(தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு – தொடர்ச்சி
தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள்
6. இங்கிலாந்துச் சான்றோன் சார்ச்சு யுக்ளோ போப்பு (1820-1908) :
அருளாலயம் உருவாக்குதல், அறிவாலயம் எழுப்புதல், திருக்குறள் முதலான இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், அயல் நாட்டவர்க்குத் தமிழை அறிமுகப்படுத்துதல், தமிழ் உணர்வையும் பண்பாட்டையும் நிலைநாட்டுதல் ஆகிய பல்வேறு நிலைகளில் தமிழ் வளர்ச்சிக்காகத் தொண்டுள்ளத்தோடு சேவை செய்த செம்மல் போப்பு. எட்டு ஆண்டுகள் சாயர்புரத்தில் திருத்தொண்டாற்றிய போப்பையர் 1844ஆம் ஆண்டு அழகிய திருக்கோவிலை உருவாக்கினார். இராமாநுசக் கவிராயர் வாயிலகத் தமிழைப் பயின்று, மாணவர்க்குப் பயன்தரும் வகையில் வினாவிடை வடிவில் தமிழ் இலக்கண நூலும் பெரியோர் தெளிவுபெறும் வண்ணம் தமிழ் இலக்கண ஆங்கில நூலும் எழுதியுள்ளார். தமிழ்ச்செய்யுட் கலம்பகம் என்னும் பெயரால் தொகை நூல் ஒன்றும் தந்துள்ளார்.
தஞ்சாவூரில் பணியாற்றிய பிறகு உதகை சென்று, தோடர் மொழியை ஆராய்ந்து இலக்கணம் நல்கியுள்ளார். பெங்களூரில் பேராயர் காட்டன் பள்ளித் தலைவராகத் திகழ்ந்த போப்பையர், 1885 முதல் ஆக்குசுபோர்டு பல்கலைக் கழகத்தில் தமிழும் தெலுங்கும் கற்பிக்கும் பேராசிரியராக விளங்கினார். திருக்குறள் (1886), நாலடியார் (893). திருவாசகம் (1900) சிவஞானபோதம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழ்ீபெயர்த்து வழங்கியுள்ளார். இருபத்து மூன்று ஆண்டுகள் ஆக்குசுபோர்டு பல்கலைக் கழகப் பேராசிரியராகத் திகழ்ந்த போப்பு, பழங்காலத்துத் தூய தமிழுக்குத் திருக்குறள் சிறந்த எடுத்துக் காட்டாகும்
. அழுக்கில்லாத தூய நீருற்றாகத் திருக்குறள் ஒளியுடன் மிளிர்கிறது என்று தெளிவுறுத்தியுள்ளார். திருவஈசகம் எலும்பையும் உருக்கும் அருட்பா என்று பாராட்டியுள்ளார்; தம் கல்லறையில் ஒரு தமிழ் மாணவர் என்று பொறித்திடச் செய்தார்.
7. நல்லாண்மை மிக்க எல்லீசர் (1226-1819) :
இங்கிலாந்து நாட்டில் தோன்றிய பிரான்சிசு ஒயிற்று எல்லீசு சென்னை மாவட்ட ஆட்சியாளராகத் திகழ்ந்தார். திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் விளக்கவுரை எழுதியுள்ளார். திருவள்ளுவருக்குத் தங்கக் காசுகள் வெளியிட்டுப் பெருமிதம் பெற்றார். சென்னைக் கல்விச் சங்கத்தை நிறுவியவரும் இவரே. திராவிட மொழிக் குடும்பம் பற்றித் தெலுங்கு இலக்கண நூலின் முன்னுரையில் மொழிந்துள்ளார். இராமச் சந்திரக் கவிராயர் வாயிலாகத் தமிழ் கற்ற எல்லீசர், தமிழில் பாட்டியற்றும் வல்லமையும் பெற்றிருந்தார். சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் கிணறுகள் வெடடுவித்துக் கல்வெட்டுகளையும் பதிப்பித்துள்ளார். திருக்குறள், தேம்பாவணி ஆகியவற்றை அச்சிட வழிவகுத்தவர் எல்லீசர். தமிழே திராவிட மொழிகளின் பெற்றோர் என்று புலப்படுத்தியுள்ளார். இவர் பெயரால் மதுரையிலும் சென்னையிலும் சாலைகள் அமைந்துள்ளன.
8. யாழ்ப்பாணத்து வமாழிநூல் வல்லுநர் ஞானப்பிரகாசர் (1575-1945) :
உலகமொழிகள் எழுபது கற்று, செந்தமிழ்ச் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி தந்து. உலகின் உயர்தனிச் செம்மொழி தமிழ் என்று பதினட்டுச் சான்றுகளுடன் நிறுவியவர் நல்லூர் ஞானப்பிரகாசர். சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று ஈராசு அடிகளாருடன் இணைந்து எடுத்தோதியவர் இவரே.
தமிழரின் தொன்மை வரலாறு, யாழ்ப்பாண வரலாற்று ஆய்வு ஆகியவற்றை அருளியுள்ளார். சுப்பிரமணியர் ஆராய்ச்சி (1916), பிள்ளையார் ஆராய்ச்சி (1921) ஆகியவற்றுடன் செகராசசேகரன் புதினம் என்னும் நூலையும் நல்கிய பெருமைக்கு உரியவர் ஞானப்பிரகாசர்.
9, உலகத் தமிழ்க் தூதர் சேவியர் தனிநாயகம் (1918-1980) :
உலகநாடுகள் பலவற்றுக்குத் தமிழ்த் தூதராகச் சென்று தமிழ்ப் பண்பாட்டைப் புலப்படுத்தியும் வளப்படுத்தியும் அரும்பெரும் தொண்டாற்றியவர் தனிநாயகம் அடிகளார். இலங்கையில் பிறந்து, உரோமாபுரியில் இறையியல் அறிஞராகி, வடக்கன்குளம் தெரசாள் பள்ளியில் மூன்றாண்டுகள் ஆசிரியப்பணி புரிந்துள்ளார்; கோலாலம்பூர், சென்னை, பாரீசு, யாழ்ப்பாணம் ஆகிய நான்கு இடங்களில் உலகத்தமிழ் மாநாடு நடத்திய பெருமை பொருந்தியவர்; மலேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றவர். ஐம்பது நாடுகளுக்குச் சென்று தமிழின் புகழைப் பறைசாற்றியுள்ளார். “என்னை நன்றாய் இறைவன் படைத்தான், தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே” என்னும் திருமூலரின் அருள் வாக்கைக் குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றினார். சங்க இலக்கியத்தில் இயற்கை, ஒன்றே உலகம், தமிழ்த்தூது ஆகிய ஏடுகளை எழுதிய ஏந்தல் தனிநாயகம், தமிழ்ப் பண்பாடு என்னும் ஆங்கில முத்திங்கள் ஏட்டின் வாயிலாகப் பழந்தமிழர் பெருமையினைப் பறைசாற்றியுள்ளார்.
நிறைவுரை :
அழகு மிகுந்தது, வளமை வாய்ந்தது, மிகவும் பண்பட்டு விளங்குவது தமிழ் என்று தம் நண்பர் பல்லார்மினுக்கு மடல் எழுதி, நானூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழை அறிமுகம் செய்தவர் இத்தாலிய நாட்டுத் துறவி இராபர்ட்டு நொபிலி. தத்துவ போதகர் என்னும் பெயருடன் (5727-1656) ஐம்பத்திரண்டு நூல்கள் நல்கியவர்: தமிழ் உரைநடைத் தந்தையாகப் போற்றப்படுகிறார். இங்கிலாந்து நாட்டு ஆசர், செக்கோசுலோ நாட்டைச் சார்ந்த கமில் சுவலபில், சோவியத்து நாட்டு அலெக்குசாண்டர் தூபியான்சுசி போன்ற சான்றோர் பலர் தமிழின் பெருமையினையும் இலக்கியச் சிறப்பினையும் உலகுக்கு ௮றிமுகம் செய்த பெரியோர் ஆவர்.
பேராசிரியர் முதுமுனைவர் பால் வளன் அரசு,
தலைவர், உலகத் திருக்குறள் தகவல் மையம்
3, நெல்லை நயினார் தெரு,
பாளையங்கோட்டை.- 627002.
கைப்பேசி : 7598399967
No comments:
Post a Comment