Saturday, May 25, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 89 : எழுத்தாணிப் பாட்டு

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 88 : இராமசாமி பிள்ளை – தொடர்ச்சி)

சிதம்பரம் பிள்ளையின் கலியாணத்துக்காக என் ஆசிரியர் தம் அளவுக்கு மேற்பட்ட பணத்தைச் செலவு செய்தார். செலவிடும் போது மிகவும் உற்சாகமாகவே இருந்தது. கலியாணமானபின் சவுளிக் கடைக்காரர்களும் மளிகைக் கடைக்காரர்களும் பணத்துக்கு வந்து கேட்டபோதுதான் உலக வழக்கம்போல் அவருக்குக்கலியாணச் செலவின் அளவு தெரிந்தது. அக் கடனை எவ்வகையாகத் தீர்க்கலாமென்ற கவலை உண்டாயிற்று. பொருள் முட்டுப்பாடு வர வர அதிகமாயிற்று. இதனால் மிக்க கவலையில் ஆழ்ந்திருந்தார். ஒரு பெருந்தொகையைக் கொடுத்து உதவி செய்து அவருக்கிருந்த மனக்கவலையை நீக்கக்கூடிய உபகாரி ஒருவரும் அப்போது இல்லை. வேறு வகையில் பொருளீட்டவும் வழியில்லை. ஏதேனும் ஒரு நூலை இயற்றி அரங்கேற்றினால் அப்போது நூல் செய்வித்தவர்கள் தக்கபடி பொருளுதவி செய்வதுண்டு. இதைத்தவிர வேறு வருவாய்க்கு மார்க்கம் இல்லை. திருப்பெருந்துறைப் புராணத்தை இயற்றி அரங்கேற்றினால் இரண்டாயிர உரூபாய் வரையிற் கிடைக்குமென்ற நம்பிக்கை இருந்தது. புராணம் ஆரம்ப நிலையிலேதான் இருந்தது. அது முழுவதும் பாடி நிறைவேற்றி அரங்கேற்றி முடிந்த பிறகுதானே
பணம் கிடைக்கும்? அதுவரையிற் கடன்காரர்களுக்கு வழி சொல்லவேண்டுமே!

எப்போதும் கடனாளி

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. “திருப்பெருந்துறைப் புராண
அரங்கேற்றத்தின்
 பின் நமக்கு எப்படியும் பணம் கிடைக்கும். இப்போது
மடத்திலுள்ள அதிகாரிகளில் யாரிடமேனும் ஐந்நூறு உரூபாய் வாங்கி அவசரமாக உள்ள கடன் தொல்லையைத் தீர்த்து அப்பால் திருப்பிக் கொடுத்து விடுவோம்” என்று அவர் எண்ணினார். அவருடைய வாழ்க்கைப் போக்கு. இவ்விதமே அமைந்திருந்தது. வீட்டில் செலவு ஒரு வரையறையின்றி நடைபெறும். கடன் வாங்கிக்கொண்டே இருப்பார். எங்கேனும் புராணம் பாடி அரங்கேற்றினால் ஆயிரம், இரண்டாயிரம் கிடைக்கும். அதைக் கொண்டு கடனைத் தீர்ப்பார். பிறகு செலவு ஏற்படும்போது கடன் வாங்குவார். மடத்தில் அவருடைய ஆகாரம் முதலிய சௌகரியங்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் அவருடைய தாராளமான செலவுக்குத் தக்க பொருளுதவி கிடைக்கவில்லை. அவருடைய கனிந்த உள்ளமும் பெருந்தன்மையும் அவரை எப்போதும் கடனாளியாகவே வைத்திருந்தன.

கடனை மறுத்த தம்பிரான்

மடத்தில் முக்கிய நிருவாகியாக இருந்த தம்பிரானிடம் குமாரசாமித
தம்பிரான் 
மூலம் ஆசிரியர் கடன் கேட்கச் செய்தார். அத்தம்பிரானோ கடன் கொடுப்பதற்கு உடன்படவில்லை. பிறரைக் கடன் கேட்பதால் உண்டாகும் துன்பத்தை அவர் அப்பொழுது அதிகமாக உணர்ந்தார். “நாம் இம்மடத்தில் இவ்வளவு நாட்களாகப் பழகுகிறோம். நம்மிடத்தில் எல்லாருக்கும் மதிப்பிருக்கிறது என்பது இவருக்குத் தெரியும். இருந்தும் இவர் பணம் கொடுக்க மறுக்கிறார். உலக இயல்பு இதுதான் போலும்! சமயத்திலேதான் சனங்களுடைய இயற்கையை நாம் அறிகிறோம். அவர்களைச் சொல்வதில் என்ன பயன்?
நாமும் சாக்கிரதையாக இருந்து வரவேண்டும். துறவுக் கோலம் பூண்ட இவரே இப்படி இருந்தால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்?” என்று எண்ணி எண்ணி அவர் வருந்தினார். வேறு சிலரையும் கேட்டுப் பார்த்தார். ஒன்றும் பயனில்லை.
ஆதீன கருத்தர் பல சமயங்களில் விசேடமான உதவி செய்திருத்தலாலும், மடத்தில் அப்போது பணச் செலவு மிகுதியாக இருந்தமையாலும் அவரிடம் தம் குறையை நேரில் தெரிவித்துக் கொள்ள ஆசிரியருக்கு மனமில்லை. பொருள் முட்டுப்பாட்டைத் தீர்த்துக்கொள்ள வழியில்லாமல் கலங்கிய அவருக்கு வேறு எங்கேனும் போய்ச் சில காலம் இருந்து மனம் ஆறுதலுற்ற பின்பு வரலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதனால் தாம் சில வெளியூர்களுக்குப் போய் வர எண்ணியிருப்பதைக் குறிப்பாக மாணாக்கர்களிடம் தெரிவித்தார்.

மாணாக்கர்களுக்கு ஆசிரியருடைய மனவருத்தத்திற்குக் காரணம் இன்னதென்று தெரிந்தது. ஒவ்வொருவரும், “ஐயா அவர்கள் இவ்விடம் விட்டு வெளியூருக்குச் சென்றால் நானும் தவறாமல் உடன் வருவேன்” என்று மிகவும் உறுதியாகக் கூறினர். அவர்கள் உறுதி எந்த அளவில் உண்மையானதென்பது பின்பு தெரிய வந்தது.

பட்டீச்சுரப் பிரயாணம்

பலவாறு யோசனை செய்து முடிவில் என் ஆசிரியர் பட்டீச்சுரம் செல்வதாக நிச்சயித்துச் சுப்பிரமணிய தேசிகரிடம் பக்குவமாகத் தெரிவித்து அனுமதிபெற்றனர். அம்சமயம் என் பெற்றோர்கள் திருவாவடுதுறையிலேயே இருந்தார்களாதலின், பிரயாணம் நிச்சயமானவுடன் ஆசிரியர் என் பிதாவை நோக்கி, “இன்னும் சில தினங்களில் ஒருநாள் பார்த்துக்கொண்டு பட்டீச்சுரம் முதலிய இடங்களுக்குப் போய் வர எண்ணியிருக்கிறேன். இவ்விடம் திரும்பி வர இன்னும் சில மாதங்கள் ஆகும். ஆதலால் நீங்களும் சாமிநாதையருடன் புறப்பட்டு நான் போகும்போது பட்டீச்சுரத்துக்கு வந்து விடுங்கள். அங்கே சில தினங்கள் தங்கியிருந்து பிறகு ஆவுடையார் கோயில் போகலாம்” என்று கூறவே அவர் அதற்கு ஒருவாறு உடன்பட்டார். ஆனாலும் என் பெற்றோர்கள் எங்களுடன் வருவதில் எனக்கு இட்டமில்லை. என் தந்தையாருடைய நியமானுட்டானங்களுக்கு நாங்கள் போகும் இடங்களில் தக்க வசதி இராதென்ற எண்ணமே அதற்குக் காரணம். பட்டீச்சுரம் என்றாலே எனக்கு ஒருபயம் உண்டு அங்கே பிள்ளையவர்கள் இருப்பதனால் நானும் இருக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது. என் தாய் தந்தையரும் அங்கே வந்து இருந்து விட்டால் அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையின் கோபம் எந்த எந்த (உ)ரூபத்தில் வெளிப்படுமோ என்று பயந்தேன்.

ஆகவே தக்க காரணங்களை நான் பிள்ளையவர்களிடம் சொல்லி என் தாய் தந்தையர்கள் உடன் வருதலை நிறுத்தினேன். அக்காலத்தில் நான் கையில் வெள்ளிக் காப்பும் வெள்ளிச் சங்கிலியும் அணிந்திருந்தேன். என் ஆசிரியர், “நாம் பல இடங்களுக்குப் போகும்படியிருக்கும். இவை கையிலிருந்தால் ஏதேனும் அபாயம் நேர்ந்தாலும் நேரலாம். ஆகையால் இவற்றைக் கழற்றி உம்முடைய தந்தையாரிடம் கொடுத்துவிடும்” என்று கூறவே நான் அங்ஙனமே செய்தேன். பிறகு நான் என் தந்தையாரை அழைத்துக்கொண்டு சூரியமூலை சென்று அவற்றை அங்கே விட்டு விட்டுச் சில தினங்களில் வருவதாக ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டேன். “சரி அப்படியே செய்யலாம். சூரியமூலைக்குப் போய்விட்டு இங்கே வந்து பாரும். நான் இங்கே இருந்தால் என்னுடன் சேர்ந்து வரலாம் இல்லையாயின் பட்டீச்சுரத்துக்கு வந்துவிடலாம்” என்று ஆசிரியர் எனக்குக் கட்டளையிட்டார். அங்ஙனமே சூரியமூலை போய்விட்டுத் திருவாவடுதுறைக்கு வந்தேன். அதற்குள் ஆசிரியர் பட்டீச்சுரம் சென்று விட்டதாகத் தெரிந்ததால் நானும் அங்கே போய் அவரோடு இருந்துவரலானேன். வழக்கம்போல அக்கிரகாரத்தில் ஒரு வீட்டில் என் ஆகாரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

நான் சூரியமூலைக்குப் புறப்பட்டுச் சென்ற மறுநாளே பிள்ளையவர்கள் பட்டீச்சுரத்துக்கு வேண்டிய சாமான்களுடன் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களுடன் சண்பகக் குற்றாலக் கவிராயர் மட்டும் பட்டீச்சுரம் போய்ச் சில தினங்கள் இருந்துவிட்டு அப்பால் திருவாவடுதுறைக்கு வந்துவிட்டார். வேறு மாணாக்கர்கள் ஒருவரும் உடன் செல்லவில்லை. பிள்ளையவர்கள் விரும்பியபடி சவேரிநாத பிள்ளை மாயூரத்துக்கு வந்து ஆசிரியர் வீட்டில் இருந்தனர். மாணாக்கர்களெல்லாம் உடன் வருவதாகச் சொன்னதையும் ஒருவரேனும் வராமற் போனதையும் என் ஆசிரியர் அடிக்கடி என்னிடம் எடுத்துச் சொல்வார். “உலகமே பணத்தில் நிற்கிறது. கல்வி, அன்பு, என்பனவெல்லாம் அதற்கு அடுத்தபடி உள்ளவையே” என்பார். அப்பொழுதெல்லாம், “நல்லவேளை! நாம் அக்கூட்டத்தில் சேரவில்லையே” என்ற ஒருவகையான திருப்தி எனக்கு உண்டாகும்.எழுத்து வேலை ஆசிரியர் பட்டீச்சுரத்திற்கு சிரீமுக வருடம் வைகாசி மாதம் (மே, 1873) போய்ச் சேர்ந்தார் விரைவில் திருப்பெருந்துறைப் புராணத்தை இயற்றி முடித்துவிட வேண்டுமென்ற வேகம் அவருக்கு இருந்தது. ஆகையால் தினந்தோறும் விடாமற் புராணத்தில் சில பாடல்கள் இயற்றப் பெற்று வந்தன.
ஒரு முறை அவர் பாடல் சொல்லுவதை ஏட்டில் எழுதுவதும் பிறகு
எழுதியதைப் படித்துக் காட்டி அவர் சொல்லிய திருத்தங்களைக் குறித்துக் கொண்டு மீட்டும் வேறு ஏட்டில் நன்றாக எழுதுவதுமாகிய வேலைகள் எனக்கு இருந்தன. இவ்வேலையால் நான் தனியே நூல்களைப் பாடம் கேட்க இயலவில்லை. ஆயினும் அப்புராணச் செய்யுட்களை எழுதியதும், இடையிடையே அச்செய்யுட்களின் சம்பந்தமாக ஆசிரியர் கூறியவற்றைக் கேட்டதும் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன.

புராணம் இயற்றும் இடங்கள்

பிற்பகல் வேளைகளில் பிள்ளையவர்கள் மேலைப் பழையாறை, பட்டீச்சுரம் ஆலயம், திருச்சத்திமுற்றம் கோயில் முதலிய இடங்களுக்குச் சென்று சில நேரம் தங்கியிருப்பார். நான் எப்போதும் ஏடும் எழுத்தாணியும் கையில் வைத்துக்கொண்டே இருப்பேன். குளிர்ந்த வேளைகளில் அக்கவிஞருக்கு ஊக்கம் உண்டாகும்போது புராணச் செய்யுட்கள் வெகு வேகமாக நடைபெறும். இயற்கைக் காட்சிகள் அமைந்த இடமாக இருந்தால் அவருக்கு உற்சாகம் பின்னும் அதிகமாகும். பட்டீச்சுரத்தில் உள்ள திருமலைராயனாற்றங்கரையில் ஓர் அரசமரம் உண்டு. அதன் கீழே ஒரு மேடை இருந்தது. ஆற்றை நோக்கியபடி அம்மேடையில் சில வேளைகளில்
அவர் உட்கார்ந்து கொண்டு பிற்பகலில் செய்யுட்களைச் சொல்லுவார். அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் கற்பனா சக்தியே தனிச் சிறப்புடையது. பெரும்பாலும் காலை வேளைகளிலும் பிற்பகல் நேரங்களிலுமே புராணச் செய்யுட்களைச் சொல்லுவார். பகற் போசனம் ஆனவுடன் சிறிது நேரம் அவருக்கு அயர்ச்சியாக இருக்கும். அக்காலங்களில் நான் பாடல்களை ஏட்டில் பிரதி செய்வேன்.

எழுத்தாணியின் மறைவு

ஒருநாள் காலையில் மேலைப்பழையாறையில் ஆசிரியர் பாடல்கள் சொல்ல நான் எழுதி வந்தேன். அதனை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு என்னைக் காலையாகாரம் செய்துவரும்படி அவர் அனுப்பினார். நான் ஏட்டையும் எழுத்தாணியையும் அவர் எதிரே ஓரிடத்தில் வைத்து விட்டுப் போய்ச் சில நேரத்திற்குப் பின் வந்தேன். அந்த இடைக் காலத்தில் அவர் தம் மனத்துக்குள்ளே மேலே சொல்லவேண்டிய பாடல்களுக்குரிய கருத்தை ஆராய்ந்து வைத்துக்கொண்டார். ஆதலால் நான் வந்தவுடனே ஒன்றும் சொல்லாமல் பாடல் சொல்லத் தொடங்கினார். நான் ஏட்டையும் எழுத்தாணியையும் பார்த்தபோது ஏடுமாத்திரம் இருந்தது; எழுத்தாணி காணப்படவில்லை. சுற்றிலும் பார்த்தேன். நான் பாடலை எழுதாமல் இப்படிப் பார்ப்பதைக் கண்ட ஆசிரியர், “ஏன்? என்ன தேடுகிறீர்?” என்றார். நான் விசயத்தைத் தெரிவித்து, “யாராவது எடுத்து வைத்திருக்கலாம் விசாரித்து வாங்கி வருகிறேன்” என்று சொல்லி விட்டுச் சென்றேன். என் எழுத்தாணியை எங்கும் காணவில்லை. அங்கே இருந்த கணக்குப் பிள்ளையைக் கேட்டேன் அவர் தமக்குத் தெரியாதென்று சொல்லிவிட்டார். வேறு ஏதாவது ஓர் எழுத்தாணி இருந்தால் தரவேண்டுமென்று கேட்டபோது அவர் தமது எழுத்தாணியை வீட்டில் வைத்திருப்பதாகச் சொன்னார்.

முதல்முறை பட்டீச்சுரத்தில் இருந்தபோது ஆறுமுகத்தாபிள்ளை என் புத்தகத்தை ஒளித்து வைத்த செய்தி என் ஞாபகத்திற்கு வந்தது. “இன்னும் அத்தகைய இன்னல் நம்மை விடாதுபோலத் தோன்றுகிறதே” என்று என் மனம் நடுங்கியது; ஒன்றும் தோன்றாமல் பிள்ளையவர்கள் முன் வாடிய முகத்தோடு வந்து எழுத்தாணி அகப்படவில்லை என்று தெரிவித்தேன். தாம் மனத்தில் ஒழுங்குபடுத்திக்கொண்ட செய்யுட்களைச் சொல்லவேண்டுமென்று என் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவருக்கு இது மிக்க வருத்தத்தை உண்டாக்கியது. கவிஞர் பாடலை இயற்றச் சிந்தனை செய்வாரா? இக்கவலைகளில் மனத்தைச் செலுத்துவாரா?

அப்போது அங்கே ஆறுமுகத்தா பிள்ளை வந்தார். “ஏன் இவர் ஒன்றும் எழுதாமல் இப்படி அலைகிறார்?” என்று கேட்டார். பிள்ளையவர்கள் காரணம் சொன்ன போது, “இவர் அதிக அசாக்கிரதையுள்ளவர். புத்தகத்தையோ, எழுத்தாணியையோ இவர் பத்திரமாக வைத்துக் கொள்வதில்லை. உங்களிடம் எவ்வளவோ தடவை சொல்லியிருக்கிறேன். இவர் எதற்கும் உதவாதவர்” என்று தம்முடைய விமரிசனத்தை ஆரம்பித்துவிட்டார். “மறுபடியும் அகப்பட்டுக் கொண்டோமே” என்ற சஞ்சலம் எனக்கு உண்டாயிற்று.

ஆறுமுகத்தா பிள்ளையின் உத்தரவு

பிள்ளையவர்கள் அவரிடம் சமாதானமான வார்த்தைகள் கூறி அவரைச் சாந்தப்படுத்தின பிறகு, “எங்கே, இவர் எழுத்தாணிதரவேண்டுமென்று ஒரு செய்யுள் புதியதாக இயற்றிச் சொல்லட்டும்; நான் அதை வருவித்துத் தருகிறேன்” என்று உத்தரவு செய்தார். நான் கதிகலங்கி நின்ற நிலையில் செய்யுளைப் பற்றி யோசிக்கும் மன நிலை ஏது? “தம்பி சொல்லுகிறபடி ஒரு செய்யுள் சொல்லும்” என்று ஆசிரியர் கட்டளையிடவே நான் யோசிக்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக ஆறுமுகத்தா பிள்ளை எதிரே இருந்த தோட்டத்திற்குச் சென்றார். அச்சமயம் பார்த்து என் ஆசிரியர் முதலில், ‘எழுத்தாணி யொன்றெனக்கின் றீ” என்று ஒரு வெண்பாவின் இறுதி அடியைச் சொன்னார். தொடர்ந்து சிறிது சிறிதாக இறுதியிலிருந்தே முதலடி வரையில் சொல்லி முடித்தார். அவ்வெண்பா முழுவதையும் நான் பாடம் பண்ணிக் கொண்டேன். ஆறுமுகத்தா பிள்ளை வந்தவுடன்,

“தழுவுபுகழ் ஆறுமுகத் தாளாளா என்றும்
வழுவில் புராணம் வரைய-மெழுகில்
அழுத்தாணிப் பொன்னால் அமைந்தஉரு விற்றாம்
எழுத்தாணி ஒன்றெனக்கின் றீ”

என்ற அவ்வெண்பாவைச் சொன்னேன். அவருக்குத் திருப்தி உண்டயிற்றோ, இல்லையோ நான் அறியேன். சிறிது நேரத்தில் என் எழுத்தாணி என்னிடம் வந்து சேர்ந்தது.

இந்நிகழ்ச்சியால் பிள்ளையவர்களுடைய மனம் புண்பட்டது. “இந்த உலகத்தில் நம் மனமறிந்து அன்பு பாராட்டுபவர்கள் எங்கும் இல்லையே! வெறும் சோற்றை உத்தேசித்து எவ்வளவு இன்னல்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது!” என்று வருத்தமுற்றார்.

(தொடரும்)

Saturday, May 18, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 88 : இராமசாமி பிள்ளை

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 87 : அத்தியாயம்-53 : அம்மை வடு-தொடர்ச்சி)

அப்போது மதுரை இராமசாமி பிள்ளை என்ற தமிழ் வித்துவானொருவர்
அங்கே இருந்தார். அவர் பிள்ளையவர்களுடைய மாணாக்கர். ஆறுமுக
நாவலரிடம் பழகியவர்
. தாம் இயற்றிய சில நூல்களைப் பிள்ளையவர்களிடம்
படித்துக் காட்டி அவர் கூறிய திருத்தங்களைக் கேட்டு வந்தார். அவரைப் பற்றி
நான் சில முறை கேள்வியுற்றிருந்தேன். பிள்ளையவர்கள் அங்கிருந்தவர்களில்
ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம் செய்வித்தார்.

ஆசிரியர் விருப்பம்

என் உடம்பில் மெலிவைக் கண்ட ஆசிரியர் என் தந்தையாரைப்
பார்த்து, “இவருக்கு இன்னும் நல்ல சௌக்கியமுண்டாகவில்லை. இங்கே ஆகார
வசதிகள் போதியபடி இல்லை. இவருடைய தாயார் இடும் உணவை உண்டுதான்
இவர் உடம்பு தேற வேண்டும். ஊரிலேயே இன்னும் சில தினங்கள் இருந்து
உடம்பு சௌக்கியமானபிறகு வரலாம்” என்று சொல்லி வந்தார். “இவர் நம்மை மீட்டும்
ஊருக்கு அனுப்பி விடுவாரோ!” என்று அஞ்சினேன்.

“ஆனாலும் இவரைப் பிரிந்திருப்பது எனக்குச் சிரமமாகவே இருக்கிறது.
இவர் ஊருக்குப் போன பிறகு நானும் சில ஊர்களுக்குப் போய் வந்தேன்.
அப்பால் குருபூசை வந்தது. பின்பு மகாமகம் வந்தது. பாடம் நடக்கவில்லை.
இனிமேல் பாடத்தை நிறுத்தி வைப்பது உசிதமன்று. ஒரு யோசனை
தோன்றுகிறது. தாங்கள் அப்படிச் செய்தால் அனுகூலமாக இருக்கும்” என்று
ஆசிரியர் என் தந்தையாரை நோக்கி மறுபடியும் கூறினார்.

“என்ன செய்ய வேண்டும்?”

“இவருடைய தாயாரை அழைத்துக் கொண்டு பூசையோடு வந்து
தாங்கள் இவ்விடம் சில காலம் இருந்து இவரைக் கவனித்துக் கொண்டால்
நலமாக இருக்கும்.”

“அப்படியே செய்கிறேன். அதில் என்ன இன்னல் இருக்கிறது?” என்று
என் தந்தையார் உடன்பட்டார். அப்போது எனக்கு உண்டான மகிழ்ச்சி
எல்லையற்றது.

தந்தையார் உடனே விடைபெற்றுச் சென்று என் தாயாரை அழைத்து
வந்தார். பிள்ளையவர்கள் நாங்கள் இருப்பதற்கு வேண்டிய வசதிகளை மடத்துக்
காரியத்தர்களைக் கொண்டு திருவாவடுதுறையில் செய்வித்தார்.

மீண்டும் பெரிய புராணப் பாடம் வழக்கம்போல் நடந்தது. நன்னூல்
விருத்தியுரையைச் சிலரும் காண்டிகையுரையைச் சிலரும் பாடம் கேட்டு
வந்தனர். அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன்.

இரண்டு மாணாக்கர்கள்

பிள்ளையவர்களிடம் மற்ற மாணாக்கர்களோடு இரண்டு
அபிசேகத்தர்களும் பாடம் கேட்டனர். அவர்கள் இருவர்பாலும்
மாணாக்கர்களிற் சிலர் வெறுப்புக் கொண்டவர்களைப்போல நடந்து வந்தனர்.

முதலில் அதற்குக் காரணம் எனக்கு விளங்கவில்லை; பிறகு தெரிந்தது. என்
ஆசிரியர் திருவிடைமருதூருலாவை இயற்றி அரங்கேற்றிய காலத்தில்
அவ்விருவரும் பல வகையான இடையூறுகளை விளைவித்தார்களாம்.

“சிவபெருமான் திருவீதியிலே செல்லும்போது பேதை முதல் பேரிளம் பெண்
இறுதியாக உள்ள ஏழுபருவ மகளிரும் காமுற்றார்கள்” என்ற செய்தி அவ்வுலாவில் வருகிறது. திருவிடை மருதூரில் வசித்த இராச பந்துக்களான சில மகாராட்டிரர்களிடம் மேலே சொன்ன இருவரும் சென்று, “இந்தத் தலத்தில் சுவாமி வருகையில் வீதியில் உள்ள பெண்கள் காமம் கொண்டு பிதற்றினார்களென்று இவ்வூர் உலாவை இயற்றிய ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இந்த வீதியில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். உங்கள் சாதி திரீகளுக்கு அபவாதம் அல்லவா இது?” என்று சொல்லிக் கலகமூட்டி
விட்டார்களாம். பிள்ளையவர்களுக்கு இதனால் சில அசௌகரியங்களும்
நேர்ந்தனவாம்.

ஆனால் அவ்விருவரும் பாடம் கேட்டு வருகையில் குணநிதியாகிய
பிள்ளையவர்கள் அவர்களிடம் சிறிதேனும் வெறுப்பைக் காட்டாமல்
பிரியமாகவே நடத்தி வந்தார். மற்ற மாணாக்கர்களுக்கோ அவ்விருவரிடத்திலும்
வெறுப்பு இருந்தே வந்தது. இச்செய்திகளை நான் கேட்டபோது எனக்கும்
அவர்களிடத்தில் கோபம் மூண்டது. நன்னூலில் அடிக்கடி அவர்களைக்
கேள்வி கேட்டுத் திணற வைப்பேன். அவர்கள் முகம் வாடி இருப்பார்கள்.
இடையிடையே அவர்கள் முன் செய்த விசமத்தனமான காரியத்தைக்
குறிப்பாகச் சொல்லிக் காட்டுவேன். பிள்ளையவர்களிடத்திலிருந்த மதிப்பும்
இளமை முறுக்குமே அவ்வாறு நான் செய்ததற்குக் காரணம்.

இப்படி அடிக்கடி அவர்கள் எங்களிடம் அகப்பட்டுத் துன்புறுவதைக்
கண்ட ஆசிரியர் அவ்வாறு செய்ய வேண்டாமென்று குறிப்பாகச் சொல்லுவார்.
எங்களுக்கிருந்த ஆத்திரம் தீரவேயில்லை. ஆசிரியர் அவ்வாறு சொல்லும்
தினத்தில் மாத்திரம் சும்மா இருப்போம். மறுபடியும் கண்டனம் கிளம்பும்.
எங்கள் ஆசிரியர் இவ்விசயத்தை ஒரு நாள் சுப்பிரமணிய தேசிகரிடம்
சொல்லி, “இந்தப் பிள்ளைகளுக்கு அவர்களிடம் கோபம் உண்டு. அடியேனிடம்
அவ்விருவரும் தவறாக முன்பு நடந்து கொண்டார்கள். அதைத் தெரிந்து
அவர்களைப் படாதபாடு படுத்துகிறார்கள். நான் இந்த விசயத்தில் ஒருவாறு
சம்பந்தமுடையவனாதலால் இவர்களைச் சமாதானம் செய்ய இயலவில்லை.
சந்நிதானத்தில் ஒரு வார்த்தை கட்டளையிட வேண்டும்” என்று
கேட்டுக்கொண்டார். உடனே தேசிகர் எங்களை மாத்திரம் அழைத்துவரச்
செய்து, தக்க நியாயங்களை எடுத்துக்காட்டி, “நம்மிடம் வந்திருக்கும்
அவ்விருவர்களிடமும் விரோதம் பாராட்டுவது அழகன்று” என்று சொன்னார்.
அது முதல் நாங்கள் அவர்கள் பால் இருந்த கோபம் நீங்கி அன்போடு
பழகலானோம்.

திருச்சிற்றம்பலக் கோவையார்

அவ்விருவர்களுள் ஒருவராகிய மருதபண்டாரமென்பவருக்கும் எனக்கும்
ஆசிரியர் திருச்சிற்றம்பலக் கோவையார் பாடம் சொல்லி வந்தார்
. நாங்கள்
அதைக் கேட்பதோடு தனியே இருந்து சிந்திப்பதும் உண்டு. ஒருநாள் மடத்து
முகப்பில் தம்பிரான்கள் சிலரும் காரியத்தர்கள் சிலரும் கூடியிருந்தார்கள்.
அவர்களிற் சிலர் என்னை நோக்கிக் கோவையாரிலிருந்து சில செய்யுட்களைச்
சொல்லிப் பொருளும் சொல்ல வேண்டுமென்று விரும்பினர். நான் பைரவி
இராகத்தை ஆலாபனம் செய்து சில செய்யுட்களைச் சொல்லி விரிவாகப்
பொருளும் உரைத்தேன்
. யாவரும் திருப்தியுற்றார்கள்.

அப்பொழுது அங்கே கேட்டுக் கொண்டிருந்த பூசை வைத்தியலிங்கத்
தம்பிரானென்னும் பெரியார், “கோவையார் புத்தகம் உங்களிடம் இருக்கிறதா?”
என்றார். “இல்லை” என்றேன். உடனே அவர் எழுந்து தம்முடைய அறைக்குச்
சென்று அங்கே வெகு சாக்கிரதையாக வைத்திருந்த திருவாசகமும்
கோவையாரும் சேர்ந்த பழைய அச்சுப் பிரதி ஒன்றைக் கொணர்ந்து
கொடுத்தார். “இப்படி இலாபம் கிடைக்குமானால் தினந்தோறும் நான் இவ்வாறு
உபந்நியாசம் செய்வேனே” என்று சொல்லி அதை வாங்கிக் கொண்டு படித்து
வரலானேன்.

இடையிடையே ஆசிரியர் திருப்பெருந்துறைப் புராணச் செய்யுட்களை
இயற்றி வந்தார்.
 குமாரரது கலியாணத்தில் ஏற்பட்ட செலவில் அவருக்குக்
கடன் இருந்தது. அதை நீக்குவதற்கு வழி தெரியவில்லை. அத்துயரமும், பாடம்
சொல்லும் வேலையும் சேர்ந்தமையால் இயல்பாக உள்ள உத்சாகத்தோடு
புராணத்தை இயற்ற முடியவில்லை; அது மெல்ல நடந்து வந்தது.

(தொடரும்)

Saturday, May 11, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 87 : அத்தியாயம்-53 : அம்மை வடு

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்-தொடர்ச்சி)

நான் பல்லக்கில் சூரிய மூலையை அடைந்தபோது பகல் 11 மணி

இருக்கும் அம்மையென்ற காரணத்தால் என்னை நேரே அம்மானுடைய

வீட்டிற்குள் செல்ல அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை

வெளியூர்களிலிருந்து சிலர் வந்திருந்தனர். நான் இருந்த பல்லக்கு வீட்டுக்கு

எதிரே உள்ள தென்னந்தோப்பில் இறக்கி வைக்கப்பட்டது.

எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அங்கே அவ்வளவு

பேர்கள் கூடியிருந்ததற்குக் காரணம் இன்னதென்று தெரிந்த போது நான் இடி

விழுந்தவன் போலானேன். நான் அங்கே சென்ற தினத்திற்கு முதல் நாள் என்

அருமை மாதாமகரும், சிவ பக்தியை எனக்கு இளமையிலேயே புகட்டியவரும்

ஆன கிருட்டிண சாத்திரிகள் சிவசாயுச்சிய பதவியை அடைந்தனர். அவருடைய

இனிய வார்த்தைகளையும் சிவபூசா விசேடத்தையும் வேறு எங்கே

காண்போமென்று இரங்கினேன்.

குழப்பமான நிலை

இந்நிலையில் தோப்பிலே நான் பல்லக்கிற் கிடந்தபடியே வருந்துகையில்

சஞ்சயனத்தை நடத்தி விட்டு என் அம்மானாகிய சிவராமையருடன் என்

தந்தையாரும் பிறரும் வந்தனர். என்னை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல்

இருந்தவர்களைக் கண்டு அம்மான் கோபித்துக் கொண்டார். “நம்முடைய

குழந்தை; அவன் இன்னல்படும்போது அவனுக்கு உதவாக வீடு வேறு எதற்கு?

நன்றாய்ப் பிச்சைக்காரன் மாதிரி தோப்பில் நிறுத்தி வைத்தீர்கள்? உங்கள் மனம்

கல்லோ!” என்று சொல்லிப் பக்கத்தில் ஒருவரும் குடியில்லாமல் தனியேயிருந்த

அவருடைய வேறொரு வீட்டைத் திறந்து விரைவில் என்னை அங்கே

கொணர்ந்து வைக்கச் செய்தார்.

பிறகு என் தந்தையாரும் தாயாரும் வந்து என்னைக் கண்டு மிகவும்

வருந்தினார்கள். வேண்டிய பரிகாரங்களைப் பிறர் செய்ய நான் அவ்வீட்டிலே

இருந்து வந்தேன். எனக்குக் கண்டிருப்பது பெரியம்மையின் வகையாகிய

பனையேறியம்மையென்று அங்குள்ளோர் சொன்னார்கள். நான் சௌக்கியமாக

வந்து சேர்ந்ததை ஆசிரியரிடம் தெரிவிக்கும்படி எனக்குத் துணையாக வந்த

அரிகரபுத்திர பிள்ளையிடம் சொல்லி அனுப்பினேன்.

அம்மையின் வேகம்

ஒரு நாள் எனக்கு அம்மையின் வேகம் அதிகமாயிற்று. நான் என்

நினைவை இழந்தேன். அப்போது எல்லாரும் பயந்து போயினர். என்

தாயாரும் தந்தையாரும் கண்ணீர் விட்டனர்.

எனக்கு நினைவு சிறிது வந்தபோது, “நாம் மிகவும் அபாயமான

நிலையில் இருக்கிறோம்” என்ற உணர்வு உண்டாயிற்று. அருகில் கண்ணும்

கண்ணீருமாய் இருந்த என் தாயாரை நோக்கி, “நான் பிறந்து உங்களுக்கு

ஒன்றும் செய்யாமற் போகிறேனே!” என்று பலகீனமான குரலில் சொன்னேன்.

அதைக் கேட்டு அவர் கோவென்று கதறினார். என் தந்தையாரும் துக்க

சாகரத்தில் ஆழ்ந்தார். ஒன்றும் அறியாத குழந்தையாகிய என் தம்பி அருகில்

இருந்து மருள மருள விழித்தான்.

ஆண்டவன் திருவருளால் அக்கண்டத்தினின்றும் நான் தப்பினேன்.

அம்மை கடுமையாக இருந்தாலும் அக்கடுமை என் உடம்பில் தழும்பை

உண்டாக்கியதோடு நின்றது. என் பாட்டனார் இறந்த துக்கத்தின் நடுவிலே

வளர்ந்து வந்து அத்துன்ப நிலையை நினைவுறுத்தும் அடையாளமாக இன்றும்

சில அம்மை வடுக்கள் என் உடலில் இருக்கின்றன.

மார்கழி மாதம் முழுவதும் நான் மிக்க துன்பத்தை அடைந்தேன்.

தைமாதம் பிறந்தது. எனக்குச் சிறிது சௌக்கியம் உண்டாயிற்று; தலைக்குச் சலம்

விட்டார்கள். திருவாவடுதுறையில் அசுவதி நட்சத்திரத்திலே குருபூசை

நடைபெற்றது. அன்று இரவு சூரியமூலையில் என் அம்மான் வீட்டுத்

திண்ணையில் இருந்தபடியே பார்த்த போது திருவாவடுதுறையில் ஆகாச

வாணங்கள் தெரிந்தன. முந்தின வருடத்தில் நான் திருவாவடுதுறையிலே கண்ட

காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக என் ஞாபகத்துக்கு வந்தன. என் ஆசிரியர்

பலருக்குச் செய்யுள் இயற்றி அளித்ததை நினைத்த போது, “இவ்வருடமும்

அத்தகைய ஆச்சரிய நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே!”

என்று வருந்தினேன்.

“நாம் இல்லாத காலத்தில் மாணக்கர்களுக்கு என்ன என்ன பாடங்கள்

நடந்தனவோ! நாம் என்ன என்ன அரிய விசயங்களைக் கேளாமல்

இருக்கிறோமோ!” என்ற சிந்தனையும் எனக்கு இருந்தது. பிள்ளையவர்கள்

மார்கழி மாதத்தில் புறப்பட்டுச் சில ஊர்களுக்குச் சென்று தை மாதம்

குருபூசைக்கு வந்தார்கள் என்ற செய்தி எனக்குப் பிறகு தெரிய வந்தது.

அப்பொழுதுதான், “நமக்கு அதிகமான நட்டம் நேரவில்லை” என்று எண்ணி

ஆறுதல் உற்றேன். பிள்ளையவர்கள் விருப்பப்படி அடிக்கடி

திருவாவடுதுறையிலிருந்து சிலர் வந்து என்னைப் பார்த்துச் செல்வார்கள்.

மகாமகம்

அந்த வருடம் (1873) மகாமக வருடம். மகாமக காலத்தில்

கும்பகோணத்திற் பெருங்கூட்டம் கூடுமென்றும் பல வித்துவத்துசபைகள்

நடைபெறும் என்றும் கேள்வியுற்றிருந்தேன். சிரீ சுப்பிரமணிய தேசிகர் தம்

பரிவாரங்களுடன் சென்று தங்குவாரென்றும், பல வித்துவான்கள் அவர் முன்

கூடுவார்களென்றும், பிள்ளையவர்களும் அவருடன் போய்த் தங்குவாரென்றும்

அறிந்தேன். “நம்முடைய துரதிர்ட்டம் எவ்வளவு கொடியது! பன்னிரண்டு

வருடங்களுக்கு ஒருமுறை வரும் இவ்விசேடத்துக்குப் போய் வர நமக்கு

முடியவில்லையே! பிள்ளையவர்களைச் சார்ந்தும் அவர்களோடு சேர்ந்து

இப்புண்ணிய காலத்தில் நடக்கும் விசேடங்களைக் கண்டு களிக்க முடியாமல்

அசௌக்கியம் நேர்ந்து விட்டதே!” என்றெல்லாம் நினைந்து நினைந்து

வாடினேன்.

சூரிய மூலையிலிருந்து சிலர் மகா மகத்துக்குப் போய் வந்தனர். அங்கே

சுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் வந்திருந்தார்களென்றும் பல பல

விசேடங்கள் நடைபெற்றனவென்றும் அவர்கள் வந்து சொல்ல எனக்கும்

இயல்பாகவே இருந்த வருத்தம் பின்னும் அதிகமாயிற்று.

ஆசிரியரை அடைதல்

என் தேக நிலை வர வரக் குணமடைந்து வந்தமையால், “இனி

விரைவில் பிள்ளையவர்களிடம் போக வேண்டும்” என்று அடிக்கடி

சொல்லிக்கொண்டே இருந்தேன். என் தந்தையார் என் வேகத்தை

உணர்ந்து மாசி மாதம் 17-ஆம் தேதி (29-2-1873) புதன்கிழமை மாலை

என்னை அழைத்துக்கொண்டு திருவாவடுதுறைக்கு வந்தார்.

அப்பொழுது மடம் என்றும் இல்லாத கலகலப்போடு இருந்தது. மகா

மகத்திற்குப் போயிருந்த வித்துவான்களும் பிரபுக்களும் சுப்பிரமணிய

தேசிகரோடு திருவாவடுதுறைக்கு வந்திருந்தனர். எல்லாரும் அவரவர்களுக்கு

அமைக்கப் பெற்ற இடங்களில் தங்கியிருந்தனர்.

மடத்தில் கீழைச் சவுகண்டியில் பிள்ளையவர்கள் பலருக்கிடையே

இருந்து சம்பாசணை செய்திருந்தனர். அவ்விடத்தை அணுகி ஆசிரியரைக்

கண்டேன். அப்போது என் உடம்பில் உள்ள அம்மை வடுக்களைக் கண்டால்

அவர் வருத்தமடைவாரென்று எண்ணி அவர் கண்களுக்குத் தெரியாதபடி

அதிகமாக விபூதியை உடம்பு முழுவதும் பூசியிருந்தேன். ஆசிரியர் என்னைக்

கண்டவுடன் மிக்க அன்போடு, “சாமிநாதையரா? இப்போது உடம்பு

சௌக்கியமாயிருக்கிறதா? உடம்பு முழுவதும் வடுத் தெரியாமல் விபூதி கவசம்

தரித்திருக்கிறது போல் தோற்றுகிறது. உம்முடைய ஞாபகமாகவே இருக்கிறேன்.

கண்ணப்ப நாயனார் புராணத்தோடே பெரிய புராணம் நின்றிருக்கிறது. மகாமக

காலத்தில் நீர் இருந்திருந்தால் எவ்வளவோ சந்தோசமாக இருந்திருக்கும்”

என்று கூறினார். அப்பால் என் தந்தையாரைப் பார்த்து சேம சமாசாரங்களை

விசாரித்தார்.

(தொடரும்)

Thursday, May 09, 2024

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 03. என் தமிழ்ப்பணி

 




(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 02. என் கடன் பணி செய்து கிடப்பதே! – தொடர்ச்சி)

தலைமையுரையில், ஞானியார் அவர்கள் “கோவிந்தன் பேசிய நேரம் சிறிய நேரம் என்றாலும், என் சிந்தனைக்கு மட்டுமல்லாமல் அனைவர் சிந்தனைக்கும் அரிய வேலை கொடுத்துவிட்டான்” எனக் கூறிப் பாராட்டினார்.
மற்றுமொரு நிகழ்ச்சி : நான் வித்துவான் பட்டம் பெறாத நேரம். ஆசிரியர்பால் பின்னர் தமிழ் கற்க வந்த கோமான் ம. வீ. இராகவன் அவர்கள் அந்த ஆண்டு. வித்துவான் தேர்வு எழுதியிருந்தார், அந்நிலையில் திருவத்திபுரத்திற்கு வருகை தந்த, எங்கள் ஆசிரியரின் ஆசிரியர் கரந்தைக்கவியரசு ஆர் வெங்கடாசலம் பிள்ளை அவர்கள், இராகவன் தேர்வில் நன்றாக எழுதியுள்ளார் எனக் கூறினார். அது கேட்ட ஒளவை அவர்கள் என்னைச் சுட்டிக் காட்டி, “இவன் அவனைவிடத் தெளிவாகப் படித்தவன்?” என்று கூறிச் சென்று விட்டார்.
கவியரசு அவர்கள் என்னை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு, இலக்கியத்திலும், இலக்கணத்திலுமாகச் சில கேள்விகளைக் கேட்டார். கூடுமானவரை நல்ல விடையே கூறினேன். என் அறிவு எனக்குத் தானே தெரியும். மேலும் அவர் கேட்டால் விழிக்க வேண்டி நேரும். ஆசிரியர் நற்சான்றிற்கு மாசு நேரக் கூடும் என்பதால் கவியரசை விட்டு ஓடி விடத் திட்டமிட்டு அவரிடம் ஓர் ஐயம் எழுப்பினேன். “தொல்காப்பியர் எழுவாய் வேற்றுமைக்கு இலக்கணம் கூறும்போது எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே” என்றார். அதாவது சொல் எவ்விதத் திரிபும் இல்லாமல் இருப்பது. அவ்வாறு கூறிய அவரே ‘நீயீர்’ என்ற எழுவாய்ச் சொல்லுக்கு இலக்கணம் கூறும்போது “நும்மின் திரிபெயர்” என்று கூறியுள்ளார். இது முன் கூறிய இலக்கணத்திற்கு முரண் ஆகாதா? நும்மின் திரி, பெயராகிய நீயீர் என்பது பிற வேற்றுமைகளை ஏற்கும்போது மீண்டும் நும், எனத் திரிந்து, “தும்மை நும்மால்” என ஆவானேன் என்ற இரு ஐயங்களை எழுப்பினேன். அவர் சிந்திக்கத் தொடங்கி விட்டார். விட்டால் போதும் என ஓடி விட்டேன்.

பள்ளியில் மற்றொரு தமிழாசிரியர் திரு. பாலசுந்தர நாயகர் அவர்கள் வித்துவான் தேர்வில் வெற்றி பெற்றார். அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த தலைமை ஆசிரியரின் அனுமதி கேட்டோம். அவர் மறுத்து விட்டார். பானுகவி மாணவர் கழகமும் விழா நடத்த முன் வரவில்லை. அதனால் ஒளவைத் தமிழ் மாணவர் கழகம் என்ற புதிய கழகத்தைத் தொடங்கி அவருக்கு மிகப் பெரிய பாராட்டு விழாவினை நடத்தினோம்.

ஓராண்டு கழிந்தது; 1936இல் முதலாண்டு விழா நடத்த முடிவு செய்தோம். விழாத் தலைமைக்கு மறைமலை அடிகளாரை அழைக்க முடிவு செய்தோம். ஆசிரியர் ஒளவை அவர்கள் அவருக்கு கடிதம் எழுத, அடிகளார் ஒரு நாளைக்கு 100 வெண் பொற்காசுகள் (அதாவது ரூபாய்) தர வேண்டும் என்றும் உணவு இவ்வகையில் இருக்க வேண்டும் என்றும் பதில் எழுதி விட்டார்.
எங்களிடம் அவ்வளவு தொகை இல்லை; ஆனாலும் மறைமலையாரை அழைக்கும் ஆசையும் குறையவில்லை. ஒருநாள் ஆசிரியர் அவர்களிடமும் சொல்லாமல் பல்லாவரம் சென்று, அரைக்கிலோ கற்கண்டு, 2 சீப்பு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, மலர்மாலை இவற்றை வாங்கிக் கொண்டு அடிகளார் மாளிகை சென்று ஒரு தட்டு வாங்கி, அதில் இவற்றை வைத்து எடுத்துக் கொண்டு அவரிடம் சென்று அவர் கையில் தட்டைக் கொடுத்துவிட்டுக் காலில் வீழ்ந்து வணங்கினேன். (நான் வணங்கிய முதல்வர் அவர் தான்.)
வாழ்த்தி எழுந்திருக்கப் பணித்துவிட்டு, யார்? வந்தது ஏன் என வினவினார்: அழைக்க வந்தேன் என்றேன். ஒளவைக்குக் கடிதம் எழுதி விட்டேனே என்றார். கையில் இருப்பது 200 வெள்ளிக் காசுகள்தாம் என்றாலும் தாங்கள் வந்து விழாத் தலைமை தாங்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன், ஒப்புக் கொண்டார்.
1936 மே 24, 25, 26 ஆகிய நாட்களில், திருவத்திபுரம் எங்கள் தெருவில், கோயிலை அடுத்து தெருவை அடைத்துப் பெரிய பந்தல் போட்டு விழா நடத்தினோம்.
வித்துவான் பட்டம் பெற்ற பின்னர் பி.ஓ.எல். பட்டம், பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. கல்லூரி சென்று படிக்காமல் வீட்டிலிருந்தே தேர்வு எழுதுவதானால் 3ஆண்டு
ஆசிரியராகப் பணி புரிந்திருக்க வேண்டும்; தேர்வுக்கு மனுச் செய்யும்போது ஆசிரியராக இருக்க வேண்டும் என்பது பல்கலைக் கழக விதி. அதனாலும், இரண்டாம் உலகப் போர் காரணத்தால் அறிஞர் அண்ணா உள்ளிட்ட கழகத்தவர். அனைவரும் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா அணிக்கு ஆதரவான பிரசாரம் செய்ய முனைந்து விட்டனர், அதனாலும், வேலூரில் என் பழைய தமிழாசிரியர் சென்ற அதே பள்ளியில் ஆசிரியராக 1942-இல் சேர்ந்தேன். 1944 வரை பணி புரிந்தேன். அங்கும் தமிழ்ப்பணி தொடர்ந்தது.

பி.ஓ.எல். தேர்வில் முதல் பகுதி பி.எசு. வகுப்பிற்குரிய ஆங்கில இலக்கியம். இரண்டாம் பகுதி தமிழ் வித்துவான் தேர்வு, மூன்றாம் பகுதி திராவிட மொழி ஒப்பிலக்கணமும், தென்னிந்திய வரலாறும் (ஆங்கிலத்தில்). இரண்டாம் பகுதியை முன்னரே முடித்து விட்டேன். முதல் பகுதியையும் முடித்து விட்டேன். மூன்றாம் பகுதியில் தென்னிந்திய வரலாற்றுக்குரிய நூல்களாகிய திருநீலகண்ட சாத்திரியாரின் சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, திரு. கோபாலன் அவர்களின் பல்லவ வரலாறு, திரு. பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்களின் தமிழர் வரலாறு ஆகிய ஆங்கில நூல்களை வாங்கிக் கொண்டேன். காலுடுவெல் ஒப்பிலக்கணத்தை இலண்டனில் உள்ள தம் நண்பர் மூல்ம் வாங்கித் தந்தார் ஆசிரியர்.
அவற்றைப் படிக்கும்போது காலுடுவெல் ஒப்பிலக்கணத்தையும், பி.டி.எசு. அவர்களின் தமிழர் வரலாற்றையும் தமிழில் மொழி பெயர்த்தால் பி.ஓ.எல். படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் என எண்ணினேன்.
வேலூரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர், தாமரைச் செல்வர், அமரர். சுப்பையா பிள்ளை அவர்கள்,
சென்னையில், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தலைமையில், 22-2-42-இல் நடைபெறும் நற்றிணை மாநாட்டில் ‘பாலை’ என்ற தலைப்பில் சொற் பொழிவு ஆற்றுமாறும், ஆற்றும் சொற்பொழிவை அப்படியே எழுதித் தருமாறும் வேண்டினார். நானும் அது செய்தேன்.
அம்மாநாட்டினைத் தொடர்ந்து திரு. சுப்பையா அவர்களின் நட்பு தொடர்ந்தது. இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தருமாறு அன்புக் கட்டளை இட்டார்.
“திருமாவளவன்” என்ற முதல் நூல் 1951இல் வெளிவந்தது. (என் முதல் மகனின் பெயரும் திருமாவளவன் என்பது குறிப்படல் நலம்.) அதைத் தொடர்ந்து சங்க காலப் புலவர் என்ற வரிசையில் 16 நூல்களையும், அரசர் என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார் புலவர் வரிசையில் முதல் நூல் 1952இலும், அரசர் வரிசையில் கடைசி நூல் 1955லும் வெளிவந்தன.
தமிழ் எழுத்தாளர் உலகிற்கு அறிமுகமாகாத என் நூல்கள் இருபத்தைந்தை மூன்றாண்டு கால அளவில் வெளியிட்டு எனக்குப் பெருமை சேர்த்த திருவாளர் பிள்ளை அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
எழுத்துப் பணி தொடர, மலர் நிலையம், வள்ளுவர் பண்ணை, அருணா பதிப்பகம் என்ற வெளியீட்டார் மூலம் பல நூல்கள் வெளி வந்தன. அரசியல் பணிகளுக்கிடையே காலுடுவெல் அவர்களின் ஒப்பிலக்கண மொழி பெயர்ப்பு 1959இல் வள்ளுவர் பண்ணை மூலம் வெளிவந்தது.
1990 ஏப்பிரல் 15ஆம் நாளன்று, என் ஐம்பதாவது நூலாக, திரு. பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் தமிழர் வரலாறு மொழிபெயர்க்கப் பெற்று, திரு. பிள்ளை.
அவர்களின் மருகர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் முயற்சியால் கழக வெளியீடாக வெளியிடப் பெற்றது. அவருக்கு நன்றி.
இப்போது (1991) அவர் பணிக்க, திருவாளர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்களின் Origin and Spread of Tamils, (‘தமிழரின் தோற்றமும் பரவலும்’) என்ற நூல் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளது. திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் Pre Aryan Tamil Culture (ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு) என்ற நூலை மொழி பெயர்த்து முடித்துவிட்டு, அவரின் மற்றொரு நூலாகிய Stone Age in India (இந்தியாவில் கற்காலம்) என்ற நூலை மொழி பெயர்க்க எடுத்துக் கொண்டுள்ளேன்- என் எழுத்துப்பணி தொடரும். குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி, பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். “கல்வி கரையில் கற்பவர் நாள்சில” காலம் இடம் தந்தால் என் எழுத்துப் பணி ஓரளவேனும் முற்றுப் பெறும்.

(தொடரும்)

Saturday, May 04, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 85: திருப்பெருந்துறைப் புராணம் – தொடர்ச்சி)

121 செய்யுட்களில் நாட்டுப்படலம் நிறைவேறியது. கடவுள் வணக்கம்
முதலியவற்றோடு 158 செய்யுட்கள் இயற்றப் பெற்றன. அடிக்கடி சுப்பிரமணிய
தேசிகர் புராணத்தைப்பற்றிப் பிள்ளையவர்களை விசாரிப்பார். நான் தனியே
சென்று பேசும்போது என்னையும் வினவுவார். நான் இன்ன இன்ன பகுதிகள்
நிறைவேறின என்று சொல்லுவேன். அவருக்குச் செய்யுட்களைக் கேட்க
வேண்டுமென்ற ஆவல் உண்டாகும்.

நாட்டுப்படலம் முடிந்தவுடன் ஆசிரியர் அதுவரையில் ஆன
பகுதிகளைச் சுப்பிரமணிய தேசிகர் முன்பு படித்துக்காட்டச் செய்தார்.
அச்சமயம் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வந்திருந்தார்.
செய்யுட்களைக் கேட்டுத் தேசிகர் பாராட்டிக் கொண்டே வந்தார்.
“திருப்பெருந்துறை பெரிய சிவசேத்திரம். மாணிக்கவாசக சுவாமிகள் அருள்
பெற்ற தலம். அதற்கு ஏற்றபடி இப்புராணமும் சிறப்பாக இருக்கிறது. சீக்கிரம்
இதை நிறைவேற்றி அரங்கேற்றிப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.
செட்டியாரும் மிகவும் பாராட்டினார்.

அக்கவிஞர்பிரான் நாள்தோறும் சிலசில பாடல்களைச் செய்து வந்தார்.
அடிக்கடி யாரேனும் பார்க்க வருவார்கள். அவர்களோடு சம்பாசணை
செய்வதில் பொழுது போய்விடுமாதலால் சில நாட்கள் புராண வேலை
நடைபெறாது. தமிழ்ப்பாடம் மாத்திரம் தடையின்றி நடந்து வந்தது.

பெரிய புராணப் பாடம்

தம்பிரான்களுடைய வேண்டுகோளின்படி ஆசிரியர் பெரிய புராணப்
பாடம் நடத்த ஆரம்பித்தார். அப்போது தியாகராசசெட்டியாரும், மகாவைத்தியநாதையரும், அவர் தமையனாராகிய
இராமசாமி ஐயரும் மடத்திற்கு வந்திருந்தனர்.

நான் பெரிய புராணம் படிக்கும்போது அபசுவரம் இல்லாமல்
படிப்பதைக் கண்டு மகாவைத்தியநாதையர் சந்தோசமடைந்தார். சில நாட்கள்
அவர் திருவாவடுதுறையில் தங்கினமையின், அவரோடு பழகி அவருடைய
குணங்களை அறிந்துகொள்ள அனுகூலமாயிற்று. அவரோடு பழகப் பழக
அவருடைய சிவபக்தியும், ஒழுக்கமும், வரையறையான பழக்கங்களும்,
தூய்மையும் என் மனத்தைக் கவர்ந்தன
. சுப்பிரமணிய தேசிகரால் தாம்
முன்னுக்கு வந்ததை எண்ணி அவர் விநயமாக நடந்து கொண்டதைப் பார்த்த
போது அவரது நன்றியறிவு எவ்வளவு சிறப்பான தென்பதை நான்
உணர்ந்தேன்.

அவர் என்னிடம் அன்பு பாராட்டி எனக்கு எவ்வாறு சங்கீதப் பயிற்சி
ஏற்பட்டது என்று கேட்டார். நான் எங்கள் குடும்ப வரலாற்றையும் தந்தையாரது
சங்கீதத் திறமையையும் எடுத்துச் சொன்னேன். எனக்குத் தெரிந்த கனம்
கிருட்டிணையர் கீர்த்தனங்களையும் பாடிக் காட்டினேன். அவர் கேட்டு
மகிழ்ந்தார்.

வைசூரி

ஆங்கீரச வரு்ம் கார்த்திகை மாதம் (1872 நவம்பர்) முதல்
பெரியபுராணப் பாடம் நிகழ்ந்து வந்தது. கண்ணப்ப நாயனார் புராணம்
நடைபெற்றபோது எனக்குத் திடீரென்று கடுமையான சுரம் வந்துவிட்டது.
உடம்பில் எங்கும் முத்துகள் உண்டாயின. எல்லாரும் பெரியம்மை
வார்த்திருப்பதாகச் சொன்னார்கள். அதனால் பெரியபுராணப் பாடம்
கேட்கவோ மற்றக் காரியங்களைச் செய்யவோ ஒன்றும் இயலவில்லை.
சத்திரத்தின் ரேழி (இடைகழி)யில் படுத்தபடியே இருந்தேன். பிள்ளையவர்கள்
சில சமயங்களில் வந்து அருகில் உட்கார்ந்து, “உமக்கு இப்படி அசௌக்கியம்
வந்துவிட்டதே!” என்று வருந்துவார். என் கண் இமைகளின் மேலும்
கொப்புளங்கள் எழுந்தமையால் கண்களைத் திறக்க முடியவில்லை.
பிள்ளையவர்கள் வரும்போது படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்வேன்.
துக்கம் பொங்கிவரும். கண்ணையோ திறக்க முடியாது. கண்ணீர் வழிய வழிய
நான் என் வருத்தத்தைத் தெரிவித்தேன். “என் பாட்டனார் ஊராகிய சூரிய
மூலைக்குப் போய்த் தேக சௌக்கியம் உண்டான பிறகு வருகிறேன்’ 
என்றேன்.
அவ்வாறே செய்யலாம் என்று கூறி என்னை அனுப்புவதற்கு வேண்டிய
ஏற்பாடு செய்யலானார்கள். அப்பொழுது மடத்துக்குக் கல்லிடைக்குறிச்சியி லிருந்து வீரராகவையர் என்ற கனவான் ஒருவர் தம் குடும்பத்துடன் வந்து சத்திரத்தில் தங்கியிருந்தார். அவருடைய முதிய தாயார் ஒரு விதமான உதவி செய்வாரும் இல்லாமல் நான் இடர்ப்படுவதைக் கண்டு இரங்கி வருந்தி, “அப்பா! நீ கவலைப்படாதே; நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறி என் அருகில் இருந்து வேண்டிய
அனுகூலங்களைச் செய்து வந்தார். இரவு முழுவதும் தூங்காமல் என்னைக்
கையைப் பிடித்து அழைத்துச் சென்றும், தாகமென்று சொன்ன போதெல்லாம்
வெந்நீர் வைத்துக் கொடுத்தும் பாதுகாத்தார். எனக்குத் துன்பத்தைக் கொடுத்த
அம்மையின் தெய்வம் அத்துன்பத்தினிடையே பாதுகாப்பதற்கு அவ்வுருவம்
எடுத்து வந்ததாகவே எண்ணினேன்.

தை மாதத்தில் நடைபெறும் குருபூசை சமீபித்துக்கொண்டிருந்தது.
அதன் பொருட்டுப் பலர் வருவார்களாதலால் அச்சமயத்தில்
திருவாவடுதுறையில் இருப்பது நல்லதன்று என எண்ணியே நான் சூரிய மூலை
செல்வதாக என் ஆசிரியரிடம் கூறினேன்.

விடை பெறுதல்

என் அசௌக்கியத்தையும் அதனால் பிள்ளையவர்களுக்கு ஏற்பட்ட
வருத்தத்தையும் அறிந்த சுப்பிரமணிய தேசிகர் பெரிய புராணப் பாடத்தை
நிறுத்தும்படி கட்டளையிட்டார்.

என்னை ஒரு பல்லக்கில் இருக்கச் செய்து சூரிய மூலைக்கு
அனுப்பினார். மூங்கில் வளைவுள்ள அப்பல்லக்கு மூடி இல்லாதது; அவசரத்தில்
வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. கண்ணை மூடியபடியே எல்லாரிடமும்
விடைபெற்றுக் கொண்டேன். பிள்ளையவர்களும் பிறரும் என்னைப் பார்த்து
மிகவும் விசனப்பட்டார்கள்.

“சாமிநாதையர், போய் வருகிறீரா?” என்ற பேச முடியாமல்
வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தழுதழுத்தபடியே பொங்கி வரும் துயரத்தில்
நனைத்துக் கூறினார் ஆசிரியர்.

எனக்குப் பேச வாய் வரவில்லை. குழறினேன்; அழுதேன்; காலை எட்டு
மணிக்குப் பல்லக்கில் நான் சூரிய மூலையை நோக்கிப் பிரயாணப்பட்டேன்.
பிள்ளையவர்கள் என்னுடன் அரிஅரபுத்திர பிள்ளை என்ற மாணாக்கரை
வழித்துணையாகச் சென்று வரும்படி அனுப்பினார். சூரிய மூலைக்குத்
திருவாவடுதுறையிலிருந்து போக அப்போது வசதியான சாலையில்லை.
வயல்களின் கரைவழியே போக வேண்டும். எனக்கும் பிள்ளையவர்களுக்கும்
இடையிலே உள்ள தூரம் அதிகமாயிற்று. என் உள்ளத்தில், “இந்தத் தூரம் இப்படியே
விரிந்து சென்று விடுமோ?” என்ற எண்ணம் சிறிது தோன்றியது; அப்போது
என் வயிறு பகீரென்றது.

பல்லக்கு, சூரிய மூலைக்கு அருகில் உள்ள ஒரு தோப்பு வழியே
சென்றபோது என் தந்தையார் எதிரே வந்தனர். நான் இருந்த நிலையைக்
கண்ட அவர் திடுக்கிட்டுப் போனார். அவர் வந்த கோலம் ஏதோ ஒரு
விசேடத்தைக் குறிப்பித்தது. கண்ணை நன்றாகத் திறந்து பார்க்க என்னால்
முடியவில்லை. “பேசாமல் வீட்டுக்குப் போ; பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று
தந்தையார் சொல்லிச் சென்றார்.

(தொடரும்)