Showing posts with label இலக்குவனார் திருவள்ளுவன். Show all posts
Showing posts with label இலக்குவனார் திருவள்ளுவன். Show all posts

Tuesday, June 08, 2021

நிறைவாகப் பேரா.ப.மருதநாயகத்தின் தற்பணி நூல்

 

அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 68/69  இன் தொடர்ச்சி)



 




பேராசிரியர் ப. மருதநாயகம்தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

69/69

 

நானும் என் தமிழும் – ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்த்தேடல். (2011)

கோவைஞானியின் தமிழ்நேயம் இதழின் 43 ஆவது வெளியீடாக இவரின் இந்நூல் வெளிவந்துள்ளது. தமிழிலக்கியச் சிறப்பை வெளிப்படுத்தும் மேனாட்டாரின கருத்துகளை  மேற்கோள்களாக ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். இவர் பெற்ற ஆங்கிலக் கல்வி தமிழின் அருமை பெருமைகளைப் பாரறிய பரப்புவதற்கே என்பதைக் கொள்கையாகக் கொண்டு வாழ்கிறார் என்பதை இந்நூல் மூலம் அறியலாம். இவரது கல்விப்பணி, நூற்பணி, பிற படைப்புப்பணி முதலியவற்றை உணர்த்தும் தன் வரலாற்று நூல்.

இதன் முன்னுரையில் கோவை ஞானி அவர்கள், “அறிஞர் மருதநாயகம் கையெழுத்தில் 180பக்க அளவில் கட்டுரையை அனுப்பியிருந்தார்; பக்க வரம்பு கருதி, அவற்றில் சிலவற்றை அவரின் ஒப்புதலுடன் விட்டுவிட்டேன்; இன்னும் விரிவாக அவர் எழுத வேண்டிய இந்தக் கட்டுரையைப் பின்னர் நூல்வடிவில் அவரே வெளியிடுவார் என நம்புகிறேன்”; எனக் குறிப்பிட்டுள்ளார். பேரா.முனைவர் ப.மருதநாயகம் அவர்கள் தம்முடைய முழுமையான தன் வரலாற்று நூலை எழுதி வெளியிடுவது அவரின் தமிழ்த்தேடலை நன்கு அறிய வாய்ப்பாக இருக்கும்.

பேரா.முனைவர் ப.மருதநாயகம் எழுதிய பெரும்பான்மை நூல்களிலிருந்து அவரது கருத்துச் சுருக்கங்களைப் பார்த்துள்ளோம். வேண்டிய சில நூல்களைத் தந்துதவிய பேரா.ப.மருதநாயகம் ஐயாவிற்கும் அச்சுப்பதிப்பில் இருந்தாலும் வேண்டியதற்கிணங்கக் கணியச்சுப்படிகளைத்தந்துதவிய பதிப்பகத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தொடர் கட்டுரைகளில் என் குறிப்பில் அமைந்த வரிகள் தவிரப் பிற யாவும் நூல்களில் உள்ள நூலாசிரியர்  கருத்துகளே. ஒவ்வொரு முறையும் அவர் பெயரைக் குறிப்பிடும் பொழுது படிப்பதற்கு இடராக இருக்கும் எனக் கருதிப் பேரா.ப.ம.நா.பெயரைக் குறிப்பிடவில்லை. முன்னரே படித்திருந்த நூல்களைத்தவிரப் பிற  நூல்களைகடக் கடந்த ஆண்டே பெற்றாலும் முழுமையாகப் படித்து எழுதக் காத்திருந்ததால் காலத்தாழ்ச்சி ஏற்பட்டது. நூல்களைப் படிக்கும் பொழுது எதைச் சேர்ப்பது எதை விடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. எனினும் சில கருத்துகளை மட்டுமே கையாண்டுள்ளேன். அவரது நூல்களை நேரடியாகப் படித்துப் பயனுறுமாறு அன்பர்களை வேண்டுகிறேன்.

அவரது நூல்களில் இடம் பெறாக் கட்டுரைகள், கருத்தரங்கக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் முதலியவற்றை அறிய நேர்ந்தால், இவரது நுண்மாண் நுழைபுலம் மேலும் தெற்றென விளங்கும். இலக்கியங்களின் சிறப்புகளை மட்டுமல்ல, மறைக்கப்பட்ட தமிழ் குறித்த உண்மைகளை வெளிக்கொணர்தல், தமிழுக்கு உட்பகைவர்கள் செய்த சிதைவுகளையும் கேடுகளையும் உணரச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தல், சமற்கிருதத்தின் உருவாக்கப்பட்ட பொய்யான உயர்வு மாடங்களை உடைத்தெறிதல், சமற்கிருதமே தமிழுக்கு மூலம் என்று மக்களை ஏமாற்றி வந்ததை ஆய்வறிஞர்கள் வாயிலாகக் கிழித்தெறிதல் முதலான தம் ஆய்வுப்பணிகள் மூலம், தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தாங்கள் போற்றும் / அறிந்துள்ள பேரா.ப.மருதநாயகத்தின் முழு ஆய்வுப்புலமையை அறிய இக்கட்டுரைத்தொடர் உதவியதாகப் பெரும்பான்மையர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாதிப்பற்றின் காரணமாக மூவர் இவர் காழ்ப்புணர்ச்சியுடன் கருத்துகளை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். உண்மையில் அத்தகைய தவறான கண்ணோட்டம கொண்டவர்கள்தாம் காழ்ப்புணர்ச்சியில் நோக்குகின்றனர்.

ஆனால் பேரா.ப.மருதநாயகம் ஆழ்ந்து படித்து, நடுவுநிலைமையுடனும் துணிவுடனும் சொல்ல வேண்டிய கருத்துகளைச் சொல்லி ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார். பதவி நலன்களுக்காக உண்மையை மறைக்கும் கயமை இவரிடம் இல்லை.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு

(திருவள்ளுவர், திருக்குறள் 397)

 என்பதற்கு எடுத்துக்காட்டாக தம் கல்வியையும் ஆய்வையும் தொடரும் ஈடுபாட்டாளராகத் திகழ்கிறார்.

இன்றும்கூடச், சமற்கிருத நூல்களே தமிழ் நூல்களுக்கு மூலம் என்னும் பொய்யான குப்பைக் கருத்துகளைத் தாங்கி நூல்கள் வந்து கொண்டுள்ளன.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(திருவள்ளுவர், திருக்குறள் 423)

என்னும் பொதுமறைக்கிணங்கச் சொல்லியவர் யார் என்னும் பின்புலம் பாராமல் சொல்லப்பட்ட கருத்துகளின் உண்மைத் தன்மையை உறுதியாக எடுத்துரைத்து வருகிறார்.

தமிழின் தொன்மையையும் முதன்மையையும் தாய்மையையும் முன்னரே அறிஞர்கள் கூறியிருந்தாலும் அவை இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அவற்றையும் குன்றின்மேலிட்ட விளக்காக ஏற்றி வருகிறார். இவரது படைப்புகளில் ஆங்காங்கே மொழிபெயர்ப்புக் கவிதைகளும் மேற்கோள்களும் இடம் பெறுகின்றன. இவற்றின் மூலம் இவரின் சிறப்பான மொழிபெயரப்புத் திறனும்  கவிதை ஆக்கச் சிறப்பும் வெளிப்படுகின்றன. இவரின் திறமான திறனாய்வும் ஒப்பற்ற ஒப்பாய்வுப் புலமையும் இவரது ஆராய்ச்சி முறைக்குப் பிறரை ஈர்க்கின்றன.

ஏற்கெனவே கூறியவாறு தமிழைப் போற்றுவதற்காக பேரா.முனைவர் ப.மருதநாயகத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். இவரது நூல்களும் நூற்பகுதிகளும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக வைக்கப்பட வேண்டும்

ஆய்வுலகக் கலங்கரை விளக்கம் பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம் மங்காப்புகழுடன் நூறு ஆண்டுகள் கடந்தும் வாழியவே!

– இலக்குவனார் திருவள்ளுவன்

 



Saturday, June 05, 2021

தமிழின் செவ்வியல் தகுதி – ப. மருதநாயகம்

 அகரமுதல,


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 65/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

66/69

தமிழின் செவ்வியல் தகுதி(2012)

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச்செம்மொழித் தகைமையுடன் விளங்குகிறது. எனினும் கடந்த நூற்றாண்டு இறுதியில்தான் அதற்கான அறிந்தேற்பு கிடைத்தது. இருப்பினும் பலர் தமிழ்ச்செம்மொழித் தகைமையை முற்றுமாக அறியவில்லை. அனைவரும் அறிய ‘தமிழின் செவ்வியல் தகுதி’ என்னும் நூலைப் படைத்தார்.  இந்நூலில் தமிழின் தனிப்பெருங்கொடை என இறைச்சி, உள்ளுறைக் கோட்பாடுகளை நிறுவுகிறார். அத்துடன் சமற்கிருதத் தொனியும் வக்குரோக்குதியும் வெறும் படிகளே(நகல்களே) என்பதையும் தெளிவுபடுத்தி யுள்ளார்.  இந்நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசும் கிடைத்துள்ளது.

இந்நூல் ஒரு மீட்டுருவாக்கப் பதிப்பாகும். முதல் தொகுதி வெளிவந்தபோது தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்று இந்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. எனவே, அதில் தமிழின் செம்மொழிப் பண்புகள் வலியுறுத்தப்பட்டு, உலகம் தமிழைச் செம்மொழியாக ஏற்கப்பட வேண்டுமென்று வாதிடும் வகையில் எழுதியிருந்தார். அவற்றுடன் வேறு சில கட்டுரைகளையும் சேர்த்து இதை வெளியிட்டுள்ளார். எனவே, இந்நூலில் உள்ள சில கட்டுரைகள் இவரின் வேறு நூல்களிலும் உள்ளன.

இந்நூலில் 12 கட்டுரைகளில் தமிழின் செவ்வியல் தகுதிகளையும் உலக அறிஞர்களின் பார்வையில் தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களையும் காளிதாசன் பாடல்களில் உள்ள சங்கத்தமிழ்ச் செல்வாக்கையும் மண்ணுலக வாழ்வு குறித்த திருவள்ளுவர்,  பிளேட்டோ கருத்துகளையும் விளக்குகிறார்.

சங்கக்காலம் கட்டுரையில் முச்சங்க வரலாற்று உண்மைகளை உரைக்கிறார். சங்கக்காலத்தைக் கற்பனையாகக் கூறுவோருக்கும் அதன் காலங்களைப் பின்னுக்குத் தள்ளுவோருக்கும் தக்க மறுமொழிகள் அளித்துச் சங்கங்கள் உண்மையை உணர்த்துகிறார்.

நம் நாட்டில் வேண்டுமென்றே சமற்கிருத இலக்கியங்களை முற்பட்டதாகப் பொய்யுரைத்தும் தமிழ் இலக்கியங்களைப் பிற்பட்டதாக இட்டுக்கட்டியும் போலி நடுநிலையாளர்கள் உள்ளனர். இதுபோல் வெளிநாட்டிலும் சிலர் உள்ளனர். அவர்களில் ஒருவர், எருமன் திக்கென்(Hermen Ticken). இவர் ‘தென்னிந்தியாவில் காவியம்: பழந்தமிழ்ச் சங்கக்கவிதை(Kavya in South India: Old Tamil Cangam Poetry)’ என்னும் ஆங்கில நூலில் கி.பி.எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்பகுதிக்கு முன்னதாகச் சங்க இலக்கியம் தோன்றியிருக்கவில்லை என்றும் சமற்கிருத இலக்கியம் தமிழ்நாட்டில் நுழைந்த பின்னர்தான் சங்க இலக்கியம் தோன்றியிருக்கின்றது என்றும் இதுபோன்று பல பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார். அவற்றிற்குத் தக்க சான்றுகளுடன் மறுப்பு எழுதி நான்காம் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். அதன் தலைப்பு ‘சங்க இலக்கியம்: எருமன் திக்கெனின் பிதற்றல்கள்” என்பதாகும். எனவே, மேனாட்டாரின் சங்கஇலக்கியம் குறித்த கருத்துகளை எடுத்துக்கொள்வதுடன் நிற்கவில்லை. யாரேனும் எதிராகத் தவறாகக் கூறியிருந்தால் அவற்றையும் குறிப்பிட்டுத் தக்க மறுப்பு விளக்கமும் அளித்துள்ளார் பேராசிரியர் ப.மருதநாயகம். ஆய்வாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறையாகும் இது.

காய்தல் உவத்தலின்றித் தமிழின் செவ்வியல் தகைமை பிறமொழிகளால் எட்டப்படாத உயரத்தில் உள்ளதை இந்நூல் நமக்குப் புரிய வைக்கிறது. ஆனால், தமிழ்க்குடும்ப மொழியினர்  பொறாமையுற்றுத் தத்தம் மொழிக்கும் செவ்வியல் ஏற்பு வேண்டி அரசியலடிப்படையில் பெற்றும் விட்டனர் என்பது குறித்த மேனாட்டார் கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69)



Monday, May 24, 2021

சமற்கிருதம் செம்மொழியல்ல! அல்ல! அல்ல!

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 55 / 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

56 / 69

 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

இறுதியாக முடிவுரை வழங்கியுள்ளார். சமற்கிருதம் செம்மொழியல்ல என்பதைச் சுருக்கமாக இது மெய்ப்பிக்கிறது.

  1. தமிழுக்குச் செம்மொழி ஏற்பு வழங்கிய பொழுது மத்திய அரசு 2004 இல் செம்மொழிக்கான தகுதிகளை வரையறுத்தது. இத்தகுதிகளின் அடிப்படையில் சமற்கிருத மொழி இலக்கிய வரலாற்றையும் அம்மொழியில் செவ்விலக்கியங்கள் என்று போற்றப்படுபவற்றையும் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கும்போது தமிழ், கிரேக்கம், இலத்தீன் ஆகியவற்றை ஒத்து எண்ணத்தக்கப் பெருமை அதற்கு இல்லை.
  2. திருமதி பட்டாச்சார்சி சமற்கிருதத்தின் செவ்விலக்கிய வரலாறு கி.பி.நான்காம் நூற்றாண்டில் தொடங்கிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில்முடிந்து விடுகிறது எனத் தெளிவுறுத்துகிறார்(சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு/ History of  Classical Sanskrit Literature).வேத உபநிடதங்களையும் மகாபாரதம் இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் எனப்பட்டவற்றையும் அவர் செவ்விலக்கியங்களாகக் கருதவில்லை.
  3. காளிதாசன் படைப்புகளுக்குப் பின்னால் வந்த சமற்கிருத நூல்கள் தரத்தில் மிகவும் தாழ்ந்த நிலையின.
  4. சமற்கிருதப்பேராசிரியர் கே.கிருட்டிணமூர்த்திசமற்கிருதத்தில் இழிகாம(விரசமான) நூல்களே மிகுதியாக உள்ளன என ஆராய்ந்து தெரிவித்துள்ளார்.
  5. தமிழிலிருந்து மட்டுமல்லாமல் பிற இந்திய மொழிகளிலிருந்தும் நல்ல இலக்கியப்பகுதிகளை எல்லாம் சமற்கிருத நூல்களில் இடைச்செருகல்களாகச் சேர்த்தார்கள்.
  6. பிற மொழி இலக்கியங்களில் சிறந்தனவற்றை மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு மூலநூல்களை முற்றிலுமாக அழித்தார்கள். அழிக்க முடியாது போனால் சமற்கிருத நூலே மூலமென்றும் பிற மொழி நூல் மொழிபெயர்ப்பென்றும் பொய்கூறி ஏமாற்றினர்.
  7. மனுநூல், அருத்தசாத்திரம், சுக்கிரநீதி ஆகியவற்றிலெல்லாம் திருக்குறள் கூறும் அறங்கள் சேர்க்கப்பட்டு வள்ளுவரே அவற்றைச்சமற்கிருதத்திலிருந்து எடுத்தாண்டார் என்ற “பச்சைப்பசும்பொய்” நிலைநாட்டப்பட்டது.
  8. “அறிவியல் காணாததை எல்லாம் வேதம் கண்டுள்ளது” என்ற பொய்யான கருத்தைப் பரப்பப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐசன்பெருக்கு என்பாரின் கோட்பாடு(Heisenberg’s Uncertainty Principle) வேதங்களிலிருந்து பெறப்பட்டதென்றும் அவரே இதுபற்றித் தாகூரிடம் 1929இல் பேசிக்கொண்டிருந்தபோது அறிந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பொய்ச்செய்தி விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், அவ்வறிஞர் தாகூரைச் சந்திப்பதற்கு இரண்டாண்டுகள்(1927இல்) முன்னரே இக்கோட்பாடு உருவாக்கப்பட்டு விட்டது.
  9. வானூர்திகளைக் கட்டமைப்பது குறித்துப் பரத்துவாச முனிவரின் நூலில் கூறப்பட்டுள்ளதென்றும் அவ்வாறு உருவாக்கப்பட்ட வானூர்திகள் 7000 ஆண்டுகளுக்கு முன்னரே, நகரங்கள், கண்டங்கள், கோள்களுக்கிடையே பறந்தன என்றும் 102ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் ஆனந்து போதசு என்பவர் கட்டுரை அளித்தார். இந்தச் சமற்கிருத நூலையும் அதன் இந்தி, ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஆராய்ந்த இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பொறியியல் வல்லுநர்கள் அஃது எவ்வளவு பெரியமோசடி என்பதைக் கண்டு வெளிப்படுத்தினர். அச்சமற்கிருத நூலானது 1904ஆம் ஆண்டுக்குப் பிறகு அனேகல் என்னும் ஊரைச் சேர்ந்த சுப்பராய சாத்திரி என்பவரால் எழுதப் பெற்றது என்றும் அவர் சுலோகங்களைச் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதினாரென்றும் சுந்தர விமானம், (உ)ருக்கும விமானம் என்பவற்றின் படங்களை வரைய இன்னொருவரைப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் தேசபாண்டே என்பவர் அம்பலப்படுத்தினார். இதனைஇந்து நாளிதழ் 11.1.2015 அன்று வெளியிட்டுள்ளது.

அரசியல் துறையிலேயே இதனைச் செய்தவர்கள் மொழி, இலக்கிய, சமயத்துறைகளில் இவ்வாறான வஞ்சகச் செயல்களை மிக எளிதாகவும் பரவலாகவும் செய்தனர் என்பதைச்சொல்லவும் வேண்டுமோ?

  1. எங்கும் வழங்காத சமற்கிருதக் கிளைமொழி யொன்றைக் கற்பனை செய்து அதற்குப் ‘பாந்தீர பாசா’ என்று பெயரிட்டு இலக்கணமும் எழுதினர் என ஏ.சி.பருனல் மெய்ப்பித்துள்ளார்.
  2. கிரேக்க அறிஞர்கள் பெயர்களைச் சமற்கிருதப் பெயர்களாக்கி அவர்களைச் சமற்கிருத அறிஞர்கள் எனப் பரப்பினர். (இப்படித்தான் தொல்காப்பியர், திருவள்ளுவர் முதலான தமிழ்ப்புலவர்களுக்குச் சமற்கிருதப்பெயர்கள் சூட்டப்பட்டன.)

  இவ்வாறெல்லாம் ஆய்வுரை வழங்கிய பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம், பின்வரும் முத்தாய்ப்புடன் நூலை முடிக்கிறார்.

” இத்தகைய முயற்சிகளை யெல்லாம் காலங்காலமாக மேற்கொண்டு இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் சமற்கிருதமே முதலில் தோன்றிய மொழியென்ற எண்ணத்தை மொழியியல் வல்லுநர்களிடையே ஏற்படுத்தி அது கிரேக்கம், இலத்தீன் போன்று செம்மொழித் தகுதி உடையது என்னும் பொய்யையும் வரலாற்று உண்மையாகச் சமற்கிருதச் சார்புடையோரால் நிலைநாட்ட முடிந்தது.”

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 57/69)



Saturday, May 01, 2021

கெளடிலியர்தான் திருவள்ளுவருக்குக் கடன்பட்டிருக்கிறார்! – ப. மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 32/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

33/ 69

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) (தொடர்ச்சி)

 அருத்தசாத்திரம் எனப்படும் கெளடலியத்தின் ஆசிரியருக்குத் திருவள்ளுவர் கடன்பட்டிருப்பதாகச் சிலர் தப்பும் தவறுமாக எழுதி வருகின்றனர். கெளடிலியர்தான் திருவள்ளுவருக்குக் கடன்பட்டிருக்கிறார் என்பதை மேலை அறிஞர்களின் கருத்துகளைக் கொண்டு சிறப்பாக நிறுவியுள்ளார் பேரா.ப.மருதநாயகம். 

விண்டர் விட்டுசன், சாலி, கீத்து முதலான மேலைக்கல்வியாளர்கள், சந்திரகுப்புதனது காலத்தில் சாணக்கியர் என்ற பொருள் நூலாசிரியர் ஒருவரும் இருந்ததில்லை எனவும் அந்நூல் கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதே என்றும் நிறுவியுள்ளதை எடுத்துரைக்கிறார். ‘அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா?’(Is the Arthasastra a Mauryan Document?) என்னும் கட்டுரையில் மார்க்கு மக்கிளீசு (Mark Mcclish), அருத்த சாத்திரம் மெளரியர் காலத்தில் எழுதப்பெற்ற நூலன்று; அதனை எழுதியவர் சாணக்கியர் என்ற பெயரில் சந்திரகுப்புத மன்னனுக்கு அமைச்சராக இருந்தவர் என்று கருதப்படுபவர் அல்லர்; அது, சந்திரகுப்புத மெளரியனுக்குப் பல நூற்றாண்டுகள் பின்னால் அறிஞர்கள் சிலரால் தொகுக்கப்பெற்ற நூல் என நிறுவியுள்ளார். இதனை நமக்குத் தெரிவிக்கும் பேரா.ப.மருதநாயகம், கி.பி.நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த  அருத்த சாத்திரமே திருக்குறள் கருத்துகளை எடுத்தாண்டுள்ளது என்பதைச் சிறப்பாக ஆறாம் கட்டுரையில் விளக்கியுள்ளார்.

மனுசுமிருதி அருத்தசாத்திரத்திற்குப் பின் தோன்றியதென்பதையும் அதற்குக் கடன்பட்டிருக்கிறது என்பதையும் சமற்கிருத அறிஞர்களின் கருத்துகள் அடிப்படையில் நமக்கு இக்கட்டுரையில் உணரத்தியுள்ளார்.  அரசாட்சி, தூது, வினைசெயல்வகை முதலானவை குறித்த நல்ல கருத்துகள் யாவும் திருக்குறட் பாக்களை அப்படியே எதிரொலிப்பதை விளக்கியுள்ளார். அதே நேரம்,  அரசன் நிலத்தைக் கொள்ளுதல், நிலையாக வைத்துக் கொள்ளல் போன்ற அறமற்ற செயல்களையே அருத்தசாத்திரம் கூறுகிறது. நீதி முறையில் பிராமணருக்கு முதன்மை அளித்து வருண வேறுபாட்டு அடிப்படையிலான நீதி முறையையே அது கூறுகிறது.

எட்டாம் கட்டுரை அறவியலில் திருக்குறளின் சிறப்பையும் திருக்குறளைக் கையாண்டுள்ள சுக்கிர நீதியின் பகுதிகளையும் திருக்குறளுக்கு மாறாகச் சாதிவழிபட்ட சுக்கிரநீதியின் கருத்துகளையும் எடுத்துரைக்கிறது.

“மனுநீதி, சுக்கிர நீதி, கெளடலியம் ஆகிய மூன்று சமற்கிருத நூல்களில் அறவிலக்கியம் என்ற முறையில் சுக்கிரநீதி உயர்ந்தது என்று சமற்கிருத அறிஞர்கள் கருதுவர். அதுவே திருக்குறளுக்கு மிகையாகக் கடன்பட்டிருப்பது உண்மை. ஏனைய இரண்டும் வருணப் பாகுபாட்டைப் போற்றும் அளவிற்குச் சுக்கிர நீதி போற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் இம்மூன்றும் திருக்குறளைப்போல் மனித வாழ்க்கையைக் கால, இட,நிற, இன, மொழி வேறுபாடின்றி நோக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை யென்பதோடு மிகக் குறுகிய மனப்பான்மையைக் கொண்டாரால் தொகுக்கப்பட்டவை யென்பதும் நம்மவர் அறியற்பாலது”  என ஆய்வு முடிவாகப் பேரா.ப.மருதநாயகம் தெரிவிக்கிறார்.

பிராகிருதத்தில் காணப்பெறும் தமிழ் அகமரபை  எடுத்தியம்பி அகநானூறு, காதாசப்தசதி ஆகியவற்றை ஒப்பிட்டு அடுத்த கட்டுரையை எட்டாவதாக அளித்துள்ளார். தமிழுக்கு மூலங்கள் சமற்கிருத நூல்களே என்னும் ஆரியப்பொய்யைத் தழுவி, கே.எசு.சீனிவாசன் என்பாரும் நா.செயராமன் என்பாரும் இவ்விரு நூல்களையும் ஒப்பிட்டுத் தவறான கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளனர். இதனைச் சுட்டிக்காட்டும் பேரா.ப.மருதநாயகம்,  “வடமொழியாளர்கள் சிலர் சங்க அகப்பாடல்களின் தனித்தன்மையை அறியாது அல்லது அறிந்தும் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு காதாசப்தசதியே மூல இலக்கியம் எனப் பிதற்றுவதில் பொருள் இல்லை என்பதை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு” எனப் பேரா.வ.செயதேவன் அறிவித்த ஆய்வு முடிவையும் நமக்கு உணர்த்துகிறார்.

சில கவிதைக் கூறுகள் தமிழ்ச்சங்க இலக்கியங்களிலிருந்து மகாராட்டிரி பிராகிருதம் வழியாகச் சமற்கிருத இலக்கியங்களுக்குச் சென்றிருக்கின்றன எனச் சமற்கிருத அறிஞர்கள் கூறியதைச் சான்றுகளுடன் விளக்குகிறார். சீகுபிரைடு இலியன் ஆருடு (Siegfried Lienhard)பலதரமான கவிதை உத்திகள் தமிழிலிருந்து சமற்கிருதம் பெற்றுள்ளதை நிறுவியுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 34/ 69 )



Wednesday, April 28, 2021

மருதநாயகத்தின் தொல்காப்பியப் பார்வை

 அகரமுதல


 (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 29/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

30/ 69

        பேரா.ப.மருதநாயகம் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை மட்டும் தனி நூலாக ஆய்வுக்குறிப்புகளுடன் வெளியிட்டுள்ளார். தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என்னும் நூலையும் படைத்துள்ளார். இவ்விரண்டு பற்றிய சுருக்கஅறிமுகமே இப்பகுதி.

தொல்காப்பியப் பொருளதிகாரம் (2019)

தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப்  பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை போன்ற அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக் கூறித் தொல்காப்பியம் சமற்கிருதத் தழுவலன்று எனத் தெரிவிக்கிறார்.

 தொல்காப்பியப் பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் சுட்டும் கவிதை நெறி இன்று மேலைத் திறனாய்வாளரகளில் உயர்ந்தோர் ஏற்றுப் பாராட்டும் கவிதை நெறியோடு பெரும்பாலும் ஒத்திருக்கக் காணலாம். தமிழ்க்கவிதையியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அக்காலத்துக் கிரேக்கர்களும்  உரோமானியர்களும் கொண்டிருந்த கவிதைபற்றிய கருத்துகள் சில நகைப்பிற்குரியவை.  சமற்கிருத இலக்கியம்பற்றி மட்டும் அறிந்த மேனாட்டறிஞர்கள் கவிதையியல் சமற்கிருதத்திலிருந்துதான் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருக்க வேண்டும் என்ற தவறான கருதுதலில்   இருந்தனர். ஆனால் கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் சங்க இலக்கியங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டபின், தொல்காப்பியத்தின் தொன்மை வெளியான பிறகு மூலம் எது? கடன் கொண்டது யார்? கடன் கொடுத்தது யார்? என்பதில் உண்மை தெளிவாகி வருகிறது.

கவிதை தமிழர்களுக்கு ஒரு வெறும் பொழுதுபோக்குப் பொருளன்று ஒரு வாழ்க்கை முறையே என்று சொல்லுமளவிற்கு அவர்களது வாழ்க்கையோடு இரண்டறக்கலந்துவிட்டது. மேனாட்டுத் திறனாய்வாளர்கள் பலரின் கருத்துகள் அடிப்படையிலும் தம்  ஆய்வின் அடிப்படையிலும தமிழில் கவிதையியலின் சிறப்புகளையும் அதற்குப் பிந்தைய வரலாறு உடைய சமற்கிருதக் கவிதையியலின் குறைபாடுகள் குறித்தும் விளக்குகிறார்.

நூற்பாக்களுக்கு விளக்கம் தரும்பொழுதே தேவைப்படும் இடங்களில் எல்லாம் மேலைத்திறனாய்வாளர்கள், சமற்கிருதஅறிஞர்கள், தமிழறிஞர்கள் கருத்துகளின் அடிப்படையில் தமிழ்க்கவிதையியல் சிறப்பை உணர்த்துகிறார்.சங்கச் சான்றோர் பாடல்கள் உயர்ந்த நோக்குடைய அரிய கலைப்படைப்புகள் என்பதையும் சமற்கிருத இலக்கியங்களில் பெரும்பாலானவை கீழ்த்தர உணர்வுகளைக் கிளப்பும் தன்மையவை(obscene writings) என்பதையும்  இரண்டையும் கற்றோர் அறிவர்.

காமக்கூட்டம் காணும்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே

என வரும் நூற்பாவை இடைச்செருகல் என ஐயந்திரிபறக் கூறுகிறார்.

“உயிரினும் சிறந்தன்று நாணே” எனத் தொடங்கும் நூற்பாவை விளக்கும் பொழுது, தலைவி தன்னந்தனியளாகத் தலைவனைத் தேடிச் செல்வதாகப் பாடல் எழுதுவது தமிழ்மரபு அன்று. சமற்கிருதத்தில் திருமணமானவள் இரவில் கள்ளக்காதலனைத் தேடி அலைவதாகக் கூறும் பாடல்கள் பல உண்டு.

கற்பியல் குறித்து விளக்கும் பொழுது பி.சா.சுப்பிரமணிய சாத்திரிகள் அறியாமையாலோ குறும்புத்தனத்தாலோ ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நெறி ஆரியரிடமிருந்து தமிழர் பெற்றது என எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு அதனை வன்மையாக மறுக்கிறார்.

மெய்ப்பாடுகுறித்த கருத்துகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தெளிவான விளக்கம் பெற்றிருந்தன என்பதை நூற்பாவே தெரிவிக்கிறது. ஆனால், இவை பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்திலிருந்து பெறப்பட்டவை என்று தமிழின் உட்பகைவரகளும் புறப்பகைவர்களும் பொய்கூறிக்காலந் தள்ளுகின்றனர். எனக்குறிப்பிட்டு அறிஞர் பி.வி.கனே போன்றோர் கருத்துகளையும் துணைகொண்டு தமிழ்கூறும் மெய்ப்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துரைக்கிறார்.

இடைச்செருகல்களையும் சேர்த்து வெளியிட்டுப் பின்னர் அவற்றை இடைச்செருகல்கள் என்பதை விட அவை இல்லாமல் தொல்காப்பியத்தை வெளியிடுவதே சிறப்பு. எனவே, அவ்வாறு இந்நூலில் இடைச்செருகல்களை நீக்கிய பதிப்பாக இதனை வெளியிட்டுள்ளார்.

‘தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’(2019)

தொல்காப்பியத்தில்  இடைச்செருகல்கள் உள்ளமையை முதலில் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வெளியிட்டார். அதன்பின்னர் பிற தமிழ் அறிஞர்களும் இது குறித்து எழுதியுள்ளனர். எனினும் தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் இடம் பெற்று அவற்றின் குறிப்பாக மட்டுமே இடைச்செருகல் விவரம் தெரிவிக்கப்பட்டது. தொல்காப்பியத்தில் தெரிந்தே இடைச்செருகல்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமா என அறிஞர் ப.மருதநாயகம் வருந்தினார். எனவே, இடைச்செருகல்களை நீக்கிய முழு நூலாகத் ’தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என இடைச்செருகல்கள் நீக்கப்பெற்ற செம்பதிப்பை வெளியிட்டார்.

இந்நூலின் முதல் இயலாக ‘ஒப்பில் தொல்காப்பியம்’ என்னும் கட்டுரையை அளித்துள்ளார். தொல்காப்பியத்தின் சிறப்பு, சமற்கிருத நூல்களில் இதன் தாக்கம், இல்லாத கற்பைனச் சொற்களைச் சேர்த்துப் பாணிணி எழுதியுள்ளதை மேனாட்டு அறிஞர்களின் ஆய்வுரை அடிப்படையில் ஆராய்ச்சி உரை எனப் பலவகைகளில் சிறப்பாக இக்கட்டுரை உள்ளது.

அடுத்துத் தொல்காப்பிய நூலை(நூற்பாக்களை) இடைச்செருகல்கள் நீங்கிய செம்பதிப்பாக வெளியிட்டுள்ளார். நிறைவில் ‘தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள்’ எனும் ஆய்வுக் கட்டுரையை அளித்துள்ளார்.

சமற்கிருதச் சார்புடையார் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் இழைத்த கேடுகளைப்பற்றித் தேவநேயப் பாவாணர் விரித்துரைப்பதில் ஒரு பத்தியைத் தொடக்கத்தில் எடுத்துரைக்கிறார்.  அத்தகைய அழிகேட்டுப் பணிகளில் ஒன்றுதான் தொல்காப்பிய இடைச்செருகல். 1871இலேயே சாருலசு கோவர் (Charles E.Gover) என்பார், ‘தென்னிந்தியாவின் நாட்டு்ப்புறப்பாடல்கள்’ என்னும் நூலின் முன்னுரையில் தமிழ் இலக்கியங்கள் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டமையை உள்ளக்குமுறலோடு கூறியுள்ளதையும் நமக்குத் தருகிறார். பிராமணர்கள், தமிழ் நூல்களை அழிப்பது, இயலாவிட்டால் சிதைப்பது (The Brahmins corrupted what they could not destroy.)என ஈடுபட்டதைக் கோவர் கூறுகிறார். இவர்போன்ற அறிஞர்கள் கூற்றுகளின் மூலம் தொல்காப்பியத்திலும் இடைச்செருகல்கள் ஏற்பட்டமையைப் புரிய வைக்கிறார்.

தொல்காப்பிய அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப்பருவத்திலேயே தொல்காப்பிய இடைச்செருகல்கள் குறித்து எழுதியவர். அவர் தம் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு-திறனாய்வு நூலில் தொல்காப்பியத்தில் சதிகாரர்களால் நேர்ந்த இடைச்செருகல்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அவரது கருத்துகள் இரண்டையும் வெள்ளைவாரணனாரின் குறிப்பையும் நமக்குச் சுட்டுகிறார். இத்துடன் உரையாசிரியர்களின் உரைவிளக்கங்கள் அடிப்படையில் தம் ஆய்வுரைகளையும் இணைத்து இக்கட்டுரையைத் தெளிவாக நமக்குப் பேரா.ப.ம.நா.அளித்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 31/ 69  )



Monday, April 26, 2021

உலக மொழிகளில் தூய்மை இயக்கங்கள் – ப. மருதநாயகம்

 அகரமுதல,


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 27/ 69 இன் தொடர்ச்சி)





தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

28/ 69

 

உலக மொழிகளில் தூய்மை இயக்கங்கள்(2018)

தமிழ்த்தூய்மையைப் பேண வேண்டும் என்று தனித்தமிழ் இயக்கத்தினர் வலியுறுத்துகையில் அதற்கு எதிராகக் கூறித் தமிழைச் சிதைக்க விரும்புவோர் நம் நாட்டில் உள்ளனர். மொழிக்கலப்பே மொழி வளர்ச்சி எனக் கூறுவோர் பிற நாட்டு மொழி வரலாற்றை அறியாதவர்கள். மொழிக்கலப்பினால் தத்தம் தாய்மொழி கேடுறுவதைத் தடுப்பதற்காக மொழித்தூய்மை இயக்கங்களைப் பிற மொழியினரும் பேணுகின்றனர். ஆங்கிலம், இசுகாட்டு, பிரெஞ்சு முதலான பல மொழியினரும் மொழித்தூய்மை இயக்கங்களை நடத்திய நடத்தும் வரலாற்றை இதில் கூறியுள்ளார்.

 “மொழியிலும் நடையிலும் மரபைப் பேண வேண்டும் என்றும் பிற மொழிகளின் அத்துமீறிய நுழைவைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் இயக்கங்கள் பல பழம் மொழிகளிலும் எட்டாம் நூற்றாண்டு, பத்தாம் நூற்றாண்டு, பதினான்காம் நூற்றாண்டு போன்று பிற்காலங்களில் தோன்றிய மொழிகளிலும் அவ்வப்போது அறிஞர்களால் தோற்றுவிக்கப் பெற்றுப் போராட்டங்கள் நிகழ்த்தியுள்ளன. இவ்வாறான இயக்கங்களின் வரலாற்றைக் கூர்ந்து நோக்கும் போது சில வியப்புக்குரிய முடிவுகளுக்கு நாம் வரவேண்டியுள்ளது. தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் குற்றம் சாட்டுவதுபோல், தனித்தமிழ் இயக்கங்களின் கோட்பாடுகளும் செயல்களும் பொருளற்றவையென்றோ, தேவையற்றவை யென்றோ, அளவுகடந்தவை யென்றோ எண்ணுதல் பெருந்தவறு மட்டுமன்று, அறியாமையும் ஆகும்” – இவ்வாறு தொடக்கத்திலேயே பிற மொழித் தூய்மை இயக்கங்கள்போல் தமிழ்த்தூய்மை இயக்கமும் வேண்டற்பாலது எனவலியுறுத்துகிறார் பேரா.ப.ம.நா.

ஆங்கிலச் சொல்வளக் குறைபாடு, இலக்கணக் குறைபாடு குறித்து ஆங்கிலேய அறிஞர்கள் கூறுவதையும் எடுத்துரைக்கிறார். சேக்குசுபியர் தம் நாடகம் ஒன்றில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தமையால் ஒருவன் வேலைகிடைக்காமல் திரிவதான உரையாடல் வருவதையும் குறிப்பிடுகிறார்.

நமது மொழி துருப்பிடித்துப் போனது;

செல்லரித்தது; பூச்சியால் நோயுற்றது;

அறிவுத்திறன் அற்று மழுங்கிப் போனது;

அழகிய பாடலொன்று எழுத முயன்றால்

எண்ணங்களை வெளியிடத் தக்க சொற்களை

எங்கே தேடுவது? எனத் தெரியவில்லை

என ஆங்கிலேயரான இயான் கெலட்டன் (John Skelton) எழுதிய பாடலைக் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு ஒரு காலத்தில் ஆங்கிலம் குறைபாடுள்ள மொழியாக இருந்தாலும் இப்பொழுது உலகத் தலைமை பெற்றுள்ளது.

ஆங்கிலத்தில் கலந்து விட்ட இலத்தீன் சொற்களைக் களையமேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிடுகிறார்.1573 இல் இராலஃப் இலேவர்(Ralph Lever), காரணத்தின் கலை சரியாகச்சொல்வதாயின் கரணியக்கலை (The Art of Reason, Rightly Termed Witcraft) என்னும் நூலில் இலத்தீன் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை உருவாக்கினார். மிக உயர்ந்த ஆங்கில இலகக்கியங்களைத் தந்த மிலட்டன் இலத்தீன் சொற்களைக் கலந்து எழுதியுள்ளமையால் அவற்றுக்குப் பல எதிர்ப்புகள் வந்தன.  மிலட்டனின் மொழி உயிரற்றுக் கிடக்கின்றது என்றே பாவலர் கீட்சு குற்றம் சாட்டினார். எசுரா பவுண்டு(Ezra Pound) ஆங்கில மொழியை மிலட்டனின் இரும்புப் பிடியில் இருந்து மீட்க வேண்டுமென்று அறைகூவினார்.

மேலை ஐரோ்ப்பியமொழி அறிஞர்கள் தத்தம் மொழிகளில் உள்ள குறைகளைக் குறிப்பிட்டுள்ளனர். பேரா.ப.ம.நா.,அவ்விலக்கணக் குழப்பங்களுக்குக் காரணம் தொல்காப்பியம் முதலான மரபிலக்கண நூல் அம்மொழிகளில இல்லாமையே என்கிறார்.

பெருனாடு சா(Bernard Shaw)ஆங்கில மொழிச் சீர்திருத்தத்திற்கு மேற்கொண்ட முயற்சிகள், ஐரிசு மொழியினரின் மொழிக்காப்புப் போராட்டம், இசுகாட்டு மொழித் தூய்மைக்கான இயக்கம், பிரித்தானிய ஆங்கிலம் அமெரிக்க ஆங்கிலச் செல்வாக்கிலிருந்து விடுபடும் போராட்டம்,  அமெரிக்க ஆங்கிலம் பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து மீளும் போராட்டம், பிரெஞ்சு மொழித்தூய்மைப் போராட்டம், கெலட்டிமொழிக் காப்புப் போராட்டம், தூய வேல்சு மொழிப் போராட்டம், தனிச் செருமானியமொழிப் போராட்டம், இசுபானியமொழித் தூய்மை இயக்கம், ஆப்பிரிக்கான்சு மொழிப் போராட்டம் எனப் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த, நிகழும் மொழித்தூய்மைப்போராட்டங்களைக் குறிப்பிடுகிறார். நாமும் தனித்தமிழ்க் காப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதே சிறப்பானது என உணரலாம். 

தமிழ்நிலம் பதிப்பகம் 39 பக்கத் தனி நூலாக வெளியிட்டு்ளள இதன் மூலம் தமிழ்த்தூய்மை தேவை என்பதை உணர வைத்தப் பேராசிரியர் ப.ம.நா. மற்றோர் உண்மையையும் நமக்கு உணர்த்துகிறார். அது வருமாறு:-

“தமிழ் தோன்றிப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றித் தமிழிலுள்ள சொற்களில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் சொற்களைப் பெறாத இசுாட்சுமொழிக்கு எழுந்துள்ள அகரமுதலிகள் எண்ணிக்கை எண்ணற்றவை… .. .. பல நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே இலக்கண நூல்களையும் நிகண்டுகளையும் பலவாகப் பெற்றிருந்த தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் இப்பொழுது தமிழில் உட்பகைவர்கள் கொண்டு வந்துள்ள இரண்டு மூன்று அகரமுதலிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. “ என வருத்தப்பட்டு உரைப்பதன் உண்மையை உணர்ந்து நாம் தமிழ் அகராதிகளைப் பெருக்குவோம்!

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 29/ 69  )