(உ.வே.சா.வின் என் சரித்திரம் 66 : பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் – தொடர்ச்சி)
என் சரித்திரம்
ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு
ஆறுமுகத்தாபிள்ளை நல்ல உபகாரி; தம் செல்வத்தை இன்ன வழியில் பயன்படுத்த வேண்டுமென்ற வரையறையில்லாதவர். அந்த ஊரில் தம்மை ஒரு சிற்றரசராக எண்ணி அதிகாரம் செலுத்தி வந்தார். யார் வந்தாலும் உணவளிப்பதில் சலிக்கமாட்டார். பிள்ளையவர்கள் அவர் வீட்டில் தங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேட தினமாகவே இருக்கும். கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு நாள்தோறும் சிலர் வந்தவண்ணம் இருப்பார்கள். வெளியூர்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியர்களாக இருப்பவர்கள் சனி, ஞாயிறுகளில் வந்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்கொண்டு செல்வார்கள். இவ்வாறு வருபவர்கள் யாவரும் ஆறுமுகத்தாபிள்ளை வீட்டிலேயே உணவுகொள்வார்கள். தம்முடைய பெருமையை யாவரும் உணர வேண்டுமென்பதற்காகவே விசேடமான விருந்துணவை அளிப்பார். திருவாவடுதுறை மடத்தில் நன்கு பழகினவராதலின் உணவு வகைகளிலும் விருந்தினரை உபசரிப்பதிலும் அங்கேயுள்ள சில அமைப்புக்களைத் தம் வீட்டிலும் அமைத்துக்காட்ட வேண்டுமென்பது அவரது விருப்பம்.
பிள்ளையவர்களிடத்திலேதான் ஆறுமுகத்தா பிள்ளை பணிவாக நடந்துகொள்வார். மற்றவர்களை அவர் மதிக்க மாட்டார். யாவரும் அவருடைய விருப்பத்தின்படியே நடக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு மிக்க கோபம் வந்துவிடும்; அந்தக்கோபத்தால் அவர் சில ஏழை சனங்களைக் கடுமையாகவும் தண்டிப்பார்.
நாகைப் புராணம்
நான் கையில் கொண்டுபோயிருந்த பிரபந்தங்களையெல்லாம் ஒவ்வொன்றாகச் சில தினங்களில் பாடங் கேட்டு முடித்தேன். மேலே பாடம் கேட்பதற்கு என்னிடம் வேறு புத்தகம் ஒன்றும் இல்லை. இந்த விசயத்தை ஆசிரியரிடம் தெரிவித்தேன்.
“தம்பியிடம் புத்தகங்கள் இருக்கின்றன. ஏதாவது வாங்கிப் படிக்கலாம். முதலில் திருநாகைக் காரோணப் புராணம் படியும்” என்று அவர் கூறி அந்நூலை ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்து வாங்கி அளித்தார். அதுகாறும் பிள்ளையவர்கள் இயற்றிய புராணம் ஒன்றையும் நான் பாடங் கேளாதவனாதலால் அப்புராணத்தைக் கேட்பதில் எனக்கும் ஆவல் இருந்தது. அரியிலூரில் சடகோபையங்கார் வீட்டில் அந்தப் புத்தகத்தைப் பார்த்து வியந்ததும் பிள்ளையவர்களிடம் வந்தபோது அந்நூலிற் சில பாடல்களுக்கு அவர் உரை கூறியதும் என் மனத்தில் இருந்தன. சில வாரங்கள் தொடர்ந்து கேட்டு வரலாம் என்ற நினைவும் அந்த நூலினிடத்தில் எனக்கு விருப்பம் உண்டானதற்கு ஒரு காரணம்.
அப்புராணம் பாடம் கேட்கத் தொடங்கினேன். விடியற்காலையிலேயே பாடம் ஆரம்பமாகிவிடும். எட்டு மணிவரையில் பாடம் கேட்பேன். பிறகு அக்கிரகாரம் சென்று பழையது சாப்பிட்டு வருவேன். வந்து மீட்டும் பாடங் கேட்கத் தொடங்குவேன். பத்து அல்லது பதினொரு மணிவரையில் பாடம் நடைபெறும். மத்தியான்னம் போசனத்திற்குப் பின் பிள்ளையவர்கள் சிரமபரிகாரம் செய்துகொள்வார். அவர் எழுந்தவுடன் மறுபடியும் பாடங் கேட்பேன். அநேகமாகப் பிற்பகல் நேரங்களில் வெளியூரிலிருந்து வருபவர்கள் அவரோடு பேசிக்கொண்டு இருப்பார்கள். மாலையில் திருமலைராயனாற்றிற்குச் சென்று திரும்பிவரும்போது அக்கிரகாரத்தின் வழியே வருவோம். நான் ஆகாரம் செய்துகொள்ளும் வீட்டுக்குள் சென்று உணவு கொள்வேன். நான் வரும் வரையில் அவ்வீட்டுத் திண்ணையிலே ஆசிரியர் இருப்பார்; அங்கே இருட்டில் அவர் தனியே உட்கார்ந்திருப்பார். வீட்டுக்காரர் சில சமயம் விளக்கைக்கொணர்ந்து அங்கே வைப்பார். நான் விரைவில் ஆகாரத்தை முடித்துக்கொண்டு வருவேன். ஆசிரியர் என்னை அழைத்துக்கொண்டு ஆறுமுகத்தா பிள்ளை வீட்டுக்குச் செல்வார். உடனே பாடம் நடைபெறும்.
இவ்வாறு இடைவிடாமல் பாடங் கேட்டு வந்தமையால் பட்டீச்சுரத்தில் இருந்தபோது நான் கேட்ட செய்யுட்கள் பல. நாகைப் புராணத்தில் முதலில் தினந்தோறும் ஐம்பது செய்யுட்கள் கேட்பேன்; இரண்டு வாரங்களுக்குப்பின் நூறுபாடல்கள் முதல் இருநூறு பாடல்கள் வரையில் கேட்கலானேன். பாடங் கேட்பதில் எனக்கு ஆவல்; பாடஞ் சொல்லுவதில் அவருக்கு நிறைவு. ஆதலின் தடையில்லாமலே பாடம் வேகமாக நடைபெற்றது. இந்த வேகத்தில் பல செய்யுட்களின் பொருள் என் மனத்தில் நன்றாகப் பதியவில்லை. இதனை ஆசிரியர் அறிந்து, “இவ்வளவு வேகமாகப் படிக்கவேண்டா. இனிமேல் ஒவ்வொரு செய்யுளுக்கும் சுருக்கம் சொல்லும்” என்றார். நான் அங்ஙனமே சொல்லலானேன். அப்பழக்கம் பலவித அனுகூலங்களை எனக்கு உண்டாக்கியது. செய்யுட் பொருளைத் தெளிவாக நான் அறிந்துகொண்டதோடு ஒரு கருத்தைப் பிழையின்றித் தக்கசொற்களை அமைத்துச் சொல்லும் பழக்கத்தையும் அடைந்தேன்.
அங்கங்கே அவர் பல தமிழிலக்கண, இலக்கியச் செய்திகளைச் சொல்லுவார்; காப்பியச் செய்திகளையும் எடுத்துக்காட்டுவார்.
அப்புராணம் முற்றுப் பெற்றது; எனக்குப் பூரணமான நிறைவு உண்டாகாமையால் இரண்டாவது முறையும் கேட்க விரும்பினேன். ஆசிரியர் அவ்வாறே மறுமுறையும் அதைப் பாடஞ் சொன்னார். முதன்முறை அறிந்துகொள்ளாத பல விசயங்கள் அப்போது எனக்கு விளங்கின.
மாயூரப் புராணம் ஆரம்பம்
நாகைப் புராணம் முடிந்தவுடன் அவர் மாயூரப் புராணத்தைப் பாடங் கேட்கலாமென்று சொன்னார். அதுவும் அவர் இயற்றியதே அப்புராணத்தில் 1894 செய்யுட்கள் இருக்கின்றன. திருநாகைக் காரோணப் புராணமும் மாயூரத்தல புராணமும் பிள்ளையவர்களாலேயே சென்னையிலிருந்த அவர் மாணாக்கராகிய சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார் என்பவரின் உதவியால் அச்சிடப்பெற்றவை. நாகைப் புராணம் அக்காலத்தில் பிரசித்தமாக இருந்தது. பலர் அப்புராணத்தை அடிக்கடி பாராட்டுவார்கள். பிள்ளையவர்கள் இயற்றிய புராணங்களுள் சிறந்தது நாகைப் புராணமென்று அவருடைய மாணாக்கர்களும் பிறரும் சொல்லுவார்கள். அத்தகைய புராணத்தை நான் இரண்டு முறை பாடங் கேட்டதில் எனக்கு மிக்க நிறைவு உண்டாயிற்று. தமிழ் நூற் பரப்பை நன்கு உணராமல் இருந்த நான் அப்புராணத்திற் காணப்பட்ட விசயங்களை அறியுந்தோறும் அளவற்ற இன்பத்தை அடைந்தேன்.
பிள்ளையவர்கள் புராணங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்து மாயூரப் புராணப்பிரதி ஒன்றை வாங்கி என்னிடம் கொடுத்து அதைப் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். அப்போது எனக்குப் புதிய ஊக்கம் உண்டாயிற்று. “பட்டீச்சுரத்திற்கு நல்ல வேளையில் வந்தோம். வேகமாகப் பாடம் கேட்கிறோம். நல்ல காவியங்களைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது” என்று எண்ணி மன மகிழ்ந்தேன். “இந்த சந்தோசம் நிரந்தரமானதன்று; பட்டீச்சுரத்திற்கு வந்தவேளை பொல்லாதவேளையென்று கருதும் சமயமும் வரலாம்” என்பதை நான் அப்போது நினைக்கவில்லை.
(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.
No comments:
Post a Comment