(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 1/5 தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

பின்னிணைப்பு

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

2/5

  • 3. அறிஞர் பரிதிமாற்கலைஞர்

பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் முடியரசன் ஆகியோர் பாடலடிகளுடன் அறிஞர் பரிதிமாற்கலைஞர் குறித்த கட்டுரையைத் தொடங்கியுள்ளார். இலக்கிய இலக்கண நாடக அறிஞரான பரிதிமாற்கலைஞர் தமிழே உயர்தனிச் செம்மொழியென்று நாளும் முழங்கியதோடு அமையாமல் அதற்குத் துறைதோறும் செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் தொடங்கி வைத்தார் என்பதைப் பாராட்டுகிறார் ஆசிரியர்.

ஆசிரியர் மேற்கோளாகக் காட்டும் பரிதிமாற்கலைஞரின் வரிகள், அவரைத் தமிழாய்ந்த நற்றமிழறிஞராக நமக்குக் காட்டும். இதனை உணராத சிலர்தான் அவரை வேறுவகையாகக் கூறுவர். காலம் உள்ளளவும் தமிழுலகம் போற்றப்பட வேண்டிய அறிஞர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் பரிதிமாற்கலைஞர் என்பதை  ஆசிரியரின் கட்டுரை நன்கு உணர்த்தும். 

தமிழை உயர்தனிச் செம்மொழி என ஆணித்தரமாக அறிஞர் பரிதிமாற்கலைஞர் தெரிவித்த பலவற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறார். “தொன்றுதொட்டுத் தமிழ்மொழி ‘செந்தமிழ்’ என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் ‘உயர்தனிச் செம்மொழி’ யேயாம் என்பது நிச்சயம்.” என முடியும் கட்டுரைப்பகுதி மூலம் உயர்தனிச் செம்மொழி எனத் தமிழுக்குக் குரல் கொடுத்த அவர் முழக்கத்தை நமக்கு எடுத்துத் தந்துள்ளார்.

ஆரியரின் நடுவுநிலையின்மையைப் பல இடங்களில் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

“தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே எழுதப் படிக்கத் தெரியும். ‘எழுத்து’, ‘சுவடி’ என்பன தனித்தமிழ்ச் சொற்களாதலும் காண்க. இதனால் அகத்திய முனிவர் தமிழ்ப்பாசைக்கு நெடுங்கணக்கு வகுத்தனர் என்பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாசைக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்திக் கொண்டனரென்பதும் பொருந்தாமை யறிக”. (தமிழ்மொழியின் வரலாறு, பக்கம் 25)

“தமிழர் இடத்திருந்த பல அரிய விசயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தனபோலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்”(வடமொழி வரலாறு, பக்கம்27)

வடசொற்கள் தமிழில் எவ்வாறு புகுந்தன என்றும் வடமொழி பேச்சுவழக்கற்றுப் போனமையால் தமிழ்ச்சொற்கள் ஏராளமாகக் கலக்க வழியில்லாமல் போனது என்றும் மணிப்பிரவாளம் ஆபாச நடை யென்றும் வடமொழி இலக்கணத்தைக் கலந்து தமிழ் இலக்கணத்தை வகுக்கப் புகுந்தாரின் செயலும் கூற்றும் ஏற்புடைத்தன்று என்றும் வடமொழி இலக்கணத்தைக் காட்டிலும் தமிழ்மொழி இலக்கணம் எவ்வாறெல்லாம் சிறந்து விளங்குகின்றது என்றும் அகப்பொருளும் அதன் துறைகளும் புறப்பொருளும் அதன் துறைகளும் இவ்விருவகைப் பொருளின் இயைபுகளும் வடமொழியினின்றும் என்றென்றும் கிடைத்தல் இயலாத அரிய தனித்தமிழ்ச் சிறப்புகள் எனவும் பழைய இசைத்தமிழ் நூல்கள் எவ்வாறு அழிந்தன என்றும் நாடகத்தமிழின் தோற்றம் வீழ்நிலம குறித்தும் அறிஞர் பரிதிமாற்கலைஞர் தெரிவித்த கருத்துகளை எல்லாம் எடுத்துரைத்துள்ளார்.

பரிதிமாற்கலைஞர் மதிநுட்பம் நூலோடு உடையவராய் இருந்ததோடு கவிதையுணர்வு மிக்கவராய், உயர்ந்த கவிதையைத் தாழ்ந்ததினின்றும் தரம் பிரித்துக் காணுதலிலும் வல்லுநராய் இருந்தமைக்கு அவர் சொல்லணி, பொருளணிபற்றிக் கூறும் முடிவுகள் மூலம் நம்மை அறியச் செய்துள்ளார்.

மேற்புல அறிவியல் அறிஞர் ஆக்கெல்(Hoekel), இலெமூரியா நிலப்பரப்பைப்பற்றிச் சொல்லியுள்ளவற்றைக் கூறி அதனை வலியுறுத்தும் இலக்கியச் சான்றுகளைத் தருவதையும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்தும் தமிழரசு கணக்கறிவின் உயர்வு குறித்தும் பரிதிமாற்கலைஞர் பல கட்டுரைகளில் விளக்கியுள்ளதையும் நமக்கு ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

சொல்லின் கூறுகளும் சொற்களும் சொற்றொடர்களும் நாளடைவில் தத்தமக்குரிய பொருள் தன்மை விரித்தும் குறைத்தும் வேறுபட்டும் போவதைப் பரிதிமாற்கலைஞர் சுட்டிக்காட்டுனவற்றை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

தமிழ்மொழியில் ஏன் சீர்திருத்தங்கள் தேவை என்பதையும் எத்தகைய சீர்திருத்தங்கள்  செய்யப்படவேண்டும்  என்பதையும் அறிவுறுத்தும் கருத்துகளை அவரின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகக் கருதி  ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார்.

தமிழில் அகரமுதலிகள் தேவை பற்றியும் அகராதி எவ்வாறெல்லாம் அமையவேண்டும் என்பதையும் தமிழ் அகராதி கட்டுரை மூலம் பரிதிமாற்கலைஞர் உணர்த்துவதை ஆசிரியர் உரைக்கிறார்.

உள்நாட்டு மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகளினின்றும் நீக்கிவிட வேண்டுமென்ற பேச்சு நிலவியது. தமிழை நீக்கி அதனிடத்தில் வடமொழியை வைத்துப் பயிற்றுவிக்க வேண்டுமென்று சிலர் முயன்றனர். அப்பொழுது பரிதிமாற்கலைஞர் உள்ளத் துடிப்புடன் கொதித்தெழுந்து ‘சுதேசப்பாசை நீக்கம்’, ‘சுதேச பாசையாக்கம்’, ‘சர்வகலாசாலை விசாரணை’ என்னும் தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி மக்களிடையே விழிப்புணர்வைஏற்படுத்தினார்.

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால் பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்ப்பால் பல்கலைக்கழகம் அம்முடிவை கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னைப் பல்கலைக்கழக விசாரணைக் குழுவின் தலைவர், உள்நாட்டு மொழிகள் கெளரவம் சான்றன அல்லவென்றும் இவற்றைக் கிரேக்க, இலத்தீன் மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவறாகுமென்றும் இவற்றில் தூயநூல் தொகுதிகள் இல்லாமையானும், இவை காலத்திற்கேற்ப வளர்ச்சி பெறாமையானும் நாளடைவில் அழிந்து போகக்கூடியவை யாதலானும் இவற்றைப் பல்கலைக்கழகத் தேர்வுகட்குக் கற்றதற்கு உரியனவாய் அமைக்காமல் அறவே ஒழித்து விடல் வேண்டுமென்றும் பரிந்துரை செய்தார். இதற்கு மனம்நொந்து பரிதிமாற்கலைஞர் விடையிறுத்தார்.

“அந்தோ! வாய் கூசாது தம் உட்கிடை உரைத்தார். என்னே இவர்தம் கருத்து! எல்லாப் பாசைகட்கும் பெருந்துணைவராய் நின்று உதவ வேண்டிய தலைவரே பேதுற்றுப் பிறிதுபட உரைத்தால் என் செய்வது!”

“.. ..  .. .. கெளரவம் சான்றனவற்றை அத்தகைய அல்லவென்று உரைத்தல் பெற்ற தாயை மலடி யென்று உரைத்தலோடு ஒக்கும் ஆதலானும் வடமொழிபோல் அழிந்துபடாது தக்கன தங்கல்(survival of the fittest) முறைப்படி இவை யனைத்தும் மிக்க பயன்பாடு உடையவாய் நிற்றலானும் பிறவாற்றானும் வித்தியா விசாரணைத் தலைவர் உரைத்தது போலியென்று ஒதுக்கற்பாலதாமாறு தெற்றென விளங்கும்”  என்பதே பரிதிமாற்கலைஞரின் வாதம்.

கிரேக்கம், இலத்தீன் ஆகியவற்றோடு வடமொழியையும் செம்மொழியென்று சேர்த்தவர்கள் தமிழைச் சேர்க்காதது மன்னிக்க முடியாத குற்றமென்று பரிதிமாற்கலைஞர்  வெகுண்டெழுந்து சாடியுள்ளதையும் நமக்கு ஆசிரியர் அளித்துள்ளார்.

“தமிழை நீக்கி அதனிடத்து வடமொழியை வைத்தலால், பிராமணர் ஆயினார்க்கு விசேடமான அனுகூலமும் ஏனையோர்க்கு விசேடப் பிரதிகூலமும் விளையுமென்க. . . . . எனவே, தென்மொழி நீக்கமும் வடமொழி ஆக்கமும் பட்ச பாதகமாக முடிகின்றமை காண்க” எனப் பரிதிமாற்கலைஞர், பிராமணர்க்கு நன்மை விளைவிப்பதற்காகத் தமிழை நீக்கிச் சமற்கிருதத்தைத் திணிப்பதற்கே என நடுவுநிலையுடன் ஆராய்ந்து தெரிவிக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை நீக்காமல் போற்றத்தலைப்பட்டதும் “தமிழ்ப்பெருந்தெய்வத்தை வாழ்த்தி இறைவர்க்குத்

தெள்ளேணம் கொட்டுவே மாக” என்கிறார் அவர்.

தனிப்பாசுரத் தொகை நூலில் பல பொருள்பற்றிய சிறிய எளிய தனித்தனிப்பாடல்களைப்பரிதிமாற்கலைஞர் அளித்துள்ளார் அவற்றில் சிலவற்றை ஆசிரியர் நமக்குத் தந்துள்ளார். அறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை, தனிப்பாயிரத்தொகையின் சிறப்புப் பாயிரத்தில் பரிதிமாற்கலைஞரைக் கலைவலாளன்,குணக்குன்று, கற்றாரும் கல்லாரும் முதியோரும் இளையோரும் போற்றும் கவிஞன் என்றும் பாராட்டியுள்ளார். உயர்தனிச் செம்மொழிக்கு உரத்த குரல் கொடுத்த முன்னோடி மூதறிஞர் பரிதிமாற்கலைஞரை எவ்வாறு பாராட்டினாலும் தகும் என்னும் உண்மையைக் கூறிக் கட்டுரையை முடித்துள்ளார் ஆசிரியர்.

  • 4.தனித்தமிழ்க் கடல் மறைமலையடிகள்

தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆழங்கால்பட்ட தனித்தமிழ்க் கடல் மறைமலையடிகள் குறித்தது நான்காம் கட்டுரை.

இலக்கியத்தில் மட்டுமின்றிச் சமயம், தத்துவம், வரலாறு, ஆய்வியல், பண்பாட்டியல், மருத்துவம், மறைபொருள் ஆகிய துறைகளில் எல்லாம் கடும் பயிற்சி மேற்கொண்டு 54 அரிய நூல்களை அவர் படைத்தார். அடிகளார் தமிழுக்குச் செய்த தொண்டுகளிலெல்லாம் தலையாயது அவர் தோற்றுவித்து வளர்த்த தனித்தமிழ் இயக்கமே என்கிறார் ஆசிரியர்.

“‘தூய தமிழ்’ என்ற பெயரில் பொருத்தமற்ற சொற்களை அவர் எச்சூழலிலும் பெய்வதில்லை. தக்க சொற்களைத் தக்க இடத்தில் இணைத்து முருகிலின்பத்தைக் கூட்டும் நடை அவருடையது. கட்டுரையானாலும் கதையானாலும் இதனை அவர் செம்மையாகச் செய்திருக்கக் காணலாம்” என்கிறார் ஆசிரியர்.

ஒரு மொழி வளரவேண்டுமானால் பிற மொழிக்கலப்பும் மாற்றமும் தேவையென்பார்க்கு அடிகளார் தந்த மறுமொழி பாராட்டுக்குரியது என்கிறார் ஆசிரியர். சில விளக்கங்களை அளித்துத், “தம் நிலை குலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு அதன்படி நமது அருமைச் செந்தமிழ் மொழியும் தனது தூய நிலை குலைந்து மாறுதல் அடையவேண்டுமென்று உரைப்பது அறிவுடையோரால் ஏற்றுக்கோடற்பாலமாமோ?” என்று அடிகளார் குறிப்பதைக் கூறுகிறார்.

தனித்தமிழைப் பரிந்துரைத்ததும் பேசியதும் எழுதியதும் அடிகளார் செய்த அரும்பணியாயினும் அதுமட்டுமே அவர் வாழ்நாள் பங்களிப்பன்று என்கிறார் ஆசிரியர். அடிகளாரின் மொழிபெயர்ப்புப் படைப்புச் சிறப்புகள், புதின இலக்கியத்திறன்கள், மாணிக்கவாசகர் காலம் முதலிய கால ஆராய்ச்சிப் படைப்புகள், பட்டினப்பாலை ஆராய்ச்சி, முல்லைப் பாராட்டாராய்ச்சிபோன்ற சங்க இலக்கிய ஆராய்ச்சிகள், சொற்பொழிவுகள், பலபொருள் பற்றிய கட்டுரைகள் முதலியவற்றின் மூலம் செந்தமிழை எவ்வாறு கையாளுவதென்பதில் தமிழறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்பதையும் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

 இலக்குவனார் திருவள்ளுவன்

உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

ப.மருதநாயகம்

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600 100

விலை உரூபாய் 500/-