(உ.வே.சா.வின் என் சரித்திரம் 106 – திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை-தொடர்ச்சி)
என் சரித்திரம்
அத்தியாயம் – 69
இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை
திருச்சிராப்பள்ளியில் என் ஆசிரியருக்கு மிகவும் பழக்கமான இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளையென்னும் கனவான் ஒருவர் இருந்தார். அவருடைய சொந்த ஊர் திருவேட்டீசுவரன் பேட்டை. அவர் தமது கல்வித் திறமையாலும் இடைவிடா முயற்சியாலும் நல்ல ஒழுக்கத்தாலும் சிறிய உத்தியோகத்திலிருந்து படிப் படியாக அக்காலத்தில் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பெற்ற டிப்டி கலெக்டர் என்னும் பெரிய உத்தியோகத்தை அடைந்து புகழ் பெற்றார். அவருடைய மேலதிகாரிகளுக்கு அவரிடத்தில் விசேடமான மதிப்பும், கீழ் உத்தியோகத்தர்களுக்குப் பயமும் இருந்தன. தமிழில் நல்ல பயிற்சியும் தமிழ் வித்துவான்களிடத்தில் உண்மையான அபிமானமும் உடையவர். எந்த இடத்திற்குப் போனாலும் ஆங்காங்குள்ள வித்துவான்களை விசாரித்து அறிந்து அவர்களைப் பார்த்துச் சல்லாபம் செய்து இன்புறுவார். உத்தியோக முறையில் மிகவும் கண்டிப்பாக இருப்பார். ஆனால் உண்மையான உழைப்பாளிகளை முன்னுக்குக் கொண்டு வருவதில் சிறிதும் பின் வாங்கமாட்டார். வைணவ மதத்தர்; சிறந்த தெய்வ பக்தியுள்ளவர். ஏழைகள் பால் இரக்கமும் உபகாரச் சிந்தையும் கொண்டவர். அவர் மகா வித்துவான் பிள்ளையவர்களிடத்தில் மிகவும் ஈடுபட்டவர். அவர்கள் மூலம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையைப் பற்றியும், சுப்பிரமணிய தேசிகருடைய குண விசேடங்களைப்பற்றியும் அறிந்து கொண்டவர். நாங்கள் திருவாவடுதுறையிலிருந்தபோது அவர் திரிசிரபுரத்தில் உசூர் சிரேத்தராக இருந்தார். அவர் ஒரு நாள் சில அன்பர்களோடு திருவாவடுதுறைக்கு வந்தார்.
அவர் அடைந்த வியப்பு
அரசாங்க உத்தியோகத்தர்கள் பலருடன் பழகிப் பெரிய காரியங்களையெல்லாம் நிருவாகம் செய்யும் ஆற்றல் படைத்திருந்த பட்டாபிராமபிள்ளை அவ்வாதீனத்தின் அமைப்பையும் நாள்தோறும் ஒழுங்காகப் பூசை, தருமம், வித்தியாதானம் முதலியன நடைபெற்று வருவதையும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார். “இங்கே போலீசு இல்லை; படாடோபம் இல்லை; ஆனாலும் காரியங்களெல்லாம் எவ்வளவு ஒழுங்காக நடக்கின்றன! வித்தியா விசயத்தில் இங்குள்ளவர்களுக்கு எவ்வளவு சிரத்தையும் அன்பும் இருக்கின்றன! தலைவரிடத்தில் எல்லாரும் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள்!” என்று விம்மிதமடைந்து பாராட்டினார். சுப்பிரமணிய தேசிகருடைய அறிவுத் திறமையையும் தூய ஒழுக்கத்தையும் அன்பையும் அறிந்து, “இவர்கள் இருக்கும் இடம் இந்த மாதிரி தான் விளங்கும். இவர்களைப் போல் தமிழ் நாட்டில் சிலர் இருந்தால் போதும்; நம்முடைய பாசை முதலியன பழைய காலம் போல் சிறப்பை அடையும்” என்று புகழ்ந்தார்.
அகராதி முயற்சி
தேசிகரிடம் அவர் ஒரு முறை பேசுகையில் தமிழ்ப் பாசைக்கு நல்ல அகராதி ஒன்று வேண்டுமென்றும் பிள்ளையவர்களைக் கொண்டு அதனைச் சித்தம் செய்யச் சொல்லலாமென்றும் சொன்னார். தேசிகர் அப்படியே செய்யச் சொல்வதாகக் கூறியிருந்தார். ஆயினும் அது நிறைவேறவில்லை.
அது முதல் பட்டாபிராம பிள்ளை அப்பக்கம் வரும்போதெல்லாம் திருவாவடுதுறைக்கு வந்து சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து அன்புடன் சல்லாபம் செய்து செல்வார்.
வரவேற்புப் பாடல்
தாது வருடம் புரட்டாசி மாத ஆரம்பத்தில் (செட்டம்பர் 1877) ஒரு முறை அவர் திருவாவடுதுறைக்கு வந்தார். மாணாக்கர் கூட்டம் அதிகமாக இருந்ததைக் கண்டு சந்தோசமடைந்தார். அவர்களுடைய கல்வித் திறமையைப் பரீட்சித்துத் திருப்தி அடைந்தார். தேசிகருடைய விருப்பத்தின்படி மாணாக்கர்களில் ஒவ்வொருவரும் அவர் விசயமாக ஒவ்வொரு செய்யுள் இயற்றிச் சொன்னோம். நான் இயற்றிக் கூறிய செய்யுள் வருமாறு:-
“கார்நோக்கி நிற்கு மயில்போல நீங்கிய காதலன்றன்
தேர்நோக்கி நிற்கு மடந்தையர் போலத் திகைப்பறவிப்
பார்நோக்கி நிற்குநற் பட்டாபி ராம பராக்கிரம
நேர்நோக்கி நின்றனம் யாங்களெல் லாநின் னிகழ்வரவே.”
எல்லாவற்றையும் கேட்டு மகிழ்ந்த பட்டாபிராம பிள்ளை சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்துத் தம்முடைய பழைய வேண்டுகோளை ஞாபகப்படுத்தினார். “இவ்வளவு மாணாக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். சந்நிதானம் மனம் வைத்தால் அகராதியை விரைவில் நிறைவேற்றலாம்” என்று விண்ணப்பம் செய்தார். “பிள்ளையவர்கள் இந்த உபயோகமான காரியத்தைச் செய்திருக்கலாம். அவர் எப்போதும் புராணங்களும். பிரபந்தங்களும் பாடியே தமது வாழ்க்கையைக் கழித்து விட்டார். பெரிய வித்துவான்கள் உலகத்திற்கு உபகாரமான காரியங்களைச் செய்ய முன் வந்தால் தமிழ் எவ்வளவோ விருத்தியடையும்” என்றார். தேசிகர் “பார்ப்போம்” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார்.
பாடற் கடிதம்
பாட்டாபிராம பிள்ளை திரிசிரபுரம் சென்று தாம் திருவாவடுதுறைக்கு வந்திருந்த காலத்தில் தமக்கு உண்டான மகிழ்ச்சியைப் புலப்படுத்தியும் தம் வேண்டுகோளை நினைவுறுத்தியும் நான்கு பாடல்கள் எழுதி அச்சிட்டுச் சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பினார். அவை வருமாறு:-
- இனியதமிழ் நாடெங்கு மிங்கிலீசு பரவிதமிழ்க்
கேற்ற மின்றிக்
கனியகன்ற மாபோலக் கைவிடப்பெற் றிருப்பதையான்
கண்டாற் றாது
முனியினுருக் கொண்டவுன்றன் முன்றிலிடை முத்தமிழும்
முழங்கு மென்றே
தனியுறுசுப் பிரமணியத் தேசிகா நினையன்று
தரிசித் தேனே.
[மா – மாமரம். தனி – ஒப்பற்ற பெருமை] - தரிசித்த வன்றுகண்டேன் றமிழ்மடந்தை தளிர்த்துலகில்
தன்பேர் நாட்டிப்
பரிசுபெற நினையடைந்து பலவாறாய் முயல்வதுவும்
பாரின் மன்னர்
தரிசிகா மணியேநீ தமிழ்மயிலைக் காப்பதுவும்
தமிழர் யார்க்கும்
பொருவில்பாண் டியன்சோழன் சேரனென வயங்குமுனைப்
புனித னென்றும்.
[‘பரிசு – உலகத்தில் சிறந்த பாசையென்று மெச்சப்படுவதாகிய பரிசு’ (பட்டாபிராம பிள்ளையின் குறிப்பு.) பொரு – ஒப்பு.]
- அகராதி தமிழிலிணை யற்றதென் வியப்புறவொன்
றான்றோர் யாரும்
பகராதி ருத்தலினிப் பாரிலுள தமிழ்மடப்பண்
ணவர்கட் கெல்லாம்
நிகராதி ருக்குநெடும் பழியென்று முன்புகன்று
நெடிய சீட்டுத்
தகராதி ருக்குமொரு சிறுகுழையி லிட்டனுப்பித்
தளர்வாய் நின்றேன்.
[மடப்பண்ணவர் – மடாதிபதிகள். பட்டாபிராம பிள்ளை அகராதி எழுத வேண்டுமென்ற வேண்டுகோளை எல்லா மடாதிபதிகளுக்கும் அனுப்பினாரென்று தெரிகின்றது. சீட்டு – கடிதம்.]
- தளர்ந்துருகிச் சமுசயத்தா லாற்றேனாய்த் திருமுகத்தைத்
தரிசித் தேன்காண்
வளர்ந்தோங்கு மதியுடையாய் ஞானிகட்கோர் தாயகமே
வள்ள லேயுன்
கிளர்வசனத் தாற்றளர்ந்தேன் கெட்டியென நிச்சயித்தேன்
கேட்டுக் கொண்ட
வளம்வாய்ந்த வகராதி வருமென்றே திரும்பினன்காண்
வனப்பின் மிக்கோய்.
திரிசிரபுரம், கலி, 4978-தாது ௵ புரட்டாசி ௴ 13௳ ந (27-9-1877) [சமுசயம் – சந்தேகம். கெட்டி – திறமையையுடையோய்]
இந்தக் கடிதத்தைக் கண்டு நாங்களெல்லாம் வியப்புற்றோம். இப்பாட்டுகள் புலவர் பாடல்களைப் போன்றனவாக இராவிட்டாலும் பட்டாபிராம பிள்ளைக்கு எவ்வளவு தமிழன்பு இருந்ததென்பதை வெளிப்படுத்துகின்றன. ஓர் அரசாங்க உத்தியோகத்தர் அவ்வளவு அன்புடன் செய்யுள் இயற்றி விண்ணப்பம் செய்யும் திறமை படைத்திருப்பதே பெரிய ஆச்சரியமன்றோ?
அவர் கடிதம் வந்த சில நாட்கள் வரையில் சுப்பிரமணிய தேசிகரும் நாங்களும் அகராதியைப் பற்றிப் பேசினோம், வீரமா முனிவரென்னும் பெசுகி பாதிரியார் இயற்றிய சதுரகராதியின் அச்சுப் பிரதியும் ஏட்டுப் பிரதியும் வருவிக்கப்பட்டன. நிகண்டுகளை எடுத்துத் தட்டிக் கொட்டி வைத்தோம். இந்த உறசாகம் சில நாட்கள் வரையில் இருந்தது. பிறகு அகராதியைப் பற்றிய பேச்சே நின்று போயிற்று. பட்டாபிராம பிள்ளையைப் பற்றிய பேச்சு வந்தால் மட்டும், “திடீரென்று வந்து அகராதி எந்த மட்டில் இருக்கிறது?” என்று அவர் கேட்டால் என்ன செய்வது? என்ற யோசனை உண்டாகும்.
தம்பிரான்களின் சிபாரிசு
அக்காலத்தில் என்னிடம் படித்து வந்தவர்களுள் விசுவலிங்கத் தம்பிரான் முதலிய சிலர், சுப்பிரமணிய தேசிகர் பகற் போசனத்தின் பின் சிரமபரிகாரம் செய்து கொள்ளும்போது அவர் பாதங்களை வருடிப் பணிவிடை புரிவது வழக்கம். அவ்வாறு அவர்கள் செய்யும் பொழுது தேசிகர் நடைபெறும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார்; பாடங்களுக்குப் பொருளும் அவற்றிற் கண்ட விசயங்களிற் சில கேள்விகளையும் கேட்பார். அவற்றிற்கு விடை கூறிய பின் தேசிகர் சந்தோசமாக இருக்கும் சமயம் பார்த்துத் தம்பிரான்கள் என்னைத் திருவாவடுதுறையிலேயே வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் இருப்பதற்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென்றும் மாதச் சம்பளம் ஏற்படுத்த வேண்டுமென்றும் சொல்லிக் கொள்வார்களாம். தேசிகர் என்னைக் காணும்பொழுது, “என்ன ஐயா! உம்மைப் பற்றி உம்முடைய மாணாக்கர்களாகிய தம்பிரான்கள் சிபாரிசு செய்கிறார்கள். உமக்குச் சௌகரியம் பண்ணிவைக்க வேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்” என்று சந்தோசத்துடன் சொல்லி, “நன்றாய்ப் பாடம் சொல்லவேண்டும்” என்று கட்டளையிடுவார்.
அவ்வார்த்தைகள் என் உள்ளத்தைக் குளிர்விக்கும். அவர்கள் வேண்டுகோள் பலிப்பதைப் பற்றி நான் அதிகக் கவலை கொள்ளவில்லை. அவர்கள் என்பால் கொண்டிருந்த அன்பையும் என் உழைப்பு வீணாகவில்லை
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
No comments:
Post a Comment