நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 16
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 15. தொடர்ச்சி)
3. ஔவையார் (தொடர்ச்சி)
இனித் தமிழ்நாவலர் சரிதைக்கண், ‘பொய்யாமொழியார் பாதியும் ஔஒளவையார் பாதியுமாகப் பாடிய வெண்பா’ என்னுந் தலைப்பின்கீழ்,
‘தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணா வதுஞ்சோழ மண்டலமே–பெண்ணாவா
ளம்பர்ச் சிலம்பி யரவிந்தத் தாளணியுஞ்
செம்பொற் சிலம்பே சிலம்பு.’
என ஒரு பாட்டுக் காணப்படுவது. இஃது அம்பர்நகரத்திருந்த சிலம்பி என்பாளொருத்தியைப் புகழ்ந்து பாடியதாகும். இதனான் இவ்வௌவையார் பொய்யாமொழியார் காலத்தும் இருந்தனரென்பது அறியப்படுவது. பொய்யாமொழியார் சங்கம் ஒழிந்த காலத்தை அடுத்திருந்த புலவரென்பது அவர் சங்கப்பலகை மிதப்பப் பாடிய,
‘பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையன்றிப்
பாவேந்த ருண்டென்னும் பான்மைதாந்–மாவேந்தன்
மாற னறிய மதுரா புரித்தமிழோர்
வீறணையே சற்றே மித.‘ (தமிழ் நாவலர் சரிதை)
என்னும் பாடலான் ஊகித்தலாகும். இப்பாட்டின்கண் உள்ள, ‘மதுரா புரித்தமிழ்’ என்னுந் தொடர், இவர் பாடிய ‘மதுரா புரித்தமிழ் தேர்வாணன் மாறை வனத்துவந்தே’ என்னும் வாணன்கோவையிலும் பயின்றமை காண்க. கடைச்சங்கம் உக்கிரப்பெருவழுதி இறந்தபோது ஒழிந்ததாகும். ஔவையார் உக்கிரப்பெருவழுதி காலத்தும் அவனுக்குச் சிறிது முற்பட்ட அதிகமான், பாரி என்னும் வள்ளல்கள் காலத்தும் இருந்தனரென்பது முற்காட்டிய இவரது பாடல்களான் நன்கறிந்தது. இவற்றால் அதிகமான் காலமுதல் பொய்யாமொழியார் காலம்வரை ஔவையார் இருந்தாராக விளங்கும். மக்கள் யாக்கைக்குப் பேரெல்லையாயுள்ள யாண்டு நூறும் ஔவையார் புக்காராகக்கொண்டு, உக்கிரப்பெருவழுதி துஞ்சுவதற்கு முன்னர் முப்பதியாண்டும், துஞ்சிய பின்னர் எழுபதியாண்டும் இருந்தனராகக் கருதி இவ் வௌவையாரதிறுதிக்காலத்துப் பொய்யாமொழியார் இருந்தனரெனக் கூறுதல் பொருந்திற்றாகும். இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் காலத்து வள்ளல்கள் எழுவரும் மாய, வஞ்சி, மதுரை, உறந்தை என்னும் மூன்று தலைநகர்களும் வறியவாயொழிந்தன என்பது சிறுபாணாற்றுப்படையாற் புலப்படுவது.
அவ்வாறே பெருஞ் சித்தனார் காலத்தும் வள்ளல்கள் எழுவரும் மாய்ந்தன ரென்பது அவர் குமணனைப்பாடிய புறப்பாட்டான் (185) அறியப்படும். இவற்றால் வள்ளல்கள் எழுவருக்குப் பின்னர் வஞ்சி, மதுரை, உறந்தை இந்நகர்கள் வறியவாயொழிந்ததன் மேலும், நல்லிசைப்புலவர் பல ருளராயினர் என்பதுந் தெளியப்படும். இவர்களுடன் ஔவையாரும் இருந்தனராவர். பொய்யாமொழியார் காலத்தை இறப்பப் பிற்பட்டதெனக்கருதி, ஔவையார் காலத்தை உலகியற்குமாறாக நெடிது நீட்டித்தலினும் பொய்யாமொழியார் காலத்தையே முற்பட்டதெனக் கோடல் ஈண்டைக் கியையுடைத்தாகும். அப்பொய்யாமொழியாரது செய்யுள் வழக்கினை உற்றுநோக்கினும் இதுவே புலனாகும்.
தமிழ்நாவலர் சரிதையுடையாரும் ‘ஔவையார் பாதியும் பொய்யாமொழியார் பாதியுமாகப் பாடியது’ எனக் கூறுதலானும் ஔவையாரையடுத்தே பொய்யாமொழியாரை வைத்தோதுலானும் இதனுண்மையறியலாம். இருவரும் முருகவேள் கேட்கப் பாடுதலானும், கோவைபாடுதலானும் ஒற்றுமையுடையராதலுங் காண்க.
பண்டைத் தண்டமிழ் நூல்களையே பெருந்துணையாகக் கொண்டு நன்காராய்ந்தமட்டில் இவர் பொய்யாமொழியார் காலத்துக்கும் பிற்பட்டிருந்தனரென்பது சிறிதும் புலப்படவில்லை. இனி இவர் அதிகமான்பால் நெல்லிப்பழம் பெற்றபோது, ‘சாத னீங்க வெமக்கித் தனையே’ எனவும், ‘வன்கூற்றை நாவை யறுப்பித்தா யாமலகந் தந்து’ எனவும் பாடுத[*]லானும், தத்துவங் கூறியபோது ‘என்றானுஞ் சாகாமற் கற்பதே கல்வி’ எனவுரைத்தலானும் இவர் சாகாமல் நெடுங்காலம் வாழ்ந்தனரெனக் கூறுப. மற்றுந் தமிழ்நாவலர் சரிதையில், ‘சேரன் கயிலைக்குப் போகிறபோது ஒளவையாரை அழைக்க, அவர் விநாயகபூசை பண்ணித் தாமதமாயிருக்க, விநாயகன் அன்று துதிக்கையாலே எடுத்துக் கயிலையில் விடச் சேரனைக் கண்டு பாடியது’ என்னுந் தலைப்பின் கீழ்,
‘மதுர மொழியி னுமையாள் சிறுவன் மலரடியை
முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி
யதிர வருகின்ற யானையுந் தேரு மதன்பின்வருங்
குதிரையுங் காதம் கிழவியுங் காதங் குலமன்னனே’
என்னும் பாடலொன்று காணப்படுவது. இதன்கட் கூறப்பட்ட சேரன், சேரமான் பெருமாணாயனார் என்ப. இக்கதை பெரிய புராணத்துக் காணப்பட்டதில்லையாதலின், இதனுண்மை எம்மனோரா லறிய லாவதில்லை. இவற்றதுண்மை எவ்வாறாயினும் இவையெல்லாம் இவர் இறப்பமுதியோராய் நெடி தாயு ளிருந்தனரென்பதுமட்டில் நண்குணர்த்துவதாகும். யாப்பருங்கல விருத்திகாரர், ‘மிக்குங் குறைந்தும்’ என்னுஞ் சூத்திரவுரையில்,
‘உடையராச் சென்றக்கா லூரெல்லாஞ் சுற்ற
முடவராக் கோலூன்றிச் சென்றக்காற் சுற்ற
முடையானும் வேறு படும்.’
என்னும் பாடலை ஔவைபாட்டென்றுகொண்டு, ஆரிடப்போலிக்கு எடுத்துக்கூறினார். இதனாலும் ஒளவையார் இறப்ப முதுமை யெய்தியிருந்தனரெனவும், அக்காலத்துத் தம் இளமையிற்போலத் தாங்குவாரின்றித் தளர்ந்தன ரெனவும் ஊகிக்கத்தகும். இவரது நெடிதாயுட்காலத்து, இவர் திருவாய்மலர்ந்தருளிய பாடல்கள் எண்ணிறந்தனவாம்.
அவற்றுள் ஒரு சிலவே இப்போது உளவாவன. அவை நற்றிணையினும் குறுந்தொகையினும் நெடுந்தொகையினும் புறநானூற்றினும் தமிழ்நாவலர் சரிதையினும் தொகுக்கப்பட்டன சிலவும், தொல்லுரையாசிரியர்களா லாங்காங்கு மேற்கோள் காட்டப்பட்டன சிலவும், அசதிக்கோவையிற் சிலவும், மூதுரை முப்பதும், [*] ‘ அறஞ்செய விரும்பு, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பன முதலாகவரும் அறவுரைகளும் பிறவுமாம். இவரது திருப்பாடல்கள், நற்றிணையிற் கோக்கப்பட்டவாற்றாற் பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதியாலும், குறுந்தொகையிற் கோக்கப்பட்டவாற்றாற் பூரிக்கோவாலும், நெடுந்தொகையிற் கோக்கப்பட்டவாற்றால் உக்கிரப்பெருவழுதியாலும் உருத்திரசன்மராலும் பெரிதும் பாராட்டப்பட்டன என்பது நன்கு புலனாகும். ஈண்டிய பல்புகழ்ப் பாண்டியர் பலரும்,
[* இஃது இக்காலத்து ‘ஆத்திசூடி’ என வழங்குவது.]
இச்சங்கத்திற்குக்கிடைத்த உரையொடுகூடிய இந்நூற்பழைய ஏடொன்றில், இதுவே கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயரான் வழங்கப்பட்டு முள்ளது. இந் நூல்முகத்தேதான்
கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை
யென்று மேத்தித் தொழுவோம் யாமே.
என்னும் கடவுள் வாழ்த்து எழுதப்பட்டு, உரை கூறப்பட்டுள்ளது. இந் நூலிறுதியில்,
கொன்றைவேய்ந் தோனுரையைக் கொன்றைவேய்ந் தோனருளா
னின்றமிழார் வேந்த ரிருங்குழுவே–யொன்று
மறியா துரைத்தே னவையா ருரையாற்
பிறியாத நார்ப்பூப் பிணை.
திருத்தகு கேள்வி யுருத்திரசன்மரும், வான்றோய் நல்லிசைச் சான்றோர் பிறரும், மேம்படுத் தேத்துந் தேம்படு கல்விக் கடலாய் விளங்கிய இவ் வருந்தமிழ்ச்செல்வியாரின் நல்லிசைப்புலமையை யாமோ எடுத்துரைக்குந் தகுதி யுடையேம். இங்ஙனம் கூறியன கொண்டு கூறாதனவற்றையும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.
என்னும் வெண்பா வொன்றுள்ளது. அதன்பின் ‘அன்னையும் பிதாவும்’ என்னும் பெயரில், இக்காலத்துக் ‘கொன்றைவேந்தன்’ என வழங்கும் நூல் உரையுடன் எழுதப் பட்டுள்ளது. அதன்றலைப்பில்,
‘அன்னையும் பிதாவு மென்னு முன்னுரைப்
பெயருடை நூற்கும் பெயர்த்துரை யுரையென
நல்லோர் சொல்லு நல்லுரை கேட்டுச்
சொல்லெனச் சொலுஞ்சொற் கிள்ளை போல
வல்லவர் முன்னுரை வழங்குவன் மாதோ.’
என்று வரையப்பட்டுள்ளது. இந்நூல்களிற் கண்ட பாடபேதங்களும் உரைப்பேதங்களும் மிகப் பலவாம். ‘உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு’ என இக்காலத்துவழங்குவது, ‘உண்டி சுருங்கிற் பண்டிக் கழகு’ என அவ்வேட்டின்கண் உள்ளது. இவ்வேடு, திருநெல்வேலி வித்வான் மகா-ள-ள-ஸ்ரீ பால்வண்ணமுதலியாரவர்கள் நன்முயற்சியாற் கிடைத்தது.
( ஔவையார் முற்றிற்று.)
(தொடரும்)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
இரா.இராகவையங்கார்
No comments:
Post a Comment