07 May 2023 அகரமுதல
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 34 தொடர்ச்சி)
என் சரித்திரம்
அத்தியாயம் 20
விவாகமுயற்சி
வெண்மணியில் இராமாயணப் பிரசங்கம் நிறைவேறியவுடன் நாங்கள் மீண்டும் குன்னத்திற்கே வந்து சேர்ந்தோம். எங்களுக்குத் தலைமையான பற்றுக்கோடாக அந்த ஊர் இருந்தது. கணக்குப் பிள்ளை சிதம்பரம் பிள்ளையும் அவருடைய அன்பர்களும் குன்னத்தில் எங்களுக்கிருந்த பற்றைத் தங்கள் ஆதரவினால் பின்னும் உறுதி பெறும்படி செய்து வந்தனர். சிதம்பரம் பிள்ளையினிடம் பல ஏட்டுச்சுவடிகள் இருந்தன. அவற்றைத் தனியே ஓர் அறையில் தொகுத்து வைத்துக் கருத்துடன் அவர் பாதுகாத்து வந்தார். அச்சுவடிகளிற் சிலவற்றை நான் சில சமயங்களிற் படித்துப் பார்ப்பேன். ஒருநாள் பெரும்புலியூர் (பெரம்பலூர்)ப் பள்ளிக்கூடத்துத் தலைமை உபாத்தியாயராகிய இராயர் ஒருவர் குன்னத்திற்கு வந்திருந்தார். அவர் தமிழ்ப்பயிற்சி உடையவர். நான் தமிழ் நூல்களைப் படிப்பதையும் புத்தகங்கள் இல்லாமல் துன்புறுவதையும் உணர்ந்தார். முத்தப்பிள்ளையிடம் இரவலாகப் பெற்றிருந்த திருக்குறள் உரைப் புத்தகத்தை நான் படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அந்தப் புத்தகம் இரவலென்பதைத் தெரிந்துகொண்டு, “என்னிடம் இந்தப் புத்தகம் ஒன்று இருக்கிறது; அங்கே வந்தால் தருகிறேன்” என்று சொன்னார். அவருடைய இரக்கத்தைக் கண்டு நான் ஆறுதலுற்றேன். குன்னத்தில் இருந்த காலத்தில் சில முறை பெரும்புலியூர் போக முயன்றும் அங்ஙனம் செய்ய இயலவில்லை. முத்தப் பிள்ளையின் புத்தகத்தை அவரிடமே கொடுத்துவிட்டேன்.
செய்யுள் இயற்றல்
சதகங்கள், மாலைகள் முதலிய நூல்களைப் படித்துப் படித்து உண்டான பழக்கத்தால் அவற்றின் ஓசையைப் பின்பற்றி நான் செய்யுள் இயற்றத் தொடங்கினேன். எதுகை மோனைகள் அமைய வேண்டுமென்பது பழக்கத்தால் ஒருவாறு தெரிய வந்தது. ஆனால் அசை, சீர், தளை, தொடை முதலிய பாகுபாடுகளோ வேறுவகையான யாப்பிலக்கண விதிகளோ எனக்குத் தெரியா. சதகப் பாட்டுக்களைப் போன்ற விருத்தங்களைப் பாடலானேன். குன்னத்திலுள்ள ஆதி கும்பேசுவரர் விசயமாகவும், மங்களாம்பிகை விசயமாகவும், ஆயிரவல்லி என்னும் துர்க்கையின் விசயமாகவும் சில பாடல்களை இயற்றினேன். தாயுமானவர் பாடல், பட்டினத்துப்பிள்ளையார் பாடல் முதலியவற்றிலே கண்ட கருத்துகளை அவற்றில் அமைத்தேன். “நான் பெண்களின் அழகிலே ஈடுபட்டுக் காலத்தைக் கடத்தி விட்டேன். அவர்கள் மயக்கத்திற்பட்டு வாழ்க்கையை வீணாக்கினேன்” என்றும், “செல்வரைப் புகழ்ந்து பாடி அலைந்து துன்புற்றேன்” என்றும் கருத்துகளை அமைத்துச் செய்யுட்களை இயற்றினேன். பழம்பாடல்களின் ஓசையை மாதிரியாக வைத்துக்கொண்டதைப்போலவே அவற்றின் கருத்துகளையும் அப்படியே அமைத்துக்கொள்வதை ஒரு பெருமையாக நான் கருதினேன்.
ஒரு நாள் நான் இயற்றிய செய்யுட்கள் சிலவற்றை என் பிதாவினிடம் சொல்லிக் காட்டினேன். அவர் அவற்றைக் கேட்டு என்னைப் பாராட்டி எனக்கு உத்சாகத்தை உண்டாக்குவாரென்று எண்ணினேன். அவரோ, “அட பைத்தியமே! இப்படியெல்லாம் பாடாதே” என்றார்.
“அவர்களெல்லாம் பாடியிருக்கிறார்களே; நான் பாடுவதில் என்ன தவறு?” என்று நான் கேட்டேன்.
“நீ சிறு பையன்; அவர்கள் உலக அனுபவத்தில் கட்டப்பட்டவர்கள். அவர்கள் சொன்னவற்றை யெல்லாம் நீயும் சொல்வது பொருத்தமன்று, பெண்மயலிற் சிக்கி வருத்தப்பட்டே னென்று அவர்கள் சொல்லலாம்; நீ சொல்லலாமா?” என்றார்.
அவர் சொன்ன தடை அப்போது எனக்கு நன்றாக விளங்கவில்லை. என் பாட்டில் என் அனுபவந்தான் இருக்க வேண்டுமென்பதை நான் தெரிந்துகொள்ளவில்லை. பெண்மயலிற் சிக்குவதற்குரிய பிராயமே வராத நான் அதிற் சிக்கி உழன்று வைராக்கியம் பிறந்தவனைப்போலே பாடுவது பேதமையென்பதை நன்றாக உணரவில்லை. அவர்கள் பாடினார்கள்; நானும் பாடினேன். அவர்கள் பாட்டை அடிக்கடி சொல்லுவது, அதன் ஓசையை ஒட்டி நானும் பாடுவது, அவர்கள் பாட்டிலுள்ள கருத்தைச் சிறிது மாற்றி வைப்பது என்னும் இந்த முயற்சிகளைத் தவிர, என் மனத்தில் யோசித்துக் கற்பனை செய்து ஒரு கருத்தை அமைக்க நான் முயலவில்லை: நான் இயற்றிய செய்யுட்களைப் பல முறை சொல்லிச் சொல்லி இன்புறுவேன்; அவற்றைச் சொல்லும்போது ஒரு வகையான பெருமிதத்தை அடைவேன்.
கல்யாணக் கவலை
வர வர எனது கல்வி அபிவிருத்தியடைந்து வருவதை என் தந்தையார் கவனித்து வந்தார். என்னைப் பற்றிய ஞாபகமே அவருக்கு நாளுக்கு நாள் அதிகமாயிற்று. என் கல்வியைப் பற்றிய முயற்சிகளைச் செய்துகொண்டு வந்த அவருக்கு என் விவாகத்தைப் பற்றிய எண்ணமும் உண்டாயிற்று. பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இளம்பருவத்திலேயே கல்யாணம் செய்துவிடும் வழக்கம் அக்காலத்தில் அதிகமாகப் பரவியிருந்தது. ஒரு குறிப்பிட்ட பிராயத்திற்குள் கல்யாணமாகாவிட்டால் பெரிய அகௌரவமென்று கருதி வந்தார்கள்.
எனக்குப் பதின்மூன்றாம் பிராயம் நடந்தபோதே என் தந்தையாருக்கு என் விவாகத்தைப் பற்றிய கவலை உண்டாகிவிட்டது. அக்காலத்தில் பெண்ணுக்காகப் பிள்ளையைத் தேடும் முயற்சி பெரும்பாலும் இல்லை; பிள்ளைக்காகப் பெண்ணைத் தேடும் முயற்சியே இருந்தது. “பெண்ணுக்கு வயசாகி விட்டதே” என்ற கவலை பெற்றோர்களுக்கு இருப்பதில்லை; “எங்கே இருந்தாவது ஒருவன் வந்து கல்யாணம் பண்ணிக்கொண்டு போவான்” என்ற தைரியம் இருந்தது. பிள்ளையைப் பெற்றவர்களோ தங்கள் பிள்ளைகளுக்குத் தக்கபருவம் வருவதற்கு முன்பே நல்ல இடத்தில் பெண் தேடி விவாகம் செய்விக்கவேண்டுமென்ற கவலையுடன் இருப்பார்கள்.
இத்தகைய கால நிலையில் என் தந்தையாரும் எனக்கு ஏற்ற பெண்ணைத் தேடத் தொடங்கினர். கல்யாணத்தில் பிள்ளை வீட்டினருக்கே செலவு அதிகம். குன்னத்தில் பெற்ற ஆதரவினால் ஊக்கமடைந்த என் தந்தையாருக்கு முன்பெல்லாம் குடும்பக்கடனை அடைக்க வேண்டுமென்ற நோக்கம் இருந்து வந்தது. நாளடைவில் அந்த நோக்கம் மாறி, “நிலத்தையேனும் விற்றுக் கடனை அடைத்து விடலாம்; இவனுக்கு எப்படியாவது கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட வேண்டும். வரும் பணத்தை அதற்காகச் சேர்க்க வேண்டும்” என்ற எண்ணமே வலியுற்றது. ஒருபால் பெண்ணைத் தேடும் முயற்சியும், ஒருபால் என் கல்யாணத்துக்குரிய பொருளைத் தேடும் முயற்சியும் நடைபெற்று வந்தன. இந்த முயற்சிகளில் தந்தையாரோடு என் சிறிய தந்தையாரும் சேர்ந்துகொண்டனர்.
களத்தூர் சென்றது
பெரும்புலியூர்த் தாலுகாவிலுள்ள களத்தூரினராகிய இராமையங்கா ரென்பவர் குன்னத்திற்கு அடிக்கடி வருவார். அவர் நாங்கள் வசித்து வந்த வீட்டினருக்கு உறவினர்; சுரோத்திரியதார்; நல்ல செல்வாக்குடையவர்; தமிழிலும் பழக்கமுள்ளவர். என் தந்தையாருக்கும் அவருக்கும் பழக்கம் உண்டாயிற்று; இருவரும் சிநேகிதராயினர். அக்கனவான் என் தந்தையாருக்கு என் விவாகத்தைப்பற்றிய கவலை இருப்பதை நன்கு உணர்ந்து, “நீங்கள் களத்தூருக்கு வந்தால் விவாகத்திற்கு வேண்டிய அனுகூலங்கள் கிடைக்கும். பணம் வேண்டுமேயென்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லி அழைத்தார். தமக்குச் சங்கடங்கள் நேரும்போதெல்லாம் இவ்வாறு அன்பர்கள் உதவ முன் வருவதைக் கடவுளின் திருவருளாகவே எண்ணி மகிழும் தந்தையார் அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
இராமையங்கார் தம் ஊருக்குச் சென்று சில தினங்களுக்குப் பிறகு எங்களை அழைத்து வரும்படி ஒரு வண்டியை அனுப்பினார். நாங்கள் அவ்வண்டியிற் சென்று களத்தூரை அடைந்தோம். எங்களுடன் சிறிய தந்தையாரும் சிறிய தாயாரும் வந்தனர்.
எங்களை வருவித்த ராமையங்கார் தனிகர். அவருக்கு ஒரு பெரிய மெத்தை வீடு உண்டு. அதில் ஒரு பாகத்தை ஒழித்துக் கொடுத்து எங்களை இருக்கும்படிச் சொன்னார். நாங்கள் அதில் தங்கினோம். எல்லா வகையான சௌகரியங்களும் அங்கே கிடைத்தன.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
No comments:
Post a Comment