(உ.வே.சா.வின் என் சரித்திரம் – அத்தியாயம் 25 செங்கணத்தில் வாசம் தொடர்ச்சி)

விருத்தாசல (ரெட்டியா)ர்

நான் விருத்த இலக்கணம் படித்த காலத்தில் சீர்கள் ‘அளவொத்து’ இருக்க வேண்டுமென்று தெரிந்துகொண்டேன். ஓரடியில் ஆறு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஆறு சீர்களே இருக்க வேண்டுமென்றும், ஏழு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஏழு சீர்களே இருக்க வேண்டுமென்றும், இவ்வாறே சீர்களின் எண்ணிக்கை நான்கடிகளிலும் சமமாக இருக்க வேண்டுமென்றும் நினைத்தேன். ‘அளவொத்தல்’ என்பதற்கு இதற்கு மேலும் ஓர் அர்த்தம் உண்டென்பதை அதற்கு முன் நான் அறிந்துகொள்ளவில்லை. அதைப் பெருமாளையர் பின்வருமாறு விளக்கினார்: “முதல் அடியில் முதற்சீர் மாச்சீராக இருந்தால் மற்ற அடிகளிலும் முதற்சீர் மாச்சீராகவே இருக்கும். இதோ இப்பாட்டைப் பாரும்:


“பூவாய் நெடுங்கோட் டுறுபசுந்தேன்
      கைகான் முடங்கு பொறியிலிதன்
நாவா யொழுகிற் றெனவுலக
      மளந்த மாலு நான்முகனும்
காவா யெனநின் றேத்தெடுப்பத்
      தானே வந்தெங் கரதலத்து
மேவா நின்ற மாமணியைத்
      தொழுது வினைக்கு விடைகொடுப்பாம்”


என்பதில் ஒவ்வோரடியிலும் ஆறு சீர்கள் இருக்கின்றன. முதல் இரண்டு சீரும் நான்கு ஐந்தாம் சீர்களும் மாச்சீர்கள்; மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச் சீர்கள். இந்த அமைப்பு ஒவ்வோரடியிலும் மாறாமல் நிற்கும்; மாறினால் ஓசை கெடும். இவ்வண்ணம் சீர்கள் அமைவதனால்தான் ஒவ்வொரு வகை விருத்தத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன.”

அவர் விரிவாக எடுத்துச் சொன்னபோதுதான் எனக்கு விசயம் விளங்கிற்று. “புத்தகத்தைப் படித்துப் பார்ப்பதனால் மட்டும் ஒருவனுக்குப் பூரண அறிவு ஏற்படாது; அறிந்தவர்களிடம் பாடம் கேட்கவேண்டும்” என்று பெரியோர்கள் வற்புறுத்துவதன் உண்மையையும் உணர்ந்தேன். இத்தகைய அரிய விசயங்களைத் தக்கவர்களிடம் தெரிந்துகொள்ளாமல் வெண்பா என்றும், கட்டளைக்கலித்துறை என்றும், விருத்தமென்றும் தாமே எண்ணிக்கொண்டு மனம் போனபடி பாடல்களைப் பிழையான ஓசையோடு பாடுபவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். இக்காலத்திலும் காண்கிறேன். அத்தகைய பாடல்களையும் அவற்றைப் பாடுவோரையும் பாராட்டி மகிழும் கனவான்கள் பலர் இருக்கின்றனர். அவர்களை நினைந்து நான் மிகவும் இரங்குகிறேன்.

ஒரு முதியவரது ஞாபகம்


ஒருநாள் வழக்கம்போல (இ)ரெட்டியாருடைய மூத்த குமாரராகிய நல்லப்ப (இ)ரெட்டியார் கம்பராமாயணம் படித்துத் தம் தந்தையாரிடம் பொருள் கேட்டு வந்தார். அன்று படித்தது கும்பகருணப் படலம். அவர் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை பதிப்பித்திருந்த அச்சுப் புத்தகத்தை வைத்துக் கேட்டு வந்தார். நானும் அவ்வூர்ப் பட்டத்துப் பண்ணையாராகிய முதியவர் ஒருவரும் உடனிருந்தோம். அம்முதியவருக்கு எழுபது பிராயம் இருக்கும். படித்து வரும்போது இடையிலே ஓரிடத்தில் அம்முதியவர் மறித்து, “இந்த இடத்தில் சில பக்கங்களை அவசரத்தில் தள்ளிவிட்டீரோ?” என்று நல்லப்ப ரெட்டியாரைக் கேட்டார். “இல்லையே; தொடர்ச்சியாகத்தானே படித்து வருகிறேன்” என்று அவர் பதில் கூறினார். “இவ்விடத்தில் சில பாடல்கள் இருக்க வேண்டும். அவற்றை நான் படித்திருக்கிறேன். அவை இப்புத்தகத்தில் விட்டுப்போயின. என் பிரதியில் அப்பாடல்கள் உள்ளன” என்று சொல்லிப் பாடம் முடிந்தவுடன் என்னையும் நல்லப்ப (இ)ரெட்டியாரையும் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று தம் வீட்டுக் கம்பராமாயணப் பிரதியை எடுத்துக் கும்ப கருணப் படலம் உள்ள இடத்தைப் பிரித்துக் காட்டினார். அவர் கூறியபடியே அவ்விடத்தில் அச்சுப் பிரதியிலே காணப்படாத சில பாடல்கள் இருந்தன. அவற்றைப் படித்துப் பார்த்தோம். அம்முதியவருக்குக் கம்பராமாயணத்தில் இருந்த அன்பையும் அதை நன்றாகப் படித்து இன்புற்று ஞாபகம் வைத்திருந்த அருமையையும் உணர்ந்து வியந்தோம். பரம்பரையாகக் காப்பாற்றப்பட்டு வரும் ஏட்டுப் பிரதிகளின் பெருமையையும் தெளிந்தோம்.


திருக்குறள்

விருத்தாசல (இ)ரெட்டியார் எப்போதும் தமிழ் நூல்களைப் படிப்பதிலே தம் பொழுதைப் போக்கி வருபவர்; மற்ற வேலைகளில் கவலையில்லாதவர். அவருக்கு ஏற்றபடி வேறு கவனமேயில்லாமல் தமிழ் ஒன்றிலேயே நாட்டமுடையவனாக நான் கிடைத்தேன். எனக்குப் பாடம் சொல்வதும் நான் படிக்கும் நூல்களிலுள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதும் அவருக்குப் புதிய வேலைகள். அவை அவர் உள்ளத்துக்கு உவப்பான காரியங்கள். என்னிடம் அவர் மிக்க அன்பு வைத்திருந்தார். எனக்கும் அவருக்கும் பிராயத்திலும் அறிவிலும் செல்வத்திலும் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. எனினும், தமிழனுபவத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நின்றோம். நாள் முழுவதும் தமிழைப்பற்றி அவரிடம் கேட்டுக்கொண்டிருப்பவர் என்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை.

அவ்வப்போது படித்து வந்த நூல்களில் திருக்குறளும் ஒன்று. திருக்குறளை எப்போதும் கையில் வைத்துப் படிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. (இ)ரெட்டியாரிடம் இருந்த புத்தகத்தைப் படித்து வந்தேன். எனக்குச் சொந்தமாக ஒரு புத்தகமிருந்தால் எங்கே போனாலும் வைத்துக்கொண்டு படிக்கலாம் என்று நினைத்தேன். அச்சுப் புத்தகத்தைத் தேடிச் சென்று பணம் கொடுத்து வாங்க இயலாதவனாக இருந்தேன். பெரும்புலியூர்ப் பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயராக இருந்த (இ)ராயரொருவர் திருக்குறள் உரைப் புத்தகம் தம்மிடம் இருப்பதாகவும் பெரும்புலியூர் வந்தால் எனக்கே தருவதாகவும் குன்னத்தில் வாக்களித்தது அப்போது ஞாபகத்திற்கு வந்தது. “இந்தச் சந்தர்ப்பத்தை விடக்கூடாது” என்ற கருத்தால் பெரும்புலியூர் சென்று அதை அவரிடம் வாங்கி வர நிச்சயித்து எனது எண்ணத்தை (இ)ரெட்டியாரிடம் தெரிவித்தேன். அவர், “நானும் வருகிறேன். பேசிக்கொண்டே போய் வரலாம்” என்றார். அவர் என்னோடு பெரும்புலியூருக்கு நடந்து வருவதாகக் கூறியதைக் கேட்டபோது எனக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று.


(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.