(உ.வே.சா.வின் என் சரித்திரம் 17 தொடர்ச்சி)
என் சரித்திரம்
அத்தியாயம் 10: இளமைக் கல்வி தொடர்ச்சி
பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் தானத்தில் இருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா. உபாத்தியாயர் எழுதித் தரும் ஏட்டுச் சுவடியிலிருந்து முதலில் நெடுங்கணக்கை (அரிச்சுவடியை)க் கற்றுக் கொள்வான் மாணாக்கன். அப்பால் எண்சுவடி முதலிய சுவடிகள் பெற்றுப் படிப்பான். ஓலை வாரவும், சுவடி சேர்க்கவும், நன்றாக எழுதவும் தெரிந்துகொள்வதற்குப் பல நாளாகும். சுவடியைப் பிரித்து ஒழுங்காகக் கட்டுவதற்குக்கூடப் பழக்கம் வேண்டும். பிள்ளைகளுக்கு எழுத்துப் பழக்கம் உண்டாக உபாத்தியாயர் ஓர் ஓலையில் எழுதித் தருவார். பிள்ளைகள் அதே மாதிரி எழுதிப் பழகுவார்கள். அந்த மூல ஓலைக்குச் சட்டம் என்று பெயர்.
ஏட்டுச் சுவடிகளில் மஞ்சள், ஊமத்தையிலைச்சாறு, வசம்புக்கரி முதலியவற்றைத் தடவிப் படிப்பது வழக்கம், எழுத்துகள் தெளிவாகத் தெரிவதற்கும் பூச்சிகள் வராமல் இருப்பதற்கும் அவ்வாறு செய்வார்கள். ஏட்டுச் சுவடிகளுக்குக் குறிப்பிட்ட அளவு ஒன்றும் இல்லை. வெவ்வேறு அளவில் அவை இருக்கும். சுவடிகளில் ஒற்றைத் துவாரம் இருக்கும். ஒரு நூற்கயிற்றைக் கிளிமூக்கு என்ற ஒன்றில் முடிந்து சுவடியின் துவாரத்தின் வழியே செலுத்தி அதைக் கட்டுவார்கள். பனையோலையை நரம்போடு சேர்த்துச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கிளிமூக்குகளாக உபயோகப்படுத்துவார்கள். கிளிமூக்கிற்குப் பதிலாகப் பொத்தானையோ, துவாரம் பண்ணின செம்புக் காசையோ, சோழியையோ முடிவதும் உண்டு.
ஏடுகளின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வெற்றேடுகள் சில சேர்த்திருப்பார்கள்.
எழுத்தாணிகளில் குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என வெவ்வேறு வகை உண்டு. வாரெழுத்தாணிக்குப் பனையோலையினாலே உறைசெய்து அதற்குள் செருகி வைப்பார்கள். மடக்கெழுத்தாணிக்குப் பிடி இருக்கும்; மடக்கிக் கொள்ளலாம், அந்தப்பிடி மரத்தினாலோ தந்தத்தினாலோ மாட்டுக் கொம்பினாலோ அமைக்கப்படும்.
ஒரு பையன் புதியதாக ஒரு நூலைப் படிக்கத் தொடங்குவதைச் சுவடி துவக்கல் என்பார்கள். பனையோலையில் அந்த நூலை எழுதி மஞ்சள் தடவி விநாயக பூசை முதலியவற்றைச் செய்து பையனிடம் கொடுத்து உபாத்தியாயர் படிப்பிப்பார். அவன் வீட்டிலிருந்து வந்த காப்பரிசி நிவேதனம் செய்யப்படும். அது தேங்காய்த் துண்டு, எள்ளு, வெல்லம் இவை சேர்க்கப் பெற்று மிகச்சுவையாக இருக்கும். அதைப் பிள்ளைகளுக்கும் பிறருக்கும் விநியோகம் செய்வார்கள். அன்றைத் தினம் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை நாளாகும்.
சுவடி துவக்கலென்றால் பிள்ளைகளுக்கு அளவற்ற சந்தோசம் உண்டாகும். புதிய நூலைக் கற்பதனால் உண்டாவதன்று அது; “காப்பரிசி கிடைக்கும்; பள்ளிக்கூடம் இராது” என்ற ஞாபகமே அதற்குக் காரணம்.
பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அட்டமியாகிய தினங்களில் பள்ளிக்கூடம் நடைபெறாது. அந்த விடுமுறை நாட்களை ‘வாவு’ என்று சொல்வார்கள். உவா என்பதே அவ்வாறு மருவியது. உவா என்பது பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் பெயர்.
ஒவ்வொரு பிள்ளையும் தினந்தோறும் உபாத்தியாயருக்கு ஏதேனும் ஒரு பொருள் கொண்டுவந்து கொடுப்பான்; ஒரு விறகோ, வறட்டியோ, காயோ, பழமோ தருவது வழக்கம். விசேச தினங்களில் அந்த விசேசத்திற்கு உபயோகப்படும் பொருள்களைத் தருவார்கள். விடுமுறை நாட்களில் பணமும் கொடுப்பதுண்டு. அதை ‘வாவுக் காசு’ என்று சொல்லுவர்.
உபாத்தியாயருக்கு மாதம் கால் உரூபாய் சம்பளம் ஒவ்வொரு பையனும் கொடுப்பான். பணக்காரர்கள் வருசாசனமாக நெல் கொடுப்பார்கள். விசேச காலங்களில் மரியாதையும் செய்வார்கள். நவராத்திரி காலங்களில் உபாத்தியாயருக்கு ஒரு வகையான வரும்படி உண்டு. அந்த உத்சவத்தை ‘மானம்பூ’ என்று சொல்வார்கள்; மகா நோன்பு என்னும் சொல்லே அந்த உருவத்தை அடைந்தது. அக்காலத்தில் பிள்ளைகள் நன்றாக அலங்கரித்துக்கொண்டு வந்து பாட்டுப் பாடுவார்கள்; கோலாட்டம் போடுவார்கள். அதற்கெனவே தனியே பாட்டுக்கள் உண்டு. ஒவ்வொருவர் வீட்டுக்கும் பிள்ளைகளை அழைத்துச் சென்று பாடச் செய்வது உபாத்தியாயர் வழக்கம். வெளியூருக்கும் அழைத்துச் செல்வது உண்டு. அவரவர்கள் தங்கள் தங்கள் நிலைமைக்குத் தக்கபடி பணம் தருவார்கள். இந்தப் பணம் முழுவதையும் உபாத்தியாயர் எடுத்துக் கொள்வார். மானம்பூ வருவாயினால்தான் உபாத்தியாயர்கள் தங்கள் வீட்டுக் கல்யாணம் முதலிய காரியங்களைச் சிறப்பாக நடத்துவார்கள்.
உபாத்தியாயருக்கு அக்காலத்தே கணக்காயரென்ற ஒரு பெயருண்டு. கிராமத்து ஜனங்கள் உபாத்தியாயரிடம் மரியாதையோடு பழகுவார்கள். பிள்ளைகளை அவர் என்ன செய்தாலும் அது குறித்து வருத்தமடைய மாட்டார்கள். அவரைக் கேட்கவும் மாட்டார்கள். வீட்டில் விஷமம் செய்யும் பிள்ளைகளை உபாத்தியாயரிடம் சொல்லி அடக்குவார்கள். இளமைப் பருவம் முழுவதும் பிள்ளைகள் உபாத்தியாயருடைய ஆட்சியின் கீழ் இருக்கவேண்டும்.
அவரையே தெய்வமாக மதிப்பதும் இன்றியமையாத வேளைகளில் அவர் வீட்டு வேலைகளைச் செய்வதும் மாணாக்கர்களுக்கு இயல்பு.
பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் செய்விக்கும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. அவரது பிரம்படி ஒன்றினாலேயே மாணாக்கர்கள் கதிகலங்குவார்கள். விட்டத்தில் கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சில நேரம் இருக்கும்படி செய்வது ஒரு தண்டனை. அதைக் கோதண்டம் என்று கூறுவர். அப்படிப் பையன் தொங்கும்போது கீழிருந்து உபாத்தியாயர் அவனது காலில் அடிப்பதும் உண்டு. நான் ஒரு முறை இந்தத் தண்டனையை அடைந்திருக்கிறேன். பாடம் நன்றாய்ச் சொன்னவனைச் சொல்லாதவன் முதுகில் ஏறச்செய்து பிற்பகலில் பிள்ளைகளைச் சுற்றி வரச்செய்வது வழக்கம். அதற்குக் குதிரையேற்றம் என்று பெயர். அவ்விதம் நான் ஒரு முறை சவாரி செய்திருக்கிறேன்.
இவ்வாறு மாணாக்கர்கள் மனத்தில் அச்சத்தை உண்டாக்கிக் கல்வி புகட்டும் இந்த வழக்கம் இக்காலத்தில் யாவராலும் கண்டிக்கப்படுகிறது. அக்காலத்தில் பெரும்பாலான திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இந்த முறையில்தான் நிதழ்ந்து வந்தன. அடிக்குப் பயந்தாவது பையன் படித்து வந்தான். அவனுக்குப் பல விசயங்கள் மனனம் ஆகும்.
காகிதம், புத்தகம் என்பவை வழக்கத்தில் வராத அக்காலத்தில் மாணாக்கனுக்கு ஞாபகசக்தியை அபிவிருத்தி செய்வதற்கு உபாத்தியாயர்கள் சிரமப்படுவார்கள். ஒரு மனிதன் தன் வாழ்க்கைக்கு அடிப்படையான விசயங்களை இளமையில் பள்ளிக்கூட வாழ்வில் மனப்பாடமாகத் தெரிந்து கொள்வான். எண்சுவடியிலுள்ள கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம் குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்ப்பாடுகள் பெரிய வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நடத்துவதற்கும், சனங்கள் பெரிய உத்தியோகங்களை வகிப்பதற்கும் உரிய வழியைப் புலப்படுத்தின. எல்லாம் பெரும்பாலும் மனக் கணக்காகவே இருக்கும். அக்காலத்தில் பள்ளிக்கூடத்தில் பிரபவாச் சுவடி (பிரபவாதிச் சுவடி) என்ற ஒரு புத்தகம் பாடமாக இருந்தது. அதில் வருசங்கள், மாதங்கள், நட்சத்திரங்கள், யோகம், கரணம், இராகு காலம், குளிகை காலம், யமகண்டம் முதலிய சோதிட விசயங்களும், லோகங்கள், சக்கரவர்த்திகள், மன்வந்தரம், தீவுகள் முதலிய பல விசயங்களும் இருக்கும். அவற்றை நன்றாக மனப்பாடம் பண்ணிக்கொண்ட மாணாக்கன் பிறகு பல சந்தேகங்களை ஆசிரியரின்றியே தெரிந்து கொள்ளும் சக்தியைப் பெறுவான்.
பண்டிகை நாட்களில் பிள்ளைகள் யாவரும் ஒன்றாகச் சேர்ந்து கோயிலுக்குச் செல்வார்கள். ஆடி மாதம் பதினெட்டாந் தேதியில் பழஞ்சுவடிகளை எல்லாம் சேர்த்து அழகான ஒரு சப்பரத்தில் வைத்து மேளதாளத்துடன் இழுத்துச் சென்று ஆற்றிலோ குளத்திலோ விடுவார்கள். பிள்ளையார் சதுர்த்தியன்று ஏழு பிள்ளையாரைத் தரிசிக்க வேண்டுமென்பது ஒரு சம்பிரதாயம். சிரீ சயந்தியிலும் சிவராத்திரியிலும் பிள்ளைகள் சேர்ந்து பாடிச் சென்று வீடுதோறும் எண்ணெய் தண்டி இரவில் கண்விழித்துப் பாடிக்கொண்டும் கதை சொல்லிக்கொண்டும் வேடிக்கையாகப் பொழுது போக்குவார்கள்.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
No comments:
Post a Comment