(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 3/5 தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
பின்னிணைப்பு
உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்
4/5
- 10. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்
பத்தாம் கட்டுரை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் குறித்தது.
“தேவநேயப் பாவாணர், தமிழ்மொழியே முதல் மாந்தன் பேசிய மொழியென்றும் தமிழினமே முதலில் தோன்றிய மாந்த இனமென்றும் குமரிக் கண்டமே மாந்தர் முதலில் வாழ்ந்த நிலப்பரப்பென்றும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டிற்கு வடமொழி இலக்கணம் பண்பாடு ஆகியவை பெரிதும் கடன்பட்டிருக்கின்றனவென்றும் தக்க சான்றுகளுடன் நாளும் முழங்கி வந்தவர். … மொழியியல் துறைக்கும் தமிழ்மொழி ஆய்விற்கும் அவரது பங்களிப்பு பெருமைக்கு உரியது எனக் கூறுகிறார் ஆசிரியர். உலக முதன்மொழி ஆய்வாளர் இலெவிட்டு (Stephen Hillyer Levitt) தேவநேயன் ஒரு மொழியியல் விற்பன்னர் … உலகெங்குமுள்ள விற்பன்னர்களால் மதிக்கப்பட வேண்டியவராகிறார். “தமிழ்மொழியின் பெருமையை வேர்ச்சொல் ஆய்வின் மூலம் எடுத்துரைத்த பாவாணர் தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியற்றின் உயர்வைத் தமதுதமிழ்இலக்கிய வரலாற்றின் மூலம் உலகிற்கு உணர்த்தினார்” என்கிறார் ஆசிரியர்.
- 11. பேராசிரியர் கைம் இராபின்
பதினோராம் கட்டுரை பேராசிரியர் கைம் இராபின் குறித்தது.
இசுரேல் பல்கலைக்கழகத்தில் பணி செய்த யூதப் பேராசிரியராகிய கைம்ராபின் ஓர் அரிய ஆங்கிலக் கட்டுரையின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளிலேயே தமிழ் செம்மொழித் தகுதியுடையது என்பதை ஐயத்திற்கிடமின்றி நிறுவியுள்ளார். …. நீண்ட காலமாக வழக்கொழிந்திருந்த எபிரேய மொழிக்குப் புத்துயிர் தந்த பின் அது கல்லூரிகளிலும் பாடமொழியாகிறதென்றால், சொல் வளம் மிக்கதும் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து உயிர்த்துடிப்புடன் செயல்படுவதுமான தமிழ் ஏன் பயிற்றுமொழியாக இருத்தல் கூடாது என்று வினா எழுப்பியதை ஆசிரியர் நமக்கு எடுத்துரைக்கிறார்.
தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் தமிழகத்து முச்சங்கங்கள் சைவர்கள் கட்டிவிட்ட கற்பனைக் கதையென்றும் கடைச்சங்க இலக்கியங்களெல்லாம் கி.பி. ஆறு, ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் எழுதப்பட்டவை யென்றும் வெற்றியோடு பரப்புரை செய்துகொண்டிருந்த காலத்தில் தமிழ் அக இலக்கிய மரபு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று நிறுவும் கட்டுரையைக் கைம் இராபின் எழுதியது அவர்களுக்கு விடுக்கும் அறைகூவலாகும். அதற்கு எதிர்வினை ஏதும் செய்யாது அவ்வறிஞர்கள் வாயடைத்துப் போயினர் என்பதைச் சொல்லத் தேவையில்லை என்று கட்டுரையை முடிக்கிறார் ஆசிரியர்.
- 12. அ. கி. இராமானுசன்
பன்னிரண்டாம் கட்டுரை அறிஞர் ஏ.கே.இராமானுசன் குறித்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளையும் கற்றறிந்த அறிஞர் அ.கி.இராமானுசன், ஒப்புமைக் கருத்துகள் மூலமும் ஆய்வுக் கருத்துகள் மூலமும் ஆய்வறிஞர்கள் கருத்துகள் மூலமும் மொழிபெயர்ப்புகள் மூலமும் உயர்தனிச்செம்மொழிக்குக் குரல் கொடுத்துள்ளார்.
குப்புதர்களின் காலத்தில் சமற்கிருதமும் பிராகிருதமும் பேச்சுவழக்கில் இல்லை, கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் காளிதாசன், அரசவையில் சமற்கிருதத்தையும் குடும்பம், அன்றாட நடவடிக்கை ஆகியற்றில் உஞ்செயின் கிளைமொழி ஒன்றையும் பயன் படுத்தியிருப்பார், இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் பத்தாம் நூற்றாண்டு வரை எந்த விதமான இலக்கிய வடிவமும் இல்லை எனச் சமற்கிருதத்தோடு ஒப்பிட்டுத் தமிழின் சிறப்பை விளக்கியுள்ளார்.
அறிஞர் தானியல் இங்கால்(Daniel H.H.Ingalls) சமற்கிருதம் ஒரு குடும்ப மொழியாக இருந்ததில்லை என்றும் தொடர்பாகவும் கூறிய கருத்துகளையும் சமற்கிருதத்தின் “அகில இந்தியத் தன்மை”பற்றிய பேச்சிற்கு வரலாற்று உண்மை அறிந்த அறிஞர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதையும் மொழியியல் பேராசிரியர்கள் ஏ.எல்.பெக்கர் (A.L.Becker), கீத்து தெயிலர் (Keith Tailor) ஆகியோருடனான கலந்துரையாடலில் உலக மொழி இலக்கண நூல்களிலெல்லாம் தொல்காப்பியத்தை ஒத்தது வேறில்லை என்று உரைத்ததையும் அறிஞர் இராமானுசன் விளக்குவதை ஆசிரியர் நமக்கு எடுத்துத் தருகிறார்.
மொழிபெயர்ப்புகள் மூலமாகச் சங்க இலக்கியங்களை உலக அறிஞர் அரங்கிற்குக் கொண்டு சென்றவர்களில் பெரும்பங்களிப்பு செய்தவர் அ.கி.இராமானுசன் என ஆசிரியர் பாராட்டுகிறார். சங்கக் கவிதையானது பிற இந்தியமொழிக் கவிதைகளினின்றும் முற்றிலும் வேறுபட்டதென்பதையும் உலகிற்கு உணர்த்தியவர் அ.கி.இராமானுசன் என்கிறார் ஆசிரியர். தமிழ்,கன்னட இலக்கிய மொழிபெயர்ப்புகளுடன் இராமானுசனின் ஆங்கிலக் கவிதைகளும் இலக்கிய உலகில் சிறப்பு பெற்றவை என்கிறார் ஆசிரியர். அவற்றின் சுவையறிவதற்காகச் சில மொழிபெயர்ப்புப் பாடல்களையும் நமக்கு அளித்துள்ளார் ஆசிரியர்.
மொழிபெயர்ப்பிற்குக் கடினமான நம்மாழ்வாரின் 83 பாடல்களைப் பிறர் பாராட்டும் வண்ணம் மொழிபெயர்த்துள்ளார். இராமானுசன் பல பாடல்களை ஆங்கிலத்தில் தரும்போது வெற்றி பெறுகின்றாராயினும் அவருடைய இந்து சமய வெறுப்பும் சிகாகோ பின்புலமும் சிற்சில இடங்களில் மூலத்திற்கு ஊறுசெய்யும் வகையிலும் மூலத்தைத் தவறாகப் புரிந்து கொள்ள நேரும் முறையிலும் அமைந்துள்ளன என நடுநிலையுடனும் ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழி பற்றியும் தொல்காப்பியம் பற்றியும் தொல்காப்பிய-சங்கக்கவிதையியல் பற்றியும் அரிய ஆய்வுமுடிவுகள், புத்தொளிகள் நிறைந்த கட்டுரைகள் மூலமாகவும் தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள் மூலமாகவும் உலக இலக்கிய அரங்கில் தமிழுக்கு உரிய இடத்தைப் பெற்றுத்தந்தவர் என்ற பெரமைக்குரியவர் என்னும் முத்தாய்ப்புடன் ஆசிரியர் இராமானுசன் குறித்த கட்டுரையை முடிக்கிறார்.
- 13. அறிஞர் பிரான்சுவா குரோ
பதின்மூன்றாம் கட்டுரை பிரான்சு நாட்டு அறிஞர் பிரான்சுவா குரோ குறித்தது.
தமிழ் மொழி, இலக்கணம், இலக்கியம், பண்பாடு, நாகரிகம்பற்றிப் பொதுவாகவும் பரிபாடல், திருக்குறள், உரையாசிரியர்கள், பெரியபுராணம்பற்றிக் குறிப்பாகவும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ள குரோ, தமிழின் செவ்வியல் தகுதியை உரிய முறையில் எடுத்துச்சொன்ன விரல்விட்டு எண்ணக்கூடிய மேலை அறிஞர்களுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை என்கிறார் ஆசிரியர்.
- 14. சியார்சு ஆர்த்து
பதினான்காம் கட்டுரை பேராசிரியர் சியார்சு ஆர்த்து (George L.Hart)குறித்தது.
செம்மொழிக்குரிய தகுதிகளையெல்லாம் பட்டியலிட்டு அவையெல்லாம் தமிழுக்கிருப்பதால் அதனைச் செம்மொழியென்று இந்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியவர் சியார்சு ஆர்த்து. செம்மொழித்தமிழ் பற்றியும் தமிழில் உள்ள செவ்விலக்கியங்கள் பற்றியும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ், சமற்கிருதஇலக்கியங்களின் தரம் பற்றியும் அவற்றிற்கிடையே நிகழ்ந்த கொள்ளல் கொடுத்தல் பற்றியும் சமற்கிருதப் பேராசிரியரும் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், தமிழ், சமற்கிருதம் ஆகிய ஐந்து செவ்வியல் மொழி இலக்கியங்களையும் முறையாகப் பயின்றவருமாகிய சியார்சு ஆர்த்து கூறும் கருத்துகள் செம்மொழித் தமிழின் உண்மையான சிறப்பை ஒப்பிட்டு முறையில் உலகிற்கு உணர்த்துபவை என்கிறார் ஆசிரியர்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்
ப.மருதநாயகம்
செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600 100
விலை உரூபாய் 500/-
No comments:
Post a Comment