Showing posts with label ப. சம்பந்த(முதலியா)ர். Show all posts
Showing posts with label ப. சம்பந்த(முதலியா)ர். Show all posts

Sunday, November 26, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 25 : தினசரி பட்டி

 








(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 24 : கிழ வயது-தொடர்ச்சி)

என் சுயசரிதை

22. தினசரி பட்டி

1928-ஆவது வருடம் நான் நீதிபதி வேலையினின்றும். விலகின பிறகு அநேக நண்பர்கள் “உங்கள் நாட்களை எப்படி கழிக்கிறீர்கள்” என்று கேட்டிருக்கின்றனர். இஃது ஒரு முக்கியமான கேள்வியாம். அநேக உத்யோகத்தர்கள் ஓய்வூதியம் (Pension) வாங்கிக்கொண்ட பிறகு தங்கள் காலத்தை எப்படிக் கழிப்பது என்று திகைத்திருக்கின்றனர். காலத்தைச் சரியாகக் கழிக்கத் தெரியாமல் வீட்டிலேயே மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மூச்சு விட்டுக்கொண்டிருந்தால் அது ஒருவன் உடல் நலத்திற்குக் கெடுதியைத்தான் தரும். ஆகவே 1928-ஆம் வருடம் முதல் இதுவரையில் என் காலத்தை எப்படி கழிக்கிறேன் என்பதைப் பற்றி விவரமாய் எழுதுதல் இதை வாசிக்கும் எனது சில நண்பர்களுக்காவது பிரயோசனப்படும் என்றெண்ணி இதைப்பற்றி கொஞ்சம் விவரமாய் எழுதுகிறேன். காலையில் ஆறுக்கு எழுந்திருப்பேன் (நான் பரிட்சைகளுக்குப் போயிருந்த காலத்தில்கூட முன்பாக எழுந்ததில்லை) விழித்தவுடன் நான் வணங்கும் தெய்வங்களை தொழுதுவிட்டு அரை மணி நேரம் உலாவுவதிலும் வியாயாமம்(உடற்பயிற்சி) எடுத்துக் கொள்வதிலும் காலம் கழியும், நான் எடுத்துக்கொள்ளும் வியாயாமத்தைப்பற்றி அறிய விரும்பும் நண்பர்கள் எனது ‘நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்’ என்னும் நூலில் நான் இதைப்பற்றி எழுதியதை படித்துக்கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன். அவற்றைப் பற்றி இங்கு எழுதுதல் என்றால் இச்சிறு நூல் மிகவும் பெரிதாகி விடும். அதில் எது தவறினாலும் ஒன்று மாத்திரம் தவறமாட்டேன். அதாவது ஐந்து நிமிடம் எடுத்துக் கொள்ளும் பிராணாயாமமாம். இது மிகவும் முக்கியம் என்று நான் வற்புறுத்துகிறேன். இது முடிந்தவுடன் என் காலைக் கடன்களை எல்லாம் தீர்த்துக் கொண்டு என் காலை பிரார்த்தனையை முடிப்பேன். இதெல்லாம் முடிவதற்குச் சுமார் 2 மணி நேரமாகும். பிறகு என் காலை சிற்றுண்டியை அருந்துவேன். ஏதாவது கொஞ்சம் பட்சணமும் ஒரு பழமும் நான் அருந்தும் சுக்கு காப்பியுமாம். சுக்கு காப்பி என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றினால் ஆனதாம், நான் காப்பி சாப்பிடுவதை விட்டு 50 வருடங்களுக்கு மேலாயது. இதன் பேரில் 9 மணி முதல் 11 மணி வரை நான் ஏதாவது எழுத வேண்டிய நாடகத்தையோ கதையையோ கட்டுரையையோ எழுதுவதில் காலங் கழிப்பேன். பிறகு என் நித்ய பூசையை முடித்துக்கொண்டு உணவு கொள்வேன். இது எல்லாம் முடிவதற்கு ஏறக்குறைய ஒரு மணியாகும். ஒரு மணி முதல் இரண்டு மணி வரையில் மெத்தையின் பேரில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு முழு ஓய்வு எடுத்துக் கொள்வேன். பிறகு இரண்டு மணி முதல் 4 மணி வரையில் மறுபடியும் ஏதாவது எழுதுவதிலோ அதற்கு ஏதாவது படிக்க வேண்டியதிலோ என் காலத்தைப் போக்குவேன். நான்கு மணிக்கு மேல் ஏதாவது ஒரு சிறு பழமும் (முக்கியமாக பேரிச்சம் பழமும்) பாலும் அருந்துவேன் பிற்பாடு சுகுண விலாச சபைக்கோ, S.I.A.A-வுக்கோ, மது விலக்கு சங்கத்துக்கோ போய் அங்கு ஏழரை மணி வரையில் சீட்டாடுவதிலோ நண்பர்களுடன் பேசுவதிலோ காலங்கழிப்பேன் 8 மணிக்குள் வீடு திரும்பி விடுவேன். இரவு பூசையை முடித்துக் கொண்டு 9 மணிக்குள் சாப்பிட்டு விட்டு உறங்கப் போவேன்.

மேற்சொன்ன தினசரி நடவடிக்கைகள் என் கண் பார்வை சுமாராய் இருந்த போது; பிறகு என் கண் பார்வை முற்றிலும் குறைந்த போது அந்த நடவடிக்கைகளில் சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. (1) காலையில் 9 மணி முதல் 11 மணி வரையில் என் பேரன் ஒருவனை ஆங்கிலத்தில் படிக்கச் சொல்லி கேட்டு வருவேன் அல்லது அவனுக்கு ஆங்கில பாடம் கற்பிப்பேன். (2) 2 மணி முதல் 4 மணி வரையில் நான் காலையில் யோசித்திருந்த நாடகத்தையோ, கதையையோ, கட்டுரையையோ என் பேத்தி ஒருத்திக்குச் சொல்ல, அவளை எழுதிக் கொள்ளச் சொல்வேன். (3) சாயங்காலம் வெளியில் போகாதவனாய் வீட்டிலேயே 6 மணி வரையில் உலாவி வியாயாமம் எடுத்துக் கொள்வேன். (4) 6 மணி முதல் 7 மணி வரை என் சிறிய பேரனை படிக்கச் சொல்லித் தமிழ்ப் பாடம் கற்பிப்பேன். புதன் கிழமைகளில் மாத்திரம் மது விலக்கு சங்கத்திற்கு ஒரு இழுவை வண்டியில்(சிக்சாவில்) மற்றவர்கள் உதவியினால் ஏறிக்கொண்டு போய் வருவேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Sunday, November 19, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 24 : கிழ வயது

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 23 : மது விலக்குப் பரப்புரை – தொடர்ச்சி)

என் சுயசரிதை

21. கிழ வயது

இந்துக்களாகிய நம்முள் ஒருவனுக்கு சட்டிபூர்த்தி ஆனவுடன் அதாவது 60 ஆண்டு முடிந்தவுடன் கிழவன் என எண்ணப்படுகிறான். பைபிள் என்னும் கிறித்தவ சிறந்த மத நூலில் ஒருவனுக்குக் கிழ வயது. 70 ஆண்டில் ஆரம்பிக்கிறது என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

என் வரைக்கும் என்னுடைய 75-வது ஆண்டில்தான் நான் கிழவனாக என்னை மதிக்கலானேன். அதற்கு முக்கிய காரணம் அதுவரையில் என் கண்பார்வை நன்றாய் இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக குறையலானதுதான். முதலில் இதை நான் அதிகமாக கவனிக்கவில்லை. ஒருநாள் திரைப்படத் தணிக்கையாளராக நான் ஒரு படத்தைப் பரர்க்கவேண்டி வந்தபோது கொஞ்சம் இடர்ப்பட்டேன். உடனே நான் ஒரு கண் வைத்தியரிடம் காட்டியபோது அவர் “இதொன்றுமில்லை, திரைப் படங்களை நீ பல வருடங்களாகத் தணிக்கையாளராக வேலை பார்த்ததினால் உனது கண் அதிர்ச்சி அடைந்து பலவீனப்பட்டிருக்கின்றது” என்று சொல்லி ஒரு மூக்குக் கண்ணாடியை உபயோகிக்கும்படி சொன்னார். சாதாரணமாக 40-ஆம் ஆண்டில் கண்கள் பலவீனப்பட்டு ‘சாலேசுவரம்’ என்னும் கண் நோய் வருவது வழக்கம். சாலேசுவரம் என்னும் பதமே ‘சாலீசு’ என்னும் இந்துத்தானி பதத்திலிருந்து வந்ததாம். சாலீசு என்றால் 40 என்று அர்த்தம். எனக்கு இந்த சாலேசுவரம் வரவே இல்லை. அப்படியிருக்க எனது 75-ஆவது வயதில் இத்துன்பம் ஆரம்பித்தபோது பல வைத்தியர்களுக்குக் காண்பித்து வினவினேன். அவர்களுள் சில ஆங்கில வைத்தியர்கள் (Allopathic) உன் கண் பார்வை மட்டமாகி வருவதற்குக் காரணம் சிறுவயது முதல் சிறு எழுத்துகளில் அச்சிடப்பட்ட புத்தகங்களை எந்நேரமும் படித்துக் கொண்டிருந்தபடியால்தான் என்று கூறினர். மற்றும் சிலர் ‘நீ திரைப்படத் தணிக்கையாளராக இருந்து படங்களை அடிக்கடிப் பார்க்க வேண்டியபடியால் இந் நோய் வந்திருக்கவேண்டும்’ என்றார்கள். ஒரு ஆயுற்வேத வைத்தியருக்கு என் கண்களைக் காட்டி வினவியபோது அவர் என்னை “நீ வாரத்திற்கு இருமுறை அப்யங்கான சுநானம் (எண்ணெய் தேய்த்து குளித்தல்) செய்து வருகிறாயா”? என்று கேட்டார். அவருக்கு உரைத்த உண்மையை இங்கு எழுதுகிறேன் “1926-ஆம் ஆண்டில் என் மனைவி தேக வியோகமானாள். உடனே வந்த தீபாவளிமுதல் நான் அப்யங்க சுநானத்தை விட்டுவிட்டேன்” என்று கூற, அவர் “அதனால் தான் மூளை சூட்டினால் உன் கண் கெட்டு போயிருக்கிறது என்று கூறினார்” அதன் பிறகு கண் வைத்தியர்களிடம் பன்முறை காட்டிய போது “இது கேடராக்ட் (Cataract) என்னும் வியாதி இது முற்றினால் ஒழிய ஆபரேஷன் (Operation) செய்யக்கூடாது” என்று கூறிக்கொண்டு வந்தனர். கடைசியாக கண் மருத்துவமனையில் மிகப் பிரபல வைத்தியரிடம் காட்டி கேட்டபோது அவர் கூறிய பதிலை அப்படியே எழுதுகிறேன். “ திரு. சம்பந்தம், உன் கண் பார்வை முற்றிலும் போய் நீ அந்தனாக போகமாட்டாய். கவலைப் படவேண்டா” என்று சொன்னாரேயொழிய அறுவை மருத்துவம் செய்யக்கூடும் என்று சொல்லவேயில்லை. உனக்கோ வயதாகி விட்டது இனி அறுவை மருத்துவம் செய்வதில் பிரயோசனமில்லை என்று சொல்வதற்குப் பதிலாக மேற்கண்டபடி சொன்னார் என்று தான் அர்த்தம் செய்துகொண்டேன். இதைக் கேட்டவுடன் நான் தமிழுக்கும் தமிழ் நாடகங்களுக்கும் எப்படி பணி செய்வது என்று மிகவும் வருத்தப்பட்டேன் என்றே கூறவேண்டும்.

இச்சமயம் ஏதோ என் மனத்தில் விரக்தி தோன்றினவனாய் சந்நியாசம் மேற்கொள்ளத் தீர்மானித்தேன். அதற்காக என் உயிர் நண்பரும் குருவுமான. வி. வி. சிரீனிவாச ஐயங்காருடன் கலந்து பேச அவர் “அப்படியே செய்யலாம், உண்மையில் சந்நியாசம் என்பது பெண்ணாசை, பொன் ஆசை, மண் ஆசை மூன்றையும் விட்டு வாழ்வதாகும் மேல் வேசங்களில் ஒன்றுமில்லை” என்று சொல்லி முதற்படியாக ‘குடசர சந்நியாசம்’ என்பதை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். அதற்குரிய நிபந்தனைகளையும் எனக்குப் போதித்தார். அவர் கட்டளைப்படி என் சொத்துகளை எல்லாம் என் குமாரனான வரதராசனிடம் ஒப்புவித்துவிட்டு வீட்டின் மேல்மாடி அறையில் வசிக்க ஆரம்பித்தேன். இது நடந்தது 1950-ஆம் வருடம் பிப்பிரவரி முதல் தேதியாகும். மேற்சொன்ன மூன்று பற்றுகளையும் நான் வழித்தபோதிலும் தமிழ் மொழியிலுள்ள அதிலும் தமிழ் நாடகத்திலுள்ள பற்றை மாத்திரம் விட என்னால் முடியவில்லை. இதைப்பற்றி யோசித்து இது உலகப் பற்றைச் சார்ந்ததல்ல. தமிழ் மொழிக்குத் தமிழனாய்ப் பிறந்த நான் செய்யவேண்டிய கடமையாகும் என்று என் மனதைத் தேற்றிக்கொண்டேன். திருநாவுக்கரசு சுவாமிகள் “என் கடன் பணி செய்து கிடப்ப தாகும்” என்று கூறியிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே தமிழில் நான் எழுதுவதை நிறுத்தலாகாது என்று தீர்மானித்தேன். ஆயினும் கண் பார்வையில்லாத நான் இதை எப்படிச் செய்வது? என்று முன் சொன்னபடி பெருங் கலக்கமுற்றேன். தினம் நான் இரவில் தூங்கப் போகுமுன் நான் வணங்கும் தெய்வங்களைத் துதித்துவிட்டு தூங்குவது என்வழக்கம். அப்படி செய்யும் போது “இதற்கு நீங்கள் தான் ஒருவழிகாட்ட வேண்டும்” என்று கேட்டுவந்தேன். சிலதாள் கழித்து ஒரு நாள் காலை நான் விழித்தவுடன் என் புத்தியில் ஃகோமர் (Homer) என்றும் கிரேக்க ஆசிரியர் பிறவிக் குருடர் எப்படி பெருங் காவியங்களை எழுதினார் ? மில்டன் (Milton) என்னும் பெயர் பெற்ற ஆங்கில நூலாசிரியர் தன் கண் பார்வை முற்றிலும் இழந்தபின் ‘Paradise lost’ என்னும் கிரந்தத்தை எப்படி எழுதினார்? அந்தகக் கவி வீரராகவ முதலியார் இராமாயணக் கீர்த்தனையை எப்படி எழுதினார்? அவர்கள் செய்தபடி நாம் என் செய்யலாகாது? என்னும் எண்ணம் உதிக்க, உடனே எனக்கு வழிகாட்டிய தெய்வங்களைத் துதித்துவிட்டு அவர்கள் செய்தவாறே நாமும் செய்வோம் என்று தீர்மானித்தேன். அன்றைத் தினம் போசனத்திற்கு மேல் என் பேத்திகளுள் ஒருத்தியை அழைத்து நான் எழுதவேண்டுமென்று உத்தேசித்திருந்த ஒரு சிறு கட்டுரையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லி அவளை எழுதிவரச் சொன்னேன். இப்படி செய்வது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் துன்பமாய்த்தான் இருந்தது. ஆயினும் பத்துப் பதினைந்து நாட்கள் கழித்தவுடன் சகசமாய்போய்ச் சுலபமாகிவிட்டது. அதுமுதல் இதுவரைக்கும் நான் எழுதி அச்சிட்டு வந்த நாடகங்கள், கதைகள் முதலியனவெல்லாம். இவ்வாறு தான் வெளியிடப்பட்டன. அச்சிட வேண்டிய புத்தகங்களின் திருத்தப்படிகள் (Proof) வந்தால் அவளைப் படிக்கச் சொல்லித் திருத்திக்கொண்டு வந்தேன். ஆயினும் இப்படிச் செய்வதில் பல எழுத்துப் பிழைகள் திருத்தப்படாமல் புத்தகங்களில் இருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை. என் கண் பார்வை மிகவும் குறைந்துபோய் என் பேரன் பேத்திகளுக்குச் சொல்லி அச்சிட்ட புத்தகங்கள்:- இல்லறமும் துறவறமும் (1952) சபாபதி முதலியாரும் பேசும் படமும் (1954) நான் குற்றவாளி (1954) நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும் (1955) தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை 2 பாகங்கள் (1957) பலவகைப் பூங்கொத்து {1958).
(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Sunday, November 12, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 23 : மது விலக்குப் பரப்புரை

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 22 :நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2) தொடர்ச்சி)

என் சுயசரிதை

17. மது விலக்குப் பிரசாரம் செய்தது

எனது நாடக மேடை நினைவுகள் என்னும் புத்தகத்தில் 1895-ஆம் வருடம் நான் பெங்களுருக்குப் போயிருந்தபோது ஒருமுறை அரை அவுன்சு பிராந்தி சாப்பிட்டு அதனால் பெருந்துன்பம் அநுபவித்த விசயத்தை எழுதியிருக்கிறேன். பட்ட ணம் திரும்பி வந்தவுடன் மதுவிலக்குச் சங்கம் ஒன்றைச் சேர வேண்டுமென்று தீர்மானித்தேன். ஆயினும் நானாகக் காசு சம்பாதித்தாலொழிய எந்தச் சங்கத்தையும் சேரக்கூடாதெனத் தீர்மானித்தவனாய் 1898-ஆம் வருடம் நான் வக்கீலாகி பணம் சம்பாதித்த பிறகுதான் சென்னையில் தாபிக்கப்பட்ட H.G.T.L. என்னும் மது விலக்கு சங்கத்தில் ஓர் அங்கத்தினனாகச் சேர்ந்தேன். இச்சங்கத்தின் இரண்டு முக்கிய கோட்பாடுகள் ஒன்று ஆயுள் பரியந்தம் எந்தவிதமான மதுவையும் தீண்டலாகாதென்பது. இரண்டு அங்கத்தினர் எல்லாம் சகோதரர் மனப்பான்மையோடு வாழவேண்டும் என்பவையாம். அதுமுதல் இந்த 64 வருடங்களாக அச்சங்கத்திற்கு முக்கியமாக புதன்கிழமைகளில்போய் உழைத்து வருகிறேன். இச்சங்கத்தின் சார்பாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள ஏதாவது ஓர் ஊருக்குப்போய் மதுபானம் செய்வதினால் உண்டான தீமையைப்பற்றி பிரசாரம் செய்து வருகிறோம். சில வருடங்களுக்கு முன் ஆங்கில அரசாங்கத்தார் சென்னை இராசதானி முழுவதும் மதுவிலக்குப் பிரசாரம் செய்யவேண்டுமென்று ஒரு குழுவை ஏற்படுத்தியபோது என்னை அக்குழுத் தலைவனாக ஏற்படுத்தினார்கள். இதன் மூலமாக பழைய சென்னை இராசதானியில் பல சில்லாக்களுக்குப்போய் நான் மதுவிலக்கு பிரசாரத்தின் வேலை சரியாக நடக்கிறதா என்று பார்த்து வந்தேன்.

18. S. I. A. A.

சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேசன் என்னும் அச்சபையானது சென்னையில் கிரிக்கெட்டு (Cricket), டென்னிசு (Tennis) கால் பந்து (Foot ball) முதலிய விளையாட்டுகளை அபிவிருத்தி செய்வதற்காகவும் வருடந்தோறும் திசம்பர் மாதம் பீபில்ஸ் பார்க்கு (People’s Park) வேடிக்கை விநோதங்களை நடத்தவும் இரேக்குளா முதலிய பந்தயங்களை நடத்தவும் 1903-ஆம் வருடம் சென்னை வாசிகள் சிலரால் எற்படுத்தப்பட்டது. அதில் நான் ஒருவனாய் இருந்தேன். அதுமுதல் பல வருடங்கள் குழு அங்கத்தினனாகவும் சில வருடங்கள் உபதலைவனாகவும் இருந்து அதன் காரியங்களைப் பார்த்துவந்தேன். தேகப் பயிற்சிக்கும் வியாயாமத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட இச்சபையின் தொடர்பை விடலாகாதென்றும், இப்போது என் முதிர் வயதிலும் அங்கத்தினனாக இருக்கிறேன்.
  1. கல்வித் துறைக்காக உழைத்தது
    சென்னை பல்கலை கழகத்தில் (University) நான் தமிழ் மொழியின் சார்பாக ஒரு செனெட் அங்கத்தினனாக பிரிட்டிசு இராசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டுச் சில வருடங்கள் உழைத்து வந்தேன். அன்றியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஓர் அங்கத்தினனாக காலஞ்சென்ற இராசா சர். அண்ணாமலை செட்டியாரால் நியமிக்கப்பட்டுச் சில வருடங்கள் அதன் வேலையில் கலந்து கொண்டேன். அண்ணாமலை நகரில் பன்முறை நாடகங்களைப்பற்றி சொற்பொழிவு செய்தேன்.
மேலும் ‘சென்னை இசுகூல் புக் லிட்ரெச்சர் சொசைட்டி’ என்னும் சங்கத்தில் ஒரு குழு அங்கத்தினாகப் பல் வருடங்களாகத் தமிழ் அபிவிருத்திக்காக உழைத்து வருகிறேன். இச் சபையானது நான் பிறப்பதற்கு முன்பாக என் தகப்பனார் முதலிய பல சென்னை வாசிகளால் ஏற்படுத்தப்பட்டதாம்.
  1. சென்னபுரி அன்னதான சமாசத்தில் பங்கெடுத்துக் கொண்டது
இந்த தரரும சமாசத்தில் பல வருடங்களாகக் குழு அங்கத்தினனாக உழைத்துவந்தேன். இந்த சமாசத்துக்கு உரூபாய் 1000 கொடுத்து என் தகப்பனார் தாயார் திதிகளில் ஏழைகளுக்கு உணவு கொடுக்கும்படியாக ஏற்பாடு செய்தேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Sunday, November 05, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 22 : நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2)

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 21 : 16. நாடகக் கலை … சிறுதொண்டுகள் (1) தொடர்ச்சி)

என் சுய சரிதை

நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2)

13–3–49 விக்குடோரியா பொது அரங்கில் (Public Hall) இன்று ‘தோட்டக்காரன்’ எனும் ஓர் சமூக நாடகத்தில் செட்டியாராக நடித்தேன். நடித்தது எனக்கு மன நிறைவாக இருந்தது. விக்குடோரியா பொது அரங்கில் இதற்கு முன்பாக 10 வருடங்களுக்கு முன் நடித்தது.

24-4-49, அன்று விக்குடோரியா பொது அரங்கில் சுகுண விலாச சபையார் எனது நாடகமாகிய ‘சந்திரஃகரி’யை நடத்தினார்கள். அப்பொழுது அதில் நடித்த முக்கிய நடிகர்களின் வேண்டுகோளின்படி மூன்றாவது காட்சியில் சந்திரஃகரி அரசன் அரசவையில்(தர்பாரில்) ஓர் சேவகனாக நடித்தேன்.

14-8-49-இல் சென்னை சிவனடியார் திருக்கூட்டம் முதலிய இந்துமத சம்பந்தமானவற்றிற்காக இராயபுரம் நாடக சபையார்கள் விக்குடோரியா பொது அரங்கில் ‘நந்தன் சாம்பன்’ என்னும் தமிழ் நாடகத்தை நடத்தியபோது தலைமை வகித்தேன்.

இவ்வருடம் செட்டம்பர் மாதம் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் சிறந்த நாடகங்களுக்குப் பரிசு அளிப்பதற்காக ஏற்படுத்திய நாடகப் போட்டியில் அவர்களுக்கு அனுப்பப்பட்ட 13 நாடகங்களைப் பரிசோதித்து சிறந்த நாடகத்தை தேர்ந்தெடுப்பதற்காக என்னைப் பரிசோதகனாக ஏற்படுத்திய காரியத்தைச் செட்டம்பர் 20-ஆந்தேதிக்குள் முடித்தேன்.

1949-திசம்பர் 30-ஆந்தேதி சென்னபுரி ஆந்திர மகாசபை நடத்திய ‘நாடக கலா பரிச’த்தில் இரண்டாம் நாள் விக்குடோரியா பொது அரங்கில் 9 மணிக்கு அவர்கள் கேட்டுக் கொண்ட படியால் தலைமை வகித்து ‘ஒரு நாடகத்தை எப்படி நடத்துவது’ என்றும் விசயத்தைப்பற்றிப் பேசினேன்.

1950 பிப்பிரவரி 25 சாயங்காலம் 5-30 மணிக்கு மதுரை தியாகராயர் கல்லூரியில் மாணவர் சங்கக் கூட்டத்தில் தமிழில் பிரசங்கம் செய்தேன். அங்கு நடந்த வேடப் போட்டியில் நடுவராக இருந்து பரிசு வழங்கினேன். தியாகராயர் வேண்டு கோளின்படி.

1950- பிப்ரவரி 25 காலை மாலை மதுரை பண்பாட்டு அவையில்(culture league) ‘தமிழ் நாடகம் முற்காலத்திலும் தற்காலத்திலும்’ என்பதைப் பற்றி 45 நிமிடம் பிரசங்கம் செய்தேன். பிறகு உடனே பொழுதுபோக்க மன்றத்திற்கு(ரெக்ரியேசன் கிளப்புக்கு)ப் போய் அவர்கள் நாடகப் பிரிவைக் குறித்து சிறு சொற்பொழிவு செய்தேன். 1950 மார்ச்சு 4ஆந் தேதி திருவிடந்தைக்கு மது விலக்கு சங்கத்தாருடன் போயிருந்த போது ‘வத்சலாஃகரம்’ ன்னும் தெருக் கூத்து நடந்தது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையில் அதைப் பார்த்து சிரீமான் அப்பாதுரை பிள்ளை அவர்கள் ஏற்படுத்திய வெள்ளிக் கோப்பையை அதில் மிகவும் நன்றாய் நடித்த நடிகனுக்கு கொடுக்கும்படி கேட்டனர். அதில் இரண்டு மூன்று பெயர் நன்றாக நடித்த படியால் பொதுவில் அவர்கள் நிறுவனத்திற்கு (அச்சிறு பாக்கம் கம்பெனிக்கு) அளித்தேன். 1950 ஏப்பிரல் தொண்டை மண்டலப் பள்ளியில் காலஞ் சென்ற மனோன்மணியம் நாடக ஆசிரியராகிய திரு. சுந்தரம் பிள்ளை அவர்களுடைய உருவப் படத்தைச் சேது பிள்ளை அவர்கள் தலைமையில் திரு. சிவஞான கிராமணியார் திறந்து வைத்த போது சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றி ஒரு சிற்சொற்பொழிவு செய்தேன். 11-7-1958 சென்னை தமிழ் நாடகக் கழகத்தினர் சார்பாக சட்டசபை பிரதம மந்திரியாகிய கனம் குமாரசாமி இராசா அவர்களிடம் நாடகங்களுக்கு வினோத வரியை (Entertainment tax) எடுத்து விடவேண்டு மென்று ஒரு தூதுக் குழு சென்ற போது நாம் அவர்களுள் ஒருவனாக சென்று கோட்டையில் அமைச்சரைக் கண்டு அரைமணி சாவகாசம் அதைப் பற்றிய காரணங்களையும் நியாயங்களையும் எடுத்துப் பேசினேன்.

31-12-1950 இல் மேற்கண்ட சங்கத்தார் திரைப்படக் குழுவில் சென்னைக்கு வந்து திருமதி சாந்தா ஆப்தே அவர்களுக்குக் கொடுத்த தேநீர் விருந்தில் நாடகக் கலையானது இந்தியத் தேசம் முழுவதையும் ஒன்று படுத்தக் கூடிய காரணங்களில் ஒரு முக்கியமானது என்பதைப் பற்றி பேசினேன். 1950 அட்டோபர் 18ஆந் தேதி சுகுண விலாச சபையின் தசரா கொண்டாட்டத்தில் ‘சபாபதி நான்காம் பாகம்’ போட்டபோது வேலைக்கார சபாபதியாக நடித்தேன். மேற்படி வருடம் 20, 30 தேதிகளில் நந்த விசயம் எனும் சிறுமிகள் பள்ளியின் இரண்டாம் வருடக் கொண்டாட்டத்தில் தலைவனாக இருந்து சில வார்த்தைகள் பேசினேன்.

1950 நவம்பர் 10 நாடகக் கழகத்தார் காலஞ்சென்ற சியார்சு பெர்னாட்சா அவர்கள் மரணத்திற்காக அனுதாபக் கூட்டம் கூடிய போது நான் அவரைப் பற்றிப் பேசினேன்.

1950 நவம்பர் 22 இந்து மதுவிலக்கு சங்கத்தில் இன்று நடிப்புக்கலை போட்டி நடந்த போது அதில் நான் பங்கெடுத்துக் கொண்டு ‘அமலாதித்யனும் அபலையும்’ என்னும் காட்சியில் நடித்து ஈசன் கருணையினால் பரிசு பெற்றேன்.

1951 பிப்பிரவரி மாதம் ஒரு நாள் புதிதாய் தாபிக்கப்பட்ட ஓர் தமிழ் பொழுதுபோக்கு (amateur) நாடக சபையின் முதல் நாடகத்திற்கு என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்டார்கள். அவர்கள் வேண்டுகோளை மறுக்க மனமில்லாதவனாய் ஒப்புக்கொண்டு நாடகத்தைப் பார்க்கப் போயிருந்தேன். நடிகர்கள் என்னவோ சுமாராக நன்றாய் நடித்தனர் என்றேதான் கூற வேண்டும். ஆயினும் நாடகம் எழுதப்பட்டது மாத்திரம் என் மனதிற்கு அதிருப்தியைத் தந்தது. ஒரு உதாரணத்தை இங்கு எழுது கிறேன். ஒரு முக்கிய நாடகப் பாத்திரம் தன் சகோதரர் மரித்ததாக செய்தி வருகிறது. அதைக் கேட்டவுடன் அந்த நடிகர் உடனே ‘கொலு கோவில் ‘ சங்கீதம் அப்பியசிக்கிறார்! இதில் விந்தை என்னவென்றால் இவர்தான் அன்று நடந்த நாடகத்தை எழுதினவராம். இதைக் கேட்டவுடன் கொஞ்சம் நேரம் இருந்து விட்டு ஏதோ ஒரு சாக்கைச் சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்பி விட்டேன். இந்த நாடகத்திலிருந்து போய் இக்காலங்களில் எழுதப்படும் நாடகங்களின் சில காட்சிகள் நான்கு ஐந்து வரி சம்பாசணைகளையுடையனவாயிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் திரைப்படங்களில் நடிக்கப்படும் நாடகங்கள் போலும், நாடக மேடை நாடகங்கள் விருத்தியடைய வேண்டுமென்றால் இம்முறையானது முற்றிலும் மாற்றப்பட வேண்டுமென்பது என் அபிப்ராயம்.

1957 மார்ச்சு 15 சென்னை நாடகக் கழகத்தார் வினோத வரியை (Entertainment tax) இரண்டு வருடங்கள் நாடக சபைகளுக்கு நீக்கிய கனம் கோபால் ரெட்டி அவர்களுக்கு தேநீர் விருந்து ஒன்று மெய்யப்பச் செட்டியார் செய்து அதில் என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்க, ஒப்புக் கொண்டு அக் கூட்டத்தில் கனம் கோபால் ரெட்டியாருக்கு வந்தனம் அளித்த போது தமிழ் நாடகத்திற்கு அவர் செய்த இந்த உபகாரத்திற்காக வந்தனம் தெரிவித்தேன்.

இவ்வருடம் ஏப்பிரல் மாதம் 15ஆந் தேதி வினோதமாக நாடகம் ஆடும் ஒரு சபையின் வருடாந்திர கொண்டாட்டத்தில் ஆடிய ‘அந்தமான் கைதி’ என்னும் நாடகத்திற்கு தலைமை வகிக்க இசைந்து சாயங்காலம் 6 மணிக்குப் போனேன். 9 மணி வரையில் சிறு நாடக சாலையில் கடினத்துடன் 3 மணி சாவகாசம் இருந்து நாடகத்தைக் கண்ணுற்றேன். நாடகம் மிகவும் நன்றாய் ஆடப்பட்டது. நாடகத்தின் முடிவில் நடிகர்களைப் புகழ்ந்து பேசி அவர்களை உற்சாகப்படுத்தினேன். இவ்வருடம் ஏப்பிரல் மாதம் 29ஆந் தேதி அருங்காட்சியக(மியூசியம்) நாடக சாலையில் ‘இசுடான்டர்டு ஆயில் கம்பெனி ரெக்ரியேசன் கிளப்பார்’ இராணி என்னும் ஓர் சமூக நாடகத்தை நடத்தினார்கள். அதன் அரங்கேற்றுதலுக்கு என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்க, நான் இசைந்து முதலிருந்து கடைசிவரை இருந்து நாடகத்தைப் பார்த்து சந்தோசப்பட்டேன். கதையை ஆங்கிலத்தில் எழுதியவர் ஒருவர். அதற்குத் தமிழில் தக்கபடி வசனங்கள் அமைத்தவர் மற்றொருவர். பாட்டுக்களை எழுதியவர் ஒருவர். இச்சமூக நாடகம் மிகவும் நன்றாயிருந்தது. நாடக முடிவில் பல வார்த்தைகள் பேசினேன். நாடகக் கலைக்கு ஊழியம் செய்யப் பல புதிய இளைஞர்கள் முன் வந்திருக்கிறார்கள் என்று அவ்வளவு உறுதியாக நம்பும்படியாகச் சிறந்த முறையில் நாடகத்தை நடத்தினார்கள்.

1951 ஆகட்டு, செட்டம்பர் மாதங்களில் சென்னை தமிழ் வளர்ச்சி கழகத்தார் தாங்கள் ஏற்படுத்திய நாடகப் புத்தகப் போட்டியில் அனுப்பப்பட்ட புத்தகங்களை அனுப்பி அவற்றில் சிறந்தவற்றைப் பரிசுக்காக தேர்ந்தெடுக்க என்னை ஓர் நடுவராக இருக்கும்படி கேட்க அதற்கிணங்கி அனுப்பப்பட்ட சுமார் 29 நாடகங்களை என் துன்பத்தையும் பாராமல் பரிசோதித்துப் பார்த்து என் அபிப்பிராயத்தை அவர்களுக்கு தெரிவித்தேன்.

7-10-51-இல் இலட்சுமி நாடக சபையாரால் மைலாப்பூரில் ‘அரசிளங்குமரி’ என்னும் தமிழ் நாடகம் நடத்தப்பட்டது. அதற்கு நான் தலைமை வகிக்க முன்பே ஒப்புக்கொண்டபடியால் அன்றைத்தினம் என் தேக அசௌக்கியம் குன்றியிருந்த் போதிலும் 9 மணி வரையில் பார்த்துக் கடைசியில் அவர்களுக்கு உற்சாக மூட்ட சில வார்த்தைகள் பேசி வீட்டிற்குத் திரும்பி னேன். உடனே சுரத்தால் பீடிக்கப்பட்டு ஏறக்குறைய பத்து பதினைந்து தினங்கள் துன்பப்பட்டேன்

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Sunday, October 08, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 18 : 11. தமிழ் நாடகத்திற்காகத் தான் உழைத்தது

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 17 : நான் எந்த கட்சியையும் சேராதது – தொடர்ச்சி)

‘என் சுயசரிதை’

அத்தியாயம் 11. தமிழ் நாடகத்திற்காகத்தான் உழைத்தது

1891 முதல் 1936 வரையில் நான் தமிழ் நாடகங்களை எழுதி அவற்றில் நடித்து உழைத்து வந்த சரிதையை “நாடகமேடை நினைவுகள்” என்னும் புத்தகத்தில் மிகவும் விவரமாக எழுதி அச்சிட்டுள்ளேன். ஆகவே அவற்றைப் பற்றி மறுபடியும் இங்கு எழுதுவேனாயின் கூறியது கூறல் என்னும் குற்றத்திற்கு உள்ளாவேன் என்று அஞ்சி இங்கு எழுதாது விடுத்தேன். அவறறைப் பற்றி பல விசயங்களை அறிய விரும்புபவர்கள் அந்நூலில் கண்டு கொள்ள வேண்டுகிறேன். ஆயினும் அந்நாடகங்களின் பெயர்களை மாத்திரம் இங்கு என் சுயசாதனையை எழுதுங்கால் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். அந்நாடகங்கள் அடியில் வருமாறு:- புட்பவல்லி, சுந்தரி, (இ)லீலாவதி, சுலோசனா, கள்வர் தலைவன், யயாதி, மனோகரா, சாரங்கதரா, இரண்டு நண்பர்கள், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், (இ)ரத்னாவளி, சத்குசித்(து), நற்குல தெய்வம், காலவரிசி, மார்க்கண்டேயர், காதலர் கண்கள், விரும்பிய விதமே, பேயல்ல பெண்மணியே, அமலாதித்யன், வாணிபுர வணிகன், சபாபதி 1ஆம் பாகம், சிம்க நாதன், வேதாள உலகம், பொன்விலங்கு, மகபதி, சிறுத்தொண்டர், (இ)ரசபுத்திர வீரன், விசயரங்கம், கண்டு பிடித்தல், கோனேரி அரசகுமாரன், சந்தையிற் கூட்டம், ஊர்வசியின் சாபம், புத்த அவதாரம், அரிச்சந்திரன், வள்ளிமணம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி 2ஆம் பாகம், சந்திரகரி, ஓர் ஒத்திகை அல்லது சபாபதி 3ஆம் பாகம், தாசிப் பெண், சுபத்திரா அருசுன், கொடையாளிக் கருணன், மனைவியால் மீண்டவன், சகதேவன் சூழ்ச்சி, சர்சன் செனரல் விதித்த மருந்து, விச்சுவின் மனைவி, இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், சகுந்தலை, விக்கிரமோர்வசி, மாளவிகாக்னி மித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை மாசிசுட்டிரேட்டு, உண்மையான சகோதரன், சபாபதி 4ஆம் பாகம், காளப்பன் கள்ளத்தனம், பிராம்மணனும் சூத்திரனும், உத்தம பத்தினி, குறமகள், வைகுண்ட வைத்தியர், சதி.சுலோசனா ஆம்.

இனி 1936-ஆம் வருடத்திற்குப் பிறகு நான் எழுதிய நாடகங்களைப் பற்றி சில விவரங்களைத் தெரிவிக்கிறேன்.

நல்ல தங்காள்: இது ஒரு பழைய கதையை நாடகமாக என்னால் எழுதப்பட்டது. இதை 1936 ஆம் வருசம் அச்சிட்டேன்.

ஏமாந்த இரண்டு திருடர்கள்: இது ஒரு சிறந்த நகைச்சுவை நாடிகையாம். இதை 1937-ஆம் வருசம் அச்சிட்டேன். எங்கள் சபையில் ஆடப்பட்டிருக்கிறது. சபாபதி 5ஆம் பாகம் அல்லது மாறுவேட விருந்து :- இதை 1937-ஆம் வருசம் அச்சிட்டேன்.

சோம்பேறி சகுனம் பார்த்தது: இதுவும் ஒரு ஃகாசிய நாடிகையாம். இதை 1937-ஆம் வருசம் அச்சிட்டேன்.
இசுத்திரீ இராச்சியம்:– இதுவும் ஒரு சிறு ஃகாசிய நாடிகையாம். இதை 1938-ஆம் வருசம் அச்சிட்டேன். மாண்டவர் மீண்டது. ஆசுத்தானபுர நாடக சபை சங்கீதப் பயித்தியம் இம் மூன்றையும் மூன்று நகைச்சுவை நாடகங்கள் என்கிற பெயருடன் 1940- ஆண்டு அச்சிட்டேன். இவை எங்கள் சடை தசரா கொண்டாட்டங்களுக்காக எழுதப்பட்டன. மாண்டவர் கண்டது பன்முறை ஆடப்பட்டிருக்கின்றது. மூன்றாவது சில முறை ஆடப்பட்டிருக்கிறது. இவை நான் எழுதிய ஃகாசிய நாடகங்களில் முக்கியமானவை என்று நினைக்கிறேன்.

இருவர்களும் திருடர்களே, கான நாதனும் அவனது அமைச்சர்களும், பாடலீபுரத்து பாடகர்கள், புத்திசாலி பிள்ளை மாண்டான், விருப்பும் வெறுப்பும், ஆலவீரன், நான் பிறந்த ஊர், சமீன்தார் வரவு, பெண்புத்திக் கூர்மை, இவை ஒன்றாக ஒன்பது குட்டி நாடகங்கள் என்ற பெயருடன் என்னால் 1941-ஆம் வருசம் அச்சிடப்பட்டன. முதல் எட்டும் பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. இவற்றை எழுதி அச்சிட்டதற்கு முக்கிய காரணம் இவை பள்ளிக்கூடத்து மாணவர்கள் ஒப்புவிக்க உயயோகக்கூடும் என்று. இவை சிலமுறை பள்ளிக் கூடங்களில் ஆடப்பட்டிருக்கின்றன. பெண் புத்திக் கூர்மை என்பது திருச்சிராப்பள்ளி வானொலிக்காக எழுதியது.

இந்தியனும் இட்லரும்:– இதை முதலில் ஆங்கிலத்தில் எழுதினேன். சென்னையிலுள்ள ஒரு பிரபலமான ஒரு சங்கத்தார் தாங்கள் ஆடுவதற்காக ஆங்கிலத்தில் எழுதித் தரவேண்டு மென்று என்னைக் கேட்டபோது எழுதி முடித்தேன். அதை யுத்த கட்ட நிவாரண பண்டுக்காக ஆடத் தீர்மானித்து நாடகப் பாத்திரங்களையும் பகிர்ந்து கொடுத்தனர் என் ஞாபகப்படி சில வருடங்களுக்கு முன்பாகப் பிறகு திடீரென்று இப் பிரயத்தனத்தை விட்டு விட்டு என் கையேட்டுப் பிரதியை திருப்பி அனுப்பிவிட்டனர். இப்படித் திருப்பிவிட்டதற்குக் காரணம் இன்றளவும் நான் அறிகிலேன். பிறகு கட்டப் பட்டு எழுதியது வீண் போகாதபடி இதைத் தமிழில் மொழி பெயர்த்து 1947-ஆம் வருசம் இதை அச்சிட்டேன். சாபாபதி சமீன்தார்:– இது ஒரு ஃகாசிய நாடக மென்று நான் கூறாமலே தெரியும். இதைப் பேசும் படக் காட்சிக்காகவே எழுதி அச்சிட்டேன். 1948-ஆம் வருசம். மேடை நாடகமாட பெரும்பாலும் கூடும். அவ்வாறு ஆடப்பட்டுமிருக்கிறது.

மனை ஆட்சி:– இது எனது நண்பர் சீமான் வி. வி. சிரீனிவாச ஐயங்கார் எழுதிய Domestication of Damoo என்னும் ஆங்கில நாடகத்தின் தமிழ் அமைப்பு. இது வானொலி நாடகமாக ஆடப்பட்டிருக்கிறது.

சதி சக்தி:– இது ஒரு பிரஃகசனம் அல்லது ஃகாசிய நாடிகையாம். இது வானொலிக்காக எழுதப்பட்டது.

தீயின் சிறு திவலை:– இதை என் வயோதிகத்தில் எழுதிய ஒரு முக்கியமான நாடகமாகக் கொள்கிறேன். இதை 1939-ஆம் வருசம் ஒரு பேசும் பட நிறுவனத்திற்காக எழுதிமுடித்தேன். இப்பிரயத்தனம் முடிவு பெறாமல் போகவே பிறகு 1947-ஆம் ஆண்டு இதை அச்சிட்டேன். இதை இத்தனை வருடம் நான் அச்சிடாமலிருந்ததற்குக் காரணம் இது வரையில் ஆங்கில இராச்சியத்தில் அடங்கியிருந்த நமது தேசம் நமது சுயராச்சியத்திற்கு வந்ததேயாம். 1947-ஆம் வருசம் ஆகட்டு மாதம் 15ந் தேதி வரையில் எங்கு இந்நூல் முன்பிருந்த துரைத்தனத்தாரால் தங்களுக்கு விரோதமாக அச்சிடப்பட்டதென்று எண்ணுகிறார்களோ என்று சிறிது அச்சப்பட்டேன். பிறகு 1947 -ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆ ந்தேதி அந்த அச்சம் அறவே நீங்கவே இதை அச்சிட்டேன். இது நாடக மேடைக்கும் பேசும் படக் காட்சிக்கும் உபயோகப்படும் என்பது என் துணிவு.

தீபாவளி வரிசை:— இது சில வருடங்களுக்கு முன்பு எழுதியது. எந்த வருடம் என்று எனக்கு சரியாக ஞாபக மில்லை. இதை 1947-ஆம் வருசம் அச்சிட்டேன்.

கலையோ காதலோ:– இதை நான் நாடகமாக எழுத ஆரம்பித்தது 1935-ஆம் வருசம். அச்சமயம் நான் பம்பாய்க்கு ஓர் பேசும்படக் காட்சிக்காகப் போயிருந்தேன். பிறகு இதை பேசும்படமாக மாற்றினால் நன்றாய் இருக்குமெனத் தீர்மானித்து அதற்குத் தக்கபடி மாற்றினேன். இதை எழுதும் போது என் மனத்திற்கு பூரண திருப்தியில்லா விட்டால் மேலே போவதில்லை என்னும் தீர்மானப்படி பன்முறை தடை பட்டது. இதை நான் முதிர் வயதில் எழுதிய சிறந்த நாடகங்களில் ஒன்றாக மதிக்கின்றேன். இதை யாராவது பேசும் படமாக மாற்றினால் அதை பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கிருக்கிறது. ஈசன் திருவுள்ளம் எப்படியோ! இவையன்றி சபாபதி துணுக்குகள் என்னும் சிறு காட்சிகளை சேர்த்து அச்சிட்டுள்ளேன்.

சென்ற பத்து பதினைந்து வருடங்களாக நான் எழுதிய நாடகங்களெல்லாம் பேசும் பட ரீதியாக இருக்கின்றன என்பதற்கு தடையில்லை. அதற்கு முக்கிய காரணம் ஏறக்குறைய அவைகள் எல்லாம் திரை நாடகங்களாக உபயோகப்பட வேண்டுமென்று எழுதினதேயாம். ஆங்கிலத்தில் எழுதிய நாடகங்கள் (1) முன்பே கூறியபடி அரிச்சந்திரா நாடகம் முதலில் ஆங்கிலத்தில் எழுதினதாம். (2) அந்தச் சிறுவர்கள் சபைக்கு நான் தமிழில் எழுதிய, யயாதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்தேன். (3) சபாபதி 4ஆம் பாகம் இது முதல் உலக யுத்தத்திற்காகப் பொருள் சேர்க்கக் கமிட்டியார் இச்சைப்படி சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுவதற்காகப் பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதியதாம். (4) முன்பே நான் கூறித்தபடி இந்தியனும் இட்லரும் என்னும் நாடகத்தை ஆங்கிலத்தில் முதலில் எழுதினேன். பிறகு தமிழில் மொழி பெயர்த்தேன். (5) சபாபதி துவிபாசி இது பெரும்பாலும் ஆங்கிலத்திலும் சிறிது தமிழிலும் எழுதப்பட்டது.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Sunday, October 01, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 17 : நான் எந்தக் கட்சியையும் சேராதது

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தா வேலை – தொடர்ச்சி)

‘என் சுயசரிதை’

அத்தியாயம் 10. நான் எந்தக் கட்சியையும் சேராதது

சென்னையில் பல கட்சிகள் உண்டு என்பது எல்லாரும் அறிந்த விசயமே. முக்கியமாக காங்கிரசுக் கட்சி, நீதிக் கட்சி என்று இரண்டு பெரிய கட்சிகளைப் பற்றி அறியாதோர். கிடையாதல்லவா? இவைபற்றிய என் விருத்தாந்தங்களை இங்கு எழுத விரும்புகிறேன்.. நான் கல்லூியில் படித்தபோது காங்கிரசுக் கூட்டம் சென்னையில் கூடிய போது ஒரு தொண்டராக இருந்தேன். இது நேர்ந்தது 1894-ஆம் வருசம். அதற்குமுன் சென்னையில் காங்கிரசு கூடிய போது அதன் வேடிக்கையைப் பார்க்க என் தகப்பனார் என்னை அழைத்துக்கொண்டுபோனது ஞாபகமிருக்கிறது. 1894–ஆம் ஆண்டிற்குப்பின் ஒருமுறை சென்னையில் காங்கிரசு மகாசபை கூடியபோது நான் ஒரு வரவேற்பு அங்கத்தினனாக இருந்தேன். இவ்வளவதான் இதில் நான் சம்பந்தப்பட்டது.

இனி நீதிக் கட்சியைப்பற்றி எழுதுகிறேன். காலஞ் சென்ற சர். பிட்டி தியாகராச செட்டியார் இக்கட்சியை ஆரம்பிக்கு முன், எங்கள் குடும்பத்து சம்பந்தியாகிய திவான்பகதூர் ப. இராசரத்தின முதலியார் ஒருநாள் சாயங்காலம் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நான் அவர் வீட்டிற்குப் போனபோது அவரும் காலஞ்சென்ற எல். டி. சுவாமிக்கண்ணு அவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் காங்கிரசுக்கட்சி பிராம்மணர்களுடைய அபிவிருத்தியையே கவனித்து வருகிறது. நாம் எல்லாரும் பிராம்மணர்கள் அல்லாதாரை உயர்த்தும் பொருட்டு ஒரு கட்சியை ஏற்படுத்தவேண்டும். அதில் நீ ஒரு முக்கிய பங்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டனர். அதற்கு நான் “இவ்விசயங்களிலெல்லாம் நான் தலையிட்டுக் கொள்ள எனக்கு இட்டமில்லை. என் வக்கீல் வேலையும் சுகுணவிலாச சபையுடைய வேலையுமே எனக்குப் போதுமானதாய் இருக்கிறது. மற்ற விசயங்களில் புகுவதற்கு எனக்கு விருப்பமில்லை. அவகாசமுமில்லை” என்று மறுத்தேன். பிறகு நீதிக் கட்சியை பிட்டி தியாகராச செட்டியார் தாபித்த போது அதில் சேரும்படியாக என்னைப் பன்முறை கேட்டிருக்கின்றனர். அன்றியும் அக்கட்சியில் முக்கியத்தராயிருந்த பானகல் இராசாவும் அதில் சேரும்படிக் கேட்டனர். இந்த பானகல் இராசா அவர்கள் என்னுடன் 4 வருடம் மாகாணக் கல்லூரியில் படித்த என் அத்தியந்த சிநேகிதர் என்று நான் முன்பே கூறியுள்ளேன். இவர்களிருவருக்கும் நான் அக்கட்சியைச் சேராததற்கு கூறிய நியாயத்தை இங்கு சுருக்கமாக எழுதுகிறேன், “நம்முடைய தேசம் முன்னேறவேண்டுமென்றால் இக்கட்சிகளெல்லாம் ஒழிந்து ஐக்கியப்பட்டாலொழிய, இக்கட்சிகள் எல்லாம் இருக்கும் வரையில் நம்முடைய நாடு அடிமை நாடாகத்தான் இருக்கும். ஆகவே நான் எந்தக் கட்சியிலும் சேரப் பிரியப்படவில்லை. அன்றியும் என் வாழ்நாட்களைத் தமிழ்க் கலையை அதிலும் நாடகக் கலையை அபிவிருத்தி செய்வதில் கழிக்கவேண்டுமென்பதே என் பேராசையாயிருக்கிறது. ஆகவே அரசாங்க விசயங்களிலும் கட்சி பேதங்களிலும் கைவிட்டுக்கொள்வேனாயின் என்னால் தமிழ்க் கலைக்குச் சரியாகத் தொண்டு செய்ய முடியாது” என்பதேயாம். இக்காரணம் பற்றியே நகராட்சி உறுப்பினராகவாவது இருங்கள். அதற்காக நீங்கள் ஒன்றும் கடினப்பட வேண்டியதில்லை. நாங்கள் எல்லாம் முயற்சிசெய்து உங்களை நகரசபை உறுப்பினராகச் செய்விக்கிறோம் என்று என்னைப் பல நண்பர்கள் கேட்டும் அதற்கு நான் இணங்கவில்லை. இதை ஏதோ பெருமையாக இங்கு எழுதியவனன்று. தமிழ் ஆசிரியனாகப் பெயர் எடுக்க வேண்டுமென்று ஒருவன் முற்படுவானாயின் அவன் வேறு விசயங்களில் தலை நுழைத்துக்கொள்ளாது, தமிழ்க்கலைக்கே உழைத்தாலொழிய அவன் எண்ணம் நிறைவேறாது என்பது என் உறுதியான அபிப்பிராயம்.

பிராம்மணர்கள், பிராம்மணர்கள் அல்லாதார்கள் எனும் இரண்டு கட்சி பேதங்களைப்பற்றி என் அபிப்ராயம் என்ன வென்றால் ஒரு கட்சி உயர்ந்தும் ஒரு கட்சி தாழ்ந்தும் இருந்தால் இந்த பேதத்தை நிவர்த்திப்பதற்கு இரண்டு மார்க்கங்கள் உள. ஒன்று உயர்ந்த கட்சியைத் தாழ்ந்த கட்சியார் தங்கள் நிலைக்கு இழுத்துக்கொள்ளல். இரண்டாவது மார்க்கம் தாழ்ந்த கட்சிக்காரர்கள் தங்களை உயர்த்திக்கொள்வது. இதில் சரியான மார்க்கம் என்னவென்று இதை வாசிக்கும் எனது நண்பர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். இந்த கட்சிப் பேதங்களெல்லாம் நீங்கி நமது தேசம் ஐக்கியப்படுவதற்குத் தற்காலம் உள்ள சாதி பேதங்களெல்லாம் அறவே ஒழிய வேண்டும்! முதலியார், நாயுடு, பிள்ளை என்கிற பிரிவுகளும் நீங்கவேண்டும். தீண்டாமை என்பது இருந்த இடம் தெரியாதபடி மறையவேண்டும். அப்பொழுதுதான் நமது நாடு தலையெடுக்கும் என்று என் மனத்தில் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இக்கொள்கை பற்றியே நான் என் பெயரின் பின்பாக ‘முதலியார்’ என்று எப்பொழுதும் கையெழுத்துப் போடுவதில்லை.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Sunday, September 17, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம் – தொடர்ச்சி)

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை

  1. 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்

1928-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் முதல் தேதி முதல் நான் அரசு வேலையிலிருந்து விலக வேண்டி வரும் என்று முன்பே அறிந்திருந்தபடியால் அதற்காக அது முதல் என் வாழ்நாட்களை எப்படி கழிப்பது என்று ஒரு தினசரிப் பட்டி ஏற்படுத்திக்கொண்டேன். அதை எழுது முன் எனது நண்பர்களில் பலர் நீ ஏன் மறுபடியும் வழக்குரைஞராகப் பழகலாகாது என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அன்றியும் சனவரி மாதம் 31-ஆந்தேதி என் நீதிமன்ற வேலையை முடித்தவுடன் சிறுவழக்கு நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஒன்றுகூடி காலஞ்சென்ற எனது நண்பர் பி. எம். சிவஞான முதலியார் மூலமாக என் பிரிவைப்பற்றி ஏதோ உபசார வார்த்தைகளை கூறிய பிறகு “நீங்கள் மறுபடியும் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக வந்து கலந்து கொண்டால் எங்களுக்குத் திருப்திகரமாயிருக்கும்” என்று கூறியபோது “அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்கள் கேட்பதை மறுப்பதற்காக மன்னிக்க வேண்டும்” என்று கூறினேன். அதற்கு முக்கிய காரணம் ஒருமுறை நீதிபதியாயிருந்த பிறகு மறுபடியும் வழக்குரைஞராகப் போவது சரியல்ல என்று நான் தீர்மானித்ததேயாம். மறு நாள் ஒரு தினசரி ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் (Reporter) என்னிடம் வந்து “இனி உங்கள் காலத்தை எப்படிக் கழிக்கப் போகிறீர்கள்” என்று கேட்டபோது, “ஈசுவரன் எனக்கு இனி அருளும் ஆயுட்காலத்தையெல்லாம் தமிழ் நாடகத்திற்காகவும் தமிழ்மொழிக்காகவும் தொண்டு செய்யத் தீர்மானித்திருக்கிறேன்” என்று பதில் கூறினேன். அன்று முதல் இந்நாள் வரை அந்த இரண்டு தொண்டுகளையும் என்னாலியன்ற அளவு செய்து வருகிறேன் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்கள் என்று நினைக்கிறேன். பிறகு வழக்குரைஞராகப் புகவேண்டுமென்று என்னை வற்புறுத்திய என் பல பந்துக்களுக்கும் சிநேகிதர்களுக்கும் நான் கூறின பதிலை இங்கு எழுதுகிறேன். அவர்கள் என்னிடம் வந்து “நீங்கள் ஏன் மறுபடியும் வழக்குரைஞராகச் சேரலாகாது?” என்று கேட்டதற்கு நான் “ஏன் மறுபடியும் வழக்குரைஞராகும்படிக் கேட்கிறீர்கள்?” என்று நான் வினவினேன். அதற்கு அவர்கள் “இல்லை நீங்கள் 7 வருடம் அரசு உத்தியோகத்தில் இல்லாதபடியால் உங்களுக்கு ஓய்வூதியம் (Pension) கூட ஒன்றும் கிடையாதே. ஆகையால் மற்றவர்கள் செய்வதுபோல் நீங்கள் மறுபடியும் சுலபமாக வழக்குரைஞராக (Advocate) ஆகி வேலை பார்த்து பணம் சம்பாதித்து சுகமாய் வாழலாமே என்று கேட்கிறோம்” என்றார்கள். அதற்கு நான் “மறுபடியும் இந்த வேலை பார்த்து கட்டப்பட்டுப் பணம் சம்பாதித்து அடையவேண்டு மென்கிற சுகத்தை அந்தக் கட்டமெல்லாம் இல்லாமல் இப்போது அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. அதையேன் தடுக்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன்.

சிலர் உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளின் பொருட்டு நீங்கள் அப்படிச் செய்யலாகாதா? என்று கேட்டதற்கு அடியிற் கண்டபடி பதில் உரைத்தேன்:- “ஈசன் கருணையினால் எனக்கிருப்பது ஓர் ஆண் பிள்ளையும் இரண்டு பெண்களும். அப்பிள்ளைக்கு நான் சம்பாதித்து வைத்த பொருளே போதுமானது. என் இரண்டு குமாரத்திகளையும் தக்க இடத்தில் விவாகம் செய்து கொடுத்து விட்டேன். அவர்கள் தங்கள் புருசன் வீட்டில் பரமேசுவரன் கருணை யினால் சுகமாக வாழ்கிறார்கள். இப்படியிருக்க எதற்காக நான் மறுபடியும் நீதிமன்ற வழக்கு வேலையில் கட்டப்பட வேண்டும்”. என்று சொல்லி “என் இச்சைப்படி, தமிழுக்காக உழைப்பதைத் தடுக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை