(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ –தொடர்ச்சி)
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4
1856-இல் தென்னிந்தியாவில் பேசப்படும் ஒன்பது மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பமாக இனங்கண்ட காலுடுவெல் தமது இரண்டாவது பதிப்பில், அஃதாவது 1875-இல், மேலும் மூன்று மொழிகளையும் இணைத்து 12 மொழிகளைத் திராவிட மொழிகளாக இனங்கண்டு காட்டினார். இன்று திராவிட மொழிகளின் எண்ணிக்கை 35-ஐத் தொட்டுள்ளது. வட இந்தியாவில் பேசப்படும் பிராகுயி போன்ற சில மொழிகள் திராவிட மொழிகளின் பட்டியலில் இணையவே தென்னிந்திய மொழிகளாகத் திராவிட மொழிகளை நோக்கிய பழைய குறுகிய பார்வை பரந்து விரிந்து இந்திய நாட்டின் இரண்டாவது மொழிக் குடும்பமாக, இந்திய நாட்டின் 30 விழுக்காட்டு மக்கள் பேசும் மொழிகளாகத் திராவிட மொழிக்குடும்பத்தின் பரப்பு மேலும் பரந்து விரிவடைந்துள்ளது. இந்திய மொழிகள் குறித்த பழைய ஆய்வுக் கண்ணோட்டத்தில் காலுடுவெல்லின் ஒப்பிலக்கண நூல் வியத்தகு திருப்பு முனைகள் பலவற்றை ஏற்படுத்தி மாபெரும் கருத்துப் புரட்சியினைத் தோற்றுவித்துள்ளது.
தமிழகம் வந்த ஏனைய அருட்தொண்டர்களுக்கு இல்லாத தனிப் பெரும் சிறப்பாகக் காலுடுவெல்லுக்கு அவரது ஆழமான மொழியியற் புலமை அமைந்தது. கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் அவர் பயின்ற மொழியியல் (philology) கல்வி காலுடுவெல்லின் இந்த உலகளாவிய இச்சாதனைக்கு அடித்தளமாக அமைந்தது.
தமிழைத் திராவிட மொழிக் குடும்பத்தின் தலைமை மொழியாகக் கொண்டு ஆய்ந்த காலுடுவெல்லின் அணுகுமுறை தமிழ் மொழியாய்வில் ஒப்பியன் அணுகுமுறையினை இணைத்து ஒரு புதிய படிநிலையைத் தோற்றுவித்தது. அடுத்த நிலையில், இந்திய நாட்டின் பிற மொழிகளோடு தமிழையும், ஏனைய திராவிட மொழிகளையும் காலுடுவெல் ஒப்புநோக்கி ஆராய்ந்துள்ளார். இது காலுடுவெல்லின் ஒப்பிலக்கண நூல் வட்டார எல்லையைத் தாண்டி தேசிய நிலையில் ஏற்படுத்திய இரண்டாவது வளர்ச்சிநிலையாகும். இவ்விரு படிநிலைகளும் தமிழ் தழுவிய ஆய்வுகள் தென்னிந்திய அளவில் வட்டார நிலையிலும், இந்திய மொழிகள் என்ற அளவில் தேசிய நிலையிலும் செழித்து வளர உதவின. இப்படிநிலைகள் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் நடந்தேறிய தமிழ்மொழி குறித்த அனைத்து ஆய்வுகளிலும் பளிச்சிட்டுத் துலங்கின.
காலுடுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் மூன்றாவது படிநிலையாக அமைவது அவரது உலகுதழுவிய ஒப்பியல் நோக்கு மலிந்த ஆய்வாகும். இங்கு பொதுவாகத் திராவிட மொழிகளுக்கும், சிறப்பாகத் தமிழுக்கும் பிற உலக மொழிகளுக்கும் இடையேயுள்ள உறவுகள் போதிய தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன. 21-ஆம் நூற்றாண்டிலும் அடுத்து வருகின்ற பல நூற்றாண்டுகளிலும் மேற்கொள்ளப்படவிருக்கின்ற உலகளாவிய தமிழாய்வுக்கு இங்கு வலுவான கால்கோள் செய்யப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.
காலுடுவெல் தோற்றுவித்த இந்த மூன்றாவது படிநிலை அவரால் ஏற்கெனவே கட்டியெழுப்பப்பட்ட ஆராய்ச்சி மாளிகையின் இருபெரும் உப்பரிகைகளை வலுவாகத் தூக்கி நிறுத்தும் அடித்தளமாக அமைந்தது. தமது ஆராய்ச்சிக் கோட்டையின் அடித்தளத்தை யாராலும் எக்காலத்திலும் தகர்க்க முடியாத வலுவினையும் உறுதியினையும் இது காலுடுவெல்லின் படைப்புக்கு நல்கியது.
காலுடுவெல் வாழ்ந்த 19-ஆம் நூற்றாண்டில் மொழியியல் சிந்தனைகள் அறிவியல் கண்ணோட்டத்தில் முழு வளர்ச்சியினைப் பெற்றுவிட்டதாகக் கூறமுடியவில்லை. ஒலியனியல், உருபனியல், தொடரியல் பற்றிய குறிப்பிடத்தகுந்த அடிப்படைப் பார்வைகளே தொடக்க நிலையில் பிறந்திருந்தன. உலக மொழிகள் பற்றிய பரந்த கண்ணோட்டமும் ஒப்பியல் நோக்கும் முழு அளவில் இக்காலக் கட்டத்தில் அரும்பவில்லை. ஒப்பியன் மொழி நூல் தொடக்க நிலையில் தளிர் நடை மட்டுமே பயிலத் தொடங்கியிருந்தது. குமுகவியல் மொழியியல் போன்றனவும், மாற்றிலக்கண நெறிமுறைகளும் அக்காலக்கட்டத்தில் பிறக்கவே இல்லை. வலுவில்லாத இத்தகைய பின்னணியில் தாம் பல்கலைக்கழகத்தில் பயின்ற அடிப்படை மொழிநூல் அறிவினையும், தமக்கிருந்த மொழிநூல் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும், தாம் தேடிக்கற்ற நூல்கள் அள்ளி வழங்கிய சிந்தனைகளையும் வழிகாட்டிகளாகக் கொண்டு ஆழ்ந்த இறை ஒப்படைப்புடன் ஒப்பியன் மொழித்துறையில் பீடுநடை பயின்றவர் காலுடுவெல் என்பது குறிப்பிடத்தக்கது.
நடு ஆசிய மொழிகள், தென்கிழக்கு ஆசிய மொழிகள், தெற்காசிய மொழிகள், கிழக்காசிய மொழிகள், ஐரோப்பிய மொழிகள், குறிப்பாகச் சித்திய மொழிக் குடும்ப மொழிகள், எபிரெயம், அரபி, அரமைக்(கு) ஆகியவற்றை உள்ளடக்கிய செமிட்டிக்(கு) மொழிகள், கிரேக்க, இலத்தீன் மொழிகள், சுமேரிய மொழிகள், எலாமைட்டு மொழி, உரல் அல்டெயிக்கு குடும்பம் சார்ந்த சப்பானிய, கொரிய, அங்கோரிய மொழிகள், மங்கோலிய இன மொழிகள் ஆகியன குறித்த செய்திகள் திராவிட மொழிகள் குறித்த தமது கோட்பாட்டினை உலகந்தழுவிய நிலையில் நிலைநிறுத்த காலுடுவெல்லுக்கு துணைபுரிந்தன. உலகமொழிகளின் பின்னணியில் தமிழ் இலக்கணக் கோட்பாடுகள் அரிய தரவுகளின் அடிப்படையில் தமிழ்மொழி வரலாற்றில் நிறுவப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பது சுட்டத்தக்கது.
ஆதியில் மக்கள் ஒரே மொழியைப் பேசினர் என்றும் அந்த ஒரே மொழி பல மொழிகளாகக் கடவுளால் சிதைக்கப்பட்டது என்றும் கிறித்தவத் திருமறை தரும் மொழிகளின் தோற்றம் குறித்த இறையியல் சிந்தனையும் காலுடுவெல்லின் அடிமனத்திலிருந்து அவரை இயக்கிக் கொண்டிருந்தது என்பதில் எந்த ஐயமுமில்லை. எனினும், கடவுள் படைத்த அந்த ஆதிமொழி தமிழ்தான் என்று காலுடுவெல் வாதிடவில்லை. கடவுள் படைத்த அந்த மொழி தமிழே என்று நெஞ்சத் துணிவோடு எடுத்துரைத்த கிறித்தவ மொழியியலாளர் பாவாணரின் கருத்தியலுக்கு காலுடுவெல் அடித்தளமிட்டவர் என்பதை மறந்துவிடக் கூடாது.
பெரிதும் ஆய்வரங்குகளுக்கு வராத ஈரானைச் சார்ந்த நடு ஆசியச் சார்புடைய சித்திய மொழிகளை காலுடுவெல் வாய்ப்புக் கிடைக்குமிடமெல்லாம் தமிழோடு ஒப்பிட்டு ஆய்வது வியப்புக்குரியது. சித்திய மொழிகள் திராவிட மொழிகளோடு இன ஒப்புமையால் பின்னிப் பிணைந்துள்ள பாங்கினை அவர் விரிவாக எழுதிச் செல்கின்றார்.
ஃபின்னிசு, தர்கி, மங்கோலியன், துங்குசியன் ஆகிய மொழிக் குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் மொழிக்குடும்பமாகச் சித்திய மொழிக்குடும்பம் சுட்டப்பட்டுள்ளது. உக்கிரைன் போன்ற மொழிகளையும் சித்திய மொழிக்குழுவில் இணைத்துப் பேசும் மரபு உள்ளது.
செமிட்டிக்கு மொழிகளைவிடவும் பழமைவாய்ந்த சித்திய மொழிகளோடு உறவு கொண்ட திராவிட மொழிகள் பலுச்சிசுதான் வழியாகச் சிந்து சமவெளிப்பகுதிக்கு வருவதற்குமுன் செமிட்டிக்கு மொழி பேசும் மக்களுடனும் உறவு கொண்டிருந்தன என்பது காலுடுவெல்லின் கருத்து. எனவே திராவிட மொழிக்குடும்பத்தில் சித்திய மொழிகளின் தாக்கமும், செமிட்டிக்கு மொழிகளின் ஆதிக்கமும், இந்தோ ஆரிய மொழிகளின் பாதிப்பும் ஒருங்கே காணக்கிடப்பதாகக் காலுடுவெல் நம்பினார். அதோடு, நடு ஆப்பிரிக்க மொழிகளோடும் திராவிட மொழிகள் உறவு கொண்டுள்ளன என்பது காலுடுவெல்லின் கருத்து. நடு ஆப்பிரிக்கப் பகுதியைச் சார்ந்த கனுரி (Kanuri) எனும் ஆப்பிரிக்க மொழி திராவிட மொழிகளைப் போன்று ஒட்டுநிலை மொழியாக அமைவதையும் காலுடுவெல் குறிப்பிட்டுச் செல்கின்றார்.
(தொடரும்)
முனைவர் சான் சாமுவேல்
நிறுவன இயக்குநர்
ஆசியவியல் நிறுவனம்
No comments:
Post a Comment