(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 68/69 இன் தொடர்ச்சி)
பேராசிரியர் ப. மருதநாயகம்தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
69/69
நானும் என் தமிழும் – ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்த்தேடல். (2011)
கோவைஞானியின் தமிழ்நேயம் இதழின் 43 ஆவது வெளியீடாக இவரின் இந்நூல் வெளிவந்துள்ளது. தமிழிலக்கியச் சிறப்பை வெளிப்படுத்தும் மேனாட்டாரின கருத்துகளை மேற்கோள்களாக ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். இவர் பெற்ற ஆங்கிலக் கல்வி தமிழின் அருமை பெருமைகளைப் பாரறிய பரப்புவதற்கே என்பதைக் கொள்கையாகக் கொண்டு வாழ்கிறார் என்பதை இந்நூல் மூலம் அறியலாம். இவரது கல்விப்பணி, நூற்பணி, பிற படைப்புப்பணி முதலியவற்றை உணர்த்தும் தன் வரலாற்று நூல்.
இதன் முன்னுரையில் கோவை ஞானி அவர்கள், “அறிஞர் மருதநாயகம் கையெழுத்தில் 180பக்க அளவில் கட்டுரையை அனுப்பியிருந்தார்; பக்க வரம்பு கருதி, அவற்றில் சிலவற்றை அவரின் ஒப்புதலுடன் விட்டுவிட்டேன்; இன்னும் விரிவாக அவர் எழுத வேண்டிய இந்தக் கட்டுரையைப் பின்னர் நூல்வடிவில் அவரே வெளியிடுவார் என நம்புகிறேன்”; எனக் குறிப்பிட்டுள்ளார். பேரா.முனைவர் ப.மருதநாயகம் அவர்கள் தம்முடைய முழுமையான தன் வரலாற்று நூலை எழுதி வெளியிடுவது அவரின் தமிழ்த்தேடலை நன்கு அறிய வாய்ப்பாக இருக்கும்.
பேரா.முனைவர் ப.மருதநாயகம் எழுதிய பெரும்பான்மை நூல்களிலிருந்து அவரது கருத்துச் சுருக்கங்களைப் பார்த்துள்ளோம். வேண்டிய சில நூல்களைத் தந்துதவிய பேரா.ப.மருதநாயகம் ஐயாவிற்கும் அச்சுப்பதிப்பில் இருந்தாலும் வேண்டியதற்கிணங்கக் கணியச்சுப்படிகளைத்தந்துதவிய பதிப்பகத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தொடர் கட்டுரைகளில் என் குறிப்பில் அமைந்த வரிகள் தவிரப் பிற யாவும் நூல்களில் உள்ள நூலாசிரியர் கருத்துகளே. ஒவ்வொரு முறையும் அவர் பெயரைக் குறிப்பிடும் பொழுது படிப்பதற்கு இடராக இருக்கும் எனக் கருதிப் பேரா.ப.ம.நா.பெயரைக் குறிப்பிடவில்லை. முன்னரே படித்திருந்த நூல்களைத்தவிரப் பிற நூல்களைகடக் கடந்த ஆண்டே பெற்றாலும் முழுமையாகப் படித்து எழுதக் காத்திருந்ததால் காலத்தாழ்ச்சி ஏற்பட்டது. நூல்களைப் படிக்கும் பொழுது எதைச் சேர்ப்பது எதை விடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. எனினும் சில கருத்துகளை மட்டுமே கையாண்டுள்ளேன். அவரது நூல்களை நேரடியாகப் படித்துப் பயனுறுமாறு அன்பர்களை வேண்டுகிறேன்.
அவரது நூல்களில் இடம் பெறாக் கட்டுரைகள், கருத்தரங்கக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் முதலியவற்றை அறிய நேர்ந்தால், இவரது நுண்மாண் நுழைபுலம் மேலும் தெற்றென விளங்கும். இலக்கியங்களின் சிறப்புகளை மட்டுமல்ல, மறைக்கப்பட்ட தமிழ் குறித்த உண்மைகளை வெளிக்கொணர்தல், தமிழுக்கு உட்பகைவர்கள் செய்த சிதைவுகளையும் கேடுகளையும் உணரச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தல், சமற்கிருதத்தின் உருவாக்கப்பட்ட பொய்யான உயர்வு மாடங்களை உடைத்தெறிதல், சமற்கிருதமே தமிழுக்கு மூலம் என்று மக்களை ஏமாற்றி வந்ததை ஆய்வறிஞர்கள் வாயிலாகக் கிழித்தெறிதல் முதலான தம் ஆய்வுப்பணிகள் மூலம், தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
தாங்கள் போற்றும் / அறிந்துள்ள பேரா.ப.மருதநாயகத்தின் முழு ஆய்வுப்புலமையை அறிய இக்கட்டுரைத்தொடர் உதவியதாகப் பெரும்பான்மையர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாதிப்பற்றின் காரணமாக மூவர் இவர் காழ்ப்புணர்ச்சியுடன் கருத்துகளை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். உண்மையில் அத்தகைய தவறான கண்ணோட்டம கொண்டவர்கள்தாம் காழ்ப்புணர்ச்சியில் நோக்குகின்றனர்.
ஆனால் பேரா.ப.மருதநாயகம் ஆழ்ந்து படித்து, நடுவுநிலைமையுடனும் துணிவுடனும் சொல்ல வேண்டிய கருத்துகளைச் சொல்லி ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார். பதவி நலன்களுக்காக உண்மையை மறைக்கும் கயமை இவரிடம் இல்லை.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
(திருவள்ளுவர், திருக்குறள் 397)
என்பதற்கு எடுத்துக்காட்டாக தம் கல்வியையும் ஆய்வையும் தொடரும் ஈடுபாட்டாளராகத் திகழ்கிறார்.
இன்றும்கூடச், சமற்கிருத நூல்களே தமிழ் நூல்களுக்கு மூலம் என்னும் பொய்யான குப்பைக் கருத்துகளைத் தாங்கி நூல்கள் வந்து கொண்டுள்ளன.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(திருவள்ளுவர், திருக்குறள் 423)
என்னும் பொதுமறைக்கிணங்கச் சொல்லியவர் யார் என்னும் பின்புலம் பாராமல் சொல்லப்பட்ட கருத்துகளின் உண்மைத் தன்மையை உறுதியாக எடுத்துரைத்து வருகிறார்.
தமிழின் தொன்மையையும் முதன்மையையும் தாய்மையையும் முன்னரே அறிஞர்கள் கூறியிருந்தாலும் அவை இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அவற்றையும் குன்றின்மேலிட்ட விளக்காக ஏற்றி வருகிறார். இவரது படைப்புகளில் ஆங்காங்கே மொழிபெயர்ப்புக் கவிதைகளும் மேற்கோள்களும் இடம் பெறுகின்றன. இவற்றின் மூலம் இவரின் சிறப்பான மொழிபெயரப்புத் திறனும் கவிதை ஆக்கச் சிறப்பும் வெளிப்படுகின்றன. இவரின் திறமான திறனாய்வும் ஒப்பற்ற ஒப்பாய்வுப் புலமையும் இவரது ஆராய்ச்சி முறைக்குப் பிறரை ஈர்க்கின்றன.
ஏற்கெனவே கூறியவாறு தமிழைப் போற்றுவதற்காக பேரா.முனைவர் ப.மருதநாயகத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். இவரது நூல்களும் நூற்பகுதிகளும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக வைக்கப்பட வேண்டும்.
ஆய்வுலகக் கலங்கரை விளக்கம் பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம் மங்காப்புகழுடன் நூறு ஆண்டுகள் கடந்தும் வாழியவே!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment