(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்
1/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம் 2/ 69
மைசூர் இந்திய மொழிகள் நிறுவனத்தில் தமிழ்ச்செம்மொழி மையம் தொடங்கிய பொழுது(2006) புதுவை நிறுவனத்தின் இயக்குநராக இருந்துகொண்டே பணியாற்றும் வண்ணம் ஆய்வுத்தகைஞர் பணி வழங்கப்பட்டது. இப்பணியைச் சிறப்பாகச்செய்ய வேண்டுமென்பதற்காகப் புதுவைப்பணியிலிருந்து விடுபட்டு 03.04.2006 இல் மைசூர் நிறுவனத்திலேயே பணியில் சேர்ந்தார். சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மாற்றப்பட்ட பொழுது அதன் பொறுப்பு அலுவலராகப் பணிப்பொறுப்பேற்றார்(9.05.2008). பின்னர்த் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புத் திட்டப்பணி இவருக்கு வழங்கப்பெற்றது. இப்பணிகளிலேயே காலத்தைச் செலவழித்த இவருக்கு இஃது எளிதாயிற்று.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிச் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தவர், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். பத்து ஆண்டுகளாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வுத்தகைஞராகச் செயல்பட்டார். மொரீசியசில் உள்ள மகாத்மா காந்தி உயர்கல்வி நிறுவனத்தின் பேரறிஞர் அண்ணா இருக்கைப் பேராசிரியராக அழைக்கப்பெற்றார். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் சொற்பொழிவை நிகழ்த்தினார். பேரறிஞர் அண்ணாபற்றிய நூல்கள் வெளிவருவதற்கான திட்டப்பணிகளை வடிவமைத்து அளித்தார். கனடாவின் காருலெட்டன் பல்கலைக்கழகம்(Carleton University, Canada ), பிரெஞ்சு இரென்-2 பல்கலைக்கழகம்(Rennes-2 University, France), இரீயூனியன் பல்கலைக்கழகம்(Reunion University) , ஆகசுபோருடு பல்கலைக்கழகம்(Oxford University), இலண்டன் பல்கலைக்கழகம், செருமனியின் ஐடல் பெருக்கு பல்கலைக்கழகம்( Institute of South Asian Studies of Heidelberg University, Germany), அமெரிக்காவின் ஆர்வருடு பல்கலைக்கழகம்( Harvard University, USA) ஆகியவற்றில் தமிழிலக்கிய மேன்மை குறித்த ஆய்வுரைகள் வழங்கியுள்ளார்.
இவர் வழிகாட்டுதலில் ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள் முப்பது ஆசிரியர்கள் ஆவர்.
இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளில் இருந்தும் வெளிவரும் ஆய்விதழ்கள் பலவும் இவருடைய தமிழ், அமெரிக்க, கனடா இலக்கியங்கள் தொடர்பான இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளால் சிறப்புற்றன.
பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் பங்கேற்றுத் தமிழ் இலக்கியங்கள் குறித்த ஒப்பாய்வுக் கட்டுரைகளை அளித்து வருகிறார்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, பால்டிமோர், இடல்லசு. இராலே, சாருலசுடன், வாசிங்குடன் ஆகிய நகரங்களில் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் புறநானூறு, திருக்குறள், தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணி போன்ற தலைப்புகளில் அவரால் கட்டுரைகள் வழங்கப்பெற்றன. ஆக்குபோருடு பாடலியன் நூலகத்திலும், இலண்டன் பிரித்தானிய நூலகத்திலும் அறிஞர் எஃப்.டபிள்யூ. எல்லிசின் கையெழுத்துப்படிகளை ஆய்வுசெய்தார். இவற்றின் மூலம் அன்னாரின் மூன்று அதிகாரத் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலையும், தமிழ் யாப்பிலக்கணம் பற்றிய ஆங்கில நூலையும் பதிப்பித்தார்.
தமிழ்க்கவிதைகள், கட்டுரைகள், புதினங்கள் தொடர்பான இவரின் மொழி பெயர்ப்பு நூல்கள் பலவும் சாகித்திய அகாதமியால் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த நூல்கள்
தமிழ் இலக்கியங்கள் உலகெங்கும் பரவ வேண்டும் என்பதற்காக அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகிறார். இதுவரை மொழி பெயர்த்தவை வருமாறு:
- முத்தொள்ளாயிரத்திலிருந்து நாற்பது பாடல்கள் (MUTTOḶḶĀYIRAM: Text, Transliteration and Translations in English Verse and Prose), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, 2010
- புறநானூறு முழுவதும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
- முதுமொழிக் காஞ்சி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
- தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் பாடல்கள், சாகித்திய அகாதெமி
- தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் கட்டுரைகள், சாகித்திய அகாதெமி
- தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிதாசன் பாடல்கள், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்
- தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிதாசன் பாடல்கள், பாரதிதாசன் பல்கழைக்கழகம்
- தேர்ந்தெடுக்கப்பட்ட வாணிதாசன் பாடல்கள், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்
- தேர்ந்தெடுக்கப்பட்ட குலோத்துங்கன் பாடல்கள், நியூ சென்சுரி புக் ஹவுஸ்
- தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்பியின் பாடல்கள், நந்தினி பதிப்பகம்
பதிப்புப் பணிகள்
அருமையான பதினைந்து ஆங்கில நூல்களையும் பதிப்பித்துள்ளார்.
இவர் பதிப்பித்த நூல்கள் வருமாறு:
An Anthology of American Prose, Emerald Publishers, 1987
The Art of Prose, Pondicherry University, 1988
Sixty-Third Annual Conference of Indian Philosophical Congress Souvenir, Pondicherry University, 1988
Soul_ Animating Stories, New Century Book House, 1994
Palm-leaf and other Manuscripts in Indian Languages, Institute of Asian Studies, Chennai, 1995
Selected Poems of Bharatidasan, Pondicherry Institute of Linguistics and Culture, 2001
Selected Poems of Vanidasan, Pondicherry Institute of Linguistics and Culture, 2001
The Earliest Complete Grammar: Studies in Tolkappiyam, Sekar Pathippagam, Chennai, 2010
The Ellis Manuscript (Ellis’s Commentary on three chapters of Tirukkural in his own handwriting), Seethai Pathippagam, 2010
Kulothungan’s Maanuda Yaathirai, translated by V. Murugan, New Century Book House, 2014
- W. Ellis’s Memorandum on Tamil Prosody, Kaavya, Chennai, 2014
- W. Ellis’s Translations of Tamil Classics, International Institute of Tamil Studies, Chennai, 2015
Last four volumes of Ananda Ranga Pillai Diary, 2002-2006
Edited a few issues of the Journal of Pondicherry Institute of Linguistics and Culture, 2002-2006
Edited several issues of the Newsletter (Chemmozhi) of Central Institute of Classical Tamil, 2006-2012
தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழின் முதன்மைச்சிறப்பை உணர்த்தும் நூல் விவரங்களையும் அவற்றின் சிறப்புகளையும் இக் கட்டுரையில் பின்னர்க் காணலாம்.
விருதாளர்
இவரது பணிச்சிறப்புகளையும் நூற்சிறப்புகளையும் புலமை வளத்தையும் பாராட்டிப் பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கியுள்ளன. தமிழக அரசு 2018 ஆம் ஆண்டு இவருக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விருது வழங்கிச் சிறப்பித்தது. தமிழின்செவ்வியல் தகுதி என்னும் இவருடைய நூலுக்கு 2015இல் சிறந்த திறனாய்வு நூலுக்கான பரிசு வழங்கியது.சேலம்தமிழ்ச்சங்கம் இவருடைய பாரதி பதினாறு நூலுக்குச் சிறந்த திறனாய்வு நூலெனப் பாராட்டிப் பரிசு வழங்கியது.
மேலும், திருக்குறள் தமிழறிஞர்(2005), மனோன்மணீயம் சுந்தரனார் விருது(2007), மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்(பிள்ளை) நினைவுப் பொற்கிழி விருது(2013), புறநானூற்றுத்தமிழறிஞர்(2013), சிறந்த தமிழறிஞர்(2014), செம்மொழிச்செம்மல்(2016), தமிழ்ச்சான்றோர்(2016), குலோத்துங்கன் ஆய்வாளர்(2017), இலக்கியத் திலகம்(2018), சிறந்த தமிழ்க்ல்வியாளர்(2018) முதலான பல்வேறு விருதுகளைப் பல்வேறு அமைப்புகள் மூலம் பெற்றுள்ளார்.
நுண்ணிய ஒப்பாய்வு மேற்கொண்டே இவர் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழுக்கு மிகவும் பிற்பட்ட, எழுத்து வடிவத்தையும் நல்லறக் கருத்துகளையும் இரவல் பெற்ற சமற்கிருதமே மூத்த மொழி என்னும் பொய்த்தோலைக் கிழித்தெறிந்தார். வேண்டுமென்றே சமற்கிருதத்தை முன்னுக்குத் தள்ளித் தமிழைப் பின்னுக்குத் தள்ளும் நடுநிலை தவறுவோர் இவரது நூல்களைப் படித்தாவது திருந்த வேண்டும். இவரது கட்டுரைகளையும் நூல்களின் எடுபடிகளையும் பல்வேறு நிலைகளில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக வைக்க வேண்டும். அப்பொழுதுதான் வளரும் தலைமுறையினர் சிறந்த அறிவு பெற்று விளங்குவர்.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள் 445)
என்னும் உலகமறைக்கேற்ப அரசு இவரைப்போன்ற தகைமையாளர்களைச் சூழ வைத்துக்கொண்டு அறிவுரை பெற்றுத் தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டால் அரசு பெருமையுறும்; இலக்கியப் பணிகள் சிறந்தோங்கும்; தமிழ் உலகெங்கும் பரவும்
(தொடரும்)
No comments:
Post a Comment