(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5  தொடர்ச்சி)

குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5

குழந்தைத் தோழர்கள்

குழந்தைகளுக்குக் காக்கையும், கோழியும், நாயும். கிளியும், பசுவும், கன்றும் இனிய தோழர்கள் ஆவர். எனவே கவிமணியின் பாட்டு இத்துறைகளில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. எளிய பாடல்களில் கற்பனை நயத்தினைக் குழைத்துக் குழந்தையின் உள்ளத்தில் அறிவு வேட்கையினைக் கவிமணி அவர்கள் உண்டாக்குகின்றார். சேவற் கோழியைப் பற்றிப் பாடும்போது,

குத்திச் சண்டை செய்யவோ?
குப்பை கிண்டி மேயவோ?
கத்திபோல் உன் கால் விரல்
கடவுள் தந்து விட்டனர்!

காலை கூவி எங்களைக்
கட்டில் விட்டெ ழுப்புவாய்,
வேலை செய்ய ஏவுவாய்;
வெற்றி கொண்ட கோழியே!

என்று பாடியுள்ள திறம் மகிழ்தற்குரியது. பெட்டைக் கோழியைப் பற்றிப் பாடும் பாடலில் கவிஞரின் கழிவிரக்கப் பண்பு புலனாகக் காணலாம். ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி. இம்முறையில் பெட்டைக்கோழியை அடைக்கும்பொழுது கூரையை விட்டு இறங்கிவரச் சொல்லி; பிள்ளைகளையும் கூட்டிவரச் சொல்லிக் கொத்திக் கொத்தித் தின்னக் குட்டை நெல்லைக் காட்டும் இரக்கம் மனம் கொளத் தக்கதாகும். சின்னக் குழந்தைகள் நெஞ்சத்தில் எளிய உயிர்களுக்கும் இரங்கும் அரிய கருணை உள்ளத்தினை இப்பாடல்களில் புகட்டி நிற்கக் காண்கின்றோம்.

கோழீகோழீவா வா;
கூரை விட்டு இறங்கி வா!
…………………………………
பெட்டைக்கோழீவா வா!
பிள்ளைகளைக் கூட்டி வா!
குட்டை நெல்லைக் கொட்டினேன்;
கொத்திக் கொத்தித் தின்ன வா!

மேலும், இப்பாடலின் இறுதி அடிகள் வானத்தில் வட்ட மிடும் பருந்துக்குப் பெட்டைக்கோழியின் இளைய குஞ்சுகள் எங்கே வஞ்சனையால் இரையாகிப் போய் விடுமோ என்று தவிக்கும் இரக்க உள்ளத்தைக் காணலாம்.

வஞ்சமாய்ப் பருந்ததோ
வானில் வட்டம் போடுது,
குஞ்சணைத்துக் காப்பாயோ?
கூட்டில் கொண்டு சேர்ப்பாயோ?

கவிமணிக்குக் கிளியிடம் மிகுந்த பற்று. அது பற்றி எவ்வளவோ பாடியிருக்கின்றார். அவ்வளவும் உணர்ந்து பாடியவை, உண்மை நிறைந்தவை. இவ்வாறு கூறுகிறார் புலவர் செ. சதாசிவம் அவர்கள். [10] ‘கிளியை அழைத்தல்’ என்று தலைப்புடைய பாடல்,

பச்சைக்கிளியேவாவா!
பாலும் சோறும் உண்ண வா!
கொச்சி மஞ்சள் பூச வா,
கொஞ்சிவிளை யாட வா!

என்று தொடங்குகிறது. இந்தப் பாடலில் அமைந்துள்ள சில பகுதிகள் தடைபடாப் பாட்டோட்டம் கொண்டு உரிய பொருளை உள்ளடக்கி நிற்கின்றன.

வட்டமாய் உன் கழுத்திலே
வான வில்லை ஆரமாய்,
இட்ட மன்னர் யாரம்மா?
யான் அறியக் கூறம்மா!
பவழக் காரத் தெருவிலே
பவழங் காண வில்லையாம்
எவர் எடுத்துச் சென்றனர்?
எனக் கறிந்து சொல்வையோ!

இந்த இரண்டு பாடல்களிலும் கவிமணியின் சந்தநய இன்பத்தினை அறிந்து மகிழலாம். கூண்டுக் கிளியைப் பார்த்துச் சிறுவன் ஒருவன் தான் பாலைக் கொண்டு தந்தும், பழம் தின்னத் தந்தும் சோலைக்கு ஓடிப்போக ஏன் வழி பார்க்கிறாய் என்றும், கூட்டில் வாழும் வாழ்வினில் குறைகள் உண்டோ என்றும் கேட்கிறான். அதற்குக் கிளி மறுமொழியாகக் கூறும் பகுதி குழந்தையின் சிந்தனைச் செல்வத்தினையும், உயரிய கொள்கைப் பிடிப்பினையும் வளர்ப்பதாகும். அப்பகுதி வருமாறு :

சிறையில் வாழும் வாழ்வுக்குச்
சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியாப் பாலகனோ?
எண்ணி வினைகள் செய்யானோ?

பாலும் எனக்குத் தேவையில்லை;
பழமும் எனக்குத் தேவையில்லை
சோலை எங்கும் கூவி நிதம்
சுற்றித் திரிதல் போதுமப்பா!

இது போன்றே பசுவைப் பார்த்துப் பாடும் பாலகன்,

பச்சைப்புல்லைத் தின்றுவெள்ளைப்
பால்தரநீ என்ன
பக்குவஞ் செய்வாய்அதனைப்
பகருவையோ பசுவே!

என்று கேள்வி தொடுக்கின்றான். அடுத்துப் ‘பசுவும் கன்றும்’ என்ற பாடல் குழந்தை இலக்கியத்தில் சாகா வரம் பெற்ற பாடலாகும். சொற்களின் எளிமையும் இனிமையும் இப்பாட்டில் ஒன்றையொன்று போட்டியிட்டு நிற்கின்றன.

தோட்டத்தில் மேயுது
வெள்ளைப்பசுஅங்கே
துள்ளிக் குதிக்குது.
கன்றுக் குட்டி

அம்மா என் குது,
வெள்ளைப்பசுஉடன்
அண்டையில் ஓடுது
கன்றுக் குட்டி

நாவால் நக்குது
வெள்ளைப்பசுபாலை
நன்றாய்க் குடி க்குது,
கன்றுக் குட்டி.

முத்தம் கொடுக்குது,
வெள்ளைப்பசுமடி
முட்டிக் குடிக்குது
கன்றுக்குட்டி,

விளையாட்டிலும் ஓர் எல்லை வேண்டும் என்பதனை,

கட்டும் பாண்டி யாடலாம்,
களைத்து விட்டால் நிறுத்தலாம்;
எய்யாப் பாண்டி யாடலாம்;
எய்த்து விட்டால் நிறுத்தலாம்;

என்ற பாடலில் புலப்படுத்தியுள்ளார்.

வில்லியம் பிளேக்கு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பாடலைக் குழந்தைகளுக்காகத் தமிழில் மொழி பெயர்த்த பொழுது,

கூட்டில் அடைத்திடினும்இரையினைக்
கொண்டு கொடுத்திடினும்,
காட்டில் வளர்ந்த குணம்புலிகளும்
காட்டா திருக்கு மோடி?

மானைப் படைத்த தெய்வம்புலியையும்
வளர்த்து விடலா மோடி..?
தேனைப் பழித்த சொல்லாய்!-எனக்குநீ
தெரிந்துரை செய்யா யோடி?

என்ற பாடல்களில் எண்ணத்தை வளர்க்கும் இனிய வினாக்களை எழுப்பியுள்ளார்.

வெண்ணிலாப் பாட்டு

‘நிலா நிலா வா வா’ என்று குழந்தைகள் பாடி மகிழ்வது இயற்கை. இம்முறையில் சந்திரன் என்ற தலைப்பில் கவிமணி பாடியுள்ள பாடலில் பல சிறப்புகளைக் காணலாம். இந்தப் பாடலில் காட்சி இன்பமும் கருத்து இன்பமும் காந்தியக் கருத்தும் அழகுறப் பொருந்தி உள்ளதனைக் காணலாம்.

காட்சி வருணனை

மீனினம் ஓடிப் பரக்குதம்மா!-ஊடே
வெள்ளி ஒடமொன்று செல்லுதம்மா!
வானும் கடலாக மாறு தம்மா?-இந்த
மாட்சியி லுள்ளம் முழுகு தம்மா!

முல்லை மலர்ப்பந்தல் இட்டனரோதேவர்
முத்து விதானம் அமைத்தன ரோ?
வெல்லு மதியின் திருமணமோ?-அவன்
விண்ணில் விழாவரும் வேளையிதோ?

என்ற பாடல்களில் காட்சியின்பமும்,

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சிபாலசுப்பிரமணியன்