Saturday, October 26, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 110: அத்தியாயம் – 72: நான் பெற்ற சன்மானங்கள்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 109 – அத்தியாயம்-71, சிறப்புப் பாடல்கள்-தொடர்ச்சி)

முன் குறிப்பிட்ட தட்சிணம் பெரிய காறுபாறு வேணுவன லிங்கத் தம்பிரான் அம்பா சமுத்திரத்துக்கு அருகில் உள்ள செவந்திபுரத்தில் அழகான பெரிய மடம் ஒன்றைக் கட்டுவித்து, அதற்கு, “சுப்பிரமணிய தேசிக விலாசம்” என்று பெயரிட்டார். அப்பால் அவர் ஒரு முறை திருவாவடுதுறைக்கு வந்து சுப்பிரமணிய தேசிகரிடம், “சந்நிதானம் திருக்கூட்டத்துடன் செவந்திபுரத்துக்கு எழுந்தருளிச் சில தினங்கள் இருந்து கிராமங்களையும் பார்வையிட்டு வரவேண்டும்” என்று விண்ணப்பம் செய்து கொண்டார். அதே சமயமாகிய ஈசுவர வருடம் தை மாதத்தில் மதுரை சிரீ மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்துக்கு அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தினர் மகா கும்பாபிசேகம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அக்கும்பாபிசேகத்துக்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று அவர்களும் சுப்பிரமணிய தேசிகரைக் கேட்டுக் கொண்டனர்.

தம்பிரானும், தன வைசியர்களும் செய்துகொண்ட வேண்டுகோளை ஏற்றுத் தேசிகர் மதுரைக் கும்பாபிசேகத்துக்குப் போய் அங்கிருந்து தட்சிணத்தில் யாத்திரை செய்து செவந்திபுரத்திற்கும் போகலாமென்று நிச்சயித்தனர். அதற்குத் தக்கபடி ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பெற்றன.

போகும் வழியில் ஆங்காங்குள்ள கனவான்களுக்குத் திருமுகங்கள் அனுப்பப்பட்டன. சிலர் திருவாவடுதுறைக்கே வந்து சுப்பிரமணிய தேசிகரது தட்சிண யாத்திரையில் கலந்து கொள்ள எண்ணினர். கல்லிடைக் குறிச்சியிலிருந்த சின்னப்பட்டம் சிரீ நமசிவாய தேசிகருக்கு, மதுரையில் வந்து சேர்ந்து கொள்ளும்படி சுப்பிரமணிய தேசிகர் திருமுகம் அனுப்பினார். யாத்திரைக் காலத்தில் வழியில் வேண்டிய சௌகரியங்களுக்குரிய பொருள்களும் உடன் வருவதற்குரிய பரிவாரங்களுக்கு வேண்டிய வசதிகளும் அமைக்கப்பெற்றன.

“நாம் தடசிண யாத்திரை செய்யப் போகிறோம். அங்கங்கே பல பிரபுக்களும் வித்துவான்களும் வந்து வந்து சல்லாபம் செய்வார்கள். நீரும் உடன் வரவேண்டும். மகா வைத்தியநாதையரும் அவர் சகோதரரும் மதுரைக்கு வந்து சேர்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். நீர் நம்முடன் வருவதில் உம்முடன் தாயார் தகப்பனாருக்கு வருத்தம் இராதே? அவர்களை மிகவும் சாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளும்படி இங்கே உள்ளவர்களிடம் சொல்லிப் போவோம்” என்று தேசிகர் என்னை நோக்கிக் கூறினார். எனக்குப் புதிய ஊர்களையும் புதிய மனிதர்களையும் பார்ப்பதற்கு அளவற்ற ஆவல் இருந்தது. யாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடைபெறும் போது, “நம்மையும் உடனழைத்துச் செல்வார்களோ, மாட்டார்களோ” என்ற சந்தேகம் எனக்கு உண்டு. தேசிகர் சொன்ன வார்த்தைகளால் அந்தச் சந்தேகம் நீங்கியதுடன் சந்தோசமும் உண்டாயிற்று. “என் தந்தையாருக்கு யாதோர் ஆட்சேபமும் இராது” என்று நான் தேசிகரிடம் தெரிவித்தேன்.

ஆனால், இவ்விசயத்தை என் பிதாவிடம் சொன்னபோது அவர் சிறிது கலங்கினார். அப்போதுதான் புதியதாக மதுரைக்குப் புகை வண்டி செல்லத் தொடங்கியது. பிரயாணத்தின் போது நானும் என்னைப் போன்றவர்களும் புகை வண்டியில் பிரயாணம் செய்ய நேரும். என் தந்தையார் அதில் ஏறமாட்டார். அதனால் அவரையும் உடனழைத்துச் செல்வதென்பது இயலாத காரியம். இந்நிலையில் அவரைத் திருவாவடுதுறையிலே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியது அவசியமாயிற்று.

என்னைப் பிரிந்து இருப்பதற்கு அவருக்கு மனம் வரவில்லை. “உன்னிடம் உள்ள மரியாதை காரணமாகவே இங்குள்ளவர்கள் என்னிடமும் பிரியமாக இருக்கிறார்கள். நீ இங்கே இல்லாதபோது எனக்குத் தனி மதிப்பு என்ன இருக்கிறது?” என்று அவர் கூறினார். “அப்படியன்று. இங்கே மடத்தில் பூசை முதலியவற்றைக் கவனிப்பதற்காகத் தக்கவர்கள் இருப்பார்கள். அவர்கள் மனிதர்களுடைய தராதரம் தெரிந்தவர்கள். நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். காறுபாறு தம்பிரான் ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்” என்று சமாதானம் சொன்னேன். தேசிகரும் என் தந்தையாரை வருவித்துத் தைரிய வார்த்தைகளைக் கூறினார்.

தைப்பூசத்திற்கு முதல் நாள் தேசிகர் பரிவாரங்களுடன் யாத்திரையைத் தொடங்கினார். திருவிடைமருதூரில் அப்பொழுது பிரம்மோத்சவம் நடந்தது. அங்கே போய்த் தைப்பூசத்தன்று திருத்தேரை நிலைக்குக்கொண்டு வரச்செய்தார். என் பிராயணத்திற்கு வேண்டிய கித்தான்பை ஒன்றையும் பட்டுத் தலையணையோடு கூடிய சமக்காளம் ஒன்றையும் அவர் எனக்கு அங்கே உதவினார்.

பிறகு என்னைச் சமீபத்தில் வந்து உட்காரச் செய்து, “நாம் யாத்திரை செய்யும் இடங்களிலெல்லாம் உமக்குத் தொந்தரவு கொடுக்க நேரும். தமிழபிமானிகளாகிய கனவான்கள் பலர் வருவார்கள். அவர்களுக்குத் திருப்தி உண்டாகும்படி தமிழ்ப் பாடல்களைச் சொல்ல வேண்டியது உமது கடமை” என்று கூறினார். “அப்படிச் செய்வது என் பாக்கியம்” என்றேன் நான்.

அவர் கட்டளையின்படி உடனே ஒரு தம்பிரான் கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றைக் கொணர்ந்து என் கழுத்திலே போட்டு ஒரு சால்வையை என் மேல் போர்த்தினார். நான் அச்சமயத்தில் ஆனந்த மிகுதியால் தம்பித்துப் போனேன்; மயிர்க் கூச்செறிந்தது “இப்படியே திருவாவடுதுறைக்குப் போய்த் தந்தையாரிடம் விடை பெற்றுக் கொண்டு இங்கு வந்து விடும். நம்மோடு புறப்படலாம்” என்று தேசிகர் சொல்லி என்னைத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார்.

யாத்திரையில் எனக்குப் பலவகை நன்மைகள் உண்டாகுமென்பதற்கு அந்த சம்மானங்கள் அறிகுறியாக இருந்தன. என் தந்தையாரிடம் முன்பே பிரயாண விசயத்தைத் தெரிவித்திருந்தாலும் நான் பெற்ற சிறப்புகளை அவர் பார்த்து இன்புற வேண்டுமென்ற நினைவோடுதான் திருவாவடுதுறைக்குப் போய் வரும்படி தேசிகர் கூறினாரென்பதை நான் உணர்ந்தேன். திருவாவடுதுறை சென்று கண்டியையும் சால்வையையும் என்தாய் தந்தையருக்கு காட்டியபோது அவர்கள் அடைந்த சந்தோஷம் சாமான்யமானதன்று.

பிறகு விடை பெற்றுத் திருவிடைமருதூர் வந்து சேர்ந்தேன். தேசிகர் பரிவாரங்களுடன் புறப்பட்டார். எனக்கும் உடன் வந்த வேறு பிராமணர்களுக்கும் இரண்டு வண்டிகள் ஏற்படுத்திச் சமையலுக்கு இரண்டு பிராமணப் பிள்ளைகளைத் திட்டம் செய்து எங்களிடம் ஒப்பித்தனர். தேசிகருடைய பரிவாரங்களுடன் சேர்ந்து நாங்களும் பிரயாணமானோம்.

இடையில் ஆலங்குடியில் தங்கி அப்படியே முல்லைவாயில் என்னும் ஊருக்குச் சென்று இரவு அங்கே இருந்து மறுநாட் காலையில் மன்னார்குடியை அடைந்தோம். சுப்பிரமணிய தேசிகருடைய வரவை அறிந்து அங்கங்கே இருந்த செல்வர்கள் தக்கபடி உபசாரம் செய்து பாராட்டினார்கள். மன்னார்குடியில் தேசிகருக்காகவே நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த சத்திர மொன்றில் அவர் தங்கினார். துணை ஆட்சியராக(டிப்டி கலெக்டரா)யிருந்த இராயர் ஒருவர் அங்கே வந்து, “பிட்சை முதலியன சரியாக நடக்கின்றனவா?” என்று விசாரித்து விட்டுச் சென்றார். சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி, மற்ற மதத்தினரும் அரசாங்க உத்தியோகத்தர்களும் தேசிகருடைய பெருமையை உணர்ந்து வந்து வந்து பார்த்துப் பேசி இன்புற்றார்கள்.

மன்னார்குடியில் முன்சீபாக இருந்தவரும் என் தந்தையாருடைய நண்பருமாகிய வேங்கடராவு என்பவர் தேசிகரைப் பார்க்க வந்தார். அவர் கும்பகோணத்திலிருந்த காலத்தில், தமிழ் படிப்பதனால் பிரயோசனம் ஒன்றும் இல்லையென்றும், இங்கிலீசு படித்தால்தான் நன்மை உண்டென்றும் என் தந்தையாரிடம் வற்புறுத்திக் கூறினவர். அவர் தேசிகருடனிருந்த என்னைக்கண்டு மிக்க மகிழ்ச்சியை அடைந்ததோடு, “இவரை எனக்கு நன்றாகத் தெரியும். இளமை தொடங்கியே தமிழ் படிக்க வேண்டுமென்ற ஆவல் பலமாக இவருக்கு உண்டு. இவரைப் பாதுகாக்க வேண்டும்” என்று தேசிகரிடமும் சொன்னார்.

தேசிகரை யாரேனும் கனவான்கள் பார்க்க வந்தால் பல விதமான விசயங்களைப் பற்றிப் பேசுவார்கள். இடையிடையே நான் தமிழ்ப் பாடல்களைச் சொல்லிப் பிரசங்கம் செய்வேன். சுப்பிரமணிய தேசிகர் விசயமாகப் பிள்ளையவர்களும் வேதநாயகம் பிள்ளையும் இயற்றிய செய்யுட்களைச் சொல்லாமல் இரேன்.

மன்னார்குடியில் தங்கிய போது தேசிகர் என் காதில் இருந்த பழைய கடுக்கனைக் கழற்றச் செய்து ஐம்பது உரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள அரும்பு கட்டிய புதிய சிவப்புக்கல் (கெம்பு) கடுக்கனை அணிவிக்கும்படி கத்தூரி ஐயங்காரென்ற ஒருவரிடம் உத்தரவு செய்தார். பழைய கடுக்கனுக்கு ஏற்றபடி என் காதுகளில் சிறிய துவாரங்களே இருந்தன. அவற்றிற் பெரிய கடுக்கனைப் போட்டபோது எனக்கு மிகவும் நோவு உண்டாயிற்று. “பெண்கள் கைவளை, நகைகள் முதலியவற்றைச் சந்தோசத்தோடு போட்டுக் கொள்கிறார்களே; அவர்களுடைய பொறுமையைக் கண்டு ஆச்சரியப் படவேண்டும்!” என்று எண்ணினே். காதில் இரத்தம் வர வர அக்கடுக்கன்களை ஐயங்கார் போட்டு விட்டார். “பிறகு போட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லியும் அவர் விடவில்லை.

மன்னார்குடியிலிருந்து புறப்பட்டுச் செல்லுகையில் பட்டுக் கோட்டையில் தேசிகர் எனக்கு ஒரு மோதிரம் வழங்கிக் கையில் அணிந்து கொள்ளச் செய்தனர். அப்படியே திருப்பெருந்துறைக்குச் சென்று சில தினங்கள் தங்கினோம். திருப்பெருந்துறையில் அப்போது ஆலய விசாரணை செய்து வந்த சுப்பிரமணியத் தம்பிரான் தேசிகருடைய விசயத்துக்காக விசேடமான ஏற்பாடுகள் செய்து மிகவும் கவனித்துக் கொண்டார்.

அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுகையில் இடையே ஓரிடத்தில் சுப்பிரமணிய தேசிகரது பல்லக்குச் சற்று விரைந்து சென்றது. நாங்கள் பின்தங்கிச் செல்லலானோம். சிறிது தூரம் போனபோது தேசிகர் ஓர் ஓடையின் மணலில் பல மரங்கள் செறிந்த நிழற்பரப்பில் தங்கியிருப்பதைக் கண்டோம். அவரைச் சுற்றிலும் பல புதிய கனவான்கள் இருந்தார்கள். தாம்பாளங்களில் பல வகையான பழங்களும், வெற்றிலை, பாக்கு, கற்கண்டு முதலியனவும் அவரருகில் வைக்கப் பெற்றிருந்தன. ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் பணம் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

நாங்கள் அங்கே இறங்கித் தேசிகரை அடைந்தபோது அவர் அங்குள்ள சில கனவான்களைச் சுட்டிக் காட்டி, “இவர்கள், இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் மீது ஒரு துறைக்கோவை பாடி ஒவ்வொரு கவிக்கும் ஒவ்வொன்றாக நானூறு பொன் எலுமிச்சம்பழம் பரிசு பெற்ற அமுத கவிராயருடைய பரம்பரையினர். இந்த இடம் அந்தக் கோவைக்காக அமுத கவிராயருக்குச் சேதுபதி அரசரால் விடப்பட்ட ‘பொன்னங்கால்’ என்னும் கிராமம். இவர்கள் இப்போது திருமகள் விலாசம் பெற்றுச் சௌக்கியமாக இருக்கிறார்கள்” என்று கூறிப் பழக்கம் செய்வித்தனர்.

பிரயாண காலத்தில் எப்பொழுதும் சுப்பிரமணிய தேசிகரோடே இருந்தமையால் அவருடைய அருங்குணங்களை நன்றாக அறியும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அப்பொழுதப்பொழுது வேடிக்கையாகப் பேசி உத்சாக மூட்டுவார். அங்கங்கேயுள்ள தலங்களைப் பற்றிய வரலாறுகளையும், வேறு சரித்திர விசயங்களையும் எடுத்துச் சொல்லுவார். ஆகாரம் முதலிய சௌகரியங்களில் சிறிதும் குறைவு நேராத வண்ணம் அடிக்கடி விசாரித்து வருவார்.

இதனால் ஒவ்வொரு நாளும் ஆனந்தமாகப் பொழுது போயிற்று. புதிய புதிய இடங்களையும் புதிய புதிய மனிதர்களையும் பார்க்கும் போது மனம் குதூகலமடைந்தது. கண்டியும், சால்வையும், கடுக்கனும், மோதிரமுமாகிய சம்மானங்களும், தேசிகருடைய அன்பு கனிந்த வார்த்தைகளும், அங்கங்கே கண்ட இனிய காட்சிகளும் என்னை ஒரு புதிய மனிதனாகச் செய்தன. நான் சந்தோசத்தால் பூரித்தேன்.

(தொடரும்)

Wednesday, October 23, 2024

காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும்4/4 – முனைவர் சான் சாமுவேல்

 

காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும்4/4 – முனைவர் சான் சாமுவேல்

(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ – முனைவர் சான் சாமுவேல் – தொடர்ச்சி)

உரல்அல்டாயிக்குஎனும் இரு மொழிக்குடும்பக் கூட்டுக் குடும்பத்தின் மொழிகளுள் அங்கேரிய மொழி மிகவும் குறிப்பிடத் தக்கதுஅங்கேரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கு மிடையேயுள்ள உறவை முதலில் சுட்டிய பெருமை கால்டுவெல்லைச் சாரும்அங்கேரிய மொழியின் இலக்கணக் கட்டமைப்பு தமிழ் மொழியின் இலக்கண அமைப்போடு இணைந்து செல்வது குறித்து காலப்போக்கில் பல கட்டுரைகளும் நூல்களும் தோன்றின. அங்கேரியதிராவிட உறவு பேராசிரியர் தாமசுபரோ அவர்களாலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதுசி.எசு பாலிண்ட்டு என்னும் அறிஞர் திராவிட அங்கேரிய உறவு குறித்த நீண்ட நூலினைப் பல காலங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார்தற்போது ஆசியவியல் நிறுவனத்தில் பல அங்கேரிய மாணவர்கள் இந்த நோக்கத்துடன் தமிழ்க்கல்வி பெறுவது சுட்டத்தக்கது.

சித்திய மொழியினக் குடும்பங்களுள் ஒன்றாகக் கருதப்பட்ட மங்கோலிய மொழி தமிழ்மொழியோடு கொண்டுள்ள உறவு பற்றிய காலுடுவெல்லின் கருத்துகள் காலப்போக்கில் மங்கோலிய – தமிழ் ஒப்பியல் ஆய்வுக்கு வழியமைத்துக் கொடுத்தனஇத்துறையில் பல ஆய்வுகள் தற்போது மலர்ந்துள்ளனசெக்குநாட்டுத் தமிழறிஞரான கமில் சுவலபிலின் மாணவர்களுள் ஒருவரான பேராசிரியர் வாசெக்கு அவர்கள் மங்கோலியதமிழ் உறவு தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகள் மிகவும் குறிப்பிடத்தக்கன.

இலத்தீன்கிரேக்கம் ஆகிய உலகச் செம்மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையேயுள்ள ஒப்புமைக் கூறுகள் பற்றி காலுடுவெல் மிக விரிவாகவே விளக்கியுள்ளார்அவ்வாறே செமிட்டிக்கு இன மொழிகளான எபிரயம்அராமியம்அரபு போன்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையேயுள்ள உறவுகளும் காலுடுவெல்லால் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இத்துறைகளில் வெளிநாட்டினரும் நம் நாட்டினரும் பல ஆய்வுகளைக் கட்டியெழுப்பியுள்ளனர்காலுடுவெல் தந்த வெளிச்சத்தில் தமிழ் சொற் பிறப்பியல் ஆய்வில் தேவநேயப் பாவாணரும் ஞானப்பிரகாச அடிகளாரும் நிகழ்த்திய சாதனைகள் ஈடு இணையற்றவைஇந்த வெளிச்சத்தில் நின்று கொண்டு உலகின் தொன்மையான மொழி தமிழே என்றும் ஆதிமனிதன் பேசிய மொழி தமிழே என்றும் உணர்ச்சிமிகு சொற்களால் தம் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தினார் பாவாணர்.

ஒரு பக்கத்தில் நல்ல ஆய்வுகள்நடுவுநிலை சார்ந்த ஆய்வுகள் காலப்போக்கில் தோன்றுவதற்கு காலுடுவெல்லின் சிந்தனைகள் வழிவகுத்த போதிலும் போதுமான பிற மொழிக் கல்வியும்ஆய்வு நெறிமுறைகளில் போதிய பயிற்சியுமில்லாமல் நுனிப்புல் மேய்ந்து பன்னாட்டுத் தமிழாய்வு என்ற பெயரில் நமது நாட்டினர் சிலர் செய்து வரும் ஆய்வுக் குளறுபடிகளுக்கும் காலுடுவெல் மேற்கோளாகக் காட்டப்படும் அவலநிலையும் தற்போது மலிந்துள்ளதுநாற்பது மொழிகள் தெரிந்தவர்அறுபது மொழிகளில் வல்லவர் என்றெல்லாம் பேசும் பல போலி புற்றீசல் மொழிநூலார் முளைப்பதற்குரிய சூழல்களும் காலுடுவெல்லின் சிந்தனைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால் தோன்றினவே என்று எண்ண நேரிடுகின்றது.

காலுடுவெல் கண்ட ஒப்பிலக்கண ஆய்வை அடித்தளமாகக் கொண்டு தாமசுபரோஎமனோ எனும் இருபெரும் சமற்கிருத விற்பன்னர்கள் திராவிடவியல் அறிஞர்களாக உருப்பெற்று திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி (Dravidian Etymological Dictionary)யினைத் தோற்றுவித்து உலகெங்கும் உலவவிட்டபோது தமிழ் அன்னையின் திருவடிகள் வெள்ளிப் பனிமலையிலும்ஆப்புசு மலை உச்சியிலும்சீனச்சுவரிலும்உரல் மலைகளிலும்சப்பானியகொரிய சிகரங்களிலும் பெருமிதத்துடன் பீடுநடை பயின்றனதமிழின் உலகளாவிய இத்திருக்கோலத்தினை உலக மக்கள் அனைவரும் உணரும் காலம் தொடங்கியுள்ளதுதமிழுக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயுள்ள இன ஒப்புமைகள் நடுவுநிலையில் ஆராய்ந்து தெளிந்து நிறுவப்பட வேண்டும்இவற்றிற்குரிய முயற்சிகள் வலுவான அடித்தளத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பதினெட்டாம் நூற்றாண்டு வரை தமிழ்மொழி ஒரு பிரதேச மொழியாக மட்டுமே கருதப்பட்டு வந்துள்ளதுபத்தொன்பதாம் நூற்றாண்டில் அதனை உலக மொழியாக நிறுவிக் காட்டினார் இந்த மேலைநாட்டுக் கிறித்தவத் தொண்டர்இவரது பார் தழுவிய தமிழ்குறித்த பரந்த சிந்தனை கிழக்கிலும்மேற்கிலும்தெற்கிலும்வடக்கிலும் தமிழ் பயின்று தமிழாய்வு செய்த நூற்றுக்கணக்கான அறிஞர்களை 20ஆம் நூற்றாண்டில் உருவாக்கியதுஇத்தகைய அறிஞர்களின் முயற்சிகளால் இந்தியவியல் என்றால் சமற்கிருதவியல் என்ற தவறான கண்மூடித்தனமான கருத்து மண்மூடிப்போனதுஇந்த நிலையினை ஏற்படுத்திய மூலகாரணர் காலுடுவெல் என்பதில் ஐயமில்லை.

நூற்றுக்கணக்கான மேலைநாட்டு அருட்தொண்டர்கள் தமிழுக்கு அளப்பரிய பணிகள் பல புரிந்த போதிலும் காலுடுவெல் பெருமகனார் அன்னைத் தமிழுக்கு அமைத்துக் கொடுத்த பார் தழுவிய அரியணை எந்த ஒரு தனி ஆளாலும் எந்த ஒரு தனி மொழிக்கும் உலக வரலாற்றில் இன்றுவரை ஏற்படுத்தித் தரப்படவில்லை எனத் துணிந்து கூறலாம்பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழுக்கு வழங்கிய அரும்பெருங் கொடை காலுடுவெல் என்றால் 20-ஆம் நூற்றாண்டு தமிழுக்கு நல்கிய உயர்தனிக் கொடை பேராசிரியர் கமில் சுவலபில் எனலாம்.

பிரதேசத் தமிழை உலகளாவிய தமிழாக நிலைப்படுத்தினார் காலுடுவெல்தமிழ் இலக்கியமும்தமிழ்ப்பண்பாடும் இந்த உலகளாவிய நோக்கில் கிளை பரப்பி செழிப்பதற்குரிய சூழலை உருவாக்கித் தந்தார் செக்கு நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில்இவ்விருபெரும் அறிஞர்களும் தோன்றாதிருந்தால் தமிழ்மொழி இன்றும் ஒரு பிரதேச மொழியாக மட்டுமே இருந்திருக்க முடியும்தமிழினமும் எல்லா நிலைகளிலும் குறைந்தபட்சம் நூறு ஆண்டுகள் பின்தங்கியே தன் வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர்ந்திருக்க முடியும்இவ்விருவரும் இல்லையெனில் திராவிட இனம்திராவிட மொழிதிராவிட இலக்கியம்திராவிடப் பண்பாடு, திராவிடவியல்திராவிட அரசியல் எதுவுமே நமது காதுகளிலும் உலகோர் காதுகளிலும் இன்றும் ஒலித்திருக்காது என்பது உறுதி.

சென்னை– 600 119