(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 65/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

66/69

தமிழின் செவ்வியல் தகுதி(2012)

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச்செம்மொழித் தகைமையுடன் விளங்குகிறது. எனினும் கடந்த நூற்றாண்டு இறுதியில்தான் அதற்கான அறிந்தேற்பு கிடைத்தது. இருப்பினும் பலர் தமிழ்ச்செம்மொழித் தகைமையை முற்றுமாக அறியவில்லை. அனைவரும் அறிய ‘தமிழின் செவ்வியல் தகுதி’ என்னும் நூலைப் படைத்தார்.  இந்நூலில் தமிழின் தனிப்பெருங்கொடை என இறைச்சி, உள்ளுறைக் கோட்பாடுகளை நிறுவுகிறார். அத்துடன் சமற்கிருதத் தொனியும் வக்குரோக்குதியும் வெறும் படிகளே(நகல்களே) என்பதையும் தெளிவுபடுத்தி யுள்ளார்.  இந்நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசும் கிடைத்துள்ளது.

இந்நூல் ஒரு மீட்டுருவாக்கப் பதிப்பாகும். முதல் தொகுதி வெளிவந்தபோது தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்று இந்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. எனவே, அதில் தமிழின் செம்மொழிப் பண்புகள் வலியுறுத்தப்பட்டு, உலகம் தமிழைச் செம்மொழியாக ஏற்கப்பட வேண்டுமென்று வாதிடும் வகையில் எழுதியிருந்தார். அவற்றுடன் வேறு சில கட்டுரைகளையும் சேர்த்து இதை வெளியிட்டுள்ளார். எனவே, இந்நூலில் உள்ள சில கட்டுரைகள் இவரின் வேறு நூல்களிலும் உள்ளன.

இந்நூலில் 12 கட்டுரைகளில் தமிழின் செவ்வியல் தகுதிகளையும் உலக அறிஞர்களின் பார்வையில் தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களையும் காளிதாசன் பாடல்களில் உள்ள சங்கத்தமிழ்ச் செல்வாக்கையும் மண்ணுலக வாழ்வு குறித்த திருவள்ளுவர்,  பிளேட்டோ கருத்துகளையும் விளக்குகிறார்.

சங்கக்காலம் கட்டுரையில் முச்சங்க வரலாற்று உண்மைகளை உரைக்கிறார். சங்கக்காலத்தைக் கற்பனையாகக் கூறுவோருக்கும் அதன் காலங்களைப் பின்னுக்குத் தள்ளுவோருக்கும் தக்க மறுமொழிகள் அளித்துச் சங்கங்கள் உண்மையை உணர்த்துகிறார்.

நம் நாட்டில் வேண்டுமென்றே சமற்கிருத இலக்கியங்களை முற்பட்டதாகப் பொய்யுரைத்தும் தமிழ் இலக்கியங்களைப் பிற்பட்டதாக இட்டுக்கட்டியும் போலி நடுநிலையாளர்கள் உள்ளனர். இதுபோல் வெளிநாட்டிலும் சிலர் உள்ளனர். அவர்களில் ஒருவர், எருமன் திக்கென்(Hermen Ticken). இவர் ‘தென்னிந்தியாவில் காவியம்: பழந்தமிழ்ச் சங்கக்கவிதை(Kavya in South India: Old Tamil Cangam Poetry)’ என்னும் ஆங்கில நூலில் கி.பி.எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்பகுதிக்கு முன்னதாகச் சங்க இலக்கியம் தோன்றியிருக்கவில்லை என்றும் சமற்கிருத இலக்கியம் தமிழ்நாட்டில் நுழைந்த பின்னர்தான் சங்க இலக்கியம் தோன்றியிருக்கின்றது என்றும் இதுபோன்று பல பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார். அவற்றிற்குத் தக்க சான்றுகளுடன் மறுப்பு எழுதி நான்காம் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். அதன் தலைப்பு ‘சங்க இலக்கியம்: எருமன் திக்கெனின் பிதற்றல்கள்” என்பதாகும். எனவே, மேனாட்டாரின் சங்கஇலக்கியம் குறித்த கருத்துகளை எடுத்துக்கொள்வதுடன் நிற்கவில்லை. யாரேனும் எதிராகத் தவறாகக் கூறியிருந்தால் அவற்றையும் குறிப்பிட்டுத் தக்க மறுப்பு விளக்கமும் அளித்துள்ளார் பேராசிரியர் ப.மருதநாயகம். ஆய்வாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறையாகும் இது.

காய்தல் உவத்தலின்றித் தமிழின் செவ்வியல் தகைமை பிறமொழிகளால் எட்டப்படாத உயரத்தில் உள்ளதை இந்நூல் நமக்குப் புரிய வைக்கிறது. ஆனால், தமிழ்க்குடும்ப மொழியினர்  பொறாமையுற்றுத் தத்தம் மொழிக்கும் செவ்வியல் ஏற்பு வேண்டி அரசியலடிப்படையில் பெற்றும் விட்டனர் என்பது குறித்த மேனாட்டார் கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69)