(உ.வே.சா.வின் என் சரித்திரம் 62 : நான் கொடுத்த வரம் 1 -தொடர்ச்சி)

38. நான் கொடுத்த வரம்…. தொடர்ச்சி

“ஒவ்வொன்றிலும் கொஞ்சங் கொஞ்சம் சாப்பிடுங்கள்” என்று காரியத்தர் சொன்னார்.

“என்ன என்ன பிரசாதங்கள் வந்திருக்கின்றன?” என்று கேட்டேன்.

“சருக்கரைப் பொங்கல் இருக்கிறது; புளியோரை இருக்கிறது; சம்பா வெண்பொங்கல், எள்ளோரை, உளுத்தஞ் சாதம் எல்லாம் இருக்கின்றன. பாயசம் இருக்கிறது; பிட்டு இருக்கிறது; தேங்குழல், அதிரசம், வடை, சுகியன் முதலிய உருப்படிகளும் இருக்கின்றன” என்று அவர் அடுக்கிக்கொண்டே போனார். இயல்பாகவே பிரசாதங்களில் எனக்கு விருப்பம் அதிகம்; பசியும் சேர்ந்ததால் அவர் சொல்லச் சொல்ல உடனே சாப்பிட வேண்டுமென்ற வேகம் எனக்கு உண்டாயிற்று.

தெய்வப் பிரசாதம்

மடைப்பள்ளியில் இலைபோட்டு உண்பதும் எச்சில்செய்வதும் அனாசாரம்; ஆகையால் கையில் கொடுத்தால் எச்சில் பண்ணாமலே உண்பேனென்று நான் சொல்லிவிட்டு முதலில் புளியோரையைக் கொடுக்கும்படி கேட்டேன். உடனே காரியத்தர் என் கையில் சிறிது புளியோரையை எடுத்து வைத்தார். மிக்க ஆவலோடு கொஞ்சம் எடுத்து வாயிலே போட்டுக்கொண்டேன். வெறும் புளிப்பு மாத்திரம் சிறிது இருந்தது; உப்பு இல்லை; காரமோ, எண்ணெயின் மணமோ தெரியவில்லை.

“என்ன இது?” என்றுகேட்டேன்.

“இதுவா? இதுதான் புளியோரை” என்றார் அவர்.

நான் வாயில்போட்ட பிரசாதத்தில் கல் இருந்தது; உமியும் இருந்தது. அவற்றை வெளியே துப்புவதற்கு வழியில்லை. மடைப்பள்ளியில் துப்பலாமா? உடனே எழுந்திருந்து வெளியே வந்து துப்புவதும் சுலபமன்று. பல இடங்களைத் தாண்டிக்கொண்டு ஆலயத்துக்கு வெளியே வரவேண்டும்.

புளியோரையென்று அவர் சொன்ன பிரசாதத்தை ஒருவாறு கடித்துமென்று விழுங்கினேன். அடுத்தபடியாக அவர் சருக்கரைப் பொங்கலை அளித்தார். அதில் தீசல் நாற்றமும் சிறிது வெல்லப் பசையும் இருந்தன. வாயில் இடுவதற்கு முன் வெளியே வந்துவிடும்போல் தோற்றியது. பிறகு வெண்பொங்கல் கிடைத்தது. அதில் இருந்த உமியையும் கல்லையும் மென்று விழுங்குவதற்கே அரை மணிநேரம் ஆகிவிட்டது. என் பசி இருந்த இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டது. கண்ணையும் காதையும் கவர்ந்த அப்பிரசாதங்கள் சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்கு மாத்திரம் ஏற்றவையாக இருந்தன. சனங்கள் வீண் சபலப்பட்டு அவற்றை உண்ணப் புகுவது சரியன்றென்பதை வற்புறுத்தின. தேங்குழலும் அதிரசமும் வடையும் ஒருவிதமாகத் தங்கள் பெயர்களைக் காப்பாற்றிக்கொண்டிருந்தன. மற்றப் பிரசாதங்களை நோக்க அவை சிலாக்கியமாகப்பட்டன. அவற்றில் சிலவற்றை வயிற்றுக்குள் செலுத்திவிட்டுக் கையைச் சுத்தம் செய்துகொண்டு எழுந்தேன்.

ஒரு வரம் கொடுங்கள்’

இருட்டில் தட்டுத்தடுமாறி வந்தபோது என் காலில் சில்லென்று ஏதோ ஒரு வசுது தட்டுப்பட்டது. கயிறோ, பாம்போ அல்லது வேறு பிராணியோ என்று திடுக்கிட்டுப் பயந்து காலை உதறினேன். “இங்கே வெளிச்சம் கொண்டு வாருங்கள்” என்று கத்தினேன். ஒருவர் விளக்கை எடுத்து வந்தார். காலின் கீழ் நோக்கினேன்; ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டேன்.

என்னை அழைத்து வந்த காரியத்தர் என் காலைப் பிடித்துக்கொண்டு நமசுகாரம் பண்ணியபடியே கிடந்தார். ஈரமுள்ள அவர் கை எதிர்பாராதபடி என் காலிற்பட்டதுதான் என் பயத்துக்குக் காரணம்.

காரியத்தருக்கு அறுபது பிராயத்துக்கு மேலிருக்கும். அவர் என்னை வணங்கியதற்குக் காரணம் இன்னதென்று விளங்கவில்லை. “இதுவும் ஒரு சம்பிரதாயமோ?” என்று நான் சந்தேகப்பட்டேன்.

“ஏன் ஐயா இப்படிப் பண்ணுகிறீர்?” என்று படபடப்புடன் கேட்டேன்.

“தங்களை ஒரு வரம் கேட்கிறேன். அதைத் தாங்கள் கொடுத்தாக வேண்டும்; இல்லாவிட்டால் என் தலை போய்விடும்! நான் காலை விடமாட்டேன். கேட்ட வரத்தைக் கொடுப்பதாக வாக்குத் தத்தம் செய்தால் எழுந்திருப்பேன்.

எனக்கு விசயம் புரியவேயில்லை; ஒரே மயக்கமாக இருந்தது; “இவர் இன்றைக்கு நம்மைத் தெய்வமாகவே எண்ணிவிட்டாரா என்ன? இவர் கொடுத்த பிரசாதம் தெய்வர்களுக்கே ஏற்றவை. இப்போது நம்மை இவர் நமசுகரிக்கிறார்; வரம் கேட்கிறார். இவையெல்லாம் நாடகம் மாதிரி இருக்கின்றனவே!” என்று எண்ணி, “எழுந்திரும் ஐயா, எழுந்திரும்! வரமாவது கொடுக்கவாவது!” என்று கூறினேன். அவர் விட்டபாடில்லை.

“நீங்கள் வாக்களித்தாலொழிய விடமாட்டேன்.”
“சரி, நீர் சொல்லுகிறபடியே செய்கிறேன்” என்று நான் சொன்னவுடன் அவர் மெல்ல எழுந்திருந்தார்; கை கட்டி, வாய் புதைத்து அழாக்குறையாகச் சொல்லத் தொடங்கினார்.

“இன்று பிரசாதமொன்றும் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்று தெரிகிறது. கிரமமாக வரவேண்டிய சமையற்காரன் இன்று வரவில்லை. அதனால் ஒன்றும் நேராகச் செய்ய முடியவில்லை. இந்த விசயம் சாமிக்கு (கட்டளைத் தம்பிரானுக்கு)த் தெரிந்தால் என் தலை போய்விடும். சாமிக்கு இவ்விசயத்தைத் தாங்கள் தெரிவிக்கக் கூடாது. தெரிவித்தால் என் குடும்பமே கெட்டுப்போய்விடும். நான் பிள்ளைகுட்டிக்காரன் மகாலிங்கத்தின் பேரைச் சொல்லிப் பிழைத்து வருகிறேன். என் வாயில் மண்ணைப் போட்டுவிடாதீர்கள்” என்று என் வாயில் உமியையும் கல்லையும் பிரசாதமாகப் போட்ட அந்த மனுசுயர் வேண்டிக்கொண்டார்.

“சரி, அப்படியே செய்கிறேன்; நீர் ஒன்றும் கவலைப்பட வேண்டா” என்று நான் அவர் கேட்ட வரத்தைக் கொடுத்தேன்.

‘இந்த மாதிரி எங்கும் இல்லை’

சாக்கிரதையாக அம்மடைப்பள்ளியிலிருந்து விடுபட்டுக் கொட்டாரத்துக்கு வந்து தம்பிரானைப் பார்த்தேன்.

“என்ன? வெகுநேரமாகிவிட்டதே; காரியத்தர் அதிக நாழிகை காக்க வைத்துவிட்டாரோ?” என்று அவர் கேட்டார்.

“இல்லை; பிரசாதங்கள் பலவகையான இருந்தன; ஒவ்வொன்றையும் சுவை பார்ப்பதற்கே நேரமாகிவிட்டது.”

உமியையும் கல்லையும் மெல்லுவதற்கு அந்த இரவு முழுவதும் வேண்டியிருக்குமென்பது எனக்கல்லவா தெரியும்?

“எப்படி இருந்தன?”

“இந்த மாதிரி எங்கும் கண்டதில்லை.”

“எல்லாரும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். இதற்கு முன் ஒழுங்கீனமாக இருந்தது. நாம் வந்த பிறகு திருத்தங்கள் செய்ய ஆரம்பித்தோம். எல்லாம் கவனிப்பவர் கவனித்தால் நன்றாகத்தானிருக்கும், நிருவாகமென்றால் இலேசானதா?”

தம்பிரான் தம்மைப் புகழ்ந்துகொண்டபோது, “இன்னும் இவர் தம் பிரதாபத்தை விவரிக்கத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது!” என்ற பயமும் மெல்ல முடியாமல் வாயில் அடக்கி வைத்துக்கொண்டிருந்த கற்களை ஆலயத்துக்கு வெளியே துப்ப வேண்டுமென்ற வேகமும் என்னை உந்தின.

“பிள்ளையவர்கள் நான் வரவில்லையென்று காத்திருப்பார்கள். போய் வருகிறேன். விடை தரவேண்டும்” என்று நான் சொல்ல, “சரி, பிள்ளையவர்களிடம் போய் எல்லாவற்றையும் சொல்லும். அவர்களுக்கும் ஒரு நாள் பிரசாதங்களை அனுப்புவதாக எண்ணியிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

“இந்தத் தண்டனை அவர்களுக்கு வேண்டாமே” என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டு நான் வந்துவிட்டேன். தம்பிரானிடம் நான் பேசியதைக் கவனித்த காரியத்தர் மீண்டும் உயிர் பெற்றவர் போலவே மகிழ்ச்சியுற்றார்.

பிள்ளையவர்களிடம் வந்தவுடன் “சாப்பிட்டீரா? இங்கெல்லாம் உமக்கு ஆகாரம் நிறைவாக இராது” என்று அவர் சொன்னார். நான் நிகழ்ந்ததைச் சொல்லாமல், “போதுமானது கிடைத்தது” என்று சொல்லிவிட்டுப் பாடம் கேட்கத் தொடங்கினேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.