(தமிழ்நாடும் மொழியும் 19 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 20

6. பிற்காலச் சோழர் வரலாறு

சோழர் எழுச்சி

சங்கக்காலத்தில் சீரும் சிறப்பும் கொண்டு விளங்கிய சோழர்கள் பிற்காலத்தில் பல்லவர்க்குக் கீழ்க் குறுநில மன்னர்களாகவும் அதிகாரிகளாகவும் வாழ நேரிட்டது. பல்லவர் காலத்தில் இவ்வாறு அழிந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலே மறுபடியும் தம் பண்டைச் சிறப்பை நிலை நாட்டக் கிளர்ந்து எழலானார்கள். பிற்காலச் சோழப்பேரரசை நிறுவியவன் விசயாலயன் என்பவனாவான். பிற்காலச் சோழர்க்குத் தலைநகர் தஞ்சை மாநகராகும். விசயாலயன் காலம் கி. பி. 850-71 என்பதாகும். பல்லவர் வீழ்ச்சி, தலைதூக்கும் சோழர்க்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தது. கி. பி. 860-இல் முத்தரையரிடமிருந்தோ , பல்லவரிடமிருந்தோ விசயாலயன் தஞ்சையைக் கவர்ந்தான். முத்தரையர் என்பவர் பாண்டியர்க்கு நண்பராவர். இந்நிலையில் பல்லவர்-பாண்டியர் போர் அடிக்கடி நிகழ்ந்து வந்தது. இதனால் சோழ மன்னனாகிய விசயாலயனுக்கு நன்மையே விளைந்தது. மேலும் சோழப் பேரரசை ஏற்படுத்தவும் இப்போர் பயன்பட்டது. ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே’. கி. பி. 880-இல் திருப்புறம்பியம் என்னும் இடத்தில் பல்லவ மன்னன் அபராசிதவர்மனுக்கும் பாண்டியன் வரகுணனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இப்போரில் பாண்டியன் தோற்றாலும், அதனால் நன்மை அடைந்தது பல்லவன் அல்ல; சோழனே. பாண்டியன் வீழ்ச்சி சோழர் வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடையை நீக்கியது.

முதலாம் ஆதித்தன் (871-907)

ஆதித்தன் என்பவன் விசயாலயன் மகன் ஆவான். எனவே ஆதித்தன் தன் தந்தைக்குப் பின் தரணி ஆளத் தொடங்கினான். திருப்புறம்பியப் போரில் இவன் பல்லவனுக்கே உதவி செய்தான். பின்னர் வெற்றியடைந்த பல்லவனிடமிருந்து சில நாடுகளைச் சோழன் பரிசாகப் பெற்றான். திருப்புறம்பியப் போரினால் பாண்டியர்கள் மட்டுமல்ல, பல்லவர்களும் தம் வலி குன்றலானார்கள். இக்காலம் கி. பி. 893 ஆம். பின்னர் தன் வலியை நன்கு பெருக்கிய ஆதித்தன் திடீரெனத் தனியரசு முரசு கொட்டினான். காஞ்சியும் தொண்டை மண்டலமும் சோழன் கரத்தில் தவழலாயின. கொங்கு நாடு சோழன் அடியில் வந்து கிடந்தது. கொங்கு நாட்டு மன்னர்கள் சோழனுக்கு வெற்றிச் சிந்து பாடினர். ஆதித்தனின் 27-ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு ஒன்று திருக்கழுக்குன்றத்தில் காணப்படுகிறது. அதிலிருந்து இவன் சைவன் எனத் தெரிகிறது. இவன் சேரன் தாணுரவியோடு நட்புக்கொண்டான். சேரன் பாண்டிய – சோழர் போரில் சோழருக்குப் பல உதவிகள் புரிந்தான்.

முதலாம் பராந்தகன்

பராந்தகன் என்பவன் ஆதித்த சோழனின் மகனாவான். எனவே பராந்தகன் ஆதித்தனுக்குப் பின்பு சோழ நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். நாட்டைப் பெருக்க இவன் தன் தந்தையின் தந்திரத்தையே மேற்கொண்டான். வடக்கே பல்லவர்களையும், பாணரையும், வைதும்பரையும் அடக்கித் தன்னடிப்படுத்தினான். மேற்கே சேரரோடு உறவு கொண்டான். தெற்கே இவன் காலத்தில் பாண்டிய மன்னனாக இருந்தவன் இரண்டாம் இராசசிம்மனாவான். பராந்தகன் கி. பி. 910-இல் மதுரையைக் கவர்ந்தான்; “மதுரை கொண்ட சோழன்” எனப் பெயர் கொண்டான். தோற்ற இராசசிம்மன் வாளா இருக்கவில்லை. ஈழ நாட்டுக்கு ஓடினான். ஈழமன்னனைக் கெஞ்சினான். ஈழநாட்டுப்படையோடு சோழனைத் தாக்கினான். போர் வெள்ளூரில் நடைபெற்றது. போரில் பாண்டியன் தோற்றோடினான். இது நடந்த காலம் கி. பி. 915. ஆண்டுகள் ஐந்தோடின. பராந்தகன் பாண்டியனை மதுரையை விட்டே விரட்டினான். அவன் ஈழ நாட்டில் அடைக்கலம் புகுந்தான். பாண்டியன் ஈழ மன்னனிடம் விட்டுச் சென்ற முடியையும் இந்திரன் ஆரத்தையும் பெறச் சோழன் எவ்வளவோ முயன்றும் இறுதியில் தோல்வியுற்றான். இச் செய்தியை மகாவமிசமும் இரண்டாம் பிருதிவி பதியின் செப்பேடுகளும் எடுத்தியம்புகின்றன. கங்க அரசனான பிருதிவிபதி என்பான் சோழனுக்கு அடிபணிந்தான். இராசேந்திரன் விடுத்த திருவாலங்காட்டுப் பட்டயங்கள் மூலம் பராந்தகன் தில்லைக் கூத்தன் கோவிற்குப் பொற்கூரை அமைத்தான் என்பதும், அதனால் ‘கோவில் பொன் வேய்ந்த தேவன்’ என்று அழைக்கப்பட்டான் என்பதும் தெரிய வருகின்றது. உத்தரமேரூர்க் கல்வெட்டு மூலம் சோழப் பேரரசு, பேரரசாகத் திகழ அடிகோலியவனும், சிறந்த ஆட்சிவன்மையுடையவனும் பராந்தகனே என அறியலாம். இவன் காலத்தில் சோழப்பேரரசு வடக்கே நெல்லூர் முதல் தெற்கே குமரிமுனை வரை பரவி இருந்தது. என்றாலும் பராந்தகன் தன் இறுதிநாளில் மகிழ்ச்சியோடும் மனநிம்மதியோடும் வாழ முடியவில்லை. இராட்டிரகூட மன்னனான மூன்றாம் கிருட்டிணன் தொண்டை மண்டலத்தின் மீது படை எடுத்தான். அக்காலத்தில் சோழப்பேரரசின் இளவரசனாக இருந்தவன் இராசாதித்தன் ஆவான். தக்கோலம் என்ற இடத்தில் இராசாதித்தனுக்கும் மூன்றாம் கிருட்டிணனுக்கும் இடையே போர் நடந்தது. இது நடந்த ஆண்டு கி. பி. 949. போரிலே சோழன் கொல்லப்பட்டான். ‘சங்கராம ராகவா’, ‘பண்டித வத்சலா’ என்பன பராந்தகனது விருதுப் பெயர்களாகும். இவன் திருவாவடுதுறை, செந்துறை முதலிய இடங்களில் கோவில்கள் அமைத்தான். மேலும் வீரநாராயண ஏரி, சதுர்வேதி மங்கல ஏரி, சோழ வாரிதி, சோழசிங்கபுரத்தேரி முதலிய பேரேரிகளை வெட்டு வித்தவனும் இவனே.

பராந்தக சோழ பரகேசரிக்கும் முதல் இராசராசனுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இருவருக்கும் இடையில் ஆண்ட சோழ மன்னர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐந்து சோழ மன்னர்கள் ஆண்டதாகத் தெரியவருகிறது. மூன்றாம் கிருட்டிணன் காஞ்சியைக் கைப்பற்றிப் பின் தஞ்சைக்கும் கண்ணி வைத்தான். மூன்றாம் கிருட்டிணனை, பராந்தகனின் இரண்டாம் மகனான கண்டராதித்த சோழன் எதிர்த்து விரட்டி அடித்தான். ஆனால் அச்சோழனால் நீண்ட நாள் ஆள முடியவில்லை. ஏன்? திடீரென அவன் இறந்துவிட்டான். கண்டராதித்த சோழனின் அருமை மனைவியான செம்பியன் மாதேவியார் தன் கணவனின் நினைவுக்காக கோனேரி ராசபுரம் என்ற இடத்திலே ஒரு கோவிலைக் கட்டினார். கண்டராதித்த சோழனின் மகனான உத்தமன் மிகவும் இளம் வயதினனாக இருந்தபடியால் பராந்தகனின் மூன்றாம் மகனான அரிஞ்சயன் மன்னனானான். ஆனால் அரிஞ்சயனும் நெடுநாள் நாட்டை ஆளவில்லை. அரிஞ்சயன் மகனும் இரண்டாவது பராந்தகனுமாகிய சுந்தரசோழன் கி பி. 956 இல் அரியணை ஏறி கி. பி. 973 வரை நாட்டை ஆண்டான். சுந்தர சோழன் இராட்டிரகூடர்களிடமிருந்து காஞ்சியை மீட்டினான். பின்னர் பாண்டிய மன்னனான வீரபாண்டியனோடு போரிட்டு வெற்றி பெற்றான். எனவே மதுராந்தகன் என்ற பட்டமும் சூட்டிக் கொண்டான். இப்போரில் சுந்தர சோழனின் மகனான ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையைப் பந்தாடினான். ஆதித்த கரிகாலன் தந்தைக்குப்பின் கி. பி. 973 இல் அரியணை ஏறி 980வரை ஆண்டான் என்பது சிலர் கருத்து. சிலர் உத்தம சோழனால் ஆதித்த கரிகாலன் கொலையுண்டான் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல. ஆதித்த கரிகாலன் கொலையுண்டான். யாரால்? சோழ நாட்டு அரசியல் அதிகாரிகள் இருவர், பாண்டிய நாட்டு அரசியல் அதிகாரி ஒருவர் ஆகிய மூவரும் சேர்ந்து சதிசெய்து ஆதித்த கரிகாலனைக் கொன்றார்கள். இவர்கள் பிற்காலத்தில் இராசராசனால் தண்டிக்கப்பட்டனர். இச்செய்தியைச் சிதம்பரம் தாலுகாவிலுள்ள காட்டுமன்னார் கோவிலிலுள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்