(உ.வே.சா. வின் என் சரித்திரம் 85: திருப்பெருந்துறைப் புராணம் – தொடர்ச்சி)

121 செய்யுட்களில் நாட்டுப்படலம் நிறைவேறியது. கடவுள் வணக்கம்
முதலியவற்றோடு 158 செய்யுட்கள் இயற்றப் பெற்றன. அடிக்கடி சுப்பிரமணிய
தேசிகர் புராணத்தைப்பற்றிப் பிள்ளையவர்களை விசாரிப்பார். நான் தனியே
சென்று பேசும்போது என்னையும் வினவுவார். நான் இன்ன இன்ன பகுதிகள்
நிறைவேறின என்று சொல்லுவேன். அவருக்குச் செய்யுட்களைக் கேட்க
வேண்டுமென்ற ஆவல் உண்டாகும்.

நாட்டுப்படலம் முடிந்தவுடன் ஆசிரியர் அதுவரையில் ஆன
பகுதிகளைச் சுப்பிரமணிய தேசிகர் முன்பு படித்துக்காட்டச் செய்தார்.
அச்சமயம் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வந்திருந்தார்.
செய்யுட்களைக் கேட்டுத் தேசிகர் பாராட்டிக் கொண்டே வந்தார்.
“திருப்பெருந்துறை பெரிய சிவசேத்திரம். மாணிக்கவாசக சுவாமிகள் அருள்
பெற்ற தலம். அதற்கு ஏற்றபடி இப்புராணமும் சிறப்பாக இருக்கிறது. சீக்கிரம்
இதை நிறைவேற்றி அரங்கேற்றிப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.
செட்டியாரும் மிகவும் பாராட்டினார்.

அக்கவிஞர்பிரான் நாள்தோறும் சிலசில பாடல்களைச் செய்து வந்தார்.
அடிக்கடி யாரேனும் பார்க்க வருவார்கள். அவர்களோடு சம்பாசணை
செய்வதில் பொழுது போய்விடுமாதலால் சில நாட்கள் புராண வேலை
நடைபெறாது. தமிழ்ப்பாடம் மாத்திரம் தடையின்றி நடந்து வந்தது.

பெரிய புராணப் பாடம்

தம்பிரான்களுடைய வேண்டுகோளின்படி ஆசிரியர் பெரிய புராணப்
பாடம் நடத்த ஆரம்பித்தார். அப்போது தியாகராசசெட்டியாரும், மகாவைத்தியநாதையரும், அவர் தமையனாராகிய
இராமசாமி ஐயரும் மடத்திற்கு வந்திருந்தனர்.

நான் பெரிய புராணம் படிக்கும்போது அபசுவரம் இல்லாமல்
படிப்பதைக் கண்டு மகாவைத்தியநாதையர் சந்தோசமடைந்தார். சில நாட்கள்
அவர் திருவாவடுதுறையில் தங்கினமையின், அவரோடு பழகி அவருடைய
குணங்களை அறிந்துகொள்ள அனுகூலமாயிற்று. அவரோடு பழகப் பழக
அவருடைய சிவபக்தியும், ஒழுக்கமும், வரையறையான பழக்கங்களும்,
தூய்மையும் என் மனத்தைக் கவர்ந்தன
. சுப்பிரமணிய தேசிகரால் தாம்
முன்னுக்கு வந்ததை எண்ணி அவர் விநயமாக நடந்து கொண்டதைப் பார்த்த
போது அவரது நன்றியறிவு எவ்வளவு சிறப்பான தென்பதை நான்
உணர்ந்தேன்.

அவர் என்னிடம் அன்பு பாராட்டி எனக்கு எவ்வாறு சங்கீதப் பயிற்சி
ஏற்பட்டது என்று கேட்டார். நான் எங்கள் குடும்ப வரலாற்றையும் தந்தையாரது
சங்கீதத் திறமையையும் எடுத்துச் சொன்னேன். எனக்குத் தெரிந்த கனம்
கிருட்டிணையர் கீர்த்தனங்களையும் பாடிக் காட்டினேன். அவர் கேட்டு
மகிழ்ந்தார்.

வைசூரி

ஆங்கீரச வரு்ம் கார்த்திகை மாதம் (1872 நவம்பர்) முதல்
பெரியபுராணப் பாடம் நிகழ்ந்து வந்தது. கண்ணப்ப நாயனார் புராணம்
நடைபெற்றபோது எனக்குத் திடீரென்று கடுமையான சுரம் வந்துவிட்டது.
உடம்பில் எங்கும் முத்துகள் உண்டாயின. எல்லாரும் பெரியம்மை
வார்த்திருப்பதாகச் சொன்னார்கள். அதனால் பெரியபுராணப் பாடம்
கேட்கவோ மற்றக் காரியங்களைச் செய்யவோ ஒன்றும் இயலவில்லை.
சத்திரத்தின் ரேழி (இடைகழி)யில் படுத்தபடியே இருந்தேன். பிள்ளையவர்கள்
சில சமயங்களில் வந்து அருகில் உட்கார்ந்து, “உமக்கு இப்படி அசௌக்கியம்
வந்துவிட்டதே!” என்று வருந்துவார். என் கண் இமைகளின் மேலும்
கொப்புளங்கள் எழுந்தமையால் கண்களைத் திறக்க முடியவில்லை.
பிள்ளையவர்கள் வரும்போது படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்வேன்.
துக்கம் பொங்கிவரும். கண்ணையோ திறக்க முடியாது. கண்ணீர் வழிய வழிய
நான் என் வருத்தத்தைத் தெரிவித்தேன். “என் பாட்டனார் ஊராகிய சூரிய
மூலைக்குப் போய்த் தேக சௌக்கியம் உண்டான பிறகு வருகிறேன்’ 
என்றேன்.
அவ்வாறே செய்யலாம் என்று கூறி என்னை அனுப்புவதற்கு வேண்டிய
ஏற்பாடு செய்யலானார்கள். அப்பொழுது மடத்துக்குக் கல்லிடைக்குறிச்சியி லிருந்து வீரராகவையர் என்ற கனவான் ஒருவர் தம் குடும்பத்துடன் வந்து சத்திரத்தில் தங்கியிருந்தார். அவருடைய முதிய தாயார் ஒரு விதமான உதவி செய்வாரும் இல்லாமல் நான் இடர்ப்படுவதைக் கண்டு இரங்கி வருந்தி, “அப்பா! நீ கவலைப்படாதே; நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறி என் அருகில் இருந்து வேண்டிய
அனுகூலங்களைச் செய்து வந்தார். இரவு முழுவதும் தூங்காமல் என்னைக்
கையைப் பிடித்து அழைத்துச் சென்றும், தாகமென்று சொன்ன போதெல்லாம்
வெந்நீர் வைத்துக் கொடுத்தும் பாதுகாத்தார். எனக்குத் துன்பத்தைக் கொடுத்த
அம்மையின் தெய்வம் அத்துன்பத்தினிடையே பாதுகாப்பதற்கு அவ்வுருவம்
எடுத்து வந்ததாகவே எண்ணினேன்.

தை மாதத்தில் நடைபெறும் குருபூசை சமீபித்துக்கொண்டிருந்தது.
அதன் பொருட்டுப் பலர் வருவார்களாதலால் அச்சமயத்தில்
திருவாவடுதுறையில் இருப்பது நல்லதன்று என எண்ணியே நான் சூரிய மூலை
செல்வதாக என் ஆசிரியரிடம் கூறினேன்.

விடை பெறுதல்

என் அசௌக்கியத்தையும் அதனால் பிள்ளையவர்களுக்கு ஏற்பட்ட
வருத்தத்தையும் அறிந்த சுப்பிரமணிய தேசிகர் பெரிய புராணப் பாடத்தை
நிறுத்தும்படி கட்டளையிட்டார்.

என்னை ஒரு பல்லக்கில் இருக்கச் செய்து சூரிய மூலைக்கு
அனுப்பினார். மூங்கில் வளைவுள்ள அப்பல்லக்கு மூடி இல்லாதது; அவசரத்தில்
வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. கண்ணை மூடியபடியே எல்லாரிடமும்
விடைபெற்றுக் கொண்டேன். பிள்ளையவர்களும் பிறரும் என்னைப் பார்த்து
மிகவும் விசனப்பட்டார்கள்.

“சாமிநாதையர், போய் வருகிறீரா?” என்ற பேச முடியாமல்
வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தழுதழுத்தபடியே பொங்கி வரும் துயரத்தில்
நனைத்துக் கூறினார் ஆசிரியர்.

எனக்குப் பேச வாய் வரவில்லை. குழறினேன்; அழுதேன்; காலை எட்டு
மணிக்குப் பல்லக்கில் நான் சூரிய மூலையை நோக்கிப் பிரயாணப்பட்டேன்.
பிள்ளையவர்கள் என்னுடன் அரிஅரபுத்திர பிள்ளை என்ற மாணாக்கரை
வழித்துணையாகச் சென்று வரும்படி அனுப்பினார். சூரிய மூலைக்குத்
திருவாவடுதுறையிலிருந்து போக அப்போது வசதியான சாலையில்லை.
வயல்களின் கரைவழியே போக வேண்டும். எனக்கும் பிள்ளையவர்களுக்கும்
இடையிலே உள்ள தூரம் அதிகமாயிற்று. என் உள்ளத்தில், “இந்தத் தூரம் இப்படியே
விரிந்து சென்று விடுமோ?” என்ற எண்ணம் சிறிது தோன்றியது; அப்போது
என் வயிறு பகீரென்றது.

பல்லக்கு, சூரிய மூலைக்கு அருகில் உள்ள ஒரு தோப்பு வழியே
சென்றபோது என் தந்தையார் எதிரே வந்தனர். நான் இருந்த நிலையைக்
கண்ட அவர் திடுக்கிட்டுப் போனார். அவர் வந்த கோலம் ஏதோ ஒரு
விசேடத்தைக் குறிப்பித்தது. கண்ணை நன்றாகத் திறந்து பார்க்க என்னால்
முடியவில்லை. “பேசாமல் வீட்டுக்குப் போ; பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று
தந்தையார் சொல்லிச் சென்றார்.

(தொடரும்)