தலைசிறந்த ஒப்பிலக்கிய அறிஞர் மருதநாயகம்

 

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

2/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம் 3/ 69

 

பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம், தமிழ் ஆய்வின் விடிவெள்ளி எனப் போற்றப்படுபவர். இவரது ஒரு நூலைப் படித்தாலும்  இவரது ஒப்பிலா ஆய்வுச்சிறப்பைப் புரிந்து கொள்ள இயலும்.

இவரது வற்றாப் புலமை வளம் நூல்களின் வாயிலாகவும் கட்டுரைகளின் வாயிலாகவும் வெளிப்பட்டுத் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வழிவகுக்கின்றது.

ஆங்கில இலக்கியங்களைப் பயின்றவர், அவற்றிலும் சிறப்பான தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்கள் உலக அறிஞர்களின் கருத்தினை ஈர்க்கவில்லையே என வருந்தினார். எனவே, தமிழ் இலக்கியங்களின் பெருமையை உலக இலக்கியங்களுடன் ஒப்பியல் நோக்கில் ஆய்ந்து வெளிப்படுத்தி வருகிறார். சிறப்பு மிகுந்த இவரது நூல்கள்பற்றிப் பார்ப்போம்.

கிழக்கும் மேற்கும்(1991)

இவரின் முதல் நூலான ‘கிழக்கும் மேற்கும்’ என்பதன் மூலம் மேற்கத்திய ஆங்கில இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டுத் தமிழ் இலக்கியச் சிறப்பை உலகறிய உணர்த்தினார். இந் நூலில் தொல்காப்பியர், பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர், டி.எசு. எலியட்டு ஆகியவர்களின் படைப்புகளை ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்துள்ளார். சங்க இலக்கியம் முதலான தமிழ் இலக்கியங்கள் மேலைநாட்டவர்க்கு அறிமுகமாகி இருந்தால் உலகெங்கும் அவை பரவியிருக்கும் என்பதால் தமிழ் இலக்கியச் சிறப்பையும் தமிழ்ப்புலவர்கள் ஆற்றலையும் உலகிற்கு ஒப்பியல் நோக்கில் வெளிப்படுத்தினார். அயல்நாட்டவரை மட்டுமல்ல தமிழின் பெருமையை அறியாத் தமிழர்களின் கண்களையும் இந்நூல் திறந்தது. ஆங்கிலம் தன் தாய்ப்பகுதியாகிய இங்கிலாந்துத் தீவில் செல்வாக்கு குறைந்தும் ஐரோப்பாவில் மிகக் குறைவாகப் பேசப்பட்டும் வந்த மொழி 1914 இல் வெளிவந்த நான்கு முதன்மை ஐரோப்பிய மொழிகளின் அகராதிகளில் ஆங்கிலம் இடம் பெறவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  உலகப் பொதுமொழியாகப் பரவும் பேறு பெற்றது என்கிறார். அப்படியானால் நாம் முயன்றால் தமிழை உலகப்பொதுமொழியாக வளர்க்கலாம் அல்லவா?

‘தமிழில் இலக்கிய மொழி பெயர்ப்புப் பணி’ என்னும் கட்டுரை இந்தியச் சூழலில் மொழிபெயர்ப்பின் தேவைபற்றியும் இதுவரை வெளிவந்துள்ளஆங்கில மொழி பெயர்ப்புகளின் நிறை குறைகள் குறித்தும் பிற மொழிகளில் மொழி பெயர்க்கவேண்டிய தமிழ் நூல்கள் குறித்தும் மொழிபெயர்ப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்தும் சுருக்கமாகச் சொல்கிறது.  மொழிபெயர்ப்புப் பணியில் சங்க இலக்கியங்களுக்கு முதன்மை அளிக்க வலியுறுத்துகிறார்.

இத் தொகுதியில் இடம் பெற்ற கட்டுரைகள் யாவும், இருபது நூற்றாண்டுகளுக்கு மேலான கால எல்லையைக் கொண்ட தமிழ் இலக்கியப்பரப்பை நமக்கு உணர்த்துவன. மேலும், பின்னர்ப் பேரா.ப.மருதநாயகம் எழுதிய நூல்கள் இவற்றை அடித்தளமாகக் கொண்ட விரிவாக்கங்களே.

(போற்றுதல்களும் தூற்றுதல்களும் : திறனாய்வுக் கட்டுரைகள்) Celebrations and Detractions : Essays in Criticism (Reliance Publishing House, New Delhi, 1993)

இந்நூலில் பின்வரும் பதினைந்து ஆங்கிலத் திறனாய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன:

1) இலக்கியமும் தத்துவமும், 2)ஆதாரன் (Hawthorne) என்னும் அமெரிக்கரின் (The Scarlet Letter), 3) The House of the Seven Gables என்னும் புதினத்தில் சேக்குசுபியரின் செல்வாக்கு, 4) புனைவியலும் வரலாறும், 5) மேத்தியூ அருனாலுடும் புனைவியல் கவிதையும், 6) உரைகல் அணுகுமுறை எனும் இலக்கியத் திறனாய்வு, 7) புனைவியல் காலத்தில் சேக்குசுபியர் நாடகங்கள்பற்றிய திறனாய்வு, 8) உரைகல் திறனாய்வும் மேத்தியூ அருனாலுடும், 9)எசுரா பவுண்டின் கவிதைகளில் வட்டிக்குக் கடன் தரல் எனும் பாடுபொருள், 10) எசுரா பவுண்டின் காட்சியுருக் கோட்பாடுகள், 11)ஏட்சு(W.B.Yeats)பற்றிய ஆங்கிலக் கவிதைகள்,12), டி.எசு.எலியட்டு எழுதிய The Cocktail Party எனும் நாடகம், 13) டி.எசு.எலியட்டின் கவிதையும் நாடகங்களும், 14)இலெசிலி ஃபீடுலரின் இலக்கியக்கோட்பாடு, 15)சவகர்லால் நேருவி்ன் மாந்தநேயம்.

(தொன்மத் தேடல்: இலெசுலி ஃபீடுலரின் திறனாய்வுக் கோட்பாடும் செயலாக்கமும்) Quest for Myth: Leslie Fielder’s Critical Theory and Practice  (1994)

அமெரிக்கத் திறனாய்வாளர், புதின ஆசிரியர், கவிஞர் இலெசுலி ஃபீடுலரின் திறனாய்வு நூல்களை இந்நூலில் ஆராய்ந்துள்ளார். இவர் நியூயார்க்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியவர். இவரது அமெரிக்கப் புதினங்களில் காதலும் இறப்பும் (Love and Death in the American Novel) என்னும் நூல் உலகப்புகழ் பெற்றது.பேரா.மருதநாயகம் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பயின்றபொழுது, புதினத்தின் தன்மை என்னும் தலைப்பில் இவர் நடத்திய பாடத்தை மாணாக்கராக இருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். தம்முடைய ஆசிரியருக்கு மிக விருப்பமான தொன்மத்திறனாய்வு(Myth Criticism) குறித்தும் அவருடைய பெருஞ்சிறப்புக்குரிய திறனாய்வு நூல்கள் குறித்தும் ஆறு உட்தலைப்புகளில் இந்நூலில் ஆய்வு நிகழ்த்தியுள்ளார்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்