Showing posts with label அருங்கவிஞர். Show all posts
Showing posts with label அருங்கவிஞர். Show all posts

Saturday, February 03, 2018

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 – வல்லிக்கண்ணன்

அகரமுதல 223  தை 15 – 21, 2049, சனவரி 28-பிப்.3, 2018

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38

பெருங்கவிக்கோவின் துணிச்சல் வியக்கப்பட வேண்டியதேயாகும். தனக்குப் பிடிக்காத முறையில், சரியில்லாத கருத்தை, யார் எங்கே சொன்னாலும், அந்த இடத்திலேயே எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் அவர். கவி அரங்கத்தில் தலைமை வகிப்போருடன் அவர் கருத்து மோதல் நடத்தியிருக்கிறார். பெருங்கவிக்கோ ஐயப்ப பக்தர். சபரி மலைக்குப் போவதற்கு நோன்புகள் ஏற்று நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பவர். அவருடைய கோலத்தை ஒரு கவி அரங்கத்தின் போது தலைமைவகித்த பகுத்தறிவுவாதி பழித்துப் பேசி விட்டார், அதனால் கொதிப்புற்ற கவிஞர் உணர்ச்சி வேகத்தோடு கவிதையில் சாடினார்
தவிப்புடைய நெஞ்சன் நான்
சார்வதோ தெய்வ நெறி!
சாமியே சரணமெனச்
சார்வாசல் அவ்வாசல்
நேமித்த ஒழுக்கமுறை
நேர்மை நிலைஉணர்ந்தே
இக்கோலம் பூண்டுள்ளேன்
இதனைத் தலைமைகொள்
தக்கோன் அறியாமல
தவக்கோலம் பழிக்கின்றான்!
ஆமாமாம். சாமிகளாய்
அரைவயிற்றுக் கஞ்சிக்காய்
சீமான்கள் தாள்பற்றித்
திருடரைப் போய்ப்புகழ்ந்து
தாமிங்கே வாழ்கின்ற
சதிகாரர் தம்மைவிட
நாமிங்கே என்றேனும்
நன்முறை கெட்டோமா?
தலைமை தாங்குகின்ற
தனிப்பெரும் பித்தரேநீர்
நிலைமை புரியாமல்
நெஞ்சார எனைப்பழித்தீர்!
போதை இல்லாத
நீதிக் கவிஞன் நான்
பாதை என்பாதை
பண்பான சீர்பாதை
கைக்கூலி கட்குக்
கைகட்டி வாய்பொத்தி
பைக்கூலி பெறுகின்ற
பாதையென் பாதையல்ல!
மெய்க்கூலி பெறுதற்காய்
மேன்மையாம் ஆன்மீகத்
தெய்வத்தாள் பற்றித்
திசையெல்லாம் தமிழ்வளர்ப்பேன்
சாமியே சரணமெனத்
தான் நினைத்துப் பற்ற்ற்று
யாமிங்கே வாழ்கின்றோம்
யாருக்கும் அச்சமில்லை.
தெய்வீக வழிப்பாதை
சிற்றளவும் அறியா நீ!
செய்கைஎனைப் பழிக்கும்
சிறுமையை விட்டுவிடு!
வான்தவ மோனத்தின்
வாகைபெறச் செல்பவன்யான்
நான்என தென்கின்ற
நாத்தீகப் பேர்வழிநீர்!
என்பாதை நீபுரியாய்,
இருவருக்கும் பாதைவேறு:
இப்படி மேடையிலேயே சுடச்சுடச் சொற்களால் பாய்ச்சினார் பெருங்கவிக்கோ. இது போன்ற வேறு நிகழ்ச்சிகளும் கவிஞரின் கவி அரங்க அனுபவங்களில் உண்டு.
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்

Monday, January 22, 2018

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 – வல்லிக்கண்ணன்

 (ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 –தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37

8. தன்னம்பிக்கையும் தன்மான வீரமும்


பெருங்கவிக்கோ தன்னம்பிக்கை மிகுந்தவர்; தனது திறமைகளை நன்கு உணர்ந்தவர்; தன்மானம் மிக்கவர்; அதில் முகிழ்த்த வீரமும் துடிப்பும் கொண்டவர்.
அவருடைய இப்பண்புகள் அவரது கவிதைகளில் ஒளிப்பொறி சிதறிப் பல இடங்களிலும் பரவிக் கிடப்பதைக் காணலாம்.
காலமெல்லாம் விழித்திருந்தே
கடமையாற்றும் கவிஞன் நான்
அவனும் இவனும் எவனும் ஒன்றாய்
ஆகும் கொள்கை யுடையவன் யான்
விருப்பு வெறுப்பை வென்று வாழும்
வேதாந்தி போல் ஞானி நான்
என்று அவர் அறிவிக்கிறார்.
என்னைப் போல் முயற்சிக்கே இவ்வுலகில்
எவன் பிறந்தான்! கையில் செப்புப்
பொன் பொருள்கள் சிறிதுமிலா நிலையில் கூடப்,
புலம்பாமல் அஞ்சா நெஞ்சத்  
தன்னேரில்லாத வகை உழைக்கின்றேன்!
தாரணியில் தமிழே மேன்மைப்
பன்னலமும் பெருகிடப் பேராசை கொண்டே
பணிசெய்தேன்! பகைமை வென்றேன்!
என்று கவிஞர் கூறுகிறார்.
பெருங்கவிக்கோ ஓயாத உழைப்பில் மகிழ்ச்சி காண் பவர். பிறருக்கு உதவி புரியும் நல்ல மனம் பெற்றவர். இவை பற்றி அவர் ஒரிடத்தில் குறிப்பிடுகிறார்:
 ஒடியாடித் தினம் உழைத்து மகிழ்கிறேன்
ஓய்வுக்கு நேரமில்லை-பாக்கள்
பாடித் தேடித்தினம் பண்பட்டுத் தேர்கின்றேன்
பயணம் முடியவில்லை.

பிறர்க்குதவி செய்யப் பெருங்கேடு வந்தாலும்
பின்னுக்குப் போகவில்லை-நெஞ்சம்
அறந்தவறிப் பழி ஆக்க நினைப்பினும்
அதனை யான் செய்யவில்லை.

ஊரார் பணத்திலே நீராடி என்னையான்
ஊட்டி வளர்க்கவில்லை-யானும்
பேராக வேண்டுமென்றே வஞ்சகர் மார்பினைப்
பிடித்துத் தழுவ வில்லை.

உண்மை நெறியுண்டு உறுதிப் பணிவுண்டு
ஊக்கப் பெருக்கமுண்டு-சிங்கத்
திண்மைக் குணத் தமிழ் செயல்வீர வாளுண்டு
தீமைக் கொலைகளுண்டு!

அவரது துணிவு குறித்துக் கவிஞர் இவ்விதம் பாடுகிறார்.

இதய அகலில் ஏற்றிய தீபம்
என்றன் துணிவடா-துன்ப
விதவிதமான புயலின் நடுவினிலும்
வென்றதம் மணியடா!
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

Tuesday, January 09, 2018

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35

கலைத்துறையில் காணப்படும் கீழ்நிலைகள் எண்ணிக் குமைகின்றார் பெருங்கவிக்கோ. அன்புத் தமிழர்கள் வளர்த்த அருங்கலையை இன்று “நாய் நரிகள் எல்லாம் புகுந்தே ஆடும் நாசத்தின் தலையுச்சி” ஆக்கி விட்ட அவலநிலையை நினைத்துக் கொதிக்கின்றார். படக்கலையில் காணப்படுகிற சிறுமைச் செயல்களை வருணித்து வருந்துகிறார். கலையின் பேரால் போடப்படுகிற கும்மாளங்கள், “நாடி நலக் கலை வளர்த்த தமிழர் நாடே! நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா?” என்று வேதனைப்படுகிறார்.
நம் நாட்டு நாடகத்தை நசுக்கி விட்டார்!
நாசத்தால் கலைத்தாயைக் கொல்கின்றார்கள்
கும்மிருள்தான் சூழ்ந்ததின்று! பல நல்லோர்கள்
குடிப்பதற்குக் கூழின்றி, ஆடை யின்றி
அம்மம்மா, பெருந்துன்பச் சேற்றில் வீழ்ந்தார்
அம்மணிகள் வறுமையினால் கற்பைவிற்று
விம்முகிறார் மனதுக்குள்! வெளியே வந்து
வேடிக்கை காட்டுகிறார்! அந்தோ அந்தோ!
என்று அங்கலாய்க்கிறார் கவிஞர்.
‘பொதுத் தொண்டு’ குறித்துப் பாடும்போது, இன்றைய நிலையை வேதனையோடு அவர் குறிப்பிடுகிறார்.
இன்றுஎவன் நம் முன்னால் ஆள்கின்றானோ
இவனே நம் கடவுளென எண்ணி அன்னான்
பன்றியைப் போல் நடந்தாலும் பாதம் போற்றிப்
பணிகின்றோம்! நாயை விடக் கீழாய் முன்னோர்
நன்றியினை மறந்து விட்டோம் புத்தன் ஏசு
நற்காந்தி நபிகள் பிரான் போன்றோர் கொள்கை
கொன்று விட்டோம் குழிதோண்டிப் புதைத்தும் கூடக்
கொஞ்சமேனும் நாணமின்றி இருக்கின்றோம் நாம்!
பெரும் புகழைப் பெறவேண்டும் என்றால் நாட்டில்
பேசுதல் போல் செயவேண்டும்! உயிரை ஈந்தும்
அருஞ்செயலைச் செயவேண்டும்! அன்புவேண்டும்
அநியாயம்! நம்மவர்கள் என் செய்கின்றார்?
வருந்துகின்ற தீச்செயலைச் செய்தேனும் நல்
வாய்ப்பதனை ஏற்படுத்திப் புகழாம் இன்ப
விருந்து பெற நினைக்கின்றார்! இந்தப் போக்கை
விரட்டுகின்ற போர்ப்படையாம் என்றன் பாட்டு!
ஒழுக்கமில்லாப் பொதுவாழ்வு ஓட்டைப்பானை; உயிரில்லா நடைப்பிணமும் அதுவே என்று கூறும் கவிஞர், “படுதுரோகம் செய்யும் ஈனர் தம்மை இழுத்து வந்து சந்தியிலே நிறுத்த வேண்டும்; அவரை எல்லாம் கழுவேற்றுகின்ற நாளே விழாநாள் ஆகும்” என்று சீற்றமாய்ப் பேசுகிறார்.
நாட்டின் நிலையும் மக்களின் நிலையும் எண்ண எண்ணச் சீற்றம்தான் வெடிக்கிறது. பெருங்கவிக்கோவிற்கு. இக்கொடுமைகள் எல்லாம் மாறுவதற்கு வழியே இல்லையா என்று கொதிக்கிறது அவர் உள்ளம்.
உழைக்கின்ற மகனுக்குக் கஞ்சி இல்லை
உழுகின்ற உழவனுக்கு உடுத்த இல்லை
அழைக்கின்றார் அறிஞர்பேர் சொல்லி ஆனால்
      அவர் பெரிய அயோக்கியராய் வாழ்ந்து விட்டு
தழைக்கின்ற கொள்கைக்கு மதிப்பொன்றுண்டா?

தக்க முறை நீதிநேர்மையாய் நடந்தால்
பிழைப்பதற்கு வழியுண்டா? குற்றம் கொன்று
பெரும்பூமி வாழ்பவர் யார்? சிந்தியுங்கள்!
மக்களெல்லாம் முழுக்குருடர்! குருடர்க்குப் போய்
மற்றுமொரு முழுக்குருடன் வழியைக் காட்டத் போல்
தக்கோன் போல் வடிவெடுத்தான், நடித்துக் காடடித்
தமிழர்களை யேமாற்றுகின்றான்! ஈதை
முக்காலும் அறிகின்ற சான்றோ ரெல்லாம்,
முழுவயிற்றுக் கஞ்சிக்காய் வாழ்வை விற்றார்!
எக்காலம் இக்கொடுமை மாற்றுவோம் யாம்? 
என்னருமைப் பாவலரே! எண்ணிப் பாரீர்!
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்