(சான்றோர் பெருந்தகை மு.வ. – 1/3 – தொடர்ச்சி)
10. சான்றோர் பெருந்தகை மு.வ. 2/3
நூற்பணி : புதினங்கள்
எழுபது நூல்களுக்கு மேல் எழுதி இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பெற்றுள்ள முனைவர் அவர்கள் முதன் முதலில் ‘பாவை’, ‘செந்தாமரை’ முதலிய நூல்களை 1943-44ஆம் ஆண்டுகளில் எழுதினார். இவர்களுடைய ‘கள்ளோ? காவியமோ?’ என்னும் புதினம் பலர் வாழ நல்வழி காட்டியது. ‘அல்லி’ ஆணுலகிற்கு எச்சரிக்கை தருவது. ‘அகல் விளக்கு’ எனும் புதினமும் இத்தகையதேயாகும். இந்நூல் 1962ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி (Sahitya Akademi) யாரின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றது. ‘கரித்துண்டு’ ஓவியர் ஒருவரின் வாழ்வினை விளக்குவது. பெற்ற மனம் தமிழிலும் தெலுங்கிலும் திரைப்படமாக வெளிவந்த புதினமாகும். பாத்திரப் படைப்புச் சிறந்த புதினம் ‘மலர்விழி’, ‘கயமை’ சமுதாயத்தின் ஆணவங்களை அம்பலத்தில் கொண்டுவந்து நிறுத்துவதாகும். ‘வாடாமலர்’, ‘மண் குடிசை’, ‘நெஞ்சில் ஒரு முள்’ முதலிய புதினங்கள் வாழ்க்கைத் தெளிவினை வகையுற எடுத்து மொழிவனவாகும்.
சிறுகதை
‘விடுதலையா?’ என்ற தொகுப்பில் அமைந்துள்ள சிறு கதைகள், இவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சில நிகழ்ச்சிகளுக்குக் கற்பனைச் சிறகு கட்டிப் பறக்க வைத்ததன் விளைவாகும், ‘குறட்டை ஒலி’ சிறுகதை வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
இலக்கிய நூல்கள்
ஏறத்தாழ முப்பது நூல்கள் இலக்கியங்களின் பிழிவாகவும், இவர்தம் எண்ணங்களின் வடிப்பாகவும் எழுந்துள்ளன. இலக்கியத்தின் நுண்மையினை-செவ்வியினை உயர்நிலையினை இவர்கள் நன்கு உணர்ந்து கட்டுரைகள் எழுதுவார்கள்.
மொழி இயல் தொடர்பாக ஏழு நூல்களும், ஐந்து நாடக நூல்களும். நான்கு வரலாற்று நூல்களும் இவர்கள் எழுதியுள்ளார்கள். கடிதமாக இவர்கள் எழுதியுள்ள ‘தங்கைக்கு’, ‘தம்பிக்கு’, ‘அன்னைக்கு’, ‘நண்பர்க்கு’ என்னும் நான்கு நூல்களும் மிகவும் புகழ் வாய்ந்தவை, தங்கைக்கு ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் நாடோறும் படிக்கவேண்டிய நூல்.
‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ என்னும் நூலில் திருவள்ளுவரின் தெளிந்த கருத்தினை வடித்துத் தருகின்றார்கள். இந்நூலிற்கு அழகியதோர் அணிந்துரை அருளிய தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் கூறுவன வருமாறு :
“இத்தகைய நூலை யாத்தவர் முனைவர் மு.வரதராசனார், எம்.ஓ.எல். ஆசிரியர் வரதராசரை யான் நீண்ட காலமாக அறிவேன். அவரை யான் முதன் முதல் பார்த்தபோது அவர்தம் மலர்ந்த விழியும். கூரிய மூக்கும், பரந்த நெற்றியும், நீண்ட முகமும், நிமிர்ந்த பிடரியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன. இவை, அறிவுக்கு உறையுளாயுள்ள மூளையின் திறத்தை அறிவிக்கும் புறக்கருவிகள். அவர்பால் யான் அன்று கண்ட இளமை இன்றும் பொலிகிறது, அவர் என்றும் இளைஞராயிருத்தல் வேண்டுமென்பது எனது வேட்கை. கவலைக் காட்சியை அவர் முகம் வழங்குவதில்லை. நல்ல மூளையும், நிலைத்த இளமையும், கவலை காணா முகமும் ஒருவரைச் சிறந்த கலைஞராக்கும் நீர்மையன. ஆசிரியர் வரதராசனார் பெருங்கலைஞராய் நாட்டை நல்வழியில் ஒம்புந் தொனடராவர் என்று யான் நினைத்ததுண்டு. அந் நினைவு பழுதுபடவில்லை. அவர் இயற்றியுள்ள நூல்கள் நாட்டை நல்வழியில் ஓம்பி வருதல் கண்கூடு…தோழர் வரதராசனார் ஒரு கலைக்கழகம்; பொறுமைக்கு உறையுள்;
அமைதிக்கு நிலைக்களன்; புரட்சி அவர் நெஞ்சில் பொங்குகிறது. தோழர் புரட்சியை இந்நூலில் பரக்கக் காணலாம்…… ஆசிரியர் வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கி மூழ்கிப் பலதிற பணிகளைத் திரட்டிக் கொணர்ந்தனர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடி உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சினின்றும் அரும்பும் கருத்துச் சிந்தனைக்குரியதே.”
தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களோடு தாம் கொண்ட தொடர்பே தம்முடைய வாழ்வின் பெறற்கரிய பேறு என முனைவர் அவர்கள் பெருமிதத்தோடு கூறிக் கொள்வார்கள். அரசியலில் காந்தியண்ணலும் திரு.வி.க. அவர்களுமே அவர்கள் மதித்த தலைவர்கள் ஆவர்.
முனைவர் அவர்களுக்குப் பிடித்த நூல்கள் திருவாசகம், தாயுமானவர், வள்ளலார், விவேகானந்தர், இராம தீர்த்தரின் அறிவுரைகள் முதலியனவாகும். மேலை நாட்டுப் பெரும் புலவர்களான பெருனாருடுசா (Bernard shah) பெருட்டுரண்டு இரசல் (Bertrand Russel),சி.இ.எம்.சோடு (C.E.M.Joad),எச்.சி.வெல்சு (H.G. wells). ஆலுடசு அக்குசுலி(Aldous Huxley) சோமர் செட்டுமாம் (Somerset Maugham), பேருலசு பர்க்கு (Pearl S. Buck) முதலியோர் படைப்பினையும் விரும்பிப் படிப்பார்கள்.
இவர்கள் அன்றியும் சங்கப் புலவர்கள். திருவள்ளுவர், இளங்கோவடிகள், பாரதியார் முதலான தமிழ்ப் புலவர் பெருமக்கள் அனைவரும் முனைவர் அவர்கள் மதித்துப் போற்றிய பெருந்தகைகள் ஆவர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் அனைவரும் ஒவ்வொரு துறையில் மிகச் சிறந்தவர்கள் என்பது முனைவர் அவர்களின் கருத்தாகும். தாகூர் (Tagore). காண்டேகர் நூல்களை இவர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்கள்.
தம் காலில் விழுவதை விரும்பாத சுவாமிகளிடத்தில் இவருக்கு நிரம்ப மதிப்புண்டு, மெளன. சுவாமிகளிடம் இவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு மிகுதியாகும். அற்புதங்களை நம்பாத – இறைவன் படைப்பின் நோக்கத்தை உணர்ந்த – தொண்டின் வடிவமான- அறத்திற்கு- இறைவனின் அறச்சட்டத்திற்குப் புறம்போகாமல் மதித்து வாழ்கின்ற துறவிகள்-தொண்டர்கள் இவர்கள் வணங்கி வழிபடும் தெய்வங்களாவர்.
இயற்கையே தெய்வம்; இயற்கையே மருத்துவம்; இயற்கையே எளிமை; இயற்கையே குரு; இயற்கையே உபதேசம், இயற்கையே சமயம்; சமய நூலினும் இயற்கையே பெரிது என்ற கோட்பாட்டினைக் குறைவறக் கொண்டவர்கள் இவர்கள்.
தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டமைக்கு இவ் இயற்கைப் பற்றும் பெருங் காரணமாகும்.
இவர்கள் ஆத்திகர் நாத்திகர் என்று அவர்தம் போலி வேடம் கண்டு, இனங்காண்பதில்லை. அவரவர் தம் வாழ்வை வைத்தே ஆத்திகர் நாத்திகர் எனப் பிரிக்கலாம் என்பார்கள். இறைவனின் அறச்சட்டத்தை யார் உண்மையாக மதித்து நடக்கின்றார்களோ, அவர்களே உண்மையில் ஆத்திகர்கள் என்பது இவர்கள் கொண்டிருந்த கருத்தாகும்.
காந்தியடிகள் ‘கடவுள் உண்மை வடிவானவர்’ என்று கூறுவதைவிட ‘உண்மையே கடவுள்’ என்று கூறுவதைப் பெரிதும் விரும்பினாராம். அக்கருத்து – அக்காந்தியக் கருத்து – இவர்கட்குப் பெரிதும் உடன்பாடு.
சீரிய சிந்தனையாளர்
முனைவர் மு.வ. அவர்கள் நிறையப் படித்தவர்; ஆழ்ந்து சிந்தித்தவர்; எண்ணிய எண்ணங்களை எழிலுற மக்கள் மன்றத்திலே வைத்தவர். அரியவற்றையெல்லாம் எளிதாக விளக்கிய மு.வ. அவர்கள் தம் கதை, கட்டுரை. கடிதம், புதினம் முதலியவற்றின் வாயிலாகத் தமிழ்ச் சமுதாயம் சிந்தித்துத் தெளிவு பெற்றுச் செயலாற்றத் தக்க வகையில் பல சீரிய மணிமொழிகளைத் தந்துள்ளார். அவற்றுள் சிலவற்றை ஈண்டு நினைத்துப் பார்ப்பது நற்பயன் நல்குவதாகும்.
“தமிழர்களுக்கு இனப்பற்றும் இல்லை; மொழிப் பற்றும் இல்லை. அதனால்தான் அவர்கள் இருக்க இருக்கக் கீழே போகிறார்கள்; ஆனால் பேதம் இல்லாமல் வெளியாரோடு பழகுவதில் நல்லவர்கள்.”
“தேவைகளை எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு வாழ்க்கையில் சிக்கல் குறையும்; துன்பம் குறையும்.”
“நல்லவர்கள் பிறருடைய செயலால் அழிவார்கள்; கெட்டவர்கள் தங்கள் செயலாலேயே அழிவார்கள்.!”
சான்றோர் தமிழ்
சி. பாலசுப்பிரமணியன்
No comments:
Post a Comment