Saturday, January 25, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 119: அத்தியாயம் 81. பிரியா விடை

 

உ.வே.சா.வின் என் சரித்திரம் 119: அத்தியாயம் 81. பிரியா விடை



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 118: அத்தியாயம் 80. புதிய வாழ்வு-தொடர்ச்சி)

கும்பகோணம் கல்லூரியில் வேலை பார்க்கும்படி என்னை அனுப்புவதற்குச் சுப்பிரமணிய தேசிகர் சம்மதித்தனரென்ற செய்தி மிக விரைவில் எங்கும் பரவியது. மடத்தின் தொடர்புடையவர்களெல்லாரும் இது கேட்டு வருந்தினார்கள். தியாகராச செட்டியார் பகற்போசனத்திற்குக் கூட இராமல், “வீட்டில் ஒரு திதி நடக்க வேண்டும்” என்று சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்லி விரைவில் விடைபெற்றுக் கும்பகோணம் போய்விட்டார்.

நான் வீட்டுக்குச் சென்று என் தாய் தந்தையரிடம் விசயத்தைச் சொன்னபோது அவர்கள் சந்தோசமென்றும் துக்கமென்றும் தெரியாத ஒரு நிலையில் இருந்தார்கள், எனக்கோ ஒரே மயக்கமாக இருந்தது. பழகிய இடத்தின்பாலுள்ள பற்றும் புதிய இடத்தின் கௌரவமும் ஒன்றனோடு ஒன்று போராடி என் மனத்தை அலைத்தன.

சுப்பிரமணிய தேசிகர் தீபாராதனை செய்து விட்டுப் பெரிய பூசையிலிருந்து அடியார்களுக்கு விபூதி கொடுப்பதற்கு ஒடுக்கம் செல்வது வழக்கம். தம்பிரான்கள் பலரும் அடியார்கள் பலரும் பின் தொடர்ந்து செல்வார்கள். அப்போது சின்னப்பண்டார சந்நிதிகள் சுப்பிரமணிய தேசிகருக்குக் கை கொடுத்து அழைத்து வருவார்.

அன்றைத் தினம் பூசை நடந்த பிறகு தேசிகர் ஒடுக்கத்துக்கு வந்தனர். என்னைக் கும்பகோணத்திற்கு அனுப்பும் விசயத்தைப் பற்றியே அவர் மனமும் சிந்தித்திருக்க வேண்டும். அப்போது அவர் சின்னப் பண்டார சந்நிதியைப் பார்த்து, “சின்னப் பண்டாரம், சாமிநாதையரைத் தியாகராச செட்டியார் வேலைக்குப் போகும்படி சிபாரிசு செய்து விட்டோம். செட்டியார் நேற்று வந்து சென்றது அவரை அழைத்துப் போவதற்காகத்தான். நாமும் சம்மதித்து யோக்கியதா பத்திரிகையும் சிபாரிசுக் கடிதமும் எழுதிக் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

நமசிவாய தேசிகர் வியப்புற்று, “அப்படிச் செய்யலாமா? இடத்தின் வழக்கங்களெல்லாம் அவர் நன்றாகத் தெரிந்தவர். வருகிற வித்துவான்களுக்கும் பிரபுக்களுக்கும் பிரியமாக நடந்துகொள்பவர். மாணக்கர்களுக்கு நன்றாகப் பாடம் சொல்லிவருகிறார். அவர் இருப்பது இவ்விடத்திற்கு உபயோகமாகவே இருக்கிறது. அவரை அனுப்புவதில் அடியேனுக்குச் சம்மதம் இல்லை” என்றார்.

மடத்தைச் சேர்ந்த எல்லாருக்கும் இத்தகைய எண்ணமே இருந்தது. எல்லாரும் சுப்பிரமணிய தேசிகர் இதற்கு எவ்வாறு சம்மதித்தாரென்றே எண்ணி வியந்தனர். மற்றவர்கள் வற்புறுத்தினாலும் என்னை மடத்தை விட்டு வெளியே அனுப்ப அவர் உடன்படாரென்றே அவர்கள் நினைத்திருந்தனர்.

நமசிவாய தேசிகர் கூறியதைக் கேட்ட ஆதீனத் தலைவர் தம் கருத்தைத் தெளிவாக்கலானார். “நீர் சொல்வது சரியே; அவரால் மடத்துக்கு எவ்வளவு உபயோகம் உண்டென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் அவருடைய நிரந்தரமான நன்மையைக் கருதியே இதற்கு நாம் சம்மதித்தோம். இங்கே நாம் உள்ள வரைக்கும் அவருக்கு ஒரு குறைவும் நேராது. காலம் ஒரே மாதிரி இராது. நம் காலத்திற்குப் பிறகு அவரிடம் நம்மைப்போலவே அன்பு செலுத்திப் பாதுகாப்பார்களென்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. யாரேனும் ஒருவர் இங்கே திடீரென்று தோன்றி, ‘இவர் சொல்லுகிற பாடத்தை நானே சொல்கிறேன். இவருக்குச் சம்பளம் கொடுப்பது அனாவசியம்’ என்று சொல்லக்கூடும். பிறகு அவர் என்ன செய்வார்! இந்தமாதிரி இடங்களில் பல பேருடைய தயை இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும். தலைவர் முதல் உக்கிராணக்காரன் வரையில் எல்லோருடைய பிரியத்தையும் ஒருவர் பெற்று இருப்பதென்பது அருமையிலும் அருமை. நம்மால் ஆதரிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் சௌக்கியமாக இருக்க வேண்டுமென்பது நம் கருத்து. அதனால் சாமிநாதையர் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து விட்டால் பிறகு அவருடைய விருத்திக்கு ஒரு குறைவும் நேராதென்று எண்ணியே அவரை அனுப்பலானோம். அவர் சௌக்கியமான நிலையில் இருப்பதை நாம் இருக்கும்பொழுதே கண்ணாற் பார்த்து விட வேண்டும்” என்றார்.

தேசிகர் உள்ளக் கருத்தை யாவரும் அறிந்து அவருடைய தீர்க்க தரிசனத்தை வியந்தனர். அப்போது உடன் சென்ற மதுரை இராமசாமி பிள்ளை இச்சம்பாசணையை அப்பால் எனக்குத் தெரிவித்தார்.

பிற்பகலில் தேசிகர் என் தந்தையாரையும் சிறிய தாயார் கணவரையும் அழைத்து வரச் செய்து தம்முடைய தீர்மானத்தைச் சொன்னார். அவர்கள் கலங்கினார்கள். தேசிகர் தக்க சமாதானங்களை எடுத்துச் சொன்னார். நல்ல வேளை அப்பால் மூன்று மணிக்குச் சோதிடரை வருவித்து நாள் பார்க்கச் சொன்னதில் அவர், “இன்று இராத்திரி எட்டு மணிக்கே நல்ல வேளையாக இருக்கிறது; அப்பொழுது அனுப்பலாம்” என்று சொன்னார். உடனே தேசிகர் எனக்குச் சொல்லியனுப்பி வருவித்து, “இன்று இராத்திரி உம்மை அனுப்புவதாக இருக்கிறோம். சித்தமாக இருக்க வேண்டும்” என்று கூறினார். எனக்கு மனம் மிகவும் கலங்கியது. அவ்வளவு சீக்கிரத்தில் பிரிய வேண்டியிருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. வியாழக்கிழமையன்று இந்தப் பிரசுதாவம் ஆரம்பமானதிலிருந்து இதன் சம்பந்தமாக நடந்து வந்த ஏற்பாடுகள் தெய்வ சங்கற்பம் எதை நடத்துகிறதோ அது மிக வேகமாக நடைபெறுமென்பதையும் மற்ற நிகழ்ச்சிகளெல்லாம் அதனைச் சார்ந்து அனுகூலம் விளைவிக்குமென்பதையும் உணர்த்தின.

“இன்றைக்கு இராத்திரியேயா புறப்பட வேண்டும்?” என்று நான் மெல்லத் தழுதழுத்த குரலுடன் கேட்டேன். “ஆமாம், சோதிடரைக் கொண்டு நாள் பார்த்ததில் இராத்திரி எட்டு மணிக்கு மேல் புறப்படுவது மிகவும் நல்லதென்று சொன்னார். நல்ல காரியத்தை விரைவிலே நிறைவேற்றுவதுதான் சிறந்தது” என்றார் தேசிகர். எனக்குப் பேச நா எழவில்லை. வீட்டுக்குப் போய்ப் பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினேன். ஏற்பாடு என்ன செய்யப் போகிறேன்! எதைக் கொண்டு போவது, எதை விட்டுப் போவது என்று விளங்கவில்லை. ஏதோ கைக்கு அகப்பட்ட ஆடைகளையும் புத்தகங்களையும் எடுத்து கொண்டேன்.

மாலையில் சுப்பிரமணிய தேசிகர் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வந்து என்னை வரும்படி சொல்லியனுப்பினார். போனேன். “சரியான காலத்தில் நீர் புறப்பட வேண்டும்” என்று அவர் சொல்லி ஒரு மகமல் சட்டை, ஒரு தலைக்குட்டை, ஒரு சின்னச் சட்டை, சரிகை போட்ட பெரிய வெள்ளைத் துப்பட்டா, உயர்ந்த சால்வை ஒன்று ஆகியவற்றை அளித்து, “எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்ளும்” என்று அன்பு ததும்பச் சொன்னார். பிறகு, கருங்காலிப் பெரிய கைப்பெட்டி ஒன்று, கை மேசை ஒன்று, ஒரு சிறிய கைப் பெட்டி, கொழும்பிலிருந்த அடியார் ஒருவர் கொண்டு வந்து கொடுத்திருந்ததும் நாற்பது உரூபா விலையுள்ளதுமாகிய தந்தப் பிடியமைந்த பட்டுக் குடை ஒன்று ஆகியவற்றையும் கொணரச் செய்து ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வோர் அரைக்கால் உரூபாய் போட்டு எனக்கு வழங்கினார்.

மெய்க்காட்டு உத்தியோகத்தில் இருந்த சண்முகம் பிள்ளை என்பவரை அழைத்து, “நாளைத்தினம் நீர் கும்பகோணத்துக்குப் போய் இவர் காலுக்குப் பாப்பாசு சோடு வாங்கிக் கொடுத்து இந்தக் குடைக்கு உறையும் போட்டு இன்னும் இவருக்கு என்ன என்ன ஆக வேண்டுமோ அவற்றைச் செய்து விட்டு வாரும்” என்றார்.

என்னைப் பார்த்து, “சாமிநாதையர், நாம் மதுரை கும்பாபிசேகத்திற்குப் போயிருந்த போது ஒரு மகா சபையில் மணி ஐயரவர்களுக்கு முன்பு வேதநாயம் பிள்ளை பாடலைச் சொல்லி விட்டு ‘இறுமாப்புடைய நடையும் குடையும் என்னிடம் இல்லை’ என்று சொன்னது நினைவில் இருக்கிறதா? அந்தக் குறை இரண்டும் இப்போது தீர்ந்து விட்டன” என்று சொன்னர். நான் வெகு நாளைக்கு முன் சொன்னதை ஞாபகம் வைத்திருந்து தேசிகர் அப்போது செய்ததையும் அவர் அன்பையும் நினைந்து உருகினேன். “இறுமாப்புடைய நடை என்றும் வராது” என்று சொன்னேன்.

“நீர் தியாகராச செட்டியார் தானத்தை வகித்து நல்ல புகழ் பெறுவதன்றிச் சென்னைக்கும் சென்று தாண்டவராய முதலியாரும் மகாலிங்கையரும் விசாகப் பெருமாளையரும் இருந்து விளங்கிய தானத்தைப் பெற்று நல்ல கீர்த்தியடைந்து விளங்க வேண்டும்” என்று கூறித் தாம்பூலம் கொடுத்தார்.

ஒரு தாய் தன் பிள்ளைக்கு உயர்ந்த பதவிகளெல்லாம் கிடைக்க வேண்டுமென்று மனமார நினைந்து வாழ்த்துவதைப் போல இருந்தன அவர் வார்த்தைகள். அந்தப் பேரன்பிலே ஊறியிருந்த போது அதன் முழு அருமையும் எனக்குத் தெரியவில்லை. பிரியப் போகின்றோமென்ற நினைவு வந்ததுந்தான் அதன் அருமை பன்மடங்கு அதிகமாகத் தோற்றியது.

நல்ல வேளை வந்து விட்டது. நான் விடை பெற்றுக் கொண்டேன். என் கால்கள் மெல்ல நடந்தன. உடம்பு நகர்ந்ததேயன்றி என் மனம் அங்கேயே கிடந்தது. வரும் போது உக்கிராண வாசலில் என்னை அறியாமலே நின்றேன். நான் எந்தச் சமயத்தில் எந்தப் பண்டம் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளும் இடமாகியஅதைப் பிரிய மனம் வரவில்லை. வேறு எங்கே அத்தகைய இடம் கிடைக்கப் போகிறது! மேலே நடந்தேன். அங்கங்கே உள்ள தீபத்தம்பங்களைப் பார்த்தேன். அவற்றின் அடியில் அமைதியாக அமர்ந்து எவ்வளவு தினங்கள் படித்திருக்கிறேன்! கவலை ஒன்றும் இல்லாமல் புத்தகத்திலே கண்ணும் கருத்துமாக ஒன்றிப்போய் வாசிக்க உதவிய அவற்றை விட்டுச் செல்லப் போகிறேனென்ற நினைப்போடு துக்கமும் கலந்து வந்தது. கொலு மண்டபத்துக்கு வந்தேன். அங்கே சகபாடிகளுடன் படித்த இடங்களைப் பார்த்து மனங் குழம்பி நின்றேன். பல இரவுகள் அந்த இடத்தில் கணக்குச் சுருணைகளைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு மெய்ம்மறந்து தூங்கியிருக்கிறேன். அந்தச் சுருணைகளைப் பார்த்தேன். அங்கே உள்ள ஒவ்வொரு பொருளும் உயிர்கொண்டு என்னிடம் பேசுவது போல் இருந்தது. அவற்றினிடம் நான் விடை பெற்றேன்.

“அவை சடப் பொருள்களல்லவா? அவற்றின் மேல் அவ்வளவு பற்றிருப்பது பைத்தியகாரத் தனமல்லவா?” என்று பிறருக்குத் தோற்றும். எனக்கு உலகமெல்லாம் திருவாவடுதுறை மடத்திலே இருந்தது. அங்குள்ள பொருள்களைப் பிரியும்போது உலகத்தையே பிரிவது போன்ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்பட்டது.

புறப்பாடு வழியில் கண்ட அன்பர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். ஆகாரம் செய்து கொண்டு மடத்திலிருந்து வந்த வண்டியிலேறி நரசிங்கம் பேட்டை இரெயில் நிலயத்துக்கு வந்தேன். எனக்குத் துணையாக என் அம்மான் பிள்ளை கணபதி ஐயரென்பவரை என் தந்தையார் அனுப்பினார். என்னை வழியனுப்பத் தம்பிரான்களும் நண்பர்களும் மாணாக்கர்களும் வந்தார்கள். அவர்கள் பிரிவாற்றாமையால் வருந்தினார்கள், நான் கண்ணீர் துளும்ப எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டேன். புகைவண்டி வந்தது. ஏறிக்கொண்டு கும்பகோணம் சேர்ந்தேன்

(தொடரும்)

Sunday, January 19, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 118: அத்தியாயம் 80. புதிய வாழ்வு

 

உ.வே.சா.வின் என் சரித்திரம் 118: அத்தியாயம் 80. புதிய வாழ்வு



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 117: அத்தியாயம் 79. பாடும் பணி-தொடர்ச்சி)

1880-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் 12  வியாழக்கிழமை பொழுது விடிந்தது. அன்று காலையில் நான் வழக்கம் போலவே உற்சாகத்தோடு இருந்தேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பு என்னை நல்ல நிலைமையில் வைத்து வளர்த்து வரும் என்ற எண்ணம் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் இருந்தது. என் வாழ்வில் ஒரு விதமான அமைதி ஏற்பட்டு விட்டதாகவே நான் கருதினேன். பிள்ளையவர்களுடைய பதவியை வகிக்கும் தகுதி என்னிடம் இராவிட்டாலும் அவரது மாணாக்க பரம்பரையை விருத்தி செய்யும் தொண்டே எனது வாழ்க்கைப் பணியாக இருக்குமென்று எதிர் பார்த்தேன்.ஆனால் கடவுளுடைய எண்ணம் வேறு விதமாக இருந்தது. மடத்தின் தொடர்பு ஒன்றோடு நில்லாமல் என் ஆசிரியத் தொழிலும், ஆராய்ச்சியும், தமிழ்த் தொண்டும் மேன்மேலும் விரிவடைய வேண்டிய நல்லூழ் எனக்கு இருந்தது போலும். அது தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியாரைக் குருவாரமாகிய அன்று பிற்பகல் திருவாவடுதுறையிற் கொணர்ந்து சேர்த்தது. என் புதிய வாழ்வு தொடங்கிற்று.

செட்டியார் வரவு

தியாகராச செட்டியார் மடத்துக்கு வந்தபோது சின்னச் பண்டார rந்நிதியாகிய சிரீ நமசிவாய தேசிகர் பகற் போசனம் செய்து விட்டுச் சிரமபரிகாரம் செய்திருந்தார். அப்போது இரண்டு மணி இருக்கும். தேசிகர் விரும்பியபடி அச்சமயம் சில மாணாக்கர்களுக்கு நான் காஞ்சிப்புராணம் பாடஞ்சொல்லி வந்தேன். நேரே நாங்கள் இருந்த இடத்திற்குச் செட்டியார் வந்தார். தம் வரவை அறிந்துவந்த நமசிவாய தேசிகரை வணங்கிவிட்டு அவர் உட்கார்ந்து பேசினார். ஒரு மணி நேரம் வரையில் பேசி இருந்து விட்டு, “மகா சந்நிதானத்தைத் தரிசிக்கலாமென்று வந்தேன். உத்தரவு கொடுக்க வேண்டும்” என்று சொல்லிப் புறப்பட்டார். அவர் சொல்லியபடி நானும் உடன் சென்றேன்.

சிரீ சுப்பிரமணிய தேசிகரிடம் நாங்கள் போன சமயம் அவர் ஒருவருக்குக் கம்ப ஐயங்களை நீக்கிக் கொண்டிருந்தார். செட்டியாரும் நானும் அதைக் கவனித்தோம். சந்தேகம் கேட்டவர் தம் வேலையை முடித்துக் கொண்டு போன பிறகு செட்டியாரும் சுப்பிரமணிய தேசிகரும் கம்ப ராமாயணத்தின் சிறப்பைப்பற்றிச் சம்பாசித்தார்கள்.

செட்டியாரின் விண்ணப்பம்

இப்படி ஒரு மணி நேரம் சம்பாசணையான பிறகு செட்டியார், “ஒரு விண்ணப்பம்” என்றார்.

சுப்பிரமணிய தேசிகர் : என்ன! சொல்லலாமே.

செட்டியார்: சாமிநாதையருக்கு என் வேலையைச் செய்விக்க எண்ணியிருக்கிறேன். கிருபை செய்து சந்நிதானம் அதற்கு உத்தரவளிக்க வேண்டும்.

தேசிகர் : அதற்கென்ன? பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் வேலையை விடும்போது யோசித்துக் கொள்ளலாமே.

செட்டியார் : வேலையிலிருந்து நான் விலகிக் கொண்டேன். மருத்துவருடைய சான்றிதழும் கொடுத்தாயிற்று. இப்போது என் வேலையில் ஒருவரும் இல்லை. எதிர்பாராத இந்தச் செய்தியைக் கேட்டுத் தேசிகர் திகைத்தார். நானும் பிரமித்தேன்.

தேசிகர் : இந்த விசயத்தை நீங்கள் முன்பு தெரிவிக்கவில்லையே. நீங்கள் இன்னும் சில வருசங்கள் வேலை பார்க்கக் கூடுமென்றல்லவோ எண்ணியிருந்தோம்?

செட்டியார் : வேலையிலிருந்து விலகிக்கொள்வதாக நான் ஒரு வாரத்துக்கு முன்பே எழுதிக் கொடுத்து விட்டேன். சாமிநாதையரை என் தானத்தில் நியமிக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறேன். இவரை அனுப்பி வேலை பார்க்கும்படி உத்தரவு கொடுக்க வேண்டும்.

தேசிகர் இரண்டு நிமிடம் யோசித்தார். பிறகு, “இவர் இவ்விடம் இருப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது. ஆதலால் இப்போது இவரை அனுப்ப முடியாது” என்றார்.

செட்டியார் மிக்க வருத்தத்தோடு, “சந்நிதானத்தில் அப்படி உத்தரவாகக் கூடாது. கல்லூரி முதல்வர் கோபாலராவ் அவர்களிடம் நான் வாக்குக் கொடுத்து விட்டேன். வேறு சிலர் இந்த வேலைக்கு மிகவும் முயன்று வருகிறார்கள். இவருக்கே செய்விக்க வேண்டுமென்று சொல்லி ராயரவர்களுடைய வாக்குறுதியையும் பெற்று வந்திருக்கிறேன். இவரிடம் சந்நிதானத்துக்குள்ள பேரன்பை அறிந்து இது நல்ல வேலை என்ற ஞாபகத்தால் இந்த முயற்சியைச் செய்யலானேன். இதனால் எல்லோருக்கும் நன்மையும் புகழும் உண்டாகும்” என்றார். தேசிகர் இணங்கவில்லை. செட்டியார் மீட்டும் சில காரணங்களை எடுத்துச் சொல்லி என்னை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இரவு மணி ஏழுக்கு மேலாகிவிட்டதால் தேசிகர், “இருக்கட்டும்; அனுட்டானத்தை முடித்துக் கொண்டு நமசிவாய மூர்த்தியின் தீபாராதனைத் தரிசனத்துக்கு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அனுட்டானம் செய்யப் போனார்.

செட்டியார் கலக்கம்

செட்டியாரும் நானும் எழுந்து புறத்தே வந்தோம் வழியில் எதிர்ப்பட்ட குமாரசாமித் தம்பிரானைக் கண்டு செட்டியார் தாம் வந்த காரியத்தைத் தெரிவித்தார். அவர், “நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விசயம் மடத்துக்கு மிக்க உதவியாக இருக்கும் இவர்களைப் பிரிவதற்குச் சந்நிதானம் சம்மதிக்குமா? எனக்கும் உசிதமாகத் தோற்றவில்லை; மற்றவர்களும் அப்படியே கருதுவார்கள்” என்றார். “இந்தச் சங்கடத்துக்கு நான் என்ன செய்வேன்!” என்று முணு முணுத்துக் கொண்டே செட்டியார் அவரை விட்டு நடந்தார். பிறகு என்னைப் பார்த்து, “இவர்கள் வார்த்தைகளையெல்லாம் கவனிக்க வேண்டா. பேசாமல் ‘போகிறேன்’ என்று சொல்லி விட்டு என்னுடன் வந்துவிடுங்கள். இந்த மடத்தில் ஆயுள் முழுவதும் உழைத்தாலும் உங்களுக்கு இந்த நிலையிலிருந்து சிறிதும் உயர்வு ஏற்படாது. இங்கே ஒரு வருடத்திற் கிடைக்கும் ஐம்பது உரூபாயை அங்கே மாதந்தோறும் பெறலாமே? பொழுது விடிந்தது முதல் இராத்திரி பத்து மணி வரையில் இங்கே கத்திப் பாடம் சொல்ல வேண்டும். பிற வேலைகளையும் கவனிக்க வேண்டும். அங்கே தினந்தோறும் 4 மணி நேரத்துக்குமேல் வேலை இராது. வாரந்தோறும் இரண்டு நாள் விடுமுறை உண்டு” என்றார். அவர் பின்னும் பலவாறு இரண்டு இடங்களுக்குமுள்ள வித்தியாசத்தை எடுத்துச் சொன்னார். அவ்வளவையும் நான் காதில் வாங்கிக்கொள்ளாமல், “கும்பகோணத்தில் உள்ள சௌகரியங்களைப் பற்றித் தாங்கள் சொன்னதை நான் கவனித்தேன். இதைக் காட்டிலும் மேலான இடமொன்று இருப்பதாக இதுவரையில் எனக்குத் தோற்றவில்லை. ஒரு விதத்திலும் இங்கே குறைவில்லை. சம்பளம் சொற்பமென்று சொல்லக்கூடாது. எங்களுக்கு ஒருவிதத்திலும் கவலையில்லாமல் சந்நிதானம் பார்த்துக்கொள்ளுகிறது” என்று பதில் சொன்னேன். திருவாவடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளதென்பதைச் செட்டியார் நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை.

எனது நிலை

என் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. கல்லூரி உத்தியோகம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. ஆனால் திருவாவடுதுறை மடத்தில் உள்ளோரது அன்பு என்உயிரோடு இணைந்து நின்றது. சுப்பிரமணிய தேசிகர் என்னை அனுப்ப இணங்கவில்லை யென்பதை அறிந்த போது என்பால் அவர் வைத்துள்ள அன்பை ஒருவாறு எண்ணிப் பார்த்தேன். “ ஒரு மனிதனுக்குப் பணந்தானா பெரிது? மடத்துக்கு இல்லாத பெருமை கல்லூரிக்கு வரப்போகிறதா? இதன் கௌரவ மென்ன? பெருமை என்ன? இதன் சம்பந்தம் ஏற்படுவது சுலபமான காரியமா?” என்றெல்லாம் நான் விரிவாக எண்ணினேன். இடையிடையே தியாகராச செட்டியார் சொன்ன ஆசை வார்த்தைகள் என்னை மயக்கின. செட்டியார் சொன்னவற்றையெல்லாம் விடாமல் கேட்டுக் கொண்டிருந்த நான் ஒருவிதமான முடிவுக்கு வந்து, “சந்நிதானம் உத்தரவு கொடுத்தால்தான் நான் வருவேன். இல்லாவிட்டால் வரமாட்டேன்” என்று முடிவாக அவரிடம் சொல்லி விட்டேன்.

“நான் சொல்வதன் நியாயம் உங்களுக்கு இப்போது தெரியாது. பிறகு தெரியவரும். சந்நிதானத்தின் திருவுள்ளத்தை மறுபடியும் கரைக்கப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர் தாம் தங்கியிருந்த சதகைக்குச் சென்றார்.

ஒன்றும் தெளிவுபடாத எண்ணங்களுடன் நான் வீடு சேர்ந்தேன். என் தாய் தந்தையரிடம் விசயத்தை வெளியிட்டேன். தந்தையார், “இங்கே எவ்வளவு சௌகரியங்கள் இருக்கின்றன! சனங்கள் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள்! இப்படிப்பட்ட இடம் வேறு எங்கேயிருக்கும்?” என்றார். தாயாருக்கும் திருவாவடுதுறையை விடுவதற்கு மனமில்லை.

காலை நிகழ்ச்சிகள்

மறு நாள் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்தேன். மனம் சஞ்சலத்தோடே இருந்தது. செட்டியார் என்னை அழைத்துக்கொண்டு சுப்பிரமணிய தேசிகரிடம் சென்றார். போகும்போது அவர் என்னிடம், “நீங்கள் சும்மா இருங்கள். உங்கள் அபிப்பிராயமாக ஒன்றும் சொல்ல வேண்டா. சந்நிதானத்தின் சம்மதத்தை நான் எப்படியாவது பெற்று விடுகிறேன்” என்று சொன்னார். தேசிகரைத் தரிசித்து வந்தனம் செய்து செட்டியார் அருகில் உட்கார்ந்தார். நானும் அமர்ந்தேன். செட்டியார் என்னைப் பற்றிய பேச்சை எடுப்பாரென்று எதிர் பார்த்தேன். அவர் வேறு விசயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். “பிள்ளையவர்கள் திருச்சிராப்பள்ளியில் இருந்த போது தியாகராச லீலையை இயற்றினார்கள். அது பூர்த்தியாகவில்லை. அவர்கள் அதை இயற்றி வருகையில் நான்தான் ஏட்டில் எழுதினேன். அப்பிரதி இங்கே இருக்கிறது. நூலின் மேற்பகுதியை நான் பாடிப் பூர்த்தி செய்து விடலாமென்று எண்ணுகிறேன். அந்தப் பிரதியை எடுத்துக் கொடுக்கும்படி உத்தரவாக வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார். தேசிகர் பிரதியை எடுத்து வரும்படி என்னை அனுப்பினார். நான் சென்று புத்தகசாலையில் கால் மணி நேரம் தேடி அந்த ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தேன். நான் புத்தக சாலைக்குச் சென்றிருந்தபோது தேசிகரும் செட்டியாரும் என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்களென்று தெரிய வந்தது. தேசிகரிடமிருந்து செட்டியார் தியாகராச லீலை ஏட்டுப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்; பிறகு, “நான் வந்த காரியத்தை அனுகூலமாக முடித்துச் சந்தோசப் படுத்தி அனுப்ப வேண்டும்” என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

தேசிகர்:- இவர் இப்போது இங்கே இருக்க வேண்டியது அவசியம். பிறகு சந்தர்ப்பம் கிடைத்தாற் பார்த்துக் கொள்ளலாம்.

தியாக:- பிறகு சந்தர்ப்பம் கிடைப்பது அருமை. அந்கத் தானம் மிகவும் உயர்ந்தது. சம்பளம் குறைவாக இருந்தாலும் அதனால் ஏற்படும் கௌரவம் அதிகம். அங்கே படிக்கும் பிள்ளைகளெல்லாம் பிற்காலத்திலே சிறந்த உத்தியோகத்தர்களாக வருவார்கள். இந்த மடத்தின் சம்பந்த முடையவர் அங்கே இருக்கிறாரென்பது இவ்விடத்திற்கே ஒரு கௌரவம் அல்லவா? இது வரையில் நான் மடத்துப் பிரசுதாவத்தை அடிக்கடி செய்து வந்தேன். எனக்குப் பிறகு தெரியாத வேறு யாராவது வந்தால் மடத்தின் சம்பந்தம் விட்டுப் போய் விடும். இவர் இருந்தால் அது விடாமல் இருக்கும். அதனால் பலவிதமான அனுகூலமுண்டென்பது சந்நிதானத்துக்கே தெரிந்தது தானே? இவ்விடத்துச் சம்பந்தமுள்ளவராகவும் ஐயா அவர்களிடம் படித்தவராகவும் இருக்கவேண்டுமென்பது தான் என் கருத்து. இவர் அங்கே வந்து விட்டாலும் வாரந்தோறும் இங்கே வரலாம். விடுமுறைக் காலங்களில் இங்கே வந்து தங்கியிருக்கலாம். நான் இவ்வளவு விசயங்களையும் ஆலோசித்தே இந்த விண்ணப்பத்தைச் செய்து கொண்டேன். நான் கேட்கும் இந்த வரத்தைத் தந்தருள வேண்டும். இவ்வாறு சொல்லிச் செட்டியார் எழுந்து கைகூப்பி வந்தனம் செய்தார். அவர் படிப்படியாக விசயங்களை எடுத்துச் சொல்லும் போது தேசிகர் மிகவும் கவனமாக அவற்றைக் கேட்டு வந்தார். செட்டியார் சொன்ன வார்த்தைகளோடு அவரது முகபாவங்களும் அஞ்சலியும் சேர்ந்து அவருக்கு அவ்விசயத்தில் எவ்வளவு ஆவல் உண்டென்பதைப் புலப்படுத்தின. என்னுடைய நிலையும் மடத்தினுடைய புகழும் இந்தக் காரியத்தால் அபிவிருத்தியாகுமென்பதைத் தேசிகர் உணர்ந்து கொண்டதாகவே தோற்றியது. அவர் மனம் இளகியது. சிறிது மௌனமாகவே இருந்தார். “சரி; என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

தெய்வ சங்கற்பம்

அந்தக் கேள்வியிலே அனுகூலமான தொனி இருப்பதைச் செட்டியார் தெரிந்து கொண்டார். உடனே “இவருக்கு வேலை செய்விக்க வேண்டுமென்று கோபால ராவ் அவர்களுக்கு ஒரு கடிதமும், அவருக்கு ஒரு யோக்கியதா பத்திரமும் சந்நிதானத்தின் திருக்கரத்தால் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். தேசிகர் ராயசக்காரராகிய பொன்னுசாமிசெட்டியாரை வருவித்து இரண்டையும் சொல்லி எழுதுவித்தார். யோக்கியதா பத்திரம் வருமாறு.

இந்தப் பத்திரிகையிலெழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் ஆறு வருடகாலம் இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி நம்மிடத்திலும் நான்கு வருடகாலமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். இலக்கண இலக்கியங்களைத் தெளிவாய்ப் போதிக்கிற விசயத்தில் சமர்த்தர். நல்ல நடையுள்ளவர்.

பிரமாதி வருசம் கும்பரவி சுப்ரமணிய

 திருவாவடுதுறை பண்டாரச் சன்னதி. யாதீனம்

இரண்டையும் எழுதுவித்த பிறகு கோபாலராவுக்குரிய கடிதத்தில் கையெழுத்திட்டு யோக்கியதா பத்திரிகையில் கையெழுத்துப் போடும் சமயத்தில் சபாபதி பூசையின் மணி கண கணவென்று அடித்தது. அப்பொழுது செட்டியார், ‘இவருக்கு வேலையாகிவிட்டது” என்று சந்தோசத்துடன் எழுந்து கை கொட்டிக் கூத்தாடினார். என்னை அனுப்பும் விசயத்தில் மன அமைதி பெறாமல் இருந்த தேசிகருக்கும் பூரண சம்மதம் உண்டாகிவிட்டது. “நாம் இவரை அனுப்புவதற்குச் சம்மதம் இல்லாம லிருந்தாலும், தெய்வம் கட்டளையிடுகிறது. தெய்வ சங்கற்பத்தைத் தடுக்க இயலுமா? சரி, நல்ல வேளை பார்த்து இவரை அனுப்புகிறோம். கவலைப்பட வேண்டா” என்று அவர் சொன்னார். செட்டியார் மிக்க குதூகலத்தை அடைந்தார்.

(தொடரும்)

Saturday, January 11, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 117: அத்தியாயம் 79. பாடும் பணி

 

உ.வே.சா.வின் என் சரித்திரம் 117: அத்தியாயம் 79. பாடும் பணி



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 116: அத்தியாயம் 78. குறை நிவர்த்தி-தொடர்ச்சி)

திருவாவடுதுறையில் என் பொழுதுபோக்கு மிக்க இன்பமுடையதாக இருந்தது. பாடம் சொல்வதும், படிப்பதும், படித்தவர்களோடு பழகுவதும் நாள்தோறும் நடைபெற்றன. சுப்பிரமணிய தேசிகருடைய சல்லாபம் எல்லாவற்றிற்கும் மேலான இன்பத்தை அளித்தது.

தேசிகர் தினந்தோறும் அன்பர்களுக்குக் கடிதம் எழுதுவார். ஒவ்வொரு நாளும் ஐம்பதுக்குக் குறையாமல் கடிதங்கள் எழுதப் பெறும். ஒவ்வொன்றுக்கும் உரிய விசயத்தை இராயசக்காரர்களிடம் நிதானமாகச் சொல்லுவார்; தாமும் எழுதுவார். இராயசக்காரர்கள் தேசிகர் கருத்தின்படியே எழுதக்கூடிய திறமையுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்தவர் சிரீ சிவசுப்பிரமணிய பிள்ளை என்பவர். இடையிடையே வந்தவர்களுடன் பேசுவது, அவர்கள் குறையைக் கேட்டு நீக்குவது முதலியவற்றிலும் தேசிகர் கவனம் செலுத்துவார். இவற்றால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் போசனம் செய்வது என்ற வரையறை அவருக்கு இல்லாமற் போயிற்று. தேக நலத்தைக் கவனியாமல் இப்படியிருந்தமையால் அசீரணமும் இருமலும் அவருக்கு உண்டாயின. கண்களில் ஒளிக்குறைவு ஏற்பட்டது. ஒன்றையும் பாராட்டாமல் அவர் வழக்கம்போல எல்லா வேலைகளையும் கவனித்து வந்தார்.

வித்துவான் யாரேனும் வந்தால் கல்வி சம்பந்தமான பேச்சிலேயே பொழுது போகும். திராவிட மகாபாசியம் முதலிய நூல்களிலிருந்து தேசிகர் செய்திகளை எடுத்துச் சொல்லுவார். அப்போது என்னை அந்நூற்பகுதிகளைப் படித்துக் காட்டச் சொல்லுவார். ஏட்டில் இன்ன பக்கத்தில் இன்ன விசயம் உள்ளது என்று குறிப்பிடுவார். அப்போது எனக்கு மிக்க வியப்பு உண்டாகும். படித்துப் படித்து அவர் பழகியிருந்தமையால் பக்கம் முதற்கொண்டு தெளிவாக அவர் ஞாபகத்தில் இருந்தது. இத்தகைய நிலையில் நான் அதிக நேரம் தேசிகரோடு இருக்க நேர்ந்தது; அதனால் மிக்க திருப்தியடைந்தேன்.

மொழி பெயர்ப்பு

சில சமயங்களில் தேசிகர் சில கருத்துகளைக் கூறி அவற்றை அமைத்துப் பாடல்கள் இயற்றும்படி எனக்குக் கட்டளையிடுவார். செய்யுட்களை நான் உடனே இயற்றிச் சொல்லிக் காட்டுவேன். வடமொழி வித்துவான் யாரேனும் வந்து பழைய சுலோகம் ஏதாவது சொல்வார். அது நல்ல சுவையுடையதாக இருந்தால் சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பார்ப்பார். அவர் குறிப்பையறிந்து நான் உடனே அதனைத் தமிழ்ச் செய்யுளாக மொழி பெயர்த்துக் கூறுவேன். வடமொழி வித்துவான் அதைக் கேட்டு மகிழ்வதோடு மடத்தின் பெருமையைப் பாராட்டிப் பேசுவார். சில நாட்களில் இரவு நான் வீட்டுக்குப் போகும்போது தேசிகர் சில சுலோகங்களையோ, புதிய விசயங்களையோ சொல்லுவார். அவற்றை இரவில் தமிழ்ச் செய்யுளாக இயற்றி மறுநாட்காலையில் தேசிகரிடம் சொல்லி அவரை இன்புறுத்துவேன்.

போச சரித்திரம்

ஒரு நாள் வடமொழி வித்துவானொருவர் மடத்திற்கு வந்திருந்தார். அவர் போச சரித்திரத்திலிருந்து சில சுலோகங்களைச் சொல்லிப் பொருள் கூறினார். எல்லாம் மிக்க சுவையுள்ளனவாக இருந்தன. ஒரு சுலோகத்தைச் சொல்லிவிட்டு, “போச மகாராச, உன்னை எல்லாரும் கொடையிற் சிறந்தவனென்று கூறுவதற்கு என்ன காரணம்? பர நாரியர்களுக்கு உன் மார்பையும் பகைவர்களுக்கு உன் முதுகையும் ஈய மாட்டாய்” என்று அதன் கருத்தையும் சொன்னார். உடனே நான் அக் கருத்தை ஒரு கட்டளைக் கலித்துறையில் அமைத்துச் சொன்னேன். அது வருமாறு:-

கொடையிற் சிறந்தனை யென்றுனை யாவருங் கூறலென்னே

நடையிற் சிறந்த பரநா ரியரொடு நண்ணலர்க

ளிடையிற் சிறந்தமை முன்னொடு பின்னின்று மீந்திலைநீ

தொடையிற் சிறந்த புயபோச ராச சுகோதயனே.”

[பரநாரியர் – வேறு மகளிர். நண்ணலர்களிடையில் – பகைவர்

கூட்டத்தினிடையே. சிறந்து அமை முன்னொடு – சிறந்து அமைந்த மார்போடு. பின் – முதுகு. தொடை – மாலை. பரநாரியருக்கு முன்னும், நண்ணலர்களுக்குப் பின்னும் ஈந்திலையென்று நிரனிறையாக நின்றது.]

இந்தப் பாட்டில் ‘முன்னொடு பின் இன்றும் ஈந்திலையென்ற பகுதிக்கு, மார்போடு முதுகை இன்றும் ஈயவில்லையென்ற பொருளோடு, முன்னும் பின்னும் இன்றும் ஈயவில்லை என முக்காலப் பெயரும் தோற்றும்படி வேறொரு பொருளும் அமைந்துள்ளது. அதை யறிந்து சுப்பிரமணிய தேசிகர், “நன்றாயிருக்கிறது. முன்னொடு பின் என்பவற்றோடு இன்றும் என்பதைச் சேர்த்ததுதான் இரசம்” என்று சொல்லி மகிழ்ந்தார்.

மற்றொரு நாள் வேறு வித்துவானொருவர் வந்தபோது அவர் சில சுலோகங்களைச் சொன்னார். போச மகாராசன் ஒரு நாள் வீதி வழியே செல்லும் போது எதிரே ஒரு பிராமணன் தோற்பையொன்றில் சலம் எடுத்து வந்தானாம். அதைக் கண்டு, “இவன் தோற்பையில் சலம் எடுப்பதற்குக் காரணமென்ன? அனாசாரமல்லவோ?” என்றெண்ணிய அரசன் உடன் வந்த மந்திரியைக் கண்டு விசயத்தை விசாரிக்கச் செய்தான். போசராசனுடைய பார்வையினால் கவித்துவ சக்தியைப் பெற்ற அப்பிராமணன் உடனே அரசனை நோக்கி விடையாக ஒரு சுலோகத்தைச் சொன்னானாம். “போச ராசனே! நீ உன் பகைவரைச் சிறைப்படுத்தி அவர் காலில் விலங்கிடுவதால் இந்நாட்டில் உள்ள இரும்பெல்லாம் செலவாயின. உன்பால் வந்த வித்துவான்கள் முதலியவர்களுக்குத் தானங்கள் வழங்கி அவற்றைக் குறிக்கும் தானசாசனங்களைத் தாமிரப் பட்டயத்தில் பொறித்துக் கொடுக்கவே தாமிரமும் இலதாயிற்று. நான் வேறு எந்தப் பாத்திரத்தில் சலம் எடுப்பேன்?” என்ற கருத்தமைந்தது அந்தச் சுலோகம். சம்சுகிருத வித்துவான் சுலோகத்தைச் சொல்லிவிட்டு மிகவும் இரசமாகப் பொருளை எடுத்துரைத்தார். சுப்பிரமணிய தேசிகர் கேட்டு மகிழ்ந்ததோடு என்னைப் பார்த்து, “எப்படியிருக்கிறது?” என்று வினவினார். நான் அவர் குறிப்பை யறிந்து, “மிகவும் நன்றாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு உடனே அக்கருத்தை அமைத்துப் பின் வரும் செய்யுளை இயற்றிச் சொன்னேன்:-

நேரார் பதத்துப் புனைவிலங் காலயம் நீங்கினநிற்

சேரா துலர்க்கருள் சாசனத் தாற்செம்பு தீர்ந்தவென்றால்

ஏரார்நின் னாட்டிடைப் போசவித் தோலன்றி யானிதமும்

நீரா தரத்தோ டெடுப்பமற் றியாது நிகழ்த்துவையே.”

(நேரார்-பகைவர். அயம் – இரும்பு. ஆதுலர் – இரப்பவர்கள், ஆதரம் – அன்பு. நிகழ்த்துவை-சொல்வாயாக.)

காற்றுக்கு விண்ணப்பம்

பின்பு ஒரு நாள் வித்துவானொருவர் தேசிகருடைய உதவியை நாடி வந்தார். அவர் பழைய சுலோகங்கள் பலவற்றைச் சொன்னார். எந்த வகையான ஆதரவுமற்ற ஒரு வித்துவான் ஒரு பிரபுவை நோக்கித் தம்மைப் பாதுகாக்க வேண்டுமென்பதைத் தெரிவிக்க எண்ணி அக்கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பாகப் புலப்படுத்தியதாக அமைந்த சுலோகங்கள் அவை. அவற்றுள் புயற்காற்றினால் கடலில் அலைப்புண்ட ஒரு கப்பலில் தத்தளிப்பவன் காற்றைப் பார்த்துச் சொல்வது போல அமைந்தது ஒரு சுலோகம். நான் அதனை மொழிபெயர்த்துச் சொன்னேன். அச் செய்யுள் வருமாறு:-

மீகாமன் செயல்முறையும் பிறழ்ந்தது வீழ்ந்

தனதுடுப்பு மீன்றோன் றாமல்

ஆகாய மறைத்தபுயல் அம்புதியோ

கடக்கரிதால் அந்தோ மார்க்கம்

ஏகாத விதமலைக ளுடையதுநௌ

விதைக்கரைப்பால் ஏகச் செய்து

நீகாவ லதுகவிழிவ் விரண்டுமுன்றன்

கையனவாம் நிகழ்த்துங் காலே.”

(மீகாமன்-மாலுமி. மீன்-நட்சத்திரம். அம்புதி-கடல். நௌ-ஒருவகைத் தோணி. காலே-காற்றே.) இவ்வாறு அந்த அந்தச் சந்தர்ப்பங்களில் நான் மொழி பெயர்த்து இயற்றிய பாடல்கள் பல. இந்த உற்சாகத்தில் தினந்தோறும் கற்பனைகளை அமைத்துச் சொந்தமாகப் பல பாடல்களையும் இயற்றி வந்தேன். ஒரு சமயம் தேக சௌக்கியத்தால் சில நாள் மடத்துக்கு நான் போக இயலவில்லை; படுத்த படுக்கையிலேயே இருந்தேன். அக்காலத்தில் முருகக் கடவுள் படைவீடுகள் ஆறில் ஒவ்வொன்றின் விசயமாகவும் ஒவ்வோர் இரட்டை மணிமாலை இயற்றினேன்.

அவதானம்

மடத்திற்குச் சில சமயங்களில் அவதானம் செய்யும் வித்துவான்கள் வந்து தங்கள் திறமையைப் புலப்படுத்துவார்கள். அட்டாவதானம், சோடசாவதானம், முப்பத்திரண் டவதானம், சதாவதானம் என்னும் அவதானங்களைச் செய்பவர் வருவார்கள். அவர்கள் திறமையைக் கண்டு நானும் பிறரும் வியப்போம். “நாமும் இவ்வாறு அவதானம் செய்யவேண்டும்” என்று ஆசை எனக்கும் பிறருக்கும் எழுந்தது. அப்பியாசமும் செய்து வந்தோம். அப்பால் ஒரு நாள் நான் என்னுடன் படிப்பவர்களையும் என்னிடம் படித்த மாணாக்கர்களையும் வைத்துக் கொண்டு அவதானம் செய்யலானேன்.

சிலர் பாடல்களுக்குச் சமசுயை கொடுத்தனர். சிலர் நூல்களிற் சந்தேகம் கேட்டனர். சிலர் பழைய பாடலைக் கூறித் திரும்பச் சொல்லச் செய்தனர். சிலர் கணக்குப் போட்டனர். அவற்றிற்கெல்லாம் நான் தக்கபடி விடை அளித்தேன். அவதானத்துக்கு இன்றியமையாதது ஞாபக சக்தி. எனக்கு சமசுயை கொடுத்தவர்களுள் என்னிடம் படித்து வந்த வைணவ மாணாக்கராகிய இராமகிருட்டிண பிள்ளை யென்பவர் ஒருவர். அவர், “புண்டரீக வல்லிதாள் புகழ்ந்து பாடியுய்வனே” என்று ஈற்றடி கொடுத்தது மாத்திரம் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது. மடாலயம் முழுவதும் தமிழ் மணம் நிரம்பி யிருந்தமையால் தமிழ் சம்பந்தமான எந்த முயற்சியையும் தைரியமாக மேற்கொள்ளும் இயல்பு எனக்கு உண்டாயிற்று. மற்ற மாணாக்கர்களும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டதுண்டு.

கடிதப் பாடல்

ஒரு சமயம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை சுப்பிரமணிய தேசிகர் விசயமாகச் சில வெண்பாக்களைப் பாடி அவற்றைத் தேசிகரிடம் சொல்லிக்காட்ட வேண்டுமென்று எனக்கு ஒரு செய்யுளால் அறிவித்து அவற்றையும் அனுப்பியிருந்தார். தேசிகரிடம் நான் அச்செய்யுட்களை அறிவித்ததோடு அச் செய்தியைப் பின்வரும் பாடலால் வேதநாயகம் பிள்ளைக்கும் தெரிவித்தேன்:-

தாயக மெனநன் னாவலர் பலர்க்குந்

தனமுதல் அளித்தியல் வேத

நாயக மகிபா நீயக மகிழ்ந்து

நன்கனுப் பியமுதற் பாவை

ஆயக மதில்வாழ் சுப்பிர மணிய

ஆரியன் பாலுட னுரைத்தேன்

நோயக லெவர்க்கு நின்பெருஞ் சீரை

நுவன்றன னுவலரும் புகழோய்.”

(முதற்பா – வெண்பா. ஆய் அகமதில் வாழ் – நூலை ஆராய்கின்ற நெஞ்சத்தில் வாழும்.)

இவ்விதம் பல வகையிலும் பாடும் பணியில் ஈடுபட்ட என் செய்யுள் முயற்சி விருத்தியாகி வந்தது. அதனால் மற்றவர்களுக்குச் சந்தோசமும் எனக்கு மேன்மேலும் ஊக்கமும் விளைந்தன. சுப்பிரமணிய தேசிகர், “பிள்ளையவர்களுடைய போக்கை நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறீர். உம்முடைய செய்யுட்கள் அவர்களுடைய ஞாபகத்தை உண்டாக்குகின்றன” என்று அடிக்கடி சொல்வார். பிள்ளையவர்கள் இட்ட பிச்சையே எனது தமிழறிவு என்ற நினைவிலேயே வாழ்ந்து வந்த எனது உள்ளத்தை அவ்வார்த்தைகள் மிகவும் குளிர்விக்கும்.

(தொடரும்)

Saturday, January 04, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 116: அத்தியாயம் 78. குறை நிவர்த்தி

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 115: அத்தியாயம் 77. தொடர்ச்சி)

திருவாவடுதுறையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். சுப்பிரமணிய தேசிகர் தாம் உத்தேசித்தபடியே திருப்பெருந்துறைக்கு வந்து சேர்ந்தார். சில தினங்களுக்குப் பிறகு தேசிகரிடமிருந்து தந்தையார் முதலியவர்களோடு திருப்பெருந்துறைக்கு வந்து சில காலம் இருக்க வேண்டுமென்று எனக்கு ஓர் உத்தரவு வந்தது. எங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைப் பண்ணுவித்து அனுப்ப வேண்டுமென்று காறுபாறு கண்ணப்பத் தம்பிரானுக்கும் திருமுகம் வந்தது. நான் என் தாய் தந்தையரை அழைத்துக்கொண்டு திருப்பெருந்துறையை நோக்கிப் புறப்பட்டேன். காறுபாறு தம்பிரான் சௌகரியங்கள் செய்து அனுப்பும்போது, “காட்டு மார்க்கமாக இருக்கும்; ஆனாலும் அங்கங்கே இருக்கும் மடபதிகள் கவனித்துக் கொள்வார்கள்” என்று என் தந்தையாரை நோக்கிக் கூறினார். நான், “நாட்டுச் சாலைவழியே போவதனால் அசௌகரியம் நேராது” என்று சிலேடையாகச் சொன்னேன். நாட்டுச் சாலை யென்பது நாங்கள் போகவேண்டிய வழியில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள மடத்துக்குரிய பெரிய கிராமம்.

நாங்கள் திருப்பெருந்துறையை அடைந்தோம். எங்களுக்காகத் தனி விடுதி ஒன்று அமைக்கப் பெற்றிருந்தது. சுப்பிரமணிய தேசிகரது தரிசனத்தையும் சல்லாபத்தையும் பெற எண்ணிப் பல பிரபுக்களும் வித்துவான்களும் வந்து வந்து சென்றார்கள். சிங்கவனம் சுப்பு பாரதியார், வேம்பத்தூர்ப் பிச்சுவையர், மணமேற்குடி கிருட்டிணையர், மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் முதலிய வித்துவான்களுடன் பழகி இன்புற்றேன்.

பிச்சுவையர்

பிச்சுவையர் சிறந்த ஆசுகவி. அவர் சுப்பிரமணிய தேசிகரைப் புகழ்ந்து தாம் நூதனமாக இயற்றிய பாடல்களையும் வேறு சமயோசிதப் பாடல்களையும் சொல்லிக் காட்டினார். நான் வினோதார்த்தமாகச் சில சில ஆட்சேபங்களைச் செய்தேன். அவர் சில சில இடங்களில் சிலேடையை உத்தேசித்து வார்த்தைகளின் உருவத்தை மாற்றியிருந்தார். இயல்பான இலக்கண வரம்புக்கு உட்படாமல் புறநடையின் சார்பை ஆராயவேண்டிய சில பிரயோகங்களைச் செய்திருந்தார். நான் ஆட்சேபித்தபோது சுப்பிரமணிய தேசிகர் அவ்வாட்சேபங்கள் உசிதமானவை என்பதைத் தம் புன்னகையால் தெரிவித்தார். பிச்சுவையர், “அவசரத்திற் பாடும் செய்யுட்களில் இவ்வளவு இலக்கணம் பார்த்தால் முடியுமா?” என்று சொல்லிவிட்டு உடனே பின்வரும் பாடலைச் சொன்னார்:

விஞ்சுதலை யார்சேட வித்தகனென் றாலுநின்முன்

அஞ்சு தலையுடைய னாவனால்-விஞ்சுபுகழ்க்

கோமுத்தி வாழ்சுப் பிரமணியக் கொண்டலே

மாமுத் தியைவழங்கு வாய்.”

(மிக்க தலையையுடைய ஆதிசேடனாக இருப்பினும் உன் முன்னால் ஐந்து தலையுடையவனாகிக் குறைவடைவான் என்றும், மேன்மையை உடைய ஆதிசேடனும் நின் முன்னால் பயத்தை யுடையவனாவான் என்றும் முன் இரண்டடிகளுக்கு இரண்டு பொருள்கள் தோற்றின. விஞ்சுதல் – மிகுதல்.]

அவ்வளவு விரைவில் சிலேடை நயம் தோற்றும்படி அவர் சொன்ன பாடல் எங்களைப் பிரமிக்கச் செய்து விட்டது.

ஒரு கனவான்

தேசிகரைப் பார்க்கவரும் கனவான்களிற் பெரும்பாலோர் தமிழ்க் கல்வி யறிவுடையவர்களாகவே இருப்பார்கள். தேசிகர் முன்னிலையில் எப்போதும் தமிழ் முழக்கம் விடாமல் இருப்பதை அறிந்த சிலர் அவர் திருவுள்ளக் குறிப்பை அறிந்து மாணாக்கர்களைப் பாடல்கள் சொல்லும்படி கேட்பதும் அவர்களை வினாவிப் பரீட்சை செய்வதும் உண்டு. கோட்டூரிலிருந்த பெருஞ் செல்வராகிய இரங்கசாமி முதலியாரென்னும் கனவான் தம் குடும்பத்தோடும், உறவினர்களோடும் ஸேதுசுநானத்திற்குச் சென்று திரும்புகையில் திருப்பெருந்துறைக்கு வந்து தேசிகரைத் தரிசித்துக் கொண்டார். அவர் நல்ல தமிழ்ப் பயிற்சியுடையவர். அவருடன் வந்திருந்த வேறொரு கனவான் பல தமிழ் நூல்களில் சிறந்த பயிற்சியுடையவராகத் தோன்றினார். கம்பராமாயணத்தில் நல்ல பழக்கம் அவருக்கு இருந்தது. அவர்கள் தேசிகருடன் பேசிக்கொண்டிருந்தபோது தேசிகர் மாணாக்கர்களை அழைத்து அவர்களுக்குப் பழக்கம் செய்வித்தார். அக்கனவான் கம்ப ராமாயணத்தில் எங்களைச் சில கேள்விகள் கேட்டார். அக்கேள்விகளிலிருந்தே அவருடைய கல்வியறிவு புலப்பட்டது. பெரும்பாலும் என்னையே வினாவினார். நான் திருப்தியாக விடையளித்தேன்.

புராண பாடம்

காஞ்சிப் புராணத்தை ஒருமுறை பாடங் கேட்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. பிள்ளையவர்கள் காலத்தில் புத்தகம் கிடைக்காமையால் அதை நான் படிக்க முடியவில்லை. அது குறையாகவே இருந்தது. அந்நூலின் முதற் காண்டம் சிரீ சிவஞான முனிவராலும் இரண்டாங் காண்டம் சிரீ கச்சியப்ப முனிவராலும் இயற்றப் பெற்றவை. என் விருப்பத்தைச் சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தபோது அவர் ஏட்டுப் புத்தகத்தை வருவித்து அளித்துச் சின்னப்பண்டார சந்நிதியாகிய சிரீ நமசிவாய தேசிகரிடத்திற் பாடங் கேட்கலாமென்று சொன்னார். அப்படியே கேட்கத் தொடங்கினேன்.

நமசிவாயதேசிகர் பிள்ளையவர்களிடம் படித்தவர். எப்பொழுதும் தமிழ் நூல்களை ஒழுங்காக ஆராய்ந்து படித்துவருபவர். சைவசாத்திர நுட்பங்களை நன்கு உணர்ந்தவர். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதையே பொழுது போக்காக உடையவர். அவரிடம் தினந்தோறும் காஞ்சிப் புராணத்தைப் பாடம் கேட்டு வந்தேன். சிவஞான முனிவர் வாக்குக்கும் கச்சியப்ப முனிவர் வாக்குக்கும் மிக்க வேற்றுமை உண்டு. சிவஞான முனிவர் வாக்கில் கருத்தும் கவியும் ஒன்றோடு ஒன்று பின்னிச் செல்கின்றன. இயல்பாகச் செல்லும் கவியின் கதியில் கருத்துகள் தாமே வந்து பொருந்திச் சுவைபட இசைந்து நிற்கின்றன.

இரண்டாங் காண்டத்தில் கச்சியப்ப முனிவர் தம் அறிவாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார். சங்க நூல்களிலுள்ள கருத்துகளையும் சொற்களையும் எடுத்து ஆளுகின்றார். இலக்கண மேற்கோளாகக் காட்டப் பெறும் அரிய சொற்றொடர்ப் பிரயோகங்களை அவர் வாக்கிலே மிகவும் காணலாம். சிவஞான முனிவர் வாக்கில் நம்மை மறந்த இன்பம் உண்டாகிறது. கச்சியப்ப முனிவர் வாக்கில் அவரது உன்னதமான அறிவாற்றலை நினைந்து வியப்படைகிறோம். காஞ்சிப்புராணம் பாடம் கேட்டு முற்றுப்பெற்றவுடன் கச்சியப்ப முனிவர் வாக்காகிய பேரூர்ப் புராணத்தைக் கேட்டேன். அது முடிந்தவுடன் மீட்டும் ஒரு முறை அவ்விரண்டு நூல்களையும் பாடம் கேட்டேன்.

மாணிக்கவாசகர் ஆலய கும்பாபிசேகம்

அக்காலத்தில் திருப்பெருந்துறைக் கட்டளை விசாரணை செய்து வந்த சிரீ சுப்பிரமணியத் தம்பிரான், கோயில் முகற்பிராகாரத்தின் மேல்புறமாக ஓர் ஆலயம் கட்டுவித்து அதில் மாணிக்கவாசகர் திருவுருவத்தைப் பிரதிட்டை செய்து கும்பாபிசேகம் நடத்தினார். மகா வைத்தியநாதையர் தமையனாராகிய இராமசாமி ஐயர் முன்பே பெரிய புராணக் கீர்த்தனம் இயற்றியிருந்தார். அதில் சைவ சமயாசாரியர்களாகிய மூவர் சரித்திரமும் அடங்கியுள்ளன. நான்கு சைவசமயாசாரியர்களில் மாணிக்கவாசகர் சரித்திரம் தமிழ்க் கீர்த்தனையாக இராமையால் அதனை அவர் தனியே கீர்த்தனை உருவத்தில் இயற்றி அங்கே அரங்கேற்றினார். அப்போது கும்பாபிசேகச் சிறப்பைப் பற்றியும் மாணிக்கவாசகர் சரித்திரத்தைப் பற்றியும் நாங்கள் தனித்தனியே பல பாடல்கள் இயற்றிப் படித்துக் காட்டினோம்.

திருப்பனந்தாள்

பிறகு திருவாவடுதுறைக்குப் புறப்படவேண்டும் என்று தீர்மானித்த தேசிகர் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாயினர். என் தாய் தந்தையரைத் திருவாவடுதுறைக்கு முன்னதாக அனுப்பிவிட்டு நான் மாத்திரம் தேசிகருடன் இருந்தேன். திரும்புகையில் திருப்பனந்தாளுக்கு எழுந்தருள வேண்டும் என்று இராமலிங்கத் தம்பிரான் விண்ணப்பித்துக் கொண்டமையால் தேசிகர் அவர் விருப்பத்துக்கிணங்கித் திருப் பெருந்துறையிலிருந்து பரிவாரங்களுடன் புறப்பட்டு வழியே உள்ள பல ஊர்களிலும் அடியார்கள் செய்யும் உபசாரத்தைப் பெற்றுக் கும்பகோணத்தின் வழியாகத் திருப்பனந்தாளை அடைந்தார்.

சுப்பிரமணிய தேசிகர் வரவையறிந்து சாலையின் இருபுறங்களிலும் பல கல் தூரத்திற்கு வாழை மரங்களும் தோரணங்களும் கட்டி இராமலிங்கத் தம்பிரான் அலங்காரம் செய்திருந்தார். திருப்பனந்தாள் மடத்திற்குள் ஒரு பெரிய பங்களாவை மூங்கிலால் அமைத்தார். அதைப் பார்த்தபோது கற்கட்டிடம் போலவே தோற்றியது. சுப்பிரமணிய தேசிகர் அங்கே தங்கினார். சிரீ இராமலிங்கத் தம்பிரான் செய்த உபசாரம் இன்னபடியிருந்தது என்று சொல்வதற்கரியது. பாட்டுக் கச்சேரிகள் நடைபெற்றன. பல தமிழ் வடமொழி வித்துவான்கள் வந்து சுப்பிரமணிய தேசிகர் அங்கே எழுந்தருளிய சிறப்பைப் பாராட்டிப் பாடினார்கள். நானும் வேறு மாணாக்கர்களும் தேசிகரையும் இராமலிங்கத் தம்பிரானையும் புகழ்ந்து பல பாடல்கள் இயற்றினோம். எல்லாம் ‘பல புலவர் செய்யுட் டிரட்டு’ என்ற பெயரோடு சேர்க்கப் பெற்று ஒரு புத்தக வடிவமாக அக்காலத்தில் அச்சிடப்பெற்றன

திருவாவடுதுறை திரும்பியது

திருவாவடுதுறை ஆலய உத்சவமும் குருபூசையும் சமீபித்தமையால் தேசிகர் பல நாட்கள் திருப்பனந்தாளில் தங்க முடியவில்லை. சில நாளிருந்து பிறகு புறப்பட்டுத் துறைசையை அடைந்தார். குரு பூசை முதலியன சிறப்பாக நடைபெற்றன. தேசிகர் யாத்திரையினால் நேர்ந்த சிரமத்தை ஆற்றிக் கொண்டும் வழக்கமாக நடை பெறுவனவற்றைக் கவனித்தும் வந்தார். யாத்திரையினிடையே அங்கங்கே சந்தித்துப் பழகிய பல கனவான்களுக்குக் கடிதங்கள் எழுதச் செய்தார். இடையிடையே மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதும் உண்டு.

பாடம் கேட்டல்

ஒய்ந்த நேரங்களில் நமசிவாய தேசிகரிடம் நான் தமிழ்நூல்களைப் பாடம் கேட்டு வரலானேன். மாணாக்கர்கள் பலருக்குப்பாடமும் சொல்லி வந்தேன். நமசிவாய தேசிகர் சிறிதும் ஓய்வின்றிப்பாடம் சொல்லுவார். அதில் அவருக்குச் சலிப்பே இராது. மற்றவர்களுக்கு அவர் பாடம் சொல்லும்போதும் நான் உடனிருந்து கேட்டு வருவேன். அவர் விருப்பப்படி நானும் அவர் முன்னிலையில் சிலருக்குப் பாடம் சொல்வேன். எந்த விசயத்திலும் கண்டிப்பாக இருக்கும் அவர் பாடம் சொல்லும் போது நான் இராவிட்டால் உடனே அழைத்து வரச் செய்வார்.

ஊசி மிளகாய்

ஒரு நாள் பகற்போசனத்திற்கு மேல் தெற்குக் குளப்புரைத் தோட்டத்தில் நமசிவாய தேசிகர் சில மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். உண்ட இளைப்பால் நான் ஓரிடத்தில் படுத்து உறங்கி விட்டேன். பாடம் நடைபெறும்போது நான் அருகில் இராமையைக் கண்ட நமசிவாய தேசிகர் உடனே என்னை அழைத்து வரும்படி ஒருவரை அனுப்பினார். அவருடைய ஆஞ்ஞையை மறுத்துப் பேச யாருக்கும் தைரியம் இராது. என்னை அழைக்க வந்தவர்கள் நான் தூங்கின இடத்தை அடைந்தார். அயர்ந்து தூங்கிய என்னைக் கூப்பிட்டுப் பார்த்தார்; நான் எழவில்லை பிறகு தட்டி எழுப்பினார்.விழித்துக் கொண்டேன். ஆயினும் எனக்கிருந்த சிரமம் நீங்கவில்லை; பாதித் தூக்கத்தில் எழுந்தமையால் சிரமம் அதிகமாயிற்று.

“பிறருடைய கஷ்டம் தெரியவில்லையே; இப்படி நிர்ப்பந்திக்கிறார்களே!” என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. என் வருத்தத்தை நான் வெளிப்படுத்த முடியுமா? அல்லது அப்போது போகாமல் தான் இருக்க முடியுமா? நான் நடந்து சென்றேனே ஒழிய என் கால்கள் தள்ளாடின. கண் இமைகளைத் தூக்கத்தின் கனம் கீழே இழுத்தது. போகும் வழியில் ஊசி மிளகாய்ச்செடி ஒன்றிருந்தது. அதிலிருந்து ஒரு பழத்தைப் பறித்துக் கசக்கி என் கண்களில் தடவிக் கொண்டேன். எனக்கிருந்த வருத்தம் மேல் விளைவை எண்ணாத நிலையில் என்னை வைத்தது. மிளகாயைத் தடவிக்கொண்டதுதான் தாமதம்; கண்கள் முழுவதும் ஒரே எரிச்சலாக எரிய ஆரம்பித்து விட்டன. தேளுக்கு அஞ்சிப் பாம்பின் வாயிலே புகுந்த கதையாயிற்று என் நிலை. என்னால் மேலே நடக்க முடியவில்லை. கீழே உட்கார்ந்து விட்டேன். என்னுடைய செய்கையை அறிந்து யாவரும் வருந்தினார்கள். என் நண்பர்கள் மாத்திரம் எனக்கு அப்போது எவ்வளவு சிரமம் இருந்திருக்க வேண்டுமென்பதை ஊகித்துக் கொண்டனர்.

சைவ சாத்திரம் கேட்டல்

நமசிவாய தேசிகர் பாடம் சொல்லும்போது சைவ சாத்திர விசயங்கள் வந்தால் அவர் மேற்போக்காகச் சொல்லிவிட்டு விடுவார். சைவ சித்தாந்த நூல்களைத் தனியே படிக்க வேண்டுமென்பது அவர் கருத்து. பிள்ளையவர்களிடம் நான் பாடம் கேட்ட காலத்தில் அங்கங்கே வரும் சாத்திரக் கருத்துகளை நன்றாகத் தெரிந்து கொண்டேன். சுப்பிரமணிய தேசிகர் யாருக்கேனும் சிவஞான போத பாசியத்தைச் சொல்ல நேரும்போது என்னையே படித்துக்காட்டச் சொல்வார். இருப்பினும் சிவஞான போதச் சிற்றுரை முதலிய சித்தாந்த சாத்திரங்களை முறையாகக் கேட்டால் நலமாக இருக்குமென்பது என் எண்ணம்.

நமசிவாய தேசிகருக்கு ஓய்வு இல்லை. என் கருத்தைச் சிரீ சுப்பிரமணிய தேசிகர் எப்படியோ உணர்ந்தனர். என்னை ஒரு நாள் அழைத்து, “நாமே உமக்குச் சிற்றுரை முதலியவற்றைப் பாடம் சொல்வோம். படிக்க வேண்டுமென்ற ஆவலுள்ள உம்மை விடத் தக்க பாத்திரம் வேறு யார் இருக்கிறார்கள்?” என்று சொல்லிச் சித்தாந்த நூல்களை முறையாகக் கற்பிக்கக் ஆரம்பித்தார். சிவஞான போதச் சிற்றுரை, சிவஞான சித்தியார் பொழிப்புரை முதலிய பல நூல்களையும், வேறு சில கருவி நூல்களையும் கேட்டு எனக்குள்ள குறையை நிவர்த்தி செய்து கொண்டேன்.

(தொடரும்)