைப்பல்கலைக்கழக மொழியியல் ஆய்வு மாணாக்கனாக 1972 திசம்பரில் சேர்ந்த இவருக்கு 1973 சூன் முதல் பல்கலைக்கழக நல்கை(ஆணை)யத்தின் உதவித்தொகை கிடைத்தது. பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் மேற்பார்வையில் தமிழ்,    ஆங்கிலப்    பெயரெச்சத் தொடர்கள்  –  ஓர்  உறழ்வாய்வு’ (A Contrastive Analysis of the Relative Clauses in Tamil and English) என்னும் தலைப்பில் முனைவர் ஆய்வினை மேற்கொண்டார்.
 அறிஞர்களின் தனிக் கவனத்தைப் பெற்ற மாற்றிலக்கணக் கோட்பாட்டினைப் பின்பற்றித் தன் ஆய்வை மேற் கொண்டிருந்தமையால் இவரது ஆய்விற்கு வரவேற்பு இருந்தது. முனைவர் ஆய்வாளராக இருந்து கொண்டே  ஈராண்டுப் பகுதி நேர இந்திமொழிப் பட்டயவகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேறினார். இக்காலத்திலேயே  இவருடைய  முதுகலைப்    பட்ட    ஆய்வேடான ‘படையாட்சி    வழக்குத்    தமிழ்’ அண்ணாமலைப் பல்கலைக்     கழகத்தினால்     ஆங்கிலத்தில்     நூலாக     வெளியிடப்பட்டது [Padayachy  Dialect  of  Tamil (Annamalai Nagar: Annamalai University Publication No.63, 1978)]. இந்நூல் கிளைமொழி  ஆய்வு   மேற்கொள்வோருக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.
ஊதியப்பணிகள் ஊடாகத் தமிழ்த்தொண்டு
 1983  இல் ஒன்றியப்  பொதுப்  பணித்  தேர்வாணையத்தின்(Union Public Service Commission) மூலம்  தமிழ்  விரிவுரையாளர்  பணி  கிடைத்தது. இது நடுவண்  அரசுப்  பணியாகும்.  அறவே தமிழ்  அறிமுகம்  இல்லாத பிற  மாநிலத்தவருக்கும்  பிற  நாட்டினருக்கும் பத்து  மாதக்  காலத்  தீவிர  முழு  நேரப்  பயிற்சியின்  மூலம்  தமிழ்  கற்றுக்கொடுக்கும் இந்தப் பணி புதுமையானது; உலகில் வேறெங்கும் காணப்படாதது. பல்வேறு மொழியினருடனும் பல்வேறு நாட்டினருடனும் உறவாடும் வாய்ப்பு இவருக்கு ஒரு பெரும் பேறாக அமைந்தது.
 தமிழ்நாடு தவிர்ந்த  பிற  மாநில  ஆசிரியர்கள்  நூற்றுக்  கணக்கானவர்களுக்கும்  சீனா,  ஃபிரான்சு, சுவிட்சர்லாந்து,   சுவீடன்,   அமெரிக்கா,   மொரிசியசு,   இரீயூனியன்   போன்ற   நாடுகளைச் சார்ந்தவர்களுக்கும்  தமிழ்  கற்பித்த  பட்டறிவு  இவருக்கு  வாய்த்தது.  தமிழ்  கற்பிப்பதோடு அன்றிப்  பல்வேறு  ஆய்வுப்  பணிகளை  மேற்கொள்ளும்  வாய்ப்பும்  இங்கே  இவருக்குக் கிடைத்தது.
 உள  மொழியியல்,  மொழிபெயர்ப்பியல்,  கோட்பாட்டு  மொழியியல்  போன்ற துறைகளில் தனது அறிவை வளப்படுத்திக் கொண்டார். காலப்போக்கில்,  இணைப்  பேராசிரியர்,  பேராசிரியர் போன்ற  உயர்   பணிகள்    இவருக்குக்      கிட்டின.  இவரது      மேற்பார்வையிலும் வழிகாட்டுதலிலும் முனைவர்   பட்டம்   பெற்றவர்கள்   எண்மர்.   இவர்களுள்   சிலர்   நம் நாட்டின்   மத்தியப்   பல்கலைக்கழகங்களிலும்   வெளிநாட்டுப்   பல்கலைக்    க  ழகங்களிலும் பேராசிரியர்களாகப் பணிபுரிந்துவருகின்றனர்.
  இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் உயர்கல்வித்துறையில் மைசூரில் இந்திய    மொழிகளின்    நடுவண்    நிறுவனம் இயங்குகிறது. இதில் 1989 மே 19 இல் தற்காலிகப்பணியில் சேர்ந்தார். பேராசிரியர் – துணை இயக்குநர்   பொறுப்பு வரை உயர்ந்தார். இந்திய   மொழிகளில்   நூல்கள்,  சிற்றிதழ்கள் வெளிவருவதை  ஊக்குவிக்கும்  திட்டத்தினை அறிமுகப்படுத்தி நூலாசிரியர்கள், இதழாசிரியர்கள் வளர்ச்சிக்கு உதவினார்.
  மைதிலி,  போடோ,  நேபாளி,  சந்தாளி ஆகிய    புதிய    பட்டியல்    மொழிகளின்    வளர்ச்சிக்கான    திட்டத்தினையும்    சிறப்பாகச் செயற்படுத்தி அம்மொழிகளின் நல்வாழ்விற்கும் உதவினார். மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டார். சாகித்திய  அகாதமியோடு  இணைந்து  சிறந்த  இந்தியப் புதினங்களைப்     பிறமொழிகளில்     மொழிபெயர்க்கும்     பணியினைச்     செம்மையாகச் செய்தார்.  மைசூர்,   பூனே, கௌகாத்தி,     பட்டியாலா,     இலக்குனௌ,     சோலன்,     புவனேசுவர்     ஆகிய     நகர்களில் இயங்கிவந்த நிறுவனத்தின் ஏழு   மண்டல   மொழிமையங்களையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்து அம்மையங்களின் மேம்பாட்டிற்கும் உதவினார்.
 பல்வேறு       பல்கலைக்கழகங்களில்       முனைவர்       பட்ட       ஆய்வுகளுக்கு மதிப்பீட்டாளராகவும்  வாய்மொழித்  தேர்வாளராகவும்  பணியாற்றியனார்.  சாகித்ய  அகாதமி விருதுகள்   தேர்வுக்   குழுவில்   ஆயராக(jury)  இருந்துவருகிறார்.   கல்லூரி,   பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சிகள்       நூற்றுக் கணக்கானவற்றில் உரையாற்றியவர்.  தாமே    முன்னின்று    உலக    அளவிலான,    தேசிய    அளவிலான மாநாடுகள்,   கருத்தரங்குகள்,   பயிலரங்குகள்   முதலானவற்றை   நடத்தியவர்.   பல்வேறு பல்கலைக்கழகங்களில்   பாடத்திட்டக்   குழு   உறுப்பினராகவும்   பணி   நியமனக்   குழு உறுப்பினராகவும்  பணியாற்றியவர்.  அரசுப்  பணி  தொடர்பாக  நேபாளம்,  மொரிசியசு, மலேசியா போன்ற அயல்நாடுகளுக்குச் சென்றுவந்திருக்கிறார்.
  செம்மொழித்தகுதியேற்பில் தகைமைப்பணி
  தமிழின் செம்மொழித்தன்மை பல்லாயிரம் ஆண்டு தொன்மையையும் உலக மொழிகளில் முதன்மையையும் உடையது. கடந்த இரு நூற்றாண்டுகளாகத் தமிழறிஞர்களும் அமைப்பினரும் தமிழுக்கான செம்மொழித்தன்மைக்கு அரசின் அறிந்தேற்பு வழங்கக் குரல் கொடுத்து வந்துள்ளனர். இதன்பயனாக 2004    அக்டோபர்    12    இந்திய    அரசால்    தமிழுக்குச்    செம்மொழி      ஏற்பு வழங்கப்பட்டது. இதற்கான  அடிப்படைப்  பணிகளை மேற்கொண்டது  இந்திய  மொழிகளின்   நடுவண்  நிறுவனம்தான்.  பரிந்துரைகளை வடிவமைத்து  அனுப்பியதிலும்  அறிவிப்பு  வருவதற்கு  முன்பு  அமைச்சக  அளவில்  எழுந்த சில சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் முயற்சியிலும்  அதன் இயக்குநருக்கும் வழிகாட்டிய பேராசிரியர் இராமசாமியின்பங்கு சிறப்பானது.
  செம்மொழி  ஏற்பின்  தொடர்ச்சியாகச் செம்மொழித் தமிழுக்கான  ஒரு  வரைவுத்  திட்டம்  2005  இல்  உருவாக்கப்பட்டு  அதைச்  செயற்படுத்தும் பணி    இந்திய    மொழிகள்    நடுவண்    நிறுவனத்திடம்    ஒப்படைக்கப்பட்டது.  நிறுவன இயக்குநர்  இத்திட்டத்திற்கான    தலைமைப்    பொறுப்பினை    பேராசிரியர்    இராமசாமியிடம்   ஒப்படைத்தார்.   பல்வேறு   இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும்   இடையில்  புதிய திட்டத்தைச் செயற்படுத்தினார்.
   திட்டச் செயற்பாட்டின்படிச் செம்மொழித்   தமிழ் உயராய்வு    மையம்    உருவாக்கப்பட்டது;  2007  ஆகட்டுத்   திங்களில்   செம்மொழித்   தமிழாய்வு மத்திய  நிறுவனம்  தோற்றுவிக்கப்பட்டது; இந்நிறுவனம் 2008 மே 19 அன்று  சென்னைக்கு மாற்றப்பட்டது. எல்லாப் பணிகளிலும்   மையமாக   இருந்து   செயற்பட்டவர்   பேராசிரியர்  முனைவர் இராமசாமியே.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப்பணிகள்
 செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தில் பணியாட்சியுடன் குடியரசுத்தலைவர்கள் விருதுகள் வழங்குதல், உலகளாவிய நிலையில் தமிழறிஞர்கள் ஆய்வுப்பணிகளில் ஈடுபடல், முனைவர்பட்ட ஆய்வினருக்கும் மேலாய்வினருக்கும் உதவித்தொகைகள் வழங்குதல்,  தமிழ்நாட்டிலும்  உலகின் பிற பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான  மாநாடுகள்,     பயிலரங்குகள்,     கருத்தரங்குகள் நிகழ்த்துதல், சங்க    இலக்கிய நூல்களும்    தொல்காப்பிய    மூல,    உரை    நூல்களும்    இலவயமாக    வழங்குதல் எனப் பலவற்றிலும் நெறிப்படுத்திச் செம்மொழித்தமிழ் பரவிட உதவினார். இவரது இத்தகைய பணிகளால், பழந்தமிழ்  இலக்கிய இலக்கண    மரபுகள்    குறித்த    விழிப்புணர்வு    நாடெங்கிலும் உருவாக்கப்பட்டது.
  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘செம்மொழிச் செய்தி மடல்’  சிறப்பாக வெளிவரப் பணியாற்றி இதழியல் பணியிலும் முத்திரை பதித்தவர் பேரா.இராமசாமி.
  பேராசிரியர்   இராமசாமி    2008   ஆகட்டு   இறுதியில்   மைசூர்   இந்திய மொழிகளின்    நடுவண்    நிறுவனத்திலிருந்து    பணிநிறைவு    பெற்றார்.  இருப்பினும் இவரது சிறப்பான பணிகளால், 29.09.2008 அன்று செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவராக ஒப்பந்தப் பணியில் சேர்ந்தார்.
 இந்நிறுவனத்தைச் சட்டப்படிப் பதிவு செய்தல், தமிழக அரசால் பெரும்பாக்கத்தில்    வழங்கப்பட்ட    17 காணி நிலத்தைச் சமன்படுத்திக் கட்டுமானத்திற்கு ஏற்றதாக ஆக்குதல் முதலான பணிகளையும் ஆற்றினார். 30.10.2013 அன்று  செம்மொழி நிறுவனப் பணிகளிலிருந்து விடுவிப்பு பெற்றார்.
 தனிப்படவும் பிற அறிஞர்களோடு இணைந்தும்     இவர்     எழுதி     வெளியிட்டுள்ள   நூல்கள்,     ஆய்வுக்     கட்டுரைகள், மொழிபெயர்ப்பு  நூல்கள்  பலவாகும்.  தமிழ் நூல் வளத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இவர் படைத்த நூல்கள் பின் வருமாறு:-
பள்ளிநிலைப்பாடநூல்களில் மொழிப்பயன்பாட்டின் இணக்கத்தன்மை [Compatibility  of  Language  Use in School Level Textbooks (Mysore: CIIL, Monograph No.38, 1986].
இருமொழியம், இருமொழிக் கல்வி, பயிற்று மொழி குறித்த நூல் விளக்கம்- இணை ஆசிரியர் [An  Annotated  Bibliography  on  Bilingualism,  Bilingual  Education  and  Medium  of  Instruction (Joint authorship) (Mysore: CIIL, 1990)].
தமிழ்நடைக்கையேடு- இணை ஆசிரியர்.
ஆய்வுக்கோவை, புலமை, திராவிட மொழியியல் முதலான ஆய்விதழ்களில் மொழியியலுக்கு வளம் சேர்க்கும் ஆய்வுக்கட்டுரைகள் அளித்துள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வருமாறு
  1. இந்தியர்கள் பிந்துவதேன்? – மொழி ஒரு காரணம்(1974)
  2. காலங்கரந்த பெயரெச்சம்(1975)
  3. முனைவர் இரங்கனின் மாற்றிலக்கண மொழியியல் குறித்த நூல் அறிமுகம் (1976)
  4. தொல்திராவிட இலக்கிய ஆய்வில் தொல்காப்பியரின் சொற்பொருளியல் அணுகுமுறை(1978)
  5. தொல்காப்பியரின் மொழிப்பொருட் சிந்தனைகள்(1978)
  6. எதிர் மறைப் பெயரெச்சத்தின் ஈறு(1978)
  7. ஆனந்தரங்கம் நாட்குறிப்பு ஆய்வுரைகளில் தமிழ்மொழிநிலை(1991)
  8. நீல பத்மநாபனின் கூண்டினுள் பட்சிகள் – ஒரு பார்வை
  9. தாய்மொழியும் பயிற்சி மொழியும் – (ஒரு) தொடர் போராட்டம்(2001)
  10. இந்திய இலக்கியங்களில் குழந்தை இலக்கிய வளர்ச்சி(2002)
  11. தமிழை இரண்டாம் மொழியாகக்கற்பித்தலில் இலக்கணத்தின் பங்கு(2003).
  பெரும்பாலான கட்டுரைகளை இவர் இரு மொழிகளிலும் எழுதியுள்ளார். இவரது கட்டுரைகளுக்கு உலகளாவிய வரவேற்பு உள்ளது இவர் புலமையின் தனிப்பெருஞ்சிறப்பாகும்.
மொழி பெயர்ப்புப்பணி
முன்னர்க் குறிப்பிட்டுள்ளமைபோல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை அளித்துள்ளார்.
புரட்சி செய்
குறுந்தொகைப்பாடல்கள் சில
ஆகியவற்றைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துள்ளார்.
சொந்த நாட்டிலேயே அந்நியர்கள்
அடல் பிகாரி வாசுபாய்
ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
சொற்பொழிவுகள்
  இவை தவிர, அறிஞர் முனைவர் செம்மொழி க.இராமசாமி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பங்கேற்றுத் தனித்தமிழுணர்வும் செம்மொழித் தமிழ் இலக்கிய ஈடுபாடும் மாணாக்கர்களுக்கு ஏற்படும் வகையில் சிறப்பான சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார். இவை நூல் வடிவம் பெற்றால் தமிழுக்கு வளம் சேர்க்கும்; கற்போர்க்கு நலன் பயக்கும்.
 நிறுவனம் சாராத் தமிழ்ப்பணிகள்
 தமிழ்க் கல்வி, தமிழ்வழிக் கல்வி, பிறமொழிக் கல்வி, தூய்மையான சுற்றுச்சூழல்,இயற்கையோடு  இயைந்த  வாழ்வு  போன்றவை  குறித்து  மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும்  நோக்குடன்  ‘தழிழ்ப்  பண்பாட்டுப்  பேரமைப்பு’  என்னும்  பெயரில்  தன்னார்வத் தொண்டு  நிறுவனம்  ஒன்றினை உருவாக்கிச்      செயலாளராகப்      பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.    அரியலூருக்கு    அருகில்    அமைந்துள்ள    வள்ளலார்    கல்வி நிறுவன வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார். இவர் துணையால், 2013 நவம்பரில் நிறுவனரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய கொ.இரா.விசுவநாதன்  நூற்றாண்டு  விழாவினை அன்றைய ஆளுநர் மேதகு கே.இராசய்யாவை வரவழைத்துச்   சிறப்பாக நடத்தினர்.
   2015 சூலை  17  அன்று     அரியலூரில்     முதல்  புத்தகத்     திருவிழாவினை  முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு    அப்துல்கலாமை    வரவழைத்துத் தொடங்கி வைத்ததுடன்   தொடர்ந்து   26   வரை   பல்வேறு   அறிஞர்களையும்   அழைத்துச் சிறப்பித்தார்.  பல்வேறு  கலைநிகழ்ச்சிகளுடனும்  பேரளவிலான  வாசகர்  வருகையுடனும் புத்தக    விற்பனையுடனும்    வெகு    சிறப்பாகப்    புத்தகத்    திருவிழா    நிறைவேறியது. அதுபோலவே  இரண்டாவது அரியலூர்ப்  புத்தகத்  திருவிழா  2016  சூலை  15  முதல்  24 வரை    மிகவும்    சிறப்பாகக்    கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும்அரியலூரில் புததகத்திருவிழா நடத்தப்பெற்று இவர் பணிச்சிறப்பை உணர்த்திக் கொண்டுள்ளது. தமிழ்ப்    பண்பாட்டுப்    பேரமைப்பின் மூலமாக மேலும் பல சமூகப் பணிகளை மேற்கொள்ள முனைந்து பாடுபட்டு வருகின்றார்.
  கன்னட   அறிஞர்களும்   ஒடிய   மொழி   வல்லுநர்களும்   இவரை      அடையாளங் கண்டு      தத்தம்      செம்மொழித்      திட்ட      வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தமிழ் மக்களில் பலர் இவரது செம்மொழித் தொண்டினைப் புரிந்துகொண்டுள்ளனர்.
  இந்திய    மொழிகளின்    வளர்ச்சிப்    பணிக்காக    டிஏவி    கல்வி    நிறுவனங்களால் தில்லியில்  ஏற்பாடு செய்யப்பட்ட  விழாவிலும்  (15.2.1993)  செம்மொழித்  தமிழ்ப்  பணிக்காக முன்னாள்     மத்திய     அமைச்சர்     திரு.அருசுன்(சிங்கு)     தலைமையில் முத்தமிழறிஞர்  கலைஞர்  கருணாநிதி  முன்னிலையில்  நடைபெற்ற  செம்மொழித்  தமிழாய்வு மத்திய     நிறுவனத்     தொடக்க     விழாவிலும்     (18.08.2007)     இவர்     பாராட்டப்பட்டுச் சிறப்பிக்கப்படடார் என்பது நினைவுகூரத் தக்கதாகும்.
குடும்பம்:  செம்மொழியாரின் இல்லத்தரசி திருவாட்டி மு.கல்யாணி கல்விப்பணியில் ஈடுபட்டவர். அரசு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி விருப்பப் பணிநிறைவு பெற்றவர். நற்கல்வி பெற்ற நன்மக்கள் குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கின்றனர். மகன் திரு இரா.இனியன் ஐதராபாத்திலுள்ள அமேசான் பன்னாட்டு நிறுவனக்கிளையில் பொது மேலாளராகப் பணியாற்றிவருகிறார். மருமகள் திருமதி கீதாஞ்சலி தில்லி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக உள்ளார். மகள் மருத்துவர் இரா.அன்புக்கனி, அரியலூர் அரசு மருத்துவமனையில் தோல் மருத்துவராகப் பணிபுரிகிறார். மருமகன் மருத்துவர் க.கொளஞ்சிநாதன் அங்கேயே கண் மருத்துவராகப் பணியில் உள்ளார். அனிகா இனியன்(மகன்வழிப் பெயர்த்தி), கவின், முகில் (மகள் வழிப் பெயரன்கள்) என நற்பெயர் தாங்கிய பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
 மொழியியல் பேராசிரியர்களில் ஒரு சாரார் கொச்சை நடையை வாழும் மொழியாகக் கற்பித்து மொழிச்சிதைவிற்கு வழி வகுத்துவருகின்றனர். அவ்வாறில்லாமல் மொழியியல் அறிஞர் தொல்காப்பியர் வழிநின்று தமிழின்செம்மொழி மரபைக் காக்கத் துணை நிற்பவர் மொழியியலறிஞர் பேரா.க.இராமசாமி.
தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பத் தொண்டாற்றியவர் பெரியார் ஈ.வெ.இராமசாமி.
தமிழ்மொழியின் செம்மொழித்தன்மையின் அறிந்தேற்பிற்குத் தொண்டாற்றிப் பரப்புதலுக்கும் தொண்டாற்றுபவர் செம்மொழி க.இராமசாமி.
செந்தமிழர் போற்றும் செம்மொழி இராமசாமி செந்தமிழ்போல் நீடு வாழ்க!
இலக்குவனார் திருவள்ளுவன்