(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-3/6 – சி.பா. தொடர்ச்சி)
6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 4/6
தமிழ்த் தொண்டு
1942இல் மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டு வரவேற்புக் குழுவின் துணைத் தலைவராயிருந்து அம் மா நாட்டைத் திறம்பட நடத்தினார். அடுத்து 1950இல் கோவையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 1954இல் அண்ணாமலை நகரில் தமிழாசிரியர் மாநாடடிற்குத் தலைமை தாங்கினார். 1956ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழாவில் ஐந்தாம் நாள் விழாவில் இயலரங்குத் தலைவராக இருந்து சீரிய கருத்துக்களைச் சிறக்க வெளியிட்டார். 1930, 1936, 1944 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஈழநாடு சென்று சொற்பொழிவுகள் ஆற்றி நாவலர்’ என்ற பட்டம் பெற்றார். மதுரைத் திருவள்ளுவர் சமுகத்தார் 11-1-1954இல் ‘கணக்காயர்’ பட்டம் வழங்கி இவரைச் சிறப்பித்தனர். 1955இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெள்ளி விழா கொண் டாடியபொழுது, இவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது. 1957இல் சென்னையில் தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவலரின் நற்றமிழ்த் தொண்டைப் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
இவ்வாறு பெருவாழ்வு வாழ்ந்த நாவலர் தம் எண்பதாம் ஆண்டு முடிவுற்ற சில திங்களில் 1959ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இரவு 7-40 மணிக்கு இயற்கை எய்தினார். தமிழ்நாடு தன் சீரிய தொண்டரை இழந்தது. தமிழன்னை தன் அரிய மைந்தனை இழந்தாள். தமிழினம் தன் தானைத் தலைவனை இழந்தது.
2. படைப்புத் திறன்
தயரதன் குறையும் கைகேயி நிறையும்
நாவலர் பெரிதும் ஈடுபாடு கொண்ட காப்பியம் கம்பராமாயணமாகும். தாம் பன்முறை ஆழ்ந்து ஆழ்ந்து அக் காப்பியத்தைப் பயின்றபோது தோன்றிய கருத்துகளை நண்பர்களிடம் எடுத்துரைத்தார். பின்னர் மேடைகளில் அக்கருத்துகளை குறிப்பிடத் தொடங்கினார். பின்னர் அக் கருத்துகளுக்கு நூல் வடிவு தந்தார். அந்த நூலே ‘தயரதன் குறையும் கைகேயி நிறையும்’ என்பதாகும்.
தயரதன் அறம் திறம்பா நெஞ்சினன் என்றும், கைகேயி மாகயத்தி என்றும் இராமாயணம் படிப்போர் இயல்பாகக் கருதி நிற்க, நாவலர், தயரதன் கன்யா சுல்கமாகப் பரதனுக்குத் தரவேண்டிய நாட்டை இராமனுக்களிக்க முன்வந்தது தவறென்றும், பரதனைக் கேகய நாட்டிற்கனுப்பி வைத்தது தவறென்றும், இராமன் முடிசூடுதலைக் கேகய நாட்டுறைந்த பரதனுக்குத் தெரிவிக்காமற் போனது தவறென்றும், எடுத்துக்காட்டி, கல்கச் சூளறம் பொய்த்துப் பழிவெள்ளத்து நீந்தாது தயரதனுக்கு அக் கல்கச் சூளறத்தை நினைவுறுத்தி அவனை அப் பெரும் பழியினின்றும் மீட்டது கைகேயியின் கற்பு மேம்பாட்டுடன் கூடிய நிறையென்றும் எடுத்துக் காட்டிய பெருமை நாவலரைச் சாரும்.
திருவள்ளுவர்
தமிழ்நாடு செய்தவப் பயனாய்த் தோன்றிய திருவள்ளுவர் குறித்து வழங்கும் கதைகள் பலப்பல, அவை அனைத்தும் ஒருவகையில் திருவள்ளுவர் புகழை மாசு படுத்துவதாகவே உள்ளன. பல்வேறு இலக்கியங்களை ஆராய்ந்து திருவள்ளுவர் பற்றிய திட்டவட்டமான கருத்தினை முதற்கண் வெளியிட்ட பெருமை நாவலரைச் சாரும். அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் வருமாறு:
“வள்ளுவர் கடைச்சங்கக் காலத்திற்கு மிகவும் முற் பட்டவர். திருக்குறளே தமிழின்கண் தோன்றிய தனிமுதல் அற நூல் திருவள்ளுவர் புலைச்சியின் புதல்வரல்லர். ஏலேல சிங்கனின் கொடையால் உயிர்த்த பிறவியல்லர். தமிழ் முடி மன்னரிடத்து உட்படு கருமத் தலைவராய்த் தம் ஆற்றலும் அறிவும் வாய்ந்தவர்.”
முதன் முதலாக இவ்வாராய்ச்சிச் சொற்பொழிவினை 25-1-1929ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம், கிறித்தவ இளைஞர் சங்கம் இவற்றின் ஆதரவில், மறைத்திரு. எச்சு.ஏ. பாப்லி துரை தலைமையில் நிகழ்த்தினார். பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் அறிஞர் பெருமக்கள் பலர் குழுமியிருந்த அவையில் வெளியிட்டார். அங்குக் கூடியிருந்த பெரு மக்களில் குறிக்கத்தக்கவர்முனைவர்உ. வே. சாமிநாதையர், மு. இராகவையங்கார், எசு. வையாபுரிப்பிள்ளை முதலியோராவர். இந்நூலைப் படித்துமுனைவர்உ. வே. சா. அவர்கள் கருதிய கருத்து, நாவலர் ஆழமான ஆராய்ச்சி அறிவு நுட்பம் வாய்ந்தவர் என்பதாகும்.
சேரர் பேரூர்
முடியுடை மூவேந்தரில் முதலாமவரான சேர மன்னரின் கோநகரமாம் வஞ்சி யாண்டுளது என்பது குறித்து ஆராய்ச்சிகள் பல எழுந்தன. சிலப்பதிகார உரையாசிரியராம் அடியார்க்கு நல்லாரும்,முனைவர்உ. வே. சாமிநாதையரும் மேற்கடற்கரையிலுள்ள பேராற்றின் கரைக்கண்ணது வஞ்சி என்பர். அறிஞர் வி கனகசபைப் பிள்ளை மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் பேரியாற்றங்கரையில் ஒரு பாமூருக் குத்திருக்கரூர் என்னும் பெயர் வழங்குவது கொண்டு அப்பா மூரையே வஞ்சி என்று கொண்டனர். ‘சேரன் செங்குட்டுவன்’ என்ற ஆராய்ச்சி நூலையளித்த பேராசிரியர் மு இராகவையங்கார், வஞ்சியென்பது திருச்சிக்கு மேற்கே ஆம்பிராவதி ஆற்றின் மேலதாக அமைந்திருக்கும் கருவூரானிலை அல்லது கருரே வஞ்சியென்பர். ‘தமிழ் வரலாறு’ எனும் அரிய ஆராய்ச்சி நூலைத் தந்த தஞ்சை அறிஞர் கே. சீனிவாசப் பிள்ளை, இச்சிக்கலைத் தீர்க்குமாறு நாவலரை வேண்டிக் கொள்ள, நாவலர் இப்பொருள் குறித்து விரிவாக ஆராய்ந்து ‘சேரர் பேரூர்’ என்னும் நூலைத் தமிழுலகிற்குத் தந்தார். “வஞ்சியெனப்படும் சேரர் கோநகரம், மலைநாட்டில் மேற்குக் கடற்கரையில் தோரியாற்றின் கழிமுகத்தில் அமைந்த பழம் பட்டினமேயன்றிப் பிறிது உள்நாட்டு ஊரேதுமாகாது” என்று அவர் ஆராய்ந்து முடிந்த முடிபாகக் கருத்து வெளியிட்டார்.
(தொடரும்)
சான்றோர் தமிழ்
சி. பாலசுப்பிரமணியன்
No comments:
Post a Comment